நீட் போராட்டமும் மோடி அரசின்
செயற்கை நுண்ணறிவுக் கண்காணிப்பும்

நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தில்லி போலீசார் முக அங்கீகாரத் தொழில்நுட்பம் உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு முறைகள் மூலம் கண்காணித்தது, இந்தியாவில் வேகமாக விரிவடைந்து வரும் டிஜிட்டல் கண்காணிப்பின் முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. பாதுகாப்பு என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட முக அங்கீகாரத் தொழில்நுட்பம் இன்று அரசியல் எதிர்ப்புகளைக் கண்காணிக்கும் கருவியாக மாற்றப்படுகிறது.

தில்லியில் மாணவர்கள் நடத்திய நீட் எதிர்ப்பு போராட்டம், முன்னாள் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. போலீசின் கண்காணிப்பு கோபுரங்கள், மெட்டா கண்ணாடி, இக்ஷணா எனும் கண்காணிப்பு வாகனம், டிரோன்கள், புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பதற்கு என தனி ஆட்கள் போன்றவற்றின் மூலம் போராடிய மாணவர்கள் தில்லி போலீசாரால் கண்காணிக்கப்பட்டது அனைவரும் அறிந்த செய்தியாகும்.

இதுமட்டுமன்றி, செயற்கை நுண்ணறிவோடு கூடிய முக அங்கீகாரத் தொழில்நுட்பத்தின் (facial recognition systems) கீழ் இயங்கும் சி.சி.டிவி கேமராக்கள் அங்கிருந்த மாணவர்களின் முகங்களை 360 டிகிரியில் நேரலையாக படம் பிடித்துக் கொண்டிருந்தன. போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களில் பலர், பாஜக ஆதரவாளர்களான தங்களது பெற்றோருக்குத் தெரியாமல் அங்கு வந்திருந்ததாகக் கூறினர். போலீசின் கேமராக்கள் தங்களது அடையாளத்தை பெற்றோரிடம் வெளிப்படுத்திவிடும் என்ற அச்சத்தையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.

ஆனால் தில்லி போலீசின் நடவடிக்கை, மாணவர்களின் அச்சத்தை வேறு திசைக்குக் கொண்டு சென்றது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 2,873 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என தில்லி போலீசு கூறியிருக்கிறது. போராட்டம் முடிவடைந்த இரண்டு நாட்களுக்குள், ஜந்தர் மந்தரில் பயன்படுத்தப்பட்ட முக அங்கீகாரக் கண்காணிப்பு தொழில்நுட்பத்தின் மூலம் இந்தத் தகவல்களை அடையாளம் கண்டதாக தில்லி போலீசு தெரிவித்துள்ளது.

முக அங்கீகார தொழில்நுட்பத்தை எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தினார்கள் என்பதை தில்லி போலீசார் விளக்கியுள்ளனர். ஆனால் அதைவிட ஆச்சரியமானது, கர்நாடக காங்கிரஸ் அரசு, அம்மாநில போலீசின் கண்காணிப்பை வெளிப்படையாக ஆதரித்துள்ளது.

பெங்களூருவில் நீட் போராட்டத்திற்கு ஆதரவாக நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தை அம்மாநில போலீசார் வீடியோ எடுத்தனர். இதையொட்டிய கேள்விக்கு அம்மாநில உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே பதிலளிக்கும் போது, போராட்டத்தின் புகைப்படங்களும் காணொளிகளும் பதிவேட்டிற்காக மட்டுமே எடுக்கப்பட்டது என்றும்; குறிப்பிட்ட இடத்திலும், நேரத்திலும் யார் அங்கு இருந்தார்கள் என்பது குறித்துப் பிற்காலத்தில் ஏதேனும் கேள்விகள் எழுந்தால், போலீசு அதற்குப் பதிலளிக்க முடியும் என்று போலீசின் கண்காணிப்புக்கு ஆதரவாகப் பேசினார்.

காணாமல் போன குழந்தைகளை அடையாளம் கண்டு மீட்பது என்ற பெயரில் இந்தியாவில் முக அங்கீகார தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், 2013 நிர்பயா சம்பவத்திற்குப் பிறகு அது வேகமாக விரிவுபடுத்தப்பட்டது. பெண்களின் பாதுகாப்பு என்ற பெயரில் நிர்பயா நிதி என்ற ஒரு திட்டத்தையும் மோடி அரசு தொடங்கி வைத்து, கண்காணிப்பு தொழில்நுட்பத்திற்கே அதிகமாகச் செலவிட்டிருக்கிறது.

மோடி அரசு கடந்த 13 ஆண்டுகளில் முக அங்கீகார தொழில்நுட்பத்தோடு இயங்கும் சிசிடிவி கேமராக்களை நாட்டின் பல்வேறு பொது இடங்களில் வேகமாக நிறுவி வருகிறது. மோடி அரசை எதிர்த்து யாராவது போராட்டம் நடத்தினால் கூட, அவர்களை குற்றவாளிகளாகச் சித்தரிப்பதற்கான ஒரு யுக்தியாக இத்தொழில்நுட்பம் தற்போது ஜந்தர் மந்தரில் வெளிப்படையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

நம்மைக் கண்காணித்து ஒடுக்குவதை முக அடையாள சிசிடிவி கேமராக்கள் மிகவும் எளிதாக்கி விடும் என்ற அபாயத்தைப் பலர் உணர்வதில்லை. தாங்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதில்லை என்பதால் அஞ்சத் தேவையில்லை என்று பாமரத்தனமாகக் கருதுகின்றனர்.

அரசுக்கு எதிராகவோ, தொழிற்சாலை நிர்வாகத்திற்கு எதிராகவோ யார் போராடினாலும் கூட, அவரின் முக அடையாளத்தை வைத்துக் கொண்டு குறிப்பிட்ட ஒரு நபரை எப்போது வேண்டுமானாலும் துன்புறுத்துவதற்கும் அச்சுறுத்துவதற்குமான சாத்தியத்தை முக அடையாள சிசிடிவி கேமராக்கள் கொடுக்கின்றன.

பொது இடங்களில் நிறுவப்பட்டிருக்கும் முக அங்கீகார கேமராக்களால் இருட்டில் கூட முகத்தை மிகத்துல்லியமாகப் பதிவு செய்ய முடியும். சிசிடிவி கேமராக்களில் உள்ள மென்பொருள் மூலம் ஒவ்வொருவரின் முகத்தில் உள்ள புருவங்களுக்கு இடைப்பட்ட தூரம், மூக்கின் நீளம், மனித தாடையின் தனித்துவம் வாய்ந்த அமைப்பு போன்றவை அளக்கப்பட்டு, எண்களின் வரிசையாக மாற்றப்பட்டுப் பதிவு செய்யப்படுகிறது; இதன் அடிப்படையில், நேரலையில் படம் பிடிக்கப்பட்ட ஒருவரின் முகத்தை போலீசார் முன்கூட்டியே பதிவு செய்து வைத்த தரவுகளிலுள்ள இலட்சக்கணக்கான முகங்களோடு ஒப்பீடு செய்யப்படுகிறது. ஒரு நபர் குற்றவாளியாக இல்லையென்றாலும் கூட, அவரது முகம் போலீசின் முக அங்கீகார தொழில்நுட்ப ஒப்பீட்டு முறையின் கீழ் சரிபார்க்கப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள போலீஸ் நிலையங்களில் உள்ள குற்றப் பதிவுகள், சிறையின் தரவுத் தளங்கள், பாஸ்போர்ட் விண்ணப்பங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் பராமரிக்கப்படும் தரவுத் தளங்கள் போன்றவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட முகங்களின் படங்களோடு தில்லி ஜந்தர் மந்தர் போன்ற இடங்களில் பயன்படுத்தப்பட்ட தானியங்கி முக தொழில்நுட்ப பதிவுகள் ஒப்பிடப்படுகின்றன.

காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முக அங்கீகார தொழில்நுட்பம், கடந்த எட்டு ஆண்டுகளில் பொதுமக்களைக் கண்காணிக்கும் ஒரு பாசிச கருவியாக மோடியின் ஆட்சியில் உருவெடுத்துள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களான விமான நிலையங்கள், இரயில்வே நிலையங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களில் எல்லாம் முக அங்கீகார தொழில்நுட்பம் வேகமாகப் புகுத்தப்பட்டு வருகின்றன.

தில்லி நகரத்தின் இரயில் நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள், நகரத்தின் பிற பகுதிகள் என அனைத்திலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தோடு இயங்கும் சுமார் 2,100 கேமராக்கள் உள்ளிட்ட சுமார் 25,000 சி.சி.டிவி கேமராக்களை ஒரே நெட்வொர்க்கின் கீழ் தில்லி போலீசு இணைத்துள்ளது. இக் கேமராக்கள் மூலம் தில்லி நகர மக்களின் முக அடையாளம் குறித்த தரவுகள் பதிவு செய்யப்படுகின்றன.

தில்லி மட்டுமல்ல; சில மாநில அரசுகளும் முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களை கண்காணித்து வருகின்றன. திரிநேத்ரா (Trinetra platform) எனும் செயலி மூலம் உத்தரபிரதேசத்தின் 70 மாவட்டங்களில் உள்ள 1,470 போலீஸ் நிலையங்களில் குற்றப் பதிவுகளின் தரவுகள் முக அங்கீகார அடையாளம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு மும்பை மற்றும் புனேவில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, அங்கிருந்தவர்களின் முக அடையாளத்தை அவர்களின் நடத்தையோடு இணைக்கும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சி.சி.டி.வி கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன.

இரண்டு நாட்களுக்கு முன்பு செகந்திராபாத்தில் நடைபெற்ற உஜ்ஜைனி மஹாகாளி போனாலு என்ற மத நிகழ்விலும் முக அங்கீகார தொழில்நுட்பத்தை ஹைதராபாத் போலீசு பயன்படுத்தியிருக்கிறது.

விமானத்தில் பயணம் செய்யும் ஒரு பயணியின் முக அடையாளம் உள்ளிட்ட அவரின் பயோமெட்ரிக் தரவுகளை விமானநிலையத்தில் பயன்படுத்தப்படும் டிஜியத்ரா (DigiYatra) எனும் கண்காணிப்பு முறையின் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த பயோமெட்ரிக் கட்டமைப்பின் கீழ் இணைக்க முடியும். இதற்காக விமானப் போக்குவரத்து துறை, விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் ஆதார் அடையாளம், போர்டிங் பாஸ் மற்றும் முக அடையாளம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து காகிதமில்லா நுழைவை விமானப் போக்குவரத்தில் கொண்டு வந்திருக்கிறது.

நாடு முழுவதும் முக அடையாளத்தைக் கண்காணிக்கும் மென்பொருள் வசதி கொண்ட கேமராக்கள் பயன்படுத்தப்படுவது வேகமாக விரிவுபடுத்தப்பட்டு வருகின்றது. கிழக்கு இரயில்வேயின் கீழ் இயங்கும் இரயில் நிலையங்களுக்கு இதே போன்ற முகத்தை அடையாளம் காணும் மென்பொருளையும், கேமராக்களையும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஹெர்டா செக்யூரிட்டி எனும் நிறுவனமும் வழங்கி வருகிறது.

ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் (இந்தியா) மற்றும் இன்வஸ்டிகேட் யூரோப் எனும் நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வில், ஐரோப்பாவில் தடை செய்யப்பட்ட ஹெர்டா செக்யூரிட்டி முக அங்கீகார தொழில்நுட்பம் கொண்ட சுமார் 4,000 க்கும் மேற்பட்ட சி.சி.டிவி கேமராக்கள் இந்தியாவில் நிறுவப்பட்டிருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இது போன்ற முக அங்கீகார கேமராக்கள் நிறுவப்பட்டால் அது சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் இந்நிறுவனம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக தனது தொழிலை விரிவுபடுத்தி வருகிறது. மும்பையின் பாதுகாப்பான நகரம் எனும் திட்டத்திற்காக ஹெர்டா செக்யூரிட்டி நிறுவனம், ஐந்து அதிநவீன முக அங்கீகார சிசிடிவி கேமராக்களை 2015 ஆம் ஆண்டில் வழங்கியது. இதன் பிறகு வடகிழக்கு மாநிலங்களின் இரயில்வே நிலையங்களில் உள்ள வீடியோ கண்காணிப்பு முறையில் இந்நிறுவன மென்பொருளே பயன்படுத்தப்படுகிறது. இந்திய கிழக்கு இரயில்வேயின் கீழ் வரும் இரயில் நிலையங்களில் சுமார் 143 இரயில் நிலையங்களில் 540 முக அங்கீகார அமைப்புகள் செயல்பாட்டில் இருக்கின்றன.

தடை செய்யப்பட்ட ஹெர்டா செக்யூரிட்டி நிறுவனத்தின் கண்காணிப்பு தொழில்நுட்பம் கிழக்கு இரயில்வேயையும் தாண்டி, ஜெய்ப்பூர், செகந்திராபாத் போன்ற இரயில் நிலையங்களிலும் நிறுவப்பட்டிருக்கின்றன. இந்நிறுவனத்தின் மென்பொருள் தில்லியில் உள்ள திகார், மண்டோலி மற்றும் ரோஹினி ஆகிய மூன்று சிறை வளாகங்களிலும் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பங்களை இயக்கி வருகிறது. இரயில்வே நிலையங்களில் அடையாளம் காணப்படும் முகங்கள் போலீசின் தரவுகளோடு பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

ஐரோப்பாவில் தடைசெய்யப்பட்ட இந்நிறுவனத்தின் முக அங்கீகார தொழில்நுட்ப கேமராக்கள், அயோத்தி இராமன் கோவில், அகமதாபாத் நகர் போன்ற இடங்களில் சுமார் 140 முக அங்கீகார கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

ஹெர்டா செக்யூரிட்டி போன்ற நிறுவனத்தின் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஒரு மிகப்பெரிய கூட்டத்தை ஸ்கேன் செய்து, போலீசின் தரவுத்தளங்களோடு ஒப்பிட்டு ஒரு நொடிப்பொழுதில் ஒருவரின் முகத்தை அடையாளம் காண முடியும்.

ஐரோப்பிய ஒன்றியம் தனது குடிமக்கள் மீதான கண்காணிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக ஹெர்டா செக்யூரிட்டி போன்ற நிறுவனங்களைத் தடை செய்கிறது. ஐரோப்பிய செயற்கை நுண்ணறிவுச் சட்டம் பொது இடங்களில் நேரலையாக முக அடையாளம் மற்றும் அனைத்து பயோமெட்ரிக் கண்காணிப்பை கடந்த 2025 ஆம் ஆண்டு முதல் தடை செய்துள்ளது.

ஐரோப்பாவில் முக அங்கீகார தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கு முன் நீதிபதியின் அனுமதியைப் பெற வேண்டும். ஆட்கடத்தல், பாலியல் கொடுமை, கடத்தல், காணாமல் போனவர்களைத் தேடுதல், பயங்கரவாத அச்சுறுத்தல் போன்ற குற்றங்களுக்காக சில குறிப்பிட்ட நபர்களை அடையாளம் காண வேண்டும் என போலீசு நினைத்தால், அவர்களின் முக அடையாளங்கள் நீதிபதியால் முன் அனுமதி பெற்ற பிறகே ஐரோப்பிய ஒன்றியத் தரவு தளத்தில் பதிவு செய்ய முடியும்.

இது போன்ற கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், தடைசெய்யப்பட்ட இந்நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக சுமார் 30 கோடி ரூபாயை ஐரோப்பிய நாடுகள் ஒதுக்கியிருக்கிறது.

இதன் விளைவாக ஹெர்டா செக்யூரிட்டி, ஐரோப்பாவைப் போன்று செயற்கை நுண்ணறிவுச் சட்டத்தின் தடை அமலில் இல்லாத இந்தியா போன்ற நாடுகளில் தனது தொழிலை வேகமாக நிறுவி வருகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் தாய்லாந்து, ஜமைக்கா, இந்தோனேசியா, கொலம்பியா, பெலாரஸ், நிகரகுவா, நைஜீரியா போன்ற நாடுகளின் பொது இடங்களில் தனது தொழில்நுட்பத்தை கடை விரித்திருக்கிறது.

இந்தியாவில் இந்நிறுவனத்தின் தொழில்நுட்பம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நிர்பயா நிதி என்ற திட்டத்திற்காக கடந்த 12 ஆண்டுகளில் பெண்கள் பாதுகாப்பு என்ற பெயரில் சுமார் ரூ. 5,800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் 50% தொகை கண்காணிப்பு தொழில்நுட்பத்திற்கும், போலீசின் பணிகளுக்குமே ஒதுக்கப்பட்டுள்ளன.

நிர்பயா நிதி எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்த ஆண்டிலேயே பெண்களுக்கு எதிரான 3,40,000 குற்றப் பதிவுகளும், 2023 ஆம் ஆண்டில் 4,50,000 குற்றப்பதிவுகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. முக அங்கீகார கேமராக்களைப் பயன்படுத்துவது பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்கிறது என்பதற்கு அரசு இதுவரை எந்த சான்றையும் அளிக்கவில்லை.

ஒரு குடிமகனின் தனியுரிமையை இந்த முக அங்கீகார தொழில்நுட்பம் பாதிக்கிறது என்றும், இதற்கு இந்தியாவில் சட்டம் இயற்றவில்லை என்றும் பாசிச மோடி அரசிடம் கெஞ்சிப் பலனில்லை.

முக அங்கீகாரத் தொழில்நுட்பம் என்பது வெறும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் கருவி மட்டுமல்ல. மக்களின் அன்றாட வாழ்க்கை, பயணம், போராட்டம், அரசியல் செயல்பாடுகள் என அனைத்தையும் இடையறாது கண்காணித்து, அவர்களின் ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்துவதற்கான ஒரு அதிகாரக் கட்டமைப்பாக அது வேகமாக மாற்றப்பட்டு வருகிறது. காணாமல் போன குழந்தைகளைக் கண்டறிவது, பெண்களின் பாதுகாப்பு, பயங்கரவாதத் தடுப்பு போன்ற மனிதாபிமான காரணங்களை முன்வைத்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், இன்று அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை அடையாளம் கண்டு கண்காணிக்கும் கருவியாக வளர்ந்து நிற்கிறது.

தில்லி நீட் போராட்டம் ஒரு முக்கியமான உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் இனி குற்ற விசாரணைக்கான கருவிகளாக மட்டுமே இல்லாமல், அரசியல் எதிர்ப்புகளைக் கண்காணிக்கும் அரசின் அதிகாரக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக மாறி வருகின்றன.

குடிமக்களின் தனியுரிமை, கருத்துச் சுதந்திரம், போராடும் உரிமை ஆகியவற்றின் மீது நடத்தப்படும் இந்தத் தொழில்நுட்பத் தாக்குதலை வெறும் தொழில்நுட்ப முன்னேற்றம் என்று அலட்சியப்படுத்த முடியாது. இது ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலாகும். எனவே, முக அங்கீகாரத் தொழில்நுட்பம் என்ற பெயரில் மக்களை கண்காணிக்கும் அரசின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி, அவற்றை எதிர்த்து முறியடிப்பதற்காக ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட வேண்டியது காலத்தின் அவசியம்.

  • தாமிரபரணி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன