எஸ்.ஐ.ஆர் மூலம் எதிர்க்கட்சிகளை ஒழிக்கத் துடிக்கும்
காவிப் பாசிஸ்டுகள்!
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றிப் பெற்றே தீரவேண்டும் என நாலுகால் பாய்ச்சலில் எஸ்.ஐ.ஆர்-ஐ அமல்படுத்தி, 91 இலட்சம் பேரை தனது கைப்பாவையான தேர்தல் ஆணையத்தின் மூலம் நீக்கிய காவிகள் தற்போது ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறார்கள்.
அம்மாநிலத்திலுள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் 206 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றி திரிணாமுல் காங்கிரசை தோற்கடித்தது அனைவரும் அறிந்த விஷயம்.
காவிகளிடம் எஸ்.ஐ.ஆர் மூலம் ஆட்சியைப் பறிகொடுத்த மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. ஆட்சிக்கட்டிலில் ஏறிய காவிப் பாசிஸ்டுகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களை தன் பக்கம் இழுத்ததோடு மட்டுமில்லாமல், அக்கட்சியை சுவடு தெரியாமல் அழிக்க முயன்று வருகிறார்கள். மேற்கு வங்கத்தில் தனக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் எதிரிகள் யாரும் இல்லை என்ற தெம்போடு தற்போது அங்கு தமது பாசிச செயல்திட்டத்தை வெகு சுலபமாக நிறைவேற்றி வருகின்றனர்.
கடந்த மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு எஸ்.ஐ.ஆர் நடைமுறை மூலம் 91 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதில் சுமார் 7 இலட்சம் பேர் தமது பெயரை வாக்காளர் பட்டியலில் மீண்டும் சேர்க்க கோரி மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகினர்.
காங்கிரஸ் எம்.பி. இஷா கான் சௌத்ரி தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச் (RTI) சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனுவிற்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், மீண்டும் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையானது காவிகளின் கைப்பாவையான தேர்தல் ஆணையத்தின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.
மேல் முறையீட்டு தீர்ப்பாயம் நடத்திய 82,782 மேல் முறையீடுகள் மீதான முடிவுகளில், 75,443 பேர் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதாவது தேர்தல் ஆணையம் தற்போது வரை வெளியிட்ட மேல் முறையீடு முடிவுகளில் இருந்து மட்டும் 91% பேர் மீண்டும் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் முந்தைய சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ள இந்த 75,443 பேர் முதலில் நீக்கப்பட்டு தற்போது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களைப் போல மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகிய சுமார் 6.2 இலட்சம் வாக்காளர்களின் முடிவுகள் தேர்தல் ஆணையத்தால் இன்னும் வெளியிடப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றன.
இதே மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை எதிர்த்தும், இது மக்களின் வாக்குரிமையைப் பறிக்கிறது என்றும் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த உச்சநீதிமன்றமோ, 91 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக அம்மாநிலத்தில் தேர்தலை நிறுத்தி வைக்கும் முடிவை வழங்காமல், காவிகளுக்கு ஆதரவான தீர்ப்பை அளித்தது.
மேற்கு வங்க மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்பதற்கு பதிலாக, அவர்களின் வாக்குரிமையைப் பறிக்கின்ற வேலையை நேர்த்தியாக மேற்பார்வையிட்டு காவி பாசிஸ்டுகளுக்கு துணை போனது உச்சநீதிமன்றம். எஸ்.ஐ.ஆர் வழக்குகளில் வேண்டுமென்றே காலம் தாழ்த்தியதோடு, “ஒரு தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனால் வாக்குரிமை நிரந்தரமாக பறிபோவதாகக் கருதமுடியாது” என்று தீர்ப்பளித்தது.
இதுமட்டுமல்லாமல் மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர் நடைமுறையை எவ்வாறு துரிதமாக முடிக்கலாம் என ஆலோசனை கூறியதோடு, தனது கீழமை நீதிமன்ற நீதிபதிகளை எஸ்.ஐ.ஆருக்கு உதவும்படி உத்தரவிட்டு மோடி அரசின் எஸ்.ஐ.ஆர் மோசடியை உச்சநீதிமன்றம் ஒரு விசுவாசியைப் போல மேற்பார்வையிட்டது.
தற்போது தீர்ப்பாயத்தின் மூலம் வாக்குரிமையை மீண்டும் பெற்ற இந்த 75,443 பேரை எடுத்துக் கொண்டாலும், இவர்களை கடந்த சட்டமன்ற தேர்தலில் எஸ்.ஐ.ஆர் மூலம் காவிகள் வாக்களிக்க முடியாமல் தடுத்தே வெற்றி பெற்றனர். காவிகள் அங்கு தற்போது ஆட்சியைப் பிடித்து உடனே “கண்டறி, நீக்கு, நாடு கடத்து” எனும் தனது காவி பாசிச செயல் திட்டத்தை முஸ்லீம் மக்களுக்கு எதிராக வீச்சாக அமல்படுத்தி வருகிறார்கள். இதோடு மட்டுமில்லாமல் தான் அரியணை ஏறியவுடனே மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே ஒட்டுமொத்தமாக அழிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் தொடங்கிய எஸ்.ஐ.ஆர் எனும் முறையின் மூலம் நாட்டின் பல மாநிலங்களில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகளை அழிக்கும் பாசிச திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஒத்திசைவாக மோடி அரசின் கைப்பாவையான தேர்தல் ஆணையமோ, “சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம்” எனும் வழிமுறையை இரண்டு கட்டங்களாக முடித்து விட்டு தற்போது மூன்றாவது கட்டமாக நடத்தி வருகிறது. இந்த மூன்று கட்டங்களிலும் வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 13.37 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தனை கோடி வாக்காளர்களுக்கு காவி பாசிசத்தின் எஸ்.ஐ.ஆர் எனும் இரும்புக் கதவு சடாரென்று மூடப்பட்டுவிட்டன.
உலகின் சிறந்த ஜனநாயகம் என பீற்றிக்கொள்ளப்படும் இந்திய தேர்தல் ஜனநாயகத்தில் இருந்து நீக்கப்பட்ட இந்த 13.37 கோடி வாக்காளர்களின் எண்ணிக்கை, உலகில் 11-வது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான மெக்சிகோவில் உள்ள மக்களை ஒரே அடியில் வாக்குரிமையை இழக்கச் செய்வதற்குச் சமம். தற்போது நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் (தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி) சுமார் 15.93 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர் என்பதிலிருந்து இந்த எண்ணிக்கையின் அளவை நாம் புரிந்து கொள்ளலாம்.
இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் நடைமுறையின் போது வாக்காளர்களின் நிகர எண்ணிக்கை அதிகமாகி இருக்க வேண்டும். ஆனால் காவி பாசிஸ்டுகளின் கைப்பாவையான தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் நடைமுறையிலோ, இதற்கு முந்தைய வாக்காளர் பட்டியலில் இருந்து 14.1% பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தனை கோடி மக்களின் வாக்குரிமை ஏன் பறிக்கப்பட்டிருக்கிறது என்பது பற்றிய நேர்மையான விளக்கங்களை காவிகளின் தேர்தல் ஆணையம் ஒருபோதும் நாட்டு மக்களுக்கு கூறப்போவதில்லை.
இந்திய தேர்தல் ஆணையம் நடத்திய முதல் இரண்டு கட்டங்களில் நீக்கப்பட்ட 5.18 கோடி வாக்காளர்களில் 60% பேர் (3.15 கோடி) “நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள்” (permanently shifted) என வகைப்படுத்தப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர். அதாவது வாக்காளர் பட்டியலில் அவர்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்த முகவரியில் அவர்கள் வசிக்கவில்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது.
இதே வகையின் கீழ் மூன்றாவது கட்டமாகவும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆர் நடைமுறையின் போது கோடிக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் மாவட்டத்தின் 15 சட்டமன்ற தொகுதிகளில் நீக்கப்பட்ட மொத்த வாக்காளர்களில் 68.52% பேர் “வாக்காளர் அடையாள அட்டையில் பதிவு செய்த முகவரியில் வசிக்கவில்லை” (permanently shifted) என்ற காரணத்தின் அடிப்படையிலேயே நீக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையம் நியமிக்கும் அதிகாரிகளால் ஏற்படும் குழப்பங்கள் மற்றும் தவறுகளால் தான் வாக்காளர்கள் நீக்கப்படுகின்றனர் என மக்கள் ஆரம்பத்தில் நம்பவைக்கப்பட்டதற்கு தற்போது எந்த முகாந்திரமும் இல்லை என்பதை அடுத்தடுத்த மாநிலங்களில் நீக்கப்பட்ட கோடிக்கணக்கான வாக்காளர்கள் எண்ணிக்கையிலிருந்து நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம்.
தேர்தல் ஆணைய அதிகாரிகளின் படி “நிரந்தரமாக குடியேறியவர்கள்” அல்லது “கண்டறிய முடியவில்லை” என வகைப்படுத்தி நீக்கப்பட்ட வாக்காளர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக அதே தொகுதியில் தான் வசித்து வருகிறார்கள் என்பதை பல ஊடகங்கள் தொடர்ந்து அம்பலப்படுத்திய போதிலும், இவ்வகைகளின் கீழ் அடுத்தடுத்து பல மாநிலங்களில் வாக்காளர்கள் தொடர்ந்து நீக்கப்பட்டு வருகிறார்கள்.
“நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள்” எனக் கூறி உத்தராகண்டில் 57.7%, தில்லியில் 66.4%, மேகாலயாவில் 23.6% பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இதே போல “கண்டுபிடிக்க இயலவில்லை / வருகை தராதவர்கள்” என்ற வகையின் கீழ் உத்தராகண்டில் 20%, தில்லியில் 24.7%, மேகாலயாவில் 27.5% பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் “நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள்” அல்லது “கண்டுபிடிக்க இயலாதவர்கள்” என்ற இரு வகைகளையும் ஒரே பிரிவின் கீழ் வகைப்படுத்தி 68.2% பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
எஸ்.ஐ.ஆர் அமல்படுத்துவதற்கு முன்பு உள்ள தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின் படி, ஒரு நபர், வாக்காளர் அட்டையில் இருக்கும் முகவரியில் வசிக்கவில்லை என யாரேனும் புகார் அளித்தால், தேர்தல் பதிவு அதிகாரி (ஒரு சட்டமன்றத் தொகுதியின் பொறுப்பில் உள்ள மிக உயர்ந்த அதிகாரி) அந்த வாக்காளருக்கு விரைவு அஞ்சல் மூலம் ஒரு அறிவிப்பை அனுப்ப வேண்டும். அந்த அறிவிப்புக்கு பதிலளிக்க வாக்காளருக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
வாக்காளர் பதிலளிக்காத பட்சத்தில், தேர்தல் பதிவு அதிகாரி ஒரு வாக்குச்சாவடி நிலை அதிகாரியை (BLO) அந்த வாக்காளரின் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அனுப்பி, அவர் அங்கு வசிக்கிறாரா இல்லையா என்பதை நேரில் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.
வாக்குச்சாவடி நிலை அதிகாரி, அந்த முகவரியில் வாக்காளர் வசிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரும், அறிவிப்புக்கான 15 நாள் காலக்கெடு முடிந்த பின்னரும் மட்டுமே, அந்த வாக்காளர் நிரந்தரமாக குடிபெயர்ந்திருக்கலாம் என உறுதி செய்து, அந்த வாக்காளரின் பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து தேர்தல் பதிவு அதிகாரியால் நீக்க முடியும்.
ஆனால் அந்த வாக்காளர் தேர்தல் ஆணையத்தின் அதிகாரியின் அறிவிப்புக்கு பதிலளித்திருந்தால், தேர்தல் பதிவு அதிகாரி, அந்த வாக்காளரின் முன்னிலையில்-நீதித்துறை (quasi-judicial) விசாரணை நடத்த வேண்டும். வாக்காளரின் உரிமை தொடர்பான ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால் அவற்றை பரிசீலித்து, அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் தொடர வேண்டுமா அல்லது நீக்கப்பட வேண்டுமா என்பதை தேர்தல் பதிவு அதிகாரி முடிவு செய்வார்.
எந்த ஒரு இந்திய வாக்காளரும் வேறு ஒரு நபரின் மூலமாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படக்கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் இந்த விதியை எஸ்.ஐ.ஆருக்கு முன்பு பின்பற்றி வந்தது.
ஆனால் காவிகளின் கைப்பாவையான தேர்தல் ஆணையம் இது போன்ற விதிகளை கடுகளவும் மதிக்காமல், ஒவ்வொரு மாநிலங்களிலும் கோடிக்கணக்கான வாக்காளர்களை “நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் / கண்டுபிடிக்க இயலாதவர்கள்” என வகைப்படுத்தி, அந்தந்த மாநிலங்களில் எஸ்.ஐ.ஆரை அமல்படுத்திய தேதியிலிருந்து வெறும் 90 நாட்களுக்குள் நீக்கி வருகிறது.
இது போன்ற விரிவான செயல்முறையை, குறுகிய நாட்களில் தேர்தல் ஆணையம் செயல்படுத்தியிருக்க முடியாது என்பதை ஒரு எளிய கேள்வியின் மூலமே நாம் அம்பலப்படுத்த முடியும்.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள், “நிரந்தரமாக குடியேறியவர்கள்” அல்லது “கண்டறிய முடியாத வாக்காளர்கள்” என்ற வகையின் கீழ் நீக்கப்பட்ட கோடிக்கணக்கான வாக்காளர்களுக்கு எத்தனை முறை விரைவு அஞ்சல் மூலம் தகவல் தெரிவித்தனர்? அத்தகவலுக்கு வாக்காளர்களில் எத்தனை பேர் பதில் அனுப்பினர்? வாக்காளர் முகவரியில் குறிப்பிட்ட அந்த வாக்காளர் இல்லை என்று கூறி அஞ்சல் துறை எத்தனை முறை அந்த அறிவிப்புகளைத் திருப்பி அனுப்பியது? போன்ற எளிய கேள்விகளுக்கெல்லாம் காவிகளின் தேர்தல் ஆணையத்திடம் எந்த பதிலையும் நாட்டு மக்கள் எதிர்பார்க்க முடியாது.
காவி பாசிஸ்டுகளின் தேர்தல் ஆணையத்திற்கு உதவுவதற்காக பல மாநிலங்களில் பா.ஜ.க முகவர்கள் வாக்காளர்கள் நீக்கத்திற்கு, அதுவும் குறிப்பாக முஸ்லீம்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு பல உள்ளடி வேலைகள் செய்து வருகின்றனர் என்பதை பல பத்திரிகைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன.
முஸ்லீம்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் வட கிழக்கு ஒடிசாவின் கடற்கரைப் பகுதியான பத்ராக் எனும் தொகுதியில், பா.ஜ.க முகவர்கள் முஸ்லீம் வாக்காளர்களை குறிவைத்து நீக்குவதற்காக விண்ணப்ப படிவம் 7-ஐ ஆயிரக்கணக்கில் தாக்கல் செய்திருந்ததை ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் எனும் இணைய இதழ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.
இதே போல ஜார்க்கண்ட் மாநிலத்தின் கோடா எனும் கிராமத்தில் வசித்து வரும் முஸ்லீம்களை நீக்குவதற்காக பா.ஜ.க முகவர்கள் வாக்காளர்களை நீக்க கோரும் விண்ணப்ப படிவம் 7-ஐ தாக்கல் செய்துள்ளனர். இந்த பா.ஜ.க முகவர்கள் அத்தொகுதியில் வசித்து வந்த 25 முஸ்லீம்கள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டனர் என படிவம்(7) ஐ தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்த தேர்தல் வாக்கு நிலை அதிகாரி கேள்வி எழுப்பிய உடன் அந்த பா.ஜ.க முகவர் தன் கையில் இருந்த 100 விண்ணப்ப படிவங்கள் (7) ஐ தீ வைத்து எரித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் சமீபத்தில் செய்தியொன்றை வெளியிட்டிருக்கிறது. இந்த விண்ணப்ப படிவம் அனைத்தும் பா.ஜ.க அலுவலகத்தில் இருந்தே கொடுக்கப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் கூறுகிறார். கோடாவில் வசித்து வரும் இந்த முஸ்லீம்களை நீக்க கோரிய படிவம் மட்டுமில்லாமல், மேற்கு வங்கத்திலும் இதே போன்று முஸ்லீம்களை நீக்க பா.ஜ.க வினர் முயன்றதாக நியூஸ் லாண்டரி அம்பலப்படுத்தியது.
காவி பாசிஸ்டுகளின் எஸ்.ஐ.ஆர் எனும் பித்தலாட்டம் மேற்கு வங்கத்தில் தொடங்கி தற்போது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்த காவிகள் தமது பாசிச செயல்திட்டம் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை காலி செய்ததைப் போல நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர் எனும் மோசடி மூலம் மற்ற எதிர்க்கட்சிகளை அழிக்கத் துடிக்கிறார்கள்.
காவிகளின் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையானது பலரது வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி வருகிறது. உதாரணமாக, மேற்கு வங்கத்தில் வாக்குரிமையை இழந்த மக்கள் துயரத்திலும் அச்சத்திலும் வாழ்ந்து வருகின்றனர். நீட் தேர்வில் வெற்றி பெற்றும் மருத்துவ படிப்புக்கான இடத்திற்கு சட்ட ரீதியான தீர்ப்புக்காக காத்திருக்கும் ஒரு பெண், தனது குழந்தையின் மருத்துவச் செலவுக்காக வெளிநாடு செல்ல விசாவிற்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கும் ஒரு தந்தை, உதவி ஆசிரியர் வேலை வாய்ப்பை போலீஸின் ஆவணச் சரிபார்ப்பு தடுத்துவிடுமோ என அச்சத்தில் வாழும் ஒரு நபர் என மேற்கு வங்கத்தில் பலர் வாழ்க்கை கேள்விக்குறியாகி வருகிறது.
எஸ்.ஐ.ஆர் என்பது தேர்தல் அரசியல் மூலம் தனக்கு எதிரானவர்களின் வாக்குகளைப் பறிப்பதோடு மட்டுமில்லாமல், நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒழிக்கும் காவிகளின் பாசிச நடவடிக்கையே. இதை துரிதமாக அடுத்தடுத்த மாநிலங்களில் அமல்படுத்துவதில் காவி பாசிஸ்டுகள் வேகமாக முன்னேறி வருகிறார்கள்.
எஸ்.ஐ.ஆர் மூலம் நீக்கப்பட்ட இந்த 13.37 கோடி பேரை காவி பாசிஸ்டுகளிடமிருந்து யாரால் காப்பாற்ற முடியும்? தேர்தல் ஆணையம், நீதித்துறை, நிர்வாக அதிகாரம் ஆகியவை ஒன்றிணைந்து காவி பாசிஸ்டுகளின் துணை உறுப்புகளாக மாற்றப்பட்டுவிட்டன. 13.37 கோடி பேரின் வாக்குரிமையை பறித்த இவை அனைத்தும் மக்களிடம் நம்பகத்தன்மையை இழந்துவிட்டன. இவ்வமைப்புகளை நம்பி பலன் ஏதுமில்லை என்பதை எஸ்.ஐ.ஆர் இந்திய மக்களுக்கு உணர்த்திச் சென்றிருக்கிறது. எதிர்க்கட்சிகளும் காவி பாசிஸ்டுகளின் எஸ்.ஐ.ஆர் நடைமுறையை மக்களிடம் அம்பலப்படுத்துவதில் தோற்றுப் போய் நிற்கின்றன.
காவிகளின் எஸ்.ஐ.ஆர் எனும் பாசிசத் திட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் நம்மை காப்பாற்றுவார்கள் என நம்பி இனிமேல் பயனில்லை. சுமார் 6 மாநில மக்கள் தொகை கொண்ட 13.37 கோடி பேருடன் நாம் அனைவரும் நம்மை காப்பாற்றிக் கொள்ள வீதியில் இறங்குவோம். காவி பாசிசத்தின் எஸ்.ஐ.ஆர் எனும் இரும்புக் கதவை அடித்து நொறுக்குவோம்!
- தாமிரபரணி

