அடுத்தடுத்து நிறைவேறும் தீர்மானங்கள்
தவெக-வின் பாஜக எதிர்ப்பு அரசியல் நாடகம்

நீட், தொகுதி மறுவரையறை, FCRA, தமிழ்த்தாய் வாழ்த்து என ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டமன்றத் தீர்மானங்களை நிறைவேற்றுவதால் மட்டும் பாஜக எதிர்ப்பு அரசியலை நடத்திவிட முடியாது. தீர்மானங்களைத் தாண்டி மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கத் தயங்கும் தவெக, பாஜக எதிர்ப்பு வேடம் போடுகிறது. திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் இந்த நாடகத்திற்கு முட்டுக் கொடுக்கின்றன.

தமிழக அரசியலில் களத்தில் ‘உண்மையான’ பாஜக எதிர்பாளர் யார் என்று காட்டிக்கொள்வதற்கான போட்டி திமுகவிற்கும் தவெகவிற்கும் இடையே கடுமையாக நடந்து வருகிறது. இவ்விரு கட்சிகளும் தமது அறிக்கைகள், சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில், ஒன்றிய பாஜக அரசாங்கத்தை விமர்சித்த நடவடிக்கைகளைத் திமுக பட்டியலிடுவதும், அதனை எதிர்கொள்வதற்காக, தற்போது சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களைத் தவெக சுட்டிக்காட்டுவதுமாக விவாத அக்கப்போர்கள் முடிவுறாமல் நீண்டுகொண்டே செல்கின்றன.

தமிழகத்திலுள்ள பாஜக எதிர்ப்பு ஓட்டுக்களைப் பெறுவதற்காக மோடி அரசாங்கத்தின் சட்டங்களை எதிர்த்து சட்ட நடவடிக்கை சிலவற்றைத் திமுக மேற்கொண்டது உண்மைதான். அதேவேளையில், பாசிசமா அல்லது பாயாசமா என்று தேர்தல் பிரச்சாரங்களில் கிண்டல் செய்ததோடு மட்டுமில்லாமல், ஆட்சிக்கு வந்த பிறகும் மோடி/இந்துத்துவா என்ற வார்த்தையைக்கூட உச்சரிக்க மறுக்கும் முதல்வர் விஜய்க்கு [தவெக கட்சிக்கு], விசிகவும் போலி கம்யூனிஸ்ட்களும், காங்கிரசும், பாஜக எதிர்ப்பு அரிதாரத்தைப் பூசி நாடகம் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாகத்தான் ஒன்றிய அரசின் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும் என்று மிகவும் மென்மையாக, நீட் தேர்வு ரத்து, தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு, அந்நிய நன்கொடை முறைப்படுத்துதல் மசோதாவிற்கு எதிர்ப்பு மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முன்னுரிமை ஆகிய நான்கு தீர்மானங்களைப் பெரும்பான்மையான கட்சிகளின் ஆதரவுடன் கடந்த வாரம் தவெக நிறைவேற்றியிருக்கிறது.

இத்தீர்மானங்களின் உள்ளடக்கம் குறித்தும், மோடி அரசாங்கம் கொண்டுவரப்போகிற மேற்சொன்ன மசோதாக்களின் பாதகங்கள் குறித்தும் தவெகவினர் இன்றுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதேவேளையில் செய்தி ஊடகங்களும் கூட்டணிக் கட்சியினரும் இத்தீர்மானங்களைக் கொண்டு வந்ததற்காகவே விஜய்க்கு ஒளிவட்டம் காட்டி வருகின்றனர். திமுகவோ, நானும் ரவுடிதான் என முந்திக் கொண்டு இத்தீர்மானங்களுக்கு ஆதரவு தெரிவித்து தனது பாசிச எதிர்ப்புக் கடமையை ஆற்றியிருக்கிறது.

ஒன்றிய அரசின் இச்சட்டங்கள் மக்களைக் கடுமையாகப் பாதித்தாலும் கூட இக்கட்சிகள் தங்களது எதிர்ப்பைக் காட்டுவதற்கு பல நேரங்களில் தீர்மானங்களே போதுமானது என்று திட்டமிட்டே வரம்பிட்டுக் கொள்கின்றனர். இத்தீர்மானங்களை நம்பி, மாநில-ஒன்றிய அரசாங்கங்களுக்கு இடையே சிக்கி மக்கள் தான் திண்டாட வேண்டியுள்ளது.

உண்மையில் இத்தீர்மானங்கள் என்பது ‘பார்த்துச் செய்யுங்கள்’ என்று மேலே உள்ளவர்களுக்குச் சொல்வதற்கான சட்டரீதியிலான ஒரு சடங்கு நடவடிக்கை என்பதைத் தாண்டி அதில் வேறெந்த பயனும் இல்லை. மக்கள் தங்களது அன்றாடப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்று நம்பி கலெக்டரிடம் கொடுக்கப்படும் மனுக்கள் எப்படி குப்பைக்குச் செல்கிறதோ அதுபோல சட்டமன்றத்தில் இயற்றப்படும் தீர்மானங்களையும் மோடி அரசு திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்துப் பேசிய முன்னாள் சட்ட அமைச்சர் ரகுபதி, “முதலமைச்சர் இன்று கொண்டு வந்த தீர்மானம் ஆளுநரையோ, மற்றவர்களை கட்டுப்படுத்தும் என்பது சந்தேகம். இதற்கு ஒரு சட்ட அங்கீகாரம் தேவை.” என்கிறார்.

அரசியலமைப்புச் சட்டப்படி, சட்டசபையில் இயற்றப்படும் மாநிலப் பட்டியலில் உள்ள துறைகள் சார்ந்த மசோதாக்களுக்கோ அல்லது பொதுப்பட்டியலில் உள்ள துறைகள் சார்ந்து இயற்றப்படும் மசோதாக்களுக்கோ சட்ட அங்கீகாரம் கிடைத்தால் தான் அதை ஒன்றிய, மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்ற நிர்பந்தம் இருக்கும். அதே தீர்மானமாக இருந்தால் யாரும் பின்பற்ற வேண்டியதில்லை.

உதாரணமாக உயர்கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ள ஒரு துறை. அதில் மருத்துவப் படிப்பிற்கு நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பது ஒன்றிய அரசு இயற்றியுள்ள சட்டம். இதில் ஒரு மாநிலத்திற்கு மட்டும் குறிப்பான சலுகைகள் வேண்டும் என்றால் அதுகுறித்து அம்மாநில சட்டசபையில் இயற்றப்படும் மசோதாவிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் கொடுக்க வேண்டும். அப்படித்தான் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இடஒதுக்கீடு பெறப்பட்டது. அதேவேளையில் நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் ஒன்றிய அமைச்சரவை இன்று வரை கிடப்பில் போட்டுள்ளது. அதனால்தான் நீட் விலக்குப் பெற முடியவில்லை. மாநிலப் பட்டியலில் உள்ள துறைகள் சார்ந்த மசோதாவிற்கு ஆளுநரின் ஒப்புதலே போதுமானது. ஆனால் தீர்மானங்கள் வெறும் கருத்துக்களே தவிர அதற்கு எந்த சட்ட அதிகாரமும் கிடையாது. இதைத்தான் ரகுபதியும் மேலோட்டமாகச் சொல்லியிருக்கிறார்.

அரசியலின் பாலபாடமான இந்த சட்ட உண்மைகள் திடீர் எம்எல்ஏக்களான தவெகவினருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அக்கட்சிக்கு முட்டுக் கொடுக்கும் “அரசியல் சட்டத்தைப் பாதுகாவலர்களான” விசிகவுக்கும், போலி கம்யூனிஸ்ட்களுக்கும் கூடவா இது தெரியாமல் இருக்கும்?

தேர்தலுக்கு முன் பாஜகவின் பி டீமாக இருந்த தவெக, ஆட்சியமைத்த பிறகு பாஜக எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு தன்மை கொண்டதாக மாறி இருப்பதாக நற்சான்றிதழ் வழங்குகிறார் திருமாவளவன். போலி கம்யூனிஸ்ட்களும் ஊழல் குறைந்திருப்பதாக தவெகவிற்கு பக்க வாத்தியம் வாசிப்பதோடு பாஜகவை இன்னும் வெளிப்படையாக பாஜகவை விமர்சிக்க வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு பாடமெடுக்கின்றனர். உண்மையில் இவர்கள் சொல்வதற்கு நேர்மாறாகவே தவெகவின் செயல்பாடுகள் இருந்து வருகிறது. குறைந்தபட்சம், பிற மாநிலக் கட்சிகளைப் போலவாவது, பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட திட்ட நிதியைக் கொடுக்காமல் திமிருடன் மிரட்டும் மோடி அரசாங்கத்தைக் கண்டித்து ஒரு வார்த்தையாவது தவெக பேசியதுண்டா? முட்டுக் கொடுப்பவர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை என்ற தீர்மானத்தையே எடுத்துக் கொள்வோம். இத்தீர்மானத்தைச் சுட்டிக்காட்டியே தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறும் தவெக ஆதரவாளர்கள் வந்தேமாதரம் பாடலுக்கு எதிர்ப்பு பிம்பத்தை கட்டமைக்கின்றனர். ஆனால் இப்பிரச்சனையில் தவெக செய்ததுதான் என்ன?

பொதுவாக கல்வி நிலையங்கள், அரசாங்க நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவது நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் ஒரு நடைமுறை. ஆனால், விஜய் முதல்வராகப் பதவியேற்பு நிகழ்ச்சியில் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டது. அடுத்து அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வின் போதும், சட்டசபையிலும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவிலும் வந்தே மாதரம் பாடலே முதலில் பாடப்பட்டது. இது மிகவும் கடுமையான விமர்சனத்திற்குள்ளான போது, இது ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் என்று அமைச்சர் ராஜமோகன் சப்பைக்கட்டு கட்டினார். ஆனால் மேற்குவங்க மாநில பாஜக முதல்வர் பதவியேற்பு விழாவில் வந்தேமாதரம் பாடவில்லையே என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லவே இல்லை.

இந்தாண்டு ஜனவரியில் வந்தேமாதரம் பாடலைப் பாடுவது குறித்த ஒரு வழிகாட்டுதலை மோடி அரசாங்கம் வெளியிட்டது. அதில், அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பு வந்தேமாதரம் பாடலின் ஆறு பத்திகளையும் பாடவேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது. இதுவொரு வழக்கமான வழிகாட்டுதல் என்பதால் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. பாஜக ஆளாத பிற மாநில அரசாங்கங்கள் இவ்வழிகாட்டுதலைப் பின்பற்ற முடியாது என்று எதிர்ப்புத் தெரிவித்தன. ஆனால் விஜய்யோ அல்லது தவெகவினரோ மூச்சுக் கூட விடவில்லை.

இச்சுற்றரிக்கைக்கு அரசியல் கட்சிகள், ஜனநாயக அமைப்புகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கடுமையான கண்டனங்கள் எழுந்தது. எதிர்ப்புகளைக் கிஞ்சித்தும் மதிக்காமல், வந்தேமாதரம் பாடலை முழுவதையும் பாடவேண்டும் என்று தற்போது சட்டம் இயற்றி இருக்கிறது பாஜக.

வந்தேமாதரம் பாடலில் இந்து கடவுள்களைப் பற்றி வருவதால் பிற மதத்தினர் [இஸ்லாம், கிறித்துவம், சீக்கியம்] பாடமறுப்பார்கள். இச்சட்டத்தின் கீழ் அவர்களைக் கைது செய்வதன் மூலமாக இந்து தேசிய அரசியல் நடவடிக்கைகளையும் அதன் விவாதங்களையும் பரவலாக்க முடியும் என்ற திட்டத்திலிருந்தே மோடி-அமித்ஷா கும்பல் வந்தேமாதரம் பாடலின் ஆறு பத்திகளையும் பாடவேண்டும் என்கிறது. பாஜகவின் திட்டம் தெரிந்திருந்தும் கூட அம்மசோதாவைக் கண்டித்து தவெக அறிக்கை வெளியிடவில்லை.

“அரசு நிகழ்ச்சிகளில் வந்தேமாதரம் பாடுவது கட்டாயம் என்று சட்டம் சொல்லவில்லை. அப்பாடலைப் பாடும்போது அதற்கு அவமரியாதையாக நடந்து கொள்வதுதான் தண்டனைக்குரிய குற்றம் என்று தான் சொல்கிறது” என்கிறார் சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி ஹரிப்பரந்தாமன். “சட்டப்படி தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கு தடையேதும் இல்லை” என்று சென்னை உயர்நீதிமன்றமும் தெளிவுப்படுத்தி விட்டது. இந்நிலையில், சட்ட விதிமுறைகளுக்கு மாறாக வந்தேமாதரம் பாடலை வைத்து தொடர்ச்சியாக சர்ச்சையைக் கிளப்பும் ஆளுநரைக் கண்டிக்காமல், “மாநிலத்தின் நலனுக்காக ஒன்றிய அரசுடனான மோதல் போக்கை தவிர்க்கிறோம்” என்று இருபத்தி மூன்றாம் புலிகேசி போல சமாளிக்கிறார் முதல்வர் விஜய்.

தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடவேண்டும் என்று அரசாணை வெளியிடுவதற்கும் அல்லது இதற்கான தனி மசோதாவையே நிறைவேற்றுவதற்கும் அதிகாரம் இருந்தும், அக்குறைந்தபட்ச சட்டரீதியான நடவடிக்கையைக் கூடச் செய்யத் திராணியில்லாமல், போண்டா மடிப்பதற்கு கூட பயன்படாத ஒரு காகிதத் தீர்மானத்தைச் சட்டசபையில் வாசித்து விட்டு, நாங்களும் பாஜகவை எதிர்க்கிறோம், தமிழ்த்தாய் வாழ்த்தை உயர்த்தி பிடிக்கிறோம் என்று வசனம் பேசி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

இதே போலத்தான், நீட் விலக்கிற்காகப் போராடியவர்கள் மீது வழக்குகள் போட்டும், போராட்டங்களுக்கு அனுமதி மறுத்தும், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டியும் நீட்க்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கி வருகிற தவெக அரசாங்கம், சட்டமன்றத்தில் நீட் தேர்வு விலக்குக்கான தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் நாங்களும் நீட் தேர்வை எதிர்கிறோம் என்று நாடகமாடுகிறது. தொகுதி மறுவரையறைத் தீர்மானத்திலும் இதே கதைதான்.

அடிப்படையில் ஆர்எஸ்எஸ்-பாஜக எதிர்ப்பு, இந்துத்துவா எதிர்ப்பு, காவி பாசிச எதிர்ப்பு என்ற கண்ணோட்டமே கிஞ்சித்தும் இல்லாத தவெக கும்பல், இத்தீர்மானங்களின் மூலமாகத் தங்களைப் பாசிச எதிர்ப்பாளர்களாகக் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறது. கூட்டணிக் கட்சிகளும் தங்களுக்கான அமைச்சர் பதவி மற்றும் வாரியப் பதவிகளுக்காக, காவி பாசிசத்தைக் காரணம் காட்டி, தவெகவின் [விஜயின்] வாசிப்புக்கு ஒத்தூதுகின்றனர்.

நீட் தேர்வு விலக்குப் பெறுவதற்கான ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று வசனம் பேசி ஆட்சிக்கு வந்த திமுக, குழுவை அமைப்பது, அறிக்கைகள் வெளியிடுவது, தீர்மானங்களை நிறைவேற்றுவது, நீட் விலக்கு மசோதாவை கொண்டுவருவது போன்ற சட்ட ரீதியிலான சடங்குகளைக் குறையில்லாமல் செய்த போதும் மோடி-அமித்ஷா அரசாங்கம் அக்கோரிக்கையைக் கண்டுகொள்ளவே இல்லை. இறுதியில், “ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சி அமையவில்லை, அதனால் நீட் விலக்குப் பெற முடியவில்லை” என்ற சிதம்பர ரகசியத்தைச் சொல்லிக் கை கழுவிச் சென்றது. தற்போது பாஜக என்ற சொல்லைக்கூட உச்சரிக்கத் தயங்கும் தவெகவும் அதே வழியில் தீர்மானம் இயற்றும் நாடகங்களை அரங்கேற்றி, நம்மை வழக்கம் போல நம்பச் சொல்கிறது.

நீட் போன்ற போட்டித் தேர்வுகள் அந்நிய மூலதனத்தின் நலனுக்காக நம் மீது திணிக்கப்படுபவை, FCRA திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா, வந்தேமாதரம் சட்டம் போன்றவையெல்லாம் ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலின் இந்துத்துவா அரசியலுக்காக முன்னெடுக்கப்பட்டவை. இவ்வாறு காவி-கார்பரேட் பாசிசத் திட்டத்திற்குச் சேவையாற்றுவதற்காகக் கொண்டுவரப்படும் இச்சட்டங்களை வெறும் சட்டசபைத் தீர்மானங்களினாலும் மசோதாக்களினாலும் அசைக்கக்கூட முடியாது. மக்களின் போராட்டங்களின் மூலமே அவற்றைத் தடுக்க முடியும்.

தர்மேந்திரப் பிரதான் பதவி விலக வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் வலியுறுத்திய போதும் கண்டுகொள்ளாத பாஜக, மாணவர்கள்-இளைஞர்கள் போராட்டத்தின் காரணமாக அடிபணிய நேர்ந்தது. மூன்று விவசாயச் சட்டங்கள் கூட விவசாயிகளின் உறுதியான போராட்டத்தின் காரணமாக பின்வாங்கப்பட்டதே ஒழிய கட்சிகளின் அறிக்கைகளினால் அல்ல என்பதே நமது அனுபவம். நமக்குத் தேவை தீர்மானங்கள் என்ற சட்ட முகமூடிகளை அணிந்துக் கொண்டு வரும் பாசிச ஆதரவாளர்களும் அவர்களது வெற்றுத் தீர்மானங்களும் அல்ல. நமக்கு வேண்டியதெல்லாம் போராட்டங்களும் அதை ஆதரிக்கக்கூடியவர்களுமே.

  • மாணிக்கம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன