கடன் முதலாளிகளுக்கு; சுமை மக்களுக்கு :
கார்ப்பரேட் இந்தியாவின் ‘வளர்ச்சி’ ரகசியம்!
கார்ப்பரேட் இந்தியாவில், “வளர்ச்சி” என்பது முதலாளித்துவச் சுரண்டலை மறைக்கும் அரசியல் மாயச்சொல்லாக மாறியுள்ளது. பெரும்பான்மை மக்களின் உழைப்பையும் வாழ்வாதாரத்தையும் வளங்களையும் கசக்கிப் பிழிந்து, உருவாக்கப்படும் செல்வத்தைப் பெரும் முதலாளிகளிடம் நிபந்தனையின்றி குவிப்பதே இந்த “வளர்ச்சியின்” உண்மையான பொருளாதாரமும் அரசியலும் ஆகும்.
இதன் அப்பட்டமான வெளிப்பாடாக, சோற்றுக்கே வழியில்லாத ஏழை-எளிய உழைக்கும் மக்கள் வாங்கிய கடனைச் சொச்சம் இல்லாமல் திருப்பிச் செலுத்துவதைக் கட்டாயப்படுத்தும் சட்டங்கள் பாய்கின்றன. ஆனால், முதலாளி திவால் நோட்டீஸ் கொடுத்துவிட்டால், அவன் விழுங்கிய பல ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சொற்பத் தொகையை மட்டும் செலுத்திவிட்டு, வங்கிகளுக்கும் மக்களின் பணத்துக்கும் பட்டை நாமம் போட்டு, எவ்விதத் தண்டனையுமின்றி தப்பித்துச் செல்லும் வகையில் அதே சட்டங்களும் அரசும் முதலாளி வர்க்கத்திற்கு சலுகைகளை வாரி வழங்குகின்றன.
இந்த அநியாயமான வர்க்கச் சுரண்டலையே “தேச வளர்ச்சிக்கான அடிப்படைச் சூத்திரம்” என்று நிர்மலா சீத்தாரமன்–சிதம்பரம் வகையறாக்களும், மாண்டேக் சிங் அலுவாலியா, ரகுராம் ராஜன், சுர்ஜித் பல்லா, சக்திகாந்த தாஸ், குருமூர்த்தி போன்ற பொருளாதாரப் புலிகளும் தங்கள் கோட்பாடுகளால் நியாயப்படுத்துகின்றனர். பெரும்பான்மை மக்களின் உழைப்பைச் சுரண்டி, மூலதனக் குவிப்பைத் தீவிரப்படுத்துவதே நாட்டின் முன்னேற்றம் என்ற முதலாளித்துவப் பொய்யையே இவர்கள் பொருளாதார அறிவுரையாகப் பிரச்சாரம் செய்கின்றனர்.
வங்கிகளையும் முதலாளிகளையும் காப்பாற்றும் இந்தக் கொள்ளைச் சலுகைக்கு நாகரிகமாகச் சூட்டப்பட்ட பெயர்தான் “முடிவெட்டுதல்” [Hair Cut]. அதாவது, முதலாளிகள் வாங்கிய கடனில் எவ்வளவு தொகையைத் தள்ளுபடி செய்ய வங்கிகள் சம்மதிக்கின்றனவோ, அந்தத் தொகையை வெட்டிவிட்டு மீதமுள்ள கடனை மட்டும் முதலாளி திருப்பிச் செலுத்தினால் போதுமானது. 2019-இல் திவால் அறிவித்த ருச்சிசோயா நிறுவனம் பெற்றிருந்த மொத்தக் கடனில் வெறும் 57 சதவிகிதத்தை மட்டும் திருப்பிச் செலுத்த தேசிய கம்பனிச் சட்டத் தீர்ப்பாயம் [NCLT] அனுமதித்தது. இதனால் கடன் கொடுத்த வங்கிகளும் நிதிநிறுவனங்களும் மீதமுள்ள 43 சதவிகிதத் தொகையை “வெட்டிக்” கொண்டன [Hair Cut]. உண்மையில் வெட்டப்பட்டது முதலாளியின் கடனல்ல; கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் சேமிப்பும் உழைப்பால் உருவான பொதுச் செல்வமும்தான். முதலாளியின் கடன் தள்ளுபடி செய்யப்படுவது, மக்களின் பணம் முதலாளி வர்க்கத்திற்கு அரசின் துணையுடன் தானமாக வாரி வழங்கப்படுவதையே குறிக்கிறது.
சமீபத்தில் ஜி குழுமத்தின் [சுபாஷ் சந்திரா] திவால் வழக்கில் NCLT வழங்கிய தீர்ப்பு, இந்த “முடிவெட்டுதல்” என்ற கொள்ளைச் சலுகையையும் விஞ்சி, வங்கிகளுக்கு மொட்டையே [99.97%] அடித்திருக்கிறது. ரூ.22,000.6 கோடி கடனுக்கு வெறும் ரூ.6.25 கோடி தனிப்பட்ட பிணைத் தொகையைச் செலுத்தினால் போதும் என்று NCLT தீர்ப்பளித்தது. கடுமையான எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து, இரு தினங்களுக்கு முன்பு NCLT-யின் ஐந்து உறுப்பினர் அமர்வு இத்தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த ஒரு வழக்கை மட்டும் தனித்த சம்பவமாகப் பார்க்காமல், இதன் பின்னால் இயங்கும் வர்க்க அரசியலைப் புரிந்துகொள்ள, ஹிந்தி [வடக்கு] ஆளும் வர்க்கம் கட்டமைத்து வரும் “வளர்ச்சிக் கதையின்” அரசியல்-பொருளாதாரப் பின்புலத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
2005 முதல் 2013 வரையிலான காலகட்டத்தை இந்தியப் பெருமுதலாளிகளின் பொற்காலம் என்றே கூறலாம். அமெரிக்க வங்கிகளின் வட்டி வீழ்ச்சி, உள்நாட்டுச் சந்தைகளில் அந்நிய முதலீடுகளுக்குத் திறந்துவிடப்பட்ட கதவுகள், பெருமளவில் குவிந்த அந்நியச் செலாவணி, உள்நாட்டு வங்கிகளின் குறைந்த வட்டி என மூலதனக் குவிப்புக்கு சாதகமான சூழல் உருவாக்கப்பட்டது. இதனுடன் சாலை, விமானப் போக்குவரத்து, மின்சார உற்பத்தி உள்ளிட்ட உள்கட்டமைப்புத் துறைகளில் தனியார் மூலதனத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட கொள்கைகள் இணைந்தன. இதன் விளைவாக, பெரும் தரகு முதலாளிகள் அரசின் கொள்கை ஆதரவுடன் புதிய தொழில்களில் கால்பதித்து தங்கள் தொழில் சாம்ராஜ்யங்களை விரிவுபடுத்துவதும், புதிய தரகு முதலாளிகள் உருவாகி வலுப்பெறுவதும் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் நடைபெற்றது.
அந்த வகையில், தொலைக்காட்சி ஊடகத்துறையில் கொடிகட்டிப் பறந்த ஜீ தொலைக்காட்சியின் நிறுவனர் சுபாஷ் சந்திராவும், அக்காலத்திய முதலாளித்துவ வளர்ச்சிச் சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு தனது தொழில் சாம்ராஜ்யத்தைப் பல்வேறு துறைகளில் விரிவுபடுத்தினார். 2010 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் கட்டுமானம், சாலை அமைப்பு, நகராட்சிகளின் கழிவு மேலாண்மை, மின்சார விநியோகம், சூரிய ஒளி மூலம் மின்சார உற்பத்தி என ஒன்றன்பின் ஒன்றாகப் பல துறைகளில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தினார். இதற்காக ஈஸ்ஸெல் குழுமத்தின் கீழ் ஏராளமான துணை நிறுவனங்களை உருவாக்கி, வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வழங்கிய சுமார் ரூ.45,000 கோடி கடனைத் திரட்டி, கடன் மூலதனத்தைச் சார்ந்த பிரம்மாண்டமான தொழில் சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பினார்.
பணப்பரிவர்த்தனை முறைகேடுகளும், அதனைத் தொடர்ந்து ஜீ நிறுவனப் பங்குகளின் வீழ்ச்சியும் ஏற்பட்ட நிலையில், புதிதாக விரிவுபடுத்தப்பட்ட தொழில்களுக்காகப் பெறப்பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நெருக்கடி உருவானது. இதன் விளைவாக, 2019 முதல் சுபாஷ் சந்திரா கட்டியெழுப்பிய கடன் மூலதனச் சாம்ராஜ்யம் படிப்படியாகச் சரியத் தொடங்கியது. இழப்புகளையும் கடன் சுமையையும் சமாளிப்பதற்காக ஜீ தொலைக்காட்சி, டிஷ் தொலைக்காட்சி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளையும் பிற சொத்துகளையும் விற்று சுமார் ரூ.23,000 கோடி கடனைத் திருப்பிச் செலுத்திய போதிலும், மீதமிருந்த சுமார் ரூ.22,000 கோடி கடனைப் பொறுத்தவரை, முதலாளியின் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் வகையில் வங்கிகளின் மீது சுமத்தப்படும் இழப்புதான் இன்றைய வழக்கின் மையமாகியுள்ளது.
திவால் அறிவித்த முதலாளிகளின் கடன் சுமையை மக்களின் தலையில் இறக்கி, அவர்களைக் காப்பாற்றுவதற்கான சட்ட ஆயுதமாகவே மோடி அரசாங்கம் திவால் சட்டம்–2016 [IBC–2016] கொண்டுவந்தது. இச்சட்டத்தின்படி, திவாலான நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய வங்கிகள், அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தக் கோரி தேசிய கம்பனிச் சட்டத் தீர்ப்பாயத்தில் [NCLT] வழக்குத் தொடரலாம். அதேபோல், அந்தக் கடனுக்கு முன்ஜாமின் [பிணை] அளித்த தனிநபர்களுக்கு எதிராகவும் தனிப்பட்ட திவால் வழக்கை [Personal Insolvency Case] தொடுக்கலாம் என IBC-யின் பிரிவு 95 கூறுகிறது. சுபாஷ் சந்திராவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள இவ்வழக்கின் சட்டப்பூர்வ அடித்தளமும் இந்தப் பிரிவுதான்.
ஈஸ்ஸெல் குழுமத்தின் துணை நிறுவனமான விவேக் இன்ஃப்ராகான், 2016-ஆம் ஆண்டு இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.170 கோடி கடன் பெற்றது. இந்தக் கடனுக்கு ஈஸ்ஸெல் குழுமத்தின் தலைவர் சுபாஷ் சந்திரா தனிப்பட்ட பிணையாளராக [Personal Guarantor] கையெழுத்திட்டிருந்தார். அதாவது, நிறுவனத்தின் பெயரில் பெறப்பட்ட கடனை விவேக் இன்ஃப்ராகான் திருப்பிச் செலுத்தத் தவறினால், அந்தக் கடனைத் தனது சொந்தப் பொறுப்பில் திருப்பிச் செலுத்துவதாக சுபாஷ் சந்திரா சட்டப்பூர்வமாக உறுதியளித்திருந்தார்.
விவேக் இன்ஃப்ராகான் திவால் அறிவித்ததைத் தொடர்ந்து, தனது கடனைத் திரும்பப் பெறுவதற்காக இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் விவேக் இன்ஃப்ராகான் மீது NCLT-யில் திவால் வழக்குத் தொடர்ந்தது. அதேநேரத்தில், அக்கடனுக்குத் தனிப்பட்ட பிணையாளராக [Personal Guarantor] கையெழுத்திட்டிருந்த சுபாஷ் சந்திராவிடமிருந்தும் கடனை வசூலிக்க, தனிப்பட்ட திவால் வழக்கு தொடரப்பட்டது. சுமார் ரூ.22,000 கோடி கடனுக்கு சுபாஷ் சந்திரா தனிப்பட்ட பிணை அளித்திருந்ததால், கடன் கொடுத்த பிற வங்கிகளும் நிதிநிறுவனங்களும் தங்களது கடன்களையும் திரும்பப் பெறுவதற்காக இவ்வழக்கில் இணைந்தன. ஆனால், சுபாஷ் சந்திரா தரப்போ, இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கடனுக்கு எதிராகத் தற்போதைய நிலையில் வெறும் ரூ.6.25 கோடியை மட்டுமே தனிப்பட்ட இழப்பீடாக வழங்க முடியும் என்று தெரிவித்தது.
இவ்வழக்கை முதலில் விசாரித்த அசோக்குமார் பரத்வாஜ் மற்றும் ரீனா சின்கா ஆகியோரைக் கொண்ட NCLT அமர்வு, இருவேறு தீர்ப்புகளை வழங்கியதால், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான தீர்வுத் திட்டத்தை [Agreement on Resolution Plan] இறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து வழக்கு மற்றொரு அமர்வுக்கு மாற்றப்பட்டது. ஆகஸ்ட் 25 அன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த நிகிலேஷ் சர்மா தலைமையிலான அமர்வு, ரூ.22,000 கோடி கடனுக்கான தனிப்பட்ட பிணைத் தொகையாக வெறும் ரூ.6.25 கோடியைச் சுபாஷ் சந்திரா செலுத்தினால் போதும் என்ற தீர்வுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடனிலிருந்து முதலாளியை விடுவிக்கும் இந்தத் தீர்ப்பு, முதலாளி வர்க்கத்தின் மீதான நிறுவன அமைப்புகளின் விசுவாசத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. ஆனால், இத்தகைய அதிர்ச்சியூட்டும் தீர்வுத் திட்டம் எவ்வாறு உருவாக்கப்பட்டது, அதை நடைமுறைப்படுத்துவதற்கு என்னென்ன வழிமுறைகளும் குறுக்கு வழிகளும் பயன்படுத்தப்பட்டன என்பதைத்தான் நாம் இப்போது புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
இந்த ரூ.22,000 கோடி கடன் சுமையின் பின்னணியையும் கவனிக்க வேண்டியுள்ளது. இதில் 19 சதவிகிதக் கடனை LIC Housing, Canara Bank, HDFC Bank, Axis Bank, RBL Bank உள்ளிட்ட வங்கிகளும், 62 சதவிகிதக் கடனை சுபாஷ் சந்திராவுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடையதாகக் கூறப்படும் ஐந்து நிதி நிறுவனங்களும்—Veena Investments, Direct Media Distribution Ventures, Lemonade Capital Advisors LLP, Corpcall Capital Advisors LLP, World Crest Advisors—வழங்கியுள்ளன. மீதமுள்ள 21 சதவிகிதக் கடன் பிற மூலங்களிலிருந்து பெறப்பட்டுள்ளது. ஆக, ரூ.22,000 கோடி கடனில் பெரும்பகுதியை வழங்கியவர்கள் சுபாஷ் சந்திராவுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடைய நிறுவனங்களாக இருப்பதால், இந்தத் தீர்வுத் திட்டத்தின் பின்னணியையே கேள்விக்குள்ளாக்குகிறது.
சுபாஷ் சந்திரா முன்வைத்த தீர்வுத் திட்டம் இறுதியாக்கப்பட வேண்டுமெனில், கடன் கொடுத்தவர்களில் பெரும்பான்மையினர் அதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். ஆனால், இந்த வாக்கெடுப்பின் பின்னணியில்தான் முதலாளித்துவக் கடன் அமைப்பின் வர்க்க முரண்பாடு அம்பலமாகிறது. கடன் கொடுத்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் சார்பில் கலந்து கொண்ட 23 பிரதிநிதிகளில் 80 சதவிகிதத்தினர், ரூ.22,000 கோடி கடனுக்கு வெறும் ரூ.6.25 கோடியைச் செலுத்தும் சுபாஷ் சந்திராவின் தீர்வுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். மீதமிருந்த 20 சதவிகித வங்கிப் பிரதிநிதிகள் மட்டுமே இத்தீர்வை ஏற்க மறுத்தனர்.
“இத்தீர்வுத் திட்டத்திற்கு ஆதரவாகப் பதிவான வாக்குகளில் 62 சதவிகிதம், சுபாஷ் சந்திராவுக்கு நெருக்கமானதாகக் கூறப்படும் நிதி நிறுவனங்களின் [Veena Investments, Direct Media Distribution Ventures, Lemonade Capital Advisors LLP, Corpcall Capital Advisors LLP, World Crest Advisors] பிரதிநிதிகளுடையவை. எனவே, இவ்வாக்குகளைத் தீர்மானத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது” என்று HDFC வங்கி தனது அறிக்கையில் கடுமையான ஆட்சேபனையைப் பதிவு செய்துள்ளது. ஆனால், இவ்வளவு முக்கியமான குற்றச்சாட்டை விசாரித்து உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பைக் கூட ஏற்காமல், நிகிலேஷ் சர்மா தலைமையிலான அமர்வு தீர்ப்பை வழங்கியுள்ளது. முதலாளியின் கடனைத் தள்ளுபடி செய்வதற்கான வாக்குகளின் நம்பகத்தன்மையே கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில், அந்தக் குற்றச்சாட்டைப் புறக்கணித்து வழங்கப்பட்ட இத்தீர்ப்பு, யாருடைய நலனைக் காக்கிறது என்ற கேள்வியை இயல்பாகவே எழுப்புகிறது.
எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனமும் ஈஸ்ஸெல் குழுமத்திற்கு ரூ.1,322.39 கோடியை கடனாக வழங்கியுள்ளது. ஆனால், தற்போதைய தீர்வுத் திட்டத்தின்படி, இத்தனை பெரும் கடனுக்கு வெறும் ரூ.38.09 இலட்சத்தை மட்டுமே எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸுக்கு சுபாஷ் சந்திரா செலுத்தினால் போதும் என NCLT தீர்ப்பளித்துள்ளது. ஆயிரம் கோடிக்கும் மேலான கடனை வெறும் சில இலட்சங்களாகச் சுருக்கிவிடும் இந்தத் தீர்வை ஏற்க முடியாது என்றும், இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாகவும் எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்களின் சேமிப்பை அடிப்படையாகக் கொண்ட நிதி நிறுவனங்களின் உரிமைகள் இவ்வாறு முதலாளிகளின் கடன் சுமையைத் துடைத்தெறியும் தீர்ப்புகளால் பறிக்கப்படுகின்றன என்பதற்கு இதுவும் மற்றொரு அப்பட்டமான எடுத்துக்காட்டாகும்.
இது ஈஸ்ஸெல் குழுமம் பெற்ற ரூ.22,000 கோடி கடனுக்கான தனிப்பட்ட பிணை தொடர்பான திவால் வழக்கே தவிர, அந்த முழுக் கடனையும் சுபாஷ் சந்திராவிடமிருந்து வசூலிப்பதற்கான வழக்கு அல்ல என்றும், பொதுவெளியில் இவ்விவகாரம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும் மோடி அரசாங்கம் முட்டுக்கொடுக்கிறது. மேலும், ரூ.22,000 கோடியையும் உறுதியாக வசூலித்துவிடுவோம் எனவும் அது வாதிடுகிறது. ஆனால், நடைமுறை எதார்த்தம் இதற்கு நேர் எதிரானதாகவே உள்ளது.
அனில் அம்பானி 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் பல வங்கிகளிடமிருந்தும் நிதி நிறுவனங்களிடமிருந்தும் சுமார் ரூ.73,000 கோடி கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திவால் நிலைக்குத் தள்ளப்பட்டார். ‘ஏழு ஆண்டுகளாகியும் அவர் மீதான வங்கி மோசடி வழக்குகளின் விசாரணையில் ஏன் எந்த முன்னேற்றமும் இல்லை?’ என்று உச்ச நீதிமன்றமே கேள்வி எழுப்பியபோதும், இதுவரை அவருக்கு எதிராகக் குறிப்பிடத்தக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
அனில் அம்பானியின் ரூ.2,983 கோடி மதிப்பிலான ஒரு திவால் வழக்கிலும், வெறும் ரூ.26 கோடியைத் திருப்பிச் செலுத்தினால் போதும் என்று NCLT தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் அனில் அம்பானியின் சுமார் 99 சதவிகிதக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதோடு, அதே அளவிலான தொகை வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் நட்டமாக மாற்றப்பட்டுள்ளது. முதலாளிகளின் கடன்களை மக்களின் பணத்திலிருந்து தள்ளுபடி செய்து, அதன் இழப்பை பொதுத்துறைக்கும் மக்களுக்கும் சுமத்தும் இத்தகைய சட்டப்பூர்வமான பகற்கொள்ளைச் சம்பவங்களை நூற்றுக்கணக்கில் பட்டியலிட முடியும். இவை தனித்தனி முறைகேடுகள் அல்ல; முதலாளி வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கும் அரசு–நிதி அமைப்பின் கட்டமைக்கப்பட்ட வர்க்கச் செயல்பாடுகளே என்பதை இத்தகைய வழக்குகள் அம்பலப்படுத்துகின்றன.
2016 முதல் 2025 வரையிலான ஒன்பது ஆண்டுகளில் மட்டும் 1,164 கார்ப்பரேட் திவால் வழக்குகளை NCLT முடித்து வைத்துள்ளது. அவற்றில் 564 வழக்குகளில், மொத்தக் கடனில் சராசரியாக 80 சதவிகிதம் வரை “முடிவெட்டுதலை” [Hair Cut] வங்கிகள் ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசே தெரிவிக்கிறது. மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதியில்லை என்று கைவிரிக்கும் ஆட்சியாளர்கள், மறுபுறம் மக்களின் சேமிப்பை வங்கிகள் மூலம் முதலாளிகளுக்குத் தாரைவார்த்து, பல இலட்சம் கோடி ரூபாயை அவர்களின் கடன்களிலிருந்து விடுவிப்பதையே “வளர்ச்சி” நடவடிக்கையாகத் தம்பட்டம் அடிக்கின்றனர். இந்தக் கொள்ளைச் செயல்முறையால் ஆதாயம் அடைந்தவர்கள் இந்தியத் தரகு முதலாளிகளும் அந்நிய நிதி மூலதனமும் தான் என்பதை R.U.P.E. ஆய்வுகள் பல்வேறு தரவுகளின் அடிப்படையில் அம்பலப்படுத்துகின்றன.
இந்தப் பின்னணியில் பார்த்தால், ரூ.22,000 கோடி கடனுக்குத் தனிப்பட்ட பிணை அளித்ததன் மூலம் அக்கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பை ஏற்றிருந்த சுபாஷ் சந்திராவை, வெறும் ரூ.6.25 கோடியைச் செலுத்தினால் போதும் என்ற தீர்ப்பின் மூலம், மொத்தக் கடன் பொறுப்பிலிருந்தே விடுவிக்க NCLT முயன்றிருப்பது அப்பட்டமாகிறது.
மேலும், தற்போதைய நிலையில் ஈஸ்ஸெல் குழுமம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதால், எதிர்காலத்தில் திருப்பிச் செலுத்த வேண்டிய ரூ.22,000 கோடி கடனும் “முடிவெட்டுதல்” [Hair Cut] என்ற பெயரில் NCLT-யால் தள்ளுபடி செய்யப்படும் நிலை உருவாகலாம். அப்படியானால், கடன் பெற்ற முதலாளியின் சொத்து இழப்புகள் தனிப்பட்டதாகவும், கடன் சுமையின் இழப்புகள் பொதுமக்களுடையதாகவும் மாற்றப்படும். இறுதியில், சுபாஷ் சந்திராவும் அவரது கூட்டாளிகளும் உருவாக்கிய கடன் சாம்ராஜ்யத்தின் சுமையை மக்களின் சேமிப்பின் மீது இறக்கிவிட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் பொதுச் செல்வத்தை சட்டத்தின் துணையோடு முதலாளி வர்க்கத்திற்கு மாற்றும் திட்டம்தான் இங்கு செயல்படுகிறது. இதுவே “வளர்ச்சி” என்ற பெயரில் நடைபெறும் கார்ப்பரேட் கொள்ளையின் உண்மையான முகம்.
- மாணிக்கம்.
தகவல் ஆதாரம்
https://finshots.in/archive/subhash-chandra-saga-explained/
https://vidur.in/subhash-chandra-insolvency-case-22000-crore/
https://www.vikatan.com/personal-finance/banking/bank-loan-on-anil-ambani


