நூல் அறிமுகம்: STAYING ALIVE Dispatches from the Margins

செப்டம்பர் 17, 2026
இந்தியாவின் கிராமப்புற மருத்துவக் கட்டமைப்பின் அவலத்தையும் அதனால் விளிம்புநிலை மக்கள் படும் துயரத்தையும் எடுத்துரைக்கும் நூல்

இந்தியாவின் மிகப்பழமையான மற்றும் பெரிய மாநகராட்சிகளில் ஒன்று சென்னை மாநகராட்சி. இதற்கு வருடத்திற்கு சாராசரியாக 9,000-10,000 கோடி வரை பட்ஜெட் போடப்படுகிறது. கூடவே பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழக பொது சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடும் கூடுதலாகவே பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது. மேலும் இந்தியாவிலேயே அதிநவீன மருத்துவ வசதிகளிலும் மருத்துவச் சேவை வழங்குவதிலும்  சென்னைதான் முதன்மையில் உள்ளது. இவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும், சென்னையில் அரசு மருத்துவமனைகளில் ரேபிஸ் தடுப்பூசித் தட்டுப்பாடு என்ற செய்தியை அடிக்கடிப் பத்திரிக்கைகளில் பார்த்திருப்போம்.

‘வளர்ச்சியடைந்த நகரமான’ சென்னையிலேயே ரேபிஸ் நோய்தொற்றையும், அதனால் ஏற்படும் உயிரழப்பையும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லையென்றால் இந்தியாவின் கிராமங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கக்கூடிய விளிம்பு நிலை மக்களின் கதி என்ன?

இதைப்பற்றிய விவரிக்கக்கூடியது தான், மருத்துவர் ரமணி அட்குரி எழுதியுள்ள  “STAYING ALIVE – Dispatches from the Margins” என்ற புத்தகம். இது, கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்கள் பொதுச்சுகாதாரம், மருத்துவம், ஊட்டச்சத்து, உணவு பாதுகாப்பு ஆகியவற்றைப் பெறுவதில் உள்ள இடர்ப்பாடுகள் மற்றும் இழப்புகள் குறித்தும், அரசு நிதி ஒதுக்காதது குறித்தும் விரிவாகப் பேசுகிறது.

புத்தகத்தில், “சோமரு, மத்திய பிரதேசம் மாநிலத்தின் சுர்குஜா மாவட்டத்தின் பைன்ஸ்வர் பகுதியில் வசிக்கின்ற கோண்டு பழங்குடி இனத்தைச் சார்ந்தத் தொழிலாளி. அவரது வலது காலில் நாய் கடித்து ஐந்து மாதங்களாகியிருந்த போதும், காயம் ஆறிவிட்டதால் அவர் அதைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. திடீரென ஒருநாள் மிகக் கடுமையானக் காய்ச்சலை அடுத்து அவரது உடல்நிலை மிக மோசமாக மாறத் தொடங்கியது. தாகம் எடுத்தாலும் அவரால் தண்ணீரை குடிக்க முடியவில்லை. எங்களது பரிசோதனையில் அவருக்கு ரேபிஸ் தொற்று இருப்பதைக்  கண்டறிந்தோம்.

“பயம் மற்றும் கடுமையான தண்ணீர் தாகத்தின் காரணமாக அடுத்த நாளே சோமரு  இறந்து விட்டார். அவரது தந்தையும் மாமாவும் சோமருவை கட்டுப்படுத்த முயற்சித்த போது தங்களையும் சோமரு கடித்ததாக கூறினர். இவ்விருவருக்கும் உறுதியாக ரேபிஸ் தொட்டு பரவி இருக்கும் என்பதால், பாதிரியார் அலெக்ஸூம் நானும்,  உடனே ரேபிஸ் தடுப்பூசி போடுவதற்காக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றோம். ஆனால் அங்கு தடுப்பூசி கையிறுப்பில் இல்லை. பிறகு கிராமத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மண்டல மருத்துவமனைக்கு சென்றோம். அங்கும் தடுப்பூசி கையிறுப்பில் இல்லை என்று சொன்னதால் அம்பிகாபூரில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்குச் சென்றோம். ஆனால் அங்கிருந்து 900 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தூர் அரசு மருத்துவமனையில் தான் ரேப்பிஸ் தடுப்பு ஊசி போட முடியும் என்றனர். உடனே வேறு வழியில்லாமல் அதிக விலைக்கு ரேபிஸ் தடுப்பூசிகளை வாங்கி இருவரையும் காப்பாற்றினோம்.” என்கிறார்.

“சட்டீஸ்கர் மாநிலத்தின் மஜ்ஹிபாரா பகுதியில் வசிக்கக்கூடிய பிர்ஹோர்ஸ் என்ற பழங்குடி மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள். கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக வரையறுக்கப்பட்டவர்கள். இப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கான மதிய உணவு மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கானச் சலுகைகளைப் பெற வேண்டுமென்றால் அரசின் போஷான் டிராக்கர் ஆப் என்ற செயலியில் குழந்தைகளின் விவரங்களையும் கர்ப்பிணிகளின் விபரங்களையும் கட்டாயம் பதிவுச் செய்ய வேண்டும்.  ஆனால் அப்பகுதியில் உள்ள இணையச் சேவைக் குறைபாடு, பெண்களிடம் கைபேசி இல்லாமல் இருப்பது, குழந்தைகளுக்கு ஆதார் அட்டை இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களினால் அரசிடம் இருந்து வரக்கூடிய சலுகைகள் எதனையும் முழுமையாக அப்பகுதி மக்களுக்குக் கிடைக்கவில்லை. இக்குறைபாடுகளினால் ஏறத்தாழ பெரும்பான்மையான குழந்தைகளுக்கு மதிய உணவு பெற முடியாமலும், பல கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்தான உணவும் அரசின் நிதி உதவியும் கிடைக்காமலேப் போவதாக” டிஜிட்டல்மயமாக்கலின் பாதிப்புக்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் மருத்துவர் ரமணி அட்குரி.

வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவம் பயின்ற ரமணி அட்குரி, மத்திய பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட் மாநிலங்களின் கிராமங்களில் ஆரம்ப சுகாதார மையங்களில் இருப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக மருத்துவராகப் பணியாற்றியிருக்கிறார். பல தன்னார்வ அமைப்புகளுடனும் யூனிசெப் எனும் நிறுவனத்துடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். தனது பணிகாலத்தில் பெற்ற அனுபவங்களையே இந்நூலில் தொகுத்துள்ளார்.

இப்புத்தகத்தின் பன்னிரெண்டுத் தலைப்புகளில், இந்தியாவின் கிராமப்புற சுகாதாரக் கட்டமைப்பின் போதாமை, மத்திய இந்தியாவின் பழங்குடி மக்கள் தொற்றுநோய்களினால் படும் துன்பங்கள், காசநோய், ரேபிஸ் நோய்த்தொற்று, விஷப்பாம்புக் கடி, கர்ப்பிணிப் பெண்களுக்கான பிரசவம் ஆகியவற்றுக்கானப் போதிய மருத்துவ வசதியின்மையால் கிராமப்புற மக்கள் படும் துன்பங்கள், டிஜிட்டல்மயமாக்கலின் காரணமாக மதிய உணவை இழக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து சலுகைகளைப் பெறமுடியாமல் போகும் பெண்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பை இழக்கும் மக்கள் ஆகியோரின் வாழ்க்கைத் துன்பங்களை அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையான நடையில் தொகுத்திருக்கிறார்.

உலகின் மிகவும் ஏற்றத்தாழ்வான நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பொருளாதாரம், பாலினம் மற்றும் கிராமம்-நகர ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் மக்களின் அன்றாட செயல்பாடுகளிலும் அவர்களுக்கு அரசிடமிருந்து கிடைக்கும் பலன்களிலும்  பாரியத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்தவகையில் இந்தப்புத்தகம் பொது சுகாதாரம் மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்தான உணவைப் பெறுவதில் கிராமப்புற மற்றும் பழங்குடி மக்கள் படும் துன்பங்களை விளக்கியுள்ளது.  

தேசிய சுகாதாரக் கொள்கை- 2017ஆம் ஆண்டின் பரிந்துரைப்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில்[GDP]  2.5 சதவிகிதத்தை பொது சுகாதாரத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று முடிசெய்யப்பட்டது. ஆனால் அது இன்றுவரை எட்டப்படவே இல்லை. தற்போது 1.43 சதவிகித GDP மட்டுமே ஒதுக்கப்படுகிறது. அரசாங்கத்தின் மொத்தச் செலவினத்தில் பொது சுகாதாரத்திற்கானப் பங்கும் 6.12%-லிருந்து[2021-22] 4.89% ஆகக்[2022-23] குறைந்துள்ளது. இதனால் தனியார் மருத்துவச் சேவையானது மிகப்பெரியளவில் வளர்ந்துள்ளது. இதனால் கிராமப்புற மக்களே பெருமளவுப் பாதிப்படைந்துள்ளனர். இந்த உண்மையை நாம் உள்வாங்கிக் கொள்வதற்கு இந்தப்புத்தகம் மிகவும் உதவியாக இருக்கும்.

கிராமப்புற மருத்துவக் கட்டமைப்பின் போதாமையை இந்நூல் அம்பலப்படுத்தியிருந்தாலும், இதற்கான அடிப்படைக் காரணங்களைக் குறித்த ஆராய்ச்சிக்குள் இந்நூல் ஆசிரியர் செல்லவில்லை. குறிப்பாக ஏகாதிபத்திய நலனிலிருந்து ஒட்டுமொத்த மருத்துவக் கட்டமைப்பும் அந்நிய முதலீடுகளுக்கும் தனியாருக்கும் திறந்து விட்ட நடவடிக்கைகளோடு இந்நூலில் சொல்லப்பட்டுள்ள விவரங்களை இணைத்துப் பார்த்தால் பொதுச்சுகாதாரத்தில் தனியார்மயத்தின் விளைவுகளை முழுமையாகப்புரிந்து கொள்ளலாம்.

  • மாணிக்கம் 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன