இந்திய இராணுவம் யாருக்கானது?
மக்களைக் கொல்லும் இராணுவத்தினருக்கு
தண்டனை கிடையாதா?

செப்டம்பர் 7, 2026
ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம், இராணுவத்திற்கு அளவற்ற அதிகாரங்களை வழங்குகிறது. இராணுவத்தினர் பொதுமக்களைக் கொன்றாலும் ஆயுதப்படைத் தீர்ப்பாயம் இந்தச் சட்டத்தை அரணாகப் பயன்படுத்தி இராணுவத்தினரைப் பாதுகாக்கிறது.

இந்தியாவில் இராணுவத்தினரை விமர்சிப்பது கிட்டத்தட்டத் தேசத்தையே விமர்சிப்பதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. சினிமா முதல் சமூக வலைதளம் வரை, தொலைக்காட்சி விவாதம் முதல் பட்டிமன்றம் வரை, அரசியல்வாதி முதல் சினிமா பிரபலம் வரை — அனைவரும் சேர்ந்து ஒரு புனிதப் பிம்பத்தை கட்டமைத்து வருகின்றனர். அதாவது “இராணுவத்தினர் என்றால் கேள்விக்கு அப்பாற்பட்டவர்கள் என்று.”

எல்லையில் நிற்பவர்களை மதிப்பதில் பிரச்சினை இல்லை. அவர்களின் தியாகத்தைப் போற்றுவதிலும் பிரச்சினை இல்லை. பிரச்சினை எப்போது வருகிறது என்றால், சீருடை அணிந்தவுடன் ஒருவருக்கு சட்டத்திலிருந்து விலக்கு கிடைத்துவிட்டது போல நடக்கத் தொடங்கும்போதுதான். சீருடையுடன் துப்பாக்கி வைத்திருப்பதால் ஒருவர் சட்டத்திற்கு மேலானவராகிவிடுவாரா என்ன?

ஒரு போலீஸ்காரர் குடிமகனைச் சட்டவிரோதமாகக் கொன்றால் விசாரணை கேட்கிறோம். ஒரு அரசியல்வாதி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கும்படி கேட்கிறோம். ஒரு அதிகாரி மனித உரிமையை மீறினால் நீதிமன்றத்தை நாடுகிறோம். ஆனால் ஒரு இராணுவ அதிகாரி விசாரணை என்ற பெயரில் ஒரு குடிமகனைச் சட்டவிரோதமாகக் கொன்றால் மட்டும் நமது ஜனநாயக மூளை “தேசபக்தி” என்ற பெயரில் switch off ஆகிவிடுகிறது.

அவர்கள் நம்மைக் காப்பவர்கள்!” என்று உடனே ஒரு வசனம் வருகிறது. சரி. அவர்கள் நாட்டைக் காப்பவர்கள் என்றால், நாட்டின் குடிமக்களை அவர்களிடமிருந்து காப்பது யார்? இந்தக் கேள்வி கேட்கப்பட்டவுடன் கேள்வி கேட்டவரே தேசவிரோதியாக்கப்படுகிறார். என்ன ஒரு வசதியான ஜனநாயகம்!

இந்த வசதியான ஜனநாயத்திற்கு பெரும்பாலும் பலியவது ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம், மணிப்பூர் போன்ற பகுதிகளில் வாழும் சாதாரண மக்கள்தான். அங்கே ஒரு குடிமகன் கொல்லப்பட்டால், அவர் முதலில் மனிதர் என்று பார்க்கப்படுவதில்லை. “அவர் யார்? பின்னணி என்ன? தீவிரவாதத் தொடர்பு இருந்ததா?” என்ற விசாரணை உடனே தொடங்கிவிடுகிறது.

ஒருபுறம் ஒரு இராணுவ வீரர் இறந்தால் தியாகியாகச் சித்தரிக்கப்படுகிறார்.  மறுபுறம் ஒரு குடிமகன் இராணுவத நடவடிக்கையில் இறந்தால் அவர் சந்தேகத்துகுட்பட்ட நபராக பார்க்கப்படுகிறார். இந்த இரண்டு உயிர்களையும் மதிப்பிடுவதில்  “தேசபக்தி” என்ற புனைவான எடைக்கல் குடிமகனுக்கு எதிராக ஏன் பயன்படுத்துகிறது?

சட்டம் அனைவருக்கும் சமம் என்று அரசியலமைப்புச் சொல்கிறது. ஆனால் அதிகாரம் கொண்டவர்களைச் சந்திக்கும் போது அந்தச் சட்டம் மிகவும் மரியாதையாகத் தொப்பியைக் கழற்றி விடுகிறது. குறிப்பாக, இராணுவ அதிகாரத்துக்கு முன்பாக அது இன்னும் கொஞ்சம் தாழ்ந்து வணங்குகிறது.

இராணுவத்தினரை மதிப்பது ஜனநாயகக் கடமை அல்ல; அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்களாக இருப்பதை உறுதி செய்வதே ஜனநாயகக் கடமை. இராணுவ வீரர்களின் சேவையைப் பாராட்டிப் பதக்கங்கள் கொடுக்கலாம். ஆனால் அவர்கள் மீது குற்றச்சாட்டு இருந்தால் விசாரணை நடத்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கொடுக்க வேண்டும். தியாகத்தைப் போற்றுவதற்கும் இராணுவ முகமூடியைக் கொண்டு செய்த குற்றத்திற்கான தண்டனையிலிருந்து தப்பிப்பதைப் போற்றுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

சமீபத்தில் ஆயுதப்படை தீர்ப்பாயம் (Armed Forces Tribunal), பூஞ்ச் காவல் மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரிகேடியர் பத்மநாப ஆச்சார்யாவுக்கு இராணுவம் வழங்கிய இரண்டு ஆண்டுகால “கடுமையான அதிருப்தி” (Severe Displeasure) என்ற கண்டனத் தண்டனையை அவரது பணிப் பதிவேட்டில் இருந்து நீக்க தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக, இராணுவத்தின் மீதான புனிதச் சுவரில் ஓட்டை விழுந்துள்ளது.

டிசம்பர் 22, 2023 அன்று டோபா பீரில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட சஃபீர், ஷபீர் மற்றும் ஷௌகத் ஆகிய மூவரின் உருவப்படங்கள்.

டிசம்பர் 21, 2023 அன்று பூஞ்ச் மாவட்டத்தின் தேரா கி காலி (DKG) பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் நான்கு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையின் போது விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட உள்ளுரைச் சேர்ந்த சஃபீர், ஷபீர் மற்றும் ஷௌகத் ஆகிய மூவரையும் இராணுவக் காவலில் வைத்து அடித்தே கொன்றுள்ளனர்.

இராணுவச் சட்டத்தின்படி, பணியில் உள்ள ஒரு இராணுவ வீரர் அல்லது அதிகாரி குடிமக்களுக்கு எதிராகக் கொலை அல்லது சித்திரவதைப் போன்ற குற்றங்களில் ஈடுபட்டால், அவர் மீது இராணுவச் சட்டம், 1950 (Army Act) மற்றும் கோர்ட் மார்ஷியல் (Court Martial) எனப்படும் இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தப்படும். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பின்வரும் தண்டனைகள் வழங்கப்படும்:

  1. பணி நீக்கம்: இராணுவப் பணியில் இருந்து உடனடியாக நீக்கபடுவது.
  2. சிறைத்தண்டனை: குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து பல ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை இராணுவ அல்லது சாதாரண சிறைகளில் அனுபவிக்க நேரிடும்.
  3. நிர்வாகத் தண்டனை: குற்றத்தின் தன்மை அதிகாரப்பூர்வக் கடமையின் போது ஏற்பட்ட சிறிய தவறாகக் கருதப்பட்டால், கடுமையான அதிருப்தி (Severe Displeasure) போன்ற பணிப் பதிவேடு சார்ந்த தண்டனைகள் வழங்கப்படும்.

சீனி சர்க்கரை சித்தப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா என்ற பழமொழிக்கு ஏற்ப தண்டனைகள் ஏட்டலளவில் தான் உள்ளது. அதாவது மூவரையும் அடித்தே கொன்றார்கள் என்பதை போதுமான ஆதாரங்களுடன் நிரூபித்த பிறகும், கோர்ட் மார்ஷியல் சிறிய தவறாகக் கருதியதால் பணிப் பதிவேடு சார்ந்த தண்டனையை மட்டும் இரண்டாண்டுகளுக்கு வழங்கியது.

ஆயுதப்படை தீர்ப்பாயத்தில், இந்த தண்டனையை எதிர்த்து இராணுவக் காவலில் மூவரையும் அடித்தே கொன்ற பிரிகேடியர் பத்மநாப ஆச்சார்யா மேல் முறையீடு செய்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயம் ஆச்சார்யாவுக்கு (குற்றவாளி) இரண்டாண்டு தண்டனைக் காலம் முடிவுற்ற நிலையில், இராணுவத்தினரின் பணிச்சுமைகளின் போது கூட குடிமக்களுக்கு எதிராக அளவுக்கு அதிகமான பலத்தைப் பிரயோகிக்கக் கூடாது என்றும், இராணுவ ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பது அவசியம் என்றும் புத்திமதி கூறி இரண்டு ஆண்டுகால “கடுமையான அதிருப்தி” (Severe Displeasure) என்ற தண்டனையை அவரது பணிப் பதிவேட்டில் இருந்து நீக்கியுள்ளது.

அதேபோல் மூவரையும் சித்திரவதை செய்து கொலை செய்யப்பதது உயர் ஜெனரல்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கை என்பதை கோர்ட் ஆஃப் இன்குயரி மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், பிரதான குற்றவாளிகளான உயர் ஜெனரல்கள் எந்தவொரு தண்டனையுமின்றி தப்பவிடப்பட்டுள்ளனர்.

கோர்ட் மார்ஷியல் மற்றும் ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் செயல்பாடுகள் கொலை குற்றம் நிருபிக்கப்பட்ட பிரிகேடியர் எதிர்காலத்தில் பதவி உயர்வு பெறுவதற்கு வழிவகுப்பதோடு, உயிரிழந்த அப்பாவிகளின் மரணங்களுக்கு அவர் பொறுப்பேற்றவேண்டிய அவசியம் இல்லை என்பதையுமே காட்டுகிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இராணுவ வீரர்கள் ஓய்வுக் காலத்திலும் மக்களின் வரிப்பணத்தில் வயிரை வளர்ப்பதற்கு ஆயுதப்படை தீர்ப்பாயம் ஏற்பாடு செய்துள்ளது. இதன்மூலம் இரண்டு உயிர்களுக்கும் (குடிமக்கள், இராணுவ வீரர்கள்) இடையில் நாட்டின் “தேசபக்தி” ஏன்ற புனைவான எடைக்கல்லைப் பயன்படுத்துவது அம்பலமாகி இருக்கிறது.

இந்த வித்தியாசம் இத்துடன் நின்றுவிடவில்லை, ஒரு இராணுவ வீரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவில் நீதிமன்றத்தில் (District or Session Courts) கொலைக் குற்றத்திற்காக (முன்பு IPC 302, தற்போது BNS 103) விசாரணை நடத்த முடியும். ஆனால், ஜம்மு காஷ்மீர் போன்ற தீவிரவாத பாதிப்புள்ள பகுதிகளில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் (Armed Forces (Special Powers) Act, 1958) அமலில் உள்ளதால், அங்குள்ள இராணுவத்தினர் மீது சிவில் நீதிமன்றத்தில் கிரிமினல் நடவடிக்கை எடுக்க ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்அனுமதி (Sanction) பெறவேண்டும். இந்த அனுமதி கிடைப்பதில்லை என்பதால், பெரும்பாலான வழக்குகள் இராணுவத்தின் உள்விசாரணையானக் கோர்ட் மார்ஷியல் மூலமே கையாளப்படுகின்றன.

மேலும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) அமலில் இருக்கும் பகுதிகளில், தேசப்பாதுகாப்பு என்ற பெயரில் ஆயுதப்படைகளுக்கு வழங்கப்படும் சிறப்பு அதிகாரங்கள் அப்பகுதி மக்களின் ஜனநாயக மற்றும் மனித உரிமைகளை மீறுவதாகவே இருந்து வருகிறது. குறிப்பாக அஸ்ஸாம், மணிப்பூர் மக்களின் துன்ப துயரங்கள் இன்னும் ஆறாத காயங்களாக இருக்கின்றன.

ஓய்னம் – Operation Bluebird, 1987: நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (National Socialist Council of Nagaland) ஆயுதக்குழுவினரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை என்ற பெயரில், மணிப்பூரின் ஓய்னம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் (Assam Rifles) நடத்திய நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான கிராம மக்களை கைது செய்து தடுப்புக்காவல் வைத்து சித்திரவதை செய்ததை Amnesty International பதிவு செய்தது. ஆயுதக்குழுவினரை விட்டுவிட்டு அப்பாவிப் பொதுமக்களை வேட்டையாடி உள்ளது.

டாங்கிரி/டாங்கரி கொலைகள், அஸ்ஸாம் – 1994: அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி (United Liberation Front of Asom) உடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து அப்பாவிப் பொதுமக்கள் இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் கொல்லப்பட்டனர்.

அஸ்ஸாம் – 1990-களின்என்கவுன்டர்காலம்: தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்பட்ட நடவடிக்கைகளில், சட்டவிரோதக் கைது, சித்திரவதை, காவல் மரணம் போன்றவையும், என்கவுன்டர் என்ற பெயரில் படுகொலையும் செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மனித உரிமை அறிக்கை பதிவு செய்துள்ளது.

ககோபதார், அஸ்ஸாம் – 2006: ஒருவர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காவலில் இறந்ததைத் தொடர்ந்து கிராம மக்களுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு எட்டு அப்பாவிப் பொதுமக்களும், ஒரு பாதுகாப்புப் படை வீரரும் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் “சந்தேக நபரை கைது செய்வது” என்ற பெயரில் ஒரு கிராமத்தையே வன்முறைக்குள் தள்ள முடியும் என்பதற்கான உதாரணமாக மாறியது.

மாலோம் படுகொலை, மணிப்பூர் – 2000: இம்பால் அருகே மாலோம் பேருந்து நிறுத்தத்தில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் (Assam Rifles) துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பத்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினரின் வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடந்த பின்னணியில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகக் கூறப்பட்டது. ஆனால் அந்தத் தாக்குதலுக்கு சம்பந்தமில்லாத அப்பாவிப் பொதுமக்கள் ஏன் பலியாக வேண்டும் என்ற கேள்வியே மணிப்பூரில் மிகப்பெரிய எதிர்ப்பாக வெடித்தது. இதன் பின்னரே இரோம் ஷர்மிளாவின் நீண்டகால AFSPA எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியது.

தாங்ஜம் மனோரமா – 2004: இரவு நேரத்தில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் (Assam Rifles) கைது செய்த தாங்ஜம் மனோரமாவின் உடல் சில மணி நேரங்களுக்குப் பிறகு துப்பாக்கிக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. அவர் தப்பிச் செல்ல முயன்றபோது சுடப்பட்டதாக அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் (Assam Rifles) கூறியது. இந்தச் சம்பவம் மணிப்பூரில் AFSPA எதிர்ப்பை மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாற்றியது.

இந்திய இராணுவம், “ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம்“ (AFSPA) என்ற பெயரில் அப்பாவிப் பொதுமக்களை விசாரணை, கைது, தடுப்புக் காவல், சித்திரவதை எனத் தொடங்கி அடித்துக் கொல்வது வரை அளவற்ற அதிகாரத்தை தன் கையில் வைத்துள்ளது என்பதற்கான சில உதாரணங்கள் மட்டுமே.

நாட்டின் இயற்கை வளங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம் ஆகிய அனைத்தையும் வளர்ச்சி என்ற பெயரில் சுரண்டிக் கொழுக்கும் கார்ப்பரேட்டுகளையும், தரகு முதலாளிகளையும் பாதுகாக்கும் இந்திய இராணுவம், வாழ வழியின்றித் தவிக்கும் குடிமக்கள் சுரண்டலுக்கு எதிராகவும், இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதற்கு எதிராகவும் போராடினால் ஈவு இறக்கமின்றிக் கொன்றொழிக்கிறது. தண்டனையில் இருந்தும் தப்பித்துக்கொள்கிறது. இப்பொழுது சொல்லுங்கள் இந்தியாவும், இந்திய இராணுவமும் யாருக்கானது?

  • மகேஷ்

செய்தி ஆதாரம்:

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன