செயற்கை நுண்ணறிவு யுகத்தில் காய்ச்சலால் மடியும் பழங்குடியினக் குழந்தைகள்
இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி பேசும்போது ஆளும் காவி பாசிஸ்டுகள் முன்வைக்கும் காட்சிகள் பிரம்மாண்டமானவை. செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம், விண்வெளித் துறை, வேகமாக வளரும் பொருளாதாரம், உலக அரங்கில் உயர்ந்து வரும் இந்தியாவின் செல்வாக்கு என்று நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றிய பெருமிதப் பேச்சுகளுக்குக் குறைவில்லை. இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறப்போகிறது என்றும், உலகிற்கே வழிகாட்டக்கூடிய நாடாக (விஷ்வகுரு) இந்தியா உருவெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் இருந்து மிகப்பெரிய உலகப் பணக்காரர்களும், தொழில்நுட்ப நிறுவனங்களும் உருவாகி வருவதாக இந்தியாவின் வளர்ச்சி குறித்த ஒரு பிம்பத்தை அவர்கள் திட்டமிட்டு உருவாக்குகின்றனர்.
இந்தப் பெருமிதத்திற்கு முற்றிலும் மாறான ஒரு காட்சி மத்தியப் பிரதேசத்தின் பாலாகாட் மாவட்டத்தில் தெரிகிறது. அங்குள்ள பழங்குடியினக் கிராமங்களில் ஒரு குழந்தைக்கு காய்ச்சல் வந்தால், அதற்குச் சிகிச்சை அளிப்பதற்கே அரசின் அடிப்படை சுகாதார அமைப்பு பல இடங்களில் இல்லை. பிர்சா வட்டாரத்தில் தட்டம்மை, மலேரியா உள்ளிட்ட தொற்றுகளால் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் ஏற்கெனவே ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பலவீனமாக இருந்துள்ளனர். ஸ்க்ரோல் (Scroll) இணையதளத்தின் கள ஆய்வின்படி குறைந்தது 25 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த எண்ணிக்கை 29 என, உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த மரணங்களுக்குப் பின்னால் இருக்கும் ஒரு குடும்பத்தின் கதை, அப்பகுதி மக்களின் நிலையைப் புரிந்துகொள்ளப் போதுமானது. மாத்லா கிராமத்தைச் சேர்ந்த மகாசிங் பார்டே என்பவரின் ஐந்து குழந்தைகளும் நோய்வாய்ப்பட்டனர். அவரது நான்கு வயது மகன் சாம்லுவுக்கும், ஆறு வயது மகள் ஷாம்குவுக்கும் கடுமையான காய்ச்சலுடன் உடலில் தடிப்புகள், இருமல், சளி, வாந்தி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. கண்கள் வீங்கின; உணவைச் சாப்பிட முடியாத அளவுக்கு உடல்நிலை மோசமடைந்தது. சாம்லு மே 18 அன்று உயிரிழந்தான். அடுத்த நாளே ஷாம்குவும் உயிரிழந்தாள். இரண்டு குழந்தைகளை இழந்த குடும்பத்தின் துயரம் அங்கேயே முடிந்துவிடவில்லை; அடுத்தடுத்து மற்ற குழந்தைகளும் நோய்வாய்ப்பட்டிருந்தனர்.
இந்த மரணங்கள் குறித்து அரசின் சுகாதார அமைப்புக்குத் தகவல் சென்ற வேகம் இன்னும் வேதனையானது. மே மாதத்திலேயே குழந்தைகள் இறக்கத் தொடங்கிய நிலையில், ஜூலை 22 அன்று ஒன்பதாவது குழந்தை உயிரிழந்த பிறகுதான் உள்ளூர் நிர்வாகத்திற்கு இந்தப் பிரச்சினை தெரியவந்ததாக ஸ்க்ரோல் தெரிவித்துள்ளது. அதன் பின்னரே சுகாதாரக் குழுக்கள் கிராமங்களுக்குச் சென்று வீடு வீடாக குழந்தைகளைப் பரிசோதிக்கத் தொடங்கின. அப்போது ஒவ்வொரு வீட்டிலும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. உயிர்கள் பறிபோன பிறகே சுகாதார அமைப்பு அந்தக் கிராமங்களை அடைந்திருக்கிறது.
அரசின் சுகாதாரப் பணியாளர்கள் இல்லாததே இந்தத் தாமதத்தின் முக்கிய காரணங்களில் ஒன்று. மாத்லா போன்ற கிராமங்களில் ஆரம்ப சுகாதார வசதிகளை வழங்கும் ஆஷா பணியாளர்களே இல்லை. பாலாகாட் மாவட்டத்தில் காலியாக இருந்த 72 ஆஷா பணியிடங்களில் 48 பணியிடங்கள் பிர்சா வட்டாரத்திலேயே இருக்கின்றன. சுகாதார துணை மையங்கள் இருந்தாலும் நிரந்தர மருத்துவர் இல்லை. ஒரு சுகாதாரப் பணியாளர் தொடர்ந்து கிராமங்களுக்குச் சென்று குழந்தைகளின் உடல்நிலையை கண்காணித்து, தடுப்பூசிகளை உறுதிப்படுத்தி, நோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிந்திருந்தால் பல நேரங்களில் நிலைமைகள் மோசமடைவதற்கு முன்பே தடுக்கப்பட்டிருக்கலாம்.
தட்டம்மை தடுப்பூசி இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் 1985-ம் ஆண்டிலேயே சேர்க்கப்பட்டது. நாற்பது ஆண்டுகளாக அது நம் நாட்டில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் பாலாகாட் பகுதியில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களைப் பற்றிய ஸ்க்ரோலின் ஆய்வில், ஆய்வு செய்யப்பட்ட ஏழு குழந்தைகளில் ஆறு குழந்தைகளுக்கு எந்தத் தடுப்பூசியும் போடப்படவில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பாண்டாரி கிராமத்தில் 15 குழந்தைகளில் 11 பேர் முதல் தட்டம்மை தடுப்பூசியைக்கூடப் பெறவில்லை.
இதனுடன் ஊட்டச்சத்துக் குறைபாடும் இணைந்திருக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் கணிசமானோர் எடை குறைவாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பல குடும்பங்கள் இரண்டு வேளை உணவையே உறுதியாகப் பெற முடியாத நிலையில் உள்ளன; சில நாட்களில் குழந்தைகள் ஒருவேளை உணவுடன் மட்டுமே வாழ வேண்டிய நிலையும் இருப்பதாக ஸ்க்ரோல் கள ஆய்வு கூறுகிறது. பசியால் ஏற்கெனவே பலவீனமடைந்த உடலுக்குள் தொற்றுநோய் நுழையும்போது, குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவது இன்னும் கடினமாகிறது. எனவே இங்கு நிகழ்ந்தவை ஒரு நோய்த்தொற்றின் விளைவுகள் மட்டுமல்ல; சுகாதாரம், தடுப்பூசி, ஊட்டச்சத்து ஆகிய மூன்றிலும் ஏற்பட்ட நீண்டகாலப் புறக்கணிப்பின் விளைவுகள்.
மலேரியா பரவக்கூடிய பகுதிகளில் கொசுக்களைக் கட்டுப்படுத்துவதும், கொசுவலைகளை வழங்குவதும் அடிப்படை தடுப்பு நடவடிக்கைகள். ஆனால் குழந்தைகள் உயிரிழந்த நான்கு கிராமங்களில் கொசுவலைகள் வழங்கப்படவில்லை என்றும், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தாமதமாகவே மேற்கொள்ளப்பட்டதாகவும் ஸ்க்ரோல் தெரிவித்துள்ளது. நோய் பரவத் தொடங்கிய பிறகு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அது ஏற்படாமல் தடுக்கும் சுகாதார அமைப்பே தொலைதூரக் கிராமங்களில் செயல்பட வேண்டிய நிலையில், அந்த அடிப்படைப் பாதுகாப்புகூட போதுமானதாக இல்லை.
இந்நிலையில் தனது பொறுப்பைக் கைகழுவ நினைக்கும் அரசு, பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையையே நோய்களுக்குக் காரணமாகக் காட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவமனைகளுக்கு வருவதில்லை என்றும் அவர்கள் பழமையில் மூழ்கிப்போய்க் கிடக்கின்றனர் என்றும் அரசு தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.
ஆனால் மருத்துவமனைகளில் தாங்கள் எப்போதும் அவமதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். மருத்துவப் பணியாளர்கள் பழங்குடியின மக்களை அறியாமை கொண்டவர்களாகப் பார்ப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மருத்துவ சேவைகள் மக்களைத் தேடிச் செல்வதற்குப் பதிலாக, மருத்துவமனைக்கு வராததற்காக அவர்களையே குற்றம்சாட்டுகின்றனர்.
எவ்வளவு அவமானப்படுத்தினாலும் மக்கள்தான் அரசு மருத்துவமனையைத் தேடி வர வேண்டும் எனக் கூறும் இந்த அரசு, முதலாளிகளிடம் அவ்வாறு கூறுவதில்லை. காடுகளுக்குள் இருக்கும் கனிம வளங்களைப் பயன்படுத்துவதற்கும், சுரங்கத் திட்டங்களை முன்னெடுப்பதற்கும், தொழில் நிறுவனங்களின் தேவைகளுக்காக உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் அரசு தொலைதூரப் பகுதிகளையும் சென்றடைகிறது. சாலைகள் அமைக்கப்படுகின்றன; மின்சாரத் திட்டங்கள் கொண்டு செல்லப்படுகின்றன; இயற்கை வளங்களை வெளியே கொண்டு வருவதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன.
ஆனால் அதே காடுகளுக்குள் தலைமுறைகளாக வாழும் மக்களுக்கு ஆரம்ப சுகாதார மையம், மருத்துவர், ஆஷா பணியாளர், அவசர மருத்துவப் போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளை உறுதி செய்வதில் அதே வேகம் காணப்படுவதில்லை.
இது ஒரு சாதாரண நிர்வாகக் குறைபாடு அல்ல. இயற்கை வளங்கள் இருக்கும் இடங்களில் வளர்ச்சியின் வேகம் அதிகரிக்கிறது; அந்த வளங்களைச் சுற்றி வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் அந்த வேகம் காணப்படுவதில்லை. காடுகளிலிருந்து வளங்களை வெளியே கொண்டு செல்லும் சாலைகள் உருவாகும் நிலையில், ஒரு காய்ச்சல் வந்த குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வசதி இல்லாமல் இருப்பது, இது யாருக்கான வளர்ச்சி என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
பங்குச் சந்தை வளர்ச்சியும், அந்நிய நேரடி மூலதனத்தின் பெருக்கமும், அம்பானியும் அதானியும் உலகப் பணக்காரர்களாக மாறுவதும்தான் வளர்ச்சியா? ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது ஒரு தொலைதூரக் கிராமத்தில் குழந்தையின் வாழ்க்கையில் எப்படி வெளிப்படுகிறது என்பதில்தான் அதன் உண்மையான மதிப்பு இருக்கிறது.
ஒரு குழந்தைக்கு இரண்டு வேளை உணவு கிடைக்கவில்லை என்றால், தடுப்பூசி கிடைக்கவில்லை என்றால், காய்ச்சல் வந்தபோது மருத்துவர் கிடைக்கவில்லை என்றால், மருத்துவமனைக்குச் செல்லப் போக்குவரத்து இல்லை என்றால், அரசு சுகாதாரப் பணியாளர் அந்தக் கிராமத்தில் இல்லை என்றால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பிரம்மாண்டமான புள்ளிவிவரங்கள் அந்தக் குழந்தையின் வாழ்க்கைக்கு எந்த அர்த்தத்தையும் தருவதில்லை.
இந்தக் குழந்தைகளின் மரணங்கள் மருத்துவ அறிவு இல்லாததன் விளைவு அல்ல. தட்டம்மையைத் தடுப்பதற்கான தடுப்பூசியும், மலேரியாவைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கும் மருந்துகளும் மிகச் சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடியது. ஆனால் அந்த மாத்திரையும், தடுப்பூசியும் பழங்குடியினக் குழந்தைகளுக்குத் தேவையான நேரத்தில் கிடைக்கவில்லை என்பதே இந்த மரணங்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணமாகும்.
இந்தியாவின் இதயம் எனக் கூறப்படும் மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒரிசா போன்ற மாநிலங்களின் வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரைப் பற்றி அம்மாநில அரசுகள் கிஞ்சிற்றும் கவலைப்படுவதில்லை. அவர்களது கவலையெல்லாம் எவ்வாறு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது என்பதில்தான் இருக்கிறது. அதற்கு எந்த இயற்கை வளத்தினை விற்பனை செய்யலாம், முதலீடு செய்ய வரும் முதலாளிகளுக்கு 6 வழிச் சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரலாம் என்று சிந்திப்பதில்தான் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்தக் காடுகளில் தொழில்தொடங்க முன்வரும் பெருநிறுவனங்களுக்கு முதலீட்டு வாய்ப்புகள், சாலைகள், மின்சாரம், தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள் போன்றவை வேகமாகக் கிடைக்கும் நிலையில், அந்தப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு அடிப்படை சுகாதாரம், உணவு, கல்வி போன்றவை இன்னும் போராட்டமாகவே இருக்கின்றன.
அதனால்தான் பாலாகாட் குழந்தைகளின் மரணங்களை வெறும் ஒரு “மர்ம நோய்” சம்பவமாகக் கடந்து செல்ல முடியாது. நோய் அவர்களின் உடலைத் தாக்கியிருக்கலாம்; ஆனால், அந்த நோயை எதிர்கொள்ள மக்களைப் பாதுகாக்க வேண்டிய அத்தியாவசிய நடவடிக்கைகளை உரிய நேரத்தில் மேற்கொள்ளத் தவறிய நிர்வாகத்தின் பொறுப்பற்ற அலட்சியமும் செயலற்ற தன்மையும் தான், உயிரிழப்புகள் பெருமளவில் அதிகரிக்கக் காரணமாகியுள்ளது. நீண்ட காலமாக சுகாதார அமைப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட சமூகத்தின் குழந்தைகள்தான் அரசின் இந்தத் தோல்வியின் விலையை இன்றைக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
காட்டுக்குள் இருக்கும் அந்தச் சிறிய கிராமங்களில் புதைக்கப்பட்ட குழந்தைகள் நாளைய புள்ளி விவரங்களில் சில எண்ணிக்கைகளாக மட்டுமே மாறிவிடக்கூடும். இன்றைக்கு இந்த விசயம் ஸ்க்ரோல் போன்ற பத்திரிக்கைகளின் காரணமாக வெளியே வந்துவிட்டதால் சில விசாரணைகள் நடக்கலாம்; சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்; சில மருத்துவ முகாம்கள் நடத்தப்படலாம். ஆனால் அடிப்படை சுகாதாரம், ஊட்டச்சத்து, தடுப்பூசி, போக்குவரத்து ஆகியவற்றில் நீடிக்கும் குறைபாடுகள் சரிசெய்யப்படாவிட்டால், இந்தத் துயரம் மீண்டும் வேறொரு கிராமத்தில் அரங்கேறும் பேராபத்து இன்னும் நீடித்துக்கொண்டே இருக்கும்.
இந்தியா உண்மையில் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்றால், அதன் வளர்ச்சி முதலில் அதன் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையில் தெரிய வேண்டும். செயற்கை நுண்ணறிவில் உச்சத்தைத் தொடுவதைவிட, தொலைதூரக் கிராமத்தில் ஒரு குழந்தைக்குக் காய்ச்சல் வந்தவுடன் மருத்துவர் சென்றடைவதை உறுதி செய்வதே உண்மையான மனிதநேய வளர்ச்சியின் அடையாளம். உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இடம்பிடிப்பதைவிட, ஒவ்வொரு குழந்தையும் பசியின்றி வளர்வதை உறுதி செய்வதே ஒரு நாகரிக சமூகத்தின் உண்மையான வெற்றி.
பாலாகாட் காட்டுக்குள் புதைக்கப்பட்ட அந்தக் குழந்தைகள் இந்தியாவின் வளர்ச்சிக் கதையின் மறைக்கப்பட்ட பக்கத்தை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள். நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி எவ்வளவு பெரிய கனவுகளை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அந்த எதிர்காலத்தில் பசியால் பலவீனமடைந்த ஒரு பழங்குடியினக் குழந்தைக்கும் பாதுகாப்பான இடம் இல்லையென்றால், அது வளர்ச்சியல்ல.
அந்தக் குழந்தைகள் வெறுமனே ஒரு நோயின் காரணமாக உயிரிழக்கவில்லை. அவர்களைப் பாதுகாக்க வேண்டிய சுகாதார அமைப்பு உரிய நேரத்தில் அவர்களைச் சென்றடையத் தவறியதன் விளைவாகவே அவர்கள் உயிரிழந்தார்கள். அவர்களின் மரணம் ஒரு குடும்பத்தின் துயரமாக மட்டும் கடந்து போகக் கூடாது; இந்தியாவின் வளர்ச்சி என்றால் என்ன, அதன் உண்மையான முன்னுரிமைகள் எவை என்பதை மறுபரிசீலனை செய்யத் தூண்டும் கசப்பான நினைவாக அது என்றும் நிலைத்திருக்க வேண்டும்.
- அன்பு
தகவல் ஆதாரம்


