போராட்டம் முடிந்தும்… கண்காணிப்பு முடியவில்லையே ஏன்?

நீட் எதிர்ப்புப் போராட்டம் முடிந்திருக்கலாம். ஆனால், அந்தப் போராட்டம் எழுப்பிய அரசியல் கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

ஜூலை மாதம் தில்லி ஜந்தர்-மந்தரில் மாணவர்களும் இளைஞர்களும் ஒன்றுகூடி நடத்திய போராட்டம் முடிந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. போராட்டம் முடிந்துவிட்டது; முழக்கங்கள் ஓய்ந்துவிட்டன; போராட்டக்காரர்கள் தங்களது வழிகளில் திரும்பிச் சென்றுவிட்டனர். ஆனால், தில்லி போலீசின் பார்வை மட்டும் இன்னும் அவர்களை விட்டு விலகவில்லை.

அந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? போராட்டத்தில் அவர்களது பங்கு என்ன? யார் முன்னணியில் நின்றார்கள்? யார் ஏற்பாடு செய்தார்கள்? யார் ஒருங்கிணைத்தார்கள்? போராட்டத்திற்கான பணம் எங்கிருந்து வந்தது? — என்ற கேள்விகளுக்கான விடைகளையும். அதேபோல் தில்லி போலீஸ் மற்றும் ஒன்றிய அரசின் கண்காணிப்பையும் தாண்டி, எப்படி பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் கூடினார்கள்? இதனைப் போலீசால் ஏன் முன்கூட்டியே கணிக்க முடியவில்லை? என்ற  கேள்விக்களுக்கானப் பதில்களையும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தில்லி போலீஸ் தொடர்ந்து பரிசீலித்து வருகிறது. அதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறார்களாம்.

ஒரு போராட்டம் நடைபெற்றால், அதில் பங்கேற்றவர்களின் கருத்துகளைப் புரிந்துகொள்வதற்குப் பதிலாக, அவர்களை அடையாளம் கண்டு, பட்டியலிட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிகளைத் தேடுவது எந்த வகையான ஜனநாயக அணுகுமுறை?

ஜந்தர்-மந்தர் என்பது வெறும் ஒரு இடத்தின் பெயர் அல்ல. அது தலைநகரில் தங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல மக்கள் பயன்படுத்தி வரும் போராட்டக் களங்களில் ஒன்று. அங்கு மாணவர்களும் இளைஞர்களும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதற்காக, அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொருவரையும் சந்தேகத்தின் கண்ணோட்டத்தில் பார்ப்பது ஜனநாயகத்திற்கு முரணானது.

கருத்து வேறுபாடு குற்றமாகிவிடுமா? அரசுக்கு எதிராகக் கேள்வி எழுப்புவது தேச விரோதச் செயலாகக் கருதமுடியுமா? உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது போலீசின் கண்காணிப்புக்கான காரணமாக மாறிவிடுமா? ஆனால், ஜந்தர்-மந்தர் போராட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த நீண்டகாலப் பரிசீலனை, எதிர்ப்புக் குரல்களை மோடி அரசாங்கமும், அரசு அதிகாரமும் இணைந்து கொண்டு எவ்வாறு தீவிரமாக ஒடுக்க எத்தனிக்கிறது என்பதற்கு இது ஒரு துலக்கமான உதாரணம் மட்டுமே.

இரு தினங்களுக்கு முன்பு கூட, தில்லியில் அறிவிக்கப்படும் போராட்டங்கள் குறித்து பத்து அம்சங்களில் செய்திகளைச் சேகரிக்கவும் அதனடிப்படையில் போராட்டத்தினைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை எடுக்கவும் தில்லி போலீஸ் கமிஷ்னர் அனுராக் குமார் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

அந்த உத்தரவில், போராட்டத்தில் எவ்வளவு பேர் கலந்து கொள்வார்கள், எங்கே நடக்கப்போகிறது என்று வழமையாகத் திரட்டப்படும் விவரத்தைத் தாண்டி, யார்யாரெல்லாம் கலந்து கொள்ளப்போகிறார்கள், அவர்களது தனிப்பட்ட விவரங்கள், எந்த மாநிலத்திலிருந்து வருகிறார்கள், தில்லியில் அவர்களுக்குள்ளத் தொடர்பு மற்றும் தங்குமிடம் பற்றிய விவரம், போராட்டத்திற்கான நிதி எவ்வாறு திரட்டுகிறார்கள்? எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என விரிவான அளவில் விவரங்களைச் சேகரிக்கச் சொல்லியிருக்கிறார்.

தில்லி போலீசை பொறுத்தவரை, நீட் முறைகேடுகளுக்கு எதிரானப் போராட்டம் என்பது தீவிரக் கண்காணிப்பையும் மீறி நடத்தப்பட்ட ஒன்று. வருங்காலங்களில் நடக்காமல் இருக்க, இன்னும் கூடுதல் விவரங்களைச் சேகரிப்பதும், கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதும் அவசியம் என்று கருதுகிறது.

இப்போராட்டம் தில்லி போலீசின் தூக்கத்தை மட்டும் கெடுக்கவில்லை, அது தமிழக ஆட்சியாளர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மேந்திரப் பிரதான் பதவி விலகிய நாளன்றே [ஜூலை 25] தில்லிப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (Cockroach Janta Party – CJP) அறிவித்தது. அதேபோல் அன்றிரவே சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (Communist Party of India – CPI) மாநிலத் தலைமையகமான பாலன் இல்லத்தில், நீட் விலக்குப் போராட்டத்தை  முடித்துக் கொள்வதாக தமிழ்நாடு CJP மற்றும் CPI ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டாக அறிவித்தது.

அடுத்த சில நாட்களில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்த [ஜூலை 28] உயர்மட்டக் கூட்டம் தலைமைச் செயலாளர் எம். சாய்குமார் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், போராட்டங்களில் மாணவர்கள் கலந்துகொள்வதைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்கள் அடங்கிய சுற்றறிக்கையை அரசாங்கத்திற்கான உயர்கல்வித்துறைச் சிறப்புச் செயலாளர் ஆகஸ்ட் 14 அன்று, பல்கலைக்கழகப் பதிவாளர்களுக்கும், தொழில்நுட்பக் கல்வி இயக்குநருக்கும், கல்லூரிக் கல்வி ஆணையருக்கும் அனுப்பினார்.

அதில், “மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் CPI மற்றும் தமிழ்நாடு CJP கட்சியினர் நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வி, உயர்கல்வி, போலீசு மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு” வழிகாட்டப்பட்டிருந்தது.

இவர்களது நோக்கம் ஒன்றுதான்: தமிழகத்தில் உள்ள சுமார் 2,500 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில், இந்தப் போராட்டத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்கேற்றவர்கள் யார் என்பதைக் கண்டறிவது; அவர்களது குடும்பப் பின்புலம், அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்பு உள்ளிட்ட விவரங்களைத் திரட்டுவது; பின்னர் போலீசு மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் துணையுடன் அந்த மாணவர்களை அச்சுறுத்தி, அவர்களது போராட்ட நடவடிக்கைகளை முடக்குவது.

மாணவர்கள் மத்தியில் உருவாகும் எதிர்ப்புக் குரல்களையும், போராட்டங்களுக்கான முனைப்புகளையும் முன்கூட்டியே கண்டறிந்து, அவை வலுப்பெறுவதற்கு முன்பே கண்காணித்து ஒடுக்குவதே இவர்களது செயல்திட்டமாக இருக்கிறது.

இங்குள்ள முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயக முறையிலும், அதற்கு அடிப்படையாக உள்ள அரசமைப்புச் சட்டத்திலும் பேச்சுரிமை, போராடும் உரிமை, மாற்றுக் கருத்தைத் தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் கொடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லுகின்றனர். அதன்படி தான், மாணவர்களும் – இளைஞர்களும் அறவழியில் போராட்டமும் செய்தனர். இருந்தும் அப்போராடத்தை ஒடுக்குவதற்கும் மேலும் இப்போராட்டம் பரவாமல் தடுப்பதற்கும் அரசு இயந்திரம்  முனைப்புடன் செயல்படுவதை உயர்கல்வித்துறைச் செயலாளரின் கடிதமே தெளிவாக்குகிறது.

உயர்கல்வி முற்றிலும் வணிகமயமாக்கப்பட்டுள்ள சூழலில், கல்லூரிப் படிப்புகளுக்கு சராசரியாக இலட்சக்கணக்கில் செலவு செய்தாக வேண்டிய நிர்பந்தம், பணம் செலவு செய்து படித்தாலும் வேலை கிடைப்பதில்லை, வேலை கிடைத்தாலும் மிகவும் குறைந்த சம்பளம், நீட், கியூட் போன்ற தேர்வுகளில் தனியார் கோச்சிங் மையங்களின் பற்கொள்ளை, நீட் உள்ளிட்ட பொதுத் தேர்வுகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் ஊழல் முறைகேடுகள் போன்ற காரணங்களால் இயல்பாகவே மாணவர்களும் – இளைஞர்களும் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராட்டுகின்றனர்.

அந்நிய முதலீட்டாளர்களின் நலனுக்காகவும், உள்நாட்டுத் தனியார் கல்வி முதலாளிகளின் இலாபத்தைப் பெருக்குவதற்காகவும், “உயர்கல்வி-வேலைவாய்ப்பு” என்ற கவர்ச்சிப் பிரச்சாரத்தின் மூலமாக கோடிக்கணக்கான குடும்பங்களின் சேமிப்பை கொள்ளையடிப்பதற்கு சட்ட ரீதியிலானப் பாதுகாப்பையும் அங்கீகாரத்தையும் வழங்கும் அதேவேளையில், மக்கள் சுரண்டப்படுவதையும், அவர்களது துன்ப-துயரங்களின் காரணமாக எழும் சிறு முணுமுணுப்பைக்கூட எழாதவாறு போராட்டங்களைக் கண்காணித்து ஒடுக்குவதையும் அரசு அதிகாரிகளே செய்கின்றனர்.

போராட்டத்தை ஒடுக்குவதற்கான அதிகாரம் கொண்ட போலீஸ் அதிகாரிகள், துறைச் சார்ந்த செயலாளர்கள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள், உயர்கல்வித்துறை அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள் உள்ளடக்கிய கூட்டுதான் மாணவர்களை ஒடுக்குவதற்கு தன்னியல்பாகவே முன்வந்து நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இந்த அரசு கட்டமைப்பின் பல்வேறு உறுப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு, கல்வித் துறையில் நிலவும் தனியார்மயத்தைப் பாதுகாப்பதோடு, அதற்கு எதிராக மக்களிடமிருந்து எழும் சிறிய எதிர்ப்புக் குரல்களைக்கூடத் தொடக்க நிலையிலேயே கட்டுப்படுத்த முயல்கின்றன. இவ்வாறு, மக்களின் எதிர்ப்புகளை ஒடுக்கி, ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கும் முன்னணிப் படையாகவே இந்த அரசு கட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்தியாவின் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயக கட்டமைப்பானது  இரட்டையாட்சி முறையை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகிறது. அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டப் பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பை அரசாங்கம் [Government] என்றும் போலீஸ், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், நீதிமன்றங்கள், நீதிபதிகள், தாலுக்கா-மாவட்ட-மாநில அளவிலான அதிகாரிகள், துணைவேந்தர்கள் ஆகியோரை உள்ளடக்கியதை அரசு [State] என்றும் வரையறுக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கு சட்டம் இயற்றும் அதிகாரம் மட்டுமே உள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கும், அதில் ஏற்படும் இடையூறுகளுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் வானளாவிய அதிகாரம் அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே உள்ளது.

உதாரணமாக, சர்ச்சைக்குள்ளான இச்சுற்றறிக்கை ரஷ்மி சித்தார்த் ஜகடே என்ற ஐஏஎஸ் அதிகாரியால் அனுப்பப்பட்டது. இவர் அரசாங்கத்திற்கான சிறப்புச் செயலர் [Special secratery to Government] என்ற பொறுப்பிற்கு தவெக அமைச்சரவையால் நியமிக்கப்பட்டவர். தவெக அரசாங்கத்தில், உயர்கல்வித்துறை சார்ந்த திட்டங்களை அமல்படுத்துவதற்கும், அதற்கான ஆலோசனைகளை அமைச்சருக்கு வழங்குவதற்காக நியமிக்கப்பட்டவர். உயர்கல்வித்துறை சார்ந்து எடுக்கப்பட்டுள்ள கொள்கை முடிவுகளையும், நிறைவேற்றப்பட்ட சட்டங்களையும், அதனடிப்படையில்  உருவாக்கப்பட்ட விதிமுறைகளையும் அமல்படுத்துவதற்கானப் பொறுப்பும் அதற்கான அதிகாரமும் கொண்டவர் என்பதால், கல்வி வணிகமயம், நீட் தேர்வு போன்ற அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளுக்கு எதிராகப் போராடும் மாணவர்களைக் கண்காணித்துத் தடுக்க வேண்டியதும் இவரது கடமைகளில் ஒன்றாகும். ஒருவேளை கவர்னர் ஆட்சி நடைமுறையில் இருக்கும் போது மாணவர்கள் போராட்டம் நடந்திருந்தாலும் இதேபோன்றதொரு சுற்றறிக்கை உயர்கல்வித்துறை செயலாளர் அனுப்பியிருப்பார். இதில் துறை சார்ந்த அமைச்சரோ அல்லது எம்.எல்.ஏ-வோ கருத்து சொல்லலாமே தவிர சுற்றறிக்கையை தடுக்கவோ அல்லது போராட்டத்தினை ஆதரிக்கவோ சட்டத்தில் இடமில்லை.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரானப் போராட்டத்தில் பதிமூன்று பேரைப் போலீஸ் சுட்டுக் கொன்ற நிகழ்வைத் தொலைக்காட்சியைப் பார்த்து தெரிந்து கொண்டதாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சொன்னார். அனைத்து அதிகாரமும் முதலமைச்சருக்கே உள்ளது என்று ஊடகங்கள் கட்டியமைக்கும் பிம்பம் உண்மையென்றால் முதலமைச்சருக்கோ, தொழிற்துறை அமைச்சருக்கோ, அப்பகுதி எம்எல்ஏ-வுக்கோ கூடத் தெரியாமல் துப்பாக்கிச் சூடு நடத்த முடிவெடுத்தது யார்? அதற்கு அனுமதியளித்தது யார்? இந்தக் கட்டமைப்பில் உண்மையான அதிகாரம் யாரிடம் இருக்கிறது?

ஸ்டெர்லைட் என்ற ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிராக இலட்சக்கணக்கான மக்கள் உறுதியுடன் போராடி வென்று விட்டால், இதுபோன்ற பல்வேறு போராட்டங்களுக்கு அடிக்கொள்ளியாய் அமைந்துவிடும். அப்படி முதலாளி வர்க்கத்திற்குப் பாதகமாக அமையும் என்பதால் அப்போராட்டத்தை ஒடுக்குவதற்காகவும், போராடும் மக்களிடம் அச்சத்தை விதைப்பதற்காகவும் தலைமைச் செயலர்-உயர்மட்ட போலீஸ் அதிகாரிகள்-மாவட்ட அதிகாரிகள் ஆகியோர் சேர்ந்து எடுத்த முடிவுதான் துப்பாக்கிச்சூடு. அதிகாரிகள் உத்தரவின் பேரிலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பதை ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் தயாரித்த விசாரணை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என மக்கள் போராடிய போதும், அந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியது திமுக அரசாங்கம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கமும், அதைத் தாண்டி நிரந்தரமாக இயங்கும் அரசு இயந்திரமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் எனத் தேர்தல் மூலம் அதிகாரத்திற்கு வருபவர்கள் முன்னால் நிற்கின்றனர். ஆனால், அவர்களுக்குப் பின்னால் மறைந்து கொண்டு, ஆட்சியாளர்களின் கொள்கைகளையும், நிலவும் முதலாளித்துவச் சுரண்டல் அமைப்பையும் இடையறாது செயல்படுத்திக் கொண்டிருப்பது அரசு இயந்திரமும் அதன் அதிகாரிகளும்தான்.

எனவே, இந்தப் பிரச்சினையில் விஜய் அல்லது உயர்கல்வி அமைச்சர் ஆகியோரை மட்டும் விமர்சிப்பது போதுமானதல்ல. அவர்களின் பின்னால் இருந்து கொண்டு, மக்களின் எதிர்ப்பைக் கண்காணித்து, போராட்டங்களைத் தடுக்கும் பணியில் ஈடுபடும் அரசு நிறுவனங்களையும் அதிகாரிகளையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், பிரச்சினையின் ஒரு பகுதியை மட்டுமே நாம் பார்க்கிறோம் என்றாகிவிடும்.

யார் முன்னால் நின்று முடிவெடுக்கிறார்கள் என்பதை மட்டும் பார்க்காமல், அந்த முடிவுகளை யார் செயல்படுத்துகிறார்கள் என்பதையும் சேர்த்தே பார்க்க வேண்டும். எனவே ஆட்சியாளர்களை மட்டும் விமர்சிப்பது போதாது; அதன் பின்னால் இயங்கும் அதிகாரக் கட்டமைப்பையும் அம்பலப்படுத்த வேண்டும்.

நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டும் திருப்பிப் பார்த்துக் கொண்டிருப்பதால் உண்மையான நிலைமையை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. அதன் இரு பக்கங்களையும் மக்களுக்கு அம்பலப்படுத்துவதன் மூலமே, போராட்டத்தின் உண்மையான இலக்கையும் எதிர்கொள்ள வேண்டிய சக்திகளையும் தெளிவாக அடையாளம் காண முடியும். அதுவே போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்வதற்கான முதல் படியாகும்.

  • மாணிக்கம்
One thought on “போராட்டம் முடிந்தும்… கண்காணிப்பு முடியவில்லையே ஏன்?"
  1. நெருப்பை பொட்டலம் கட்ட முடியாது, மாணவர் போராட்டத்தை ஒருபோதும் தடுக்கவும் முடியாது. கார்ப்பரேட் இதை உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன