பிளவுப்பட்ட சமூகங்கள்; பழங்குடியினரின் வரலாறுகள் மற்றும் அதிகாரத்தின் அரசியல் – நூல் அறிமுகம்

ஆகஸ்ட் 11, 2026
அரசின் சுரண்டலுக்கு எதிராக இருநூறு ஆண்டுகளுக்கு மேல் போராடி வரும் ஹோஸ் பழங்குடி மக்களின் உள் முரண்பாடுகளையும், வர்க்கங்களையும் ஆராய்வதன் மூலம் உமர் காலித் அம்மக்களின் உண்மையான வரலாற்றை பதிவு செய்கிறார்.

சமீபத்தில் தில்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைப்பெற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புனேவின் மாபுசாவில் ஒரு போராட்டம் நடைப்பெற்றது. அதில் ‘உமர் காலித்தை விடுதலை செய்’ என்ற பதாகைகளை ஏந்தியதால் இரு இளைஞர்கள் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களிடம் போலீஸ் 240 கேள்விகளை கொண்ட தாள்களை கொடுத்து அதை நிரப்ப உத்தரவிட்டிருக்கிறது.

அதில் இடம் பெற்ற கேள்விகள் பெரும்பாலும் உமர் காலித்தை மையமாக கொண்டே கேட்கப்பட்டிருக்கின்றன. போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன் உமர் காலித் தொடர்பான பின்னணி குறித்து உங்களுக்குத் தெரியுமா? ‘உமர் காலித்தை விடுதலை செய்’ என்ற முழக்கத்தை நீங்கள் எழுப்பினீர்களா? ஆம் எனில், எத்தனை முறை அந்த முழக்கத்தை எழுப்பினீர்கள்? உங்களுக்குப் பிறகு மற்றவர்களும் அந்த முழக்கத்தை மீண்டும் எழுப்பினார்களா?

பதாகைகள், ஒலிபெருக்கி மற்றும் பிற பொருட்களுக்கு யார் நிதியுதவி ஏற்பாடு செய்தது? அந்த இடத்தில் எத்தனை பதாகைகள் விநியோகிக்கப்பட்டன? பதாகைகளை ஏந்தியவாறு எடுத்த உங்கள் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டீர்களா?

சி.ஏ.ஏ போராட்டத்தை ஒட்டி 2020-இல் தில்லியில் நடந்த கலவரத்திற்கு காரணமானவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட உமர் காலித், ஐந்து ஆண்டுகள் ஆகியும் பிணை மறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

ஐந்தாண்டுகள் கடந்த பிறகும், இந்த வழக்கின் விசாரணையைத் தொடங்காமல் திட்டமிட்டே காலம் தாழ்த்துவதோடு மட்டுமில்லாமல்; பிணை வழங்காமல் முட்டுக்கட்டைப் போடுகிறது மோடி-அமித்ஷா கும்பல் தற்போது உமர் காலித் என்ற பெயரில் பதாகைகளை கண்டாலே விசாரணை என்ற பெயரில் கோவா போலீஸ் போராட்டக்காரர்களை அலைக்கழிக்கிறது.

ஆசிரியர் பற்றி:-

நாத்திகரான, முஸ்லீம் மத அடையாளச் சின்னங்களை அணியாத, சிங்பூமில் உள்ள பழங்குடியினர் குறித்து ஜே.என்.யு-வில் வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்ற, தெளிவாகப் பேசக்கூடிய ஒரு இளம் முஸ்லீம், காவிப் பாசிஸ்டுகளின் ஆட்சியில் ஒரு தேச விரோதக் குற்றஞ்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் அவரை ஒரு முஸ்லீம் என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் சுருக்கப் பார்க்கின்றன. அவர் என்ன பேசினாலும், எழுதினாலும் பழங்குடி மக்களின் மீதான தனது ஒரு தெளிவான ஆய்வை அவர் வழங்கிய போதிலும், அவர் மூஸ்லீமாக பிறந்ததினால் உமர் ஒரு வன்முறையாளர், தேச விரோதி, இந்திய அரசுக்கு ஓர் அச்சுறுத்தல் என்கின்றனர் காவிகள்.

ஐந்து ஆண்டுகளாக சிறையில் அடைப்பட்டிருக்கும் உமர், வெளியில் வந்தால் நாட்டிற்கு ஆபத்தானவர் என அவரின் பிணையை இந்திய அரசு மறுக்கிறது. உமருக்கு எதிரான சட்ட வழக்கு பலவீனமானது என்பது அனைவரும் அறிந்த உண்மை. வாட்ஸ்அப் குழுவில் இருந்தார் என்றும்; இன்குலாப் சலாம் போன்ற சொற்களைப் பயன்படுத்தினார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்திய உச்ச நீதிமன்றம் அவரின் பிணைக்கு கூட செவி சாய்ப்பதில்லை.

உமர், தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வறிக்கையான “பிளவு பட்ட சமூகங்கள்; பழங்குடிகளின் வரலாறுகள், அதிகாரத்தின் அரசியல்” என்ற ஆய்வுக் கட்டுரையை எந்த நிலையில் சமர்ப்பித்தார் என்பதே அவரின் மன உறுதிக்கு சான்று. அவர் மீது தேச விரோத வழக்கு இருக்கிறது; சிறையில் சில காலம் அடைக்கப்பட்டிருந்தார்; மயிரிழையில் துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பினார்; கோதி மீடியாக்கள் மூலம் பீதிக்கு உள்ளாக்கபட்டார்.

ஆனாலும் இந்நிலைமைகள் அனைத்தையும் முறியடித்து, உமர் தன்னுடைய ஆய்வறிக்கையை எழுதி முடித்தார். இதன் இறுதிக்கட்டத்தில் பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கபட்டார். இந்த ஆய்வறிக்கையை வெளியிடுவதற்காக உமர் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

உமர் மற்ற ஆய்வாளர்களை போல எளிதில் பணம் சம்பாதிக்கும் வழியை தேடவில்லை. அவர் கடினமான பாதையைத் தேர்ந்தேடுத்தார்.  என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ-விற்கு எதிரான போராட்டங்களில், முஸ்லீம்கள், பழங்குடிகள், தலித்துகள், ஏழைகள் என அனைத்து ஒடுக்கப்படும் இந்திய மக்கள் குடியுரிமைக்கான போராட்டத்தில் தனது உடலையும் ஆன்மாவையும் அர்ப்பணித்தார். இந்திய ஜனநாயகத்தை நிலை நிறுத்த முயன்ற இந்த இளைஞர் இன்று 8 அடி அகலம் 15 அடி நீளம் கொண்ட சிறையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டிருக்கிறார்.

உமர் தனது சிறை அறையின் சுவரில் பகத் சிங்கின் வரிகளான ”எனக்குள் எரியும் நெருப்புடன் சாம்பலின் ஒவ்வொரு துகளும் துடிக்கிறது; “சிறைவாசத்திலும் சுதந்திரமாக இருக்கும் அந்தப் பைத்தியக்கார ஆன்மா நானே” என்பதை எழுதி வைத்துள்ளார். ஒவ்வொரு விடியலிலும் அந்த வரிகளின் மீதே உமர் காலித் கண் விழிக்கிறார்.

நூலைப் பற்றி:-

உமர் காலித் தன்னுடைய முனைவர் பட்டத்திற்கான ஆய்வில் தற்போதைய ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிங்பூம் பகுதியில் வசிக்கும் ஹோஸ் பழங்குடியினர் பல்வேறு வர்க்கங்களாக பிரிட்டிஷ் ஆட்சியதிகாரத்திற்கு முன்பே பிளவுபடுத்தப்பட்டு இருந்தனர் என்பதை ஆதாரத்தோடு கூறுகிறார். ஹோஸ் இன மக்களின் இந்த படிநிலைப் பிரிவு, கடந்த இருநூறு ஆண்டுகளாக அங்கு ஆட்சியதிகாரத்தில் இருந்த அரசின் சுரண்டலுக்கு எதிராகவும், ஆதரவாகவும் எவ்வாறு வினையாற்றினர் என்று வாதிடுகிறார்.

சிங்பூமில் ஏற்பட்ட மாற்றத்தின் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து பிரிட்டிஷ் காலனித்துவ அரசு, வெளியிலிருந்து ஒரு புறநிலை சக்தியாக செயல்படாமல், அச்சமூகங்களுக்குள் ஏற்கனவே இருந்த பல பிளவுகளைப் பயன்படுத்தியதோடு அதை மேன்மேலும் தீவிரமாக்கியது. அவர்களின் கிராம அமைப்புகளை கைவசப்படுத்தி, அங்கு எப்படி தனது ஆட்சி அதிகாரத்தை செலுத்தியது என்பதை பல்வேறு ஆதாரங்களோடு எடுத்துரைக்கிறார்.

ஹோஸ் சமூகத்தின் தாயகமான சிங்பூம் ஜார்க்கண்டின் தென்பகுதியில் அமைந்திருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கிழக்கிந்திய கம்பெனி சோட்டா நாக்பூர் பகுதியில் முதன் முதலில் ஆட்சியதிகாரத்தை தொடங்கிய போது சிங்பூம் அதன் ஒற்றை நிர்வாகப் பகுதியாக இருக்கவில்லை. கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியதிகாரத்தில் வங்காள மாகாணத்தின் ஒரு பிரிவாகவே இருந்தது.

இந்நூலின் முதல் அத்தியாயமானது, அடர்ந்த காடுகள், குன்றுகள், மேடு பள்ளங்கள் நிறைந்த சோட்டா நாக்பூர் பகுதி பல்வேறு சிற்றரசர்களுக்கிடையே பிரிக்கப்பட்டு, அவர்களுக்கிடையே தொடர்ந்து மோதல் உருவாகி கொண்டே இருந்தது என்பதை விளக்குகிறது. சிற்றரசர்களுக்கு இடையில் நடைபெறும் இம்மோதலில் படைகளை கொண்ட ஜாகிர்தார்களின் பங்கு, அந்தந்த பகுதிகளின் ஹோஸ் பழங்குடிகள் பங்கு பெறுவதை விளக்குகிறார். ஹோஸ் இன மக்களின் ஒவ்வொரு கிராமத்திற்கு தலைவராக முண்டா என்பவரின் செயல்பாடு மற்றும் பல்வேறு கிராமங்களின் ஒட்டுமொத்த தலைவராக மங்கி செயல்பட்டதையும் உமர் காலித் விளக்குகிறார்.

ஹோஸ் சமூகத்தை காட்டுமிராண்டிகளாக ஆரம்பத்தில் ஆவணப்படுத்திய பிரிட்டிஷ் இராணுவ அதிகாரிகள், தனது காலனி ஆட்சியை நிறுவிய பிந்தைய காலக் கட்டங்களில் ஹோஸ் சமூகத்தைப் பற்றி தமது எண்ணத்தை மாற்றி ஆவணப்படுத்தினார்கள் என்று பல்வேறு உதாரணங்களை தருகிறார்.

இரண்டாவது அத்தியாயமானது, சிற்றரசர்களிடையே நிலவிய மோதல்கள், அவர்களை எவ்வாறு கிழக்கிந்திய கம்பெனியை நோக்கி தள்ளின என்பதை விளக்குகிறது. ஹோஸ் மக்களை எதிர்ப்பதில் முதலில் திணறிய கிழக்கிந்திய இராணுவம், பின்பு தனது படை பலம் மூலமும், முண்டா, மங்கி ஆகியோரின் துணையோடும் அங்கு தனது ஆட்சியதிகாரத்தை நிறுவியது.  இதற்கு பின்பு காலனித்துவ அரசு ஒரு தனித்துவமான ஆட்சி முறையை அமுல்படுத்தியது பற்றி இதில் உமர் காலித் ஆராய்கிறார்.

பிரிட்டிஷ் இராணுவ நடவடிக்கைகளின் போது அவர்களுக்கு உதவிய மங்கிகளும் முண்டாக்களும், சிங்பூமில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் உள்ளூர் அதிகாரிகளாக மாறினர். பிரிட்டிஷ் அதிகாரத்தின் மையம் உள்ளூர் அதிகார கட்டமைப்புகளுக்கு மாறியதால், வாடகை வசூல், உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவல் பணி போன்ற பல முக்கியப் பணிகள் ஹோஸ் மக்களின் தலைவர்களான முண்டாக்களிடமும், மங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதற்கு அடுத்து வரும் அத்தியாயங்கள் சிங்பூம் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், வனப்பகுதிகள் போன்றவற்றில் நடைப்பெற்ற காலனித்துவ நடவடிக்கைகளை விளக்குகின்றன. பிரிட்டிஷாரின் தமது இலாபத்திற்காக காடுகளை அழித்து சாகுபடி நிலங்களை உருவாக்கினர். விவசாய நிலங்களின் மீதான நிலவாடகையை ஹோஸ் இனத்தின் பழங்குடித் தலைவர்களான முண்டாக்கள் மங்கிகள் மூலமே வசூலித்தனர். இதன் மூலம் முண்டாக்கள், மங்கிகள் தமது சமூக பொருளாதார அந்தஸ்தை மேம்படுத்திக் கொண்டதோடு புதிய நிலங்களுக்கு உரிமையாளர்களாகவும் மாறினர்.

அப்பகுதியில் அமைந்திருந்த காடுகள் மீதான பிரிட்டிஷாரின் கட்டுப்பாடும் ஹோஸ் இன மக்களை வறுமையில் தள்ளின. ஒரு புறம் காலனித்துவ ஆட்சிக்கு ஆதரவாக இருந்த வர்க்கம் எப்படி செலித்து வளர்ந்தன என்றும், மறுபுறம் ஹோஸ் இன மக்கள் பொருளாதார நிலையில் எப்படி தாழ்ந்து போயினர் என்றும் உமர் காலித் பல்வேறு ஆவணத்திலிருந்து மேற்கோள் காட்டி வாதிடுகிறார். ஹோஸ் இன மக்கள் தமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் காடுகளுக்கு தீ வைத்ததை புள்ளி விபரங்களோடு விளக்குகிறார்.

வெள்ளையர்களின் அதிகார மாற்றத்திற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு சிங்பூமில் நடைப்பெற்ற பல்வேறு அரசியல் இயக்கங்களை ஆராயும் உமர் காலித் ஹோஸ் இன பழங்குடியினர், அப்போது நிலவிய பல்வேறு இயக்கங்களில் தமது கிராமத் தலைவர்களின் அதிகாரத்தை எதிர்த்து போராடினர் என்கிறார். இந்த பின்னணியில் சோட்டா நாக்பூர் ஒரு தனி மாநிலமாக உருவாக வேண்டும் என்ற இயக்கத்தையும் ஆராய்கிறார்.

அரசின் சுரண்டலுக்கு எதிராக இருநூறு ஆண்டுகளுக்கு மேல் போராடி வரும் பழங்குடி மக்களின் உள் முரண்பாடுகளையும், வர்க்கங்களையும் ஆராய்வதன் மூலம் உமர் காலித் அம்மக்களின் உண்மையான வரலாற்றைப் பதிவு செய்கிறார். பழங்குடி மக்களின் போராட்டங்களையும், அவர்களின் மரபுகளையும், பழக்க வழக்கங்களையும் பாதுகாப்பதற்கான ஒரு போராட்டமாக சுருங்கி காட்டப்படுகிறது. ஆனால் பழங்குடி மக்களின் மீதான சுரண்டலில் அரசு கடந்த இருநூறு ஆண்டுகளாக அம்மக்களின் கட்டமைப்புகளை பயன்படுத்தியே அவர்களை பிளவுக்குட்படுத்தியும் அப்பிளவை மேலும் தீவிரமாக்கி தனது சுரண்டலை தீவிரப்படுத்தி வருகிறது என்பதை நூற்றுக்கணக்கான நூல்களிலிருந்து தரவுகள் மீது கோர்வையாக வாசகர்கள் எளிதில் புரியும் படி நிறுவுகிறார்.

இந்நூலுக்கு பிரபல வரலாற்று ஆசிரியர் இராமச்சந்திரா குஹா முன்னுரை எழுதியிருக்கிறார். பழங்குடியினரை பற்றி ஆய்வு செய்யும் நந்தினி சுந்தர் இந்நூலின் பிற்சேர்க்கையில் இந்நூலை சிறப்பித்து எழுதியுள்ளார்.

இறுதிப் பக்கங்கள் வரும்போது, ‘பிளவுபட்ட சமூகங்கள்’ ஹோஸ் பழங்குடி மக்களின் வரலாற்றை நாடு முழுவதும் பொதுமைப்படுத்த நமக்கு கற்றுக் கொடுக்கிறது. அரசுகள் எவ்வாறு அதிகாரத்தை நிலைநிறுத்துகின்றன, சமூகங்கள் எவ்வாறு படிப்படியாக உள்ளிருந்தே மறுசீரமைக்கப்படுகின்றன, மேலும் சாதாரண நிர்வாக நடைமுறைகளின் மூலமே சமத்துவமின்மை பெரும்பாலும் சட்டபூர்வமான அங்கீகாரத்தைப் பெறுகிறது என்ற ஆழ்ந்த சிந்தனையை நமக்குள் விதைக்கிறார் உமர் காலித்.

ஒடிசாவின் நியாம்கிரி மலை அடிவாரத்தில் அமைய இருந்த வேதாந்தா நிறுவனத்தின் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து நியாம்கிரி சுரக்‌ஷா சமிதி எனும் அமைப்பு, அங்குள்ள பழங்குடி கிராம சபைகளை ஒருங்கிணைத்தன. இது பழங்குடி மக்களுக்கு கிடைத்த பெரிய வெற்றியாக சித்தரிக்கப்பட்டது.

ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு ஜார்க்கண்டில், சிங்பூம் பகுதியில் வேதாந்தா நிறுவனம் சுரங்கத் தொழிலை தொடங்குவதற்கு ஆதரவாக ரூங்டா எனும் சுரங்க நிறுவனம், பழங்குடிகளின் கிராமசபைகளை ஒருங்கிணைத்தன ரூங்டா நிறுவனத்தோடு கொள்ளையில் கூட்டுச் சேர்ந்து கொண்டு கிராம சபை பிரதிநிதிகள் பரிசுத் தொகையைப் பெறுகிறார்கள் என்ற செய்திகளும் வெளிவந்தன என்பதைப் பற்றி உமர் எழுப்பும் கேள்விகள் தற்போதைய மோடி அரசின் சுரண்டலையும் பழங்குடி மக்களின் மீதான ஒடுக்குமுறையையும் நமக்கு அம்பலப்படுத்துகின்றன.

  • தாமிரபரணி

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன