பரந்தூர் விமான நிலையம் கைவிடப்பட்டது ஏன்?
மக்கள் போராட்டமா, விஜய்க்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடியா?
பரந்தூரில் புதிய பசுமைவெளி சர்வதேச விமான நிலையம் அமைக்கும் முடிவைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவித்திருக்கிறார். நீண்டகாலமாக விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் கிராமங்களைப் பாதுகாக்கக் கோரி பரந்தூர் பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தின் பின்னணியில் வந்துள்ள இந்த அறிவிப்பு, தமிழ்நாடு அரசியலில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒருபுறம், திமுகவினர் இந்த முடிவைத் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கை என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியை ஐந்து ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளும் நடவடிக்கை இது என்றும், ஒரு இலட்சம் பேருக்காக ஒரு கோடி மக்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் முடிவு என்றும் கூறியிருக்கிறார்.
மறுபுறம், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடிய மக்களும், சூழலியலாளர்களும் இம்முடிவை வரவேற்றிருக்கின்றனர். நீண்டகாலமாக நடைபெற்ற மக்கள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி இது என்று அவர்கள் கூறுகின்றனர்.
தவெகவினரோ, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு விஜய் எடுத்த துணிச்சலான முடிவு இது என்றும், விவசாயிகள் பாதிக்கப்படுவதை அவர் விரும்பவில்லை என்றும் தங்கள் தலைவரைப் போற்றிப் புகழ்ந்து வருகின்றனர்.
ஆனால், இவற்றைக் கடந்து நாம் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது.
திமுகவும் தவெகவும் அடிப்படையில் ஒரே பொருளாதாரக் கொள்கையைத்தான் பின்பற்றுகின்றன என்றால், பரந்தூர் விமான நிலையத்தைத் திடீரெனக் கைவிட வேண்டிய அவசியம் விஜய் அரசுக்கு ஏன் ஏற்பட்டது?
இந்தக் கேள்விக்கான விடையைத் தேடாமல், இந்த அறிவிப்பை வெறுமனே மக்கள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்று கொண்டாடுவது, இந்தத் திடீர் முடிவுக்குப் பின்னால் நடைபெற்றுள்ள அரசியல் நாடகத்தைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதாகவே அமையும்.
பரந்தூர் விமான நிலையம் யாருக்காக?
பரந்தூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டம் திமுக ஆட்சிக்காலத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குவிந்திருக்கும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும், பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், தற்போதைய சென்னை விமான நிலையம் மட்டும் போதாது கூடுதலாக மற்றொரு பெரிய விமான நிலையம் தேவை என்ற வாதமே இந்தத் திட்டத்தின் அடிப்படையாக முன்வைக்கப்பட்டது.
அதாவது, இது சாதாரண மக்களின் போக்குவரத்துத் தேவையிலிருந்து உருவான திட்டம் அல்ல. தமிழ்நாட்டில் தங்களது உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை விரிவுபடுத்த விரும்பும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைகளுடன் இணைந்தே இத்திட்டம் முன்வைக்கப்பட்டது.
பன்னாட்டு நிறுவனங்களைத் தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவது, அவர்களுக்குத் தேவையான சாலை, துறைமுகம், விமான நிலையம், மின்சாரம் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை அரசுப் பணத்தில் உருவாக்கிக் கொடுப்பது, நிலங்களைத் தேவைக்கேற்பக் கையகப்படுத்திக் கொடுப்பது என்பதே திமுக ஆட்சியின் பொருளாதாரக் கொள்கையின் ஒரு பகுதியாக இருந்து வந்தது.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக விஜய் அறிவித்த மறுநாளே சட்டப்பேரவையில் இது தொடர்பாக கடுமையான விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் போது திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, பரந்தூர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டது என விளக்கிவிட்டு, “இவ்வளவு பணிகள் நடைபெற்ற பிறகு இப்போது திட்டத்தைக் கைவிட்டால், இனி புதிய விமான நிலையம் எப்போது வரும்?” எனக் கேள்வி எழுப்பினார். இந்தத் திட்டம் கைவிடப்பட்டால் தொழில்கள் அண்டை மாநிலமான ஆந்திராவை நோக்கி நகரக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார். ஏற்கெனவே ஓசூர் விமான நிலையத்தை இழந்துவிட்டோம் என்றும் தற்போது பரந்தூரும் இல்லையென்றால் முதலீடுகள் எப்படி வரும் எனக் கவலை தெரிவித்தார். கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி அந்நிய முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்ற திமுகவின் பொருளாதாரக் கொள்கையிலிருந்து தங்கம் தென்னரசு இந்த வாதங்களை முன்வைக்கிறார்.
இதிலிருந்து தவெக அரசின் பொருளாதாரக் கொள்கை எந்த அடிப்படையிலும் வேறுபட்டதாக இல்லை. தவெக அரசும் முதலீடுகளை ஈர்ப்பது, தனியார் மூலதனத்திற்கு உள்கட்டமைப்புகளை உருவாக்குவது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துவது என்ற அதே வளர்ச்சி மாதிரியைத்தான் முன்னெடுத்து வருகிறது.
எனவே, பரந்தூரில் விமான நிலையம் அமைக்கக் கூடாது என்பது பொருளாதாரக் கொள்கை அடிப்படையில் தவெக அரசின் திடீர் மனமாற்றம் அல்ல.
அப்படியானால், இந்த முடிவு இப்போது எடுக்கப்பட்டது ஏன்?
இதற்கு விடை காண வேண்டுமென்றால், கடந்த திங்களன்று, அதாவது ஆகஸ்ட் 24 அன்று, சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் வெளியிட்ட மூன்று முக்கிய அறிவிப்புகளையும் ஒன்றாகப் பார்க்க வேண்டும்.
ஒரே நாளில் மூன்று அறிவிப்புகள்!
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்த விஜய், அதே நேரத்தில் அன்னபூரணி திட்டத்தின் முதல் கட்டமாக ஆண்டுக்கு மூன்று இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இந்தத் திட்டம் 2027 பொங்கல் முதல் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், தற்போது நடைமுறையில் உள்ள மகளிர் இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தை அனைத்து நகரப் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்துவது வரும் அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று அறிவிப்புகளும் தனித்தனியானவை அல்ல. அவற்றை ஒன்றாக இணைத்துப் பார்க்கும்போதுதான் விஜய் அரசின் தற்போதைய அரசியல் நெருக்கடி தெளிவாகத் தெரிகிறது.
இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவது என்பது கணிசமான நிதி ஒதுக்கீடு தேவைப்படும் திட்டமாகும். அதேபோல், இலவசப் பேருந்துப் பயணத்தை மேலும் பல நகரப் பேருந்துகளுக்கு விரிவுபடுத்துவதற்கும் அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படும்.
அன்னபூரணி திட்டத்தின் கீழ் சுமார் 1.30–1.34 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான தொகை வழங்க ஆண்டு செலவு சுமார் ரூ.4,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டம் சாதாரணப் பேருந்துகளைத் தாண்டி விரிவுபடுத்தப்படுவதால், அதன் ஆண்டு செலவு சுமார் ரூ.6,000 கோடி வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இத்தகைய திட்டங்களைத் தவெக அரசு முன்கூட்டியே முடிவு செய்திருந்தால், 2026-27 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டிலேயே அவை இடம்பெற்றிருக்க வேண்டும். அதற்கான நிதி ஒதுக்கீடு பற்றியும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், தற்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதங்கள் முடிந்து, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் சட்டசபையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், பட்ஜெட்டில் இடம்பெறாத புதிய திட்டங்கள் திடீரென 110 விதியின் கீழ் அறிவிக்கப்படுகின்றன.
இந்தத் திட்டங்கள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவையா? அல்லது கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக அவசர அவசரமாக உருவாக்கப்பட்டவையா?
இதுதான் இங்கு எழுகின்ற முக்கிய கேள்வி.
பரந்தூர் முடிவை இவ்வளவு காலம் ஏன் அறிவிக்கவில்லை?
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதைக் கைவிடுவதுதான் தவெகவின் நிலைப்பாடு என்றால், விஜய் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே அதனைத் தெளிவாக அறிவித்திருக்கலாம்.
இந்த முடிவை எடுக்கப் புதிய நிதி ஒதுக்கீடு தேவையில்லை. ஒரு நலத்திட்டத்தைச் செயல்படுத்துவதைப் போலப் பெரிய நிதி ஏற்பாடுகளும் தேவையில்லை. தவெக அரசு உண்மையிலேயே பரந்தூர் திட்டத்தை நிராகரிப்பதில் உறுதியாக இருந்திருந்தால், ஒன்றிய அரசிடம் அந்த முடிவைத் தெரிவித்து, மாற்று இடம் தேவைப்பட்டால் அதற்கான பரிந்துரைகளைச் செய்து, நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்கியிருக்கலாம்.
ஆனால், பரந்தூர் விவகாரத்தில் தமிழக அரசு கடந்த வாரம் வரை எந்தத் தீர்மானகரமான நடவடிக்கையையும் எடுத்திருக்கவில்லை.
விஜய் ஏற்கெனவே ஒரு சந்தர்ப்பத்தில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாகக் கூறியிருந்தார். ஆனால், அதற்குப் பிறகு தமிழக அரசு ஒன்றிய அரசிடம் மாற்று இடம் குறித்து ஏதேனும் பரிந்துரை செய்திருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஒன்றிய அரசு, தமிழக அரசிடமிருந்து அத்தகைய தகவல் எதுவும் வரவில்லை என்று தெரிவித்திருந்தது.
இதன் பொருள் என்ன?
பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில், விஜய் அரசு தனது அரசியல் நிலைப்பாட்டை அவ்வப்போது வெளிப்படுத்தியிருந்தாலும், அதனை அரசின் நிர்வாக முடிவாக மாற்றி நடைமுறைப்படுத்தும் எந்தத் தீர்க்கமான நடவடிக்கையையும் எடுக்காமல் இருந்தது.
ஆனால் திடீரென, கடந்த வாரம் வரை தீர்மானமின்றி இருந்த ஒரு அரசு, இந்த வாரத்தில் பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது, இலவச சிலிண்டர் வழங்குவது, இலவசப் பேருந்துப் பயணத்தை விரிவுபடுத்துவது என மூன்று அறிவிப்புகளையும் ஒரே நேரத்தில் வெளியிடுகிறது.
இதற்குக் காரணம் கடந்த ஓரிரு வாரங்களாகத் தமிழக அரசியலில் தவெக அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியே ஆகும்.
“மக்களுக்குத் தரப் பணம் இல்லை; எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வாங்க மட்டும் பணம் இருக்கிறதா?”
2026-27 பட்ஜெட்டில் தேர்தலின்போது தவெக அளித்த முக்கியமான வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்ற விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் கடந்த சில வாரங்களாக மக்களிடம் தீவிரமாக எடுத்துச் சென்றுள்ளன.
விவசாயக் கடன் தள்ளுபடி எங்கே? இலவச சிலிண்டர் திட்டம் எங்கே? தேர்தல் வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்ற வில்லை? என எந்தத் திட்டத்தைப் பற்றிக் கேட்டாலும் நிதி இல்லை என்று தவெக அரசு கைவிரிக்கிறது.
ஆனால், எம்.எல்.ஏ.க்களுக்குக் கார்கள் வாங்குவது என்ற முடிவு மட்டும் மிக வேகமாக எடுக்கப்பட்டது. கார் வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்ட அடுத்த நாளே கார் டெஸ்ட் டிரைவ் நடத்தும் அளவுக்கு இந்த விஷயத்தில் விஜய் அரசு வேகம் காட்டியது.
மக்களுக்கு வழங்கப்படும் தேர்தல் வாக்குறுதிகளுக்கு மட்டும் அரசிடம் பணம் இல்லை. ஆனால், எம்.எல்.ஏ.க்களின் வசதிக்காகக் கார் வாங்க அரசிடம் உடனடியாகப் பணம் இருக்கிறது என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது.
இதுமட்டுமல்லாமல், முதலமைச்சர் அலுவலகத்தை மாற்றுவதற்கான செலவு, அதற்காக நாமக்கல் கவிஞர் மாளிகையைப் புனரமைப்பதற்காக 11 கோடி ரூபாய் செலவு போன்ற விவகாரங்களும் கேள்விக்குள்ளாக்கப்பட்டன.
“மக்கள் பணத்தைத் தொட மாட்டேன்” என்ற விஜயின் வசனம் என்ன ஆனது?
விஜய் அரசியலுக்கு வந்தபோது அவரைச் சுற்றிக் எழுப்பப்பட்ட மிகப்பெரிய பிம்பங்களில் ஒன்று, அவர் ஆண்டுக்கு இருநூறு கோடி ரூபாய் வருமானத்தை விட்டுவிட்டு மக்கள் சேவைக்காக அரசியலுக்கு வந்திருக்கிறார் என்பதுதான்.
மக்கள் பணத்தை அவர் திருட மாட்டார். ஊழல் செய்ய மாட்டார். தனது கட்சிக்காரர்களையும் மக்கள் பணத்தைச் சுரண்ட அனுமதிக்க மாட்டார் என்ற பிம்பம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.
சட்டசபையிலும் விஜய், மக்கள் பணத்தைத் தொட மாட்டேன்; என் கட்சிக்காரர்களைத் தொட விட மாட்டேன்; ஏற்கெனவே தொட்டவர்களை விட மாட்டேன் என்ற வகையில் வசனம் பேசினார்.
ஆனால், இந்தப் பிரச்சாரத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது?
விஜயைப் புகழ்ந்து பேசுவதையே அரசியலாகக் கொண்ட தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு மக்கள் பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து கார்கள் வாங்கிக் கொடுக்கப்படுகின்றன. மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதற்குப் பணம் இல்லை என்று கூறும் நிலையில், முதலமைச்சர் அலுவலக மாற்றம் மற்றும் ஆடம்பர வசதிகளுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகின்றன.
இதனால் விஜய் உருவாக்கிக் கொண்டிருந்த “நேர்மையானவர்; மக்கள் பணத்தைத் தொடாதவர்” என்ற பிம்பம் கேள்விக்குளானது.
மக்களுக்குத் தரப் பணம் இல்லை. ஆனால் ஆட்சியாளர்களின் வசதிக்குப் பணம் எங்கேயிருந்து வருகிறது என்ற கேள்வியிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்கும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற விமர்சனத்தைச் சமாளிப்பதற்கும், விவசாயிகளின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், திடீரென இந்த மூன்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
மக்கள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியா?
பரந்தூர் விமான நிலைய திட்டத்தைக் கைவிடுவதாக விஜய் அரசு தற்போது எடுத்திருக்கும் முடிவு முழுமையாக அந்த மக்கள் போராட்டத்திற்கு அடிபணிந்து, தனது பொருளாதாரக் கொள்கையை மாற்றிக்கொண்டதன் விளைவாக எடுக்கப்பட்டது அல்ல.
மக்கள் போராட்டம் மூலம் ஒரு திட்டத்தை அரசியல் ரீதியாகச் சிக்கலாக்க முடியும். ஒரு அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். நிலத்திற்குக் கொடுக்கப்படும் இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க முடியும். ஆனால், அந்த அழுத்தத்தை ஆட்சியில் இருப்பவர்கள் எப்போது, எந்த அரசியல் தேவைக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பது தான் இங்கே முக்கியமானது.
தற்போது விஜய் அரசு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியைப் பாருங்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற விமர்சனம். மக்களுக்குப் பணம் இல்லை என்று கூறிவிட்டு எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வாங்கும் முடிவு. முதலமைச்சர் அலுவலகத்துக்கான ஆடம்பரச் செலவுகள். “மக்கள் பணத்தைத் தொட மாட்டேன்” என்று கூறிய விஜயின் பிம்பத்திற்கே ஏற்பட்டிருக்கும் கேள்விகள்.
இந்தச் சூழ்நிலையில், மக்களிடம் உடனடியாக நல்லெண்ணத்தைப் பெறக்கூடிய மூன்று விஷயங்கள் அறிவிக்கப்படுகின்றன.
- விவசாயிகளின் ஆதரவைப் பெற பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது.
- பெண்களின் ஆதரவைப் பெற இலவசப் பேருந்துப் பயணத்தை விரிவுபடுத்துவது.
- குடும்பங்களின் ஆதரவைப் பெற இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவது.
இதைத்தான் நாம் ஒரே அரசியல் தொகுப்பாகப் பார்க்க வேண்டும்.
விஜயின் நெருக்கடிக்கு மக்கள் பணத்தில் கொடுக்கப்படும் விலை!
இதனை மக்கள் போராட்டத்திற்குக் கிடைத்த முழுமையான வெற்றி என்று பார்க்க முடியாது. விஜய் அரசுக்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக, மக்களுக்கு வழங்கப்படும் ஒரு அரசியல் விலை என்ற அடிப்படையில்தான் இதனைப் பார்க்க வேண்டும்.
பெரிய ஜமீன்தார்களின் வீட்டில் யாராவது இறந்துவிட்டால், தங்களிடம் வேலை செய்யும் பண்ணையடிமைகளுக்கு விருந்து வைத்துக் கொடுப்பார்கள். அந்த விருந்து, பண்ணையடிமைகளின் வாழ்க்கையை மாற்றுவதற்காக வழங்கப்படுவதில்லை. ஜமீன்தாருக்கும் பண்ணையடிமைக்கும் இடையேயான சுரண்டல் உறவை ஒழிப்பதற்காகவும் வழங்கப்படுவதில்லை.
விஜய் அரசின் தற்போதைய அறிவிப்புகளையும் இந்த அரசியல் அடிப்படையில்தான் பார்க்க வேண்டும்.
பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்காக விவசாயிகளின் வாழ்வாதரமான நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு எதிரான மக்களின் போராட்டம் உரிமைக்கான போராட்டம். அதனை, ஆளும்கட்சி தனக்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைச் சமாளிப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் போது, அதன் அரசியல் நோக்கம் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும்.
இந்தப் பரந்தூர் இல்லை என்றால் மற்றொரு பரந்தூர் வரும்!
இந்த விவகாரத்தில் மிக முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று உள்ளது. தவெக அரசு பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டது என்பதற்காக, தமிழ்நாட்டில் கார்ப்பரேட் முதலீடுகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பொருளாதாரக் கொள்கை முடிவுக்கு வந்துவிட்டது என்று பொருளல்ல.
பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுவது மக்களின் அன்றாடத் தேவைக்காக மட்டுமல்ல; முதலாளிகளின் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் முதலீட்டுத் தேவைகளுக்கான உள்கட்டமைப்பை உருவாக்கும் வளர்ச்சி மாதிரியின் ஒரு பகுதியாகவே கொண்டுவரப்பட்டது.
அந்த வளர்ச்சி மாதிரி மாறிவிட்டதா?
பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களை ஈர்க்கும் கொள்கையை தவெக அரசு கைவிட்டுவிட்டதா?
தனியார் முதலீட்டுக்காக அரசுப் பணத்தில் உள்கட்டமைப்புகளை உருவாக்கும் கொள்கை முடிவுக்கு வந்துவிட்டதா?
பெரிய தொழில் திட்டங்களுக்காக விவசாய நிலங்களையும் இயற்கை வளங்களையும் கையகப்படுத்தும் கொள்கையை அரசு நிராகரித்துவிட்டதா?
இல்லை – என்பதுதான் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில். பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டாலும் அதன் பின்னால் இருக்கும் பொருளாதாரக் கொள்கை தொடர்ந்து உயிருடன் இருக்கிறது.
இன்று பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு அரசியல் எதிர்ப்பு அதிகமாக இருக்கலாம். நாளை வேறொரு மாவட்டத்தில், வேறொரு பெயரில், வேறொரு “வளர்ச்சித் திட்டம்” கொண்டு வரப்படலாம்.
பரந்தூர் இல்லை என்றால் இன்னொரு இடத்தில் விமான நிலையம் அமைக்கப்படலாம். விமான நிலையம் இல்லை என்றால் தொழிற்பூங்கா, துறைமுக விரிவாக்கம், அதிவேகச் சாலை, சிறப்புப் பொருளாதார மண்டலம் அல்லது கார்ப்பரேட் திட்டம் என்ற பெயரில் நிலங்கள் கையகப்படுத்தப்படலாம்.
ஏனென்றால், திட்டத்தின் பெயரை மாற்றுவது எளிது; ஆனால் அந்தத் திட்டங்களை உருவாக்கும் பொருளாதாரக் கொள்கையை மாற்றாமல் மக்களின் நிலங்களைப் பாதுகாக்க முடியாது.
தேவை விஜயைப் புகழ்வதல்ல; கொள்கையைக் கேள்வி கேட்பதே!
பரந்தூர் திட்டத்தைக் கைவிட்ட அறிவிப்புக்காக விஜயை விவசாயிகளின் மீட்பர் என்று புகழ்வதும், இதனால் தமிழ்நாட்டின் வளர்ச்சி ஐந்து ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்று திமுகவினர் கூக்குரலிடுவதும் இரண்டு அரசியல் முனைகளின் பிரச்சாரங்கள் மட்டுமே.
இங்கே நாம் எழுப்ப வேண்டிய உண்மையான கேள்வி – தமிழ்நாட்டின் வளர்ச்சி யாருக்கானது?
ஒரு இலட்சம் மக்களின் நிலம், வீடு, நீர்நிலை மற்றும் வாழ்வாதாரத்தை அழித்து, ஒரு கோடி மக்களின் எதிர்காலத்தை உருவாக்கப் போகிறோம் என்று கூறுவது எந்த வகையான வளர்ச்சி?
அதேபோல், பரந்தூர் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு, நாளை வேறொரு இடத்தில் அதே கார்ப்பரேட் தேவைக்காக மக்களின் நிலங்களைப் பறிக்கும் கொள்கையைத் தொடர்வது எந்த வகையான விவசாயிகள் நலன்?
திமுகவின் கார்ப்பரேட் வளர்ச்சிக் கொள்கையும் தவெக அரசின் பொருளாதாரக் கொள்கையும் அடிப்படையில் மாற்றம் இல்லாத வரை, பரந்தூர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காது.
மக்கள் போராடியதால் பரந்தூர் திட்டம் அரசுக்கு சிறிதளவாக இருந்தாலும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது அந்த மக்கள் போராட்டத்தால் உருவான அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்தி, தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து தப்பிக்க விஜய் முயற்சி செய்கிறார்.
ஆனால், இந்தத் திட்டத்தை உருவாக்கிய அடிப்படைக் கொள்கை — கார்ப்பரேட் முதலீட்டுக்காக மக்களின் நிலம், இயற்கை வளங்கள் மற்றும் அரசின் உள்கட்டமைப்புகளைத் தாரைவார்க்கும் கொள்கை — மாற்றப்படவில்லை என்றால், நாளை இன்னொரு பரந்தூர் உருவாகும்.
மக்களுக்கான வளர்ச்சி என்றால் என்ன, முதலாளிகளுக்கான வளர்ச்சி என்றால் என்ன என்பதைப் பிரித்தறிந்து, நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் ஒவ்வொரு கார்ப்பரேட் திட்டத்திற்கும் எதிராகப் போராடுவதும், அத்தகைய திட்டங்களை உருவாக்கும் பொருளாதாரக் கொள்கையையே எதிர்ப்பதும் அவசியம்.
- அறிவு



