ஆர்.எஸ்.எஸ்: இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல் – நூல் அறிமுகம்

இந்து தேசிய நோக்கங்களை அதன் பின்புலத்துடன் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து அம்பலப்படுத்தினால் மட்டுமே வெற்றி கொள்ள முடியும். அதற்கு ஏ.ஜி. நூரானியின் ‘ஆர்.எஸ்.எஸ்: இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்’ என்ற இந்த நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆர்.எஸ்.எஸ் ஒரு பண்பாட்டு அமைப்பு என்று மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்வதெல்லாம் “ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும்” என்ற ஜோசப் கோயபெல்ஸ் (Joseph Goebbels) இன் ஒரு பிரச்சார உத்தி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

பாபர் மசூதி இடிப்பு தொடங்கி இந்தியாவிலுள்ள முக்கியமான மசூதிகளையும், தர்காக்களையும் இடிப்பதை ஒரு கொள்கையாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் மதுரை திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவை அகற்ற எத்தனித்ததும், அதனைத் தொடர்ந்து இடிப்பதற்கு சுமார் 75 மசூதிகளின் பெயர்கள் கொண்ட பட்டியல் தயாராக இருப்பதையும் ஊடகங்களில் செய்திகளாக வெளிவந்ததை நாம் அறிவோம். அதேபோல் குஜராத் இனப்படுகொலை, மணிப்பூர் கலவரம் என மதச் சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பச்சைப் படுகொலைகள் என ஆர்.எஸ்.எஸ் தனது அனைத்துச் செயல்பாடுகளையும் இந்துத்துவ முனைவாக்கத்தை நோக்கி பாஜகவின் பேராதரவுடன் கொண்டு செல்கிறது.

இதில் கணிசமான வெற்றியையும் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் உத்வேகம் பெற்று ஏறத்தாழ அரசு உறுப்புகள் முழுவதையும் தனது ஆக்டோபஸ் கரங்களுக்குள் கொண்டு சென்றுவிட்டது. அதன் விளைவாக நீதிமன்றம், வருமான வரித்துறை, ஊடகங்கள் (கோடி ஊடகம்), கல்வி நிலையங்கள், மாநில உரிமைகள் பறிப்பு, மருத்துவம், அறிவியல் என அனைத்திலும் தங்களது கருத்துக்களை நிரப்பி வருகிறது.

பாஜக ஒரு கட்சியாக இவையனைத்தையும் செய்ய முடியாது என்பது திண்ணம். இருந்தும் அரசியல் அரங்கில் பாஜகதான் இவையனைத்தையும் செய்து வருகிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP), பாரதீய மஸ்தூர் சங்கம் (BMS), பாரதீய கிசான் சங்கம் (BKS), விஷ்வ இந்து பரிஷத் (VHP), பஜ்ரங் தள், சேவா பாரதி, வித்யா பாரதி, வனவாசி கல்யாண் ஆசிரமம், சம்க்ஷர் பாரதி, ஸ்வதேசி ஜாகரண் மஞ்ச், ராஷ்டிரிய சேவிகா சமிதி மற்றும் பல பதிலி அமைப்புகள் மூலம் பல்வேறு தளங்களில் தொடர்ந்து தங்களது விஷமக் கருத்துக்களைப் பரப்பி வருகிறது. இரண்டாவதாக, மேற்சொன்ன அமைப்புகளையும் அதன் செயல்பாடுகளைப் பற்றியும் அதிகம் அறிந்திராத மக்கள் அனைத்துக் கட்சிகளும் ஏதோ ஒரு வகையில் ஓட்டுக்காக மதத்தைப் பயன்படுத்துகின்றன. பாஜக சற்று கூடுதலாகப் பயன்படுத்துகிறது என்ற அளவிலேயே புரிந்துகொண்டுள்ளனர்.

இதில் ஆர்.எஸ்.எஸ்-பாஜக-வை எதிர்ப்பவர்கள் கூட பிளவுவாதக் கருத்துக்களை விதைத்து மக்களைப் பிரித்து இந்து இராஷ்டிரத்தை உருவாக்கத் துடிக்கிறார்கள் என்ற அளவில் மட்டுமே புரிந்துகொண்டு வினையாற்றி வருகின்றனர்.

இப்படி புரிந்துகொள்வது முற்றிலும் தவறானது என்பதை உணர்த்துவதற்கான ஒரு நூலாக ‘ஆர்.எஸ்.எஸ்: இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்’ இருக்கிறது என்று சொல்வது மிகையாகாது.

“இந்து ராஜ்யம் என்பது உண்மையாக அமைந்தால், அது இந்த நாட்டின் பேரழிவில் முடியும் என்பதில் சந்தேகமில்லை. எந்த விலை கொடுத்தாயினும் இந்து ராஜ்யத்தைத் தடுத்தாக வேண்டும்”

— டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் (1946)

நூலாசிரியர் ஏ.ஜி. நூரானி அவர்கள், இந்த நூலின் தொடக்கத்திலேயே டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் 1946 ஆம் ஆண்டு எழுதிய புகழ்பெற்ற ஆய்வு நூலான “பாகிஸ்தான் அல்லது தேசப்பிரிவினை” (Pakistan or the Partition of India) என்ற நூலிலுள்ள மேற்கண்ட வாசகத்தை கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இதன் பொருள் இந்து மகாசபா, ஆர்.எஸ்.எஸ் ஆகியோரின் கைகளில் நாடு செல்வதை, எந்த விலை கொடுத்தாவது தடுத்தாக வேண்டும் என்கிறார். எது நடக்கக் கூடாது என்று கூறினாரோ, அது தற்போது நிகழ்ச்சி நிரலில் உள்ளது. இது குறித்து எவ்வித சலசலப்புமின்றி சமகால அரசியலில் தலித்துகள் எப்படி அதிகாரத்திற்கு வருவது என்று பேசிக்கொண்டும், அதற்கு வினையாற்றிக்கொண்டும் இருக்கிறார்கள்.

மேலும் ஆர்.எஸ்.எஸ் ஏன் உருவாக்கப்பட்டது? என்பதில் தொடங்கி வருமான வரித்துறையிடமும், அறநிலைய ஆணையரிடமும் ஆர்.எஸ்.எஸ் அளித்த ஒப்புதல் வரை சுமார் 25 தலைப்புகளில் விரிவாகவும், விளக்கமாகவும் மறுக்க முடியாதபடி பல்வேறு தரவுகளுடன் எழுதப்பட்டுள்ளது.

விஜய் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து வந்தே மாதரம் பாடலை தமிழக ஆளுநர், தான் செல்லும் இடமெங்கும் முதல் பாடலாக ஒலிக்க விடுவது சர்ச்சையாகி வருவதை நீங்கள் அறிவீர்கள்.

இதற்கு எதிர்க்கட்சிகளும், கூட்டணிக் கட்சிகளும் ஆளும் கட்சியான தவெக-வை எதிர்த்து சண்டமாருதம் செய்து வருகிறார்கள். சில பத்திரிக்கையாளர்களோ இதை வேண்டுமானால் தாராளமாகப் பாடட்டும், யார் தடுத்தார்கள். ஆனால் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, இறுதியில் ஜன கண மன. இதற்கு இடைப்பட்டு எதை வேண்டுமானாலும் பாடிவிட்டுப் போ என்ற தொனியில் பேசுகிறார்கள். இந்தக் கருத்துக்கு எந்தக் கட்சியும் எதிர்வினையாற்றவில்லை. இதன் பொருள் முதலில் பாடாதே என்பதேயன்றி பாடவே கூடாது என்பதல்ல என்பது திண்ணம்.

வந்தே மாதரம் பாடலின் பின்புலத்தைப் பற்றி புரிந்துகொள்வதற்காக நூலாசிரியர் ஏ.ஜி. நூரானி, ஆனந்தமடம் நாவலின் சிறு பகுதியைத் தந்திருக்கிறார். அதில் சத்யானந்தா என்கிற சந்நியாசி கூட்டத்தலைவன் பிரிட்டிஷ் அதிகாரிகளின் தலைமையில் போரிட்ட முஸ்லீம் ராணுவ வீரர்களை வென்ற தருணத்தில் பாடுவதாக பக்கிம் சந்திரனின் புதினத்தில் (ஆனந்தமடம்) இந்தப் பாடல் வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இது முழுக்க முழுக்க இஸ்லாமிய வெறுப்பின்றி வேறு என்னவாக இருக்க முடியும். இதைவிட கிடைத்தற்கரிய பாடல் ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலுக்கு கிடைக்குமா என்ன?

கிழக்கிந்தியக் கம்பெனி இந்திய நிலப்பரப்பை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு வரைமுறையின்றி சுரண்டி வந்த காலகட்டத்தில், மக்கள் கடுமையான வறுமையிலும் துன்பத்திலும் ஆட்பட்டிருந்த சூழலில், பிரிட்டிஷார் நமது எதிரியல்ல, முஸ்லீம்களே நமது எதிரிகள், முஸ்லீம்களின் கஜானாவைக் கொள்ளையடி, அவர்களைக் கொலை செய் என்று மதத் துவேச நோக்கத்தில் எழுதப்பட்ட நாவலில் (1882) வரும் பாடலை நாம் யாரேனும் ஆதரிக்க முடியுமா?

ஆதரித்தால் தான் உண்மையான தேசபக்தன், இல்லையென்றால் தேசவிரோதி என்கிறது ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பல்.

மேலும், “இந்தியாவில் வசிக்க வேண்டுமென்றால், வந்தே மாதரம் பாடலைப் பாடவேண்டும்” என்கிறார் ஹரியானா மாநில பாஜக அமைச்சர் அனில் விஜ். அப்பாடலை இந்தியாவின் தேசிய கீதமாக்க வேண்டும் என்கிறது ஆர்.எஸ்.எஸ். இப்பாடலை பாட மறுத்தாலோ அல்லது அவதூறு செய்தாலோ சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என மிரட்டுகிறது மோடி அரசாங்கம்.

அதேபோல் ஆனந்தமடம் நூலின் ஆசிரியர் பக்கிம் சந்திர சட்டோபாத்யாயா, இந்து மகாசபா மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் முன்னோடி. சாவர்க்கரும், ஹெட்கேவாரும் இந்துத்துவா கருத்தியலுக்கு உயிர் கொடுப்பதற்கு முன்பே முஸ்லீம் வெறுப்பு, இந்துக்களின் மேலாதிக்கம் என்று இந்து தேசியத்திற்கு அடித்தளமிட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர். இதன் காரணமாகவே காவிக் கும்பல் பக்கிம் சந்திரன் சட்டோபாத்யாயாவையும், வந்தே மாதரம் பாடலையும் தூக்கிப் பிடிக்கிறது என்பது திண்ணம்.

பாசிச ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பல் ஏறித்தாக்கிவரும் இன்றைய காலக்கட்டத்தில் அதன் நோக்கங்களைப் பற்றி மக்களிடம் கலை இலக்கியத்தின் அனைத்து வடிவங்களிலும் கொண்டு செல்லாமல் அதனை முறியடிப்பது சாத்தியமில்லை. மேலும் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த வந்தே மாதரம் மசோதாவை எதிர்த்துப் பேசினோம் என்று வரம்பிட்டுக் கொள்வதினாலும், மற்றவர்கள் இதைப்பற்றி பேசவில்லை, நாங்கள்தான் பேசினோம் என்று பெருமை கொள்வதினாலும் இந்தக் கும்பலை முறியடித்துவிட முடியாது.

மேலும், இப்படிக் கொண்டு வருவதற்குப் பின்னால் உள்ள இந்து தேசிய நோக்கங்களை அதன் பின்புலத்துடன் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து அம்பலப்படுத்தினால் மட்டுமே வெற்றி கொள்ள முடியும். அதற்கு ஏ.ஜி. நூரானியின் ‘ஆர்.எஸ்.எஸ்: இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்’ என்ற இந்த நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் வாசகர்கள், ஜனநாயக சக்திகள், அறிவுத்துறையினர், முற்போக்காளர்கள், ஆர்.எஸ்.எஸ்-பாஜக எதிர்ப்பாளர்கள் என அனைவரும் வாங்கிப் படித்து, இந்தக் கருத்தைக் கொண்டு சேர்க்கும்படி இந்நூலை இங்கு அறிமுகப்படுத்துகிறோம்.

📘 நூல் கிடைக்கும் இடம்:

பாரதிப் புத்தகலாயம்
எண்.7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600 018.

📞 தொலைபேசி: 044-24332424, 24330024 | விற்பனை தொடர்புக்கு 24332924

  • மகேஷ்
 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன