கரும்பு வெட்டும் தொழிலாளர்களின் கண்ணீர்க் கதை!
கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் நவீன கொத்தடிமைகளாகவே நீடிக்கின்றனர். சாதிப் படிநிலைகளையும் பாலின ஏற்றுத் தாழ்வையும் தக்க வைத்து, சர்க்கரை உற்பத்தியில் ஆலை முதலாளிகளும் ஒப்பந்ததாரர்களும் உண்டு கொழுக்கின்றனர்.
கரும்பு தின்னக் கூலியா என்பார்கள். ஆனால் ஒரு முறை கரும்பு வெட்டும் கூலி வேலைக்குச் சென்றால், மரணமே உங்கள் வீட்டு வாசல் கதவைத் தட்டினாலும் அங்கிருந்து திரும்பி வர முடியாது.
கொடிய வறுமை மற்றும் கடனால் அவதிப்பட்ட சீதா சசானி எனும் பெண், தமது குடும்பத்தோடு மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்திலிருந்து கோலாப்பூர் எனும் பகுதிக்குக் கரும்பு வெட்டும் கூலி வேலைக்குப் புலம் பெயர்ந்தார். கரும்பு வயலில் கரும்பை வெட்டிக் கொண்டிருக்கும் போதே பக்கவாதத்தில் சரிந்த தன் கணவனை மருத்துவமனைக்குக் கூட சீதா சசானியால் கொண்டு செல்ல இயலவில்லை. ஒப்பந்ததாரரிடம் வாங்கிய முன்பணத்தைக் கழிப்பதற்காக, நோயாளியான தனது கணவரைப் படுக்கையில் கிடத்தியபடியே தனது மகன்களோடு கரும்பு வெட்டும் கூலி வேலையைச் செய்து வருகிறார்.
சீதா சசானியைப் போல மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்திலிருந்து கரும்பு வெட்டப் புலம்பெயர்ந்த ஏராளமான தொழிலாளர்கள், கண்ணீரும் வலியும் தோய்ந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். கரும்பு வெட்டும் தொழிலாளர்களின் மோசமான பணிச் சூழலைக் கண்ட ஆராய்ச்சியாளர் ஜான் பிரேமன், ‘கரும்பு வெட்டும் தொழிலாளர்களை விட நாய்கள் கூடச் சிறந்த நிலையில் உள்ளன’ என்றார்.
இந்தியாவில் சர்க்கரை உற்பத்தித் துறையின் மூலம் ஆண்டுக்குச் சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படுகிறது. நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் 35% மகாராஷ்டிராவிலேயே நடைபெறுகிறது. சர்க்கரை மற்றும் எத்தனால் உற்பத்திக்கும், பெப்சி போன்ற குளிர்பான ஆலைகளுக்கான மூலப்பொருளாகவும் பயன்படும் கரும்பு, மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது.
கடந்த 2025-26 ஆம் ஆண்டில் மட்டும் இம்மாநிலத்தில் 1,316 இலட்சம் டன் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. அங்கு மொத்தம் 210 சர்க்கரை ஆலைகள் (கூட்டுறவு மற்றும் தனியார்) செயல்பாட்டில் இருக்கின்றன.
பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டத்தை ஒரு வெற்றித் திட்டம் போல மோடி அரசு பிரச்சாரம் செய்து மக்களை ஏய்த்து வருகிறது. எத்தனால் உற்பத்திக்குக் கரும்பு மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 2024-25 ஆம் ஆண்டின் மொத்த எத்தனால் உற்பத்தியில் 16% கரும்பிலிருந்தே பெறப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் E20 பெட்ரோல் மாயையில், கரும்பு வெட்டும் தொழிலாளர்களின் வாழ்க்கையும் மோசமான பணி நிலைமைகளும் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.
மகாராஷ்டிர மாநில சர்க்கரை ஆணையத்தின் படி, சுமார் 40 இலட்சம் விவசாயிகள் 14.87 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் கரும்பைப் பயிரிடுகின்றனர். சர்க்கரைத் தொழிலில் மூன்று வகையான வேலைகள் இருக்கின்றன. சர்க்கரை ஆலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்கும் கரும்பு விவசாயிகள்; கரும்பு வெட்டும் தொழிலாளர்கள்; கரும்பை ஆலைகளுக்குக் கொண்டும் செல்லும் போக்குவரத்துத் தொழிலாளர்கள்; மற்றும் சர்க்கரை ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள்.
இதில் சர்க்கரை உற்பத்தியின் முதுகெலும்பாகக் கரும்பு வெட்டும் தொழிலாளர்களே இருக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 10 இலட்சம் புலம்பெயர் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பாதி பேர் பெண்கள்.
மகாராஷ்டிராவில் வறட்சியால் அதிகம் பாதிக்கப்படும் பீட் மாவட்டத்திலிருந்து மட்டும் சுமார் 6 இலட்சம் பேர் தமது குடும்பத்தோடு கரும்பு வெட்டுவதற்காக மேற்கு மகாராஷ்டிராவின் சர்க்கரை மண்டலப் (sugar belt) பகுதிகளுக்குப் புலம் பெயர்கின்றனர்.
மாநிலத்தின் வறியப் பகுதியான பீட் மாவட்டத்தின் புவியியல் அமைப்பான மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் மழை மறைவுப் பகுதியால் நீர்ப்பாசன வசதி இன்றி விவசாயம் நலிவுற்றுப் போய், அப்பகுதி மக்கள் கரும்பு வெட்டும் தொழிலுக்குப் புலம்பெயர நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
பீட் மாவட்டத்திலிருந்து வஞ்சாரி, பஞ்சாரா மற்றும் பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்களே பல தலைமுறைகளாகக் கரும்பு வெட்டும் கூலி வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். வறுமையிலும் அறியாமையிலும் உழலும் இவர்கள், பீட் மாவட்டத்தின் கிராமங்களில் பிழைக்க வழியின்றிக் கரும்பு வயல்களில் அற்பக் கூலிக்கு வேலை செய்து வருகின்றனர். கரும்பு வெட்டும் தொழிலாளர்களின் குடியிருப்புகளோ மனிதர்கள் வாழத் தகுதியற்றவை. இக்குடியிருப்புகளில் கழிவறையோ, குளியலறையோ, மின்சார வசதியோ, மருத்துவமனைகளோ கிடையாது.
அரசியல் கட்சிகளின் முதலைகளே பெரும்பாலும் சர்க்கரை ஆலைகளை நடத்துகின்றனர். கரும்பு வெட்டும் தொழிலாளர்களில் 100% ஒப்பந்த முறையில் ஒப்பந்ததாரர்கள் மூலம் கூலிக்கு அமர்த்தப்படுகின்றனர். இத்தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி, ரூ. 50,000-லிருந்து ஒரு இலட்சம் வரை முன்பணத்தை ஒப்பந்ததாரர்கள் ஆரம்பத்திலேயே கொடுத்து, அடிமைச் சங்கிலியில் பிணைத்து விடுகிறார்கள். அதைத் திருப்பிச் செலுத்துவதற்காக இத்தொழிலாளர்கள் நவீன கொத்தடிமைகளாகவே நீடிக்கின்றனர். சாதிப் படிநிலைகளையும் பாலின ஏற்றத் தாழ்வையும் தக்க வைத்து, சர்க்கரை உற்பத்தியில் ஆலை முதலாளிகளும் ஒப்பந்ததாரர்களும் உண்டு கொழுக்கின்றனர்.
சர்க்கரை ஆலை முதலாளிகள், கரும்பு வெட்டும் தொழிலாளர்களைத் தங்கள் ஆலையில் பணிபுரிபவர்களாக ஒரு போதும் ஏற்றுக்கொள்வதில்லை. இதனால் ஒப்பந்ததாரர்களால் பணிக்கு அமர்த்தப்படும் இத்தொழிலாளர்கள், சர்க்கரைத் தொழிலின் ஒரு அங்கமாக ஒருங்கிணைக்கப்படவும் இல்லை.
இத்தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 முதல் 14 மணி நேரம் கண்டிப்பாக வேலை செய்தாக வேண்டும். கையால் ஓங்கி ஓங்கி அரிவாளைப் பிடித்துக் கரும்பு வெட்டும் கடினமான வேலை. கடும் வெப்பத்தில் வியர்வை ஆறாகப் பெருக வேலை செய்தாக வேண்டும். சிறிது பிசகினாலும் அரிவாள் வழுவி உடல் உறுப்புகளில் காயங்கள் ஏற்படும். கரும்பு வயல்களில் காயம் படாத நாளே இல்லை எனலாம். தொழிலாளர்களின் முதுகெலும்பை உடைக்கும் இந்தக் கடுமையான வேலை, அதிகாலை தொடங்கி மாலை வரை தொடர்கிறது. நாள் முழுவதும் கரும்பைக் குனிந்து கொண்டே வெட்டுவது, கரும்புக் கட்டைத் தலையில் சுமப்பது, லாரி அல்லது மாட்டு வண்டியில் ஏற்றுவது போன்றவற்றால், தசை மற்றும் எலும்பு சார் குறைபாட்டால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.
இத்தொழிலாளர்கள் நாள்தோறும் கனமான கரும்புக் கட்டுகளைக் குனிந்துதான் தூக்க வேண்டும். இதற்காக முதுகில் அதிக அழுத்தம் கொடுத்துச் சுமக்கின்றனர். இதனால் சுமார் 50%க்கு அதிகமான கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் முதுகுத் தண்டுவடப் பகுதியில் உருவாகும் வலியால் அவதிப்படுகின்றனர்.
2024-2026 ஆம் ஆண்டு வரை மட்டும் 186 கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர்; 112 பேர் பலத்த காயமடைந்திருக்கின்றனர். கரும்பு வெட்டும் தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பேருக்கு அரிவாளால் வேலை பார்க்கும் போது காயங்கள் ஏற்படுகின்றன என்கிறது ஓர் ஆய்வு. கரும்பு வயல்களின் அருகே மருத்துவ வசதியும் மருந்தும் இல்லை. விபத்துக்குள்ளாகிப் படுகாயமடைந்தால், பல கி.மீ. தூரம் தூக்கி வந்தே மருத்துவ சிகிச்சை பார்க்க முடியும்.
இத்தொழிலாளர்களைக் கூலிக்கு அமர்த்தும் ஒப்பந்ததாரர்கள் தம்பதிகளையே கூலிக்கு அமர்த்துகின்றனர். கரும்பை வெட்டுவது, டிராக்டரில் ஏற்றுவது போன்ற வேலைகளை இரண்டு பேர் செய்வது என்ற அடிப்படையில் ஒரு தம்பதிக்கே கூலி வழங்கப்படுகிறது. பீட் மாவட்டத்தில் வறுமையால் வாடும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள், தங்களது குடும்பத்தோடு முன்பணத்தைப் பெற்றுக் கொண்டு கூலித் தொழிலாளர்களாகப் பணிபுரிகின்றனர். குடும்பங்கள் ஒன்றாக வசிப்பதால் ஒப்பந்ததாரர்கள் அவர்களை எளிதாக நிர்வகிக்கிறார்கள். இப்படி ஒட்டச் சுரண்டுவதற்கு வசதியாகவே தம்பதிகளைக் கூலிக்கு அமர்த்துகின்றனர்.
ஒரு நாள் வேலைக்கு இத்தொழிலாளர்களுக்குக் கூலியாக ரூ. 250 முதல் ரூ. 300 வரை வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு நாள் விடுப்பு எடுத்தால், ஒரு நாள் கூலியை விடவும் அதிக தொகையான ரூ. 500 முதல் ரூ. 1000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
கொடிய வறுமையால் இப்பகுதியில் பெண்களுக்குச் சிறுவயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டு, கரும்பு வெட்டும் தொழிலுக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர். இளம் வயதில் கரும்பு வெட்டும் வேலைக்கு வரும் பெண்கள், மாதவிடாய் நாட்களில் கூட விடுமுறை எடுக்க முடியாது. இதனால் கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபடும் பீட் மாவட்ட பெண் தொழிலாளர்களில் மட்டும் சுமார் 35% பேர் கருப்பை நீக்க அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு நாள் விடுப்பு எடுத்தால் கூட இரண்டு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதால், மாதவிடாய் வலியில் கூட இப்பெண் தொழிலாளர்கள் கரும்பு வயலுக்கு வேலைக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். கருப்பையின் சில பகுதிகளையோ அல்லது அனைத்துப் பகுதிகளையோ அகற்றும் அறுவைச் சிகிச்சையான ஹிஸ்டெரெக்டோமி என்பது, ஒரு பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் பொதுவாகச் செய்யப்படும் ஒரு மருத்துவ அறுவைச் சிகிச்சையாகும். ஆனால் இப்பெண் தொழிலாளர்கள், மாதவிடாய் வலியின் போது விடுப்பு எடுத்தால், தாங்கள் வாங்கிய முன்பணத்தை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் கருப்பை அறுவைச் சிகிச்சை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் தமது உடல் மற்றும் இனப்பெருக்கம் குறித்து முடிவெடுக்கும் உரிமை உண்டு. ஆனால் இந்த உரிமையானது கரும்பு வெட்டும் பெண் தொழிலாளர்களுக்கு மறுக்கப்படுகிறது. கருப்பை நீக்கம் இளம் வயதிலேயே செய்யப்படுவதால், பெண்களுக்கு இப்பகுதியில் சிறுவயதிலேயே அதிகளவில் திருமணம் செய்யப்படுகின்றன.
இப்பெண் தொழிலாளர்களுக்குப் பிரசவகால விடுப்பு கூட வழங்கப்படுவதில்லை. அதிகாலையிலே எழுந்து சமையல் வேலைகள், தண்ணீர் கொண்டு வருவது, குழந்தைகளைப் பராமரிப்பது என வீட்டு வேலைகளை முடித்து விட்டுக் கரும்பு வெட்டும் வேலைக்குச் செல்லும் இப்பெண்கள், ஒரு நாளைக்கு 20 மணி நேரத்திற்கும் அதிகமாக உழைக்கின்றனர். இது மட்டுமில்லாமல், அவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் கழிவறைகள் இல்லாதது, பாலியல் துன்புறுத்தல் எனப் பல சொல்லொணாத் துயரங்களில் இப்பெண் தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.
இத்தொழிலாளர்கள் வேலைப் பார்க்கும் பகுதியில் பள்ளிக்கூடங்களைக் காண்பது அரிது. இத்தொழிலாளர்கள் தங்களது பிள்ளைகளைப் படிக்கக் கூட வைக்க முடிவதில்லை. அற்பக் கூலிக்கு நாளெல்லாம் உழைத்து ஓடாகிப் போன இத்தொழிலாளர்கள், தங்களது அருமைப் பிள்ளைகளை எப்படிப் படிக்க வைக்க முடியும்? இளஞ்சிறுவர்கள், தந்தை, தாய் எனக் குடும்பமே கரும்பு வெட்டும் கடும் உழைப்பில் ஈடுபடுகின்றனர். கிடைக்கின்ற கூலியில் தமது கடனை அடைத்து, ரொட்டி கூடச் சமைத்து சாப்பிட வழியில்லாமல் இரவு படுக்கச் செல்கின்றனர்.
இதுதான் கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளர்களின் அவல வாழ்க்கை நிலைமை. ஒப்பந்ததாரர்கள் இத்தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டியது போக, எஞ்சியதைச் சர்க்கரை ஆலைகளின் முதலாளிகள் பிடுங்கிக் கொள்கின்றனர். சர்க்கரை ஆலைகளின் முதலாளிகளோ, இத்தொழிலாளர்களைத் தமது ஆலையின் தொழிலாளிகள் என அங்கீகரித்தால், தொழிலாளர் சட்டங்களின் கீழ் உள்ள அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டியிருக்கும் என்பதால் இதனை மறுக்கின்றனர். மாறாக, அவர்கள் விவசாயிகள் அல்லது ஒப்பந்ததாரர்களின் தொழிலாளர்கள் என்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றனர்.
மோடி அரசால் பெருக்கி ஊதப்படும் சர்க்கரை உற்பத்தி தன்னிறைவு, அதனால் E20 பெட்ரோல் மூலம் கச்சா எண்ணெயின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தலாம் என நாட்டின் மக்களின் காதில் பூச்சுற்றுகிறது. ஆண்டுக்கு ஆறு மாதம் புலம்பெயரும் இத்தொழிலாளர்களின் கடும் உழைப்புச் சக்தியாலே நாட்டின் சர்க்கரைத் துறை இயங்குகிறது. ஆனால் கரும்பு வெட்டும் தொழிலாளர்களின் கடும் உழைப்பு, அவர்களின் வாழ்க்கையில் வறுமையை ஒழிக்கவில்லை. கொடிய வறுமைக்குள் தள்ளப்பட்ட அவர்கள் உயிர்வாழ இருக்கும் ஒரே வழி கரும்பு வெட்டும் தொழில்தான்.
மோடி அரசு சவடால் அடிக்கும் சர்க்கரை உற்பத்தியில் தன்னிறைவும், E20 பெட்ரோல் என்ற மாயையும், கரும்புத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப் போவதில்லை.
-
தாமிரபரணி



