மக்கள் நலத்திட்டங்களுக்குப் பணம் இல்லை
எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வாங்க மட்டும் பணம் இருக்கிறதா?

ஆகஸ்ட் 30, 2026
தற்போதைய த.வெ.கவும் மக்களின் வரிப்பணத்திலிருந்து எப்படி வாரி சுருட்டலாம்; அரசியல் என்பதை இப்படி இலாபம் பார்க்கும் தொழிலாக மாற்றலாம் என்ற நோக்கத்திலேயே செயல்படுகின்றனர். இதை மக்களிடம் மறைப்பதற்காக சட்டமன்றத்தை வெறும் நீயா, நானா’ விவாத மன்றங்களாக்கி வருகின்றனர்.

தமிழக முதல்வரான விஜய் தனது தேர்தல் பரப்புரையின் போது, தான் சினிமாத் துறையில் உச்சத்தில் இருந்த போதே ஆண்டுக்கு இருநூறு கோடிக்கும் மேல் வருமானத்தை விட்டு விட்டு மக்களுக்காக சேவையாற்ற அரசியலுக்கு வந்தேன் என்ற பிம்பத்தை மக்களிடம் கட்டமைத்தார். இதோடு மட்டுமில்லாமல் மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசாவை கூட தொட மாட்டேன், என் கட்சிக்காரர்களையும் தொட விட மாட்டேன் ஏற்கெனவே தொட்டவர்களை விட மாட்டேன் என அடிக்கடி வீர வசனம் பேசினார்.

தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக அவர் பதவியேற்கும் போது, “கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் கோடிக்கும் மேல் கடன் வாங்கி வச்சிட்டு போயிருக்கிறப்போ, தமிழ்நாடு கஜானாவை சுத்தமாக துடைச்சி வழிச்சி வச்சிட்டு போயிருக்கிறப்போ, தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்து விட்டு போயிருக்கிறப்போ, அப்படிப்பட்ட ஒரு நிலைமையில். இந்த பொறுப்பை நாம் கையில் எடுத்திருக்கிறோம்.” என்று முந்தைய தி.மு.க அரசை குற்றம் சாட்டியதோடு மக்கள் நலத்திட்டங்களுக்காக அரசின் கையில் தற்போது நிதியில்லை என்றார்.

தவெக ஆட்சியமைத்த பின்னர் சட்டசபையில் மக்கள் பிரச்சனைகளைப் பேசுவதை விட விஜய் துதிபாடுவதையே முழுநேர வேலையாக தவெக எம்.எல்.ஏ.க்கள் வைத்திருக்கின்றனர். பல நேரங்களில் எந்த விவகாரம் குறித்துப் பேச எழுந்திருக்கிறோம் என்பதையே மறந்துவிட்டு விஜய்யைப் புகழந்து பேசிக்கொண்டே செல்லும் எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் கண்டிக்கும் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

மதுரை வடக்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ-வான கல்லாணை விஜய் அன்பன், “முதலமைச்சர் விஜய் எங்களுக்குப் பின்னால் (முன் வரிசையில்) அமர்ந்திருப்பதால், அவரது அந்த அழகான முக பாவங்களையும் சிரிப்பையும் எங்களால் பார்க்க முடிவதில்லை, எனவே அவையின் பின்வரிசையில் அமர்ந்திருக்கும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களும் முதலமைச்சரின் முக பாவனைகளைக் கண்டு ரசிப்பதற்காக, சட்டமன்ற அவைக்குள் பிரத்யேகமாக பெரிய எல்.இ.டி (LED) திரைகளை (டிவிகளை) நிறுவ வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

, தவெக எம்.எல்.ஏ சிந்து என்பவர் சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைத்த போது, எம்.ஜி.ஆர் படத்தின் புகழ்பெற்ற பாடலான “கொடுத்ததெல்லாம் கொடுத்தார்… அவர் யாருக்காகக் கொடுத்தார்…” என்ற பாடலைச் சட்டசபையிலேயே பாடி, முதலமைச்சர் விஜய்க்குத் தனது ‘நன்றியையும் பாராட்டுகளையும் சமர்ப்பித்தார்’.

இதே கூட்டத்தொடரில், தவெக அமைச்சரான ஏ. ராஜ்மோகன் என்பவர் சட்டமன்றக் கேமரா ஆபரேட்டர்களுக்கு ஒரு விசித்திரமான கோரிக்கையை முன்வைத்தார்.

சட்டமன்றத்தில் தவெக அமைச்சர்கள் பேசும் போது திமுக எம்.எல்.ஏ-க்கள் எழுந்து சத்தம் போடுவதால், அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போது ‘ஸ்பிளிட் ஸ்கிரீன்’ (திரையை இரண்டாகப் பிரிக்கும் தொழில்நுட்பம்) பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதன் மூலம் ஒரே சமயத்தில் தவெக அமைச்சர்கள் பேசுவதையும், திமுகவினர் கூச்சல் போடுவதையும் மக்கள் ஒரே திரையில் பார்க்க முடியும் என்று அவர் வாதாடினார். தொகுதிப் பிரச்சினைகளைப் பேசுவதை விட்டுவிட்டு, முதலமைச்சரின் அழகைப் பார்க்க டிவி கேட்பதும், சட்டசபையில் சினிமா பாட்டுப் பாடி துதி பாடுவதுமாக எம்.எல்.ஏ-க்கள் செயல்படுவதாக எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்தனர்.

கார் வேண்டும் எனக் கோரிக்கையை எம்.எல்.ஏ.க்கள் ஆரம்பித்தனர். காட்டுமன்னார்கோவில் வி.சி.க. எம்.எல்.ஏ. ஜோதிமணிதான் இந்தக் கோரிக்கையை ஆரம்பித்து வைத்தார் என்றாலும், அதன் பிறகு பேசிய த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு கார் வேண்டும் என்பதை அழுத்தமாக முன்வைத்தனர்.

தவெக எம்.எல்.ஏ-வான சபரி ஐங்கரன் சட்டமன்றத்தில் பேசும்போது, “என்னிடம் சொந்தமாகக் கார் இல்லை, நான் ஆட்டோவில் தான் சட்டமன்றத்திற்கு வருகிறேன்” என்று எளிய பின்புலத்தைக் காட்டும் வகையில் பேசினார். ஆனால், வெளியில் அவர் ₹30 லட்சம் மதிப்பிலான சொகுசு ‘டிஃபெண்டர்’ (Defender) காரைப் பயன்படுத்துவதாகக் கூறி, அவரது சட்டமன்றப் பேச்சு மற்றும் உண்மைப் பின்னணி குறித்து சமூக வலைத்தளங்களிலும் எதிர்க்கட்சிகளிடையேயும் கடுமையான விவாதங்களும் சர்ச்சைகளும் வெடித்தன.

ஆனால் த.வெ.க உடனடியாக ‘அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கப்படும் என்றும் வாகனப்படி, உதவியாளர் சம்பளம் என மாதம் ரூ.1 லட்சம் வழங்கப்படும்’ என்று தமிழக முதல்வர் விஜய் அறிவித்திருக்கிறார். தவிடு தின்னும் அரசன் ஆளும் நாட்டில் முறம் பிடிப்பது தான் அமைச்சர்கள் வேலை என்பார்கள். அது போல விஜயின் இந்த அறிவிப்பிற்கு பின்பு பேசிய மொடக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ, உயர் ரக காரான இன்னோவா வேண்டும் என்கிறார். இவர் ஏற்கனவே இரண்டு பென்ஸ் கார்களுக்கு சொந்தக்காரர். அ.ம.மு.க வில் இருந்து தற்போது த.வெ.க.விற்குத் தாவியிருக்கும் மன்னார்குடி எம்.எல்.ஏ.-வோ தன்னிடம் மூன்று கார்கள் இருப்பதாகவும் ஆனால் அரசு தரும் காரில் சென்றால் தான் மக்கள் மத்தியில் கெத்து என்று சிலாகித்து பேசினார்.

“என்னுடைய கல்லூரி காலத்தில் எனக்கு ஒரு காதல் தோல்வி ஏற்பட்டது. அதற்கு முக்கியக் காரணம் அப்போது என்னிடம் வேலையும் இல்லை, சொந்தமாகக் காரும் இல்லை. ஆனால் இன்று எங்களது தலைவர் முதலமைச்சர் விஜய் அவர்கள், எனக்கு எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றும் வேலையையும் கொடுத்து, மக்கள் பணியாற்ற காரையும் கொடுத்துள்ளார்.” என்று பெரியகுளம் தொகுதி தவெக எம்.எல்.ஏ. சபரி அயங்கரன் சிலாகித்துப் பேசினார்.

தொலைத் தூரத்தில் இருக்கும் தொகுதி மக்களை சந்திந்து குறைகளை கேட்பதற்காகவும், நலத்திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறதா என்று கண்காணிப்பதற்காகவும் எம்.எல்.ஏக்களுக்கு கார் கொடுக்கப்படுகிறது என்று விஜய் இந்த அறிவிப்பை நியாயப்படுத்தி பேசினார். ஆனால் ஓட்டுக் கேட்பதற்கு மட்டும் வீதி வீதியாக வந்தவர்கள், வெற்றி பெற்ற பின்பு காரில் தான் வருவேன் என்பதா? என்று மக்கள் த.வெ.க அரசை கேள்விக்குட்படுத்துகிறார்கள். தாங்கள் வறுமையில் வாடும் போது மக்களின் வரிப்பணத்தில் இருந்து எம்.எல்.ஏக்கள் காரில் பவனி வர ஏன் நிதியை ஒதுக்க வேண்டும் என்கின்றனர்.

தமிழக எம்.எல்.ஏக்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து இலட்சத்தில் சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் மாநிலம் முழுவதும் இலவசமாக அரசுப் பேருந்துப் பயணம்; ஆண்டுக்கு ரூ.20,000 வரை ரயில் பயணப் படி; சட்டமன்ற கூட்டத்தொடரின் போது 2டயர் ஏசி இரயில் கட்டணம் எனப் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டிருப்பது நாட்டு மக்கள் அறிந்ததே.

சட்டமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தின் படியே த.வெ.கவைச் சார்ந்த 107 எம்.எல்.ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு 16.04 கோடி ரூபாய், 59 திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு 21.37 கோடி ரூபாய், 47 அ.திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு 53.02 கோடி ரூபாய் ஆகும்.

தமிழகத்தின் 233 எம்.எல்.ஏ-க்களில் 193 பேர் (83%) ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை வைத்திருக்கிறார்கள். தி.மு.க-வில் 97%, அ.தி.மு.க-வில் 94% பேர் கோடீஸ்வரர்கள். ஆளும் த.வெ.க-விலும் 77 பேர் கோடீஸ்வர எம்.எல்.ஏ-க்கள். இவர்களில் பெரும்பாலானோரிடம் சொந்த கார்கள் இருப்பதாக தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். காங்கிரஸ், பா.ம.க., ஐ.யூ.எம்.எல்., அ.ம.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ-க்கள் அனைவருமே கோடீஸ்வரர்கள்.

திமுக அரசு கஜானவை காலி செய்துவிட்டு போய்விட்டதால் மக்களின் அடிப்படை தேவைகளையும், தமது தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றப் போதுமான பணமில்லை என நீலிக்கண்ணீர் வடிக்கும் விஜய் அரசு, தன் துதிபாடிகளுக்கு மட்டும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி கார் வாங்கி தர எத்தனிக்கிறது.

தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வந்த முதலைமச்சர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10வது மாடியில் மாற்றுவதற்கென ரூ 11 கோடியை செலவு செய்திருக்கிறது. மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசாவை கூட தொட மாட்டேன், என அடிக்கடி வீர வசனம் பேசும் விஜய், இது போன்ற நடவடிக்கைகளின் மூலம் ஊருக்கு தான் உபதேசம் எனக்கில்லை என்பதை நிருபித்து வருகிறார்.

த.வெ.கவின் தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கும் போது, இது நேர்மையான உத்தரவாதம், சிலர் மாதிரி அள்ளி விடும் அவசர அறிக்கை இல்லை என்று துவக்க உரையாற்றிவிட்டு, தற்போது விஜய் இவ்வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சமயத்திற்கு தகுந்த ஒரு பதிலை சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார். மேலும் எப்படி மாற்றி பித்தலாட்டம் செய்தாலும் ஒன்றும் ஆகிவிடாது. நமக்கு ஓட்டு கிடைக்கும் அந்த அளவுக்கு மக்கள் இளிச்சவாயர்கள், ஏமாளிகள் என்று மக்களை மிகவும் மலிவாக, இழிவாக அற்பர்களாகவே விஜய் கருதுகிறார்.

விஜய் விவசாயிகளுக்கான தேர்தல் வாக்குறுதியாக கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 4,500, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 3,500, ஐந்து ஏக்கருக்கு கீழ் உள்ளவிவசாயிகளுக்கு 100% கடன் தள்ளுபடி, 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50% கடன் தள்ளுபடி என அறிவித்தார். ஆனால் தற்போது ரூ 50,000 வரை மட்டும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி என்றதோடு, கரும்பு மற்றும் நெல்லுக்கான விலை உயர்வை பற்றி விஜய்யின் முதல் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுதோறும் ஆறு விலையில்லா சிலிண்டர்கள் வழங்கப்படும். விஜய்யை 100 சதவீதம் நம்பலாம். பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்ற மாட்டேன் என அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் சிலிண்டர் என்ற திட்டத்தை அறிவித்தார். ஆனால் தற்போது ஆறு சிலிண்டர்களுக்குப் பதிலாக மூன்று சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும், அதுவும் மாத வருமானம் ரூ 21,000க்குள் இருந்தால் மட்டுமே வழங்கப்படும் என்கிறார்.

அனைவருக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என தேர்தல் வாக்குறுதி அளித்து விட்டு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் 200 யூனிட் இலவசம் என்ற நடைமுறைக் கொண்டு வரப்பட்டது. அதுமட்டுமல்ல, 500 யூனிட்டை தாண்டி மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு இதுவரை இருந்த 100 யூனிட் இலவச மின்சார சலுகையும் இனி கிடையாது என்ற பித்தலாட்டமும் விஜயின் முதல் கையெழுத்திலேயே அரங்கேறியது. பெண்களுக்கு மாநிலம் முழுவதும் இலவசப் பயணம் என தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது மாவட்டங்களுக்கு இடையே மட்டும் பெண்களுக்கு இலவசப் பயணம் என்று அறிவித்திருக்கிறார்.

தேர்தலுக்கு முன்பு புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைப்பெற்ற ஒரு காணொளிக் கூட்டத்தில் பங்கேற்ற த.வெ.கவின் 130 மாவட்டத் தலைவர்கள், தங்களால் ஒரு தொகுதிக்கு ரூ 5 கோடியை செலவு செய்யும் வேட்பாளர்களை கண்டுபிடிப்பதில் பல மாவட்டங்களில் சிரமங்களை எதிர் கொண்டு வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு கடந்த மார்ச் மாதம் செய்தியொன்றை வெளியிட்டது.

இன்று எம்எல்ஏ ஆக வேண்டுமென்றால் கூட, குறைந்தபட்ச தகுதி கோடீசுவரனாக இருக்க வேண்டும், சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக நிற்க குறைந்தது 5 கோடி ரூபாய் செலவழிக்க தயாராக இருக்கவேண்டும். சி.பி.ஐ மற்றும் சி.பி.ஐ(எம்) கட்சிகளை தவிர மற்ற எல்லா தேர்தல் அரசியல் கட்சிகளும் இதை ஒரு விதியாகவே ஆக்கி விட்டன. ஆதலால் கோடிசுவரர்கள்தான் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் படியே ஒரு சட்டமன்றத் தொகுதிக்கென ரூ 40 இலட்சம் வரை செலவு செய்யலாம் என உச்சபட்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் நடத்தை முறைகளையே கோடீசுவரர்களுக்கு மட்டும் உரித்தான ஒன்றாக, பரந்துபட்ட உழைக்கும் மக்களை அதிலிருந்து விலக்கி வைக்கின்ற நடத்தை முறைகளாக ஆளும் வர்க்கங்களே தேர்தல் கமிஷன்கள் மூலம் அமுல் நடத்துகின்றன.

தமிழக சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் மொத்த உறுப்பினர்களில் 126 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கிறது. இதில் கட்சிவாரியாக பார்க்கும் போது த.வெ.கவிலேயே கிரிமினல்கள் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதிகளவில் உள்ளனர் த.வெ.க (41), தி.மு.க (37) அதிமுக (33) பாமக (4) என இப்பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது.

இப்படிப்பட்ட கிரிமினல்களும், இன்னாரென்று தெரியாத நபர்களும், நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு விஜய் படத்திற்கு பிளாக்கில் டிக்கெட் விற்ற நபர்களும் தான் தமிழகத்தை ஆள்கின்றனர். கார் அறிவிப்பை வெளியிட்ட மறுநாளே உயர்ரக கார்களின் டெஸ்ட் டிரைவ் நடத்திய வேகத்தைப் பார்த்தாலே இக்கூட்டத்திற்கு மக்கள் வறுமையில் அவதிப்பட்டு வருவதைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். விஜயின் எம்.எல்.ஏ.க்களுக்கு என கார் அறிவிப்பு மக்களிடையே வெறுப்பையும் அவநம்பிக்கையையும் மீண்டும் அதிகப்படுத்திருக்கிறது

இதற்கு முந்தைய தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகள் மட்டுமல்ல, தற்போதைய த.வெ.கவும் மக்களின் வரிப்பணத்திலிருந்து எப்படி வாரி சுருட்டலாம்; அரசியல் என்பதை இப்படி இலாபம் பார்க்கும் தொழிலாக மாற்றலாம் என்ற நோக்கத்திலேயே செயல்படுகின்றனர். இதை மக்களிடம் மறைப்பதற்காக சட்டமன்றத்தை வெறும் நீயா, நானா’ விவாத மன்றங்களாக்கி வருகின்றனர். இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்து வருகின்றனர்.

  • தாமிரபரணி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன