தில்லியில் நடைபெறும் இந்த மாபெரும் மாணவர் போராட்டம் ஏன் வித்தியாசமானது?
மோடி ஆட்சியை அதிரவைத்த ஏழு காரணங்கள்
தேர்வுத் தாள் கசிவுகளை எதிர்த்து சமூக வலைதளங்களில் வெடித்த மாணவர்களின் கோபம், இன்று இந்திய இளைஞர்களை வெறுமனே பயன்படுத்தித் தூக்கி எறியும் காகிதமாகக் கருதும் ஆட்சி அமைப்புக்கு எதிரான புதிய தலைமுறையின் எழுச்சியாக உருவெடுத்துள்ளது. இந்தப் போராட்டத்தின் மூலம், பிரதமர் நரேந்திர மோடியே, இதற்கெல்லாம் நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டிய நிர்பந்தத்தை இன்றைக்கு மாணவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். அதன் விளைவாக, மக்களின் கோரிக்கைகளை, இனி இந்த அரசு கண்மூடித்தனமாகக் கடந்து செல்லவோ, நிர்வாக நடைமுறைகளின் பின்னால் ஒளிந்துகொள்ளவோ முடியாது என்று சொல்லும் அளவிற்கு, தீவிர அரசியல் போராட்ட அரங்காக தில்லியின் தெருக்கள் மாறியுள்ளன.
இந்த நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம், இதற்கு முன் நடைபெற்ற மாணவர் அல்லது மக்கள் போராட்டங்களிலிருந்து அடிப்படையிலேயே மாறுபடுகிறது. ஒரு தேர்வு, ஊழலை மட்டும் எதிர்ப்பதில் நின்றுவிடாமல், மோடி ஆட்சியின் நிர்வாகத் தோல்வி, நிறுவனங்களின் சீரழிவு, அரசியல் பொறுப்பின்மை ஆகியவற்றுக்கு எதிரான ஒட்டுமொத்த குற்றப்பத்திரிக்கையாக இந்தப் போராட்டத்தை இளைஞர்கள் மாற்றியுள்ளனர். தன்னிச்சையாக அரசியல்மயமான ஜென்-ஜி (Gen Z) தலைமுறையே இந்த எழுச்சிக்கு தலைமை தாங்கியுள்ளது.
1. தர்மேந்திர பிரதானைத் தாண்டி – இப்போது குற்றவாளிக் கூண்டில் மோடி
தொடர்ச்சியான தேர்வுத் தாள் கசிவுகள், மாணவர் தற்கொலைகள், கல்வி நிர்வாகத்தின் முறைகேடுகள் ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதுதான் இந்த இயக்கத்தின் ஆரம்பக் கோரிக்கையாக இருந்தது. ஆனால், இன்று தெருக்களில் எதிரொலிக்கும் கோபமானது நேரடியாக பிரதமர் நரேந்திர மோடியையும், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக அவர் மேற்கொண்ட ஆட்சியையும் நோக்கித் திரும்பியிருக்கிறது.
இப்போது கல்வி அமைச்சர் பதவியில் நீடிக்கிறாரா, விலகுகிறாரா என்பது போராட்டக்காரர்களுக்கு முக்கியமான கேள்வியே அல்ல. நாட்டின் கல்வி அமைப்பை இந்த நிலைக்கு கொண்டு வந்த அரசியல் தலைமையே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பதே இளைஞர்களின் நிலைப்பாடு. அந்த அரசியல் தலைமையின் முகமாக இருப்பவர் மோடி என்பதால், போராட்டத்தின் மையமும் அவரையே நோக்கித் திரும்பியுள்ளது.
தொடர்ச்சியான தோல்விகளுக்கும் மக்கள் எதிர்ப்புக்கும் மத்தியிலும் தர்மேந்திர பிரதானை பாதுகாத்து நிற்கும் முடிவின் மூலம், ஒரு அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கேட்ட போராட்டத்தை, தனது தலைமையின் மீதான மக்களின் எதிர்ப்பாக மோடியே மாற்றியிருக்கிறார்.
2. சிஜேபி, சோனம் வாங்சுக்கைத் தாண்டிய இளைஞர் எழுச்சி
இந்திய தலைமை நீதிபதியின் “கரப்பான் பூச்சிகள்” குறித்த சர்ச்சைக்குரிய கருத்தைத் தொடர்ந்து, “காக்ரோச் ஜனதா பார்ட்டி (சிஜேபி)” என்ற நையாண்டி இளைஞர் பிரச்சாரம் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் இன்று ஜந்தர் மந்தரிலும், நாடாளுமன்ற முற்றுகையிலும் நடைபெறுவது அந்த அமைப்பையோ, அந்த மீமையோ தாண்டி வளர்ந்த மிகப் பெரிய இளைஞர் எழுச்சியாகும்.
இது சிஜேபியின் அமைப்பு வலிமையாலோ அல்லது சோனம் வாங்சுக் போன்ற தனிநபர் தலைவர்களின் செல்வாக்காலோ இயக்கப்படும் வழக்கமான அரசியல் அணிதிரட்டல் அல்ல. ஆட்சியாளர்கள் தனிப்பட்ட தலைவர்களை அழுத்தமிடவோ, சமரசப்படுத்தவோ முடியும். ஆனால் இந்தப் போராட்டக் கூட்டம் எந்த அமைப்பின் உத்தரவாலும் திரட்டப்படவில்லை. வாடகைப் பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட கூட்டமும் அல்ல. தங்களது சொந்த அரசியல் உணர்வின் அடிப்படையில் தன்னிச்சையாக ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களே இந்த இயக்கத்தின் உண்மையான சக்தி.
சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிப்பது தொடர்பாக குழப்பங்களும் வதந்திகளும் பரவியபோதும், மாணவர்கள் அவற்றைக் கடந்து போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்தனர். இதன் மூலம், இந்த இயக்கம் முழுமையாக இளைஞர்களின் கைகளுக்குள் சென்றுவிட்டது; எளிதில் சமரசப்படுத்தவோ, பேரம் பேசி முடித்துவிடவோ முடியாத ஒரு அரசியல் சக்தியாக அது வளர்ந்துள்ளது.
3. மோடி ஆட்சியின் வழக்கமான ‘அவதூறு அரசியலை’ முறியடித்த போராட்டம்
இதற்கு முன் எழுந்த பெரும்பாலான மக்கள் இயக்கங்களை, அடையாள அரசியலை ஆயுதமாக்கி அவதூறு பரப்புவதன் மூலம் மோடி அரசும் அதன் ஆதரவு ஊடகங்களும் தனிமைப்படுத்தின. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் “முஸ்லிம்களின் கலவரம்” என்று சித்தரிக்கப்பட்டன. விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் “காலிஸ்தானிகள்” என்று முத்திரை குத்தப்பட்டனர். பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள் “தேசவிரோதம்”, “நகர்ப்புற நக்சல்கள்” என்ற பெயரில் அவமதிக்கப்பட்டன.
ஆனால் தற்போதைய மாணவர் எழுச்சியை அதே முறையில் சித்தரிப்பது இந்த ஆட்சிக்கு எளிதல்ல. ஏனெனில், இந்தப் போராட்டத்தின் மையத்தில் இருப்பவை தேர்வுகளின் மீதான நம்பகத்தன்மை, வேலையின்மை, கல்வி நிறுவனங்களின் சீரழிவு, அரசு அமைப்புகள் மீதான நம்பிக்கையிழப்பு போன்ற ஒவ்வொரு குடும்பத்தையும் பாதிக்கும் பிரச்சினைகள். இவை சாதி, மதம், மொழி, பிராந்தியம் ஆகிய எல்லைகளைக் கடந்த பொதுவான சமூகக் கேள்விகளாக மாறியுள்ளன.
போராட்டத்தில் பங்கேற்றிருப்பவர்கள் பெரும்பாலும் மாணவர்கள், வேலைவாய்ப்புக்காகத் தயாராகும் இளைஞர்கள், நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த கல்வியறிவு மிக்க இளைஞர்கள். இதுவே மோடியின் அரசியல் எழுச்சிக்கு முக்கிய ஆதரவாக இருந்த சமூகப் பிரிவும் கூட. எனவே, இவர்களை “தேசவிரோதிகள்” அல்லது வேறு ஏதாவது எதிரி அடையாளத்திற்குள் தள்ளுவது, தங்களது சொந்த ஆதரவுத் தளத்தையே அந்நியப்படுத்தும் அபாயத்தை ஆட்சியாளர்களுக்கு உருவாக்குகிறது.
மேலும், போராட்டத்தில் பங்கேற்பவர்கள் மத, மொழி, பிராந்திய வேறுபாடுகளைக் கடந்த பல்வகை சமூகப் பின்னணிகளைச் சேர்ந்தவர்கள். எந்தவித வன்முறைக்கும் இடமளிக்காமல் மிகுந்த கட்டுப்பாட்டுடன் போராட்டத்தை நடத்த வேண்டும் என்பதில் மாணவர்கள் வெளிப்படையாக உறுதியாக உள்ளனர். “வன்முறையாளர்கள்” என்று கோடி (Godi) ஊடகங்கள் முத்திரை குத்துவதற்கான எந்த வாய்ப்பையும் வழங்கமாட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர். இதனால், அடையாள அரசியலை அடிப்படையாகக் கொண்ட மோடி ஆட்சியின் பழைய அவதூறு உத்தி இம்முறை முற்றிலுமாக செயலிழந்துள்ளது.
4. தோல்வியடைந்த ஜனநாயக நிறுவனங்களுக்கு எதிரான இளைஞர் கிளர்ச்சி
இந்த இயக்கத்தின் தோற்றமே இந்திய நீதித்துறையின் மீதான ஆழமான அதிருப்தியை வெளிப்படுத்துகிறது. தலைமை நீதிபதியின் “ஒட்டுண்ணிகள்” குறித்த கருத்துக்கு பின்னர் அவர் விளக்கம் அளித்திருந்தாலும், “கரப்பான் பூச்சிகள்” என்ற சர்ச்சை வேலையில்லா இளைஞர்களை நாட்டின் உயர்ந்த நீதிமன்றங்கள்கூட இகழ்ச்சியுடன் பார்க்கின்றன என்ற உணர்வை பரவலாக்கியது.
அதனைத் தொடர்ந்து நடந்த தேர்வுத் தாள் கசிவுகள் தொடர்பாக நீதிமன்றங்கள் எந்தவித குறிப்பிடத்தக்க தீர்வையும் வழங்காதது, சட்டரீதியான அனைத்து வழிகளும் முடங்கிவிட்டன என்ற உணர்வை இளைஞர்களிடம் உருவாக்கியது.
அதேநேரத்தில், பெரும்பாலான தேசிய தொலைக்காட்சி ஊடகங்கள் இந்த மாபெரும் போராட்டத்தை திட்டமிட்டு புறக்கணிக்கவோ, அதன் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டவோ அல்லது போராட்டக்காரர்களையே குற்றவாளிகளாக சித்தரிக்கவோ முயன்றன. கடந்த காலத்தில் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் ஜாமீன் கூட கிடைக்காமல் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவங்களும் இன்னும் மக்களின் நினைவில் உள்ளன.
இதன் விளைவாக, ஜனநாயகத்தில் மக்களின் குறைகளை கேட்டு தீர்க்க வேண்டிய நீதித்துறை, நாடாளுமன்றம், பிரதான ஊடகங்கள் போன்ற நிறுவனங்கள் தங்களது பொறுப்பை கைவிட்டுவிட்டன என்ற முடிவுக்கு இளைஞர்கள் வந்துள்ளனர். அதனால்தான் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரே அரசியல் இடமாக டெல்லியின் தெருக்களை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
5. அரசியல்ரீதியில் பொறுப்பேற்பதை இனியும் தள்ளிப்போட முடியாது
கடந்த ஒரு மாதமாக இந்தப் போராட்டத்தை அரசு முழுமையாகப் புறக்கணிக்கும் அணுகுமுறையையே பின்பற்றியது. மாணவர்களுடன் பேசுவதற்காக ஒரு அமைச்சர், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், அல்லது ஒரு மூத்த அதிகாரியைக் கூட அனுப்ப அது முன்வரவில்லை.
ஆனால் போராட்டக்காரர்கள் தொடர்ந்து சில அடிப்படைக் கேள்விகளை முன்வைக்கின்றனர்.
தொடர்ச்சியாக நடைபெறும் தேர்வுத் தாள் கசிவுகளுக்கு யார் பொறுப்பு?
இந்த முறைகேடுகளைத் தடுக்க அரசு என்ன சீர்திருத்தங்களை மேற்கொள்ளப் போகிறது?
மாணவர்கள் உயிரிழந்த பிறகும் ஏன் எந்த அமைச்சரும் அரசியல்ரீதியாகப் பொறுப்பேற்கவில்லை?
இந்தக் கேள்விகள் பதிலின்றி மறைந்து போக அனுமதிக்கக் கூடாது என்பதில் இளைஞர்கள் உறுதியாக உள்ளனர். கல்லூரி சேர்க்கை முடிந்தவுடன் இந்த விவகாரமும் மறக்கப்படும் என்ற அரசின் கணக்கை அவர்கள் முறியடித்துள்ளனர்.
அரசியல்ரீதியில் பொறுப்பேற்பதை இனியும் தவிர்க்க முடியாது என்று அவர்கள் நாடாளுமன்றத்தின் வாசலுக்கே கொண்டு சென்றுள்ளனர். ஆயிரக்கணக்கான இளைஞர்களின் இந்தப் பெரும் எழுச்சி, தேர்வுத் தாள் கசிவுகள், அமைப்புசார் ஊழல், பொதுக் கல்வியின் சீரழிவு போன்ற பிரச்சினைகளை நேரடியாக அரசியல் தலைமையின் முன் நிறுத்தியுள்ளது.
6. அதிர்ச்சியிலும் திணறலிலும் மோடி அரசு
இதுவரை இந்தப் போராட்டத்துக்கு மோடி அரசு அளித்த பதில் மூன்று அம்சங்களைக் கொண்டதாகவே இருக்கிறது – மௌனம், நிர்வாகத் தடைகள், அலட்சியமான அரசியல் பேச்சு. இதே உத்தியைத்தான் இதற்கு முன் பிளவுபட்ட அல்லது எளிதில் களங்கப்படுத்தக்கூடிய மக்கள் இயக்கங்களுக்கு எதிராக அது வெற்றிகரமாகப் பயன்படுத்தியது.
ஆனால், இந்த முறை அந்த உத்தி பலனளிக்கவில்லை.
ஒருபுறம், அமைதியான முறையில் போராடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை வன்முறையால் ஒடுக்கவும் முடியவில்லை. மறுபுறம், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அது தயாராக இல்லை. இதன் விளைவாக, தன்மீது மோத வரும் வாகனத்தின் பிரகாசமான வெளிச்சத்தைக் கண்டு திகைத்து நிற்கும் மானைப் போல அரசே திணறிக்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.
இந்தப் போராட்டம் ஒரு நாள் அல்லது ஒரு வாரத்தில் முடிந்துவிடும் நிகழ்வு அல்ல என்பதை மாணவர்கள் ஏற்கனவே நிரூபித்துவிட்டனர். நீண்டகாலப் போராட்டத்திற்குத் தயாராக இருக்கும் ஒரு தலைமுறையை எதிர்கொள்வதில் அரசு அரசியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தடுமாறுகிறது.
அரசும் அதன் ஆதரவாளர்களும் வெளிப்படையாக அதை ஒப்புக்கொள்ளாவிட்டாலும், உலகின் பல நாடுகளில் இளைஞர்களின் தெருப் போராட்டங்கள் அரசியல் சூழலை எவ்வாறு மாற்றியமைத்துள்ளன என்பது அவர்களுக்குத் தெரியும். அந்த அச்சம்தான் இன்றைய மௌனத்தின் பின்னணியில் இருக்கிறது.
7. பயத்தின் அரசியலை உடைத்தெறிந்த தலைமுறை
இந்தப் போராட்டத்தை உண்மையில் தனித்துவமாக்குவது, இளைஞர்கள் இனி பயந்து பின்வாங்கத் தயாராக இல்லை என்பதுதான்.
போலீஸ் படைகளின் சுற்றிவளைப்பு, எங்கும் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், கண்ணீர்ப் புகைக் குண்டுகள், போலீஸ் படைகளின் அடக்குமுறைகள்—இவை எதுவும் ஆயிரக்கணக்கான சாதாரண மக்களை தெருக்களுக்கு வருவதிலிருந்து தடுக்க முடியவில்லை.
அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வந்ததோடு மட்டுமல்ல; தனித்தனியாக அனுபவித்த வேதனைகளையும் விரக்தியையும், அதிகாரத்தால் புறக்கணிக்க முடியாத ஒரு கூட்டுக் குரலாக மாற்றியுள்ளனர்.
பிரித்தாளும் அரசியலுக்கும், தனிநபர் அடையாளம் சார்ந்த அவதூறுக்கும், அச்சுறுத்தலுக்கும், மௌனப்படுத்தும் முயற்சிகளுக்கும் பணிய மறுத்ததன் மூலம், இந்த மாணவர் இயக்கம் மோடி ஆட்சியின் மிகவும் பலம் வாய்ந்த அரசியல் ஆயுதத்தையே செயலிழக்கச் செய்துள்ளது.
பல ஆண்டுகளாக “வலிமையான தலைவர்” என்ற பிம்பத்தின் மீது தனது அரசியல் அதிகாரத்தைக் கட்டியெழுப்பிய மோடி ஆட்சி, இப்போது தவிர்க்க முடியாத அரசியல் நெருக்கடியை நேருக்கு நேர் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
(தி வையர் இணையதளத்தில் வெளியான – Seven Reasons Why This Massive Students’ Protest in Delhi is Different and Has Rattled the Modi Regime என்ற ஆங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு.)
- மொழிபெயர்த்தவர் – சந்திரன்
