இராமனின் பெயரால் கொள்ளையடிக்கும் ஆர்எஸ்எஸ் திருடர்கள்!

இராமர் கோவில் என்பதே முறைகேடுகளின் விளைப்பொருள் தான். அதில் திருட்டா என்று சங்கப்பரிவாரங்கள் ஆதங்கப்படுவதும், விசாரணை என்ற பெயரில் ஆதித்தியநாத் பேசித் திரிவதும் மக்களை ஏமாற்றுவதற்கான கண்துடைப்பு நாடகமேயன்றி வோறொன்றுமில்லை.

பாரத தேசத்தின் சுப்ரீம் ஸ்டாராக வலம் வந்துக் கொண்டிருந்த இராமன், தனது கோயில் உண்டியல் திருட்டின் காரணமாக போலீஸின் விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டிருக்கின்றான். வளர்த்த கடா மார்பில் பாய்வது போல, ஆட்சி-அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இராமனை மையப்படுத்தி சங்கப் பரிவாரங்கள் நடத்திய நூற்றுக்கணக்கான மதக்கலவரங்கள், முஸ்லீம் படுகொலைகள், பாலியல் வன்புணர்வு நிகழ்வுகள், சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகள், சட்டவிதி மீறல்கள் என அனைத்துக்கும் துணை நின்ற “எம்பெருமான் இராமபிரான்” அணிந்திருந்த பேண்ட் பாக்கெட்டுக்குள்ளேயே கையை விட்டு காவி கும்பல் பிக்பாக்கெட் அடித்திருப்பதைத்தான் இராமனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இராமனின் கதைப்படி இது ஒரு துன்பியல் நிகழ்வு.

அயோத்தி இராமர் கோவிலில், பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளைத் திருடப்படுவது குறித்தக் குற்றச்சாட்டுக்கள் ஜூன் முதல் வாரத்திலேயே எழுந்தது. ஆரம்பத்தில் இக்குற்றச்சாட்டுகளை மறுத்த ஆதித்தியநாத் அரசாங்கம், எதிர்கட்சிகளின் அழுத்தம் காரணமாக இப்புகார்களை விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. இக்குழுவும் திருட்டு நடந்திருப்பதை தனது முதல் கட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியது.

சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை முழுமையாக முடிவடையாத நிலையில்,  உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த எட்டு பேரை அயோத்தி போலீஸ் கைது செய்தது. இவர்களது வீட்டில் நடத்தியச் சோதனையில் 79.85 இலட்சம் ரூபாய், தங்க ஆபரணங்கள், வெள்ளிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஒருநாளைக்கு சராசரியாக ஆறிலிருந்து எட்டு இலட்சம் ரூபாய் வரை பணம் கையாடல் செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸ் கூறியது.

உண்டியல் பணம் திருடப்படுவது நீண்ட காலமாகவே நடந்து வருவதாகவும் இதனோடு பெரிய கைகளுக்கும் தொடர்பிருக்கிறது எனவும் அவர்களைக் காப்பாற்றுவதற்காகவே கீழ்மட்டப் பணியாளர்களை கைது செய்து வழக்கை முடிக்கப் பார்க்கின்றனர் என்றும் எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்றன.

எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லாமல் இல்லை. கைது செய்யப்பட்ட எட்டு பேரில் மூவர் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா டிரஸ்ட் உறுப்பினர்களோடு நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள். ராம் சங்கர் யாதவ்[டினு] டிரஸ்டின் பொதுச் செயலாளலரான ஜம்பத் ராய்-க்கு நெருக்கமானவர்.  அனுகல்ப் மிஸ்ரா மற்றும் லுவ்குஷ் மிஸ்ரா இருவரும் டிரஸ்டின் மூத்த உறுப்பினரான அனில் மிஸ்ராவுக்கு நெருக்கமானவர். ஜம்பத் ராய் மற்றும் அனில் மிஸ்ரா இருவரும் கோயிலின் தினசரி அலுவல்கள், பணியாட்கள் நியமனம்,  காணிக்கையை எண்ணுவது, வங்கியில் வரவு வைப்பது ஆகிய வேலைகளை நிர்வகித்து வந்தவர்கள். 2021-இல் இதே போன்றதொரு காணிக்கை கையாடல் நடந்தபோது, இது குறித்து அப்போது மேற்பார்வையாளராக பணியாற்றிய மஹிபால் சிங், டிரஸ்ட் உறுப்பினர்களான ஜம்பத் ராய் மற்றும் கோபால் ராவ் ஆகியோரிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அதைப்பற்றி விசாரிக்காமல் மஹிபால் சிங்கை பணியிலிருந்து நீக்கி விட்டதாகவும் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

பாஜகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பிர்ஜ் பூஷண் சிங், இக்குற்றத்தில் உயர் அதிகார மட்டத்தில் உள்ளவர்களுக்கு தொடர்புண்டு, வெளிப்படையாகப் பேசினால் நான் சிக்கலில் மாட்டிக்கொள்வேன் என்று பேசியிருந்தார். விவகாரம் முற்றவே ஜம்பத் ராய், அனில் மிஸ்ரா, கோபால் ராவ் மூவரையும் பலிக்கொடுக்க ஆர்எஸ்எஸ்-விஹெச்பி-பாஜக முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது. இம்மூவருக்கும் இராம ஜென்ம பூமி இயக்கத்திற்கும் மிகநெருங்கியத் தொடர்பு உண்டு.

பாபர் மசூதி-இராமர் கோவில் வழக்கில், இராமர் கோவில் கட்டுவது மற்றும் கோவிலை நிர்வகிப்பதற்காக உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி அமைக்கப்பட்டது தான் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா டிரஸ்ட். இதன் உறுப்பினர்களை மோடி தான் அறிவித்தார். டிரஸ்ட்டின் பதினான்கு உறுப்பினர்களில் ஒன்பது பேர் ஆர்எஸ்எஸ், விஹெச்பி, மற்றும் ராமர் கோவில் கட்டும் இயக்கத்தினைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள்.

டிரஸ்ட்டின் பொதுச் செயலாளரான ஜம்பத் ராய் விஹெச்பி-யின் துணைத் தலைவர். கோவிலின் நிர்வாகத்தைப் பார்த்து வந்த அனில் மிஸ்ரா உத்திரப்பிரதேச ஆர்எஸ்எஸ்–இன் முக்கியத் தலைவர்களில் ஒருவர். பிரதமர் அலுவலகத்தின் முன்னாள் செயலாளரான நிர்பேந்திர மிஸ்ரா டிரஸ்ட்டின் மற்றொரு உறுப்பினர். இவர் தான் இராமர் கோவில் காட்டுமானக் கமிட்டியின் தலைவராக இருந்தவர். கிருஷ்ண மோகன் ஆர்எஸ்எஸ்-இன் மூத்த தலைவர். இதுமட்டுமில்லாது இராமஜென்ம பூமி இயக்கத்தில் தொடக்கத்திலிருந்த ஆர்எஸ்எஸ்-விஹெச்பியுடன் இணைந்து செயல்பட்டு வரும் உள்ளூர் மடாதிபதிகளும் டிரஸ்ட் உறுப்பினர்களாக உள்ளனர்.

எனவே மோடி தொடங்கி, விஹெச்பி, ஆர்எஸ்எஸ் பெருந்தலைகள், உள்ளூர் சாமியார்கள், சங்கப் பரிவாரத்தின் உள்ளூர் ஆதரவாளர்கள் வரை பெரும்பான்மையாக சங்கிகளே கோயிலை நிர்வகித்து வருகின்றனர். எனவே கோயில் கட்டுமானம் தொடங்கியதிலிருந்தே பல வருடங்களாக நடந்து வரும் நன்கொடை/காணிக்கை திருட்டுக்கும் சங்கப் பரிவாரங்களுக்கும் தொடர்பு இல்லை என்று கடந்து செல்ல முடியாது.

உத்திரப்பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் அடுத்த வருடத் தொடக்கத்தில் நடக்கவிருக்கின்ற நிலையில், இராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம் “ஊழல் கறைப் படியாத” பாஜக[ஆதித்தியநாத்] ஆட்சிக்கு பெரும் தலைவலியாகவே மாறியுள்ளது. எதிர் கட்சிகளான சமாஜ்வாதியும் காங்கிரஸும் இப்பிரச்சினையை மையப்படுத்தி தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. இதனால் பாஜகவோ, இத்திருட்டுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை, குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என்று ஒதுங்கிக்கொள்ள முயற்சிக்கிறது. விஹெச்பியோ, கோவிலை நிர்வகிப்பது எங்கள் வேலையல்ல என்று ஜம்பத் ராயை கைகழுவிவிடப் பார்க்கிறது. ஆர்எஸ்எஸ்வோ இன்றுவரை வாய்திறக்கவே இல்லை.  

இந்தியாவின் மூன்றில் இரண்டு மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒன்றியத்தில் ஆட்சி செய்து வருகின்றனர். இந்நிலையை எட்டுவதற்கு துருப்புச் சீட்டாக இருந்தது ராமஜென்ம பூமி இயக்கம் என்றால் அது மிகையாகாது. 1980-களின் பிற்பகுதியில் இராமர் கோவில் கட்டுவதை மையப்படுத்தி நாடு முழுவதும் விரிவானப் பிரச்சாரங்களை விஹெச்பி  முன்னெடுத்தது. அப்போது பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் இரண்டு. 1990-இல் அத்வானியின் இரத யாத்திரை,  1992-இல் பாபர் மசூதி இடிப்பு அதையொட்டிய கலவரங்கள், 2002 குஜராத் கலவரம், 2007-08 காலகட்டங்களில் சங்கப் பரிவாரங்களால் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகள் என அடுத்த 30 வருடங்களில் இராமனை மையப்படுத்தி இவர்கள் நடத்திய முஸ்லீம் வெறுப்பு அரசியல் பிரச்சாரங்களின் விளைவாக 2014-இல் 290 நாடளுமன்ற இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றனர். ஆட்சிக்கு வந்த பிறகு, ஒன்றியத் தொல்லியல் துறை மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உதவியோடு புராணப் புனைவான இராமனை உயிரோடு வாழ்ந்ததற்கான சட்ட அங்கீகாரத்தைப் பெற்று கோவிலைக் கட்டினர்.

இராமர் கோவிலின் ஒரு பக்கம் முஸ்லீம் வெறுப்பு, மதக்கலவரங்கள், சட்ட விதிமீறல்கள் என்றால் அதன் மற்றொரு பக்கத்தை பண மோசடி, ஊழல் முறைகேடுகள் என்பதிலிருந்து பிரிக்க முடியாது. இராம ஜென்ம பூமி இயக்கத்திற்காக 1980-களின் தொடக்கத்திலிருந்து 1990 வரை இந்தியா மற்றும் பிற நாடுகளிலிருந்து கோயில் கட்டுவதற்காக திரட்டப்பட்ட 1400 கோடியை விஷ்வ ஹிந்து பரிஷத் கையாடல் செய்ததாக அப்போதே குற்றச்சாட்டு எழுந்தது. இராம ஜென்ம பூமி இயக்கம் உச்சத்தில் இருந்த 1989 மற்றும் 1990 கால கட்டங்களில் கோயில் கட்டுவதற்காக செங்களையும் நிதியையும் விஹெச்பி திரட்டியது இவ்வாறு திரட்டிய மொத்த நிதியையும் விஹெச்பி கையாடல் செய்ததாக புகார் எழுந்தன. 2019 உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, இராமர் கோவிலைக் கட்டுவதற்காக மசூதியை சுற்றியுள்ள இடங்களை டிரஸ்ட்டுக்கு வாங்கியதில், நிலத்தின் விலையை பல மடங்கு உயர்த்தி வாங்கி இருப்பதாக கணக்குக் காட்டியதை எதிர்கட்சிகள் குற்றம் சாட்டினர். இப்புகார்கள் எதுவும் இன்றுவரை விசாரிக்கப்படவில்லை. தற்போதைய விசாரணையும் எட்டு பேரைத் தாண்டி போகப்போவதில்லை. 

இந்துக்களின் உணர்வையும், நம்பிக்கையையும் ஆர்எஸ்எஸ்-பாஜக அவமதித்து விட்டதாகவும், இப்பிரச்சனையில் மோடி வாய் திறக்க வேண்டும் என்றும் எதிர் கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. காங்கிரஸ் ஒருபடி மேலே சென்று உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடக்க வேண்டும் என்கிறது. உலகத்தில் பிறக்காத ஒரு குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் கொடுத்து பிரச்சனைக்கு அடிக்கொள்ளி வைத்ததே உச்சநீதிமன்றம் தான். இந்த  முறைகேடுகளுக்குப் பின்னணியில் இருப்பது மோடி-அமித்ஷா-மோகன் பகவத் கும்பல் தான். திருட்டுக்கு சம்பந்தப்பட்டவர்களிடமே திருடியவர்களைத் தண்டிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கோருவதை என்னவென்பது?

இந்துராஷ்டிரமே காவி பாசிஸ்ட்டுகளின் இலக்கு. அதை அடைவதற்கான  யுத்திதான் இராம ஜென்ம பூமி இயக்கம். இதற்காக மக்கள் ஆதரவைத் திரட்டவே இந்து மதம், கடவுள் நம்பிக்கை, பாரதீயக் கலாச்சாரம் என்ற சாதுவான முகமூடிகளை அணிந்து கொண்டுள்ளனர். உண்மையில், கலவரங்கள், படுகொலைகள், ஊழல் முறைகேடுகள், சட்ட விதிமீறல்கள், இந்து தேசிய வெறிப் பிரச்சாரங்களே அவற்றுக்கான அடிப்படைச் செயல்பாடுகள். எனவே இராமர் கோவில் என்பதே முறைகேடுகளின் விளைபொருள் தான். அதில் திருட்டா என்று சங்கப்பரிவாரங்கள் ஆதங்கப்படுவதும், விசாரணை என்ற பெயரில் ஆதித்தியநாத் பேசித் திரிவதும் மக்களை ஏமாற்றுவதற்கான கண்துடைப்பு நாடகமேயன்றி வோறொன்றுமில்லை. எனவே ஒழிக்கப்பட வேண்டியது உண்டியல் திருட்டு மட்டுமல்ல, அதற்கு அடிப்படையான இராமர் கோவிலையும் தான்!

  • மாணிக்கம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன