தனியார்மய சேவையில் திமுகவுடன் போட்டி போடும் தவெக
எதற்கெடுத்தாலும் திமுகவுக்கும் எங்களுக்கும் மட்டும்தான் போட்டி என்று கூறிக்கொண்டிருக்கும் தவெகவினர், நடைமுறையில் தனியார்மயத்தை அமுல்படுத்துவதில் உண்மையில் திமுகவிற்கு தாங்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்து வருகிறார்கள்.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதியில் தவெக அரசு “தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதா, 2026” என்ற மசோதாவைக் கொண்டு வந்திருக்கிறது. இந்த மசோதாவானது, தமிழ்நாட்டில் புதிய தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படுவதற்கு இருக்கும் கட்டுப்பாடுகளை நீக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது.
விஜய் அரசு கொண்டு வந்திருக்கும் இந்த திருத்தத்திற்குள் செல்வதற்கு முன்னதாக, தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கு இதற்கு முன்பு இருக்கும் சட்டங்கள் குறித்தும், அதனைத் திருத்துவதற்கு ஏற்கெனவே இருந்த அரசுகள் எடுத்த முயற்சிகள் குறித்தும் அறிந்து கொள்வது அவசியம்.
2019ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான விதிமுறைகள் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம், 2019 மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தைத் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் தேவை என வரையறுக்கப்பட்டது. அதே போல பல்கலைக்கழகம் எதிர்காலத்தில் கலைக்கப்படும் சூழலில் அதன் நிர்வாகச் செலவுகளைச் சமாளிப்பதற்காக குறைந்தபட்சம் ரூ.50 கோடி நிரந்தர அறக்கட்டளை நிதி வைத்திருக்க வேண்டும் என்பதும் இந்த சட்டத்தின் கீழ் கட்டாயமாக்கப்பட்டது.
இந்த விதிகளைத் தளர்த்த வேண்டும் என்று தனியார் கல்வி முதலாளிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதிமுகவைத் தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்த திமுக, 2025ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதாவைக் கொண்டு வந்தனர்.
அந்த மசோதா புதிய பல்கலைக்கழகங்கள் குறித்து எதுவும் பேசவில்லை என்றாலும், ஏற்கெனவே இயங்கி வந்த தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளை “Brownfield Universities” ஆக மாற்றுவதற்கு வழி செய்தது. அத்துடன் தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான நிலத் தேவையைத் தளர்த்தி, 100 ஏக்கரில் இருந்து 50 ஏக்கராக குறைத்தது.
இது அப்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, பல ஆண்டுகளாக அரசு நிதியுதவி மற்றும் மானியத்தின் மூலம் இயங்கி வந்த அரசு உதவி பெறும் கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழகங்களாக மாறினால், அவற்றின் கட்டணத்தின் மீதான கட்டுப்பாடு, இடஒதுக்கீடு, ஆசிரியர்களின் பணிநிலை, ஏழை மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகள் ஆகியவை பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்தது.
ஆசிரியர் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்த நிலையில், ஸ்டாலின் அரசு அந்த மசோதாவை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்தது. இறுதியில் அது 2026 பிப்ரவரியில் அம்மசோதா திரும்பப் பெறப்பட்டது.
2019ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 100 ஏக்கர் நிலம் என்ற வரையறையும், 50 கோடி ரூபாய் வைப்பு நிதி என்ற கட்டுப்பாடும் நீக்கப்பட வேண்டும் என்ற கல்வி வியாபாரிகளின் கோரிக்கை நிறைவேறாமல் போனது.
இந்த இரண்டு நிபந்தனைகளையும் தளர்த்துவதுதான் தற்போது விஜய் அரசு கொண்டு வந்திருக்கும், தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதாவின் நோக்கம்.
புதிய விதிகளின்படி, தனியார் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான குறைந்தபட்ச நிலம்:
-
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் – 12 ஏக்கர்
-
பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் – 18 ஏக்கர்
-
மற்ற பகுதிகளில் – 25 ஏக்கர்
எனக் குறைக்கப்படுகிறது.
அதாவது சென்னையில் மட்டும் முன்பு தேவைப்பட்ட 100 ஏக்கர் நிலம், 12 ஏக்கராகக் குறைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்காகக் குறைக்கப்படுகிறது.
அதேபோல், நிரந்தர அறக்கட்டளை நிதியும் ரூ.50 கோடியில் இருந்து ரூ.25 கோடியாக குறைக்கப்படுகிறது. இந்தக் குறைக்கப்பட்ட நிதி நிபந்தனை ஏற்கெனவே 2019 சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சில தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தும். அதாவது 2019ஆம் ஆண்டு சட்டத்தின்படி ஏற்கெனவே உருவாக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள் தங்களது நிரந்தர அறக்கட்டளை நிதியை 50 கோடி ரூபாயில் இருந்து 25 கோடி ரூபாயாகக் குறைத்துக் கொள்ளலாம்.
இந்த திருத்தங்கள் கொண்டு வரப்படுவதற்கு அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சென்னையைச் சுற்றி 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் கிடைப்பது கடினம். மேலும் கல்விக் கட்டடங்கள், விடுதிகள், விளையாட்டு மைதானங்கள், ஆய்வகங்கள் போன்றவற்றை அமைப்பதற்குத் தேவையான இடத்தை கணக்கில் கொண்டு புதிய அளவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. இந்த மாற்றங்கள் ஒன்றிய அரசின் “விதிமுறைகளைக் குறைத்து, கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான பணிக்குழு”வின் (Compliance Reduction and Deregulation Task Force) பரிந்துரைகளின் அடிப்படையில் செய்யப்பட்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
இந்தப் பணிக்குழுவானது ஒன்றிய அரசின் வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. தொழில் செய்வதை எளிதாக்குதல் (Ease of doing business) என்று கூறிக் கொண்டு, மாநில அரசுகள் மக்கள் போராடுகிறார்கள் நலன், தொழிலாளர்கள் போராடுகிறார்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என தொழில் நிறுவனங்கள் மீது விதிக்கும் கட்டுப்பாடுகள், விதிமுறைகளைக் கண்டறிந்து அவற்றை நீக்குவதுதான் இவர்களின் முழுநேர வேலை. தனியார் முதலாளிகளுக்கு என்ன தேவை, அதனை எவ்வாறு சிறப்பாக செய்து கொடுக்க வேண்டும் என 24 மணிநேரமும் சிந்திப்பதற்காகவே பல நூறு அதிகாரிகள் மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை செய்கிறார்கள். அவர்களது ஆலோசனையின்படியே இந்த சட்டத்திருத்தத்தை விஜய் அரசு கொண்டு வந்திருக்கிறது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகம் தொடங்குவது எளிதாக்கப்பட்டுள்ளது. இனிமேல் குறைந்த நிலத்துடனும், பாதியாகக் குறைக்கப்பட்ட நிரந்தர நிதியுடனும் தனியார் பல்கலைக்கழகங்களைத் தொடங்க முடியும்.
கல்வியைத் தனியார்மயமாக்குவது எனும் கொள்கையில் தவெக அரசு உறுதியாக இருக்கிறது என்று கூறுவதை விட, முழுமூச்சாகச் செயல்படுகிறது என்றுதான் கூற வேண்டும். சென்னையில் 125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தின் முதல் வளாகத்தை உருவாக்குவதற்காக விஜய் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் “தமிழ்நாடு சுடர்” என்ற பெயரில் மாணவர்கள் விடுதி கட்டி நிர்வகிக்கும் பொறுப்பு தனியார் முதலாளிகளின் கையில் கொடுக்கப்பட்டது, தற்போது தனியார் பல்கலைக்கழகங்களுக்கு உதவும் இந்தச் சட்டத்திருத்தம் என ஆட்சிப் பொறுப்பேற்று நூற்று சொச்ச நாட்களுக்குள்ளாகவே அடுத்தடுத்துப் பல நடவடிக்கைகளை தவெக அரசு எடுத்து வருகிறது.
புதிய முதலீடுகளை உருவாக்குவதன் மூலமாக வேலைவாய்ப்பினை பெருக்குகிறோம் என்று கூறும் ஆட்சியாளர்கள், நாங்கள் எங்களது ஆட்சியில் இத்தனை இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை ஈர்த்துள்ளோம் என மார்தட்டிக் கொள்கிறார்கள். அவ்வாறு முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே முதலாளிகளுக்குப் பல சலுகைகளை வாரி வழங்குகிறார்கள். தொழில் தொடங்க நிலம் ஒதுக்குவது, சாலை, மின்சாரம், தண்ணீர் போன்ற கட்டமைப்பு வசதிகளை ஏற்பாடு செய்வது, முதலாளிகளுக்குத் தேவையான திறன் உள்ள, குறைவான கூலி வாங்கிக் கொண்டு வேலை செய்யும் தொழிலாளர் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுப்பது, வரித் தள்ளுபடி, முதலீட்டை திரும்பப் பெறும் உத்தரவாதம் என மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள்.
அந்த வகையில் நாட்டில் உள்ள சட்டங்கள், விதிமுறைகள் முதலாளிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் வகையில் இருந்தால் அதனைத் தூக்கியெறிவதற்கும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இதில் மோடி அரசு, ஸ்டாலின் அரசு, விஜய் அரசு என்ற பேதமே இல்லை. எல்லா அரசுகளும் தனியார்மயமாக்கலை ஆதரிக்கின்ற அரசுகள்தான். எல்லாக் கட்சிகளும் இந்தப் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில்தான் இயங்குகின்றன.
கல்வியில் தனியார்மயத்தைப் புகுத்த வேண்டும், அதற்கு உள்ள தடைகளை நீக்க வேண்டும். அதனைத்தான் ஒன்றிய பாஜக அரசு சொல்கிறது, அதனைத்தான் 2025ஆம் ஆண்டு மசோதாவின் மூலம் திமுக அரசு செய்ய முயற்சித்தது. இன்றைக்குத் தவெக அரசு செய்து முடித்திருக்கிறது.
-
சந்திரன்
