சி.பி.எஸ்.இ.யின் ஊழல் முறைகேடுகள்!
கல்வி தனியார்மயத்தின் இன்னொரு கோரமுகம்! – பாகம் 1

தேசியக் கல்விக் கொள்கையின் பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த மாற்றங்கள், கல்வியை எளிமைப்படுத்துவதையோ மாணவர்களின் சுமையைக் குறைப்பதையோ மட்டுமே நோக்கமாகக் கொண்டவை அல்ல. தேர்வு நடத்துவது, விடைத்தாள் மதிப்பீடு, தரவு மேலாண்மை என கல்வியின் ஒவ்வொரு அம்சத்தையும் தனியார் நிறுவனங்களின் கொள்ளை இலாபத்திற்கானதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டதாகும். சி.பி.எஸ்.இ.யின் திரை வழி மதிப்பீட்டு (OSM) முறைகேடுகள், இந்த மாற்றங்களின் விளைவுகள் எவ்வளவு தீவிரமானவை என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளை நோக்கி மாணவர்கள் நகரும் போக்கு, இன்று இந்தியக் கல்வித்துறையின் முக்கிய மாற்றங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதும், அதில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட வினாக்கள் கேட்கப்படுவதும், இந்தப் போக்கு மேலும் தீவிரமடைய வழிசெய்துள்ளன.

நீட் தேர்வுக்காக சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு மாறுவது ஒரு காரணம் என்றாலும், சி.பி.எஸ்.இ. பள்ளிகள்தான் உயர்தரமான கல்வியை வழங்குகின்றன என்ற நம்பிக்கை நடுத்தர வர்க்கப் பெற்றோர்களிடையே ஆழமாகப் பரப்பப்பட்டிருப்பதும் மற்றொரு முக்கிய காரணமாகும். தங்களது குழந்தைகள் மாநிலப் பாடத்திட்டத்தில் (state board) படிப்பதை விட சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிப்பதையே அவர்கள் விரும்புகின்றனர்.

தரமான கல்வியின் அடையாளமாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ள சி.பி.எஸ்.இ.யின் நிர்வாகத்திலேயே ஊழலும் முறைகேடுகளும் மலிந்திருப்பது, சமீபத்தில் வெளியான 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் அம்பலமான ஊழல் முறைகேடுகளின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த ஆண்டு 12-ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்துவதில், கணினித் திரை வழி மதிப்பீட்டு முறை (On-Screen Marking – OSM) என்ற புதிய முறையை சி.பி.எஸ்.இ. கொண்டு வந்தது. இந்த முறையில் மாணவர்களின் வினாத்தாள்களை ஸ்கேன் செய்து மின்னணு வடிவத்தில் மாற்றி, திருத்துவதற்காக ஆசிரியர்களுக்குத் வழங்குவதன் மூலம் மதிப்பீட்டில் (evaluation) “வெளிப்படைத்தன்மையை” அதிகரிக்க முடியும், விடைத்தாள்களை வேகமாகத் திருத்த முடியும், “மனிதப் பிழைகளைக் குறைக்க முடியும்” என்றெல்லாம் சி.பி.எஸ்.இ. கதையளந்தது. (OSM முறைக்கு மாறுவதன் மூலம் ஆசிரியர்களுக்கான பயணச் செலவு மற்றும் ஊதியச் செலவைக் குறைப்பது (cost-cutting) அரசின் முக்கிய நோக்கமாகும். மேலும், எதிர்காலத்தில் ஆசிரியர்களே இன்றி, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியே மாணவர்களின் விடைத்தாளைத் திருத்தும் முறைக்கு மாறுவதும் முக்கியமான நோக்கமாகும். இதை இக்கட்டுரையின் பாகம் 2-இல் விரிவாக விளக்குவோம்)

வெளிப்படைத் தன்மையையும் சிறப்பான சேவையையும் வழங்குவதாகக் கொண்டுவரப்பட்ட OSM முறை அதற்கு நேரெதிரான விளைவுகளையே தந்தது. தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, பல மாணவர்கள் தாங்கள் எதிர்பார்த்தபடி மதிப்பெண்கள் கிடைக்கவில்லை என்பதால் அதிர்ச்சியுற்றனர். முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் தேர்ச்சி விகிதமே 3% வீழ்ச்சியுற்றது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால், சந்தேகமடைந்த மாணவர்களும் பெற்றோர்களும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களுக்கு அவர்களது விடைத்தாளின் மின்னணுப் பிரதி வழங்கப்பட்டது. ஏற்கனவே அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த அவர்கள் விடைத்தாள்களைப் பார்த்ததும் மேலும் அதிர்ச்சிக்குள்ளாகிப்போயினர்.

அவர்களுக்கு வழங்கப்பட்ட மின்னணு பிரதியானது சரியாக ஸ்கேன் செய்யப்படாமல் மங்கலாக இருந்ததாகவும்; சில பக்கங்களைக் காணவில்லை என்றும்; மேலும் சில பக்கங்கள் திருத்தப்படாமல் இருந்ததாகவும் மாணவர்கள் ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டினர். குறிப்பாக, மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்த வேதாந்த் என்ற மாணவர், தனக்குக் கொடுக்கப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள் தன்னுடையதே அல்ல என்று எக்ஸ் வலைத்தளத்தில் ஆதாரத்துடன் பதிவிட்டார். அவரைத் தொடர்ந்து பல மாணவர்களும் “இது தம்முடைய விடைத்தாள் இல்லை” என்பதை ஆதரத்துடன் அம்பலப்படுத்தினர்.

நாடு முழுவதும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் இது பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. “தரமான கல்வி” என்று பீற்றிக் கொள்ளப்பட்ட சி.பி.எஸ்.இ.யின் யோக்கியதை அம்பலமாகியது. எழுந்த சர்ச்சைக்கு விளக்கமளித்த சி.பி.எஸ்.இ., திரை வழி மதிப்பீட்டு (OSM) முறையால் எந்தப் பிழையும் ஏற்படவில்லை என்றும், இந்த முறை மதிப்பீட்டின் வெளிப்படைத்தன்மையையும் துல்லியத்தையும் மேம்படுத்தவே அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தது. மதிப்பெண்கள் குறித்து அதிருப்தி உள்ள மாணவர்கள், அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீட்டு நடைமுறையைப் பயன்படுத்துமாறும் அது அறிவுறுத்தியது.

சி.பி.எஸ்.இ.யின் விளக்கத்திற்குப் பிறகு, அது சற்றும் எதிர்பாராத வகையில், விடைத்தாள் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீட்டுக்கான விண்ணப்பங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குவிந்தன. ஆரம்பத்தில் மறுமதிப்பீடு செய்வதற்கு 6,000 ரூபாய் முதல் 13,000 ரூபாய் வரை கட்டணமாக சி.பி.எஸ்.இ. வசூலித்து வந்தது. இவ்வளவு அதிகக் கட்டணம் வசூலித்தால் வசதியில்லாத மாணவர்களால் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முடியாது என்ற குற்றச்சாட்டு எழுந்த பின்னர், கட்டணம் 1,200 முதல் 4,500 ரூபாயாகக் குறைக்கப்பட்டது. (முன்பே குறைவான கட்டணத்தை நிர்ணயிக்காமல் பின்னர் குறைத்தது ஏன்? ஏனென்றால், மாணவர்கள், பெற்றோர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுரண்டுவது என்பதுதான் சி.பி.எஸ்.இ.யின் உண்மை முகம். எதிர்ப்பு வந்த பின்னர் தன் முகம் அம்பலமாகிவிடுமென்று பயந்து கட்டணத்தைக் குறைத்துள்ளது என்பது தனிக்கதை)

வெளிப்படைத்தன்மையையும் துல்லியத்தையும் கொண்டுவரப்போவதாக பீற்றிக் கொண்டு அமலாக்கப்பட்ட திரைவழி மதிப்பீட்டு முறை முறைகேடுகளையும் குளறுபடிகளையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்கள் பிராந்திய கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் போன்ற ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் மதிப்பீட்டாளர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. ஆசிரியர்கள், மதிப்பீட்டு வழிகாட்டுதல்களின் அடிப்படையில் திருத்திய பிறகு அவை மீண்டும் சேகரிக்கப்படுகின்றன. ஆனால் திரை வழி மதிப்பீட்டு (OSM) முறையில், விடைத்தாள்கள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்டு மென்பொருளில் பதிவேற்றப்படுகின்றன; பின்னர் ஆசிரியர்கள் திரை வழியாக மதிப்பீடு செய்கின்றனர்.

கோஎம்ட் எடுடெக் என்ற இந்த நிறுவனம் ஏற்கனவே ஊழல் முறைகேடுகளுகளில் ஈடுபட்ட, இழிபுகழ் பெற்ற நிறுவனமாகும். முன்பு குளோப்அரீனா டெக்னாலஜிக்கல் சொல்யூஷன்ஸ் (Globarena Technological Solutions) என்ற பெயரில் இயங்கிய இந்நிறுவனம் 2019-ஆம் ஆண்டு தெலுங்கான இடைநிலைக் கல்விவாரியத் தேர்வுகளை நடத்தியது. அதில் அந்நிறுவனம் செய்த முறைகேடுகள், குளறுபடிகளின் விளைவாக, பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதால், அந்நிறுவனம் கருப்புப் பட்டியலில் (blacklist) வைக்கப்பட்டிருந்தது. இதுதான் பின்னர் பெயரை கோஎம்ட் எடுடெக் என்று மாற்றிக் கொண்டு டெண்டரில் பங்கேற்றுள்ளது.

இந்த கோஎம்ட் எடுடெக் நிறுவனத்திற்குதான் OSM ஒப்பந்தம் செல்ல வேண்டும் என்பதற்காகவே, சி.பி.எஸ்.இ. தனது விதிமுறைகள் அனைத்தையும் தளர்த்தியுள்ளது. OSM ஒப்பந்தத்திற்காக சி.பி.எஸ்.இ. மூன்று முறை டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது. இறுதி டெண்டரில் பல நிபந்தனைகளைத் தளர்த்தியுள்ளது. குறிப்பாக, முன்பு கருப்புப் பட்டியலில் இடம்பெற்ற நிறுவனங்களும் டெண்டரில் பங்கேற்க அனுமதிக்கும் வகையில் விதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதாவது, கருப்புப் பட்டியலில் இருக்கும் ஒரு நிறுவனம் இரண்டு ஆண்டுகள் எந்த ஏலத்திலும் பங்கேற்கக் கூடாது என்பது விதியாகும். இதை ‘கூல்-ஆஃப்’ (cool-off) காலம் என்கிறார்கள். ஆனால், கோஎம்ட் எடுடெக் நிறுவனம் இந்த ஏலத்தில் பங்கேற்பதற்காகவே, இந்த கூல் ஆஃப் காலத்தை இரண்டு ஆண்டுகளிலிருந்து ஓராண்டாக சி.பி.எஸ்.இ. குறைத்துள்ளது!

அதேபோல், மென்பொருள் நிறுவனங்களின் செயல்திறனை மதிப்பிடும் சி.எம்.எம்.ஐ. (CMMI) தரச்சான்று, நிலை–5 இலிருந்து நிலை–3 ஆகக் குறைத்துள்ளது. அதேபோல், ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பாதுகாப்புச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில தொழில்நுட்பத் தகுதிகளையும் தளர்த்தியுள்ளது. விடைத்தாள்களை ஸ்கேன் செய்ய வேண்டிய குறைந்தபட்ச தரத்தையும் 300 DPI (Dots per Inch) இலிருந்து 200 DPI ஆகக் குறைத்துள்ளது. ஒப்பந்த மீறலுக்கான அபராத விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட டெண்டரில் நிறுவனத்திற்குச் சொந்தமான தரவு மையம் (Data Centre) மற்றும் பேரிடர் மீட்பு மையம் (Disaster Recovery Centre) அவசியம் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இறுதி டெண்டரில் அந்த நிபந்தனையை நீக்கியுள்ளது. கோஎம்ட் நிறுவனத்தின் ஆன்மார்க் (OnMark) மென்பொருள் வெளிநாட்டில் அமைந்துள்ள அமேசான் நிறுவனத்தின் (Amazon Web Services – AWS) கிளவுட் சேவையகங்களில் இயங்கியதால், கோடிக்கணக்கான மாணவர்களின் தரவுகளை அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்களின் பிடிக்குள் சென்றுள்ளது. அவர்கள் அதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்த மாற்றங்கள் எல்லாம் கோஎம்ட் எடுடெக் நிறுவனத்திற்குதான் ஒப்பந்தம் வழங்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு சி.பி.எஸ்.இ. மேற்கொண்டுள்ளது என்பது அம்பலமாகி நாடே நாறிய நிலையில், இது குறித்து விசாரிக்க வேண்டும் என்ற அழுத்தம் நாடு முழுவதிலும் இருந்து எழுந்தது. இதனையடுத்து, ஒப்பந்தம் வழங்கப்பட்ட நடைமுறையை விசாரிக்க ஒன்றிய அரசு குழு அமைத்ததோடு, சி.பி.எஸ்.இ. தலைவர் மற்றும் செயலாளரையும் இடமாற்றம் செய்துள்ளது.

நீட், கியூட் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், ஊழல் முறைகேடுகள்; தற்போதைய சி.பி.எஸ்.இ.யின் ஊழல் முறைகேடுகள்; அதன் விளைவாக மாணவர்களும் பெற்றோர்களும் துயரத்திற்குள்ளாவது; தற்கொலை செய்து கொள்வது – என இவையெல்லாம் ஒவ்வொரு முறை செய்தியாகும்போதும் இந்தத் தேர்வு முறைகளே தவறு என்றும் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையிலான இந்த தனியார்மய நடவடிக்கைகளே தவறு என்றும் பார்க்க்கப்படுவதோ விவாதிக்கப்படுவதோ இல்லை. மாறாக, ஒருசில தனியார் நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், அவர்களுக்குச் சாதகமான அரசியல் கட்சிகள் போன்றோரால்தான் இத்தகைய ஊழல், முறைகேடுகள் நடப்பதாக சுருக்கி முன்வைக்கப்படுகிறது.

இந்த சி.பி.எஸ்.இ. விவகாரத்திலும் கூட, முறைகேட்டுப் பின்னணி கொண்ட கோஎம்ட் எடுடெக் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்காமல் டி.சி.எஸ். போன்ற ‘நல்ல’ ‘அனுபவம் வாய்ந்த’ நிறுவனங்களுக்கு வழங்குவதுதான் பிரச்சனைக்குத் தீர்வு; ஊழலில் தொடர்புடைய அதிகாரிகளை தண்டிப்பதுதான் தீர்வு – என்று சுருக்கி முன்வைக்கப்படுகிறது.

மாறாக, கல்வி தனியார்மயமாவது ஊழல் முறைகேடுகளும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாதவையாகும். கல்வி தனியார்மயமாக ஆக அந்தச் சந்தையைக் கைப்பற்றுவதற்கான போட்டா போட்டியில் முதலாளிகள் அரசு எந்திரத்தை இடையறாது ஊழல்படுத்துவது தவிர்க்கவே முடியாததாகும். உதாரணமாக, நீட், கியூட், ஜே.இ.இ. போன்ற போட்டித் தேர்வுகளுக்கான கோச்சிங் சந்தையைக் கைப்பற்றுவதற்கான போட்டா போட்டியில்தான் கோச்சிங் நிறுவனங்களை ஆகாஷ், ஆலேன் போன்ற நிறுவனங்கள் அரசு எந்திரத்தை ஊழல்மயமாக்கி வினாத்தாளைப் பெறுகிறார்கள்; ஆள்மாறாட்டம் செய்கிறார்கள்; தங்கள் நிறுவனங்களில் பணிபுரிபவர்களையே தேர்வு கண்காணிப்பாளராக (invigilators) அனுப்ப வைத்து முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். (இந்தத் தேர்வுக்கான டெண்டர்களை எல்லாம் ‘திறமையான’ ‘அனுபவம் வாய்ந்த’ ‘நல்ல நிறுவனம்’ என்று பீற்றிக் கொள்ளப்படும் டி.சி.எஸ்.தான் (TCS- Tata Consulting Agency) பெற்றது என்பதை நினைவில் கொள்க)

அதேபோலத்தான், OSM ஒப்பந்தத்தைத் தான் பெறுவதற்காக கோஎம்ட் எடுடெக் நிறுவனமும் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் ஊழல்படுத்தியே மேற்கூறிய விதிமுறை தளர்வுகளை மேற்கொண்டுள்ளது. எனவே, கல்வி தனியார்மயம் எந்தளவு நடக்கிறதோ அந்தளவு கல்வியிலும் போட்டித் தேர்வுகளிலும் ஊழல் முறைகேடுகள் பெருகுவது தவிர்க்கவியலாததாகும்! எரிவதைப் பிடுங்காமல் கொதிப்பதை அடக்க முடியாது!!

000

குறிப்பு:

சி.பி.எஸ்.இ.யின் ஊழல் முறைகேடுகளை மட்டுமே இக்கட்டுரையில் விளக்கியுள்ளோம். விடைத்தாள்களைக் கையில் திருத்தும் முறையில் இருந்து ஏன் டிஜிட்டல் முறைக்கு மாற்ற வேண்டும்? OSM என்ற முறையையே முதலில் ஏன் அறிமுகப்படுத்த வேண்டும்? – ஆகிய கேள்விகளை யாரும் எழுப்புவதோ விவாதிப்பதோ இல்லை. அதுதான் நாம் பதில் தேட வேண்டிய முக்கியமான கேள்வியாகும்.

OSM முறை என்பது தனியான ஒரு விசயமல்ல. மொத்தக் கல்வியமைப்பையும் 1) டிஜிட்டல் முறையில் மாற்றியமைக்க வேண்டும் 2) ஒவ்வொரு மாணவருக்கும் தனித்துவமான முறையிலான கல்வி மற்றும் மதிப்பீட்டு முறையில் (Personalised Learning and Assessment) மாற்றியமைக்க வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கை 2020 வலியுறுத்துகிறது. இத்தகைய மாற்றத்தின் அங்கமாகவே ஒரு அங்கமாகவே OSM முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கை 2020 ஏன் இவ்வாறு வலியுறுத்துகிறது? இதன் பின்னால் ஒளிந்துள்ள மர்மங்கள் என்ன? வர்க்க நலன் என்ன? – என்பதை அடுத்த பாகத்தில் விரிவாக விளக்குகிறோம்.

000

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன