உலகம் உறங்கும்போது : பாலஸ்தீனத்தின் கதைகள், வார்த்தைகள் மற்றும் காயங்கள் – நூல் அறிமுகம்

காசாவில் என்ன நடக்கிறது என்பது மட்டுமில்லாமல் அது ஏன் இவ்வளவு காலம் நடக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள விரும்பும் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.

கடந்த அக்டோபர் 2023 ஆம் ஆண்டில் இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் இஸ்ரேலுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதல் நடந்த அடுத்த நாளிலிருந்தே இஸ்ரேல் இனவெறி அரசு, பாலஸ்தீனியர்கள் மீது தொடர்ந்த இனப்படுகொலைக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகளின் குரல்கள் அவசர அவசரமாக ஒலிக்கத் தொடங்கின.

அன்றைய அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன், ஹமாஸ் தாக்குதலினால் தலை துண்டிக்கப்பட்ட இஸ்ரேல் குழந்தைகளின் படங்களைப் பார்த்தாக கூறினார். பின்னர் வெள்ளை மாளிகை இக்கருத்தைத் திரும்ப பெற்றது. பிரிட்டன் அரசோ காசாவிற்கான குடிநீர், உணவு, மின்சாரத்தை இஸ்ரேல் சட்டப்பூர்வமாக நிறுத்த முடியும் என இஸ்ரேலுக்கு ஆதரவாக வானொலியில் அறிவித்தது.

அக்டோபர் 2023 இல் இனப்படுகொலையைத் தொடங்கி வைத்த இஸ்ரேலின் பிரதமரான நெதன்யாகுவோ, இஸ்ரேல் தனது மக்களுக்காக மட்டுமல்லாமல் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்க்கும் ஒவ்வொரு நாட்டிற்காகவும் போராடுகிறது. ஹமாஸூக்கு எதிரான இந்தப் போரில் இஸ்ரேல் வெற்றி பெறும்போது ஒட்டுமொத்த நாகரிக உலகமும் வெற்றி பெறும் என்றார்.

ஹமாஸ் தாக்குதல் நடத்திய ஒரு மாதத்திற்குப் பிறகு, காசாவில் குழந்தைகளும், பெண்களும் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. இக்கண்டனங்களை அலட்சியப்படுத்திய  நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பு பொதுமக்களை கேடயமாகப் பயன்படுத்துகிறது, அவர்களின் பின்னால் மறைந்து கொண்டு தாக்குகிறது, தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டால் அதற்கு ஹமாஸ் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அப்பாவி மக்களை இஸ்ரேல் இராணுவம் கொல்லுவதை நியாயப்படுத்தினார்.

“ஹமாஸ் என்பது ஐஎஸ்ஐஎஸ் (ISIS) போன்றதே. ஐஎஸ்ஐஎஸ்-ஐத் தோற்கடிக்க நாகரிக உலகின் சக்திகள் எவ்வாறு ஒன்றிணைந்தனவோ, அதேபோல ஹமாஸைத் தோற்கடிப்பதிலும் இஸ்ரேலுக்கு நாகரிக உலகின் சக்திகள் ஆதரவளிக்க வேண்டும்” என்று ஒட்டுமொத்த பாலஸ்தீனியர்களையும் இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக நிறுத்தினார். இதன்மூலம் சோவியத்தின் வீழ்ச்ச்சிக்குப் பின் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தான் மேற்கத்திய நாடுகளின் எதிரி என்ற புளித்துப் போன பிரச்சாரத்தை மீண்டும் கட்டவிழ்த்துவிட்டார்.

மேற்கத்திய ஊடகங்களும் அதையே வாந்தி எடுத்தன. அவை “ஹமாஸின் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான இஸ்ரேலின் எதிர்வினை” என இந்த இனப்படுகொலையை நியாயப்படுத்தியதோடு, பாலஸ்தீனியர்கள் தங்களது ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக சம பலத்தோடு நிற்பது போல தவறான செய்திகளை மக்களிடம் பரப்பின.

இஸ்ரேலைப் போல பாலஸ்தீனியர்களிடம் வான்படை, கடற்படை, நவீன இராணுவ ஆயுதங்கள், உளவுத்துறை, இராணுவத் தொழில்நுட்பம், ஐரோப்பிய நாடுகளின் இராணுவ ஒத்துழைப்பு ஆகியவைக் கிடையாது. இஸ்ரேலின்  ஒரு அங்குலம் நிலத்தைக் கூட பாலஸ்தீனியர்கள் பறித்ததில்லை; அவர்களை நடமாட முடியாமல் முடக்கவும் இல்லை; இஸ்ரேலியர்களுக்கான குடிநீர், மின்சாரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை நிறுத்தியதுமில்லை. ஆனாலும் இஸ்ரேல் பாலஸ்தீன மக்களின் மீது அடாவடியாக நடந்துக் கொள்கிறது. பாலஸ்தீனியர்கள் மீது உள்நோக்கத்தோடு இஸ்ரேல் செய்துவரும் இத்தாக்குதலை இனப்படுகொலை என்றழைக்காமல் “மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கிடையேயான போர் அல்லது மோதல்” என மேற்கத்திய அரசுகளும் அதன் ஊடகங்களும் சித்தரிக்கின்றன.

பாலஸ்தீனியர்கள் மீதான இனப்படுகொலையை மோதல் என புரிந்து கொள்வது இரத்தம், வலி, தழும்புகள் நிறைந்த பக்கங்களைப் புறக்கணித்து விட்டு ஒரு புத்தகத்தைப் பாதியிலிருந்து வாசிக்கத் தொடங்கும் ஒருவரின் மேலோட்டமான பார்வையையே வெளிப்படுத்துகிறது. உண்மையில், மிக ஆழமான வேர்களைக் கொண்ட இந்தக் கதை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகிறது.

உலக நாடுகள் பாலஸ்தீனியர்கள் மீதான பேரழிவைத் தடுப்பதில்  பல ஆண்டுகளாக அமைதி காத்து வருகின்றன. இஸ்ரேல் இனவெறி அரசு பாலஸ்தீன மக்கள் மீது இனப்படுகொலை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்று குற்றம் சாட்டி, 2023 டிசம்பரில் சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்க அரசு தொடர்ந்த வழக்கைத் தவிர வேறு எந்த நாடும் இதுவரை இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்துவதற்காக ஒரு துரும்பை கூட அசைக்கவில்லை.

ஐக்கிய நாடுகளின் சபையின் விவாதங்களில் “இஸ்ரேலின் இனப்படுகொலை” என்ற வார்த்தைத் தடை செய்யப்பட்டிருப்பதைப் போல இனப்படுகொலை என்ற சொல்லை உச்சரிக்க உலக நாடுகளும் தயங்குகின்றன.

ஆனாலும் இதையெல்லாம் மீறி பாலஸ்தீனியர்கள் மீது அதிகரித்து வரும் இனப்படுகொலைக்கும் (incremental genocide) கொடூரமான அடக்குமுறைகளுக்கும் எதிராக தொடர்ந்து துணிச்சலாக குரல் கொடுத்து வரும் பிரான்செஸ்கா அல்பானிஸ் இஸ்ரேலின் இனவெறி அமைப்பையும், அதன் இனப்படுகொலையையும் உலக மக்கள் புரிந்து கொள்ளாதவரை இஸ்ரேலின் இனப்படுகொலையை நிறுத்த முடியாது என்கிறார்.

ஆசிரியர் பற்றிய குறிப்பு

பிரான்செஸ்கா அல்பானீஸ், மேற்குக் கரை, காசா மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பகுதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் சபைகளின் ஊதியமில்லாத சிறப்பு அறிக்கையாளர் (Rapporteurs). சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஜெருசலேமில் அவர் பணியாற்றிய போது, இஸ்ரேல் இனவெறி அரசை எதிர்த்து இனப்படுகொலையின் உடற்கூறியியல், ஆக்கிரமிப்பு முதல் இனப்படுகொலை பொருளாதாரம் வரை, சித்திரவதை மற்றும் இனப்படுகொலை போன்ற அறிக்கைகளை அல்பானீஸ் சமர்ப்பித்திருக்கிறார்,

காசாவில் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டு வரும் வேளையில் கூட, இனப்படுகொலையைப் பயன்படுத்தி எவ்வாறு கார்ப்பரேட் நிறுவனங்கள் இலாபம் ஈட்டி வருகின்றன என்பதை தனது அறிக்கையின் மூலம் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

அல்பானீஸின் ”உலகம் உறங்கும் போது” என்ற புதிய நூல் பாலஸ்தீனம் பற்றி வெளிவந்துள்ள ஏராளமான நூல்களில் மற்றொரு சாதாரண நூல் அல்ல. நம் கண் முன்னே இனப்படுகொலை நடந்து வரும் வேளையில், உலகின் பெரும் பகுதி தனது முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் வெளிவந்திருக்கும் ஒரு கோபமான படைப்பு.

கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் அல்பானீஸ் மீது பொருளாதார தடைகளை விதித்திருக்கிறது. அமெரிக்க அரசின் இத் தண்டனைச் சட்டத்தின் கீழ் (specially designated national) பொதுவாக ஆயுதக் கடத்தல் மற்றும் போதை மருந்து கடத்தல், பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு நிதியுதவி அளிப்பவர்கள் போன்றவர்கள் குற்றஞ்சாட்டப்படுகிறார்கள். ஆனால் இப்பட்டியலில் தற்போது அல்பானீஸையும் அமெரிக்க அரசு சேர்த்திருக்கிறது. இதனால். அல்பானீஸ் அமெரிக்காவில் உள்ள தனது சொத்துக்களை இழந்ததோடு, எந்த ஒரு அமெரிக்க குடிமகனோடும் தொடர்பு கொள்ள முடியாது. அமெரிக்காவில் வசிக்கும் தனது கணவரிடமிருந்து எந்த நிதிப் பரிவர்த்தனையைக் கூட தற்போது அவரால் பெற முடியாது. உலகம் முழுவதும் அல்பானீஸால் கடன் அட்டையைக் கூட பயன்படுத்த முடியாது. இனப்படுகொலைக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் அல்பானீஸின் குரலை அமெரிக்கா ஒடுக்கவே முயற்சிக்கிறது.

அல்பானீஸ் சொற்பொழிவாற்றச் செல்லும் நாடுகளில் எல்லாம் யூத ஆதரவு குழுக்கள், அவரை யூத எதிர்ப்பாளர் என்றும் தீவிரவாதி என்றும் கோஷங்களை எழுப்புகின்றன. ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் என்ற போதிலும் பல நாடுகளில் கருத்தரங்களுக்குச் செல்ல முடியாமல் போலீஸின் கெடுபிடிக்கு உள்ளாகுகிறார். இனப்படுகொலை பற்றி பேச கூட முடியாமல் அல்பானீஸை முடக்க துடிக்கிறார்கள். தன் குரலை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக போராடி வரும் அல்பானீஸ், காசாவில் தற்போது நிலவும் நெருக்கடி உலகளாவிய நெருக்கடியின் ஒரு அறிகுறி என்கிறார்.

நூலைப் பற்றி:-

அல்பானீஸ் ஜெருசலேமில் வாழ்ந்த போது, அவர் சந்திந்த பாலஸ்தீனியர்களின் துயரங்கள், கதைகள், மருத்துவப் பணியாளர்கள் நடத்தப்பட்ட விதம், அங்கு தன்னுடன் நெருங்கிப் பழகியவர்கள் எவ்வாறு பாலஸ்தீனியம் குறித்தப் புரிதலை அவரிடம் வடிவமைத்தார்கள் என்பதை தனது சொந்த அனுபவத்தின் ஊடாக புள்ளி விபரங்களோடும் பாலஸ்தீனியத்தில் சர்வதேச சட்டம் எவ்வாறு சிதைக்கப்படுகிறது என்பதையும் ”உலகம் உறங்கும் போது” என்ற நூலின் பத்து அத்தியாங்களில் விவரிக்கிறார். இத்தாலி மொழியில் எழுதப்பட்ட இந்நூல் தற்போது 18 மொழியில் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

பத்து ஆண்டுக் கால கடின உழைப்பால் கொண்டுவரப் பட்டிருக்கும் இப்படைப்பு வெறும் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு அல்ல. இஸ்ரேல் இனவெறி அரசு, தனது காலனித்துவ திட்டத்திற்காக எவ்வாறு இனப்படுகொலைகளை நடத்தி வருகிறது என்பதைக் கள எதார்த்தலிருந்து விளக்குகிறார். பாட்டாளி வர்க்கத்தை அந்நியப்படுத்தி, நம் அனைவரையும் பாதுகாப்பு அற்றவர்களாகவும், பலவீனமார்களாகவும் ஆக்கியதோடு, பிறர் மீதான அக்கறையை ஒரு விதமான மனக் கோளாறாக கருதும் முதலாளித்துவ சமூக அமைப்பின் முகத்தில் ஓங்கி அடிக்கிறது இந்நூல். பாலஸ்தீனியர்கள் மீதான பிரச்சினையில் நீண்ட காலமாக உறக்கத்தில் இருக்கும் மக்களின் உறக்கத்தைக் கலைக்கிறார் இந்நூலாசிரியர்.

பாலஸ்தீனத்தில் குழந்தைப் பருவம் என்றால் என்ன? என்ற முதல் அத்தியாயத்தோடு இந்நூல் தொடங்குகிறது. ஹமாஸ் தாக்குதலுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு இஸ்ரேல் அரசுப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுமி ஹிந்த் ரஜப் படுகொலைச் செய்யப்பட்டது பற்றி உலகம் முழுவதும் பரவலாகப் பேசப்பட்டது. சிறுமி ஹிந்த் ரஜப் மட்டும் அங்குப் படுகொலை செய்யப்படவில்லை; ஹிந்த் ரஜப்பைப் போல ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.  இரண்டு வயதே நிரம்பிய முகம்மது தமிமி எனும் குழந்தை இஸ்ரேலிய படைகளால் நெற்றியில் குறி பார்த்து சுடப்பட்டுக் கொல்லப்பட்டாள்.

ஹமாஸ் தாக்குதல் நடந்த மூன்று மாதங்களிலேயே சிறுமி ஹிந்த் ரஜப் கொல்லப்படுவதற்கு முன்பே பத்தாயிரம் குழந்தைகள் உட்பட சுமார் 26,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கடந்த மார்ச் 2025 ஆண்டு வரை 17,000 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை ஆயிரத்தை விட அதிகம். தவழ, பேச, அல்லது விளையாடக் கற்றுக்கொள்வதற்கு முன்பே ஆயிரத்திற்கும் மேற்பட்ட பச்சிளங்குழந்தைகளின் உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன.

இஸ்ரேலின் அவலநிலைக்குப் பாலஸ்தீனியர்களே காரணம்; இஸ்ரேலியர்களின் இருப்புக்கு அச்சுறுத்தலாக அவர்கள் இருக்கிறார்கள் என்கிறப் புனைவுப் பிரச்சாரம் பல ஆண்டுகளாக அங்குப் பரப்பப்பட்டு வருகிறது. அக்டோபர் 7ஆம் தேதிக்குப் பிறகுத் தொடங்கிய இஸ்ரேலியத் தாக்குதலின் தர்க்கத்தின்படி, ஒவ்வொரு பாலஸ்தீனிய உயிரும், ஏன் ஒரு வயது பச்சிளம் குழந்தைகளும் கூட இஸ்ரேலின் இருப்புக்கு ஒரு அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது என்கிறார் நூலாசிரியர்.

பாலஸ்தீனத்தில் வளரும் இளம் தலைமுறைகள், அவர்களின் நிலம் தங்களது கண்ணெதிரே பறிக்கப்படுவதைப் பார்த்தே வளர்ந்து வருகிறார்கள். அவர்கள் குழந்தைகளாக இருந்த போதிலும் அந்த வயதை மீறிய கவலைகள், பதற்றங்கள், அச்சங்கள் மற்றும் பொறுப்புகளைச் சுமந்த படியே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் குழந்தைப் பருவம் அவர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது.

அல்பானீஸ் இணைய வழியில் நூற்றுக்கணக்கான காசா குழந்தைகளோடு உரையாடிய அனுபவத்தை பற்றி குறிப்பிடும் போது, மேற்குக் கரையில் இஸ்ரேலியக் குடியேற்றங்கள் மிக அருகிலேயே அமைந்திருப்பதால், அங்கு அடிக்கடி நிகழும் கைதுகள், இஸ்ரேலிய அரசுப் படைகளின் தொடர் ஊடுருவல்கள் மற்றும் குடியேறிகளின் தாக்குதல்கள் என பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் அச்சத்தோடும் வேதனையோடும் வாழும் குழந்தைகள் தங்கள் விழுமியங்களை ஒரு போதும் இழப்பதில்லை என்கிறார்.

சோதனைச் சாவடிகளில் எதிர்கொள்ளும் வன்முறை, தந்தையின் வேலை பறிப்பு, தன் கண் முன்னால் இஸ்ரேல் அரசுப் படைகளால் தந்தை தாக்கப்படுவது, பொதுவெளியில் மகன்/மகள் கண் முன்னே தந்தையின் ஆடைகள் களையப்பட்டு அவமானப்படுத்தப்படுவது, “உன் நிலத்தை நான் பறித்துக்கொள்வேன், உன் பெற்றோரை என்னை வணங்கவோ அல்லது அவமானத்திற்குள்ளாகவோ கட்டாயப்படுத்துவேன்” போன்ற அச்சுறுத்தல்கள்; அத்துடன், பெற்றோர் கைது செய்யப்பட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ, அக்குழந்தைகள் நெருங்கிய அல்லது தூரத்து உறவினரின் வீட்டில் வளர வேண்டிய சூழல் அதனால் ஏற்படும் துயரம் என பாலஸ்தீனிய குழந்தைகளின் துயரத்தை இந்நூலில் விவரிக்கிறார்.

அல்பானீஸின் எட்டு வயது மகன் பெருக்கல் வாய்ப்பாடுகளை மனப்பாடம் செய்யவே கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், பாலஸ்தீனக் குழந்தைகளோ தங்கள் இருப்பையும் மனித உரிமையையும் நிலைநாட்ட, சட்டத்தின் மொழியையே ஒரு பிரகடனமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்கிறார்.

பதினாறு வயது நிரம்பிய யாஸ்மின் கதையை அல்பானீஸ் கூறும் போது, “ஒரு குடியேற்றப் பகுதிக்கு அருகில் அரசுப்படையால் என் அப்பா கொல்லப்பட்டார்.

அவர் வன்முறையில் ஈடுபட்டதாக அவர்கள் கூறினார்கள். என் வாழ்க்கையில் மிக முக்கியமான நபரை நான் இழந்தது மட்டுமல்லாமல், அவர்கள் எங்கள் வீட்டையும் பறிக்க வந்தார்கள். முதலில் நான் அனாதையானேன், பிறகு அவர்கள் என்னைத் வீடற்றவனாக்கினார்கள்.”

பன்னிரண்டு வயதான ஃபாரஸ் பற்றி கூறும் போது “கடந்த ஆண்டு, ராணுவத்தினர் என் பள்ளியின் மீது நான்கு முறை தாக்குதல் நடத்தினர். அவர்கள் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பல ஆசிரியர்களாலும் என் வகுப்புத் தோழர்களாலும் சுவாசிக்க முடியவில்லை” என்கிறார்.

நிரந்தரப் போர்ச்சூழலையும், அனைவரிடமிருந்து தனிமைப்பட்டிருக்கும் நிலையையும் எதிர் கொள்வதற்கு ஒரு குழந்தைக்கு அதீத மன உறுதி தேவைப்படுகிறது. இது தான் பாலஸ்தீனத்தின் குழந்தைப் பருவம் என்கிறார் அல்பானீஸ்.

நூலின் மற்றொரு அத்தியாயம் காசாவில் இனப்படுகொலை தொடங்கிய அக்டோபர் 2023இல் அல்-ஷிஃபா மற்றும் அல்-அஹ்லி மருத்துவமனைகளில் பணிபுரிந்த கஸ்ஸான் எனும் மருத்துவரின் கதைகளை பதிவு செய்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் மருத்துவர் கஸ்ஸான் நாளொன்றுக்கு 22 மணிநேரம் பணியாற்றி சராசரியாக 21 அறுவைச் சிகிச்சைகளை செய்திருக்கிறார். இவற்றில் பல அறுவைச் சிகிச்சைகள் குழந்தைகளுக்காக செய்யப்பட்டது. இனப்படுகொலை தொடங்கிய முதல் மாதத்தில் மட்டும் சுமார் 900 குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்ததாகவும், அக்குழந்தைகள் வளர்ந்து பெரியவராகும் வரை பல அறுவைச் சிகிச்சைகளைச் செய்ய வேண்டியதிருக்கும் என்கிறார் மருத்துவர் கஸ்ஸான்.

ஒரு காலத்தில் காசாவின் பெருமைமிக்க மருத்துவமனையாகத் திகழ்ந்த—அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே ஒரு நபர் அமர்ந்திருக்கிறார்.

காசாவின் சுகாதாரக் கட்டமைப்பு இன்று அழிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த அறுவை சிகிச்சைகள் எங்கு செய்யப்படும்? ஒருவேளை அந்தக் குழந்தைகள் உயிர் பிழைத்தாலும், அவர்களின் எதிர்காலம் என்னவாகும்? என தனது நூலில் கேள்வி எழுப்புகிறார் அல்பானீஸ்.

இஸ்ரேல் இனவெறி அரசு காசாவின் மருத்துவமனைகள் மீதான குண்டுவீச்சை நியாயப்படுத்துவதற்காக அல்-ஷிஃபா மருத்துவமனை, ஹமாஸின் செயல்பாட்டு மையமாக இருந்தது என்று குற்றஞ் சாட்டியது. ஆனால் கஸ்ஸான் அன்று மாலையே அதைத் திட்டவட்டமாக மறுத்தார். “மருத்துவமனைகளில் நான் காயமடைந்தவர்களையும் இறந்தவர்களையும் மட்டுமே கண்டேன். ஹமாஸின் தடயம் கூட அங்கு இல்லை. மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் இது நன்கு அறியப்பட்ட ஒன்று” என்கிறார். அல்-ஷிஃபா மருத்துவமனையின் சுவரில் ஒட்டப்பட்ட ஒரு காகித்தை தான் ஹமாஸின் திட்டம் என இஸ்ரேல் அரசுப்படை அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார். ஆனால் அக்காகிதம் அம்மருத்துவமனையில் பணியாற்றிய ஊழியர்களின் பணிநேர அட்டவணை என்கிறார் கஸ்ஸான்.

அப்போது காசாவின் பல மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லாததால், எக்ஸ்ரே இயந்திரம், சி.டி.ஸ்கேன் போன்ற இயந்திரங்களைப் பயன்படுத்த முடியவில்லை; பல அறுவைச் சிகிச்சைகள் மயக்க மருந்து இல்லாமல் இருட்டில் செய்யப்பட்டன. காயமடைந்தவர்களை மருத்துவமனையில் கொண்டு சேர்ப்பதற்காக வந்த பல ஆம்புலன்ஸ்கள் எரிபொருள் இல்லாமல் பாதி வழியில் நின்று போயின. இதனால் நோயாளிகளை கழுதை வண்டிகளில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.

காசாவில் மட்டும் இதுவரை சுமார் ஆயிரக்கணக்கான மருத்துவப் பணியாளர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 250க்கும் அதிகமான மருத்துவப் பணியாளர்கள் இன்றும் பாதாள சிறையில் அடைக்கப்பட்டு கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். காசாவில் வசிக்கும் ஒரு சுகாதாரப் பணியாளர் கொல்லப்படுவதற்கு 1.5 மடங்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. பாலஸ்தீனியர்களுக்கு குணப்படுத்தக் கூடிய நோய் வந்தால் கூட அவர்களுக்கு மருத்துவம் பார்க்க ஆள் இல்லாமல் இறக்க வைப்பதற்காக இஸ்ரேல் இனவெறி அரசு, சுகாதார கட்டமைப்பை அழிக்கும் யுக்தியை கடைப்பிடிக்கிறது. இனப்படுகொலை என்பது ஒரு இனத்தின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என அனைத்தையும் அழித்தொழிக்கும் போது தெளிவாக அடையாளம் காணப்படுகிறது என்கிறார் மருத்துவர் கஸ்ஸான்.

அல்-ஷிஃபா மருத்துவமனையை ஓரிரு ஆண்டுகளில் மீண்டும் கட்ட முடியும், ஆனால் சிறப்பு பிரிவு மருத்துவர் ஒருவருக்கு பயிற்சி அளிக்க பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். இத்தகைய கொடூரமான இன அழிப்பை வெறும் ஒரு “மோதல்” என்ற பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் உலக மக்களை நம்பச் சொல்கின்றன மேற்கத்திய பத்திரிக்கைகள் என்பதை இந்த அத்தியாயத்தில் அம்பலப்படுத்துகிறார் அல்பானீஸ்.

இதன் பிறகு வரும் அடுத்தடுத்த அத்தியாயங்கள். நாம் கற்பனை செய்யமுடியாத துயரங்களுக்கு மத்தியில் மன உறுதியோடு வாழ்ந்து வரும் பாலஸ்தீனீயர்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றன. ஜெருசலேமில் சுற்றுலா வழிகாட்டியான அபு ஹசனைப் பற்றிய கதையானது, கிழக்கு ஜெருசலேமில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் பாலஸ்தீனியர்களின் வாழ்க்கையில் அன்றாடம் நடந்தேறும் அவமானங்களை வெளிக் கொணருகிறது.

ஜார்ஜ என்ற புத்தகக் கடை உரிமையாளரை மையமாக கொண்டு எழுதப்பட்ட அத்தியாயத்தில் கிழக்கு ஜெருசலேமில் நிலவும் பாலஸ்தீனியர்களின் நெருக்கடி நிறைந்த வாழ்நிலையை , மேற்கு ஜெருசலேமின் போலியான இயல்புநிலையுடன் ஒப்பிட்டு இரு வேறு கலாச்சார வேறுபாட்டை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

இஸ்ரேலிய தடவியியல் கட்டிடக் கலை நிபுணரும், இஸ்ரேல் இனவெறி அரசுக்கு எதிராக குரல் கொடுத்தவருமான எயால் வெய்ஸ்மான் பற்றி அல்பானீஸ் குறிப்பிடும் போது இஸ்ரேலின் கட்டிடக் கலை எப்படி ஆதிக்கத்திற்கானக் கருவியாக மாறுகிறது என்ற வெய்ஸ்மானின் ஆய்வை விளக்குகிறார்.

உளவியல் நிபுணரான காபோர் மாடே என்பவர் பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களின் தலைமுறைகளில்  தொடரும் காயங்களை விளக்குகிறார். மன அதிர்ச்சி எப்படி தலைமுறைகள் கடந்து பரவுகிறது; அது எவ்வாறு அரசியல் நடத்தையைப் பாதிக்கிறது என்பது குறித்த ஆழமான பார்வையை இந்த அத்தியாயம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

மறைந்த யூத இனப்படுகொலையின் (ஹோலோகாஸ்ட்) வரலாற்றாசிரியரான அலோன் கான்பினோ மூலம் பாலஸ்தீனியப் பிரச்சினையை ஒரு மனிதாபிமான நெருக்கடியாக குறைத்து மதிப்பிடாமல், சர்வதேச சட்டத்தின் மூலம் தீர்க்க வேண்டிய ஒரு அரசியல் பிரச்சினையாகக் கருத வேண்டும் என்று அல்பானீஸ் தமது நூலில் வலியுறுத்துகிறார்.

அல்பானீஸ் இந்நூலை எழுதியதோடு திருப்தியடைவில்லை. அவர் பணியாற்றும் ஐக்கிய நாடுகளின் சபை மீது கடுமையன விமர்சனத்தை எழுப்பி வருகிறார். ஐ.நா. சபை மேற்கத்திய நாடுகளின் அதிகார அரசியலால் முடக்கப்பட்டு இருக்கிறது என்று சாடுகிறார். ஒடுக்கப்பட்டோரின் பாதுகாப்புக்கு ஐ.நாவின் மூலம் எந்த வழியையும் தேட முடியாது; யூத இனப்படுகொலை போன்ற கொடூரங்கள் நிகழாமல் இருப்பதற்காக ஐ.நா. உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று அதுபோன்ற மற்றொரு கொடூரமான இனப்படுகொலை இஸ்ரேல் அரங்கேற்றி வரும் போது, ஐ.நா. சபையை உருவாக்கிய அரசுகள் வேடிக்கைப் பார்க்கின்றன விமர்சிக்கிறார் அல்பானீஸ்.

காசாவில் என்ன நடக்கிறது என்பது மட்டுமில்லாமல் அது ஏன் இவ்வளவு காலம் நடக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள விரும்பும் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது. இஸ்ரேல் இனவெறி அரசும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் காசாவில் நடத்தி வரும் இனப்படுகொலையின் கொடுரங்களைத் திட்டமிட்டு உலக மக்களிடமிருந்து மறைக்கப்பட்டு வரும் வேளையில், நூலாசிரியர் அல்பானீஸ் இனப்படுகொலைகளின் உண்மைகளை வெளி உலகத்தின் முன் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.

.பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையைச் அரங்கேற்றி வரும்  அமெரிக்க அரசின் அடியாளான இஸ்ரேலுக்கு ஆதரவாக உலக நாடுகள் ஒரே அணியில் நிற்கின்ற வேளையில் அதை எதிர்த்து முறியடிப்பதற்கும் பாலஸ்தீனயர்களின் விடுதலைக்கும் உலக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்புவோம். உலக மக்களின் ஒற்றுமையை கட்டியெழுப்புவோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்துச் செயல்பட்டால் எந்தவொரு சவாலையும் நம்மால் எதிர்கொள்ள முடியும். வண்ணத்துப் பூச்சிகள் போல ஒன்று சேர்ந்து சிறகடித்தால் ஒரு பெரும் புயலை நம்மால் உருவாக்க முடியும் என இந்நூலின் முன்னுரையில் அல்பானீஸ் குறிப்பிடுகிறார்.

இந்நூலைப் படியுங்கள். இதைப் பகிருங்கள். இது உங்கள் உறக்கத்தைக் கலைக்கட்டும். ஏனெனில், இந்த உலகம் பாலஸ்தீனியர்கள் மீதான இனப்படுகொலை விவகாரத்தில் மிக நீண்ட காலமாக உறங்கிக் கொண்டிருக்கிறது!

  • தாமிரபரணி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன