இந்திய–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் : இந்திய மக்களை அடிமைப்படுத்த இருநாட்டு முதலாளிகளின் பேரம்!
நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளை வெறுமனே “இரு தரப்பினருக்கும் நன்மை” என்ற அடிப்படையில் பார்க்க முடியாது. ஏனென்றால் உலக முதலாளித்துவ கட்டமைப்பில் நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் வலிமை சமமாக இல்லை. அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய வல்லரசுகள் தங்களது பொருளாதார, நிதி, தொழில்நுட்ப மற்றும் இராணுவ மேலாதிக்கத்தைப் பயன்படுத்தி, இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் சந்தைகள், வளங்கள் மற்றும் உழைப்பைத் தங்களது மூலதனத்தின் நலனுக்கேற்ப பயன்படுத்திக் கொள்கின்றன என்பதால் அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தங்களில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களே மேலோங்கி இருக்கும்.
இதற்கு சமீபத்திய நிகழ்வுகளே தெளிவான எடுத்துக்காட்டாக உள்ளன. இரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அழுத்தமும், அமெரிக்காவுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் அங்கேயே உற்பத்தித் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும், வர்த்தகம் என்பது வெறும் வாங்குவதும் விற்பதுமல்ல; அதன் பின்னால் ஏகாதிபத்தியத்தின் பொருளாதார அழுத்தமும் ஆதிக்கமும் இருப்பதை வெளிப்படுத்துகின்றன.
இங்கே அமெரிக்கா தனது சந்தையை மட்டும் பாதுகாக்க முயலவில்லை என்பது தெளிவு. மாறாக இந்தியா யாரிடமிருந்து எண்ணெய் வாங்க வேண்டும், இந்திய மருந்து நிறுவனங்கள் எங்கே உற்பத்திச் செய்ய வேண்டும் போன்ற முடிவுகளிலும் தனது செல்வாக்கைச் செலுத்த முயல்கிறது. அதாவது, தனது அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கத்தின் மூலமாக இந்தியா அரசு என்ன செய்ய வேண்டும் என்று அமெரிக்கா ஆணையிடுகிறது.
அப்படியானால், இந்திய ஆளும் வர்க்கம் கூறுவதுபோல், இந்த ஒப்பந்தம் எப்படி “இரு நாடுகளுக்கும் சமமானப் பயனை” வழங்கும் ஒப்பந்தமாக இருக்க முடியும்?
இந்தக் கேள்விக்கான விடையை முதலாளித்துவ ஆதரவாளர்களிடமோ, அதை பாதுகாக்கும் ஆட்சியாளர்களிடமோ எதிர்பார்ப்பதில் பயனில்லை. மார்க்சியத்தின் துணைகொண்டு இந்த ஒப்பந்தத்தை ஆராய்வதே பொருத்தமானது. “இந்தியாவுக்கு எவ்வளவு இலாபம்?” என்பதைக் காட்டிலும், யாருடைய மூலதனத்திற்கு அதிகாரம் கிடைக்கிறது? யாருடைய சந்தை திறக்கப்படுகிறது? யாருடைய வளங்கள் சுரண்டப்படுகின்றன? உருவாகும் உபரி மதிப்பு யாரிடம் குவிகிறது? என்ற கேள்விகளுக்கான பதில்களிலிருந்தே இந்த ஒப்பந்தம் சமமான பலனைத் தருமா என்று பரிசீலிக்க முடியும்.
மார்க்சியப் பார்வை என்பது அமெரிக்காவுடனான எந்த வர்த்தகமும் இந்தியாவுக்குப் பயனற்றது என்று கூறுவது அல்ல. ஒப்பந்தங்கள் மூலம் இந்தியாவில் ஒரு சில தொழில்கள் வளரலாம்; இந்திய ஏற்றுமதியாளர்களுக்குப் புதிய சந்தைகளும், தொழில்நுட்பங்களும் கிடைக்கலாம். ஆனால் அந்தப் பயன் யாரிடம் குவிகிறது, அதற்கான விலையை யார் செலுத்துகிறார்கள், அது எந்த வர்க்கத்தின் நலனுக்குச் சேவை செய்கிறது என்பதுதான் முக்கியம்.
எனவே, இந்தியப் பெருமுதலாளிகளின் இலாபத்தை அதிகரிக்கும் அதேவேளையில் விவசாயிகள், சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் மீதான போட்டியையும் சுரண்டலையும் அதிகரிக்கும் ஒரு ஒப்பந்தத்தை “இந்தியாவின் வெற்றி” என்று பொதுமைப்படுத்த முடியாது.
இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் ஏறக்குறைய இறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய வர்த்தகத் துறை செயலாளர் ராஜேஷ் அகர்வால் 09.09.2026 அன்று தெரிவித்துள்ளார். இரு அரசுகளும் இதுவரை எட்டியுள்ள உடன்பாட்டில் திருப்தி அடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், இந்த ஒப்பந்தத்தை இரு நாடுகளின் உழைக்கும் மக்களுக்கான சமமான பயன் கொண்ட ஒப்பந்தமாகப் பார்க்க முடியாது. உலக முதலாளித்துவப் போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா தனது சந்தை மற்றும் வர்த்தக மேலாதிக்கத்தைப் பாதுகாக்க அழுத்தம் கொடுக்கிறது; இந்திய முதலாளித்துவ வர்க்கம் அந்த அழுத்தத்திற்குள் தனது ஏற்றுமதி சந்தையையும் இலாப வாய்ப்புகளையும் பாதுகாத்துக்கொள்ள பேரம் நடத்துகிறது.
எனவே, இது “இந்தியாவின் வெற்றி” அல்ல; இந்திய முதலாளிகளின் நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள அமெரிக்காவுடன் நடத்தப்பட்ட பேரத்தின் விளைவு. இந்தப் பேரத்தில் இந்திய முதலாளிகளுக்குக் கிடைக்கும் வர்த்தகச் சலுகைகள், சந்தை வாய்ப்புகள் மற்றும் இலாபங்கள் “இந்தியாவின் நலன்” என்று பொதுமைப்படுத்தப்படுகின்றன.
இதை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள, அமெரிக்க துணை வெளியுறவுத் துறை அமைச்சர் கிறிஸ்டோபர் லாண்டா மார்ச் மாதம் கூறிய கருத்தை கவனிக்க வேண்டும். இந்திய அதிகாரிகள் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் ஒப்பந்தம் எனக் கூறும் நிலையில், அமெரிக்கா சீனாவுக்கு வழங்கிய பொருளாதாரச் சலுகைகளை இந்தியாவுக்கு மீண்டும் வழங்காது; அமெரிக்காவின் நலனே முதன்மையானதாக இருக்கும் என்பதை லாண்டாவே வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
குறிப்பாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வர்த்தக அழுத்தங்களுக்கு மத்தியில், இந்திய முதலாளித்துவ வர்க்கம் தனது ஏற்றுமதி சந்தையைப் பாதுகாத்து விரிவுபடுத்துவதற்கும், அதற்குச் சாதகமான வர்த்தகச் சலுகைகளைப் பெறுவதற்கும் முயல்கிறது. எனவே, இந்த ஒப்பந்தம் வழங்கும் பலன்கள் எந்த வர்க்கத்திற்குச் செல்கின்றன என்பதையும், அதன் பொருளாதாரச் சுமைகள் இந்திய உழைக்கும் மக்களின் மீது எவ்வாறு திணிக்கப்படுகின்றன என்பதையும் வர்க்கக் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்வது அவசியமாகிறது.
இந்த வர்த்தகப் பேரத்தின் மையத்தில் இருப்பது இந்திய உழைக்கும் மக்களின் நலன் அல்ல; இந்திய பெருமுதலாளித்துவ வர்க்கத்தின் ஏற்றுமதி, முதலீடு மற்றும் இலாப நலன்களே. அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது சந்தை மற்றும் வர்த்தக ஆதிக்கத்தை நிலைநிறுத்த அழுத்தம் கொடுக்கும் நிலையில், இந்திய ஆளும் வர்க்கம் அந்த அழுத்தத்தை எதிர்ப்பதற்குப் பதிலாக, தனது மூலதன விரிவாக்கத்திற்கு சாதகமான சலுகைகளைப் பெறுவதற்கான பேரத்தில் ஈடுபடுகிறது.
இந்தப் பேரத்தின் விலை எவ்வாறு தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் மீது திணிக்கப்படுகிறது என்பதற்கு மருந்துத் துறையும் இரஷ்ய எண்ணெய் விவகாரமும் தெளிவான உதாரணங்களாகும். இந்தியாவின் மலிவு விலை பொதுமருந்துகள் அமெரிக்கச் சந்தையில் முக்கிய இடம் பெற்றுள்ள நிலையில், இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே உற்பத்தி நிலையங்களை அமைத்து, மருந்துகளையும் அவற்றுக்கான மூலப்பொருட்களையும் அங்கேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவின் உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்புகள் அமெரிக்கச் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றப்படுகின்றன.
அதேபோல், இந்தியா இரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடர்ந்தால், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க முடியும் என்ற அழுத்தமும் முன்வைக்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியா யாரிடமிருந்து எண்ணெய் வாங்க வேண்டும், எங்கு உற்பத்தி செய்ய வேண்டும், எந்தச் சந்தையில் விற்க வேண்டும் என்பதிலும் அமெரிக்கா தனது நிபந்தனைகளைத் திணிக்க முயல்கிறது.
இவ்வாறு, அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது மூலதனத்திற்கும் சந்தைக்கும் சாதகமான நிபந்தனைகளை உருவாக்குகிறது; இந்தியப் பெருமுதலாளித்துவம் தனது ஏற்றுமதி மற்றும் இலாப நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள அதனுடன் பேரம் பேசுகிறது. இந்தப் பேரத்தில் கிடைக்கும் பலன் பெருமுதலாளிகளிடம் குவியும் நிலையில், அதன் சுமை வேலைவாய்ப்பு, வருமானம், உற்பத்திச் செலவு மற்றும் வாழ்வாதார நெருக்கடிகளின் வழியாக தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு உற்பத்தியாளர்கள் மீது இறக்கப்படுகிறது. இதுவே “இருதரப்பு வர்த்தகம்” என்ற பெயருக்குப் பின்னால் மறைந்திருக்கும் வர்க்க அரசியலாகும்.
- மகேஷ்
செய்தி ஆதாரம்:
- https://www.hindutamil.in/news/business/india-us-trade-deal-more-or-less-finalised-to-be-signed-at-appropriate-time-commerce-secy
- https://www.bbc.com/tamil/articles/ckgxy81y9ezo
