அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு யார் காரணம்?
முதலாளிகளா அல்லது உழைக்கும் மக்களா?
தங்கத்தில் முதலீடு செய்வது பெரும் பணக்காரர்களா, அல்லது சாதாரண மக்களா?
கடந்த ஆண்டு மட்டும் இந்தியா இறக்குமதி செய்த தங்கத்தின் அளவு அதற்கு முந்தைய ஆண்டை விட 24 சதவீதம் அதிகம். இதன் மதிப்பு மட்டும் ஏறத்தாழ 72 பில்லியன் டாலர். இதன் மூலம் அதற்கு முந்தைய ஆண்டுகளை விட கூடுதலாக 72 பில்லியன் டாலர் அந்நிய செலாவணியைக் கொடுத்து வெளிநாடுகளிலிருந்து இக்கூடுதல் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
உலக தங்க கவுன்சில், 2025 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா இறக்குமதி செய்த மொத்த தங்கத்தில் 40 சதவீதம் முதலீட்டுக்காகவும் மீதமுள்ள 60 சதவீதம் தங்கம் ஆபரணங்கள் செய்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதினால் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் தங்களுடைய சொத்து மதிப்பைத் தக்க வைத்துக்கொள்ள தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்கின்றனர். எனவே அந்நியச் செலாவணி கையிருப்பு கரைந்து போவதற்கு இந்திய பெரும் பணக்காரர்களே பிரதானக் காரணமேயன்றி சாதாரண மக்கள் அல்ல.
வெளிநாடுகளில் ஊதாரிச் செலவுகள் செய்வது யார்?
தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்புதல் [Liberalized Remittance Scheme] திட்டத்தில் இந்தியாவிலுள்ள உயர் பணக்கார வர்க்கம் கடந்த 12 வருடங்களில் 202 பில்லியன் டாலர் அந்நிய செலாவணியை வெளிநாடுகளில் செலவழித்துள்ளனர். குறிப்பாக, கடந்த நான்கு வருடங்களில் மட்டும் 112 பில்லியன் டாலர்களைச் செலவழித்துள்ளனர். இப்பணம், வெளிநாடுகளில் படிப்புச் செலவு, மருத்துவச் செலவு, சுற்றுலா, சொத்து வாங்குவது, நன்கொடை மற்றும் பரிசுப்பொருட்கள் தருவது, குடியுரிமைக்கான கட்டணம், பிற சொந்த செலவுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா செல்வது, பரிசுப்பொருட்கள் வாங்கியது என்று ஊதாரித்தனமாகப் பல நூறு பில்லியன் அந்நியச் செலாவணியைக் காலி செய்திருக்கும் பெரும்பணக்காரர்களைக் கண்டிக்காமல், சாதாரண மக்களைப் பார்த்து வெளிநாட்டு பயணங்களைத் தவிர்த்து விடுங்கள் என்கிறார் மோடி.
குடும்ப நிறுவனங்களும் அந்நியச் செலாவணியும்
அம்பானி, அதானி, அகர்வால் போன்ற இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் வெளிநாடுகளில் செய்துள்ள முதலீடுகள் மற்றும் வாங்கியுள்ளச் சொத்துக்களை நிர்வகிப்பதற்காகத் தங்களுடைய நிறுவனங்களுக்கான அலுவலகங்களை [family offices] துபாய், ஸ்விட்சர்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வைத்துள்ளனர். பெரும்பாலும் அமெரிக்க டாலரே நாடுகளுக்கிடையேயான பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தப்படுவதால், இந்த அலுவலகங்களுக்கான செலவுகள் என்பது இந்தியாவிலிருந்து டாலர்கள் வெளியேறுவதாகும். சிங்கப்பூரில் அலுவலகங்களுக்காக 130 பில்லியன் டாலரையும், ஹாங்காங்கில் உள்ள அலுவலகங்களுக்காக 105 பில்லியன் டாலரையும் இந்திய முதலாளிகள் செலவழித்துள்ளனர்.
வெளிநாட்டுக் கடன்களும் அந்நியச் செலாவணிக் குறைவதும்
டாட்டா, அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகள் தங்களுடைய தொழில் சாம்ராஜ்யத்தை விரிவாக்கம் செய்வதற்காக வெளிநாட்டு வங்கிகளிடமிருந்தும், நிதி மூலதன நிறுவனங்களிடமிருந்தும் கடன் வாங்குகின்றனர். அரசின் கணக்குப்படி 2025 வரை கிட்டத்தட்ட 292 பில்லியன் டாலர் வெளிநாட்டு வணிக கடன்களை [External Commercial Borrowings] இந்திய முதலாளிகள் வாங்கியுள்ளனர். இக்கடன்கள் அனைத்துமே, “இந்திய கடன்கள் [India’s external debt]” என்ற பொதுக் கணக்கில்தான் வரவு வைக்கப்படும்.
உதாரணமாக, டாடா நிறுவனம் இங்கிலாந்தின் கோரஸ் எஃகு தொழிற்சாலையை 12 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது. இதற்காக 9 பில்லியன் டாலர் நிதியை வெளிநாடுகளில் இருந்து கடனாகப் பெற்றது. இந்தக் கடனுக்கான வட்டி மட்டும் வருடத்திற்கு 700 மில்லியன் டாலரை டாட்டா நிறுவனம் கட்ட வேண்டும். கோரஸ் எஃகு ஆலை நட்டத்தில் இயங்கி வருவதால், அதற்காக வாங்கிய கடனை இந்தியாவிலுள்ள டாடாவின் பிற தொழில்களிலிருந்து வரக்கூடிய லாபத்தைக் கொண்டுதான் கட்ட வேண்டும். இதனால் பல பில்லியன் டாலர் அந்நியச் செலாவணிக் கையிருப்பு கடனை அடைப்பதற்காக இந்தியாவிலிருந்து வெளியேறுகிறது. இதைப் பிற முதலாளிகளுக்கும் பொருத்திக் கொள்ளலாம்.
சமீபத்தில் அம்பானியும் அதானியும் கூட அமெரிக்காவில் பல நூறு பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்திருக்கின்றனர். இம்முதலீடுகளுக்கான நிதி கூட வெளிநாட்டு வணிக கடன்கள் மூலமாகப் பெறப்போவதாக அறிவித்திருக்கின்றனர். இக்கடன்கள் அனைத்துமே அந்நியச் செலாவணிக் கையிருப்புக்கு வேட்டு வைப்பதாக அமையும்.
இந்தக் கடன்கள் யாவும் இந்திய மக்களுக்காக வாங்கப்பட்டவை அல்ல. பெரும் முதலாளிகள் தங்களுடைய தொழிற்சாம்ராஜ்ய விரிவாகத்திற்காக வாங்கிய கடன்களை நாட்டின் கடனாக அறிவிப்பதோடு, அத்தொழிற்சாலைகளினால் ஏற்படும் நட்டத்தை ஈடுகட்ட அந்நிய செலாவணியையும் சூறையாடுகின்றனர். இதனை ஈடுகட்ட உழைக்கும் மக்களின் வயிற்றைக் கட்டச் சொல்கிறார் மோடி.
இந்தியா ஏன் இறக்குமதியைச் சார்ந்த நாடாக மாறியது?
உற்பத்திக்கான மூலப் பொருள்களை இறக்குமதி செய்வது மற்றும் தொழிற்சாலையின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கு முதலீடுகள் தேவை என்பதினால், வெளிநாட்டு கடன்களை வாங்க வேண்டி இருப்பதாக கார்பரேட் நிறுவனங்கள் காரணம் கூறுகின்றன. உதாரணமாக மருந்துகள் மற்றும் ரசாயனப் பொருள்களை உற்பத்தி செய்யக்கூடிய இந்திய பெருநிறுவனங்கள், மருந்து உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்கின்றன. இறக்குமதிக்குப் பதிலாக, இம்மூலப்பொருட்களின் உற்பத்தி சார்ந்த ஆராய்ச்சிகளுக்குத் தேவையான நிதி ஒதுக்குவதன் மூலம் இவற்றை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். ஆனால் இந்திய கார்பரேட்களும் தொழில்நிறுவனங்களும் ஆராய்ச்சிக்காகச் சொற்ப நிதியையே ஒதுக்குகின்றன.
இந்தியாவின் பட்ஜெட்டில், மொத்த ஜிடிபியில் 0.6% இலிருந்து 0.8% வரைதான் ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்படுகிறது. இந்நிதியும் 2010 இல் இருந்து படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகிறது. இதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு வெறும் 36 சதவீதம்தான். அந்தச் சொற்பத்திலும் கணிசமானத் தொகையை வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் தொழில்நுட்பங்களுக்கான ராயல்ட்டியாகச் செலுத்துகின்றன.
இந்தியாவில் கடந்த 15 வருடங்களில் திறன்பேசிகளின் பயன்பாடு பரவலாகியுள்ளது. திறன்பேசிகள் மற்றும் இணையப் பயன்பாடுகளில் உலகின் இரண்டாவது பெரிய நாடு இந்தியாதான். இதில் [தொலைத்தொடர்புத் துறையில்] இரண்டு தனியார் நிறுவனங்களே கோலோச்சுகின்றன. வருடத்திற்குப் பல ஆயிரம் கோடிகளை லாபமாக மட்டுமே ஈட்டுகின்றன. ஆனால் இந்தியாவில் சொந்தமாக செல்போன் தயாரிப்பதற்கான தொழில்நுட்பங்களோ, தொலைத்தொடர்புக்குத் தேவையான கருவிகள் தயாரிப்பது மற்றும் அதற்கான மென்பொருள்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பங்களோ/தொழிற்சாலைகளோ இவர்களிடம் கிடையாது. அனைத்தும் வெளிநாடுகளிலிருந்தே வாங்கிக் கொள்கின்றன. உற்பத்தி சார்ந்த பிற துறைகளுக்கும் இதே அவலநிலைதான்.
ஏகாதிபத்திய நாடுகளைச் சார்ந்து தொழில் நடத்துவதையே இந்திய முதலாளிகள் கொள்கையாக வைத்திருக்கின்றனர். இப்போக்கு வர்த்தகத்தில் நிரந்தரமாகப் பற்றாக்குறையையே உருவாக்குகிறது. இதனால் அந்நியச் செலாவணிக் கையிருப்பு குறைவது தவிர்க்க இயலாததாக மாறியுள்ளது.
உரத் தட்டுப்பாட்டிற்குக் காரணம் விவசாயிகளா அல்லது இந்திய ஆளும்வர்க்கத்தின் ஏகாதிபத்திய அடிவருடித்தனமா?
விவசாயத்திற்குப் பயன்படுத்தும் உரத்தின் அளவைப் பாதியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும்; இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என்று விவசாயிகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறார் மோடி. காரணம், பெருமளவு உரங்களும் அதற்கான மூலப்பொருள்களும் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுவதால், சர்வதேச சந்தைகளில் இவற்றின் விலைகள் உயர்ந்திருப்பதால், அது அந்நியச் செலாவணி கையிருப்பைக் குறைக்கும் என்பதால் இயற்கை விவசாயத்தை நோக்கி நகரச் சொல்கிறார். இது, விவசாயிகளே இப்பிரச்சனைக்குக் காரணம் என்று மோடி மறைமுகமாகக் குற்றஞ்சாட்டுவதாகவே உள்ளது. ஆனால் உண்மையோ, தற்சார்பு உற்பத்தியைப் புறக்கணித்து ஏகாதிபத்தியங்களைச் சார்ந்த உள்நாட்டு உர உற்பத்திக்கானக் கொள்கைகளை அமல்படுத்திய ஆட்சியாளர்களே உரத்தட்டுப்பாட்டிற்குக் காரணம்.
2025-26 (ஏப்ரல்-மார்ச்) காலப்பகுதியில், இந்தியா 28.2 மில்லியன் டன் உரங்களை 14.5 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்தது. இதில் 11.2 மில்லியன் டன் யூரியா, 6.4 மில்லியன் டன் டிஏபி (டை-அம்மோனியம் பாஸ்பேட்), மற்றும் 3.7 மில்லியன் டன் எம்ஓபி (முரியேட் ஆஃப் பொட்டாஷ்) ஆகியவை அடங்கும்.
அதே காலப்பகுதியில், இந்தியா 29.3 மெட்ரிக் டன் யூரியா, 3.9 மெட்ரிக் டன் டிஏபி, 12 மெட்ரிக் டன் சிக்கலான உரங்கள் (இவை நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷியம் மற்றும் சல்பர் ஆகியவற்றை வெவ்வேறு விகிதங்களில் கொண்டுள்ளன), மற்றும் 5.7 மெட்ரிக் டன் எஸ்.எஸ்.பி ஆகியவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்தது. ஆனால் இந்த உரங்களின் உள்நாட்டு உற்பத்திக்குத் தேவையான இடைநிலை இரசாயனங்கள் அல்லது மூலப் பொருட்கள் வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டன.
உதாரணமாக டிஏபி-யை எடுத்துக் கொள்வோம், இதன் உள்நாட்டு உற்பத்திக்குத் தேவையான பாஸ்பாரிக் அமிலம் மற்றும் அம்மோனியா வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சில இந்திய நிறுவனங்கள் பாஸ்பாரிக் அமிலத்தைத் தயாரிக்கின்றன. ஆனால் அதற்குத் தேவையான ராக் பாஸ்பேட்டும் (பாறை பாஸ்பேட்) சல்பூரிக் அமிலமும் இறக்குமதியே செய்யப்படுகிறது.
அதேபோல, யூரியா தயாரிப்பிற்கான முதன்மை உள்ளீட்டுப் பொருள் [primary feedstock] இயற்கை எரிவாயு ஆகும். பெட்ரோலிய அமைச்சின் தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட LNG-இல் 47.2 சதவிகிதம் உள்நாட்டு உர உற்பத்திக்காக நுகரப்பட்டுள்ளது. ஏறத்தாழ அதன் மொத்த மதிப்பு 6.3 பில்லியன் டாலராக இருக்கலாம்.
ஆகவே இறக்குமதியைத் தாண்டி குறிப்பிட்ட அளவு இந்தியாவிலேயே உர உற்பத்தி செய்யப்பட்டாலும், அதற்கான மூலப்பொருள்களின் பெரும் பகுதி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இவை, அந்நியச் செலாவணியின் கணிசமானப் பகுதியைக் காலி செய்வதாக மோடி அரசாங்கம் கருதுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் உரத்திற்காகச் செய்துள்ள செலவுகள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலைக்கு யார் காரணம் – விவசாயிகளா?
இந்தியா, 2000 ஆம் ஆண்டுக் காலகட்டம் வரைக்குமே தனக்குத் தேவையான உரங்களை, குறிப்பாக யூரியாவை, உள்நாட்டிலேயே [பொதுத்துறை நிறுவனங்களின் மூலமாக] உற்பத்தி செய்து கொண்டது. புதிய தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றிய அடுத்தடுத்து வந்த காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆட்சியாளர்கள் உரத்திற்கான அரசின் மூலதன செலவீடுகளைப் படிப்படியாகக் குறைத்து அரசு உர நிறுவனங்களை மூடிவிட்டன. தனியார் உரத் தொழிற்சாலைகளும் தங்களது உற்பத்தியை அதிகப்படுத்துவதற்குத் தேவையான முதலீடுகளைச் செய்யவில்லை. மோடி அரசாங்கம் ஐந்து பொதுத்துறை உரத் தொழிற்சாலைகளை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர நிதி ஒதுக்கினாலும், அதன் உற்பத்தியளவு இருக்கும் பற்றாக்குறையையும் இறக்குமதிச் சார்பையும் குறைக்கப் போதுமானதாக இல்லை. எனவே உரப் பற்றாக்குறையை ஈடுகட்ட இறக்குமதியே செய்ய வேண்டியுள்ளது.
கோவிட் காலத்தில் யூரியாவின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது. அதற்கடுத்து ரஷ்ய-உக்ரைன் போரின் காரணமாக உரங்களின் விலை மீண்டும் அதிகரித்தது. தற்போது ஈரான்-இஸ்ரேல்/அமெரிக்கா போரின் காரணமாக ஹெர்மோஸ் வழித்தடம் மூடப்பட்டிருப்பதால் உரம், திரவ இயற்கை வாயு மற்றும் இதர மூலப்பொருட்களின் இறக்குமதி பெருமளவு குறைந்து விட்டது. கடந்த ஐந்து ஆண்டு காலமாகவே, சர்வதேச சந்தைகளிலிருந்து செய்யப்படும் உர இறக்குமதி நிச்சயமற்று இருப்பது தெரிந்தபோதும், அதன் பாதிப்புகளிலிருந்து [இந்தியாவை] தற்காத்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் மோடி அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.
புதிய தாராளவாதக் கொள்கையினால், உர உற்பத்தியில் சுய சார்பையும் ஒழித்து இறக்குமதியைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளிய ஆட்சியாளர்கள் (மோடி கும்பல்), தற்போது நெருக்கடி ஏற்படும் போது விவசாயிகளைக் குறை சொல்வது அயோக்கியத்தனம் இல்லையா?
சமையல் எண்ணெய் நெருக்கடிக்கு யார் காரணம்?
நாட்டின் அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் நோக்கில், பாமர மக்கள் சமையல் எண்ணெயைக் குறைவாகப் பயன்படுத்துமாறு மோடி அறிவுறுத்துகிறார். காரணம், இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொத்த பாமாயிலில் 55-60 சதவிகிதம் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. 2022-23 இல் மொத்த உள்நாட்டு உணவுக்கான எண்ணெய் உற்பத்தி 10.33 மில்லியன் டன். ஆனால் இறக்குமதியோ 16.47 மில்லியன் டன். இதனால் அந்நியச் செலாவணி அதிகம் வெளியேறுவதாக மோடி கவலைக் கொள்கிறார். ஆனால் 50 சதவிகிதத்திற்கு மேல் இறக்குமதியை மட்டுமே சார்ந்திருப்பதற்குக் காரணம் பாமர மக்களா அல்லது ஆட்சியாளர்களா என்று சொல்லாமல் பொதுவாகச் சொல்கிறார்.
1986-ஆம் ஆண்டின் தேசிய எண்ணெய் வித்துக்கள் இயக்கத்தின் [National Mission on Oilseeds] உதவியுடன், 1990-களில் இந்தியா சமையல் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருந்தது. தொன்னூறுகளில் இந்தியா உலக வர்த்தக அமைப்பில் (WTO) இணைந்ததால், உள்நாட்டு எண்ணெய் வித்துக்கள் உற்பத்திக்கான பாதுகாப்பு/சலுகைகள் நீக்கப்பட்டன. இந்திய அரசு மலிவான விலைக்குப் பாமாயிலை இறக்குமதி செய்தது. இதனுடன் இந்திய விவசாயிகளால் போட்டிபோட முடியவில்லை. இதனால் விவசாயிகள் படிப்படியாக எண்ணெய் வித்துக்கள் சாகுபடியிலிருந்து வெளியேறியதால் உள்நாட்டு உற்பத்தியும் குறைந்து போனது. இவ்வாறு, 140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, தனது உணவின் அத்தியாவசியப் பொருளுக்காக வெளிநாடுகளை நம்பியிருக்க வேண்டிய நிலைக்கு ஆட்சியாளர்களால் தள்ளப்பட்டுள்ளது.
பெட்ரோல் நெருக்கடிக்கு மக்கள்தான் காரணமா?
இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவைகளில் 86 சதவிகிதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் 121 பில்லியன் டாலர்களை இந்தியா அரசு தனது அந்நியச் செலாவணிக் கையிருப்பிலிருந்து கொடுக்கிறது. இந்தியாவில் கச்சா எண்ணெய் வளம் இல்லை என்பதால் எரிபொருள் தேவைக்காக இறக்குமதியை நம்பியிருக்க வேண்டியுள்ளது. அந்த இறக்குமதிகள் கூட மக்களின் நலனிலிருந்து இல்லாமல் ஏகாதிபத்தியங்களின் நலனுக்கானதாகவே உள்ளது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக் கொள்கையானது மோடி அரசினால் (இந்திய ஆட்சியாளர்களால்) தீர்மானிக்கப்படுவதில்லை. அது அமெரிக்காவினால் தீர்மானிக்கப்படுகிறது. ட்ரம்பின் முதல் ஆட்சிக் காலத்தில், ஈரான் மற்றும் வெனிசுலாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யக்கூடாது என்று ட்ரம்ப் அரசாங்கம் கூறியது. உடனே இந்தியா (2019 இல் இருந்து) இவ்விரு நாடுகளில் இருந்தும் எரிபொருள் இறக்குமதியை நிறுத்தியது. [இவ்விரு நாடுகளிடமிருந்து செய்யப்பட்ட எண்ணெய் இறக்குமதியானது டாலருக்குப் பதிலாக அந்தந்த நாட்டின் பணத்தின் மூலமே செய்யப்பட்டது. அதனால் அந்நியச் செலாவணிக் கையிருப்பு சேமிக்கப்பட்டது.] பிறகு தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது, வாங்கினால் இந்தியப் பொருள்களுக்குக் கூடுதல் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் அரசாங்கம் மிரட்டியது. அதையும் ஏற்றுக் கொண்ட மோடி அரசாங்கம், சந்தையை விடக் குறைந்த விலைக்கு ரஷ்யாவிடமிருந்து வாங்கி வந்த கச்சா எண்ணெயின் இறக்குமதியை நிறுத்தியது.
ட்ரம்ப் நிர்வாகம் வெனிசுலா அதிபரைக் கடத்தி, வெனிசுலாவின் மொத்த எண்ணெய் உற்பத்தியையும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு சென்ற உடன், வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் வாங்க வேண்டும் என்று மோடிக்கு அழுத்தம் கொடுத்தது. உடனே இந்தியா வெனிசுலாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கியது. சமீபத்தில், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் என்று ட்ரம்ப் நிர்வாகம் சலுகை கொடுத்தது. மறுபேச்சின்றி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கியிருக்கிறார் மோடி.
ஒரு நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவிற்குத் திரவ இயற்கை வாயுவை [LNG] கொடுப்பதாக ரஷ்யா சொன்னது. அதில் ட்ரம்புக்கு விருப்பம் இல்லை என்பதால் இந்தியா (மோடி அரசாங்கம்) வேண்டாம் என்று மறுத்து விட்டது. தற்போது அதிக விலைக்கு அமெரிக்காவிடம் இருந்து திரவ இயற்கை வாயுவை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. தலையாட்டி பொம்மைகளை விட ட்ரம்பின் கட்டளைகளுக்கு வேகமாகத் தலையாட்டும் மோடி கும்பல்தான் தங்களை உண்மையான தேசப்பற்றாளர்கள் என்கிறது.
சொந்த நாடும் மக்கள் துன்பப்பட்டாலும் பரவாயில்லை, அமெரிக்க முதலாளிகளின் நலனே முக்கியம் என்று, கச்சா எண்ணெயையும் LNG-யையும் அதிக விலைக்கு இறக்குமதி செய்து அந்நியச் செலாவணியை வீணடிக்கும் ஏகாதிபத்திய அடிமைகளான மோடி கும்பலுக்கு, மக்களைப் பார்த்து பெட்ரோல் பயன்பாட்டைக் குறைத்துக்கொள் என்று சொல்வதற்கு என்ன அறுகதை இருக்கிறது?
உலகளவில் கச்சா எண்ணெயின் விலைகள் சரிந்த சமயத்தில், பெட்ரோல் மீதான கலால் வரியை மோடி அரசு பலமுறை உயர்த்தியது (15 மாதங்களில் ஒன்பது முறை), அதன் மூலம் கிடைத்த லாபத்தை இந்திய மக்களுக்குப் பகிர்ந்தளிக்கவில்லை. 2014 மற்றும் 2021 க்கு இடையில், பெட்ரோல் மீதான கலால் வரி ஒரு லிட்டருக்கு ரூ. 9.48 இலிருந்து ரூ. 32.98 ஆக உயர்த்தப்பட்டது (248% அதிகரிப்பு). இதனால் அரசுக்கு ரூ. 38.89 லட்சம் கோடி வருவாய் கிடைத்தது. இத்தொகையில் பத்தில் ஒருமடங்கைப் பயன்படுத்தியிருந்தால் கூடப் போதுமானளவு கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளை உருவாக்கியிருக்க முடியும். அதைக்கூடச் செய்யாமல் தற்போதைய நெருக்கடிக்கு மக்களைக் குறை சொல்வது என்ன நியாயம்?
மக்கள் மட்டும் தியாகம் செய்ய வேண்டுமா?
கச்சா எண்ணெய் விலை உயர்வினால் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் சுமையை [நட்டம்] பெட்ரோலியப் பொருள்களைப் பயன்படுத்தும் மக்களும் ஏற்க வேண்டும் என்கிறார் நிதி அமைச்சர். ஆனால் பெட்ரோல்/டீசல் விற்பனையின் மூலம் லாபம் கிடைத்த போது, அதை மக்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று அவர் சொன்னதில்லை. ஆட்சியாளர்களைப் பொருத்தவரை, அரசுக்கு லாபம் வந்தால் அது முதலாளிகளுக்கானது; நட்டம் வந்தால் அதை மக்கள் தலையில் கட்டுவது – அவ்வளவுதான்.
கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிகள் மூலம் மட்டும் ஒராண்டிற்கு 3.5 லட்சம் கோடியை ஒன்றிய அரசு வசூலிக்கிறது. 2024-25 முடிவடையும் ஐந்து ஆண்டுகளில் மட்டும் 19 லட்சம் கோடிக்கும் அதிகமாக வரி வசூலித்திருக்கிறது. இவ்வருவாயை முதலாளிகளுக்குச் சலுகைகளாகக் கொடுத்திருக்கிறது.
2019 இல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியைக் குறைத்தனர். உள்நாட்டு தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே கார்பரேட் வரி குறைக்கப்பட்டதாக மோடி அரசாங்கம் விளக்கம் சொன்னது. இதனால் அரசுக்கு வர வேண்டிய கார்ப்பரேட் வரி வருவாய் 32 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகக் குறைந்தது. இந்த வரிச் சலுகை அறிவித்த முதல் இரண்டாண்டுகளில் 1.84 லட்சம் கோடி அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக நாடாளுமன்றக் குழுவே கணித்துள்ளது. இவ்வரிச் சலுகைகளின் மூலம் பல லட்சம் கோடிகளை லாபமாகச் சுருட்டிய இந்திய முதலாளிகள் அதை வெளிநாடுகளில் முதலீடு செய்கின்றனர். சமீபத்தில் பேசிய தலைமைப் பொருளாதார ஆலோசகர், “கார்ப்பரேட்டுகள் மற்றும் இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறை தொழில் முனைவோர்கள் தங்களது லாபத்தை இந்தியாவில் முதலீடு செய்வதில்லை; வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்குவதும் முதலீடு செய்வதுமாக உள்ளனர்” என்று கூறினார். இங்கு வெளிப்படையாகவே, மக்களிடமிருந்து அநியாயமாக வசூலிக்கப்பட்ட பெட்ரோலிய வரி மோடியின் ஆசியினால் முதலாளிகளின் பாக்கெட்டுகளில் லாபமாக மடைமாற்றப்பட்டிருக்கிறது. உற்பத்தியே செய்யாமல் லாபம் பார்த்த முதலாளி வர்க்கத்தினரின் வயிற்றைக் கட்டச் சொல்லாமல், பாதிப்படைந்துள்ள பாமர மக்களின் வயிற்றைக் கட்டச் சொல்கிறார் மோடி.
இறுதியாக…
மேற்சொன்ன விவரங்கள் ஒன்றை நமக்கு உணர்த்துகின்றன. உள்நாட்டு உற்பத்தியை அழித்து, அந்நியச் செலாவணி என்ற நச்சுச் சுழலுக்குள் மொத்த நாட்டையும் சிக்க வைத்துள்ள ஆளும் வர்க்கம் [மோடி கும்பல் உட்பட] அதன் ஏற்ற இறக்கத் தாளத்திற்கு நம்மையும் ஆடச் சொல்லுகின்றனர். இந்தியத் தரகு முதலாளி வர்க்கமும் மற்றும் அதன் ஆட்சியாளர்களின் ஏகாதிபத்திய அடிவருடித்தன்மையினாலும் [மறுகாலனியாக்க நடவடிக்கைகள்] ஆண்டுதோறும் பல நூறு பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி வீணடிக்கப்படுவதினால் ஏற்படும் நெருக்கடிகளை, இதற்கு எவ்விதத்திலும் காரணமில்லாத, பெரும்பான்மை உழைக்கும் மக்களைச் சுமக்கச் சொல்கின்றார் மோடி. ஆனால் உழைக்கும் வர்க்கமோ இதனை ஏற்க முடியாது என்று பல்வேறு போராட்டங்களின் வாயிலாக உரக்கச் சொல்கிறது.
- மாணிக்கம்
தகவல் ஆதாரம்
- https://rupeindia.wordpress.com/
- https://indianexpress.com/article/explained/explained-economics/iran-weaker-rupee-impact-india-fertiliser-import-bill-10705935/
- https://indianexpress.com/article/explained/explained-economics/the-other-oil-imports-india-needs-to-worry-about-9033930/
- https://thewire.in/economy/modi-austerity-appeal-bjp-indian-economy





