எஸ்.ஐ.ஆர். – தேர்தல் ஆணைய சதிகளும்
உச்ச நீதிமன்றத்தின் கள்ளக் கூட்டும்

காவி பாசிசக் கும்பலின் அரசியல் சதித் திட்டங்களைச் சட்டப் பூர்வமானதாகவும் ஜனநாயக நடைமுறையின் ஒரு பகுதியாகவும் அங்கீகரித்து, அவற்றைச் செயல்படுத்துவதற்கான வழியை அமைத்துக் கொடுக்கிறது, உச்ச நீதிமன்றம். எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் அது நடந்துகொண்ட விதம் இதற்கான மற்றுமொரு சான்று.

நீதிமன்றம்தான் ஜனநாயகத்தின், சாமானியனின் இறுதிப் புகலிடம் என்பதெல்லாம் எப்போதும் பொய்க்கதைதான். வர்க்கமாகப் பிளவுண்டுள்ள சமூகத்தில், அதிகார வர்க்கம், அரசியல் கட்சிகள், போலீசு, ஆயுதப் படைகள் என அனைத்து உறுப்புகளையும் போலவே, நீதித்துறையும் எப்போதும் எக்காலத்திலும் ஆளும் வர்க்கங்களுக்கே சேவை செய்து வந்துள்ளது. எனினும், பிற நிறுவனங்களின் ‘நடுநிலை’ முகத்திரை கிழிந்தாலும், நீதித்துறையின் மீதான பிரமைக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாதென மிகவும் கவனத்தோடு பேணிப்பாதுகாக்கிறது, ஆளும் வர்க்கம்.

பொதுவாகவே ஆளும் வர்க்கங்களைப் பாதுகாக்கும் நீதித்துறை, 2014-இல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு படிப்படியாக பாசிசக் கும்பலின் கைப்பாவையாக மாற்றப்பட்டு வருகிறது. அயோத்தி பாபர் மசூதி தீர்ப்பு, காஷ்மீர் 370 நீக்கத் தீர்ப்பு என இதற்குப் பல சான்றுகள் உள்ளன. எஸ்.ஐ.ஆர். – தேர்தல் ஆணைய சதிகள் தொடர்பான வழக்குகளை நீதித்துறை கையாண்ட விதமும் இதையே நிரூபிக்கிறது. 

வாக்குரிமைப் பறிப்புக்கு உடந்தையாக உச்சநீதிமன்றம்

ஜூன் 2025-இல் பீகாரில் முதன்முதலாக எஸ்.ஐ.ஆர். நடைமுறையானபோது, வாக்காளர்கள் தங்களது அடையாளத்தையும் குடியுரிமையையும் நிரூபிப்பதற்காகச் சமர்ப்பிக்க வேண்டிய 11 ஆவணங்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அப்பட்டியலில் ஆதார் எண் இடம்பெறவில்லை. இதையடுத்து, எஸ்.ஐ.ஆர். பெரும்பாலான வாக்காளர்களை உள்ளடக்குவதற்குப் பதிலாக, அவர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து வெளியேற்றும் நோக்கம் கொண்டது (mass exclusion against mass inclusion) என்றும், எனவே எஸ்.ஐ.ஆரையே முற்றாக இரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி ஏ.டி.ஆர்., பி.யூ.சி.எல். உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.

இதுபோன்றதொரு பெரிய அளவிலான வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொள்ளவும், எல்லா வாக்காளர்களையும் அவர்களது அடையாளங்களை உறுதிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தவும், எந்தவொரு இந்தியக் குடிமகனின் வாக்குரிமையைப் பறிக்கவும் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என ஏ.டி.ஆர். வாதிட்டது.

இவ்வழக்கு விசாரணையின் ஆரம்பக் கட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறையைக் கண்டித்தும், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளைச் சந்தேகத்துடனும் அணுகுவதைப் போன்ற தோற்றத்தை உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தியது. தகவல்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. எஸ்.ஐ.ஆருக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் எதிராகச் சாட்டையைச் சுழற்றுவது போன்ற கடுமையான கருத்துகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். “ஆயிரம் அல்ல, நூறு அல்ல, பத்து வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருந்தால்கூட எஸ்.ஐ.ஆர். நடைமுறையை இரத்து செய்துவிடுவேன்” என்று நீதிபதிகள் ஆவேசமாகக் கூறினர்.

அதேவேளையில், ஆதார் எண்ணைக் குடியுரிமைக்கான சான்றாக ஏற்றுக்கொள்ள முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், அதனை அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்பிறகு, பீகாரில் எஸ்.ஐ.ஆரின் முதல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டபோது, அதிலிருந்து 65 இலட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, எஸ்.ஐ.ஆர். என்பதே “வாக்காளர்கள் மீதான ஒரு பெரிய மோசடி” என்று ஏ.டி.ஆர். அமைப்பும் எதிர்க்கட்சிகளும் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வாக்காளர்கள் ஏன் நீக்கப்பட்டார்கள் என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் கேட்டது. ஆனால், கடைசிவரை நீதிமன்றம் கேட்ட விளக்கத்தைத் தேர்தல் ஆணையம் அளிக்கவே இல்லை. நீதிமன்ற அவமதிப்பான இதுகுறித்து நீதிபதிகளும் கண்டுகொள்ளவில்லை.

“10 பேர் வாக்குரிமை போனாலும் எஸ்.ஐ.ஆரையே ரத்து செய்துவிடுவேன்” என்று ஆரம்பத்தில் ஆவேசமாகப் பேசிய உச்சநீதிமன்றம், பின்னர், பெரும்பாலான மக்களை “உள்ளடக்கும் வகையில்” எஸ்.ஐ.ஆர். நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியதுடன், அதனை ஒரு “வாக்காளர்களுக்கு உகந்த செயல்முறை” என்றும் புகழ்ந்து தள்ளியது! அதுமட்டுமின்றி, “விடுபட்ட வாக்காளர்களைச் சேர்க்க எதிர்க்கட்சிகள் உதவி செய்ய வேண்டும்; மாறாக, பொறுப்பின்றி இருக்கக் கூடாது” என்று எதிர்க்கட்சிகளையே கண்டித்தது. இறுதியில் பீகாரில் எஸ்.ஐ.ஆர். நடைமுறைப்படுத்தப்பட்டதை ஏற்றுக்கொள்வதாகவும், அதையே நாடு முழுவதும் மற்ற மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தலாம் எனவும் அனுமதியளித்தது.

பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆரை இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தி முடித்தது. அப்போதும் தமிழ்நாடு அரசு உட்பட பலரும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர்.குப் பிறகு, அம்மாநிலத்தின் வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 91 இலட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன.

இவர்களில் 63 இலட்சம் பேர் “அங்கு இல்லாதவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் அல்லது இரட்டைப் பதிவுகளைக் கொண்டவர்கள்” என வகைப்படுத்தப்பட்டனர். எஞ்சிய 27 இலட்சம் பேரின் பதிவுகளில் எழுத்துப்பிழைகள், பாலினம் குறித்த பதிவுகளில் பிழைகள், பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியுடன் வழக்கத்திற்கு மாறான வயது இடைவெளி போன்ற “தர்க்கரீதியான முரண்பாடுகள்” இருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

எஸ்.ஐ.ஆர். நடைமுறையின் மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து தங்களது பெயர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து வாக்காளர்கள் அளித்த ஆட்சேபனைகளை விசாரிப்பதற்காக உச்சநீதிமன்றம் 19 தீர்ப்பாயங்களை அமைத்தது. இந்தத் தீர்ப்பாயங்களில் 34 இலட்சத்திற்கும் அதிகமான மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், அந்த 34 இலட்சத்திற்கும் அதிகமான மேல்முறையீடுகளில் வெறும் 1,607 பேருக்கு மட்டுமே மீண்டும் வாக்காளர் பட்டியலில் இடமளிக்கப்பட்டது. எஞ்சியவர்கள் வாக்குரிமையை இழந்த நிலையிலேயே மேற்கு வங்கத் தேர்தல் நடந்து முடிந்தது. அம்மாநிலத்தில் பாஜக ஆட்சியையும் கைப்பற்றியுள்ளது.

“தர்க்கரீதியான முரண்பாடுகள்” பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களின் விவரங்களில் காணப்பட்ட பிழைகள், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த வாக்காளர் பட்டியல்களிலும் காணப்பட்ட பிழைகள்தான். மற்ற மாநிலங்களில் இத்தகைய பிழைகள் திருத்தப் பணிகளின்போதே சரிசெய்யப்பட்ட நிலையில், மேற்கு வங்கத்திற்கு மட்டும் தனித்துவமான நடைமுறையைப் பின்பற்றி, அம்மாநிலத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றுவதற்குத் தேர்தல் ஆணையம் துணை நின்றது.

இவ்வாறு மேற்கு வங்க மக்களின் வாக்குரிமையைத் தேர்தல் ஆணையம் பறிப்பதை எதிர்த்தும், அதனைத் தடுத்து நிறுத்தக் கோரியும் ஏ.டி.ஆர்., பி.யூ.சி.எல். உள்ளிட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. ஆனால், அவ்வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்றம் நடந்துகொண்ட விதம், மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாக்க வேண்டிய நீதிமன்றம், அதற்குப் பதிலாக இந்தியத் தேர்தல் ஆணையத்துடன் ஓர் இளைய பங்காளியைப் போலக் கைகோர்த்துக்கொண்டு, மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் நடவடிக்கையில் துணை நிற்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர். நடைமுறையின் மூலம் வாக்குரிமை பறிக்கப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூரிய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மாலா பக்க்ஷி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

மேற்கு வங்கத் தேர்தல் நடைபெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற விசாரணையின்போது, ஒரு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது சுமார் 2 சதவீத வாக்குகளாக இருக்கும் நிலையில், 15 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் போவது தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நீதிபதி பக்க்ஷி ஒப்புக்கொண்டார்.

மேலும், 34 இலட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை முடிவடையாததால், பல இலட்சம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, மற்ற மாநிலங்களில் நடைமுறையில் இல்லாத “தர்க்கரீதியான முரண்பாடுகள்” பட்டியலை மேற்கு வங்கத்தில் மட்டும் தேர்தல் ஆணையம் கொண்டுவந்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். இதன் மூலம், பீகார் தேர்தலின்போது நாடு முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறை பின்பற்றப்படும் என்று தேர்தல் ஆணையம் அளித்திருந்த வாக்குறுதியிலிருந்து அது விலகிவிட்டதாகவும் கண்டித்தார். வாக்காளர்களைச் சேர்ப்பதிலும் நீக்குவதிலும் மிகப்பெரிய அளவில் தவறுகள் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைக் கடுமையாகக் கண்டித்த உச்சநீதிமன்ற அமர்வு, அதற்கு முற்றிலும் முரணான வகையில், மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை முடிவடையாத காரணத்தால் பல இலட்சம் வாக்காளர்களை மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டது!

மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை முடியும் வரை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியபோது, “மிகப்பெரிய அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தால் தவிர, தேர்தல் நடைமுறையில் எங்களால் தலையிட இயலாது” என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது! 34 இலட்சம் பேர் தங்களது வாக்குரிமை பறிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பது, மிகப்பெரிய அளவிலான வாக்குரிமைப் பறிப்பாக நீதிமன்றத்தின் கண்களுக்குத் தெரியவில்லை!!

தற்போது தேர்தலை நடத்தினால் பல இலட்சம் வாக்காளர்களால் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்படும் என்று மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டபோது, “ஒரு தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போவதை, வாக்குரிமை நிரந்தரமாகப் பறிக்கப்பட்டதாகக் கருத முடியாது” என்று நீதிபதி தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியலைத் தயாரித்து வைத்திருப்பதும், அதனை அவ்வப்போது சரிபார்ப்பதும் தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் மீண்டும் தங்களது ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோர முடியாது. 1960ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட நடைமுறையைத்தான் தேர்தல் ஆணையம் பின்பற்ற வேண்டும். அதனை விடுத்துப் புதிது புதிதாக நடைமுறைகளை உருவாக்கிக்கொண்டே செல்ல முடியாது என்று மனுதாரர் தரப்பில் மீண்டும் மீண்டும் வாதிடப்பட்டது. ஆனால், இந்த வாதங்களை உச்சநீதிமன்றம் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.

இதற்குப் பதிலாக, எஸ்.ஐ.ஆர். நடைமுறையை எவ்வாறு விரைவாக முடிக்கலாம் என்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதில் நீதிமன்றம் இறங்கியது. இதற்குத் தனது கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் உதவியையும் நாடியது. மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்காக 19 தீர்ப்பாயங்களை அமைத்த உச்சநீதிமன்றம், அவற்றில் கீழமை நீதிமன்ற நீதிபதிகளும் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதாவது, வாக்காளர்களின் ஆவணங்களைக் கோருவதற்குத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்று தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முடிவடைவதற்கு முன்பாகவே, அதே விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்குத் தனது கீழமை நீதிமன்ற நீதிபதிகளையே உச்சநீதிமன்றம் அனுப்பி வைத்தது.

மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்து உரிய தீர்வு காண்பதற்குப் பதிலாக, அந்த வாக்குரிமைப் பறிப்பு நடவடிக்கையை எவ்விதத் தவறுமின்றி, நேர்த்தியாகச் செயல்படுத்துவது எப்படி என்பதை உச்சநீதிமன்றமே முன்னின்று மேற்பார்வையிட்டு நிறைவேற்றிக் காட்டியது.

குடியுரிமைப் பறிப்புக்கு உடந்தையாக உச்சநீதிமன்றம்

“குடியுரிமையைச் சோதிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறதா” என்ற கேள்வியிலும் உச்சநீதிமன்றம் ஆளும் காவி பாசிசக் கும்பலுக்குச் சார்பாகவே செயல்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர்.க்கு எதிரான மாநிலங்களின் வழக்கில் குடியுரிமை சோதிக்கப்படுவதற்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் கூறிய கருத்துகளே இதற்குச் சான்று.

“ஆதார் வைத்திருக்கும் காரணத்திற்காக ஊடுருவல்காரர்களை வாக்காளர்களாக்க முடியுமா?”

“ஒருவருக்கு ரேஷன் பெறுவதற்காக ஆதார் வழங்கப்பட்டுவிட்டதால், அவர் வாக்காளராகவும் ஆக்கப்பட வேண்டுமா?”

“கொடுக்கப்படும் படிவங்களை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு தேர்தல் ஆணையம் என்ன போஸ்ட் ஆபிசா?”

“ஒருவரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு முன்னதாக, அவர் சமர்ப்பித்த ஆவணங்களின் உண்மைத்தன்மையைச் சோதிப்பதற்கும், அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறது.”

இவ்வாறு, ஒரு தேர்ந்த காவி பாசிஸ்டைப் போலப் பேசிய உச்சநீதிமன்றம், குடியுரிமையைச் சோதிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது என்ற அதன் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக நின்றுள்ளது.

முக்கியமாக, தேர்தல் ஆணையத்தின் 2003 வழிகாட்டு நெறிமுறையின் பாரா 32-இன்படி, “ஒருவரது குடியுரிமையைச் சோதிப்பது தேர்தல் பதிவு அலுவலரின் பணியல்ல” என்று தெளிவாக உள்ளதையும், அது ஒன்றிய அரசின் பணி என்பதையும் அவர்கள் சுட்டிய போதும் மேற்கண்டவாறு கூறியுள்ளது, உச்ச நீதிமன்றம்!

அண்டை நாடுகளில் இருந்து ஊடுருவல்காரர்கள் நம் நாட்டில் ஊடுருவி பல்வேறு இடங்களில் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை வாங்கிவைத்துள்ளனர். அதனைப் பயன்படுத்தி வாக்காளர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். எனவே, எஸ்.ஐ.ஆர். நடைமுறையின் போது வாக்குரிமை கோரிச் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களை மட்டும் வைத்து தேர்தல் ஆணையம் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த முடியாது; ஒருவரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு முன்னதாக, அவர் குறித்த உண்மைத்தன்மை, பின்னணி, தகுதி (குடியுரிமை, வயது, வசிப்பிடம்) ஆகியவற்றைத் தேர்தல் ஆணையம் சரிபார்க்க வேண்டும். அதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என இதன்மூலம் உச்சநீதிமன்றம் கூறியது.

சற்று உற்று நோக்கினால், உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துகளுக்கும் காவி பாசிசக் கும்பல் தொடர்ந்து முன்னெடுத்துவரும் பிரச்சாரத்திற்கும் இடையிலான ஒற்றுமையைப் புரிந்துகொள்ள முடியும். ஆம், “இலட்சக்கணக்கான வங்கதேச இஸ்லாமியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவி, வாக்காளர்களாகப் பதிவு செய்துகொண்டு, இந்துக்களுக்கு எதிராகவும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆதரவாகவும் வாக்களிக்கின்றனர்” என்ற காவி பாசிஸ்டுகளின் பிரச்சாரத்தையே உச்சநீதிமன்றம் வேறு வார்த்தைகளில் வெளிப்படுத்தியுள்ளது.

000

எஸ்.ஐ.ஆர். நடைமுறையானது பாஜகவுக்குச் சாதகமாகவும், அதன் தேர்தல் வெற்றியை உறுதிசெய்யும் நோக்கத்துடனும் தேர்தல் ஆணையத்தால் செயல்படுத்தப்படுகிறது என்பதை அறிந்திருந்தும் உச்சநீதிமன்றம் அதற்கு அனுமதியளித்தது. பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கக்கூடிய இஸ்லாமியர்கள் குறிவைத்து வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர் என்று ஏ.டி.ஆர். உள்ளிட்ட அமைப்புகள் பலமுறை சுட்டிக்காட்டியதுடன், தேர்தல் ஆணையத்தின் தரவுகளே இதனை நிரூபித்தபோதும் உச்சநீதிமன்றம் அதைக் கண்டும் காணாமல் இருந்தது. 34 இலட்சம் வாக்காளர்கள் தங்களது வாக்குரிமை பறிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்த நிலையிலும், அவர்கள் வாக்களிக்க முடியாத சூழலிலேயே மேற்கு வங்கத் தேர்தலை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதித்தது. அதன் மூலம், அம்மாநிலத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும் வழிவகுத்தது.

இவை அனைத்தும் முடிவடைந்த பிறகு, இறுதியாக, “எஸ்.ஐ.ஆர். நடைமுறையை மேற்கொள்வதற்கு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு அதிகாரம் உள்ளது” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், சுதந்திரமான, நேர்மையான தேர்தல்களை நடத்துவதற்கு எஸ்.ஐ.ஆர். போன்ற நடவடிக்கைகள் அவசியம் என்றும் கூறியது.

தேர்தல் ஆணையம் குடியுரிமையைச் சோதிப்பதற்காகத்தான் ஆவணங்களைக் கேட்கிறது என்ற வாதத்தைத் தனது இறுதித் தீர்ப்பில் புறந்தள்ளிய உச்சநீதிமன்றம், எஸ்.ஐ.ஆர்.-இன் போது வாக்காளர்களிடம் ஆவணங்களைக் கேட்பது, அவர்கள் இந்தியக் குடிமக்கள் என்ற அனுமானத்தை மாற்றிவிடாது என்றும் கூறியது.

எஸ்.ஐ.ஆர். நடைமுறையால் இலட்சக்கணக்கான மக்கள் தங்களது வாக்குரிமையை இழந்தபோது, அதனைத் தடுத்து நிறுத்துவதற்கோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கோ உச்சநீதிமன்றம் முன்வரவில்லை. மாறாக, அந்த நடைமுறையைத் தேர்தல் ஆணையம் தடையின்றிச் செயல்படுத்துவதற்குத் துணை நின்றுள்ளது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளால் தேர்தல் முடிவுகளே பாதிக்கப்படக்கூடும் என்பது தெரிந்திருந்தும், தேர்தலை ஒத்திவைக்க மறுத்தது. இறுதியில், எஸ்.ஐ.ஆர். நடைமுறைக்கு அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளது.

காவி பாசிசக் கும்பலின் அரசியல் சதித் திட்டங்களைச் சட்டப் பூர்வமானதாகவும் ஜனநாயக நடைமுறையின் ஒரு பகுதியாகவும் அங்கீகரித்து, அவற்றைச் செயல்படுத்துவதற்கான வழியை அமைத்துக் கொடுக்கிறது. எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நடந்துகொண்ட விதம் இதற்கான மற்றுமொரு சான்று. இத்தகைய நீதிமன்றங்களை நம்பி, முறையிட்டு மக்கள் தங்கள் வாக்குரிமையையும் குடியுரிமையையும் பெற்றுவிட முடியுமென்று கருதுவது தற்கொலைப்பாதையே!

  • அறிவு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன