FCRA திருத்த மசோதா : வக்ஃப் சட்டத்தைத் தொடர்ந்து கிறிஸ்தவ அமைப்புகளைக் குறிவைக்கும் மோடி அரசு
கேரளாவின் விழிஞ்சியம் பகுதியில் அதானியின் துறைமுகம் கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2022-இல் அப்பகுதி மீனவர்கள் நடத்திய போராட்டத்திற்கு நிதி உதவி அளித்ததாக குற்றம் சாட்டி இரண்டு தன்னார்வ நிறுவனங்களின் (என்.ஜி.ஓ) பதிவை மோடி அரசாங்கம் ரத்து செய்தது. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், “போராட்டத்திற்கு உதவி செய்வதனாலேயே நாட்டின் வளர்ச்சிக்கு எதிராகச் செயல்படுவதாகக் கருத முடியாது” என்று கூறி அவ்விரு என்.ஜி.ஓக்களின் பதிவை புதுப்பிக்குமாறு கேரள உயர் நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வேண்டி நடந்த போராட்டத்தைத் தூண்டிவிட்டதாகக் கூறி, காலநிலை செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக்கின் என்.ஜி.ஓவின் பதிவை உள்துறை அமைச்சகம் ரத்து செய்தது.
இறையாண்மைக்கு ஆபத்து, வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள், அரசின் கொள்கையை விமர்சிக்கிறார்கள், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் போன்ற காரணங்களில் ஏதாவது ஒன்றைச் சொல்லி, மோடி அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் பொருளாதாரக் கொள்கைகளையும் அதன் விளைவுகளையும் விமர்சிக்கின்ற / அம்பலப்படுத்துகின்ற நூற்றுக்கணக்கான என்.ஜி.ஓக்களின் (ஆக்ஸ்பார்ம் இந்தியா, அம்னெஸ்டி இன்டர்நேஷனல், சப்ரங் இந்தியா, சென்டர் பார் பாலிசி ரிசர்ச் (CPR) போன்ற) பதிவையோ அல்லது மறுபதிவையோ மோடியின் உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. இந்த என்.ஜி.ஓக்கள் தொடர்ந்து செயல்படவும், வெளிநாட்டு நிதி உதவிகளைப் பெறவும் அந்நிய நன்கொடை முறைப்படுத்துதல் சட்டத்தின் (2010) கீழ் உள்துறை அமைச்சகத்தில் பதிவு செய்வது கட்டாயம் என்பதால், அதன் செயல்பாடுகளை முடக்குவதற்கு பதிவை ரத்து செய்வதை ஒரு உத்தியாகவே மோடி அரசாங்கம் கடைப்பிடித்து வருகிறது.
தற்போது ஒருபடி மேலே சென்று, கிறிஸ்தவ தன்னார்வ நிறுவனங்களின் சொத்துக்களை அபகரிப்பது மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினர் மீதான கட்டுப்பாட்டை அதிகரிப்பதற்காக புதிய சட்டத் திருத்தத்தை FCRA-2010 சட்டத்தில் சேர்த்துள்ளனர். அந்நிய நன்கொடை முறைப்படுத்துதல் திருத்த மசோதா-2026 என்று அழைக்கப்படும் இம்மசோதா மார்ச் 25 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏப்ரல் 1 அன்று விவாதித்து நிறைவேற்றப்படவிருந்தது. ஆனால் கேரள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு கிறிஸ்தவ அமைப்புகள், எதிர்க்கட்சிகள் மற்றும் கேரள பாஜகவின் சில தரப்புகளிடமிருந்தும் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து அதன் மீதான விவாதம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போதைய மழைக்காலக் கூட்டத்தொடரில் அம்மசோதாவை சட்டமாக்கிட பாஜக அனைத்து வழிகளிலும் முயன்றது. ஆனால், டிரம்ப் அரசாங்கத்தின் அழுத்தம், எதிர்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பு, கிறிஸ்தவ அமைப்புகளின் தொடர்ச்சியான கோரிக்கைகள் என பரவலான எதிர்ப்பின் காரணமாக இம்மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு தற்போது அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவில் செயல்படும் தன்னார்வ நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள், டிரஸ்ட்கள் மற்றும் சொசைட்டிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் நிதி உதவியைப் பெறவேண்டுமென்றால், அவை அந்நிய நன்கொடை முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யவேண்டும். இச்சட்டம் அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் வெளிநாடுகளிலிருந்து பெறும் நன்கொடையை வரைமுறைப்படுத்துவதற்காக 1974 இல் இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்டது. இதில் கூடுதல் கட்டுப்பாடுகளைச் சேர்த்து அந்நிய நன்கொடை முறைப்படுத்துதல் சட்டம் 2010 ஐ காங்கிரஸ் கொண்டுவந்தது. இச்சட்டம் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதை தடை செய்ததோடு, வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி பெறும் என்.ஜி.ஓக்கள் நிறுவனத்தைப் பதிவு செய்வது மற்றும் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை பதிவைப் புதுப்பிப்பது கட்டாயம் என்றது. கூடவே, விண்ணப்பிக்கும் நிறுவனத்தின் மீது மதமாற்றம் செய்ததாக வழக்குகள் இருந்தால், அந்த என்.ஜி.ஓவை பதிவு செய்ய முடியாது என்றும் சொல்லப்பட்டது.
தற்போதைய சட்டத் திருத்தத்தில், குறிப்பிட்ட காலத்திற்குள் மறுபதிவு செய்யாத அல்லது ஒன்றிய அரசினால் பதிவு ரத்து செய்யப்பட்ட என்.ஜி.ஓக்களின் சொத்துக்கள் அனைத்தும் அரசாங்கத்தால் உருவாக்கப்படும் அமைப்பின் கீழ் கொண்டுவரப்படும்; அவ்வாறு மாற்றப்படும் சொத்துகளை விற்பதற்கோ அல்லது அரசாங்கத் துறைகளிடம் ஒப்படைப்பதற்கோ அந்த அமைப்பிற்கு அதிகாரம் உண்டு எனச் சொல்லப்பட்டுள்ளது.
இச்சட்டம் அமலுக்கு வந்தால், சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஒரு என்.ஜி.ஓவின் பதிவை ஒன்றிய அரசு ரத்து செய்தாலோ அல்லது அந்த என்.ஜி.ஓவே பதிவு செய்ய வேண்டாம் என முடிவு செய்தாலோ, அதன் பணக்கையிறுப்பு மற்றும் சொத்துகள் அனைத்தும் அரசாங்கம் எடுத்துக்கொள்ளலாம்.
உதாரணமாக, 2021 இல் மிசனரிஸ் ஆப் சேரிட்டி என்ற என்.ஜி.ஓவின் மறுபதிவை, எந்தவொரு விளக்கமும் சொல்லாமல், உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது. 1950 இல் தெரேசாவால் ஆரம்பிக்கப்பட்ட இந்த என்.ஜி.ஓ, தொழுநோய், காசநோய், எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கான மருத்துவ உதவிகளையும், வயதான ஏழைகளுக்கான இல்லங்களையும் நடத்தி வருகிறது. பெருமளவு வெளிநாட்டு நன்கொடையையே நம்பியுள்ள இவ்வமைப்பு மறுபதிவு செய்யாவிட்டால் வெளிநாட்டு நன்கொடையைப் பெறமுடியாது; தனது சேவைகளையும் படிப்படியாக நிறுத்த வேண்டிவரும். மேலும், இதற்கு பல பில்லியன் டாலர் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இந்தியாவில் உள்ளன. இவை அனைத்தும் அரசாங்கம் எடுத்துக்கொள்ளலாம்.
மிஷனரிஸ் ஆப் சேரிட்டி அமைப்பைப் போலவே, இந்தியாவில் பல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ அமைப்புகள் தங்களது என்.ஜி.ஓக்களின் மூலமாக வெளிநாட்டு நன்கொடையின் உதவியுடன் மருத்துவம், கல்வி, ஏழைகளுக்கான வாழ்வாதார உதவிகள் போன்ற வேலைகளைச் செய்துவருகின்றன. இதைச் சட்டமும் அனுமதித்து வந்துள்ளது. ஆனால் தற்போது சொத்துக்களை அபகரிப்பதற்கான சட்டத் திருத்தம் என்பது கிறிஸ்தவ அமைப்புகளை ஒடுக்குவதற்கான நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது.
கார்ப்பரேட்களின் நலன்களுக்காக செயல்படும் மோடி அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிக்கின்ற அல்லது அரசின் திட்டங்களை அம்பலப்படுத்துகின்ற பல சமூக செயல்பாட்டாளர்களையும் அவர்கள் சார்ந்துள்ள தன்னார்வ நிறுவனங்களையும் FCRA சட்டம், ED மற்றும் CBI மூலமாக ஒடுக்கி வருவது ஒருபுறம் என்றால், தனது காவி பாசிச அரசியலை முன்வைத்து சிறுபான்மையினரை ஒடுக்குவதற்காக கடுமையான சட்டங்களைக் கொண்டுவருவது மறுபுறம் என்ற வகையில், சட்டத்தின் துணையுடனே தனது காவி-கார்ப்பரேட் பாசிச அரசியலை முன்னெடுத்துச் செல்கிறது காவி கும்பல். குறிப்பாக இஸ்லாமிய அமைப்புகளையும் அதன் சொத்துக்களையும் கைப்பற்றுவதற்கு எப்படி வக்ஃப் சட்டம் கொண்டுவரப்பட்டதோ, அதேபோலவே கிறிஸ்தவ அமைப்புகளைக் கட்டுப்படுத்துவதற்காக FCRA சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளனர். ஆனால் இச்சட்டத்தினை காவி பாசிச நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக மக்களிடம் அம்பலப்படுத்த எதிர்க்கட்சிகள் மறுக்கின்றன.
சட்டத் திருத்த மசோதா அமல்படுத்தப்படாது என்று சட்டசபைத் தேர்தலின் போது கேரள பாஜக தலைவர்கள் உத்தரவாதம் கொடுத்துவிட்டு தற்போது மாற்றிப் பேசுவதாக கேரள கத்தோலிக்க ஆயர்கள் புலம்புகின்றனர். எதிர்க்கட்சிகளோ சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டதையே பெரும் சாதனையாகப் பேசுகின்றன.
நாடாளுமன்ற கூட்டுக் குழு என்பதை, எதிர்ப்பைச் சமாளிப்பதற்கான ஒரு வழிமுறையாகவே பாஜக பார்க்கிறது. எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் சிறு சிறு திருத்தங்களை மட்டும் சேர்த்துக் கொண்டு, மசோதாவின் பிரச்சனைக்குரிய உள்ளடக்கத்தை மாற்றாமல் அப்படியே நிறைவேற்றப்பட்ட உதாரணங்கள் பல உண்டு. நடப்பு கூட்டத் தொடரிலேயே எதிர்க்கட்சிகள் இல்லாமல் பன்னிரண்டு மசோதாக்களை பாஜக நிறைவேற்றி விட்டது. எனவே எதிர்ப்புகள் இருந்தாலும், வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இச்சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற வாய்ப்புகள் அதிகம்.
வக்ஃப் சட்டமோ அல்லது FCRA சட்டத் திருத்த மசோதாவோ சிறுபான்மையினரை ஒடுக்குவது, சிறுபான்மையினர் வெறுப்பு அரசியலை மையமாகக் கொண்டு இந்துத்துவ அரசியலை முன்னெடுப்பது என்ற காவி பாசிசத் திட்டத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ்-பாஜக செய்துவருகிறது. இதற்காக நாடாளுமன்றம், நீதித்துறை உள்ளிட்ட மொத்த அரசு கட்டமைப்பையும் பயன்படுத்திக் கொள்வதோடு மட்டுமில்லாமல், தங்களுடைய சங்கப் பரிவாரங்களையும் திரட்டி மக்களிடையே பிரச்சாரம் செய்து அதற்கான ஆதரவையும் திரட்டிக்கொள்கிறது.
ஆனால் நாடாளுமன்றத்திற்குள் கிளப்பப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகளையே வீரதீர செயல்களாகக் காட்டிக் கொள்ளும் எதிர்க்கட்சிகளோ, இம்மசோதாவிற்கு பின்னால் உள்ள பாஜகவின் காவி பாசிச அரசியலை மக்களிடம் கொண்டு சென்று அம்பலப்படுத்துவதில்லை. குறைந்தபட்சம், தங்களது அறிக்கைகள் மற்றும் தீர்மானங்களில் காவி பாசிசம், இந்துத்துவா என்ற சொற்களைப் பயன்படுத்தக் கூட தயங்குகின்றனர்.
எனவே, சட்டவழிமுறைகளுக்கப்பால் இம்மசோதாவிற்கு பின்னால் உள்ள பாஜகவின் காவி பாசிச அரசியலை மக்களிடம் பிரச்சாரம் செய்து, காவி-கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக பெரும்பான்மை மக்களை அணிதிரட்டுவதன் மூலமே இம்மசோதாவை முறியடிக்க முடியும்.
- மாணிக்கம்

