நேபாள வெள்ளம் : இயற்கைப் பேரிடரல்ல, ஏகாதிபத்திய உற்பத்திமுறையின் கோரவிளைவே!

செப்டம்பர் 11, 2026
இமயமலையின் இயற்கையான நிலையற்ற தன்மையை புவி வெப்பமாதலும், “வளர்ச்சி” என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் சாலைகள் மற்றும் புனல்மின் திட்டங்களும் மேலும் தீவிரப்படுத்துகின்றன. இதன் விளைவாக உருவாகும் பேரிடர்களின் விலையை, அவற்றை உருவாக்கிய பெருநிறுவனங்கள் அல்ல; நேபாளத்தின் உழைக்கும் மக்களே உயிரை இழந்தும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தும் கொடுக்க வேண்டியிருக்கிறது.

ஆகஸ்ட் 26-இல் நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கமானது, கடந்த சில ஆண்டுகளாக இமயமலையில் நிகழ்ந்து வரும் தொடர்ச்சியான காலநிலைப் பேரிடர்களில் மிகவும் தீவிரமான ஒரு நிகழ்வாகும். இந்நிகழ்வில் இதுவரை (03.09.2026) நேபாளத்தில் 1,259 மக்களும், திபெத்தில் 21 மக்களும் பலியாகியுள்ளனர். மேலும், நேபாளத்தில் 5,083 மக்களும், திபெத்தில் 541 மக்களும் இன்னும் கானவில்லை. நேபாளத்தின் ரஸுவா, நுவாக்கோட்டை, தாடிங், மற்றும் கோர்க்கா மாவட்டங்கள் அனைத்தும் மூழ்கிப்போயுள்ளன. திபெத்தின் தனஹுன் பகுதியும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. திரிசூலி ஆற்றை ஒட்டியிருந்த குடியிருப்புகள், கடைகள், சந்தைகள், சாலைகள், மற்றும் குறிப்பாக கயிறொங்கின் துறைமுகம் ஆகிய அனைத்தும் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.

இத்துயரச் சம்பவம் எப்படி நிகழ்ந்தது? ஆகஸ்ட் 26 காலையில், நேபாளம்-திபெத் எல்லையில் உள்ள லாங்டாங் தேசியப் பூங்காவில், 5,200 மீட்டர் உயரத்தில் அமைந்திருந்த ஒரு மாபெரும் பனிப்பாறையைத் தாங்கியிருந்த அடித்தளப் பாறை சரிந்தது. சரிந்த பாறையுடன், பனிப்பாறையிலிருந்து சுமார் 2000 அடி அகலம் கொண்ட ஒரு பகுதி பிளவுற்றது. பிளவுற்ற பனிப்பாறையின் பகுதியும் பாறையும் இனைந்து இமயமலையின் செங்குத்தான சரிவுகளில் தோராயமாக 180 கி.மி/மணி வேகத்தில் கீழே இறங்கியது. இறங்கும் பாதையில் மரம், செடிகொடிகள், மண் என்று அனைத்தையும் ஒரு சேர ஒன்றாக்கி, அப்படியே 1200 மீட்டர் கீழே ஒரு பள்ளத்தாக்கில் விழுந்தன. இதனால் ஏற்பட்ட பூமியின் அதிர்வு 5.2 ரிக்டர் என்றளவில் (ஒரு வலிமையான நிலநடுக்கத்துக்கு நிலையான அளவில்) பதிவு செய்யப்பட்டது!

விழுந்ததும், இப்பனிப்பாறைச் சரிவு (ice and rock avalanche) லெண்டே-கோலா ஆற்றைத் தற்காலிகமாக மறித்து அணைபோன்ற அமைப்பை உருவாக்கியது. அதேநேரத்தில், பனி உருகி ஆற்றுக்குள் செல்லத் தொடங்கியதுடன், பாறைகளும் மற்ற சிதைவுகளும் ஆற்றுக்குள் கலந்து கொண்டன. விரைவில், அந்தத் தற்காலிகத் தடை உடைந்தவுடன், அணை உடைந்தாற்போன்று உருகிய பனியும் சிதைவுகளும் கலந்த ஆறு பெரும் வெள்ளமாக வெடித்தது. லெண்டே-கோலா ஆற்றின் பாதையில் சிறிது தொலைவில் இருந்த போதே-கோஷி மற்றும் திரிசூலி ஆறுகளும் விரைவில் திடீர் வெள்ளமாக வெடித்தன. இதற்குப் பிறகு ஏற்பட்ட பேரழிவை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

000

இப்பனிப்பாறைச் சரிவை எந்த எச்சரிக்கை அமைப்புகளாலும் முன்கூட்டியே கணிக்க முடியவில்லை. ஏனெனில், எச்சரிக்கை அமைப்புகள் பொதுவாக மழைபொழிவைக் கவனித்து அதன் அடிப்படையில்தான் வெள்ளத்துக்கான எச்சரிக்கையை எழுப்பும். ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்குக் காரணமான பனிப்பாறைச் சரிவு, மழையின் பாதிப்பு இல்லாத நேரத்தில் நிகழ்ந்துள்ளது. அதாவது, அதை ஏற்படுத்தியது மழை அல்ல. மழை இல்லாத நிலையில் இந்த பனிப்பாறை சரிவும் அதன் விளைவான வெள்ளமும் எப்படி நிகழ்ந்தன என்று புரிந்துகொள்ள வேண்டுமானால், மழையால் இதுபோன்ற ஒரு பனிப்பாறைச் சரிவு எப்படி நிகழ்கிறது என்று புரிந்துகொள்வது அவசியமாகும்.

ஒரு பனிப்பாறைகளால் ஆன மலையில் (glacial mountain) உள்ள பனிப்பாறைகள் எப்போதும் கீழ் நோக்கி புவியீர்ப்பு விசையினால் அழுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால், அந்த பனிப்பாறைகள் தம்மைத் தாங்கியுள்ள அடித்தளப் பாறைகளுடன் அதிக உராய்வுடன் (high friction) ஒட்டியிருப்பதால் அது சரியாமல் இருக்கும். பனிப்பாறை மலைகளில் அதிக உயரத்தில் உள்ள சரிவுகளில் உறைபனி (permafrost) அமைந்திருப்பதால், அது பனிப்பாறைகளையும் அதன் அடித்தளப் பாறைகளையும் சரியாமல் தக்கவைக்கும். இம்மலைகளில் கடுமையான மழை பெய்யும்போது, மழைநீரானது பனிப்பாறைகளுக்கும் அதன் அடித்தளப் பாறைகளுக்கும் இடையே சென்று அவற்றுக்கு இடையிலான உராய்வைக் குறைத்துவிடும். அதேநேரம், இம்மலைகளின் சரிவுகளில் உள்ள உறைபனியை உருகவைக்கும். இதனால், பனியும் பாறையும் சேர்ந்து சரிந்து விழும். இதைதான் நாம் பனிப்பாறை சரிவு என்று கூறுகிறோம்.

எனவே, உராய்வு தளர்வாவதும் உறைபனி உருகுவதும்தான் பனிப்பாறைச் சரிவின் அடிப்படைகளாகும். கனமழை மட்டுமின்றி, வேறு பல காரணிகளும் இதைத் தூண்ட முடியும்.

பொதுவாகவே இமயமலையில் பனிப்பாறை சார்ந்த பேரிடர்களை ஏற்படுத்தும் புவித்தட்டு மேலெழுசியும் (tectonic uplift) புவி வெப்பமாதலும் (climate change) இப்பேரிடரையும் ஏற்படுத்தியுள்ளது என்று பிபிசி பத்திரிகை கூறியுள்ளது. இதன் பொருள் என்னவென்று சற்று சுருக்கமாக பார்ப்போம்.

  • புவித்தட்டு மேலெழுச்சி: ஒருகாலத்தில் ஆப்பிரிக்காவின் பகுதியாக இருந்த இந்திய நிலத்தட்டானது, அதிலிருந்து பிரிந்துவந்து யுரேசிய நிலத்தட்டுடன் வேகமாக மோதியதன் விளைவாக, சுமார் 1.5 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இமயமலை உருவானது. எனவே, இமயமலைத் தொடரானது உலகின் மிக இளமையான, அதன்விளைவாக பலவீனமான மலைத்தொடர்களில் ஒன்றாகும். (ஒரு ஒப்பீட்டுக்காகச் சொல்வதானால், மேற்குத்தொடர்ச்சி மலையானது 150 கோடி ஆண்டுகள் பழமையானது. புவிப்பரப்பில் உயிரனங்களே தோன்றும் முன்னர் (Precambrian era) தோன்றியது. எனவே வலிமையான பாறைகளையும் உறுதியையும் கொண்டது. ஆனால், இமயமலையின் பாறைகளோ இளமையானவை பலவீனமானவை (young and fragile))

இமயமலையை உருவாக்கிய இந்திய மற்றும் யூரேசிய புவித்தட்டுகள் இடையிலான மோதல் இன்றும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதன் விளைவாக, எவெரெஸ்ட் சிகரத்தின் உயரம் ஆண்டுதோறும் 1 செ.மீ. அதிகரிக்கிறதென்றால் இந்த மோதலைக் கற்பனை செய்து பாருங்கள்! இதனால், இமயமலையின் வடிவத்தில் மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. குறிப்பாக, இமயமலையின் பனிப்பாறைகள் கீழ் உள்ள சரிவுகள் மேன்மேலும் செங்குத்தாக மாறி வருகின்றன. (ஒரு காகிதத்தை அதன் இருமுனைகளில் இருந்தும் எதிரெதிர் திசையில் தள்ளும்போது காகிதம் செங்குத்தான ஒரு மலைபோன்ற அமைப்பை உருவாக்குகிறதல்லவா, நாம் தள்ளத்தள்ள அது மேன்மேலும் செங்குத்தாகிறதல்லவா அப்படித்தான்) இச்சரிவுகளில் உறைபனி அமைந்திருந்தாலும், குறிப்பிட்ட டிகிரியை கடந்து இச்சரிவுகள் செங்குத்தாக மாறினால், மேலிருக்கும் பனிப்பாறைகளும் பாறைகளும் சரிந்து விழும் சூழ்நிலை உருவாகும். இந்த வகையில்தான் புவித்தட்டு மேலெழுச்சியானது பனிபாறைச் சரிவைத் தோற்றுவிக்கும் காரணியாகிறது.

  • புவிவெப்பமாதல்: புவி வெப்பமாதலால் பனிப்பாறையின் மலைப்பகுதிகளில் அதிகரிக்கும் வெப்பமானது, பனிப்பாறைகளின் உள்பகுதிகளை வெப்பமாக்கி அவற்றுக்குள் நீரோட்டத்தை ஏற்படுத்துகிறது. இந்நீரோட்டம் பனிப்பாறைகளின் அடி அடுக்குக்கு சென்று அவற்றுக்கும் அவற்றின் அடித்தளப் பாறைகளுக்கும் இடையில் இருக்கும் உராய்வைக் குறைத்துவிடுகிறது. எப்படி மழைநீரானது உறைபனியை உருகச் செய்கிறதோ, அதைப்போலவே வெப்பத்தின் தாக்கமும் உறைபனி உருகச் செய்கிறது. இதனால், அது அதன் உறுதித்தன்மையை இழந்துவிடுகிறது. இந்த வகையில்தான் புவி வெப்பமாதல் பனிபாரைச் சரிவுகளைத் தோற்றுவிக்கின்றன. (கையில் ஒரு குச்சி ஐசை வைத்திருப்பதைப் போலக் கற்பனை செய்யுங்கள், குச்சிக்கும் ஐசுக்குமான உராய்வுதான் குச்சியில் இருந்து ஐசை விழாமல் வைத்துள்ளது; இந்நிலையில் குச்சிக்கு அருகில் உள்ள ஐஸ் உருகி நீராக மாறினால் அவ்வுராய்வு தளர்ந்து ஐஸ் கீழே விழுகிறதல்லவா அப்படித்தான்)
  • ‘வளர்ச்சி’ என்ற பெயரில் செய்யப்படும் உட்கட்டமைபுத் திட்டங்கள்: இமயமலை என்பது உலகின் இளைமையான, பலவீனமான மலைத்தொடர் என்று கூறினோம். எனவே, அதன் பாறைகள் மிக இலகுவானவை. அவற்றில் சுரங்கப் பணிகள், கட்டுமானப் பனிகள் போன்றவற்றை மேற்கொள்வதால் ஏற்படும் அதிர்வுகளும் பனிப்பாறையின் இருக்கத்தைக் குறைப்பதில் பங்காற்றுகின்றன. இதன் விளைவாகவும் அது பலவீனப்பட்டு பனிப்பாறைச் சரிவு நடக்கிறது.

 புவி வெப்பமாதல்:

பனிப்பாறைச் சரிவிற்கான முதல் காரணியான புவித்தட்டு மேலெழுச்சி இயற்கையான நிகழ்வுதான்; அதைத் தடுக்க நாம் ஒன்றும் செய்யமுடியாதுதான். ஆனால், புவிவெப்பமயமாதலும் ‘வளர்ச்சித்’ திட்டங்களும் அப்படியல்ல. பொதுவில் சூழலியலாளர்கள் புவி வெப்பமாதலை “மனிதனால் உருவாக்கப்பட்டது” என்று கூறுவார்கள். ஆனால், அது வடிகட்டிய பொய்! மனித வரலாற்றின் முழுக்காலத்திலும் புவி வெப்பமாதல் ஒரு பிரச்சனையாக உருவெடுக்கவில்லை. அது முதலாளித்துவ (குறிப்பாக ஏகாதிபத்திய) உற்பத்தி மறுஉற்பத்தி முறையின் காலகட்டத்தில்தான் அவ்வாறு உருவெடுத்துள்ளது.

இலாபத்தை அச்சாணியாகக் கொண்டு சுழலும் ஏகாதிபத்திய முதலாளித்துவப் பொருளாதார அமைப்பானது, இயற்கையையும் சுற்றுச் சூழலையும் பெரும் அழிவுக்குத் தள்ளி, புவிக் கோளத்தையே அழிவின் விளிம்பிற்குத் தள்ளி வருகிறது. இதன் நேரடி விளைவாக, முதலாளித்துவக் காலகட்டத்தில் உலகளாவிய பைங்குடில் வாயுக்களின் வெளியேற்றம் (greenhouse gas emissions) இயல்பான அளவை விடப் பலமடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாகத்தான், உலகெங்கும் (குறிப்பாக, இமயமலை போன்ற நிலையற்ற பகுதிகளில்) காலநிலைப் பேரிடர்கள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. தற்போது அதிகரித்து வரும் உலகளாவிய பைங்குடில் வாயு வெளியேற்றங்கள் நம் இருப்புக்கே ஒரு அச்சுறுத்தலாக உள்ளன. பைங்குடில் வாயு வெளியேற்றத்தால் நிகழும் இப்புவிவெப்பமயமாதல் காரணமாக, மற்றெந்தப் பகுதியையும் விட இமயமலை 50% அதிகம் சூடாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன! இச்சூடேறுதல்தான் பனிப்பாறைகளை உருகவைக்கின்றன.

பெரும் வல்லரசுகளான அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள் உலகளாவிய பைங்குடில் வாயுக்களின் வெளியேற்றுதிலில் மிகப்பெரிய பங்கை வகிக்கின்றன. 1975 மற்றும் 2020-க்கு இடைப்பட்ட காலத்தில், உலகின் மொத்தப் பைங்குடில் வாயுக்கள் வெளியேற்றத்தில், அமெரிக்கா 33%, ஐரோப்பிய ஒன்றியம் 21%, சீனா 18% வெளியேற்றியுள்ளன! அதாவது, உலகின் மொத்த வெளியேற்றத்தில் இவை மூன்று மட்டும் கிட்டத்தட்ட முக்கால் பங்கு (72%) வெளியேற்றியுள்ளன. ஆனால், நேபாளத்தின் பங்கோ வெறும் 0.1% மட்டுமே!!

ஆனால், பைங்குடில் வாயுக்களின் வெள்ளியற்றதல் ஏற்படுத்தும் காலநிலை விளைவுகளை இந்தப் பெரிய (ஏகாதிபத்திய) நாடுகள்  எதிர்கொள்வதில்லை. மாறாக, அவர்களுக்கு மலிவான உழைப்பையும் மலிவான நிலத்தையும் இயற்கை வளங்களையும் வழங்கும் சிறிய (காலனிய, அரைக்காலனிய) நாடுகள்தான் அதன் சுமையைப் பெரியளவில் தாங்குகின்றன. அத்தகைய நாடுகளிலும் ஆளும் வர்க்கங்கள் பாதிக்கப்படுவதில்லை; மாறாக, உழைக்கும் வர்க்கம்தான் மிக மோசமாக பாதிக்கப்படுகிறது.

பைங்குடில் வாயுக்களின் வெளியேற்றதலால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இமயமலைப் பகுதியும் ஒன்றாகும். நேபாளத்தில் நிகழ்ந்த இப்பனிப்பாறைச் சரிவுக்கு முன்பு கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு காலநிலைப் பேரிடர்கள் இமயமலையின் பகுதிகளில் தொடர்ந்து நடந்துள்ளன. 2021-இல் நிகழ்ந்த உத்தரகண்ட் வெள்ளம், நந்தா-குந்தி மலையில் செங்குத்தான சரிவுக்கு மேலிருந்த ஒரு பனிப்பாறை வெப்பமடைந்து சரிந்து விழுந்ததால் நிகழ்ந்ததாகும். இந்நிகழ்வில் அதிகாரப்பூர்வத் தகவல்களின்படியே கிட்டதட்ட 300 மக்கள் உயிரிழந்தனர் அல்லது காணாமல் போயினர். 2023-இல் சிக்கிமில் மேலிருந்த பனிப்பாறை வெப்பமடைந்து உருகியதால் அதன் பின்னிருந்த ஏரி வெடித்து பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தியது. இதைத்தான் ஆங்கிலத்தில் glacial lake outburst flood (GLOF) என்று கூறுவார்கள். இந்நிகழ்வில் 179 மக்கள் உயிரிழந்தனர். 2025-இல் இதைப்போலவே நேபாளம்-திபெத் எல்லையில் ஒரு பெரும் வெள்ளம் நிகழ்ந்தது. இந்நிகழ்வில் கயிறொங் துறைமுகம் அழிந்துபோனது. தற்போதைய நிலவரப்படி, இமயமலையில் சுமார் 407 பனிப்பாறை ஏரிகள் உடைந்து வெள்ளத்தை ஏற்படுத்தும் அபாயத்தில் உள்ளன.

உலகளாவிய பைங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைக்காவிட்டால் நேபாளத்தால் இந்நிலையிலிருந்து வெளியேறமுடியாது. ஆனால், இவ்வெளியேற்றதலில் நேபாளத்தின் பங்கு வெறும் 0.1% மட்டுமே. இவ்வெளியேற்றத்தில், மிகப்பெரிய பங்கை அளிப்பது ஏகாதிபத்திய அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் சீன பெருநிறுவனங்கள்தான் (இவர்களன்றி, சவூதி, ரஷ்யா போன்ற நாடுகளும் பைங்குடில் வாயுக்களின் வெளியேற்றதலில் கணிசமான பங்கை வகிக்கின்றன)

இந்நாடுகள் ஐ.நா-வில் (United Nations) செயல்படுத்தப்படும் நாடுகளின் கார்பன் தடத்தின் குறைத்தல் குறித்த ஒப்பந்தங்களில் பங்கேற்பது நாம் அறிந்ததுதான். (ஒரு நிறுவனத்தின் அல்லது நாட்டின் கார்பன் தடம் அதன் பைங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை அளவிடும்). ஆனால், “பாரிஸ் ஒப்பந்தங்கள்”, “கியோட்டோ ப்ரோடோகால்” போன்ற இந்த ஒப்பந்தங்கள் வெறும் வெறும்பேச்சுதான். உலகளாவிய பைங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை இவை குறைப்பதில்லை. ஏனென்றால், இத்திட்டங்களுக்கு “கட்டுப்படும்” நாடுகளின் நிறுவனங்கள் அவர்களின் கார்பன் தடத்தைக் குறைக்கும் பெயரில், உலகின் கார்பன் உறிஞ்சி பகுதிகளை (carbon sinks) தனியார்மயப்படுத்தி அதை கார்பன் கிரெடிட்களாக (carbon credits) மாற்றி அவற்றை வர்த்தகம் செய்கின்றன. இதை வைத்து இந்நிறுவனங்கள் அவர்களின் உற்பத்தி முறையை மாற்றாமலே அவர்களின் கார்பன் தடத்தைக் குறைத்ததாக காட்டிக்கொள்கின்றன!

ஏன் இந்த விவகாரத்தில் அவர்கள் இதைப் போன்ற குறுக்குவழியை பின்பற்றுகிறார்கள்? முதலாளித்துவத்தை இயக்கும் எரிபொருள் இலாபவெறி மட்டுமே, சூழலியல் மீதான அக்கறையோ, மனிதர்கள், உயிரினங்கள் மீதான அக்கறையோ அதற்கு நேரெதிரானது!!

வளர்ச்சி என்ற பெயரில் செய்யப்படும் உட்கட்டமைப்புத் திட்டங்கள்:

“இத்துயரச் சம்பவம் சரியாக எப்போது நிகழும் என்று யாராலும் கணித்திருக்க முடியாது; ஆனால், இது என்றாவது ஒருநாள் நிகழும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்” என்று இப்பேரிடரை குறித்து “நேபாளி டைம்ஸ்” எழுதியுள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் மிகவும் பலவீனமான அம்மலையைக் குடைந்தது, பல்வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நேபாள, இந்திய, சீன அரசுகளுக்கு அம்மலையின் பலவீனத்தன்மையும் இத்திட்டங்களின் விளைவும் நன்றாகத் தெரியும். இருப்பினும், நேபாளத்தில் ஆறுகளை ஒட்டி சாலைகளும், குடியிருப்புகளும், புனல்மின் நிலையங்களும் கட்டப்படுகின்றன. இதனால், மக்கள் ஆபத்தான பகுதிகளில் குவிக்கப்படுகின்றனர். நேபாளத்தின் இப்பேரிடரை ஆய்வு செய்தவர்களில் பலர், அங்கு பல ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள்தான் இப்பேரிடரில் பெருமளவில் நிகழ்ந்த உயிர் இழப்புகளுக்கான காரணம் என்று கூறுகின்றனர்.

நேபாளத்தின் புனல் மின்நிலையம்

இமயமலைத்தொடரில் வசித்த முந்தைய தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் பெரும்பாலும் தங்களது குடியிருப்புகளை ஆற்றிலிருந்து விலகி, உயரமான பகுதிகளில் அமைத்தனர். வெள்ள அபாயத்தை கருத்தில் கொண்டுதான் அவர்கள் இதைச் செய்தனர். அவர்கள் கட்டிய பாலங்கள் கூடத் தற்காலிகமானவையாகவே இருந்தன; பருவமழை காலத்திற்குப் பிறகு அவற்றை மீண்டும் கட்டும் வகையிலேயே அவை கட்டப்பட்டிருந்தன. ஆனால், இன்று நிலை முற்றிலும் மாறியுள்ளது. ஆறுகளை ஒட்டி சாலைகள் அமைக்கப்படுகின்றன; அத்துடன் கடைகள், சந்தைகள், குடியிருப்புகள் உருவாகின்றன. வெள்ளங்கள் நிகழும்போது மக்களின் குடியிருப்புகளும் பணியிடங்களும் அவற்றின் பாதைகளில் வருகின்றன; இதனால் மக்கள் அவர்களின் குடியிருப்புகளிலும் பணியிடங்களிலும் கொல்லப்படுகின்றனர்.

ஏன் சாலைகள் ஆறுகளை ஒட்டியே கட்டப்படுகின்றன? இங்கு நாம் ஒன்றை  தெரிந்துகொள்ளவேண்டும்: இவை வெறும் சாதாரண சாலைகள் அல்ல, சரக்கு போக்குவரத்தை அதிகரிப்பதற்காக அமைக்கப்பட்ட அகலமான, நீண்ட நெடுஞ்சாலைகளாகும். உயரமான பகுதிகளில் சிறிய சாலைகளைதான் கட்டமுடியும். இவை அப்பகுதிகளின் மக்களுக்கான போக்குவரத்துக்கு பயனுள்ளதாக இருந்தாலும், சரக்குப் போக்குவரத்துக்கு பயனற்றதாகும். சரக்குப் போக்குவரத்துக்கான சாலைகளை இமயமலையின் புவியியலில் பள்ளத்தாக்குகளில், ஆறுகளை ஒட்டி மட்டும்தான் கட்டமுடியும். இந்நெடுஞ்சாலைகள் பெரும்பாலும் நேபாளத்திலிருந்து சரக்குகளை ஏற்றுமதி செய்யவும், நேபாளத்துக்கு சரக்குகளை இறக்குமதி செய்யவும்தான் பயன்படுத்தப்படுகின்றன. நேபாளத்தின் மக்கள் இவற்றை போக்குவரத்துக்கு பெரிதளவில் பயன்படுத்துவதில்லை.

இந்நெடுஞ்சாலைகள் ஏற்படுத்தும் ஆபத்தை பல தலைமுறைகளாக மலைப்பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் நன்றாகவே அறிவார்கள். இருப்பினும் அவர்கள் மலைப்பகுதிகளை வெளியேறி அவர்களின் குடியிருப்புகளை நெடுஞ்சாலைகளை ஒட்டி மாற்றுவது ஏன்? ஏனெனில், அவர்களின் அற்ப சொற்ப வேலைவாய்ப்புகள் இந்நெடுஞ்சாலைகளை ஒட்டி மட்டுமே உருவாகின்றன.

இந்நெடுஞ்சாலைகளை கட்டும் பணியில் அவர்களில் பலர் கட்டுமானத் தொழிலாளர்களாக இணைகிறார்கள். இப்பணியிடங்களுக்கு மலைப்பகுதிகளிருந்து சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாததனால் (கட்டப்படாததனால்), அவர்கள் அவர்களின் குடியிருப்புகளை இந்நெடுஞ்சாலைகளை ஒட்டியே அமைக்குமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். கூடுதலாக, நேபாளத்தில் “சாலையோர வளர்ச்சி” (ribbon development) தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, கடைகள், சந்தைகள், வணிகங்கள் அனைத்தையும் தனியார் நிறுவனங்கள் நேபாளத்தின் முக்கியமான வர்த்தகப் போக்குவரத்து சாலைகளை ஒட்டியே திறக்கின்றன. ஏனெனில், இதுதான் அவர்களுக்கு மலிவாக இருக்கின்றது. மலைப்பகுதிகளில் மக்களின் பாரம்பரியக் குடியிருப்புகளுக்கு நெருக்கமாக அவர்களின் வணிகங்களை திறந்தால், அவர்கள் இணைப்புச் சாலைகள், நீர் இணைப்புகள், மற்றும் மின்சாரக் கட்டமைப்புகளைக் கூடுதலாக அமைக்க வேண்டியிருக்கும். நெடுஞ்சாலைகளை ஒட்டி அவர்களின் வணிகங்களை திறப்பதால் அவர்கள் இச்செலவுகளை மேற்கொள்வதில்லை. ஆனால், இதனால் நேபாளத்தில் வேலைக்கு திண்டாடும் மக்கள் இந்நெடுஞ்சாலைகளை அவர்களின் பணியிடங்களாகவும் அவர்களின் குடியிருப்புகளாகவும் வேறு வழி இல்லாமல் ஏற்றுக்கொள்கின்றனர். நேபாளத்தில் நிகழ்ந்துள்ள இந்த பேரழிவு இதன் விளைவுதான்.

இச்சாலைகள் மூலமாக நேபாளம் இஇலாபம் பெறுவதில்லை. ஏனெனில், நேபாளம் ஒரு நிகர இறக்குமதியாளராகும். இருப்பினும் அது எதற்காக இச்சாலைகளை கட்டுகிகிறது?

நேபாளத்தில் நெடுஞ்சாலைகளை அமைப்பது அதன் இறக்குமதியாளர்களுக்கு இலாபகரமானது என்பதால்தான். இந்தியாவும் சீனாவும் நேபாளத்தின் மிகப்பெரிய இறக்குமதியாளர்களாக உள்ளன; இவர்களை உள்ளிட்டு அர்ஜெண்டினா மற்றும் அமெரிக்கா போன்ற பிற நாடுகளும் நேபாளத்திற்கு கணிசமான அளவில் பொருட்களை இறக்குமதி செய்கின்றன. இவர்களின் இலாபவெறியின் அடிப்படையில்தான் நேபாளத்தில் ஆறுகளை ஒட்டி அபாயத்தை ஏற்படுத்தும் நெடுஞ்சாலைகள் கட்டப்படுகின்றன. அதாவது, இச்சாலைகளை கட்டுவதா இல்லையா என்பதை நேபாளத்தின் அரசு முடிவு செய்வதில்லை, ஏகாதிபத்தியப் பன்னாட்டுப் பெருநிறுவனங்கள்தான் இம்முடிவை எடுக்கிறார்கள். 2023-இல் நேபாளத்துக்கு இச்சாலைகளை கட்டுவதற்கு உலக வங்கி 275 மில்லியன் டாலர் நிதியுதவியை வழங்கியுள்ளது. இது உண்மையில் வெறும் நிதியுதவி அல்ல; இது அந்த சாலைகளை அமைப்பதற்கான ஒரு உத்திரவு!

நேபாளத்தின் புனல்மின் திட்டங்களும் பன்னாட்டு முதலீட்டுடன்தான் செயல்படுத்தப்படுகின்றன. இமயமலையில் நிகழ்ந்துவரும் தொடர் காலநிலைப் பேரிடர்கள் நேபாளத்தின் புனல்மின் நிலையங்களை மீண்டும் மீண்டும் அழிக்கின்றன. ஒவ்வொரு முறையும் இந்நிலையங்களில் பணிபுரியும் ஊழியியர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்படுகின்றனர். ஆனால், இதனால் ஏற்படும் நிதி இழப்புகளை அந்த பன்னாட்டு நிதி வழங்குநர்கள் எதிர்கொள்வதில்லை. மாறாக, நேபாளத்தின் பொருளாதாரமே இந்தச் சுமையை தாங்குகிறது.

இந்நிலையங்கள் எப்படி கட்டப்படுகின்றன? நேபாளத்தின் முந்தைய தலைமுறைகள் எப்படி பாலங்களை இமயமலையின் புவியியல் நிலையை கருத்தில் குறித்து கட்டினார்களோ, அதற்கு முற்றிலும் நேரெதிராக திரிசூலி ஆற்றுப்படுக்கையை அழித்து, அந்த ஆற்றின் பாதையை மாற்றி, இமயமலையின் நிலையற்றதன்மையை (fragility) மேன்மேலும் தீவிரப்படுத்தும் வகையில் இந்நிலையங்கள் கட்டப்படுகின்றன. ஏனென்றால், இந்நிலையங்களை அமைப்பதற்கு இதுவே மிகக் குறைந்த செலவு பிடிக்கும் வழியாகும். இதன் விளைவாகவும் காலநிலை பேரிடர்களின் நிகழ்விடங்களிருந்து விலகியிருந்த நேபாள மக்கள், இந்நிகழ்விடங்களுக்கு உள்ளே குவிக்கப்படுகின்றன.

ஒரு காலத்தில் நாளுக்கு சுமார் 10-16 மணிநேர மின்வெட்டுகளை எதிர்கொண்ட மக்களுக்கு நேபாளத்தின் புனல்மின் நிலையங்கள் தடையற்ற மின்வாரியத்தை கொண்டுவந்தது உண்மைதான். ஆனால், தற்போது நேபாளம் அதன் உள்நாட்டு தேவையை விட அதிகமாகவே புனல் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. அங்கே புனல்மின் உற்பத்தியின் அளவு இப்போது தெளிவாகவே ஆபத்தான நிலையிஇல் இருக்கும்போது, அது ஏன் இரத்து செய்யப்படவில்லை? ஏனென்றால், அங்கே புனல் மின்சாரத்தை உற்பத்தி செய்வது அரசல்ல; தனியார் நிறுவனங்கள்தான். இந்நிறுவனங்கள் தோற்றத்தில் மட்டும்தான் நேபாள நிறுவனங்கள். உண்மையில் இவர்களுக்கு பிரதானமாக மூலதனத்தை செலுத்துவதும், இவர்களின் லாபத்திலிருந்து மிகப்பெரிய பங்கை எடுத்துக்கொள்வதும் பன்னாட்டு ஏகாதிபத்திய முதலீட்டாளர்கள்தான்.

குறிப்பாக, சீனாவின் மின் கட்டுமானக் கழகம் (Power Construction Corporation) மற்றும் எக்ஸிம் வங்கியும் (Exim Bank), இந்தியாவின் தேசியப் புனல்மின் கழகம் (National Hydropower Corporation) மற்றும் SJVN லிமிட்டெடும், கொரியா தென்கிழக்கு மின்சாரமும் (Korean South-East Power), நேபாளத்தின் பல புனல்மின் நிலையங்களுக்கு பிரதனமான முதலீட்டை அளித்து, இலாபத்தை சுரண்டுகின்றன. கூடுதலாக, உலக வங்கி மற்றும் ஆசியா வளர்ச்சி வங்கி போன்றவை நேபாள வங்கிகளுக்கு மூலதனத்தை அளித்து, அதை குறிப்பாக புனல்மின் திட்டங்களுக்கு கடனாகக் கொடுக்குமாறு உத்திரவிடுகின்றன. இதற்கு ஈடாக அவர்கள் மிகப்பெரிய வட்டி விகிதத்தை வசூலித்து இலாபம் ஈட்டுகின்றன. சீனாவும் இந்தியாவும் இன்னொரு வகையிலும் இதனால் இலாபம் ஈட்டுகின்றன: உள்நாட்டில் அதிக செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குப் பதிலாக, நேபாளத்தில் மலிவான செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதே மின்சாரத்தை இறக்குமதி செய்கின்றன. இவ்வகைகலில் இத்தகைய ஏகாதிபத்திய, தரகு முதலாளித்துவ கும்பல்களின் நலன் நீடித்திருக்கும்வரை, அவர்கள் நேபாளத்தின் புனல்மின் நிலையங்களிருந்து இலாபத்தை ஈட்டும் வரை, அவர்கள் அவற்றை இரத்து செய்ய விடமாட்டார்கள்.

தற்போது நேபாளத்தில் காணாமல் இருப்பவர்களில் கிட்டத்தட்ட 1,400 பேர் புனல்மின் நிலையங்களின் நிலத்தடி சுரங்கப்பாதைகள் உள்ளே சிக்கியிருக்கின்றனர். ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் வழியிலான உற்பத்தி மறுவுற்பத்தி முறை மக்களை ஆபத்தான இடங்களில் எப்படிக் குவித்து, ஒரு பேரழிவுக்குக் காரணமாய் அமைகிறது என்பதற்கு இது சிறந்த சான்று! இவர்களை மீட்டெடுப்பதற்கான மீட்புப் பணிக்கு உலக வங்கியும் ஆசியா வளர்ச்சி வங்கியும் நிதியுதவி அளித்துள்ளன (இது அவர்களுக்கு பிச்சைக்காசுதான்). ஆனால், இச்சூழலை ஏற்படுத்தியதே அவர்களின் திட்டங்கள்தான்.

எனவே, எந்த வகையில் பார்த்தாலும், இலாபவெறியை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஏகாதிபத்திய உற்பத்தி மறுஉற்பத்தி முறைதான் நேபாளத்தின் இப்பேரிடரை ஏற்படுத்தியுள்ளது. பனிப்பாறைகளைத் தக்கவைக்கும் உராய்வைத் தளர்த்துவிடும் உறைபணியை உருகவைக்கும் புவி வெப்பமாதலைத் தீவிரப்படுத்தியதும் இம்முறைதான். இமயமலையின் இயல்பான நிலையற்றத்தன்மையை இலாபத்துக்காக மேன்மேலும் மோசமாக்கி, நேபாளத்தின் உழைக்கும் மக்களை வெள்ள ஆபத்துப் பகுதிகளில் கட்டாயமாகக் குவிப்பதும் இம்முறைதான். எனவே, இம்முறையை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியாமல், எதிர்காலத்தில் நேபாளத்தில் இதைப்போன்ற பேரிடர்களை தடுக்கமுடியாது.

  • சந்தோஷ்

தகவல் ஆதாரங்கள்:

https://minnambalam.com/nepal-disaster-the-warning-sounded-by-himalayan-floods/

https://internationalviewpoint.org/The-crisis-in-Nepal-climate-crisis-capitalism-and-the-political-economy-of-the

https://nepalitimes.com/not-if-but-when-next

https://www.bbc.com/news/articles/cly464k252yo

https://monthlyreview.org/articles/climate-imperialism-in-the-twenty-first-century/

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன