தி கிரேட் நிகோபார்:
அமெரிக்க, ஜப்பான் எஜமானர்களுக்கான
அடிமையின் திட்டம்!
இந்தியப் பெருநிலப் பரப்பிலிருந்து 1600 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அந்தமான் & நிகோபார் தீவுக்கூட்டங்களில் ஒன்றான நிகோபார் தீவில் மாபெரும் உட்கட்டமைப்புத் திட்டம் (infrastructure) என்ற பெயரில் 85,000 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு நாசகரத் திட்டத்தை மோடி கும்பல் அமல்படுத்தத் துடித்து வருகிறது.
கிரேட் நிகோபார் திட்டம் எனும் இத்திட்டம் நான்கு இணைத் திட்டங்களை உள்ளடக்கியதாகும். 1) கிரேட் நிக்கோபாரின் கலாத்தியா விரிகுடாவில் (Galathea Bay) சர்வதேச சரக்குப் பெட்டகப் பரிமாற்ற முனையம் (International Container Transhipment Terminal) கொண்ட துறைமுகம் அமையவிருக்கிறது; இம்முனையம் ஆண்டுக்கு சுமார் 1.42 கோடி கொள்கலன்களை (TEU – Twenty-foot Equivalent Unit 20 அடி கொள்கலன்கள்) கையாளும் என மதிப்பிடப்பட்டுள்ளது; 2) சர்வதேச சரக்கு மற்றும் பயணிகள் விமான நிலையம்; இது சிவில் மற்றும் இராணுவப் பயன்பாட்டிற்காகக் கொண்டுவரப்படுவதாகக் கூறப்படுகிறது; 3) 6.5 இலட்சத்திற்கும் அதிகமான மக்களைக் குடியேற்ற புதிய நகரம்; 4) 450 மெகாவாட் உற்பத்தித் திறனுடைய சூரிய மற்றும் திரவ எரிபொருள் மின்நிலையகள் (LNG) அமைப்பது – என மொத்தம் 16,610 ஹெக்டரில் (166.1 சதுர கி.மீ.) இத்திட்டம் வரவுள்ளது.
மீட்டமைக்கமைக்க இயலாத (irreversible) சூழலியல் பேரழிவு!
இத்திட்டத்தின் மொத்தப் பரப்பளவு 166 சதுர கி.மீ. தீவுப்பகுதி மட்டுமின்றி, சில சதுர கி.மீ. கடற்பரப்பும் இதில் அடங்கும். இதில் 130 சதுர கி.மீ. அடர்ந்த மழைக் காடுகள் ஆகும். இவ்வடர்ந்த மழைக்காடுகள், கடற்கரை மற்றும் தீவினை ஒட்டிய கடல் ஆகியவை உலகின் எப்பகுதியிலும் இல்லாத தனித்தன்மைகளையும் பல்லுயிர்ச் சூழல்களையும் கொண்டுள்ளன. இதனால் ஏற்படும் சூழலியல் பேரழிவுகள், மீட்டமைக்க (irreversible) முடியாத ஒன்றாக இருக்கும்.
மொத்தம் 910 சதுர கி.மீ. பரப்புடைய நிகோபார் தீவில், 426.23 சதுர கி.மீ. பரப்பில் கேம்பெல் வரிகுடா தேசிய பூங்காவும்; 110 சதுர கி.மீ. பரப்பில் கலாத்தியா தேசிய பூங்காவும்; 11.44 சதுர கி.மீ. கடற்பரப்பில் கலாத்தியா விரிகுடா வனவுயிரின சரணாலயமும் உள்ளன. இம்மூன்று பகுதிகளைச் சுற்றியும் 10 கி.மீ.கள் பாதுகாக்கப்பட்ட ‘இயல்பான – சூழல் உணர்திறன் மண்டலமாக’ (Default – Eco-Sensitive Zone) உள்ளன. இத்தீவைச் சுற்றியும் 100 சதுர கி.மீ.களுக்கும் அதிகமாக பாதுகாக்கப்பட்ட பவளப்பாறை திட்டுக்கள் உள்ளன.
இவையனைத்தையும் உள்ளடகிய பகுதி, இந்தியாவின் 18 உயிர்க்கோளங்களில் (Biosphere) ஒன்றாகவும், யுனெஸ்கோ (UNESCO) அமைப்பால் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 13 உயிர்க்கோளக் காப்பகங்களில் (Biosphere Reserve) ஒன்றாகவும் உள்ளது. இந்த உயிர்க்கோளங்களின் பரப்பளவு 885 சதுர கி.மீ. ஆகும். அதில் 71 சதுர கி.மீ. நிலத்தை இந்த மெகா-திட்டதிற்காகக் காவுகொடுக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது. இதனுள் பழங்குடியினரது காப்பு நிலங்களும் (Tribal Reserve Land) அடங்கும்; இவை அரை-நாடோடி வாழ்வியலை மேற்கொள்ளும் சோம்பன் பழங்குடியினருக்கான பாதுகாக்கப்பட்ட நிலங்களாகும். தீவின் தென்பகுதியில் இத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதால், இங்கு 130 சதுர கி.மீ. காடுகள் மட்டுமன்றி, தீவை ஒட்டியுள்ள பல நூறு சதுர கி.மீ. ஆழம் அதிகமில்லாத சூழல் உணர்திறன் மிக்க கடற்பகுதியும் அழிவுக்குள்ளாகவுள்ளது.
இதை நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற வெறியில் பல்வேறு சூழலியல் சட்டங்கள், விதிகளை மாற்றியும் நீர்த்துப்போகவும் செய்துள்ளது, மோடி கும்பல்.
மேற்கூறிய 426 சதுர கி.மீ.யில் உள்ள கேம்பெல் விரிகுடா தேசிய பூங்கா, 110 சதுர கி.மீ. கலாத்தியா தேசிய பூங்கா ஆகியவற்றைச் சுற்றியுள்ள 10 கி.மீ. பகுதிகள் பாதுகாக்கப்பட்ட ‘இயல்பான சூழல் உணர்திறன் மண்டலம்’ (Default Eco-Sensitive Zone) ஆகும். ஆனால், கடந்த அக்டோபர் 2020-இல் இந்த எல்லைகளை 0 கி.மீ. முதல் 1 கி.மீ.வரை என குறைத்து ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சோம்பன் எனும் அரை நாடோடிகளான பழங்குடிகள் வாழும் அடர்ந்த மழைக்காடுகள் “பழங்குடி காப்பு நிலங்களாக” (Tribal Reserve Area) அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், மோடி அரசு கடந்த நவம்பர் 2020-இல் இதில் 84.10 சதுர கி.மீ. காடுகளை, அந்த அந்தஸ்தில் இருந்து நீக்கி (de-notify) அறிவித்துள்ளது.
1986 சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், இந்தியாவின் கடற்கரைச் சூழல் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் வளங்களைப் பாதுகாக்கும் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பானையின் (CRZ Notification) கீழ், 2021-இல் அந்தமான் மற்றும் அதைச் சுற்றியுள்ள கடல்சார் பகுதிகள் குறித்து மோடி அரசு ஒரு வரைபடத்தைத் (coastal map) தயாரித்துள்ளது. 2018-இல் தயாரிக்கப்பட்ட கடல்சார் வரைபடத்திற்கும் 2021 வரைபடத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருப்பது அம்பலமாகியுள்ளது. அதாவது, 2018 வரைபடத்தில் கடல்பகுதியில் ஆழம் அதிகம் இல்லாத, கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் இருந்துவந்த பவளப்பாறைகள் காணாமலாக்கப்பட்டு, தொலைவான, ஆழம் அதிகம் உள்ள பகுதிகளில் இருப்பது போல 2021 வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது. பொதுவாக பவளப்பாறைகள் ஆழம் அதிகமுள்ள பகுதிகளில் வாழாது. பவளப்பாறைகள் இருக்கும் பகுதி சூழலியல் உணர்திறன் மண்டலம் என்பதால், சட்டப்படியே அது வளர்ர்சி தடைசெய்யப்பட்ட (no development zone) பகுதியாகும். எனவே, இத்திட்டத்திற்காக வரைபடத்தையே மோசடியாக மாற்றியமைத்துள்ளது, மோடி கும்பல்! இதை எதிர்த்த வழக்கையும் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்துவிட்டது!
நிகோபார் தீவின் தென்பகுதியில் உள்ள காலத்தியா விரிகுடா கடல்சார் சரணாலயப் பகுதியானது, உலகின் தனித்துவமான, மிகப்பெரிய ஆமையினமான லேதர்-பேக் ஆமைகள் வந்து முட்டையிடும் இடமாகும். மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய இவ்வாமைகள், முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதற்காகவே ஆஸ்திரேலியாவில் இருந்து 10,000 கி.மீ. நீந்தி ஆண்டுதோறும் வருகின்றன. மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய இப்பகுதியை 2021-ஆம் ஆண்டு சரணாலயம் என்ற அந்தஸ்தில் இருந்தே நீக்கிவிட்டது (de-notify) மோடி அரசு! இவை அழிக்கப்படும்பட்சத்தில் அந்த ஆமையினமே அழிவுக்குள்ளாகும். ஒரு வனவிலங்கு சரணாலத்தை அதன் அந்தஸ்தில் இருந்து நீக்குவதற்கு இந்தியாவில் எந்த சட்டமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!
‘பழங்குடியினரின் காப்பு நிலங்களை’ அந்த அந்தஸ்தில் இருந்து நீக்க வேண்டும் (de-notify) என்றால் அங்குள்ள உள்ளூர் பழங்குடியினர் மற்றும் பழங்குடி கவுன்சிலிடம் அனுமதி வாங்க வேண்டும் என்பது சட்டமாகும். 2022-இல் பல்வேறு மோசடியான, பொய்யான தகவல்களைச் சொல்லியும், கட்டாயப்படுத்தியும் பழங்குடி கவுன்சிலிடம் தடையில்லாச் சான்றை (NOC) மோடி அரசு பெற்றுள்ளது. இவ்வாறு கட்டாயப்படுத்தியதை, பழங்குடியின கவுன்சில் தலைவர் பார்னபாஸ் மஞ்சு, “நாங்கள் அதைப் படித்துப் பார்ப்பதற்கு முன்பே, மிக அவசரமாக அத்தடையில்லாச் சான்றிதழில் (NOC) கையெழுத்திட வைக்கப்பட்டோம்” என்று அம்பலப்படுத்தியுள்ளார்.
இம்மெகா திட்டத்திற்காக, நிகோபார் தீவின் 130 சதுர கி.மீ. மழைக் காடுகளில் சுமார் 10 இலட்சம் மரங்களை அகற்றப் போவதாக மோடி அரசு கூறுகிறது. ஆனால், இம்மழைக் காடுகளின் அடர்த்தி காரணமாக, இவ்வெண்ணிக்கை அரசு கூறுவதைவிட 10 மடங்கு அதிகம் இருக்கக்கூடும் என்பதே அறிஞர்கள் கூற்று. இக்காடுகள் சம-தளத்தில் இல்லாமல், தீவின் மலைப்பகுதியில் சாய்-கோணலாக இருக்கின்றன; மேற்பரப்பில் போர்வையாக இருக்கும் இலட்சக்கணக்கான மரங்களை அகற்றுவதினால், அடிப்பகுதி மண்ணானது மழையினால் அதீத மண்ணரிப்பு ஏற்பட்டு கரைந்தோடிவிடும். அடித்துச் செல்லப்படும் மேற்பரப்பு மண் அங்குகிருக்கும் ஆறுகளின் வழியாகவும், நேரடியாகவும் கடலினை அடையும். இதனால் கடலும், கடற்கரையும் மண்ணால் போர்த்தப்பட்டு, அந்நிலத்தின் தன்மையும் மாறுவது மட்டுமல்லாமல், அதைச் சார்ந்திருக்கும் பல்லுயிர்களும் முழுவதுமாக பாதிப்புக்கு உள்ளாகும். முக்கியமாக, கடலை ஒட்டி இருக்கும் பவளப்பாறைகள் தெளிவான நீரில் சூரிய ஒளிகளை பெற்று வசித்து வருகின்றன. சிலநூறு சதூர கிலோமீட்டருக்கு படர்த்திருக்கும் பவளப்பாறைகள் மீது இந்த வண்டல்மண் முழுதுமாகப் போர்த்தி கொண்டால், பவளப்பாறைகள் அழியும்.
இத்தீவிற்கே உரிய பல உயிரிணங்களும், நிக்கோபாரிஸ் மற்றும் சோம்பன் பழங்குடி மக்களுக்கும் இத்திட்டம் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தவிருக்கிறது. குறிப்பாக, நிக்கோபாரிஸ் பழங்குடி மக்கள் கடலில் பாரம்பரியமாக மீன்பிடித்தே வாழ்கின்றனர், எனவே, மண்ணரிப்பு மூலம் கடல்வளமும் மீன்வளமும் பாதிக்கப்பட்டால் அது நேரடியாக அவர்களையும் அழிவுக்குள்ளாக்கும். இப்பழங்குடிகள் பொதுவான மனிதர்களுக்குரிய நோய் எதிர்ப்புத்திறன் (Immunity) குறைந்தவர்களாவர். சோம்பன்களோ, “மிகவும் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழு” (Particularly Vulnerable Tribal Group) ஆவர். இந்நிலையில் பழங்குடி காப்பு நிலங்களை அழித்து, அவர்களை நிலத்திலிருந்து அப்புறப்படுத்துவதோடு மட்டுமின்றி, நோயெதிர்ப்பு குறைவான அம்மக்கள் வாழும் பகுதியில், சுமார் 6.50 இலட்சம் பேரைப் புதிதாகக் குடியேற்றிப் புதுநகரம் ஒன்றையும் உருவாக்கவுள்ளது, மோடி அரசு. இவையனைத்தும் அப்பழங்குடிகளை இனப்படுகொலை செய்வதன்றி வேறில்லை!
மற்ற நிலப் பரப்பிலிருந்து இலட்சம் ஆண்டுகளாக பிரிந்திருக்கும் இத்தீவிற்கு, இதற்கே உரித்தான தனிச்சிறப்புடைய பல்லுயிர் சூழல்களும், பழங்குடிகளும் அழிவுக்குள்ளாவதே இத்திட்டத்தின் விளைவாக இருக்கும்.
இவ்வாறாக, இத்திட்டத்திற்காக, தேசியப் பூங்காக்களைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் எல்லைகளை வெட்டிக் குறுக்குவது; பவளப்பாறைகள் குறித்த வரைபடத்தையே மோசடித்தனமாக மாற்றியமைப்பது; பழங்குடியின காடுகளை பாதுகாக்கப்பட அந்தஸ்தில் இருந்து நீக்குவது; வனவுயிர் சரணாலயத்தையே இல்லாமல் ஆக்குவது; அம்மண்ணின் பூர்வ குடிகளான பழங்குடியினரை அழிவின் விளிம்பிற்குத் தள்ளுவது – என மோடி அரசு, சுற்றுச்சூழல் அமைச்சகம், தேசியப் பசுமைத் தீர்ப்பாயம், பழங்குடி விவகார அமைச்சகம் உள்ளிட்ட அனைத்து அரசு உறுப்புகளும் கூட்டுச் சதியில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும், இத்தீவு மிகவும் அபாயமான நிலநடுக்கம் ஏற்படும் (seismic zone) பகுதியில் உள்ளது. வாரத்திற்கு ஒரு நிலநடுக்கம் என ஆண்டுக்கு 45 நிலநடுக்கள் ஏற்படும் இப்பகுதியில், 2004-இல் ஏற்ப்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரனமாக இந்த தீவு 15 அடி உள்வாங்கியது, அதாவது 135 சதுர கி.மீ. உடைய தீவின் நில பகுதி கடலுக்கு அடியில் சென்றது. 1045 சதுர கி.மீ.ராக இருந்த கிரேட் நிக்கோபாரின் தீவின் நிலப்பகுதி தற்போது 910 சதுர கி.மீ. நிலப்பகுதி மட்டுமே மிச்சமுள்ளது! இந்தியாவின் தென்துருவம் குமரிமுனை அல்ல, நிகோபார் தீவின் தென் முனையில் இருக்கும் ‘இந்திரா பாய்ண்ட்’ என்று அழைக்கப்படும் கலங்கரை விளக்கமே ஆகும். 2004-க்கு முன் கடற்கரையில் இருந்த இது தற்போது கடலினுள் இருக்கிறது. 2004 சுனாமியில் ‘மெகாபோட் தீவு வனவிலங்கு சரணாலயம்’ முற்றிலுமாக கடலுக்குள் சென்றுவிட்டது. இந்தளவிற்கு அபாயமுள்ள இப்பகுதியில்தான் ரூ.85,000 கோடி ரூபாய் மதிப்பிலான, இந்தியாவின் மிகப்பெரிய உட்கட்டமைப்புத் திட்டம் என்று பீற்றிக் கொள்ளப்படும் நாசகரத் திட்டத்தை மோடி கும்பல் அமல்படுத்தத் துடிக்கிறது.
இந்நாசகரத் திட்டம் யாருடைய நலுனுக்காக?
இத்திட்டம் இந்தியாவின் போர்த்தந்திர நலனுக்கானதென்றும் (strategic), பொருளாதார வளர்ச்சிக்கானதென்றும் மோடி அரசு கூறுகிறது. உண்மையை விரிவாகப் பார்ப்போம்.
மேற்காசியாவின் சூயஸ், ஹர்மூஸ் நீரிணைகளைப் போல, உலக வர்த்தகத்தின் இன்னொரு முக்கியக் கதவு, மலாக்கா நீரிணை (Strait of Malacca) ஆகும். தற்போது அமெரிக்கா தனது சரியும் உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்த, எவ்வாறு ஹார்மூஸ் நீரினையைத் தன் கட்டுக்குள் கொண்டுவரத் துடிக்கிறது என்பது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. அதேபோலத்தான் இந்தோ-பசிபிக் (ஆசிய பசுபிக்) பிராந்தியத்திலும் முயன்று வருகிறது.
இப்பகுதியில், இந்தியப் பெருங்கடலையும் தென் சீனப்பெருங்கடலையும் இணைக்கும் நீர்ப்பாலமான மலாக்கா நீரிணை வழியாகத்தான், உலகின் மூன்றில் ஒருபங்கு வர்த்தகப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மலாக்கா நீரிணை வழியாகவே சீனா தனது 80% படிம எரிபொருள் (fosil fuel) இறக்குமதியையும், 70% வணிகத்தையும் உலக நாடுகளுடன் மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவுக்குப் போட்டியாக புதிய வல்லரசாக வளரத் துடிக்கும் சீனா, இப்போக்குவரத்தின் நிச்சயமற்றதன்மையை (uncertainty) அறிந்தே உள்ளது. அதற்காகத்தான் ‘பட்டு சாலை’ திட்டம் (Belt and Road initiative) போன்ற சாலைவழித் திட்டங்கள் ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைத்து, சாலைவழிப் போக்குவரத்தை மேம்படுத்தத் தீவிரமாக முயன்றுவருகிறது. ஆனால், இது மிகச் சிக்கலான திட்டமென்பதால், இப்போதும் வேறுவழியின்றி மலாக்க நீரிணையைத்தான் சீனா பெரிதும் சார்ந்துள்ளது.
நிகோபார் தீவானது, இம்மலாக்க நீரிணைக்கு மிக அருகில் (அதாவது, 70 கி.மீ. – 40 நாட்டிகல் மைல் தூரத்தில்தான்) அமைந்துள்ளது. எனவே, சீனாவிற்கு நெருக்கடி கொடுத்து, ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தைத் தக்கவைக்க, அமெரிக்கா துடித்துவருகிறது.
இந்நோக்கத்திற்காக, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளை ஒருங்கினைத்து “குவாட்” (Quadrilateral Security Dialogue – QUAD) என்ற நாற்கரக் கூட்டணியை அமெரிக்க மேல்நிலை வல்லரசு உருவாக்கியுள்ளது. நான்கு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு என்ற போர்வையில், சீனாவுக்கெதிரான ஒரு தளமாக குவாட் உருவாக்கப்பட்டுள்ளது. மேன்மேலும் இப்பகுதியை இராணுவமயமாக்குவது, அமெரிக்க, ஜப்பானிய ஏகாதிபத்தியங்களின் முதலீடுகளையும் மேலாதிக்கத்தையும் இப்பகுதியில் பாதுகாப்பது, வளர்ந்துவரும் சீன ஆதிக்கத்தைத் தடுத்து முறியடிப்பது – ஆகியவையே இதன் நோக்கம். சீனா மட்டுமன்றி, ஜப்பானும் மலாக்கா நீரிணையின் வழியாகவே ஏற்றுமதி, இறக்குமதியை மேற்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2004-இல் வாஜ்பாய் காலத்தில் தொடங்கப்பட்டு, மோடியின் 2.0. (2019)-க்குப் பின் வேகமெடுத்து, டிரம்ப் 2.0 (2025)-க்குப் பின் மேலும் அதிவேகமெடுத்துள்ளது, இக்குவாட் திட்டம். இக்கூட்டணி நாடுகள், இந்தோ-பசிபிக் கடலில் 2022-ஆம் ஆண்டு முதல் கடல்சார் விழிப்புணர்வுக்கான கூட்டாண்மையை ஆரம்பித்து (IPMDA) அதன்மூலம் செயற்கைக்கோள் தரவுகள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு போன்றவற்றை தமக்குள் பகிர்ந்து கொள்கின்றன. மேலும், Quad-at-Sea Ship Observer Mission 2025-இன் படி இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடலோர காவல் படைகள் கூட்டிணைந்து இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் செயல்பட முடிவெடுத்துள்ளன. இந்நாடுகளின் கார்ப்பரேட் முதலாளிகளின் மூலதனம் இந்நாடுகளுக்கிடையே பல்வேறு துறைகளில் முதலீடு செய்து இலாபமீட்டுவதற்காக குவாட் முதலீட்டு அமைப்பையும் (Quad investors network) உருவாக்கியுள்ளனர்.
அக்டோபர் 2025-இல் இந்தியாவில் நடைபெற்ற ‘குவாட் துறைமுகங்களின் எதிர்கால கூட்டாண்மைக்கான மாநாட்டில்’ (Quad Ports of the Future Partnership conference) இந்தோ-பசிபிக் பகுதியில் இருக்கும் துறைமுகங்களின் கட்டமைப்புகள் மற்றும் கொள்ளளவினை மேம்படுத்தி, அதன்மூலம் பொருளாதார மற்றும் வர்த்தக நலன்களைப் பூர்த்தி செய்ய அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் துடிக்கின்றன. இது இவர்கள் பீற்றிக் கொள்வதுபோல, பரஸ்பர நன்மைகளை மேற்கொள்வதற்காக, இந்நாடுகளிடையில் போடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தமில்லை, கிரேட் நிகோபார் திட்டம் போன்ற திட்டங்கள் முன்பே அமெரிக்கா, ஜப்பான் ஆகிய ஏகாதிபதிய நாடுகளினால்தான் திட்டமிடப்படுகிறது; பின்னர் அதைப் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற பெயரில் நம் நாட்டின் மீது திணிக்கிறார்கள்.
2025 ஜூன் மாதத்தில் கப்பல் மற்றும் துறைமுக அமைச்சர் சர்பானந்தா சோனாவல் முன்னிலையில் இந்தியாவும், ஜப்பானும் கடல்சார் உறவுகளை மேம்படுத்துதல் என்ற பெயரில் அந்தமான் & நிகோபார் தீவுகளில் ஸ்மார்ட் போக்குவரத்து அமைப்புகளை நிறுவுவது, துறைமுகங்களை டிஜிட்டல் மயமாக்குதல், புதுப்பிக்கதக்க ஆற்றல்களைக் (renewable energy) கொண்டுவருவது எனப் பல ஒப்பந்தங்கள் போடப்பட்டன. ஜப்பானைச் சார்ந்த கப்பல் கட்டுதல் மற்றும் பழுது பார்க்கும் NYK லைன், MOL, K லைன் போன்ற பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் தொழில்துவங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், ஜப்பானின் கப்பல் கட்டும் பெருநிறுவனங்களான இமாபாரி ஷிப் பில்டிங் (Imabari Shipbuilding), ஜேஎம்யுசி (JMUC), கனகாவா டாக் யார்டு (Kanagawa Dockyard) மற்றும் மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் (Mitsubishi Heavy Industries) ஆகிய நிறுவனங்களை இந்தியவில் கப்பல் கட்டும் தளங்களில் ஒன்றினைந்து செயல்பட அழைப்பு விடுத்துள்ளார், சர்பானந்தா சோனாவல். மேலும், ஜப்பானின் கார்ப்பரேட் முதலாளிகள், கிரேட் நிகோபார் திட்டத்தின் ஒருபகுதியாக, நிகோபார் தீவுகளில் எரிசக்தி மற்றும் சூரியஒளி மின்சக்தித் திட்டத்திற்காக பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்து வருகிறார்கள்.
வளர்ந்து வரும் தொழில்துட்ப துறை, செயற்கை நுண்ணறிவு, அதற்கான தரவு மையம் (Data Center) என மின்னணு சாதனங்களின் (எலக்ட்ரானிக்ஸ்) உற்பத்தி, அதை தயாரிப்பதற்கான மூலப்பொருளின் தேவையை உலகில் அதிகரிக்கச் செய்துள்ளது. மின்னணு சாதனங்ளை உற்பத்தி செய்வதற்கு ‘முக்கியக் கனிமங்கள்’ (critical minerals) அத்தியாவசியம். இது கடந்த காலத்தில் தங்கம், சமகாலத்தில் படிம எரிபொருள் (fossil fuel) போன்று, முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இந்த ‘முக்கியக் கனிமங்களை’ உலகளவில் அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு சீனா மட்டுமே. அமெரிக்கா, ஜப்பான் ஆகிய ஏகாதிபத்திய நாடுகள் இந்த ‘முக்கியக் கனிமங்களை’ தேடி அலைகின்றன.
‘முக்கியக் கனிமங்களில்’ சீனாவின் ஏகபோகத்தை உடைக்க, அமெரிக்காவும் ஜப்பானும் ‘குவாட்’ மூலமாக கடந்த (2026) மே மாதத்தில் ‘குவாட் அரியவகை தாதுக்கள் தொடக்க கட்டமைப்பு’-ஐ (Quad Critical Minerals Initiative Framework) என்ற ஒன்றை உருவாக்கியுள்ளன. ‘முக்கியக் கனிமங்களை’ சல்லடைபோட்டு இந்தியா நில மற்றும் கடற்ரப்பில் தேடுவதற்கான பெருமுயற்சிதான் இது. இதைச் சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.
சீனா உலகின் 90% கிரஃபிடையும், 85% அருமண் தனிமங்களையும் (Rare Earth Element), உலகின் பெரும்பாலான ஜெர்மனியம் (germanium), கேலியம் (gallium) மற்றும் டங்க்ஸ்டனையும் (Tungsten) கையாளும் நாடாகும். இவையனைத்தும் தான் உலகின் ‘முக்கியக் கனிமங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. அமெரிக்கா உட்பட உலக நாடுகளும் இவற்றில் சீனாவைச் சார்ந்தே இருக்கின்றன. ஸ்மார்ட் போன்கள், பாதுகாப்பு (defence), மருத்துவ உபகரணங்கள், மின்சார வாகனங்கள், சூரியமின் தகடுகள் போன்ற பசுமை ஆற்றல் (green energy) – என இவையனைத்திற்கும் இந்த ‘முக்கியக் கனிமங்கள்’ அத்தியாவசியமானவை. தனது முக்கியக் கனிமங்களின் ஏற்றுமதியைச் சீனா 2023 முதல் படிப்படியாகத் தடைசெய்து வருகிறது. குறிப்பாக, மற்ற நாடுகளின் இராணுவப் பயன்பாட்டிற்கான ‘முக்கியக் கனிமங்களை’ தடை செய்துவருகிறது.
இதனால், அமெரிக்க மேல்நிலை வல்லரசு ‘குவாட்’ மூலமாக இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் முக்கியக் கனிமங்களைத் தேடி அலைந்து வருகிறது. அதற்கு இந்திய பாசிச மோடி கும்பல் தரகு வேலையும் பார்த்து வருகிறது. ‘முக்கியக் கனிமங்களில்’ தலையாயது அருமண் தனிமங்கள் (Rare Earth Elements), உலகின் அருமண் தனிம வளத்தில் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது. இவற்றைத் தனது இலாபத்திற்காகச் சூறையாட அமெரிக்க, ஜப்பானிய வல்லூறுகள் இந்தியாவை வட்டமிடுகின்றன. அவர்களின் அடிமையான மோடி அரசும் இத்தனிமங்களின் இருப்பிடத்தை ஆராய்வதற்கான அனுமதிகளையும் வழங்கி வருகிறது. இதன் முன்னோட்டமாகத்தான் மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் தாது எடுப்பதற்காக மோடி அரசு முயற்சித்தது!
குவாட் நாடுகள் இதை ஒட்டி மே 2026-யில் Quad Critical Mineral Initiative Framework என்ற பெயரில் இந்த முக்கியக் கனிமங்களை வேட்டையாவதற்கான திட்டங்களைத் தொடங்கியுள்ளனர்.
2026 மே மாதம் போடப்பட்ட இவுடன்படிக்கைக்காகவே, ஆகஸ்டு மாதத்தில் ஒன்றிய அரசு கனிம வளங்களின் மீதான மாநில அரசின் வரிவிதிப்பு உரிமைகளைப் பிடுங்கும் வகையில், சுரங்கம் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957 மீது திருத்த மசோதாவை கொண்டுவந்து, சட்டதை மாற்றியுள்ளது. மாநில அரசுகள் தங்களுக்கு இருக்கும் உரிமைகள் இம்மண்ணைக் காக்கப்போவது இல்லையென்றாலும், எப்படி அமெரிக்கா ஏகாதிபத்தியத்திற்காக இந்திய அரசு மாநில அரசின் உரிமையைப் பறித்து, அதிகாரத்தை ஒன்றுகுவிக்கிறது என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய விசயம். இச்சட்டத்தின் மூலம், இதன்பின் இருக்கும் முக்கிய காரணம் என்னவென்றால், இந்த முக்கியக் கனிமங்கள் சீனாவில் அதிகம் இருப்பதால் சீனப்பொருட்கள் போன்றே அதன் விலையும் குறைவு, குறந்தபட்டம் அதைவிட மலிவான விலையில் இந்தியாவில் கொள்ளையடிக்க முடியும் என்பதற்காகவே, தனது அடிமையான மோடி மூலம் இந்த சட்டத்திருத்தத்தை அமெக்காவும் ஜப்பானும் கொண்டுவரச் செய்துள்ளன.
எனவே, ‘குவாட்’-இன் நோக்கம் தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பது அல்ல; அதை அடகுவைத்துவிட்டு, இந்தியாவை ஏகாதிபத்தியக் கொள்ளைக்குத் திறந்துவிடுவதே. இத்திட்டத்தின் ஆபத்தும் ஏகாதிபத்தியச் சூறையாடலும் நிகோபார் தீவோடு நின்றுவிடப் போவதில்லை; இதை இன்னும் பெரிய நாசகரத் திட்டங்களுடன் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும். மோடி அரசின் கதி சக்தித் திட்டத்தின்கீழ் வரும் பாரத்மாலா சாகர்மாலா போன்ற ஒருங்கிணைந்த திட்டங்களின் மூலம் இந்திய நகரங்களையும, தொழிற்பேட்டைகளையும், சுரங்க நிலையஙகளையும் சாலைகள் மூலமாகவும், புதிய புதிய துறைமுகங்கள் மூலமாகவும் குறுக்கும் நெடுக்குமாக இணைக்கப்படுகின்றன.
இதில் முக்கியமானது, இந்தியாவின் கடற்கரையில் இருந்து 370 கிலோ மீட்டர் தொலைவிற்கு கடல்பகுதியில் நீண்டுள்ள பிரத்தியேக பொருளாதார மண்டலம் (Exclusive Economic Zone). இதில் ஆழ்கடல் சுரங்கங்கள் நாட்டுவதற்கு மிகப்பெரிய கட்டமைப்புகள் தேவைப்படுகிறது, அதற்கு மிகப்பெரிய கப்பல்களைக் கொண்டு இயக்கப்படும் இயந்திரங்களை நிறுத்துவதற்கான துறைமுகங்கள் தேவைப்படுகின்றன. அதில் ஒன்றுதான் இந்த நிகோபார் தீவினில் முன்மொழியப்பட்டுள்ள துறைமுகம் ஆகும்! இத்துறைமுகத்தில்தான் சர்வதேச சரக்குப் பெட்டக பரிமாற்ற முனையம் நிறுவப்படவுள்ளது. இந்தியாவின் சரக்குப் பரிவர்த்தனை 75% கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டுத் துறைமுகங்களைச் சார்ந்திருக்கிருக்கிறது, காரணம் இந்தியாவின் ஆழமில்லாத கடற்கரையாகும். இதைப்பூர்த்தி செய்ய இந்திய நிலப்பரப்பில் சர்வதேச சரக்குப் பெட்டக பரிமாற்ற முனையம் அமைக்கப்படவில்லை; மாறாக, இந்திய முதன்மை நிலப்பரப்பில் இருந்து 1600 கி.மீ. அப்பால் இருக்கும் நிகோபார் தீவினை குறிவைப்பது, மலாக்கா நீரிணையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே!
மற்றொரு இணைத் திட்டமான, பயணியர் மற்றும் ராணுவ பயன்பாட்டிற்காக ஒருமணி நேரத்திற்கு 4000 பயணிகளை கையாளுவதற்கான கிரேட் நிகோபார் சர்வதேச சரக்கு பரிவர்த்தனை மற்றும் பயணிகள் விமான நிலையம் வரவுள்ளது. இவ்விமான நிலையத்தில் 2040-இல் வருடத்திற்கு வெறும் 13.5 இலட்சம் பயணிகளை மட்டுமே எதிர்பார்ப்பதாக இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) தெரிவிக்கிறது. வருடத்திற்கு 50 இலட்சம் பயணிகளை கையாளும் கொள்ளவை கொண்டு, ஏற்கனவே இயங்கிவரும் வீர் சர்வாக்கர் சர்வதேச விமானநிலையத்தின் ஒரு மணி நேரத்திற்கு 1200 பயணிகளை கையாளும் உட்கட்டமைப்பை கொண்டது. முன்மொழியப்பட்டுள்ள கிரேட் நிகோபார் சர்வதேச விமானநிலையத்தை விட 4 மடங்கு அதிக பயணியரை கையாளும் வீர் சர்வாக்கார் சர்வதேச விமான நிலையத்தின் கொள்ளவு உட்கட்டமைப்பு 3.5 மடங்கு குறைவானதாகவே உள்ளது. எனவே, இவ்விமான நிலையமும் ஏகாதிபத்தியங்களுக்கான சரக்கு ஏற்றுமதிக்காகவே அமையவுள்ளது என்பது தெளிவாகிறது. இதற்காகவே, இத்துறைமுகமும் விமான நிலையமும் இணைக்கப்படவிருக்கின்றன.
எனவே, வளர்ந்துவரும் சீன மேலாதிக்கத்தை உடைத்து, இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க மேலாதிக்கத்தைத் தக்கவைப்பது; அதற்கான போர்த்தளமாக நிகோபார் தீவை மாற்றுவது; இந்தியாவின் அரியவகைக் கனிம வளங்களை அமெரிக்க, ஜப்பான் ஏகாதிபத்தியக் கொள்ளைக்குத் திறந்துவிடுவது; இந்திய வளங்களைக் கொள்ளையடித்து எடுத்துச் செல்வதற்கான துறைமுகங்கள், விமான நிலையக் கட்டமைப்புகளை உருவாக்குவது – ஆகிய ஏகாதிபத்திய நலன்தான் கிரேட் நிகோபார் திட்டத்தின் சாரம்சமாகும். இதற்காகத்தான் கடல்வளமும் சுற்றுச்சூழலும் மீட்டமைக்க முடியாதவகையில் அழிக்கப்படவிருக்கிறது; அம்மண்ணின் பூர்வகுடிகளான பழங்குடிகள் இனப்படுகொலை செய்யப்படவிருக்கின்றனர்.
எனவே, இதுவெறும் சூழலியல் பிரச்சனையோ, அத்தீவிற்கு மட்டுமே உரித்தான தனிப்பட்ட பிரச்சனையோ அல்ல. அமெரிக்க மேல்நிலை வல்லரசின் தலைமையிலான மறுகாலனியாக்க அரசியல், பொருளாதாரக் கொள்கையின் மிகமோசமான அங்கமே இத்திட்டமாகும். சீனாவிற்கெதிரான, அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் போர்ச்சக்கரத்தில் இந்தியாவை மேன்மேலும் பிணைக்கிற ஒரு அபாயகரமான திட்டமாகும். இந்த மறுகாலனியாக்க அரசியல், பொருளாதரக் கொள்கையை விமர்சிக்காமல், அம்பலப்படுத்தாமல், இதிலிருந்து இந்தியா வெளியேற வேண்டுமென்று பிரச்சாரம் செய்யாமல், வெறும் சூழலியல் பிரச்சனையாக மட்டும் சுருக்குவது தவறானது மட்டுமல்ல, திசைதிருப்புவதுமாகும்.
- மாரி



