ஆய்வு மாணவர் பாரதிதாசன் விவகாரம்: அமைச்சர் வன்னியரசும் தவெக அரசும் மட்டுமே பிரச்சினையா?

செப்டம்பர் 19, 2026
மலேசியாவில் மருத்துவ ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர் பாரதிதாசனின் கல்வி உதவித்தொகை தாமதம், தவெக அரசின் நிர்வாகப் பொறுப்பின்மையை மட்டும் வெளிப்படுத்தவில்லை. இதே திட்டத்தில் முந்தைய திமுக ஆட்சியிலும் ஏற்பட்ட தாமதம், ஆட்சி மாறினாலும் மாணவர்களை அலைக்கழிக்கும் அதிகார வர்க்க நடைமுறை மாறவில்லை என்பதைக் காட்டுகிறது.

அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் மலேசியாவில் மருத்துவ ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர் பாரதிதாசனுக்கு இரண்டாம் ஆண்டு படிப்பிற்கான உதவித்தொகையைச் செலுத்தாமல் இழுத்தடித்து வருகிறது, தவெக அரசு. மாணவர் பாரதிதாசன் இது குறித்து அரசிடம் பலமுறை முறையிட்டும் இந்த இழுத்தடிப்பு இன்னும் தொடர்கிறது. இது குறித்து அவர் ஆகஸ்ட் மாதம் ஏற்கனவே வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 17ஆம் தேதி இன்னொரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில், ‘அரசின் மீதோ அதிகாரிகள் மீதோ எந்தத் தவறும் இல்லை; அந்த மாணவர்தான் தவெக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்’ என்றும், ‘கல்விக்காக அரசு கொடுத்த உதவித்தொகையைக் கொண்டு அவர் வெளிநாட்டில் ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்’ என்றும் தவெக மற்றும் விசிகவின் இணைய கூலிப்படைகள் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றன.

பொதுவெளியில் ‘மாணவர் வீடியோ வெளியிடுவது சரியல்ல; மெயில் மூலம்தான் பேச வேண்டும்’ என்று மிரட்டுகிறது, தவெக அரசு. ஆனால், 2 இலட்சம் ரூபாய்க்கு ஆப்பிள் மேக் ப்ரோ கணினி வாங்கியுள்ளதையும், 15 ஆயிரம் ரூபாய்க்குக் காலணிகள் வாங்கியதையும் அரசின் அறிக்கையிலேயே பொதுவெளியில் வெளியிட்டுள்ளது. அரசின் பணத்தில் மாணவர் பாரதிதாசன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருவதைப் போன்ற ஒரு தோற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, மாணவருக்கு உளவியல் சித்திரவதை கொடுத்து, இப்பிரச்சினையில் இருந்து பின்வாங்கச் செய்ய வேண்டும் என்பதே இத்தகவல்களைக் கசியவிடுவதன் நோக்கமாகும்!

முதலில் இந்தப் பிரச்சினையின் பரிணாமத்தைக் காலவரிசைப்படி விரிவாகப் பார்ப்போம். பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி மாணவர்கள் வெளிநாடுகளில் மேற்படிப்பு மேற்கொள்ள உதவும் வகையில், திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் ‘அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டம்’ ஆகும். இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் மற்றும் அவர்கள் வெளிநாடுகளில் தங்கிப் படிப்பதற்காக மேற்கொள்ளும் வாழ்க்கைச் செலவினங்கள் எனச் சேர்த்து ஆண்டிற்கு 36 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்த 2025-26 கல்வியாண்டில் இத்திட்டத்தின் கீழ் 181 மாணவர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தார்கள். இதில் ஒரு மாணவர்தான் பாரதிதாசன்.

இத்திட்டத்தின் கீழ் படிக்கும் மற்ற மாணவர்கள் அனைவரும் முதுகலைப் பட்டம் படிக்கிறார்கள். பாரதிதாசன் மட்டுமே ஆய்வு மாணவராக உள்ளார். முதுகலை மாணவர்களுக்குக் கல்லூரிக் கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் ஆகியவற்றுக்கு மட்டும்தான் தேவையிருக்கும். ஆனால், ஆய்வு மேற்கொள்வதற்கு, குறிப்பாக மருத்துவ ஆய்விற்குத் தேவையான Specimen-கள், வேதியியல் பொருட்கள் என அதிகத் தேவைகள் இருக்கும்.

அரசு தெரிவித்துள்ள விவரங்களின்படி, சென்ற கல்வியாண்டில் (2025-26) மாணவர் பாரதிதாசனுக்குக் கல்விக் கட்டணமாக ரூ.5 லட்சம், விசா மற்றும் விமானக் கட்டணமாக ரூ.3.58 லட்சம், வாழ்க்கைச் செலவினங்களுக்காக ரூ.5.8 லட்சம், ஆராய்ச்சிக்காக ரூ.18.9 லட்சம் என மொத்தம் ரூ.36 லட்சம் உதவித்தொகையாக அரசு கொடுத்துள்ளது. அதாவது, இவையெல்லாம் அவர் முதலாண்டிற்கான செலவுகள் ஆகும். அவர் தற்போது கேட்பது இரண்டாம் ஆண்டிற்கான செலவுகள்.

இந்த இரண்டாம் ஆண்டுக்கான உதவித் தொகைக்காகத்தான் மாணவர் பாரதிதாசன் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து போராடி வருகிறார். அவர் தனது இரண்டாம் ஆண்டு ஆய்வுப் படிப்பைத் தொடர்வதற்கான ஆவணங்களையும், இரண்டு ஆண்டு ஆய்வுக்குத் தேவைப்படும் செலவினங்கள் பற்றியும் குறிப்பிட்டு, சம்பந்தப்பட்ட அரசு துறைக்கு அனுப்பியிருந்தார். மேலும், முந்தைய கல்வியாண்டில் அவருக்குக் கொடுக்கப்பட்ட மொத்தத் தொகையான 36 லட்சமும் எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பதற்கான கணக்குகளையும் அவற்றுக்கான ரசீதுகளையும் அரசிடம் கடந்த ஜூன் 8ஆம் தேதியே சமர்ப்பித்துவிட்டார். மேலும், பாரதிதாசனின் நண்பர்கள் அமைச்சர் வன்னியரசை இரண்டு முறை சந்தித்து இதுகுறித்து முறையிட்டிருக்கிறார்கள். இதன் பின்னும், இரண்டாம் ஆண்டிற்கான உதவித்தொகை கொடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த பாரதிதாசன் ஆகஸ்ட் மாதம் முதன்முதலாக வீடியோ வெளியிட்டார். அதுதான் சட்டமன்றத்தில் பேசுபொருளானது.

பாரதிதாசன் ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட வீடியோவிற்குச் சட்டமன்றத்தில் பதிலளித்த சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு, ‘அந்த மாணவர் முந்தைய ஆண்டு செய்த செலவுகளுக்கான உரிய ஆவணங்களை இன்னும் சமர்ப்பிக்கவில்லை’ என்றார். ஆனால், உண்மையில் பாரதிதாசன் ஜூன் 8ஆம் தேதியே அனைத்தையும் சமர்ப்பித்துவிட்டார். மேலும், ஆகஸ்ட் 20ஆம் தேதி, ‘மாணவர் பாரதிதாசன் சமர்ப்பித்ததில் 8 லட்சம் ரூபாய்க்கான செலவுகள் குறித்த ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை’ என்று கூறி, ஆராய்ச்சிக்காக வாங்கிய பொருட்கள் மற்றும் அதற்கான செலவுகள் குறித்து விளக்கம் கோரியது, சமூக(அ)நீதித் துறை.

ஆனால், தான் அனைத்து ஆவணங்களையும் ஏற்கனவே சமர்ப்பித்துவிட்டதாக மாணவர் பாரதிதாசன் உறுதியாகக் கூறினார். இதற்கிடையில், இரண்டாம் ஆண்டுக்கான கல்விக் கட்டணமும், வாழ்க்கைச் செலவினங்களான கட்டணமும் சேர்த்து மொத்தம் 12 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டது. ஆனால், ஆய்வுப் பணிகளுக்குத் தேவையான 19 லட்சம் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இந்தத் தொகையை விடுவிக்கக் கோரிதான் பாரதிதாசன் தொடர்ந்து அரசுக்கு மின்னஞ்சல் அனுப்பி வந்தார்.

இந்நிலையில், ‘பாரதிதாசன் தனது ஆய்வுக்காகத்தான் இவ்வளவு பணம் கேட்கிறாரா? அவரது ஆராய்ச்சிக்கு இவ்வளவு பணம் செலவாகுமா?’ என்று அவர் படிக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் நேரடியாக விளக்கம் கேட்டு, தன்னிச்சையாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளது, தவெக அரசின் சமூகநீதித் துறை. ஒரு மாணவரின் கல்விக் கட்டணத்திற்குப் பொறுப்பேற்றிருக்கும் அரசே இந்த மாதிரி அந்த மாணவன் பற்றி விசாரித்தால், அப்பல்கலைக்கழக நிர்வாகம் என்ன நினைக்கும் என்று யோசித்துப் பாருங்கள்! இது அந்த மாணவர் மீதான பல்கலைக்கழக நிர்வாகத்தின் நம்பகத்தன்மையைக் குலைப்பதன்றி வேறென்ன!! இதனால், தாம் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்படலாம் என்ற அச்சத்தில்தான் தற்போது (செப்டம்பர் 17) மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு ‘மாணவர் பாரதிதாசன் கண்ணீருடன் வெளியிட்ட வீடியோவைக் கொண்டு, தவெக அரசு மாணவரின் கல்வியையும் வாழ்க்கையையும் காவு வாங்குகிறது’ என்றும், ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று சொல்லி அமைச்சரான வன்னியரசு இன்று ஒரு தலித் மாணவனை வஞ்சிக்கிறார்’ என்றும் திமுகவினர் பேசி வருகிறார்கள். இதில் உண்மை இருக்கிறது. ஆனால், இதுவே முழுமையான உண்மையல்ல.

இங்கேதான் பேசப்படாத ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும். மாணவர் பாரதிதாசனுக்கு முதல் ஆண்டு உதவித்தொகை வழங்குவதில் கூட இதே போல் இழுத்தடிப்பு நடந்துள்ளது. அப்போது ஆட்சியில் இருந்தது திமுகதான்.

பாரதிதாசன் மலேசியா செல்வதற்கான விசா மற்றும் டிக்கெட் கட்டணம், வெளிநாட்டில் படிக்க ரூ.7 லட்சம் வரை வங்கியிருப்புத் தொகை என மொத்தம் ரூ.12 லட்சம் வரை தேவைப்பட்டுள்ளது. ஆனால், இதனை அவர் மலேசியா சென்று ஒரு மாதம் கழித்துதான் அனுப்புவோம் என்றது, அப்போதைய திமுக அரசு. ஆனால், அவர் அங்கு சென்று இரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும் அந்தத் தொகை விடுவிக்கப்படவில்லை. இதுகுறித்து 2025 மே மாதம் ‘நக்கீரன்’ செய்தி வெளியிட்டிருந்தது. அதன் பின்னர்தான் இந்தத் தொகை விடுவிக்கப்பட்டது.

இந்த உண்மை நமக்கு ஒன்றைத் தெளிவாகக் காட்டுகிறது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அதிகாரிகள்தான் அரசை ஆள்கிறார்கள். இந்த அதிகார வர்க்கம் என்பது ஆங்கிலேய காலனி ஆட்சியின் நீட்சி. எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே 1947 அதிகார மாற்றத்தின் மீது இந்தியா மீது திணிக்கப்பட்டது. அதனால்தான் இவர்கள் மக்கள் படும் துன்பங்கள் பற்றி எதையும் தெரிந்துகொள்வதில்லை.

மாணவர் பாரதிதாசன் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித்தொகை வாங்கும் மாணவர்கள் இந்த அதிகார வர்க்கக் கொடுமைகளை அனுபவித்துதான் வருகிறார்கள். மாணவர் பாரதிதாசன் தவெகவின் மாணவர் விரோத கொள்கையாலும் அமைச்சர் வன்னியரசின் ஆணவத்தாலும் (Ego) பாதிக்கப்பட்டதாக திமுகவினர் சொல்கிறார்கள். இது கிடைத்த விவகாரத்தைத் தனக்கான அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் மலிவான யுத்தி மட்டுமே.

பிறப்புச் சான்றிதழ் வழங்குவதிலிருந்து உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்குவது வரை இந்த அதிகார வர்க்கத்தின் மக்கள் விரோத, சிவப்புநாடாத்தனத்தை மக்கள் ஒவ்வொரு நாளும் அனுபவித்து வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்னர் கடுமையான மின்வெட்டு ஏற்படுவதைக் கண்டித்து மின்சார பகிர்மானத் துறை அலுவலகத்தில் மக்கள் முறையிட்டபோது, தனது நாற்காலியில் இருந்து கூட எழுந்திரிக்காமல் தெனாவெட்டாகப் பதில் சொன்ன கீழ்நிலை அதிகாரியைத் தமிழகமே வீடியோவில் கண்டது. கீழ்நிலை அதிகாரிகளுக்கே இந்த ஆணவம் என்றால், தலைமைச் செயலகத்தில் வேலை செய்யும் அதிகாரிகள் பற்றிச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இவ்வாறு கூறுவதால், விசிக அமைச்சர் வன்னியரசு, தவெக அரசாங்கம் இவர்களெல்லாம் இந்த விவகாரத்தில் தவறே செய்யவில்லை என்று பொருளல்ல. தவெக அரசும் அதன் இணைய கூலிப்படைகளும் பாரதிதாசன் அரசு பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாகச் சொல்லி அவரை ’Character Assassinate’ செய்யும் கேவலமான வேலையில் இறங்கியிருக்கிறார்கள். இதனை நடக்கவிட்டு வேடிக்கை பார்க்கிறது, விசிக கட்சி. உண்மையில் உதவித்தொகை விடுவிக்கப்படுவதில் என்ன சிக்கல் இருக்கிறது என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல் மறைக்கிறார், வன்னியரசு. அந்த அரசு இயந்திரத்தில் தானும் ஒருவரான பின்னே, அதன் அசிங்கங்களை மூடிமறைக்கும் உன்னதமான கடமை தனக்கும் இருப்பதாக அவர் நினைக்கிறார். இவையெல்லாம் மறுக்கவியலாத உண்மைகள்.

ஆனால், தவெக ஆட்சியில் இருப்பதால், விசிக அமைச்சர் வன்னியரசு பொறுப்பில் இருப்பதால்தான் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்படுகிறது; திமுகவோ அதிமுகவோ இருந்திருந்தால் இவை எதுவும் நடந்திருக்காது என்று பேசித் திரிவது உண்மையல்ல.

  • கலைச்செல்வன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன