டிரில்லியனர் எலான் மஸ்கிற்கு எதிராக அமெரிக்க தொழிலாளர்கள் போராடுவது ஏன்?

உலகின் முதல் டிரில்லியனராக எலான் மஸ்க் உயர்ந்திருக்கும் வேளையில், அமெரிக்க தொழிலாளர்கள் பணவீக்கம், வேலைவாய்ப்பு நெருக்கடி, மருத்துவச் செலவுகள் மற்றும் வாழ்வாதாரச் சுமைகளால் போராடி வருகின்றனர். ஒருபுறம் கற்பனைக்கு எட்டாத அளவில் செல்வம் சிலரின் கைகளில் குவிகிறது; மறுபுறம் பெரும்பான்மை மக்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவே போராடுகின்றனர். இந்த முரண்பாடு தனிநபர் வெற்றியின் கதை அல்ல; முதலாளித்துவ அமைப்பின் விளைவு என்பதை அமெரிக்க தொழிலாளர்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் மீண்டும் நினைவூட்டுகின்றன.

கடந்த வாரம் அமெரிக்காவில் நடந்த இரண்டு பொருளாதார நிகழ்வுகள் பற்றிய செய்திகள் வெளிவந்தன. முதலில் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு பற்றிய செய்தி, இரண்டாவது அமெரிக்க தொழிலாளர் புள்ளிவிவரப் பணியகம் வெளியிட்ட தொழிலாளர் வருமானம் பற்றிய புள்ளி விவரங்கள். இந்த இரண்டு செய்திகளும் முதலாளித்துவ சமூகத்தின் முரண்பாட்டையும், அதன் கோர முகத்தையும் மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளன.

அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தையில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் பொது விற்பனைக்கு வந்த ஒரே நாளில் அவரது சொத்து மதிப்பு 13.8 இலட்சம் கோடி அதிகரித்து, ஒரு டிரில்லியன் டாலராக (ரூ. 95 இலட்சம் கோடி) உயர்ந்துள்ளது.

எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனர் ஆனதிலிருந்து, அவருடைய கற்பனைக்கு எட்டாத செல்வத்தின் அளவை மக்களுக்குப் புரிய வைப்பதற்காக முதலாளித்துவ பத்திரிகைகள் வெவ்வேறு கோணங்களில் செய்திகளை வெளியிடுகின்றன.

ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புள்ள 100 டாலர் நோட்டுகளை அடுக்கி வைத்தால், அதன் உயரம் சுமார் 679 மைல்கள் உயரத்திற்கு நீளுமாம் என்கிறது ஒரு செய்தி.

ஆண்டுக்குச் சுமார் 39 மில்லியன் டாலர் சம்பாதிக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த பணக்காரக் கூடைப்பந்து வீரரான ஜேலன் பிரன்சன் என்பவர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பை எட்டிப் பிடிப்பதற்கு, கூடுதலாக 25,000 போட்டிகளில் விளையாட வேண்டும் என மற்றொரு செய்தி கணக்கிடுகிறது.

தினமணி பத்திரிகையோ, உலகின் முதல் டிரில்லியனராக உயர்ந்திருக்கும் எலான் மஸ்க், ஒவ்வொரு இளைஞருக்கும் மிகப்பெரிய சாதனை இலக்கை நிர்ணயித்திருப்பதாகப் புளங்காகிதம் அடைகிறது. உலகமே பெருமிதம் கொள்ள வேண்டிய சாதனை போலச் சித்தரிக்கப்படுகிறது.

பிரெஞ்சு பொருளாதார வல்லுநரான கேப்ரியல் ஜுக்மனின் ஆய்வுப்படி, 19-ஆம் நூற்றாண்டின் போது ஒரு சில அமெரிக்கப் பணக்காரர்களின் நிகர சொத்து மதிப்பு, அமெரிக்கப் பொருளாதார உற்பத்தியில் 3 சதவீதத்திற்குச் சமமாக இருந்தது. ஆனால் இன்றோ சுமார் 20 அமெரிக்கப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு அந்நாட்டுப் பொருளாதார உற்பத்தியில் 12 சதவீதமாக இருக்கிறது.

அமெரிக்காவில் வாழும் 99 சதவீத மக்கள் பொருளாதார நெருக்கடியிலேயே வாழ்ந்து வருகின்றனர். எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு ஒரு சராசரி அமெரிக்கக் குடும்பத்தின் நிகர மதிப்பை விட 50 இலட்சம் மடங்கு பெரியது என சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

கி.மு. 4-ஆம் நூற்றாண்டின் கிரேக்கத் தத்துவஞானியான பிளேட்டோ, அங்கு நிலவிய பொருளாதார ஏற்றத்தாழ்வை ஒழிப்பதற்காகக் குடிமக்களின் செல்வத்தை விட ஒருவர் நான்கு மடங்கு அதிகமாகச் சம்பாதித்தால், அவர் தனது உபரியை நன்கொடையாக வழங்க வேண்டும். அப்போதுதான் குடியரசு செழிப்பாகும் என தன்னுடைய ‘சட்டங்கள்’ எனும் நூலில் குறிப்பிட்டார்.

கி.மு. நான்காம் நூற்றாண்டில் நிலவிய நான்கு மடங்கு ஏற்றத்தாழ்விற்காகப் பிளேட்டோ முன்மொழிந்த யோசனையையும், கற்பனையான சட்டத்தையும் முதலாளித்துவ சமூகத்திற்குப் பொருத்த முடியாது எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆனால் 300 ஆண்டு முதலாளித்துவ வளர்ச்சிக்குப் பிறகு முதலாளித்துவத்தின் தற்போதைய தலைமையகம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளப்படும் அமெரிக்காவில்தான் 50 இலட்சம் மடங்கு பொருளாதார ஏற்றத்தாழ்வு இருக்கிறது.

எலான் மஸ்க் ஒரு டிரில்லியனர் என்ற “பெருமிதமும்”, “சாதனையும்” அமெரிக்க மக்களின் தோள்பட்டையின் மீது ஏறி நிற்கிறது. அமெரிக்க மக்களின் வருமானத்தை உறிஞ்சித்தான் எலான் மஸ்க் போன்றவர்கள் உலக மகா கோடீஸ்வரர்களாகவும் மல்டி மில்லியனர்களாகவும் வலம் வருகிறார்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரான் மீது போர் தொடுத்த பிறகு, அங்கு அதிகரித்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வும், எரிசக்தி விலை உயர்வும் அமெரிக்க மக்களைக் கடுமையாகப் பாதித்து வருகின்றன. அமெரிக்காவில் தற்போது நிலவும் பணவீக்கத்தால், கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட்ட ஊதிய உயர்வால் பயனொன்றும் இல்லை என்கின்றனர் அமெரிக்கத் தொழிலாளர்கள்.

அமெரிக்காவில் எரிசக்திகளின் விலைகள் கடந்த ஆண்டை விட 23.5 சதவீதம் அதிகரித்துள்ளன. மே மாதத்தில் மட்டும் ஒட்டுமொத்தப் பொருட்களின் விலைகள் 0.5 சதவீதம் அதிகரித்துள்ளன.

எரிபொருளின் அதிக விலை உயர்வு காரணமாக அமெரிக்க மக்கள் தங்களது இருப்பிடங்களுக்கு அருகிலேயே பொருட்களை வாங்க விரும்புகின்றனர். ஆண்டுக்குச் சுமார் ஒரு இலட்சம் டாலர் வருமானம் பெறும் அமெரிக்க மக்கள் கூட மலிவான பொருட்களை வாங்க விரும்புவதாகவும், டாலர் ஜெனரல் எனும் நிறுவனம் கூறுகிறது.

கோவிட் காலத்திலிருந்தே நிரந்தர வேலை கிடைக்காமல் அவதிப்படும் அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கம், தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இலட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை இழந்து வருகிறது. இந்தத் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதோடு, அவர்களின் ஓய்வூதியத்தையும் பங்குச் சந்தையில் வைத்துச் சூதாடுகின்றன. இதற்கான சட்டங்களை அமெரிக்க அரசு வழிவகை செய்து கொடுத்துள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பங்குகள் மட்டுமே பாதி பங்குகளைக் கொண்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான தரவு மையங்களுக்காக அதிகளவு மின்சாரம் செலவிடப்படுவதால், கடந்த ஆண்டை விட மின்சாரத்தின் விலை 6 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பெருக்கத்தால் கணினியின் விலையும் தற்போது அதிகரித்துள்ளது.

டிரம்ப் பதவியேற்ற பின்னர் பெருநிறுவனங்களுக்கான வரியைக் குறைப்பதற்காக ஒரு பெரிய அழகிய மசோதா (One Big Beautiful Bill Act) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதாவின் மூலம் ஏற்படும் நிதிச்சுமையை ஈடு செய்வதற்காக அமெரிக்க மக்களின் சுகாதார காப்பீட்டு மானியங்கள் குறைக்கப்பட்டன. இதனால் அமெரிக்க மக்களுக்கு ஆண்டுக்கு 1200 டாலர் அதிகமாகச் செலவாகிறது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பொருளாதார வல்லுநர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, அமெரிக்காவின் 400 பெருஞ்செல்வந்தர்கள் சராசரியாக வருமானம் ஈட்டும் அமெரிக்கப் பெண்களை விட ஒரு சிறிய பங்கையே வரியாகச் செலுத்துகிறார்கள் என்று மதிப்பிட்டுள்ளது.

ப்ரோபப்ளிகா (ProPublica) ஆய்வின் படி, 2014 மற்றும் 2018-க்கு இடையில் மஸ்க்கின் சொத்து மதிப்பு 13.9 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. ஆனால், அவர் 1.52 பில்லியன் டாலர் வருமானம் மட்டுமே ஈட்டியதாகக் கணக்கு காட்டி 455 மில்லியன் டாலர் மட்டுமே வரியாகச் செலுத்தியுள்ளார்.

அமெரிக்க உழைக்கும் மக்களைச் சுரண்டியே எலான் மஸ்க் போன்றவர்கள் டிரில்லியனராக வலம் வருகிறார்கள் என்பதை அம்பலப்படுத்தி அங்குள்ள அமெரிக்கத் தொழிலாளர்கள் ஒரு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

“எலான் மஸ்க் உங்களது ஓய்வூதியத்தையும், ஓய்வுக் காலத்தையும் திருடுகிறார்” என்கிற முழக்கத்துடன் அந்தத் தொழிலாளர்கள் மஸ்க்கினுடைய ஸ்பேஸ் எக்ஸின் பொதுப் பங்குகளில் ஈடுபட்டிருந்த வங்கிகளில் ஒன்றான ஜேபி மார்கன் சேஸின் மன்ஹாட்டன் தலைமையகத்திற்கு வெளியே ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட சிறுவீத உற்பத்தியாளர்களைக் கொள்ளையடிக்க ஏற்பாடு செய்வதன் வழியாகத்தான் முதலாளிகளின் இலாபம் உத்தரவாதப்படுத்தப்படுகிறது என்ற உண்மையை 19-ஆம் நூற்றாண்டிலேயே எடுத்துக்காட்டிவிட்டது மார்க்ஸின் ‘மூலதனம்’ நூல்.

பொருளாதார ஏற்றத்தாழ்வை உருவாக்கும் இந்த முதலாளித்துவ சமூகத்தை எதிர்த்து அமெரிக்காவில் நடக்கும் தொழிலாளர்களின் போராட்டங்கள் நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக நம் கண்முன்னே தெரிகின்றன.

  • தாமிரபரணி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன