ஜந்தர் மந்தரில் ஒரு மெரினா!
மோடி அரசுக்கு எதிராக வெடித்த மாணவர் எழுச்சி!
நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி மதிப்பீட்டு முறைகேடுகள், புதிய கல்விக் கொள்கையின் பெயரில் கல்வியை முழுமையாக சந்தைமயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக, இந்தியா முழுவதிலுமிருந்து ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தில்லியில் ஒன்றுகூடி நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றது, நாட்டின் தலைநகரையே அதிரவைத்துள்ளது. இது வெறும் தேர்வுக் குளறுபடிக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல; கடந்த பத்தாண்டுகளாக கல்வி, வேலைவாய்ப்பு, ஜனநாயக உரிமைகள் என மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் குவிந்து கிடந்த அதிருப்தி இன்று நீட் ஊழல் எனும் தீப்பொறியினால் வெடித்த அரசியல் எழுச்சியாக மாறியுள்ளது.
மாணவர்களின் இந்த எழுச்சியை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத மோடி அரசு, அவர்களின் கோரிக்கைகளுக்குப் பதில் சொல்லாமல், போலீசையும் துணை இராணுவத்தையும் ஏவி அடக்குமுறையின் மூலம் போராட்டத்தை நசுக்க முயற்சிக்கிறது. கல்வி தொடர்பான கோரிக்கையை முன்வைத்து அமைதியாகத் திரண்ட மாணவர்களை எதிர்கொள்ள அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், தடுப்பரண்கள், தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டுகள், இணைய சேவை முடக்கம் ஆகியவற்றை அரசு தேர்வு செய்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே நாடாளுமன்ற முற்றுகைக்கான குரல்கள் தில்லியில் ஒலித்துக் கொண்டே இருந்தன. நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி மதிப்பீட்டு ஊழல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் பதவி விலக வேண்டும் என்று கோரி, காக்ரோச் ஜனதா பார்ட்டி (சிஜேபி) நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி சமூகச் செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் பல நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தார். ஆனால் அவரது கோரிக்கைக்கு பதில் அளிப்பதற்குப் பதிலாக, உண்ணாவிரதப் பந்தலில் இருந்த அவரை போலீசார் வலுக்கட்டாயமாக அகற்றி மருத்துவமனையில் அடைத்து வைத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை முதலே தில்லியின் ஜந்தர் மந்தர் பகுதி மாணவர்கள், இளைஞர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் பட்டதாரிகள் என ஆயிரக்கணக்கான மக்களால் நிரம்பியது. இவர்களைத் தடுப்பதற்காக நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்லும் அனைத்து சாலைகளும் ஏழு அடி உயர இரும்புத் தடுப்புகளால் மூடப்பட்டிருந்தன. போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்தை நெருங்கக் கூடாது என்பதற்காக நூற்றுக்கணக்கான போலீசாரும், துணை இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்தத் தடைகளை மீறி மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாக முன்னேறியபோது, போலீசு அவர்கள் மீது கடுமையான தடியடி நடத்தியதுடன் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். 70க்கும் அதிமான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜந்தர் மந்தர் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் இணைய சேவைகள் முடக்கப்பட்டன. நாடாளுமன்றத்தைச் சுற்றி பல அடுக்குப் பாதுகாப்பு அமைக்கப்பட்டதோடு, ஆயுதமேந்திய துணை இராணுவப் படைகள் களமிறக்கப்பட்டன. கல்வி உரிமையை வலியுறுத்தி அமைதியான முறையில் பேரணியாக வந்த மாணவர்களைக் கண்டு அஞ்சிய அரசு அவர்களை எதிர்கொள்ள இவ்வளவு பெரிய பாதுகாப்பு வளையத்தை அமைத்தது. இந்தத் தடைகளை மீறி ஒருவேளை மாணவர்கள் உள்ளே வந்தால் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவும் தயாராக, துணை இராணுவத்தினர் துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு காத்திருக்கும் காணொளியையும் பல முக்கிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இவ்வாறு நாடாளுமன்றத்திற்கு வெளியே மாணவர்கள் தங்களது எதிர்காலத்தைப் பாதுகாக்கக் கோரி அடக்குமுறையை எதிர்கொண்டு போராடிக் கொண்டிருந்த வேளையில், நாடாளுமன்றத்திற்குள் மழைக்காலக் கூட்டத் தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து பதில் அளிக்கவோ, கல்வி ஊழல் குறித்து விரிவான விவாதம் நடத்தவோ ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. அதற்குப் பதிலாக, வந்தே மாதரம் பாடலை அவமதிப்பதை தேசவிரோதம் என அறிவிக்கும் சட்டத்தைக் கொண்டுவர முனைப்புக்காட்டி வந்தனர்.
எதிர்க்கட்சிகளின் செயல்பாடும் இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவத்திற்கு இணையாக இல்லை. காங்கிரஸ் நீட் தேர்வு தொடர்பாக அவையில் எதிர்ப்புத் தெரிவித்தாலும், மாணவர் எழுச்சியை மையப்படுத்திய அரசியல் விவாதத்தை உருவாக்கும் முகமாக அல்லாமல் வெறுமனே சம்பிரதாய எதிர்ப்பைப் பதிவு செய்வதை மட்டுமே காங்கிரஸ் கட்சி செய்தது. திமுக உறுப்பினர்களோ மேகேதாட்டுப் பிரச்சனையில் அவையை ஒத்திவைக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர். மாணவர்கள் வீதிகளில் போராடிக் கொண்டிருக்க, நாடாளுமன்ற அரசியல்வாதிகளோ வழக்கமான கட்சி மோதல்களின் எல்லையைத் தாண்டவில்லை.
போலீசின் அடக்குமுறையால் நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி தற்காலிகமாகத் தடுக்கப்பட்டாலும், போராட்டம் முடிவுக்கு வரவில்லை. மாணவர்கள் மீண்டும் ஜந்தர் மந்தருக்குத் திரும்பி, மோடி அரசுக்கு எதிராக முழக்கமிட்டு தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர். இந்தப் போராட்டத்தின் மையக் கோரிக்கை இன்று வெறும் நீட் அல்லது சிபிஎஸ்சி முறைகேடுகளைத் தாண்டி விரிவடைந்துள்ளது.
ஏனெனில், நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி மதிப்பீட்டு ஊழல் போன்றவை தனித்தனி சம்பவங்கள் அல்ல. கல்வியை அரசின் பொறுப்பிலிருந்து கைகழுவி, தனியார் கல்விக் கொள்ளையர்கள் கையிலும், அவர்களால் கட்டுப்படுத்தப்படும், சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப அமுல்படுத்தப்படும் புதிய கல்விக் கொள்கையின் விளைவுகளாகவே இவற்றை மாணவர்கள் பார்க்கத் தொடங்கியுள்ளனர். தேர்வுகள் பொதுக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான கருவிகளாக அல்லாமல், கோச்சிங் நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் கல்விச் சந்தையின் இலாபத்தை உறுதி செய்யும் கருவிகளாக மாறிவிட்டதாக மாணவர்கள் கருதுகின்றனர். ஜந்தர் மந்தரில் ஒலிக்கும் கண்டன முழக்கங்களே இதற்குச் சாட்சியாக இருக்கின்றன.
இதனோடு, வரலாறு காணாத வேலைவாய்ப்பின்மை இந்தக் கோபத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. பல ஆண்டுகள் படித்து பட்டம் பெற்ற பிறகும் வேலை கிடைக்காத இளைஞர்கள், போட்டித் தேர்வுகள் தொடர்ந்து முறைகேடுகளால் சீரழிவதைப் பார்த்து தங்களது எதிர்காலமே பறிக்கப்படுவதாக உணர்கின்றனர். எனவே இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாணவர்கள் மட்டுமல்ல; கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும் இடையே சிக்கித் தவிக்கும் ஒரு தலைமுறையே இன்று போராடிக் கொண்டிருக்கிறது.
ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டம், தமிழக மக்களுக்கு 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற மெரினா எழுச்சியை நினைவூட்டுகிறது. அன்றைய மெரினா போராட்டம் ஜல்லிக்கட்டைப் பாதுகாப்பதற்கான போராட்டமாகத் தொடங்கியது. ஆனால் சில நாட்களிலேயே அது தமிழர்களின் கலாச்சாரத்தினை பாதுகாப்பதற்கான போராட்டம் என்ற எல்லையைத் தாண்டி, பணமதிப்பிழப்பு, காவிரி, மீனவர் பிரச்சினை, நீட், மொழிக் கொள்கை, மாநில உரிமைகள் உள்ளிட்ட ஒன்றிய அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராகக் குவிந்து கிடந்த அதிருப்தியின் வெளிப்பாடாக மாறியது. பல ஆண்டுகளாக மக்களின் மனங்களில் தேங்கியிருந்த கோபத்திற்கு ஜல்லிக்கட்டு ஒரு தீப்பொறியாக மட்டுமே அமைந்தது.
இன்று ஜந்தர் மந்தரிலும் அதேபோன்ற அரசியல் இயங்கியல் வெளிப்படத் தொடங்கியுள்ளது. நீட் வினாத்தாள் கசிவும், சிபிஎஸ்சி மதிப்பீட்டு முறைகேடுகளும் இந்தப் போராட்டத்தின் உடனடி காரணமாக இருந்தாலும், போராட்டக் களத்தில் ஒலிக்கும் முழக்கங்கள் கல்வியை மட்டுமே பற்றியவை அல்ல. புதிய கல்விக் கொள்கை, கல்வித் தனியார்மயம், போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மை, வேலைவாய்ப்பின்மை, இளைஞர்களின் எதிர்காலம், ஜனநாயக உரிமைகள் என பல ஆண்டுகளாக மாணவர்களும் இளைஞர்களும் சுமந்து வந்த கோபம் ஒரே இடத்தில் வெடித்துள்ளது.
எந்தப் பெரும் மக்கள் எழுச்சியும் ஒரு நாள் திடீரென உருவாகாது. சமூகத்தில் நீண்ட காலமாகக் குவிந்து கிடக்கும் முரண்பாடுகள், அதிருப்திகள், ஏமாற்றங்கள் ஆகியவை ஒரு குறிப்பிட்ட நிகழ்வைத் தீப்பொறியாகக் கொண்டு வெடிக்கின்றன. மெரினாவில் ஜல்லிக்கட்டு அந்தத் தீப்பொறியாக இருந்தது என்றால், ஜந்தர் மந்தரில் நீட் மற்றும் சிபிஎஸ்சி ஊழல்களே அந்தத் தீப்பொறியாக மாறியுள்ளன. எனவே இந்தப் போராட்டத்தை வெறும் தேர்வுக் குளறுபடிக்கு எதிரான எதிர்வினையாகப் பார்க்க முடியாது; கடந்த பத்தாண்டுகளாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் தேங்கியிருந்த அதிருப்தியின் அரசியல் வெளிப்பாடாகவே இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
மெரினா எழுச்சியை போலீசைக் கொண்டு கலைக்க முடிந்தது; ஆனால் அது உருவாக்கிய அரசியல் தாக்கத்தை ஆட்சியாளர்களால் அழிக்க முடியவில்லை. அதுபோலவே ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீது தடியடி நடத்தியோ, கைது செய்தோ, இணையத்தை முடக்கியோ இந்த எழுச்சியின் அடித்தளத்தை ஒழிக்க முடியாது.
கல்வியைத் தனியார் முதலாளிகளின் சுரண்டலுக்கு ஒப்படைக்கும் கொள்கைகளும், இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் பொருளாதாரப் பாதையும் தொடரும் வரை, நீட், சிபிஎஸ்சி, வேலைவாய்ப்பின்மை அல்லது வேறு எந்தப் பிரச்சினையையும் தீப்பொறியாகக் கொண்டு புதிய மக்கள் எழுச்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கும். ஜந்தர் மந்தர் இன்று ஒரு போராட்டக் களம் மட்டுமல்ல; அது மோடி அரசின் கல்விக் கொள்கைக்கும், அதன் அரசியல்-பொருளாதார திசைக்கும் எதிராக உருவாகத் தொடங்கியிருக்கும் புதிய தலைமுறையின் எதிர்ப்பின் அடையாளமாக மாறியுள்ளது.
- அழகு

