மாணவர்கள்–இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் போதைக் கலாச்சாரத்தை ஒழிக்கவே முடியாதா?
இன்றைக்கு செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் வெளியாகும் அன்றாடச் செய்திகளில் போதைப்பொருளால் ஏற்பட்ட பாதிப்பு, போதையால் நடந்த குற்றம், போதைப்பொருள் விற்பனை தொடர்பான கைது போன்ற செய்திகள் தவறாமல் இடம்பெறுகின்றன. போதைப் பயன்பாடு என்பது ஒரு தனிநபரின் பிரச்சனையாக அல்லாமல் மிகப்பெரிய சமூக அவலமாகத் தற்போது உருவெடுத்துள்ளது. மாணவர்கள் இளைஞர்கள் என அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் அபாயமாக போதைக் கலாச்சாரம் வளர்ந்திருக்கிறது.
அந்த அளவிற்கு மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு ஏற்படுத்தி வரும் பாதிப்புகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. போதைப்பொருள் பயன்படுத்தும் இளைஞர்களின் உடல்நலம், கல்வி, வேலைவாய்ப்பு, குடும்ப வாழ்க்கை ஆகியவை பாதிக்கப்படுவதுடன், போதைப்பொருள் விற்பனையைச் சுற்றி வன்முறை, மிரட்டல், தாக்குதல், கொலை போன்ற குற்றங்களும் நடைபெற்று வருகின்றன.
சமீபத்திய சம்பவங்கள் இந்த அபாயத்தின் தீவிரத்தை உணர்த்துகின்றன.
2026 மே மாதத்தில் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் போதை மாத்திரையை கரைத்து ரத்தத்தில் செலுத்தியதாகக் கூறப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதேபோல் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் 24 வயது இளைஞர் ஒருவர் போதை ஊசி செலுத்திக் கொண்ட நிலையில் உயிரிழந்ததாக ஆகஸ்ட் மாதத்தில் செய்தி வெளியானது. இவை போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்களின் உயிரையே பறிக்கும் அளவுக்கு சென்றிருப்பதைக் காட்டுகின்றன.
போதைப்பொருளின் பாதிப்பு தனிநபரின் உடல்நலத்தோடு முடிவதில்லை. அது சமூகத்தில் வன்முறையையும் உருவாக்குகிறது.
கோவையில் 19 வயது பொறியியல் மாணவர் அமுதன் கொல்லப்பட்ட சம்பவம் இதற்கு ஒரு அதிர்ச்சியூட்டும் எடுத்துக்காட்டு. அமுதன் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனையில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்து தகவல் தெரிவித்ததால்தான் குறிவைக்கப்பட்டதாக அவரது தாயார் குற்றம்சாட்டியுள்ளார்[1].
இதுபோன்ற மற்றொரு சம்பவம்தான் சென்னை திருவொற்றியூரில் 12-ஆம் வகுப்பு மாணவர் தனுஷ் கொல்லப்பட்ட சம்பவம். 16 வயதான தனுஷ், மாணவர்கள் குழுவால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். போதைப்பொருள் கும்பல் குறித்து தகவல் தெரிவித்ததற்காகவே அவர் கொல்லப்பட்டதாக அவர்களது பெற்றோரும் எதிர்க்கட்சியினரும் குற்றஞ்சாட்டுகின்றனர்[2].
இவற்றோடு சென்னை தண்டையார்பேட்டையில் விஷ்ணு என்ற 23 வயது இளைஞர் கொல்லப்பட்ட சம்பவமும் முக்கியமானது. கஞ்சா விற்பனையைத் தட்டிக் கேட்டதற்காக ஒரு கும்பல் அவரைத் தாக்கிக் கொன்றதாக செய்திகள் வெளியானது. குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும் இதையே கூறினர்[3].
போதைக் கும்பலைப் பாதுகாக்கிறதா அரசு?
இந்தச் சம்பவங்களுக்கு தனிப்பட்ட விரோதங்கள்தான் காரணம் என்றும் போதைப் பொருள் விற்பனைக் கும்பலுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் போலீசார் வாதிடுகின்றனர். கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் மாணவர்களின் இரு குழுக்களிடையே நடந்த மோதல் தான் கொலைக்கு காரணம் என மாநில சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், சட்டசபையிலேயே கூறுகிறார். விசாரணையே இன்னும் தொடங்காத சூழலில் போதை மருந்து கும்பலுக்கும் இதற்கும் தொடர்பில்லை என அமைச்சர் அவசரம் அவசரமாக மறுக்கிறார். இதுதான் மேற்சொன்ன மற்ற எல்லா சம்பவங்களிலும் நடக்கிறது.
இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் போதைப் பொருளை ஒழிக்கிறோம், போதைக் கலாச்சாரத்தை ஒழிக்கிறோம் என அரசுத்தரப்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. விற்பனையாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். சிறப்பு சோதனைகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் தங்கும் விடுதிகள், குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்துகின்றனர். பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. போதைக்கு எதிரான உறுதிமொழிகள் எடுக்கப்படுகின்றன. மாரத்தான் ஓட்டங்கள் நடத்தப்படுகின்றன.
கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர் விடுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பையும் சோதனைகளையும் தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டது. கோவை, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் மாணவர்கள் தங்கும் இடங்கள் மற்றும் குடியிருப்புகளில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன.
ஜூலை மாதத்தில் கோவை மாவட்டத்தில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்ற அதிரடி சோதனைகள் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டன. மாணவர் விடுதிகள், வாடகைக் குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டு கஞ்சா, cannabis oil, methamphetamine, LSD stamps உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்[4].
ஜூன் 26 அன்று சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி சென்னையில் “Start Run, Stop Drugs” என்ற பெயரில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு மாரத்தானில் சுமார் 15,000 பேர் பங்கேற்றனர். முதல்வர் விஜயும் மூன்று கிலோமீட்டர் ஓட்டத்தில் பங்கேற்றார்; மாணவர்கள் உள்ளிட்டோர் போதை எதிர்ப்பு உறுதிமொழியும் எடுத்தனர்[5]. ஆகஸ்ட் 5 அன்று கூட தமிழக ஆளுநர் பங்கேற்ற 10 கோடி பேர் போதை இல்லா உறுதிமொழி பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இதற்கு முன்னர் இருந்த அதிமுக, திமுக அரசுகள் வழமையாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள்தான். திமுக ஆட்சிக்காலத்தில் கிலோக் கணக்கில் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதை மருந்து விற்ற வழக்குகளில் பலநூறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி–கல்லூரிகளில் Anti-Drug Clubs உருவாக்கப்பட்டன, விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன, உறுதிமொழிகள் எடுக்கப்பட்டன. விஜயைப் போலவே மு.க.ஸ்டாலினும் “Drug-Free Tamil Nadu” என மராத்தான் ஓட்டங்களை நடத்தினார்.
போதைக்கு எதிராக வழமையான நடவடிக்கைகள் எதுவும் அதனை ஒழித்துவிடவில்லை. இன்றைக்கு விஜய் அரசு ஏற்கெனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அப்படியே பிரதியெடுத்துவிட்டு போதையை ஒழிக்கப்போவதாகக் கூறிவருகிறது.
போதைப் பொருட்களை ஏன் ஒழிக்க முடியவில்லை?
போதைப்பொருள் விற்பனை செய்பவர்களைப் பிடிப்பதும், பயன்படுத்துபவர்களைப் பிடிப்பதும், கடத்தப்படும் போதைப் பொருட்களில் சிலவற்றைப் பிடிப்பதும், பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வுப் பிரச்சாரமும், மராத்தான் ஓட்டமும் போதைக் கலாச்சாரத்தை ஒழிக்காது என்பதற்கு, ஊழல் ஒழிப்பிற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
ஊழலை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது. ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றன. “லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம்” என்று விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனைகள் நடத்துகின்றனர். அதிகாரிகள் கைது செய்யப்படுகின்றனர். லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.
ஆனால் ஒரு அதிகாரி லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்பட்ட செய்தி வெளியாகும்போது, அதனால் ஊழல் ஒழிந்துவிட்டதாக நாம் கருதுவதில்லை.
ஏனெனில் ஊழல் என்பது ஒரு தனிநபர் செய்யும் குற்றம் மட்டுமல்ல. அதற்குப் பின்னால் அதிகார அமைப்பு, நிர்வாக நடைமுறை, அரசியல் செல்வாக்கு, பணப் பரிமாற்றம் என ஒரு முழு அமைப்பு இருக்கிறது. அதனையும் தாண்டி ஊழலின் ஊற்றுக்கண்ணான முதலாளிகள் இருக்கின்றனர். பணம் கொடுத்து எதையும் சாதித்துக் கொள்ள முடியும் என்று முதலாளிகளும், அவர்களுக்குச் சாதகமான நிர்வாக அமைப்பும் இருக்கும்வரை ஊழலை ஒருபோதும் ஒழிக்க முடியாது.
அதேபோலத்தான் போதைப்பொருள் பிரச்சினையும். ஒரு கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்வதும், ஒரு போதைப்பொருள் விற்பனையாளரைக் கைது செய்வதும் மட்டும் போதுமா? அந்த விற்பனையாளருக்குப் போதைப்பொருள் எங்கிருந்து வருகிறது? அதை யார் கடத்துகிறார்கள்? யார் சேமிக்கிறார்கள்? யார் விநியோகிக்கிறார்கள்? அந்தப் பணம் எங்கே செல்கிறது? இந்த வலையமைப்பு அதிகார மட்டங்களில் உள்ள தொடர்பு என்ன? ஆளும்வர்க்கம் அதனை எவ்வாறு பாதுகாக்கிறது?
இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடாமல், தெருவில் போதைப்பொருளை விற்கும் நபர்களை மட்டும் கைது செய்துகொண்டிருந்தால், புதிய நபர்கள் அந்த இடத்தை நிரப்பிக் கொண்டே இருப்பார்கள்.
ஊழலை ஒழிப்பதாகக் கூறி லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை மட்டும் கைது செய்வதால் ஊழல் ஒழியாததைப் போல, போதைப்பொருளை விற்கும் நபர்களை மட்டும் கைது செய்வதால் போதைப்பொருள் கலாச்சாரம் ஒழிந்துவிடாது.
அதன் பின்னால் இருக்கும் வலையமைப்பை உடைக்க வேண்டும்.
போதைப்பொருள் மாஃபியா–போலீஸ்–அதிகாரிகள்–அரசியல்வாதிகள்: ஒரு வலைப்பின்னல் (Nexus)
போதைப்பொருள் விற்பனை என்பது ஒரு தனிநபர் தெருவோரத்தில் கஞ்சா விற்பனை செய்வதோடு முடிந்துவிடுவதில்லை. அதன் பின்னால் உற்பத்தி, கடத்தல், சேமிப்பு, விநியோகம், விற்பனை, பணப்பரிமாற்றம் எனப் பல அடுக்குகள் கொண்ட வலையமைப்பு இருக்கிறது. அந்த வலையமைப்பு செயல்படுவதற்கு அதிகாரத் தொடர்புகள் தேவைப்படுகின்றன, போலீசார், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு மட்டங்களில் தொடர்புகள் இருக்கின்றன. மாதந்தோறும் பலநூறு கோடி ரூபாய் பணம் புரளும் இந்தச் சட்டவிரோதத் தொழிலில் நெருங்கிய கூட்டாளிகளாகச் செயல்படும் இவர்களது வலைப்பின்னலை (Nexus) உடைக்காமல் போதைக் கலாச்சாரத்தை ஒழிக்க முடியாது.
சர்வதேச எல்லைகளைத் தாண்டி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் தமிழ்நாட்டிற்குள் வந்து சேருகின்றன. பல நூறு கிலோ கஞ்சா, மெதம்பெடமைன் போன்ற போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இதற்குப் பின்னால் ஒரு பெரிய விநியோக வலையமைப்பு இருப்பது அனைவரும் அறிந்ததே.
அந்த வலையமைப்பின் கீழ்மட்டத்தில் இருப்பவர்களை மட்டும் கைது செய்து கொண்டிருந்தால் அதன் மேல்மட்டம் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கும். எனவே உண்மையான போதை ஒழிப்பு என்பது விற்பனையாளர்களைக் கைது செய்வது மட்டுமல்ல, அந்த விற்பனையாளர்களை உருவாக்கும் முழு வலையமைப்பையும் உடைப்பதில் அடங்கியிருக்கிறது.
போதை ஒழிப்பு மட்டும் போதுமா?
ஒரு இளைஞன் போதைக்கு அடிமையாகிறான் என்றால், அவனை கைது செய்வதா தீர்வு? அவனுக்கு நல்ல கல்வி கிடைக்கிறதா? வேலை கிடைக்கிறதா? விளையாடுவதற்கான இடம் இருக்கிறதா? மன அழுத்தத்திலிருந்து வெளியேறுவதற்கான சமூகச் சூழல் இருக்கிறதா? அவனது எதிர்காலம் குறித்த நம்பிக்கை இருக்கிறதா? இவற்றைப் பற்றியும் பேச வேண்டும்.
போதைக்கு அடிமையான இளைஞனை வெறும் குற்றவாளியாகப் பார்க்காமல், அவனை அந்த நிலைக்குத் தள்ளிய சமூகச் சூழலையும் புரிந்துகொள்ள வேண்டும்.
போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க வேண்டும். அதே நேரத்தில் போதைப்பொருளுக்கான சமூகத் தேவையை உருவாக்கும் சூழலையும் மாற்ற வேண்டும்.
அரசுக்கு இது தெரியாதா?
போதைப் பொருள் ஒழிப்பு குறித்தும், அதற்குப் பின்னால் இருக்கும் மாஃபியா கும்பல் ஆளும்வர்க்கத்துடன் கொண்டிருக்கும் நெருக்கம் குறித்தும் பேசினால் அடுத்ததாக எழுப்பப்படும் கேள்வி, – இது அரசுக்குத் தெரியாதா? ஆம் இது அரசுக்கு நன்றாகத் தெரியும். தெரிந்துதான் அனுமதிக்கிறது. அரசு நினைத்தால் போதைப் பொருள் மாஃபியாவையும் அவர்களது வலையமைப்பையும் ஒரு நொடியில் தூளாக்கிவிட முடியும். ஆனால் அரசு அதனைச் செய்யாது.
விஜய் முதல்வராகப் பதவியேற்ற மேடையிலேயே போதையை ஒழிப்பதாகச் சபதம் எடுத்தார். ஆனால் இதுவரை அதற்கான என்ன செய்தார் என்று பார்த்தால் எடப்பாடி பழனிச்சாமியும், மு.க.ஸ்டாலினும் போதையை ஒழிக்கப்போவதாகச் சவடால் அடித்துவிட்டு கண்துடைப்பிற்காக என்ன செய்தார்களோ அதனைத் தாண்டி விஜய் எதையும் செய்யவில்லை. அதைவிட இன்னும் ஒருபடி கீழிறங்கிப் போய் “குட்கா” புகழ் விஜயபாஸ்கரைக் கட்சியில் இணைத்து முக்கிய பதவியும் கொடுத்திருக்கிறார். விஜய் அரசு மட்டுமல்ல இனி எந்த அரசு வந்தாலும் போதைக் கலாச்சாரத்தை ஒழிக்க எதையும் செய்யப் போவது இல்லைை
போதை யாருக்கு சாதகமானது?
மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலத்தை போதை அழிக்கிறது என்பது அரசுகளுக்குத் தெரியாததல்ல. போதையால் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன என்பதும் தெரியும். போதையுடன் குற்றங்களும் வன்முறையும் அதிகரிக்கின்றன என்பதும் தெரியும். போதைப்பொருள் விற்பனைக்குப் பின்னால் பெரிய அளவிலான பணப்புழக்கம் இருக்கிறது என்பதும் தெரியும். அப்படியிருக்க, பல ஆண்டுகளாக பறிமுதல், கைது, சோதனை, விழிப்புணர்வு, மாரத்தான் என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் போதைப்பொருள் கலாச்சாரத்தை ஏன் அடிப்படையில் ஒழிக்க முடியவில்லை?
இங்குதான் இந்தப் பிரச்சினையின் அரசியல் பரிமாணம் வெளிப்படுகிறது. தமிழ்நாட்டின் வரலாற்றில் மாணவர்களும் இளைஞர்களும் மிகப்பெரிய அரசியல் சக்தியாக இருந்துள்ளனர்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் வரை; ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்கள் முதல் ஜல்லிக்கட்டு போராட்டம் வரை; ஸ்டெர்லைட் எதிர்ப்பு முதல் நீட் எதிர்ப்பு வரை — தமிழகத்தின் பல முக்கியமான மக்கள் போராட்டங்களில் மாணவர்களும் இளைஞர்களும் முன்னணியில் இருந்துள்ளனர்.
அவர்கள் அரசின் தவறுகளைக் கேள்வி கேட்டுள்ளனர். அவர்கள் அநீதிக்கு எதிராகத் தெருவில் இறங்கியுள்ளனர். அவர்கள் மக்களைத் திரட்டியுள்ளனர். அவர்கள் சமூகத்தின் அரசியல் இயக்கங்களை மாற்றியுள்ளனர்.
அதனால்தான் மாணவர்–இளைஞர் சக்தி என்பது வெறும் எதிர்கால வாக்கு வங்கி அல்ல. அது நிகழ்கால அரசியலை மாற்றக்கூடிய சக்தி.
இந்தச் சக்தி போதையால் மழுங்கடிக்கப்படும்போது, அதன் விளைவு தனிநபரின் வாழ்க்கை அழிவாக மட்டும் இருப்பதில்லை. சமூகத்தின் மீதான அக்கறை, அநீதிக்கு எதிரான கோபம், ஒன்றுபட்டு செயல்படும் திறன் ஆகியவையும் பாதிக்கப்படுகின்றன. போதை ஒரு தலைமுறையின் உடலையும் எதிர்காலத்தையும் மட்டுமல்ல; அதன் சமூக ஆற்றலையும் மழுங்கடிக்கிறது.
இதைத்தான் இந்த அரசு விரும்புகிறது. நம்மை ஆளும் அரசு மக்களுக்கான அரசு அல்ல. அது முதலாளிகளுக்கானது, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானது. அனுதினமும் முதலாளிகளின் நலனுக்காகச் சிந்தித்துச் செயல்படும் அரசுக்கு, மாணவர்கள் – இளைஞர்கள் ஒரு அரசியல் சக்தியாகப் பரிணமிப்பதை ஆபத்தானதாகப் பார்க்கிறது. அதனால்தான் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததாகக் கதை கட்டினார்கள், ஸ்டெர்லைட் போராட்டத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவியதாக பயம் காட்டினார்கள். இன்று நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டம் தில்லியை அதிரச் செய்த பிறகு அறிவுஜீவி நக்சல்களின் அபாயம் குறித்து மோடி சுதந்திர தின உரையில் புலம்புகிறார்.
மக்களுக்கான அரசு இளைஞர்களுக்கு நல்ல கல்வி, வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு, ஆரோக்கியமான வாழ்க்கை ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். ஆனால் முதலாளிகளின் நலன்களை மையமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கைகள் இளைஞர்களை சந்தையின் போட்டிக்கும் நெருக்கடிக்கும் தள்ளுகின்றன. அந்த நெருக்கடிகளுக்கு எதிராக இளைஞர்கள் ஒன்றுதிரண்டு போராடும் அரசியல் சக்தியாக மாறுவது ஆளும் வர்க்கத்திற்கு சாதகமானது அல்ல.
அவ்வாறு இளைஞர்கள் அரசியல்மயமாகாமல், அவர்களது உணர்வுகளை போதைப் பழக்கம் மழுங்கடிக்கிறது. போதையால் ஒரு தலைமுறையின் சமூக மற்றும் அரசியல் ஆற்றல் மழுங்கும்போது, அது ஆளும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு சாதகமாக அமைகிறது. அதனால்தான் அரசு போதையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்கின்றதே ஒழிய அதனை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கைகளில் என்றைக்கும் இறங்குவதில்லை.
இனி என்ன செய்வது?
போதையை அரசு முழுமையாக ஒழிக்கவில்லை என்றால், இனி என்ன செய்வது? அரசு செய்யும் நடவடிக்கைகளை விமர்சிப்பதோடு நின்றுவிடுவதால் மட்டும் போதை ஒழியப்போவதில்லை. இன்றைக்கு போதைக்கெதிரான போராட்டத்தை ஒவ்வொரு மாணவரும் இளைஞரும் அவர்களது பெற்றோரும் தனித்தனியாக நடத்திக் கொள்ளும் வகையில் அரசு கைகழுவி விட்டிருக்கிறது.
ஆனால் நாம் தனியாக நின்று இந்த போதை மாஃபியா கும்பலையும், அதன் கூட்டாளிகளையும் எதிர்கொள்ள முடியுமா? முடியும் அவர்களை எதிர்கொள்வதுடன் இந்தப் போதைக் கும்பலை நிச்சயமாக அழித்தொழிக்க முடியும். தனியாக நின்று அல்ல ஒட்டுமொத்த மாணவர் இளைஞர் சமுதாயமும் திரண்டு நின்றால் இந்தச் சமூக விரோத சக்திகளைப் பூண்டோடு அழிக்க முடியும். அதற்கு மாணவர்களும் இளைஞர்களும் தங்கள் சக்தியை உணர வேண்டும்.
மாணவர்கள், இளைஞர்கள் நினைத்தால் இந்த சமூகத்தையே மாற்றியமைக்க முடியும். அப்படியிருக்க, போதையை ஒழிக்க முடியாதா? எந்த ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் மாணவர் சக்தி இறங்கிவிடுமோ என்று ஆளும் வர்க்கம் அஞ்சுகிறதோ, அந்த ஜனநாயகத்திற்கான போராட்டத்தின் மூலமாக மட்டுமே போதை கலாச்சாரத்தையும் ஒழிக்க முடியும். போதையால் தங்கள் எதிர்காலத்தை இழக்காமல், தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே உருவாக்கும் சக்தியாக மாணவர்களும் இளைஞர்களும் அணிதிரள வேண்டும்.
தங்களது சக்தியினை மாணவர்களும் இளைஞர்களும் உணர்ந்து கொண்டால் ஒரு தலைமுறையின் எதிர்காலத்தை அழிக்கும் போதையை எதிர்த்து ஒன்றுதிரள முடியும். தங்கள் கல்வியைப் பாதுகாக்க அவர்கள் போராட முடியும். வேலைவாய்ப்புக்காகப் போராட முடியும். பொதுக்கல்விக்காகப் போராட முடியும். சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராட முடியும். அதே அரசியல் சக்தியைக் கொண்டு போதைப்பொருள் விற்பனைக் கும்பல்களையும் எதிர்க்க முடியும்.
- சந்திரன்
அடிக்குறிப்புகள்
[1] https://timesofindia.indiatimes.com/city/coimbatore/how-couldminister-say-my-son-died-in-gang-war-murdered-coimbatore-college-studentsmother/articleshow/133187809.cms?utm_source=chatgpt.com
[2] https://timesofindia.indiatimes.com/city/chennai/class-xii-student-murdered-by-class-xi-boys-in-chennai/articleshow/133250108.cms?utm_source=chatgpt.com
[3] https://www.indiatoday.in/cities/chennai/story/chennai-tondiarpet-ganja-sale-killing-man-death-political-row-2920846-2026-06-02?utm_source=chatgpt.com
[4] https://timesofindia.indiatimes.com/city/coimbatore/20-kg-of-ganja-and-synthetic-drugs-seized-in-coimbatore-district-10-arrested/articleshow/132180212.cms?utm_source=chatgpt.com
[5] https://www.newindianexpress.com/states/tamil-nadu/2026/Jun/27/cm-vijay-flags-off-anti-drug-marathon-runs-3-km?utm_source=chatgpt.com




