மேற்கு வங்க உயர்கல்வி நிறுவனங்களில்
காவி கும்பலின் அட்டூழியம்!

கொல்கத்தா சுரேந்திரநாத் சட்டக் கல்லூரியின் துணை முதல்வர் முகமதி தருன்னுமை பதவி விலக கட்டாயப்படுத்தி ஏபிவிபி கும்பல் அவரை இருபத்து மூன்று மணி நேரம் அறையில் அடைத்து, மின்சாரமும் குடிநீரும் துண்டித்து மிரட்டியது. அவர் வெளியேறிய பிறகு, அவரது அறையில் கங்கை நீர் தெளித்து, ஊதுபத்தி கொளுத்தி "சுத்தம்" செய்திருக்கிறது.

பாஜக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நடக்கும்?

முதலில் கல்லூரி/பல்கலைக்கழகங்களின் உயர் பதவிகளில் இந்துத்துவா ஆதரவாளர்களை நிரப்புவார்கள்; கல்லூரிகளுக்குள் செயல்படும் ஜனநாயக மற்றும் இடதுசாரி மாணவர் அமைப்புகளை ஒடுக்கி, அவ்விடத்தில் காவி மாணவர் குண்டர் படையான ABVP திட்டமிட்டே அனுமதிக்கப்படும்; இக்கும்பல் பிரச்சினைகளைத் திட்டமிட்டே உருவாக்கித் தங்களுக்கு ஆகாத மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை தேசவிரோதிகள், அர்பன் நக்ஸல் என்று முத்திரை குத்திப் பொய்வழக்கைப் போடுவார்கள்; தேசியக் கல்விக் கொள்கையின் காவிப்பாடத்திட்டம் மற்றும் தனியார்மய நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும்; அதன் விளைவாகப் புராணக்கதைகளை அறிவியல் பாடமாகப் படிப்பதும், கல்விக்கான அரசின் நிதி குறைக்கப்படுவதினால் பெற்றோர்களின் சேமிப்புக் கொள்ளையடிக்கப்படும்.

பிறகு அன்றாட அரசியல் நிகழ்வுகளும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் முஸ்லீம் வெறுப்பு, பிராமணிய மதப்பெருமை என்ற கண்ணாடியின் வழியே நகர்த்தப்படும்; கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கும் காவி குண்டர்படையின் கலவர களியாட்டத்திற்கும் முழுச்சுதந்திரம் உறுதியளிக்கப்படும்; மக்களை ஏமாற்ற திட்டமிட்டே பொய்யானத் தரவுகளை உற்பத்தி செய்வதும் அதனைப் பரப்புவதும் இறுதியில் விக்சித் பாரத், விஸ்வகுரு என்ற வசனத்தோடு மொத்த எபிசோடும் முடிக்கப்படும்.

மோடியின் ஒன்றிய அரசாங்கத்திற்கு மட்டும் இது பொருந்தக்கூடியதல்ல, பாஜக ஆட்சியமைக்கிற ஒவ்வொரு மாநிலத்திலும் மேற்சொன்ன பொதுவான திரைக்கதையைத்தான் அமல்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் தற்போது புதியதாக ஆட்சியமைத்துள்ள மேற்கு வங்கத்திலும் இதே நடவடிக்கைகளை சுவேந்திர அதிகாரித் தலைமையிலான பாஜக அரசாங்கம் தொடங்கியுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள மிகப் பழமையான சட்டக் கல்லூரியான சுரேந்திரநாத் சட்டக் கல்லூரியின் துணை முதல்வரான முகமதி தருன்னுமை, இருபத்து மூன்று மணி நேரம் அவரது அறையில் அடைத்தும் மின்சாரம், குடிநீரைத் துண்டித்தும் இறுதியாகக் கட்டாயப்படுத்தி பதவி விலகல் கடிதத்தைக் கொடுக்க வைத்திருக்கிறது ABVP தலைமையிலான மாணவர் கும்பல். அத்தோடு மட்டுமல்லாது, முகமதி தருன்னும் வெளியேறிய உடன் அவரது அறையில் கங்கை நீரைத் தெளித்தும் ஊதுபத்திக் கொளுத்தியும் “சுத்தப்படுத்துகிற வேலையைச்” செய்திருக்கிறது ABVP கும்பல். கூடவே முகமதி தருன்னும் ஒரு இடதுசாரி ஆதரவாளர்; அவர் முகத்தைப் பார்ப்பதற்கே நாங்கள் விரும்பவில்லை என்கிறார் ABVP-இன் நிர்வாகி.

இப்பிரச்சினையின் பின்னாலிருந்து மாணவர்களைத் தூண்டிவிடுவது பாஜக எம்.எல்.ஏ.வும் அக்கல்லூரியின் நிர்வாகக் குழுத் தலைவருமான கௌஸ்தவ் பக்சி என்று முகமதி தருன்னும் குற்றம் சாட்டியிருக்கிறார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட ABVP குண்டர்கள் மற்றும் மாணவர்கள் மீது இன்னும் வழக்குக் கூட பதியப்படவில்லை. பக்சியோ, முகமதி தருன்னும் திரினாமூல் காங்கிரசின் கைகூலி என்றும், துணை முதல்வரின் அறையை மாணவர்கள் “சுத்தம் செய்தது” சரியென்ற தொனியிலும் பேசியிருக்கிறார். அதாவது வெளிப்படையாகவே ABVP குண்டர்கள் செய்தது சரி, நடவடிக்கைத் தேவையில்லை என்கிறார்.

இப்பிரச்சினைக்கு காரணமே மாணவர்களின் வருகைப்பதிவு குறைவாக இருந்தாலும் அவர்களைத் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்றக் கோரிக்கைதான். இக்கல்லூரியில் சட்டம் படிக்கும் 900 மாணவர்களில் 600 பேருக்கு இந்த பருவத்திற்கான வருகைப்பதிவு 65 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்திருக்கிறது. கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் விதிமுறைப்படி 75 சதவீதத்திற்கு குறைவாக வருகைப்பதிவு இருந்தால் அம்மாணவர் தேர்வெழுதத் தகுதியற்றவர். அதேபோல இந்திய பார் கவுன்சிலும் சட்ட மாணவர்கள் பருவத்தேர்வை எழுத 65 சதவீதத்துக்குக் குறையாமல் வருகைப்பதிவு வைத்திருக்க வேண்டும் என்கிறது. இவ்விதிகளின் அடிப்படையில் வருகைப்பதிவுக் குறைவாக இருக்கின்ற மாணவர்களுக்கு பருவத் தேர்வுக்கான விண்ணப்பத்தை நிராகரித்திருக்கிறது கல்லூரி நிர்வாகம். இருப்பினும் வருகைப்பதிவுக் குறைவாக இருந்தாலும் மாணவர்களைத் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்று ஏ.பி.வி.பி. மாணவர்கள் துணை முதல்வரை முற்றுகையிட்டு பதவி விலகல் கடிதம் கொடுக்க வைத்திருக்கின்றனர்.

வருகைப்பதிவு பிரச்சினையைப் பேசுவதற்காக செப்டம்பர் 9 அன்று பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததாகவும், ஆனால் 40 சதவீதம் வருகைப்பதிவு இருந்தாலே தேர்வெழுத அனுமதிக்குமாறு பக்சி அழுத்தம் கொடுத்ததாகவும், ஆனால் விதிப்படி குறைந்தபட்சம் 65 சதவீத வருகைப்பதிவுத் தேவை என்பதால் முகமதி தருன்னும் பக்சியின் பரிந்துரையை நிராகரித்திருக்கிறார். ஏற்கனவே இடதுசாரி மற்றும் திரினாமூல் காங்கிரசின் ஆதரவாளராகவும் முஸ்லீம் மதத்தவரான முகமது தருன்னுமை பதவியிலிருந்து நீக்குவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த மேற்கு வங்க பாஜக, இந்த வருகைப்பதிவுப் பிரச்சினையைப் பயன்படுத்தி ஏபிவிபி-யின் மூலமாக ரகளை செய்து முகமதி தருன்னும் இடம் இருந்து பதவி விலகல் கடிதத்தை வாங்கி இருக்கிறது. இதற்குப் பின்னால் கல்லூரியின் நிர்வாகக் குழு தலைவரும் பாஜக எம்.எல்.ஏ.வுமான கௌஸ்தவ் பக்சியே இருந்திருக்கிறார்.

மாணவர்களின் வருகைப்பதிவு குறைபாடு என்பது அனைத்து கல்லூரிகளிலும் இருக்கக்கூடிய ஒரு பொதுவான பிரச்சினை. குறிப்பாக இக்கல்லூரியைப் பொருத்தவரை அரசியல் கட்சிகளின் பேரணிகளுக்கும் கூட்டங்களுக்கும் மாணவர்கள் சென்று விடுவதால் வகுப்புகள் நடப்பதில்லை, வருகைப்பதிவும் குறைவாகி விடுகிறது என்பது மாணவர்களின் குற்றச்சாட்டு. இப்பிரச்சினை கல்லூரி நிர்வாகமும் மாணவர்களும் பெற்றோரும் கலந்து பேசி தீர்வு காண வேண்டிய ஒன்று. சில தினங்களுக்கு முன்பு “கூடுதல் வகுப்புகளை இணையவழியில் நடத்துகிறோம்; வருகைப்பதிவு குறைவாக உள்ள மாணவர்கள் அதில் கலந்து கொண்டு 65 சதவிகித வருகைப்பதிவைப் பெற்று தேர்வு எழுதலாம்” என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துவிட்டது.

ஆனால் பாஜகவோ இப்பிரச்சினையைத் தன்னுடைய காவி அரசியல் திட்டத்திற்காகத் திசைதிருப்பியிருக்கிறது என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று. இந்நடவடிக்கைகளின் மூலம் கல்வி நிறுவனங்களுக்குள் இந்துத்துவா ஆதரவாளர்களை இட்டு நிரப்பிக்கொள்ளலாம் என்பதே இவர்களது திட்டம். இது ஆர்.எஸ்.எஸ்.-பாஜக-மோடி தொடங்கி மாநில அளவில் அமல்படுத்தப்படுகிறது.

கடந்த மாதம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் இடதுசாரி மாணவர் அமைப்பினருக்கும் ஏ.பி.வி.பி.-க்கும் இடையேயான மோதல் குறித்துப் பேசிய பாஜக முதல்வர் சுவேந்து அதிகாரி, “பிரதமரின் அதே குரலில் நானும் சொல்கிறேன்: ‘அறிவுஜீவி நக்ஸல்கள்’ [dimagi Naxals] இப்பல்கலைக்கழகத்தில் ஒரு தளத்தை உருவாக்கி, தேசவிரோதப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களா அல்லது நாமா – இதில் யாராவது ஒரு தரப்புதான் நிலைத்திருக்க முடியும். பாலஸ்தீனம் குறித்தோ அல்லது கிஷன்ஜிக்கு ஆதரவாகவோ சுவர்களில் ஏன் எழுதப்பட வேண்டும்?” என்றிருக்கிறார். இதிலிருந்தே காவி அரசியல் திட்டத்தைக் கல்லூரிகளுக்கு பாஜக திணிக்கிறதென்பது உறுதியாகிறது.

எஸ்.ஐ.ஆர்.-இல் பெயர் நீக்கப்பட்டவர்களுக்கு அரசின் சலுகைகள் கிடையாது என்று அறிவித்தது, நூற்றுக்கும் மேற்பட்ட மதரஸா பள்ளிகளை மூடியது, எதிர்க்கட்சியான திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை விலைக்கு வாங்கி அக்கட்சியின் சின்னத்தை முடக்கியது, ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பிற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள இடதுசாரி மாணவர் இயக்கங்களை ஒடுக்குவது, முஸ்லீம் மற்றும் கிருத்துவ வழிப்பாட்டுத்தலங்கள் மீது தாக்குதல் நடத்துவது, பொது சிவில் சட்டம் கொண்டுவருவது ஆகியவையே மேற்கு வங்க பாஜக ஆட்சியின் சாதனையாகச் சொல்லலாம். இச்சாதனையில் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைச் சரிசெய்தது குறித்துக் குறிப்பிடும்படியான எந்த நடவடிக்கைகளும் இல்லை. காவி கும்பலைப் பொறுத்தவரை, பாஜக ஆட்சி என்பது காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முன்னெடுத்துப் போவதற்கான சட்டரீதியிலான வாய்ப்பு அவ்வளவுதான். இதில் மக்கள் நலன் என்பதெல்லாம் வெறும் ஊறுகாய்தான்.

  • மாணிக்கம்

https://timesofindia.indiatimes.com/city/kolkata/700-law-college-students-get-option-of-online-classes-to-make-up-for-attendance-shortfall/articleshow/134295188.cms
https://education.economictimes.indiatimes.com/news/higher-education/700-surendranath-law-college-students-face-attendance-hurdle-online-classes-offered-to-meet-65-rule/134302669
https://thewire.in/communalism/at-a-kolkata-college-a-muslim-vice-principal-was-forced-to-resign-then-abvp-purified-her-office
https://thewire.in/campus/jadavpur-university-students-refuse-to-crumble-under-suvendu-adhikari-pressure

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன