“மிஸ்டர் சிங்” : புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான அமெரிக்க அரசின் வெறுப்புப் பிரச்சாரம்

புலம்பெயர் தொழிலாளர்களை பொருளாதார நெருக்கடிகளுக்குக் காரணமாகச் சித்தரித்து, இனவெறியையும் தேசியவெறியையும் தூண்டும் பிரச்சாரங்கள் அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகின்றன. அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையே “மிஸ்டர் சிங்” என்ற பெயரில் வெளியிட்ட வெறுப்புப் பிரச்சாரம், ஒரு சீக்கிய டிரக் ஓட்டுநர் மீதான கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்துள்ளது.

அமெரிக்காவில் தனிநபர்களுக்கு இடையிலான வன்முறை ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதற்கு போதைப்பொருள் பயன்பாடு, துப்பாக்கிக் கலாச்சாரம், சமூகச் சீர்கேடு, சமூக உறவுகள் பலவீனமடைவது எனப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், அமெரிக்காவில் குடியேறி வாழும் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி மற்றும் வெறுப்புப் பிரச்சாரம், இன்றைக்கு அங்கே வசிக்கும் இந்தியர்களின், குறிப்பாக சீக்கியர்களின் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடைபெறும் சூழலை உருவாக்கியுள்ளன. இன்னும் அதிர்ச்சியளிக்கும் வகையில், இந்தப் பிரச்சாரங்களை அமெரிக்க அரசுத் துறையே திட்டமிட்டு நடத்தியிருக்கிறது.

கடந்த வாரம் அமெரிக்காவின் வியோமிங்க் மாகாணத்தில் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்த சீக்கிய டிரக் ஓட்டுனர் ஒருவர், அடையாளம் தெரியாத அமெரிக்கர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்தார். டிரக் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த அந்தச் சீக்கியரைத் தாக்கிய நபர், அவரை 17 முறை கத்தியால் குத்தியிருக்கிறார்.

இந்தத் தாக்குதலில் சீக்கிய டிரக் ஓட்டுனர் உயிர் தப்பிவிட்டாலும் அவரை இத்தனை முறைக் கத்தியால் குத்தித் தனது வன்மத்தை வெளிப்படுத்திய நபருக்கும் அவருக்கும் எவ்வித பகையோ, அல்லது முன்விரோதமோ கிடையாது. சொல்லப்போனால் தாக்கியவர் யார் என்பது கூட அவருக்குத் தெரியாது. இன்னும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால் தாக்குதல் நடத்திய நபரும் டிரக் ஓட்டுனர் என்பதுதான். எந்தவிதமான அறிமுகமும், பழக்கமும், முன்விரோதமும் இல்லாமல், தன்னைப் போன்றதொரு டிரக் ஓட்டுனரை அந்த அமெரிக்கர் கொலைவெறியுடன் தாக்கியிருக்கிறார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (Department of Homeland Security), சமூக ஊடகங்களில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. அதில் சீக்கியரைப் போன்று தோற்றமளிக்கும் ஒருவரை ஹாலிவுட் கதாபாத்திரமான “டிரான்ஸ்ஃபார்மர்ஸ்” இயந்திரம் தாக்கி விரட்டுவது போன்ற படத்தை ஏ.ஐ. மூலம் உருவாக்கியிருந்தனர். அந்த விளம்பரத்தில் உள்ள நபரை சீக்கியர் என அடையாளப்படுத்தும் விதமாக அவரை “மிஸ்டர் சிங்” என அழைத்ததுடன், “மிஸ்டர் சிங், உங்களுக்கு வண்டி ஓட்டத் தெரியவில்லை, எங்கள் சாலைகளை விட்டு விலகிச் செல்லுங்கள்” என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. மற்றொரு பதிவில் “நீங்களாக வெளியேறிவிடுங்கள், அல்லது என்ன நடக்கும் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்” என மிரட்டியிருக்கிறது.

அமெரிக்காவில் குடியேறி வாழும் சீக்கியர்களை இழிவுபடுத்தும் விதமாகவும், இனவெறியையும், வெறுப்பையும் தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த  அந்த விளம்பரம், அமெரிக்க வாழ் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால் அதற்குள் அந்த விளம்பரம் அமெரிக்க சமூக ஊடக பயனாளர்கள் மத்தியில், காட்டுத் தீ போலப் பரவிவிட்டது. இந்தப் பிரச்சாரத்தில் உருவகப்படுத்தப்பட்டிருக்கும் “மிஸ்டர் சிங்” என்பவர், அமெரிக்காவின் புளோரிடாவில் ஒரு கொடூரமான விபத்திற்குக் காரணமான டிரக் ஓட்டுனர் ஹர்ஜிந்தர் சிங் என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (டி.எச்.எஸ்.) விளக்கமளித்திருக்கிறது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய ஹர்ஜிந்தர் சிங் ஒரு விபத்தை ஏற்படுத்திவிட்டார் என்பதைக் காரணமாக வைத்து ஒட்டுமொத்த சீக்கியர்களுக்கும், இந்தியர்களுக்கும், இன்னும் சொல்லப்போனால் ஆசியர்கள் அனைவருக்கும் எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தை டி.எச்.எஸ். முன்னெடுத்திருக்கிறது. அமெரிக்கப் பொருளாதாரம் இன்றைக்குப் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றது. தங்களது வேலை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் அமெரிக்கத் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் மத்தியில், இந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் புலம்பெயர் தொழிலாளர்கள்தான் காரணம் என்ற எண்ணத்தை இது போன்ற பிரச்சாரங்கள் உருவாக்கியிருக்கின்றன. இதற்கு வியோமிங்கில் சீக்கிய டிரக் ஓட்டுனர் மீதான தாக்குதல் சம்பவம் ஒரு உதாரணம்.

அமெரிக்காவில் மட்டுமல்ல ஐரோப்பாவிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் நெருக்கடி பூதாகரமாக வெடித்து வருகின்றது. ஏகாதிபத்தியங்கள் நடத்தும் பதிலிப் போர்களின் காரணமாகவும், பொருளாதாரத் தாக்குதல்களின் காரணமாகவும், பல்வேறு நாடுகளில் வாழ்வாதாரப் பிரச்சனைகளை உருவாக்கியிருக்கின்றன. அந்நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அதேபோல புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக தூண்டிவிடப்படும் இனவெறி வெறுப்புப் பிரச்சாரங்களும் இந்த நாடுகளில் தீவிரமடைந்துள்ளன.

ஒருபுறம், தங்களது நாட்டில் வாழ வழியில்லாத காரணத்தால், “டங்கிப் பாதை” எனப்படும் ஆபத்தான, சட்டவிரோத வழியில் அமெரிக்காவிற்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் குடியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்; மறுபுறம், அவர்களையே இலக்காகக் கொண்டு ஏகாதிபத்திய நாடுகளில் தூண்டிவிடப்படும் இனவெறி மற்றும் வெறுப்புப் பிரச்சாரங்கள் என இவை இரண்டும் புலம் பெயர் தொழிலாளர் நெருக்கடி எனும் நாணயத்தின் இரண்டு பக்கங்களாக உள்ளன.

அமெரிக்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் உருவாகியிருக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்குப் புலம்பெயர் தொழிலாளர்கள் காரணம் அல்ல. ஆனால், அந்த நெருக்கடிகளுக்கான உண்மையான காரணங்களைப் பேசுவதற்குப் பதிலாக, புலம்பெயர்ந்தவர்களை எதிரியாகக் காட்டுவது ஆளும்வர்க்கத்திற்கு, அரசியல் ரீதியாக எளிதான வழியாக இருக்கிறது. வேலைவாய்ப்பின்மை, குறைந்த ஊதியம், அதிகரித்து வரும் வீட்டு வாடகை, மருத்துவம் மற்றும் கல்விக்கான அதிக செலவுகள் என உள்நாட்டுத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் புலம்பெயர் தொழிலாளர்களே காரணம் என்ற கருத்து திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இதன் விளைவாக, தொழிலாளர்களின் கோபம் உண்மையான பிரச்சினைகளுக்கான காரணங்களை நோக்கிச் செல்லாமல், அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் எதிரியாகக் கருதும் நிலைக்கு திருப்பப்படுகிறது.

உண்மையில், ஒரு நாட்டில் புலம்பெயர்ந்து வந்து வேலை செய்யும் தொழிலாளியும், அந்த நாட்டில் பிறந்து அதே வேலையைச் செய்யும் தொழிலாளியும் பல நேரங்களில் ஒரே பிரச்சினைகளையே எதிர்கொள்கிறார்கள். இருவருக்கும் ஊதியம் தேவைப்படுகிறது; இருவருக்கும் வீடு, மருத்துவம், கல்வி மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை தேவைப்படுகிறது. ஆனால், அவர்களுக்கிடையே போட்டியை உருவாக்கி, ஒருவரை மற்றொருவரின் எதிரியாக நிறுத்தும்போது, தொழிலாளர்களின் பொதுவான பிரச்சனைகள் மறைக்கப்படுகின்றன.

இதுதான் இனவெறிப் பிரச்சாரத்தின் அரசியல் விளைவு. “உங்கள் வேலை பறிபோவதற்குக் காரணம் புலம்பெயர் தொழிலாளி”, “உங்கள் ஊதியம் குறைவதற்குக் காரணம் வெளிநாட்டிலிருந்து வந்தவர்”, “உங்கள் நாட்டின் சாலைகளை வெளிநாட்டுக் குடியேறிகள் ஆக்கிரமித்திருக்கின்றனர்” என்று தொடர்ந்து கூறப்படும் போது, பொருளாதாரப் பிரச்சினை படிப்படியாக இன மற்றும் தேசியப் பிரச்சினையாக மாற்றப்படுகிறது. அதன் மூலம் தொழிலாளர்களின் உண்மையான பொருளாதாரப் பிரச்சனைகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட “மிஸ்டர் சிங்” பிரச்சாரம் இந்தப் போக்கைப் புரிந்துகொள்ளும் முக்கியமான உதாரணமாக அமைந்துள்ளது. அந்தப் பதிவில் “சிங்” என்ற பொதுவான சீக்கியப் பெயரைப் பயன்படுத்தி, புலம்பெயர் டிரக் ஓட்டுநர்களை இழிவுபடுத்தும் செய்தி பரப்பப்பட்டது. ஒரு சமூகத்தின் அடையாளத்தையே கேலி செய்து, அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை நாட்டைவிட்டு வெளியேறுமாறு அரசு அமைப்பே கூறும் சூழல் சக உள்நாட்டுத் தொழிலாளர்கள் மத்தியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நாம் இந்த விசயத்தில் நேரடியாகப் பார்க்க முடியும்.

தொழிலாளர்களைத் தொழிலாளர்களுக்கு எதிராக நிறுத்துவதால் யாருக்கு இலாபம்?

ஒரு அமெரிக்கத் தொழிலாளியின் வேலைவாய்ப்பை ஒரு இந்தியப் புலம்பெயர் தொழிலாளி பறித்துவிட்டார் என்று கூறுவது எளிதானது. ஆனால், அந்த வேலைக்கு எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறது, தொழிலாளியின் வேலை நேரம் எவ்வளவு, தொழிலாளர் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது, தொழிற்சங்க உரிமைகள் எந்த நிலையில் உள்ளன என்பதைக் கட்டுப்படுத்துவது அந்தப் புலம்பெயர் தொழிலாளியின் கைகளில் இல்லை.

அதேபோல், டிரக் நிறுவனத்தின் இலாபத்திற்காகவே புலம்பெயர் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள் எனும்போது அந்த முடிவை எடுப்பது அந்தத் தொழிலாளி அல்ல. அவர் தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக வேலை தேடுகிறார். அமெரிக்கத் தொழிலாளியும் அதையே செய்கிறார். இருவரும் எதிர்கொள்ளும் குறைந்த ஊதியம், நீண்ட வேலை நேரம், பாதுகாப்பற்ற பணிச்சூழல் போன்ற பொதுவான பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு பதிலாக இருவரும் இங்கே போட்டியாளர்களாக மாற்றப்படுகின்றனர். இதன் விளைவாக ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் சந்தேகிக்கவும் வெறுக்கவும் தொடங்குகிறார்கள்.

பொருளாதார நெருக்கடியின் உண்மையான காரணங்களை ஆராய்வதற்குப் பதிலாக, அதன் விளைவுகளை அனுபவிக்கும் உள்நாட்டு மக்களுக்கு ஒரு எளிதான எதிரியை உருவாக்கிக் கொடுக்கிறார்கள். இரண்டு தொழிலாளர்களையும் சுரண்டிக் கொழுக்கும் அமெரிக்க முதலாளிதான் இதன் மூலம் பயனடைகிறார்.

சொந்த நாட்டில் வாழ்வதற்கான வாய்ப்பை இழந்து குடிபெயர வேண்டிய கட்டாயம் ஒருபுறம்; குடிபெயர்ந்த நாட்டின் பொருளாதாரத்துக்குத் தனது உழைப்பை வழங்கியபோதும், அந்நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தானே காரணம் எனக் குற்றம்சாட்டப்படுவது மறுபுறம். இவ்வாறு, புலம்பெயர் தொழிலாளி ஒரே நேரத்தில் இரண்டு விதமான சுமைகளைச் சுமக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்.

இதுதான் புலம்பெயர் தொழிலாளர் நெருக்கடியின் மிகக் கொடூரமான முரண்பாடு. ஒரு பக்கம், உலகின் பொருளாதார அமைப்புகள் தொழிலாளர்களை வேலை மற்றும் வாழ்வாதாரத்திற்காக எல்லைகளைத் தாண்டிச் செல்ல நிர்ப்பந்திக்கின்றன. மறுபக்கம், அவர்கள் சென்றடையும் நாடுகளின் அரசியல் அமைப்புகள் அவர்களையே அந்த நெருக்கடியின் குற்றவாளிகளாகச் சித்தரிக்கின்றன.

வெறுப்பின் இலக்கு மாறினாலும், அரசியல் அணுகுமுறை ஒன்றுதான்

இவ்வாறு உருவாக்கப்படும் வெறுப்பின் இலக்கு காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். ஒருகாலத்தில் இலத்தீன் அமெரிக்கர்கள்; மற்றொரு காலத்தில் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்தவர்கள்; இன்று இந்தியர்கள், குறிப்பாக சீக்கியர்கள் என வெறுப்பின் இலக்கு மாற்றப்படலாம். ஆனால் அதன் அரசியல் அணுகுமுறை ஒன்றுதான் அது சமூகத்தின் பொருளாதார மற்றும் அரசியல் முரண்பாடுகளுக்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பொறுப்பாக்குவது.

இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க அரசு முன்னெடுத்த தீவிரவாதத்திற்கு எதிரான போர் எனும் பிரச்சாரம், “இஸ்லாமாபோபியா” எனப்படும் இஸ்லாமியர்களுக்கு எதிரான பயத்தையும் வெறுப்பையும் அந்நாட்டு மக்கள் மத்தியில் பரவச் செய்தது. இதன் காரணமாக பல இடங்களில் அமெரிக்க வாழ் இஸ்லாமியர்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடைபெற்றன. அந்தச் சம்பவங்களில் பள்ளி செல்லும் சிறுவர்கள் தொடங்கி, தொழிலாளர்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் இஸ்லாமியர்களுக்கு எதிரான தங்களது வன்மத்தை வெளிப்படுத்தியிருந்தனர். தற்போது அதே பிரச்சாரம் வேறொரு மக்கள் பிரிவைக் குறிவைத்து நடத்தப்படுகிறது.

அப்படியெனில், தொழிலாளர்களின் உண்மையான எதிரி யார்?

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது நாட்டை விட்டு வெளியேறுவது அவர்களின் முதல் தேர்வாக எப்போதும் இருப்பதில்லை. பலருக்கு அது உயிர்வாழ்வதற்கான கட்டாயமாக இருக்கிறது. போர்கள், பொருளாதாரத் தடைகள், வளங்களின் கொள்ளை, அரசியல் தலையீடுகள், வாழ்வாதார அழிவு ஆகியவற்றால் தனது சொந்த நாட்டிலேயே வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட தொழிலாளி, உயிர்வாழ்வதற்காக வேறு நாட்டை நோக்கிச் செல்கிறான். அவன் கடந்து செல்லும் எல்லைகள் வேறாக இருக்கலாம்; ஆனால் அவன் விற்கும் உழைப்பு அதே உழைப்புதான். இந்தியத் தொழிலாளியும் அமெரிக்கத் தொழிலாளியும் தங்களது உழைப்பை விற்றுத்தான் வாழ்கிறார்கள். ஒருவரின் உழைப்பிலிருந்து மற்றொருவர் இலாபம் ஈட்டுவதில்லை. மாறாக, இருவரின் உழைப்பிலிருந்தும் இலாபம் ஈட்டுவது முதலாளித்துவ வர்க்கமே.

ஒருபுறம், உலகின் வளங்களையும் மக்களின் உழைப்பையும் தனது பொருளாதார நலன்களுக்காகச் சுரண்டுவது; மறுபுறம், அந்தச் சுரண்டலால் உருவாகும் இடம்பெயர்வின் விளைவுகளுக்குப் புலம்பெயர் மக்களையே குற்றம்சாட்டுவது—தானே உருவாக்கிய நெருக்கடியின் சுமையை, அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் மீதே சுமத்துவது. இதுதான் ஏகாதிபத்தியத்தின் இரட்டை முகம்.

இந்த வெறுப்புப் பிரச்சாரங்கள் மூலம் அமெரிக்கத் தொழிலாளியின் கோபம் இந்தியத் தொழிலாளியை நோக்கித் திரும்புகிறது. இந்தியத் தொழிலாளியின் அச்சம் அமெரிக்கத் தொழிலாளியை நோக்கித் திரும்புகிறது. வெள்ளைத் தொழிலாளி, கறுப்பினத் தொழிலாளி, ஆசியத் தொழிலாளி, இலத்தீன் அமெரிக்கத் தொழிலாளி என தொழிலாளர்கள் இன, தேசிய, மத அடிப்படையில் துண்டாடப்படுகிறார்கள். ஆனால், இந்தப் பிரிவுகளின் மேலே நின்று, அனைவரின் உழைப்பிலிருந்தும் இலாபம் ஈட்டும் முதலாளித்துவ வர்க்கம் தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது.

தொழிலாளர்களை நாடுகளின் எல்லைகளால் பிரிக்கலாம்; ஆனால் அவர்களின் உழைப்பைச் சுரண்டும் முதலாளித்துவ அமைப்பு எல்லைகளைக் கடந்து செயல்படுகிறது. இனம், மதம், தேசியம் போன்ற அடையாளங்களின் அடிப்படையில் தொழிலாளர்களை ஒருவருக்கு ஒருவர் எதிரிகளாக நிறுத்த முடியும்; ஆனால், தொழிலாளர்களின் உழைப்பிலிருந்து கிடைக்கும் இலாபம் மற்ற தொழிலாளர்களுக்குச் செல்வதில்லை; அது முதலாளி வர்க்கத்திடமே செல்கிறது.

எனவே, தொழிலாளியின் எதிரி பக்கத்து நாட்டிலிருந்து வந்த தொழிலாளி அல்ல; அவனுடன் போட்டியிடும் மற்றொரு தொழிலாளியும் அல்ல. தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி உபரி மதிப்பைக் கைப்பற்றி, அவர்களைப் பிளவுபடுத்தி ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தி, அந்தச் சுரண்டலை உலகளவில் விரிவுபடுத்தும் ஏகாதிபத்திய முதலாளித்துவ அமைப்பே அடிப்படைச் சுரண்டல் அமைப்பாகும்.

இந்த அடிப்படை உண்மையை மறைத்துப் பாட்டாளி வர்க்கத்தின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கும், அதன் ஒற்றுமையைச் சிதைப்பதற்கும் இனவெறியும் குறுகிய தேசியவெறியும் ஆளும் வர்க்கங்களால் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான வெறுப்பையும் இனவெறிப் பிரச்சாரத்தையும் எதிர்ப்பது என்பது வெறும் மனிதநேயக் கடமையல்ல; அது சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க ஒற்றுமையைப் பாதுகாக்கும் போராட்டத்தின் பிரிக்க முடியாத பகுதியாகும்.

ஆகவே, இனவெறி, நிறவெறி, தேசியவெறி ஆகியவற்றின் பெயரில் தொழிலாளர்களை ஒருவருக்கு எதிராக மற்றொருவரை நிறுத்தும் ஆளும் வர்க்கத்தின் பிளவுபடுத்தும் அரசியலை நிராகரிக்க வேண்டும். உழைக்கும் மக்களைப் பிளக்கும் அனைத்து பிற்போக்குச் சித்தாந்தங்களையும் எதிர்த்து, அவர்களின் பொதுவான வர்க்க நலன்களின் அடிப்படையில் ஒற்றுமையை வளர்த்தெடுக்க வேண்டும்.

உலகின் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த நிறத்தையும் இனத்தையும் சார்ந்தவராக இருந்தாலும், உழைப்பை விற்று வாழும் தொழிலாளர்களின் அடிப்படை நலன்கள் ஒன்றுதான். எனவே, வர்க்க ஒற்றுமையைச் சிதைக்கும் வெறுப்புப் பிரச்சாரங்களைப் புறக்கணித்து, சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் நிலைநிறுத்தும் ஏகாதிபத்திய முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராக சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையை வலுப்படுத்துவதே இன்றைய வரலாற்றுக் கடமையாகும்.

  • அன்பு

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன