ஸ்வதந்த்ர பர்த்வாஜ்: போலீஸோடு கைகோர்த்து
போராட்டங்களை ஒடுக்கும் காவி குண்டர் படை!

செப்டம்பர் 13, 2026
ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் மக்களை ஒடுக்க போலீசுடன் சேர்ந்து காவி குண்டர் படைகளையும் களமிறக்கும் பாசிச சக்திகள், போராட்டங்களை ஒடுக்குவதற்கான புதிய நடைமுறையை உருவாக்கி வருகின்றன. இதனால், இனி ஜனநாயக உரிமைகளுக்கான எந்தவொரு போராட்டமும் தெருவில் இறங்கும்போது காவி குண்டர் படைகளின் தாக்குதலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். – பாஜக என்பது பிற கட்சிகளைப் போல ஒரு ஓட்டுச் சீட்டு [முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயக] கட்சியல்ல. அது ஒரு பாசிசக் கட்சி என்று தொடர்ந்து சொல்லி வருகிறோம். பாசிசக் கட்சி என்பதை, அமித்ஷா-மோடி-ஆதித்தியநாத்-மோகன்பகவத் போன்ற தனிநபர்களின் நடவடிக்கைகளிலிருந்து மட்டும் சொல்லவில்லை. அக்கட்சியின் கொள்கையே, அப்பட்டமான ஏகாதிபத்திய சேவையும் பார்பனிய மீட்டுருவாக்கமும் ஒருங்கிணைந்த இந்துத்துவா அரசியலை அமல்படுத்துவதும், அதற்காக கருத்தியல் ரீதியாகவும் ஆயுத ரீதியிலும் பயிற்றுவிக்கப்பட்ட குண்டர் படையையும் கொண்ட ஒரு அமைப்பாக ஆர்.எஸ்.எஸ். – பாஜக இருப்பதனாலேயே அவ்வாறு வரையறுக்க வேண்டியுள்ளது. அதனால் தான் கடந்த நாற்பது ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான கலவரங்களை காவி கும்பலால் திட்டமிட்டு அரங்கேற்ற முடிந்திருக்கிறது.

குறிப்பாக மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மாட்டுக்கறி பிரச்சினை, CAA-NRC போராட்டம், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம், நொய்டா ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம் அல்லது சமீபத்திய நீட் முறைகேடுகளுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் ஆகட்டும் — இவையனைத்திலுமே போராட்டங்களை ஒடுக்குவதற்காக காவி குண்டர் படையும் போலீஸோடு சேர்ந்துகொண்டு போராடும் மக்கள்/மாணவர்கள் மீது வன்முறையை ஏவிவிடுவது என்பது தொடர் நிகழ்வாகியுள்ளது. அந்த வரிசையில் டெல்லி ஜன்தர்மந்தர் போராட்டத்தில் கலந்துகொண்ட சிஜேபி ஆதரவாளர் ஒருவரை சங்கி கும்பல் தாக்கி பலத்த காயமேற்படுத்திய செய்தி இரண்டு மாதங்களுக்குப் பிறகு தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.

ஸ்வதந்த்ர பர்த்வாஜ் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த, பாஜகவின் உயர்மட்ட தலைவர்களோடு நெருக்கத்தில் உள்ள, ஒரு இளம் சங்கி. கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதியன்று வெளியான அவனது நேர்காணலில், “சஞ்சய் ஆசாத் என்ற நபருக்குக் கடுமையான காயங்களை ஏற்படுத்திய போதிலும், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கபில் மிஷ்ரா உள்ளிட்ட அதிகார மையத்தின் ஆதரவு தனக்கு இருந்ததால் தான் சிறைக்குச் செல்வதைத் தவிர்க்க முடிந்தது என்றும், சஞ்சயின் தலையில் ‘ஏழு தையல்கள்’ போட வேண்டியிருந்ததைக் குறிப்பிட்ட பர்த்வாஜ், இச்சம்பவத்திற்காகத் தன் மீது ‘கொலை முயற்சி’ வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அது போல நடக்கவில்லை என்று கூறியுள்ளான்.”

மேலும், “நான் சிறைக்கே செல்லவில்லை; இது உலகம் முழுவதற்கும் தெரிய வேண்டும். நாங்கள் இரவு முழுவதும் வெளியில்தான் சுற்றித் திரிந்தோம். ஒருபுறம் பாலாஜி மற்றும் அனுமன் ஜியின் ஆசிகள் எங்களுக்கு உள்ளன. மறுபுறம்… கபில் மிஷ்ரா எங்கள் மூத்த சகோதரர்… மோடி ஜியும் எனக்கு மூத்த சகோதரர்தான்…” என்றும் பேசியுள்ளான்.

இங்கே ஸ்வதந்த்ர பர்த்வாஜ் சொல்லுவது, ஜூன் 23 அன்று ஜன்தர்மந்தரில் நடந்த போராட்டத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் ஆதரவாளரான நிசூ ஆசாத் என்ற மாணவியின் தந்தையான சஞ்சய் ஆசாத்தை தன்னுடைய கைக்காப்பைக் கொண்டு தலையில் தாக்கியதைப் பற்றித்தான் பேசியிருக்கிறான். இக்காணொலி வெளியான உடனே, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் பலர் நாடாளுமன்றத் தெரு காவல் நிலையத்தின் முன் நடத்திய போராட்டத்தின் காரணமாக ஸ்வதந்த்ர பர்த்வாஜ் டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டுள்ளான். அவனை கைது செய்ததைக் கண்டித்து ராஷ்டிரிய ரக்ஷா தள் உள்ளிட்ட பல இந்துத்துவ அமைப்புகள் அதே காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தியுள்ளன.

பர்த்வாஜ் இம் அவனது கூட்டாளியும் சஞ்சையைத் தாக்கிய [ஜூன் 23] அன்றே டெல்லி நாடாளுமன்றத் தெரு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்படுகிறார்கள். அவனும் விசாரிக்கப்படுகிறான். போலீஸ் தனது அறிக்கையில், “ஆர்.எம்.எல் மருத்துவமனை மருத்துவர்களால் சஞ்சய் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டார். அவரின் காயங்கள் சாதாரணமானவை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். காயங்கள் எந்தவொரு ஆயுதத்தாலும் ஏற்படுத்தப்படவில்லை, மாறாக கடாவால் [கைக்காப்பு] ஏற்படுத்தப்பட்டன. மண்டை ஓட்டில் விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படும் தகவல், மருத்துவ சட்ட ஆலோசனைக் குழுவால் ஆதரிக்கப்படவில்லை மற்றும் முற்றிலும் ஆதாரமற்றது” என்கிறது. மொத்தத்தில் போராட்டத்தில் சஞ்சயின் மண்டை உடைந்ததற்கு பர்த்வாஜ் காரணமில்லை என்கிறது போலீஸ் தரப்பு.

பர்த்வாஜ் தனது சமீபத்திய காணொலியில் தான் தான் சஞ்சையின் மண்டையைப் பிளந்தேன் என்று பேசியிருப்பதற்கும் டெல்லி போலீசின் அறிக்கையும் நேர்மாறாகவே உள்ளது. மேலும் அன்றிரவே டெல்லி பாஜக அமைச்சர் கபில் மிஸ்ராவிடமிருந்து போன் வந்தவுடன் போலீஸ் தன்னை அனுப்பிவிட்டதாகவும், அன்று நான் அணிந்திருந்த ஷூ, கையில் வைத்திருந்த தடி ஆகியவை டெல்லி போலீசினுடையது என்றும் அக்காணொலியில் பேசியுள்ளான்.

சிஜேபியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தனது X பக்கத்தில், “ஜூன் 23 அன்றே, பர்த்வாஜ் மீது கொலை முயற்சி [section 307 of IPC], அபத்தான ஆயுதங்களைக் கொண்டு கடுமையான காயங்கள் ஏற்படுத்துதல் [section 326] ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யக் கோரியதாகவும், ஆனால் டெல்லி போலீஸ் மறுத்துவிட்டதாகவும்” கூறுகிறார்.

காணொலி வெளியான பிறகு சிஜேபி மற்றும் காங்கிரசின் போராட்டத்தின் காரணமாக பர்த்வாஜ் கைது செய்யப்பட்டதோடு, முதலில் போடப்பட முதல் தகவல் அறிக்கையில் கூடுதலாக எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோவையும் சேர்த்துள்ளது டெல்லி போலீஸ். ஆனால் கொலை முயற்சிக்கான பிரிவை [section 307] இன்னும் சேர்க்காமலே உள்ளனர்.

காவி கும்பல் போலீஸ் உடைகளில் மறைந்துகொண்டு போராட்டக்காரர்களைத் தாக்கியிருப்பதும், அக்கும்பலை டெல்லி போலீஸ் திட்டமிட்டே தப்பிக்க வைத்திருப்பதும் மேற்கண்ட செய்திகளே உறுதிப்படுத்துகின்றன. பர்த்வாஜ் மற்றும் அவனது குழுவைப் போல நூற்றுக்கணக்கான காவி கும்பல் கும்பல்களை ஆர்எஸ்எஸ்-பாஜக உருவாக்கி வைத்திருக்கிறது. இவர்கள் நேரடியாகவே பாஜக தலைவர்களுடனோ அல்லது அமைச்சர்களுடனோ நெருங்கிய தொடர்பில் இருக்கின்றனர். இதைத்தான் பர்த்வாஜ் இம் வெளிப்படுத்தியிருக்கிறான். அதேநேரத்தில் பர்த்வாஜ் இன் காணொலி கடுமையாக விமர்சனத்திற்குள்ளான போதும், கபில் மிஸ்ராவோ அல்லது பாஜக தலைமையோ பர்த்வாஜை கண்டித்து ஒரு வார்த்தை பேசாமல் மௌனம் காப்பதும் மேற்சொன்னதோடு ஒத்துப்போவதாகவே உள்ளது.

போராடும் மக்களை போலீஸைக் கொண்டு ஒடுக்குவதும், பொய்வழக்குப் போட்டு சிறையிலடைப்பதும் வழமையான நடைமுறையென்றால், தற்போது காவி குண்டர்களும் போலீசோடு சேர்ந்துகொண்டு போராட்டக்காரர்களைக் குறிவைத்துத் தாக்குவதும், அர்பன் நக்சல் என்று முத்திரைக் குத்தி மக்களின் போராட்டங்களை திசைதிருப்புவதையும் புதிய யுத்தியாக பாஜக வைத்திருக்கிறது. மேற்சொன்ன நிகழ்வு ஒரு விஷயத்தை நமக்கு உணர்த்துகிறது. ஆர்.எஸ்.எஸ்-பாஜகவை எதிர்கொள்ள வேண்டுமென்றால், முதலில் அவர்களோடு களத்தில் மோதுவதற்கான தற்காப்புப் படையையும் நமக்கு அவசியமாகிறது.

  • மாணிக்கம்

 

தகவல் ஆதாரம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன