FCRA – 2026 சட்டத் திருத்தம் : கிருத்தவ மதச் சிறுபான்மையினருக்கு எதிரான பாசிச நடவடிக்கையே!

ஏப்ரல் 21, 2026
காவி-கார்ப்பரேட் பாசிசத்தை மக்கள் மத்தியில் அம்பலப் படுத்தவதற்கான ஒரு நல் வாய்ப்பாக FCRA-2026 திருத்தம் மசோதா தேர்தல் நேரத்தில் வந்துள்ள போதிலும், பாசிசத்தை எதிர்ப்பதாக கூறும் எதிர்க்கட்சிகள் வீதியில் இறங்கிப் போராடுவதில்லை. மதச்சார்பின்மை பேசும் கட்சிகளின் தலைவர்களோ, கடிதங்கள் அறிக்கைகள் என பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

ஒன்றிய பா.ஜ.க அரசு கடந்த மார்ச் 25-ஆம் தேதியன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பல மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்தது. அதில் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம்  (FCRA – 2026) Foreign Contribution (Regulation) Act 2026 மசோதாவையும் தாக்கல் செய்தது. இம்மசோதாவை அறிமுகப்படுவதற்கு முன்பு இது குறித்து எதிர்க்கட்சிகளிடையே எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை. மேலும் முந்தைய மோடி அரசின் போது FCRA – 2020 மசோதாவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு தற்போதைய புதிய மசோதா கொண்டு வரப்பட்டிருக்கிறது.

இஸ்லாமியர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கு வக்பு வாரிய சட்டத் திருத்தம் கொண்டு வந்தது போல, தற்போது கிறிஸ்துவ சிறுபான்மை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கவும், அதன் சொத்துக்களைப் (பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, ஆதரவற்றோர் இல்லங்கள் ) பறிமுதல் செய்வதற்கு மோடி அரசு FCRA 2026 மசோதாவை கொண்டு வந்திருக்கிறது.

தனது காவி-கார்ப்பரேட் பாசிசத் திட்டத்திற்கு எதிராக உள்ளவர்களை ஒடுக்குவதற்காக புதிய புதிய காரணங்களைக் கண்டுபிடிக்கும் மோடி கும்பல், அதை வைத்துப் பொய் வழக்குப் போட்டு அச்சுறுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. எனவே FCRA-2026  மூலம் நிதி பெறும் கிறிஸ்துவ சிறுபான்மை தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தேசியப் பாதுகாப்பை அச்சுறுத்தும் அந்நிய சக்திகள் எனக் கூறி அதை முடக்குவதற்கு இம்மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் செயல்படும் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்று வருவதை ஒடுக்கும் பொருட்டு இந்திரா காந்தியால் அவசரநிலை ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு சட்டம் 1976 சட்டம் முதன் முதலில் கொண்டு வரப்பட்டது. இந்திராவால் கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தை மன்மோகன் சிங் அரசு இரத்து செய்து FCRA 2010 என்ற புதிய சட்டத்தை 2010 ஆண்டில் அமல்படுத்தியது.

அதன் பிறகு ஆட்சிக்கு வந்த மோடி அரசு அவசர நிலை ஆட்சியை விட கொடுமையான பல திருத்தங்களை FCRA சட்டத்தில் செய்து வருகிறது. மோடி அரசின் முதல் FCRA திருத்தம் 2015-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. இதன் படி FCRA சட்டத்தின் மூலம் நிதி பெறும் நிறுவனங்கள் இணைய வழியில் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்றும் அந்நிறுவனங்களின் வருமான வரி தாக்கல்கள் அனைத்தும் இணைய வழியில் தான் நடைபெறும் என்றும் விதிகள் சேர்க்கப்பட்டன.

இதற்கு பிறகு 2020-ஆம் ஆண்டில் மற்றுமொரு திருத்தத்தை மோடி அரசு கொண்டு வந்தது. இதில் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு நன்கொடைகள் அனைத்தும் தில்லியின் உள்ள எஸ்.பி.ஐ வங்கி கிளை மூலமாக நடைபெற வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு துணை மானியங்கள் கிடையாது. அதன் நிர்வாகச் செலவுகள் 50 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக குறைக்க வேண்டும்.  FCRA மூலம் நிதி பெறும் நிறுவனங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் தனது உரிமத்தை சரியான நேரத்தில் புதுப்பிக்கத் தவறினாலோ அல்லது தாமாக முன்வந்து தமது உரிமத்தை திரும்ப ஒப்படைத்தாலோ அதன் சொத்துக்களை (உ.ம் பள்ளி, கல்லூரி, தேவாலயங்கள், மருத்துவமனைகள், வாகனங்கள், வங்கி கணக்கில் இருக்கும் பணம், மருத்துவ உபகரணங்கள்) அரசு பறிமுதல் செய்ய முடியும் என பல விதிமுறைகள் 2020-ஆம் ஆண்டின் திருத்தத்தில் சேர்க்கப்பட்டன.

தற்போதைய 2026-ஆம் ஆண்டு திருத்தத்தில் சேர்க்கப்பட்ட ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை நிர்வகிப்பதற்கு ஒரு அதிகார அமைப்பையும் அதற்கு ஒரு தலைவராக ஒரு ஆணையரையும் உருவாக்கியிருப்பதே ஆகும். வெளிநாட்டு நிதி பெறும் நிறுவனங்களின் வங்கிப் பரிவர்த்தனை, சொத்துக்கள், மின்னணுப் பதிவுகள் போன்றவற்றை ஆய்வு செய்யும் அதிகாரத்தை ஆணையருக்கு தற்போதைய மசோதாவின் திருத்தம் வழங்குகிறது.

பறிமுதல் செய்யப்படும் சொத்துக்களை வாங்குபவருக்கு பத்திரப்பதிவு தேவையில்லை. மேலும் சொத்துக்களைப் பறிகொடுத்த தன்னார்வ நிறுவங்கள் நீதிமன்றத்தில் கூட வழக்குகள் தாக்கல் செய்ய முடியாது. ஏன் இவ்விசயத்தில் நீதிமன்றம் தலையிடக் கூட முடியாது என்ற பல்வேறு திருத்தங்கள் கெடு நோக்கத்தோடு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் கிறிஸ்துவ அமைப்புகள் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன. இந்தச் சட்டம் கிருஸ்தவ சிறுபான்மை தன்னார்வ தொண்டு நிறுவங்களின் செயல்பாடுகளை அழிக்கும் நோக்கில் கொண்டு வரப்படும் ஆபத்து நிறைந்த சட்டம் என இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை (CBCI), கூறியிருக்கிறது. கேரள கத்தோலிக்க ஆயர்கள் பேரவையோ, இதனை “அரசியலமைப்புக்கு விரோதமானது” என விமர்சித்துள்ளது.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர், கிரண் ரிஜிஜு, இம்மசோதாவின் மீதான சிறுபான்மையினரின் அச்சங்கள் ஆதாரமற்றவை என்றும், இந்த மசோதா தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப் பட்டதாக கூறியிருக்கிறார். கிறிஸ்தவ சமூகத்தின் எந்தப் பிரிவாவது எப்போதாவது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்திருக்கிறதா என கிறிஸ்துவ அமைப்புகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இம்மசோதாவிற்கு எழுந்த எதிர்ப்பின் காரணமாக தற்போது மோடி அரசு இதை ஒத்தி வைத்திருக்கிறது.

மக்களின் வாழ்வாதாரங்களைப் பறிக்கும் முதலாளித்துவ இலாப வெறி கொண்ட திட்டங்களான அணுமின் நிலையங்கள், சுரங்கங்கள், நிலக்கரி திட்டங்கள், தொழிற்சாலைகள், சுற்றுப்புற சீர்கேடு மற்றும் பல திட்டங்களுக்கு எதிராகப் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அரசின் சட்ட வரம்புக்குள் நின்று கொண்டு, போராட்டங்களை நடத்தி வருகின்றன. இப்படி போராடிய பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை மோடி அரசு ஒட்டுமொத்தமாக முடக்கி வருகிறது.

மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்பு 2012-ஆம் ஆண்டிலிருந்து 2023-ஆம் ஆண்டு வரை வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெற்று வந்த சுமார் 20,721 நிறுவனங்களின் பதிவுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. FCRA-வில்  பதிவு செய்துள்ள ஒரு நிறுவனத்தின் உரிமம் ஏன் இரத்து செய்யப்படுகிறது என்பதற்கான தெளிவான காரணங்களைக் கூட மோடி அரசு கூறுவதில்லை.

அணு உலைத் திட்ட எதிர்ப்பாளரும் சமூக அரசியல் விமர்சகருமான பிரபுல் பித்வாவும், நர்மதா பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் மேதா பட்கரும் இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரான அந்நிய சதிகாரர்களாக மோடி அரசால் குற்றம் சாட்டப்பட்டனர்.

கிரின் பீஸ் எனும் சுற்றுச்சூழல் தன்னார்வ நிறுவனம் இன்டால்கோ மற்றும் எஸ்ஸார் ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மத்தியப் பிரதேசத்தில் பழங்குடி மக்களின் வாழ்வுரிமையைப் பறித்து வெளியேற்றுவதை அம்பலப்படுத்தி வந்தது. இதை விளக்கி இங்கிலாந்து நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உரையாற்ற இலண்டனுக்குப் புறப்பட்ட கிரின்பீஸ் நிறுவனத்தின் பிரச்சாரகரான பிரியா பிள்ளையை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவர் மீது பொய்வழக்கு போட்டு அவரை வெளிநாடுகளுக்குச் செல்லத் தடைவிதித்து முடக்கியதோடு கீரின் பீஸ் நிறுவனத்தையே இந்தியாவில் தடை செய்தது மோடி அரசு.

பிரபல சமூக செயற்பாட்டாளரான தீஸ்தா செதல்வாட்டின் சப்ரங் கம்யூனிகேஷன்ஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் போர்டு பவுண்டேசனிடமிருந்து முறைகேடாக அந்நிய நிதியைப் பெற்றது எனக் கூறி அவரின் மீது மோடி அரசு பழிபோட்டது. FCRA சட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டதாகவும், கிரிமினல் சதிகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டி மோடி அரசின் புலனாவுத்துறை தீஸ்தா மீது வழக்கு தொடுத்தது.

ஒரு புறம் வெளிநாடு நிதிப்பெறும் நிறுவனங்களின் பதிவுகள் காலாவதியானாலோ அல்லது பதிவை புதுப்பிக்கத் தவறினாலோ அதன் சொத்துக்களை பறிமுதல் செய்ய துடிக்கிறது மோடி- அமித்ஷா கும்பல். ஆனால் அவர்களின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அது தொடங்கிய நாளிலிருந்து கடந்த 100 ஆண்டுகளாக இந்தியாவில் எந்த சட்டத்தின் கீழும் தனது அமைப்பை பதிவு செய்யாமல் இந்து மதவெறி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் பதிவு செய்யாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ், அதனுடைய நூற்றாண்டை ஒட்டி தில்லியில் அதன் தலைமை அலுவலகத்தை சுமார் ரூ.150 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடித்திருக்கிறது. பதிவு செய்யப்படாத அமைப்புக்கு எங்கிருந்து நிதி வருகிறது? அரசு எப்படி அனுமதியளித்தது? இவையெல்லாம் விடை தெரியாத கேள்விகள். ஆனால் காவி-கார்ப்பரேட் பாசிச நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக கிறிஸ்தவ மதச்சிறுபான்மை நிறுவனங்களையும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் அவர்களிடமிருந்து கைப்பற்றத் துடிக்கிறார்கள் காவி பாசிஸ்டுகள்.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளில் செயல்படும் தனது பதிலி அமைப்புகள் மூலம் கோடிக்கணக்கில் நிதியை குவித்து வருகிறது ஆர்.எஸ்.எஸ்.  இப்படி பெறப்படும் நிதிகள் இந்தியாவில் உள்ள அதன் துணை அமைப்புகளின் இந்து மத வெறி நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்பதை பல அமைப்புகள் தாம் நடத்திய ஆய்வுகள் மூலம் அம்பலப்படுத்தி இருக்கின்றன. ஆர்.எஸ்.எஸ் பெற்று வரும் அந்நிய நிதிகள் மக்களின் பார்வைக்குக் கொண்டு வரப்படுவதில்லை. அவை யாருக்கும் தெரியாத இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் டிரம்புடன் தீபாவளி (2018) கொண்டாட்டம்: படம் (சவேரா இணைய தளம்)

அமெரிக்காவில் செயல்படும் சேவா இண்டர்நேஷனல் எனும் ஆர்.எஸ்.எஸ்-சின் பதிலி அமைப்பு பல மில்லியன் டாலர்களை நன்கொடையாகப் பெற்றிருக்கிறது என்பதை கேரவன் இதழ் சமீபத்தில் அம்பலப்படுத்தியது. 2021-ஆம் ஆண்டில் ட்விட்டரின் முன்னாள் நிர்வாகி ஜாக் டோர்சியிடமிருந்து பெறப்பட்ட 2.5 மில்லியன் டாலரும் இதில் அடங்கும்.

நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் polis project எனும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ் பெற்று வரும் நிதிப் பரிமாற்றங்கள் பற்றிய அறிக்கையை சென்ற ஆண்டில் வெளியிட்டது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ்-சின் வெளிநாட்டு துணை அமைப்புகள் 2018-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை பெற்று வந்த நன்கொடைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

அமெரிக்காவில் மட்டும் இந்து சுயம் சேவக் சங் 8.37 மில்லியன் டாலரையும், விஷ்வ ஹிந்து பரிஷத் 8.01 மில்லியன் டாலரையும், ஏகல் வித்யாலாயா பவுண்டசேன் 50.19 மில்லியன் டாலரையும், சேவா இண்டர்நேஷனல் 75.45 மில்லியன் டாலரையும் நன்கொடையாக கடந்த 5 ஆண்டுகளில் பெற்றிருக்கின்றன என அவ்வறிக்கை கூறியிருக்கிறது.

இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்புகளின் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெற்ற வருவாய், செலவுகள், சொத்துக்களின் மதிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2001-2019 ஆண்டு வரையில் மட்டும் ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்புடைய அமெரிக்க ஏழு தன்னார்வ நிறுவனங்கள் இந்துத்துவாவைப் பலப்படுத்தும் திட்டங்களுக்காக அமெரிக்காவிலும், இந்தியாவிலும் சுமார் 1,231 கோடி ரூபாயை செலவழித்திருக்கின்றன. இதில் பெரும் பகுதி இந்தியாவிற்கு ஆர்.எஸ்.எஸ்-சின் இந்துத்துவ செயல்பாடுகளுக்கு மடைமாற்றப்பட்டுள்ளன என அமெரிக்காவின் இந்து தேசியவாதத்தின் தாக்கம் எனும் அறிக்கை அம்பலப்படுத்தியது.

அமெரிக்காவில் செயல்படும் அமெரிக்க விஷ்வ ஹிந்து பரிஷத் (VHPA) என்ற துணை அமைப்பு பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம், ஒடிசா வன்முறை, டெல்லி கலவரம் போன்றவற்றில் இந்தியாவின் விஷ்வ இந்து பரிஷத்துடன் இணைந்து செயல்பட்டதாக சவேரா அறிக்கை (Savera report) அம்பலப்படுத்தியது. ஒடிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைப்பெற்ற வன்முறையில் ஈடுபட்ட இந்து மதவெறி அமைப்புகளுக்கு அமெரிக்க விஷ்வ ஹிந்து பரிஷத் தனது ஒடிசா அலுவலகம் வாயிலாக சுமார் 3,43,404 டாலரை வழங்கியிருக்கிறது.

இது மட்டுமில்லாமல்  2017 – 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே அமெரிக்காவின் கொள்கைகளில் இந்துத்துவத்தை முன்நிலைப் படுத்துவதற்காக இந்து அமெரிக்க அறக்கட்டளை மற்றும் இந்திய புலம்பெயர் ஆய்வுக்கான அறக்கட்டளை போன்ற ஆர்.எஸ்.எஸ் பதிலி அமைப்புகள் செயல்பட்டு வந்த செய்தி  சமீபத்தில் அம்பலமானது.

இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் தங்களது இந்துத்துவாவை திணிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் பெற்று வரும் நிதிகள் பற்றி கண் மூடி வாய் பொத்தி இருக்கும் மோடியின் பா.ஜ.க அரசு இந்தியாவில் கிறிஸ்துவ மதச்சிறுபான்மை அமைப்புகளின் தொண்டு நிறுவனங்களையும், மோடி அரசின் பாசிசக் கொள்கைகளை சட்டத்திற்கு உட்பட்டு அம்பலப்படுத்தி வரும் பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் கைப்பற்றத் துடிக்கிறது.

FCRA சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தால் காவிகளின் ஆட்சியில் காவி-கார்ப்பரேட் பாசிசம் புதிய பாய்ச்சலுடன் முன்னேறித் தாக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

காவி-கார்ப்பரேட் பாசிசத்தை மக்கள் மத்தியில் அம்பலப் படுத்தவதற்கு ஒரு நல் வாய்ப்பாக FCRA-2026 சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப் பட்டுள்ளது. அதுவும் தேர்தல் நேரத்தில் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், பாசிசத்தை எதிர்ப்பதாக கூறும் கட்சிகள் எதுவும் வீதியில் இறங்கிப் போராட வில்லை. மதச்சார்பின்மை பேசும்  கட்சிகளின் தலைவர்களோ, கடிதங்கள் அறிக்கைகள் என பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் களமாடி வருகின்றனர்.

FCRA-2026 சட்டத் திருத்த மசோதாவின் மூலம் முடக்கப்படும் தன்னார்வ நிறுவனங்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் தன் ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாமல் வெளியேறும் நிலைக்கு ஆளாகின்றனர். FCRA-2026 சட்டத் திருத்த மசோதாவின் மூலம் எந்த ஒரு தன்னார்வ நிறுவனமும், கிறிஸ்துவ அமைப்புகளும் நீதிமன்றங்களில் கூட வழக்காட முடியாத அளவிற்கு மோடி அரசு இதில் திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறது.

தற்போது ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதால் மோடி அரசு இதை ஒத்தி வைத்திருக்கிறது. தேர்தல் முடிந்த பின்பு இம்மசோதாவை மீண்டும் கொண்டு வரமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதத்தையும் காவி பாசிஸ்டுகளிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது.

சிஏஏ, மூன்று வேளாண் சட்டங்கள் தொடங்கி வக்பு வாரிய சட்டத் திருத்தம் வரை ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள அனைத்து மசோதாக்களும் இந்நாட்டின் ஆகப் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களுக்கு எதிரானது தான். அந்த வரிசையில் கடைசியாகச் சேர்ந்துள்ள காவி-கார்ப்பரேட் பாசிச ஒடுக்குமுறை சட்டமான FCRA-2026 சட்டத் திருத்த மசோதாவை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென்றால் சாதி, மத, இன, மொழி அடையாளங்களைக் கடந்து உழைக்கும் மக்களாய் ஒரணியில் திரண்டு பாசிசத்திற்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடுவதைத் தவிர குறுக்கு வழி ஏதுமில்லை.

  • தாமிரபரணி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன