“சிங்கப்பெண்” ரோந்து வாகனங்களால் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியுமா?
சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் மூன்று வயதுப் பச்சிளங்குழந்தை ஒன்று பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளது. கொலையாளியை ஊர்மக்களே பிடித்துப் போலீசில் ஒப்படைத்திருக்கின்றனர். மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு சமீபத்திய உதாரணமான இந்தச் சம்பவத்தைப் போல, பல நிகழ்வுகள் தினந்தோறும் செய்திகளில் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது என்பது தவெக ஆட்சியமைத்த பின்னர் தொடங்கவில்லை என்றாலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது இதனை ஒரு முக்கிய பிரச்சனையாக முன்னிறுத்திய தவெக தலைவர் விஜய், அன்றைய திமுக அரசைக் கடுமையாகக் கண்டித்ததுடன், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வன்கொடுமைகளைத் தடுத்து, அவர்களுக்கு முற்றிலும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய ‘ராணி வேலுநாச்சியார் படை’ என்ற சிறப்புப் பிரிவு உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதலமைச்சராகப் பதவியேற்றவுடன் விஜய் கையெழுத்திட்ட முதல் மூன்று கோப்புகளில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் சிறப்புப் படையை உருவாக்கும் கோப்பும் ஒன்று. அந்த அளவிற்கு தனது அரசு பெண்களின் பாதுகாப்பில் அக்கறையுடன் செயல்படுவதாக விஜய் காட்டிக் கொண்டார்.
அதற்குப் பிறகு ஒருசில வாரங்களில் மிகுந்த ஆரவாரத்துடனும், விளம்பரத்துடனும் “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை” தொடங்கப்பட்டது. இதற்கென 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படையின் ஐ.ஜி.ஆக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் இணைந்து பணியாற்ற 2,500 போலீசார் இந்தப் படையில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் படை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரி, இந்தப் படையின் நோக்கம் “முன்னெச்சரிக்கை நடவடிக்கை” (Preventive Policing) எடுப்பது என்று கூறியிருக்கிறார். “குற்றங்கள் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, குற்றங்கள் நடக்கும் முன்பே அவற்றைத் தடுப்பதே இந்தப் படையின் முதல் முன்னுரிமை” என்று கூறிய அவர், இதற்காக “பெண்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் ஐடி (IT) நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகள் கண்டறியப்பட்டுத் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்” என்று கூறியிருக்கிறார்.
அதாவது, சிங்கப்பெண் அதிரடிப்படையின் பிரதான வேலை ரோந்துப் பணி என்று அவர் கூறியிருக்கிறார். ரோந்துப் பணிக்காக 319 கார்களும், 101 இருசக்கர வாகனங்களும் இந்தச் சிறப்புப் படைக்கு வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 49 அதிநவீன டிரோன்களும் வாங்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் கடந்த சில வாரங்களாக தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டு வெகுவாகப் புகழப்படுகின்றன.
மாநிலம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வெறுமனே 2,500 போலீசார் போதுமா என்ற கேள்வியைப் பலரும் எழுப்புகின்றனர். தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் 1,302 சட்ட ஒழுங்கு போலீஸ் நிலையங்கள் உள்ளன. சிங்கப்பெண் படைக்கு ஒதுக்கப்பட்டுள்ள போலீசாரின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால், ஒரு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிக்கு இரண்டு போலீசாரை மட்டுமே ஒதுக்க முடியும். ஆகையால், மாநிலம் முழுவதும் இந்தப் படை செயல்படாது.
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 25 மாநகரங்களில் மட்டுமே இந்தப் படை அமைக்கப்படும் வாய்ப்பிருக்கிறது. இதனைத் தாண்டி ஒருசில நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் பெயருக்கு இந்தப் படை தொடங்கப்படலாம். சிங்கப்பெண் அதிரடிப் படையில் ஐ.ஜி. பவானீஸ்வரி கூறியபடி இந்தப் படையின் வேலை ரோந்து சுற்றுவதுதான் என்று வைத்துக் கொண்டால், ரோந்து சுற்றுவதைக் கூட இந்தப் படையால் முழுமையாகச் செயல்படுத்த முடியாது. இந்தப் படைக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நானூற்றுச் சொச்சம் ரோந்து வாகனங்களைக் கொண்டு, எத்தனை இடங்களில் ரோந்துப் பணியைச் செய்ய முடியும்?
தலைநகர் சென்னையையும் அதன் புறநகர் பகுதிகளையும் கண்காணிக்க 350 ரோந்து கார்களும் பல நூறு இருசக்கர வாகனங்களும் தேவை என்கிற நிலையில், சென்னையை முழுமையாகச் சுற்றிவருவதற்குக் கூட இந்தப் படைக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ரோந்து வாகனங்கள் போதாது.
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான கிராமங்கள், நூற்றுக்கணக்கான நகரங்கள், ஆயிரக்கணக்கான பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் உள்ளன. இத்தகைய பரந்த நிலப்பரப்பில் ஒரு சில ஆயிரம் போலீசாரைக் கொண்ட படையால் முழுமையான ரோந்துப் பாதுகாப்பை வழங்க முடியும் என்று நம்புவது யதார்த்தமானதல்ல.
போலீசின் வழக்கமான வேலைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால்கூட, இந்தப் படையின் எண்ணிக்கை மாநிலத்தின் தேவைகளுக்கு மிகவும் குறைவு. இதை வைத்துக் கொண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களையும் வன்கொடுமைகளையும் தடுக்கப்போவதாகக் கதையளக்கிறது தவெக அரசு.
ஒருவேளை போதுமான அளவிற்கு ரோந்து வாகனங்களை ஒதுக்கினால்கூட, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முடியுமா? என்ற அடிப்படையான கேள்வியையும் நாம் கேட்க வேண்டியிருக்கிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் உண்மையில் எங்கே நடக்கின்றன?
பேருந்து நிலையங்களிலா? ரயில் நிலையங்களிலா? சாலைகளிலா?
அல்லது வீடுகளுக்குள்ளா? பள்ளி, கல்லூரிகளிலா? பணியிடங்களிலா? தெரிந்த உறவினர்கள் மற்றும் அறிமுகமானவர்களின் வட்டாரங்களிலா?
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (NCRB) அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பொதுவெளியை (சாலைகளை) விட வீட்டிற்குள் (அடைபட்ட சுவர்களுக்குள்) தான் மிக அதிகமாக நடைபெறுகின்றன. இந்தியாவில் பெண்களுக்கு எதிராகப் பதியப்படும் ஒட்டுமொத்தக் குற்றங்களில் மிக அதிகபட்சமாகச் சுமார் 30% முதல் 31.4% வரையிலான வழக்குகள் “கணவர் மற்றும் அவரது உறவினர்களால் இழைக்கப்படும் கொடுமைகள்” (Cruelty by Husband or his Relatives – IPC Section 498A) என்ற பிரிவின் கீழ் தான் பதிவாகின்றன.
சாலைகளிலோ அல்லது வெளியிடங்களிலோ தெரியாத நபர்களால் நடக்கும் வன்முறைகளை விட, பெண்கள் தங்களுக்கு மிகவும் பாதுகாப்பானது எனக் கருதும் சொந்த வீட்டிலேயே தங்களுக்குத் தெரிந்தவர்களால் அதிக வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்பதை NCRB தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
பதியப்படும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் (சுமார் 7.1%), 90%க்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றவாளிகள் பெண்களுக்கு முன்பே தெரிந்தவர்களாகவோ (உறவினர்கள், அண்டை வீட்டார், நண்பர்கள், ஆசிரியர்கள்) அல்லது வீட்டிற்குள் நெருங்கியவர்களாகவோ இருக்கிறார்கள். தெரியாத நபர்களால் சாலைகளில் நடக்கும் வன்கொடுமைகள் மிகக் குறைந்த சதவீதமே ஆகும். அதாவது, பிரச்சினையின் மையம் தெருக்களில் மட்டும் இல்லை; சமூகத்தின் உள்ளேயும் குடும்ப அமைப்புகளுக்குள்ளும் உள்ளது.
ஆனால் அரசு முன்வைக்கும் தீர்வு என்ன? ரோந்து.
ஒரு வீட்டுக்குள் நடைபெறும் குடும்ப வன்முறையைச் சாலையில் சுற்றும் ரோந்து வாகனம் எவ்வாறு தடுக்கப் போகிறது? ஒரு பள்ளிக்குள் அல்லது கல்லூரிக்குள் நிகழும் பாலியல் தொந்தரவுகளைப் பேருந்து நிலைய ரோந்து எவ்வாறு தடுக்க முடியும்? பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் சுரண்டல்களுக்கு ரோந்தும் கண்காணிப்பும் என்ன தீர்வை வழங்கும்?
சிங்கப்பெண் திட்டத்தின் அறிமுகத்திற்கு மிகப்பெரிய விளம்பரம் வழங்கப்பட்டது. புதிய சீருடைகள், சிறப்பு அணிவகுப்புகள், ஊடக கவனம், அரசியல் மேடைகள் என திட்டம் ஒரு பிரமாண்ட நிகழ்வாக மாற்றப்பட்டது.
இதுபோன்ற வெற்று விளம்பரங்களை மட்டும் வைத்துக் கொண்டு பெண்களின் பாதுகாப்பை அளவிட முடியுமா? முடியாது. ஏனென்றால், பெண்கள் பாதுகாப்பை அளவிடும் உண்மையான அளவுகோல்கள் வேறு:
- குடும்ப வன்முறை குறைகிறதா?
- POCSO வழக்குகள் விரைவாக முடிவடைகிறதா?
- குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் விகிதம் உயருகிறதா?
- பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுகிறதா?
- பணியிடங்களில் பாலியல் புகார் குழுக்கள் திறம்பட இயங்குகிறதா?
- பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உளவியல் மற்றும் சட்ட உதவி கிடைக்கிறதா?
இந்தக் கேள்விகளுக்கான பதில்கள்தான் பெண்களின் பாதுகாப்பைக் குறைந்தபட்சமாவது நிர்ணயிக்கும்; ரோந்து வாகனங்களின் எண்ணிக்கை அல்ல.
பொது இடங்களில் கண்காணிப்பை அதிகரிப்பதற்கும், உடனடி உதவி வழங்குவதற்கும், பெண்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவதற்கும் சிங்கப்பெண் படை உதவலாம். ஆனால் அதற்கு இருக்கும் வரம்புகளை மறைத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைப் பெருமளவில் குறைக்கும் புரட்சிகரத் தீர்வாக அதை விளம்பரப்படுத்துவது மிகைப்படுத்தலே அன்றி வேறில்லை.
ஒரு அரசு பெண்களின் பாதுகாப்பைப் பற்றி உண்மையாக அக்கறை கொண்டிருந்தால், அது புதிய படைகளை உருவாக்குவதைச் சாதனையாகக் கூறிக்கொண்டிருக்காது. மாறாக, பெண்கள் தங்கள் சொந்த வீடுகளில் பாதுகாப்பாக வாழ முடியுமா? குழந்தைகள் பள்ளிகளில் அச்சமின்றி படிக்க முடியுமா? பணியிடங்களில் பெண்களுக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்கிறதா? என்ற கேள்விகளுக்கான பதில்களில்தான் அது கவனம் செலுத்த வேண்டும். அதேசமயம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கான அடிப்படைக் காரணங்களைச் சரி செய்யாமல், அவற்றுக்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இதனைச் சாதிக்க முடியாது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை வெறும் போலீசின் நடவடிக்கைகளால் மட்டுமே தடுக்க முடியாது. ஏனெனில் இக்குற்றங்கள் தனிநபர்களின் ஒழுக்கச் சீர்கேட்டில் இருந்து மட்டும் உருவாகவில்லை; அவற்றை உருவாக்கும் சமூக கலாச்சாரச் சூழலும் உள்ளது.
சிங்கப்பெண் அதிரடிப்படைத் தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் விஜய், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, தனிநபர்களின் ஒழுக்கக் குறைபாடுகளையே முதன்மைக் காரணமாகக் கூறினார். எதிர்க்கட்சிகளோ, போலீசின் செயலற்ற தன்மையின் காரணமாகத்தான் இந்தக் குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன என வாதிடுகின்றன. ஆனால், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை உருவாக்கி வளர்க்கும் ஆழமான சமூக–கலாச்சார சூழலைப் பற்றி பெரும்பாலும் விவாதிக்கப்படுவதில்லை.
ஒரு பெண்ணை சுயமான மனிதராக அல்லாமல், ஆண்களின் நுகர்வுக்கும் இன்பத்திற்குமான போகப் பொருளாகக் காணும் மனப்பான்மையே பாலியல் வன்முறைகளின் சமூக அடித்தளமாக இருக்கிறது. பெண்களைப் பொருளாகப் பார்க்கும் இந்தக் கலாச்சாரம் இன்று பல்வேறு வடிவங்களில் தமிழ்நாட்டில் வேரூன்றி வளர்ந்து வருகிறது.
சினிமா இதற்கான முக்கியமான கருவிகளில் ஒன்று. திரைப்படங்களில் பெண்கள் முழுமையான மனிதர்களாகச் சித்தரிக்கப்படுவதில்லை; மாறாக, கதாநாயகனின் வீரத்தையும் ஆண்மையையும் உயர்த்திக் காட்டுவதற்கான அலங்காரப் பொருளாகவே கதாநாயகிகள் பயன்படுத்தப்படுகின்றனர். கதைக்கு எந்தத் தேவையும் இல்லாத பாடல்களில் பெண்களின் உடலைத் துண்டு துண்டாகக் காட்டும் கேமரா கோணங்கள், இரட்டை அர்த்த வசனங்கள், பெண்களை ஆசைப் பொருளாக மட்டுமே சித்தரிக்கும் நடனக் காட்சிகள் ஆகியவை தொடர்ந்து இடம்பெறுகின்றன. இத்தகைய காட்சிகள் பெண்களின் தனித்துவத்தையும் மனிதத் தன்மையையும் மறைத்து, அவர்களை வெறும் நுகர்வுக்கான காட்சிப் பொருளாகக் குறைக்கின்றன.
அதேபோல், பல திரைப்படங்களில் பெண்களைத் தொடர்ந்து தொந்தரவு செய்வதும், மறுத்த பின்னரும் பின்தொடர்வதும், வற்புறுத்துவதும் காதலின் வெளிப்பாடாகக் காட்டப்படுகிறது. பெண்ணின் சம்மதம் ஒரு பொருட்டல்ல; ஆண் தொடர்ந்து முயன்றால் இறுதியில் பெண் சம்மதித்துவிடுவாள் என்ற ஆபத்தான கருத்து பரப்பப்படுகிறது. இத்தகைய சித்தரிப்புகள் பெண்களின் விருப்பத்தையும் சம்மதத்தையும் மதிக்காத மனப்பான்மையைச் சமூகத்தில் இயல்பாக்குகின்றன.
சமூக ஊடகங்களின் வளர்ச்சி இந்தப் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக ஊடகத் தளங்களில் பெண்களின் உடல் தோற்றத்தை மையப்படுத்திய உள்ளடக்கங்கள் அதிக பார்வைகளைப் பெறுகின்றன. இந்த உள்ளடக்கங்களை உருவாக்குபவர்கள் (Content Creators) பெண்களின் உடலை ஒரு வணிகப் பொருளாக மாற்றிப் பார்வையாளர்களை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதனுடன், பெண்களை அவமதிக்கும் கருத்துகள், பாலியல் ரீதியான கிண்டல்கள், இழிவான மீம்கள் ஆகியவையும் பரவலாகப் பகிரப்படுகின்றன.
பெண்களை வணிகப்பொருளாக மாற்றும் வேலையை விளம்பரத் துறை பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து செய்து வருகிறது. கார்கள், மொபைல் போன்கள் தொடங்கி ஆண்களுக்கான உள்ளாடைகள் வரை, பெண்களுடன் நேரடித் தொடர்பே இல்லாத பல பொருட்களின் விளம்பரங்களிலும் பெண்களின் உடல் ஒரு விற்பனை உத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது. பொருளின் தரத்தை விடப் பெண்ணின் தோற்றத்தை முன்னிறுத்தும் இந்த அணுகுமுறை, பெண்களை மனிதர்களாக அல்லாது சந்தைப்படுத்தலுக்கான கருவிகளாகக் காட்டுகிறது.
இணைய மீம்கள் மற்றும் பொழுதுபோக்கு உள்ளடக்கங்களிலும் பெண்களைப் பற்றிய இழிவான அணுகுமுறை பரவலாகக் காணப்படுகிறது. நடிகைகள் மற்றும் பெண் பொதுப்பிரமுகர்களின் கருத்துகள் அல்லது திறமைகள் குறித்து விவாதிப்பதற்குப் பதிலாக, அவர்களின் உடல் தோற்றத்தை மட்டுமே மையப்படுத்தும் பதிவுகள் அதிகமாகப் பகிரப்படுகின்றன. பெண்களை அவமதிப்பதையே நகைச்சுவையாகக் கருதும் மனப்பான்மை சமூக ஊடகங்களில் இயல்பாக்கப்படுகிறது.
அரசியல் துறையிலும் இதே போக்கு தொடர்கிறது. பெண் அரசியல்வாதிகள் அல்லது சமூகச் செயற்பாட்டாளர்களின் கொள்கைகள் மற்றும் அரசியல் கருத்துகளுக்கு எதிராக விவாதிப்பதற்குப் பதிலாக, அவர்களின் உடை, தோற்றம், குடும்ப வாழ்க்கை அல்லது தனிப்பட்ட விஷயங்களை மையப்படுத்தித் தாக்குதல் நடத்தப்படுகிறது. இது, பெண்களை அரசியல் சிந்தனை கொண்ட மனிதர்களாக அல்லாமல், பாலின அடிப்படையில் மட்டுமே மதிப்பிடும் சமூக மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.
பெண்களைப் பொருளாகப் பார்க்கும் இந்தக் கலாச்சாரம் தனித்துப் பாலியல் வன்முறையை உருவாக்கிவிடும் என்று கூற முடியாது. ஆனால் இது, பெண்கள் ஆண்களின் இன்பத்திற்கான பொருட்கள் என்ற எண்ணத்தைச் சமூகத்தில் வலுப்படுத்துகிறது. பெண்களின் சம்மதம், சுயமரியாதை மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை இரண்டாம் நிலைக்குத் தள்ளுகிறது. இத்துடன், நமது இந்தியச் சமூகத்தில் வேரூன்றிக் கிடக்கும் ஆணாதிக்கமும், சாதிய மனோபாவமும் இணைந்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைச் சர்வ சாதாரணமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன.
இளைஞர்களிடையே கட்டுப்பாடின்றி பரவும் ஆபாசப் படங்கள், குறிப்பாகப் பெண்களை நுகர்வுப் பொருளாகவும் ஆண் இன்பத்திற்கான கருவியாகவும் சித்தரிக்கும் ஆபாச உள்ளடக்கங்கள், ஏற்கனவே சமூகத்தில் நிலவும் ஆணாதிக்க மனோபாவத்தையும், பெண்களைப் பொருளாகப் பார்க்கும் மனப்பான்மையையும் மேலும் வலுப்படுத்தும் வேலையைச் செய்கின்றன.
இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் விஜய், சினிமா நடிகராக நடித்த பல திரைப்படங்களில் ஆணாதிக்கத்தையும், பெண்களின் சம்மதத்தை மதிக்காத மனப்பான்மையையும் மக்களிடையே இயல்பாக்கும் கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளார். அந்தக் கதாபாத்திரங்களைக் கைதட்டி ரசித்த அவரது ரசிகர்களில் சிலர், இன்று அவரது அரசியல் கட்சியில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் நிலையில் கூட பெண்களுக்கு எதிரான அதே பிற்போக்கான மற்றும் வக்கிரமான அணுகுமுறையுடன் செயல்படுகின்றனர் என்பதற்கு, தவெக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மீது பதிவாகும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தொடர்பான செய்திகள் எடுத்துக்காட்டாக உள்ளன.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க புதிய படைகள், ரோந்து வாகனங்கள், டிரோன்கள் ஆகியவை பெரிய அளவில் உதவாது, பிரச்சினையின் அறிகுறிகளை கையாள மட்டுமே அவை பயன்படும்; அதன் வேர்களை அல்ல.
பெண்களைப் போகப் பொருளாகச் சித்தரிக்கும் சினிமா, விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடகக் கலாச்சாரம்; இளைஞர்களிடையே கட்டுப்பாடின்றி பரவும் ஆபாச உள்ளடக்கங்கள்; பெண்களின் சம்மதத்தை மதிக்காத ஆணாதிக்க மனப்பான்மை; சாதிய ஆதிக்கம் மற்றும் குடும்ப அமைப்புகளுக்குள் நிலவும் அதிகார உறவுகள் ஆகியவற்றின் மீதே பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் சமூக அடித்தளம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
எனவே பெண்களின் பாதுகாப்பு என்பது வெறும் சட்டம்–ஒழுங்குப் பிரச்சினையல்ல. அது ஒரு சமூக, கலாச்சார அரசியல் பிரச்சினையாகும். இந்த அடிப்படைக் காரணிகளைக் களையாமல், ராணி வேலுநாச்சியார் பெயரில் புதிய படைகளையும் ரோந்து வாகனங்களையும் உருவாக்குவது மக்களின் பாதுகாப்பிற்கான தீர்வாக அல்லாமல்; பாதுகாப்பு பற்றிய ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கும் முயற்சியாகவே முடியும்.
- சந்திரன்



