பசுமை இந்தியா இயக்கம் (GIM):
காடுகளை அழித்து மக்களை ஏதிலிகளாக்கும் திட்டம்!

ஆகஸ்ட் 25, 2026
பசுமை இந்தியா இயக்கத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த CAG, கடந்த பத்தாண்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளில் பெரும்பகுதி நிறைவேற்றப்படாததை அம்பலப்படுத்தியுள்ளது. ஆனால் இதை வெறும் நிர்வாகத் தோல்வியாக மட்டும் பார்க்க முடியாது. ஒருபுறம் காடுகளைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டே, மறுபுறம் சுரங்கம், தொழில் மற்றும் கட்டமைப்புத் திட்டங்களுக்காக காடுகளை அழித்து பழங்குடி மக்களை வெளியேற்றும் அரசின் வளர்ச்சிக் கொள்கைகளே இந்தத் தோல்விக்குப் பின்னால் உள்ளன.

இந்தியாவின் காடுகளை மீட்டெடுத்து, அவற்றின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட பசுமை இந்தியா இயக்கத்தை (Green India Mission – GIM) இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) 2015–16 முதல் 2024–25 வரை ஆய்வு செய்து, 12 ஆகஸ்ட் 2026 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஒன்றிய அரசு கடந்த பத்தாண்டுகளில் இவ்வியக்கம் தொடங்கப்பட்ட போது நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளில் 97.57 சதவீதத்தை நிறைவேற்றவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது.

பசுமை இந்தியா இயக்கம் என்பது இந்தியாவின் காலநிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டத்தின் (NAPCC) எட்டு இலக்குகளில் ஒன்றாகும். இவ்வியக்கம் தொடங்கப்பட்ட போது, அதன் ஆவணங்களில் சில இலக்குகளை நிர்ணயித்திருந்தது. அவை: 50 இலட்சம் ஹெக்டேர் வனப் பரப்பை அதிகரிப்பது, ஏற்கனவே உள்ள வனப் பரப்பிலிருந்து 50 இலட்சம் ஹெக்டேர் அளவுக்கு அதன் தரத்தை மேம்படுத்துவது, வனப் பரப்பை அதிகரிக்கும் போது அவ்வனத்தைச் சார்ந்த சுமார் 30 இலட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, உயிரியல் பன்முகத்தன்மையைப் (biodiversity) பாதுகாத்தல், நீர்வளத்தையும் நீரியல் சார்ந்த சூழலியல் சேவைகளையும் (water/hydrological services) மேம்படுத்துதல், உயிர்ப்பொருள் வளத்தைப் பெருக்குதல் மற்றும் வளிமண்டலத்தில் உள்ள கார்பனைத் தாவரங்கள் உறிஞ்சி சேமிக்கும் திறனை அதிகரித்தல் (biomass & carbon sequestration) ஆகியவற்றின் மூலம் வனச் சூழலமைப்புகள் வழங்கும் சூழலியல் சேவைகளை (ecosystem services) வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இலக்குகளில் தான் 97.57 சதவீதத்தை நிறைவேற்றவில்லை என்று இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) கூறியுள்ளார். மேலும், பசுமை இந்தியா இயக்கத்தை செயல்படுத்துவதில் பிற அரசுத் திட்டங்களுடன் போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது, தேவையான அளவு நிதி கிடைக்காதது, திட்டத்தின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிக்கும் அமைப்பிலுள்ள குறைபாடுகள் ஆகியவற்றின் காரணமாகத் திட்டம் தோல்வியடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

CAG அறிக்கை நிர்வாகக் குறைபாடுகளை மட்டும் சுட்டிக்காட்டி, தனது கடமையை முடித்துக்கொண்டது. அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டிய அரசின் (நிரந்தரமான அமைப்பு) செயல்பாடு பற்றியோ, அரசாங்கத்தின் (மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது) செயல்பாடு பற்றியோ பேசாமல், தனக்குத் தானே வாய்ப்பூட்டுப் போட்டுக்கொண்டது. எனவே, அறிக்கையில் பேசப்படாத பொருளைப் பற்றி நாம் இனி பேசுவோம்.

தணிக்கை செய்யப்பட்ட 2015–2025 ஆண்டுகளில் மோடி அரசாங்கம் இருந்தது. இன்னும் சொல்லப்போனால், 2029 ஆண்டு வரை அவர்தான் அரசை வழிநடத்துவார் என்பது தெளிவு. பசுமை இந்தியா இயக்கத்தின் ஆரம்ப கால இலக்குகளை நிறைவேற்ற அவசியமின்றி, இக்கால கட்டத்தில் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் சுரங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லையா? இயற்கை வளங்களைப் பாதுகாப்பாகவும், எளிதாகவும் கொண்டு செல்வதற்கு வசதியாகச் சாலைகள் அமைக்கப்படவில்லையா? நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் இதுபோன்ற நாசகரத் திட்டங்களுக்காகக் காடுகள் அழிக்கப்படவில்லையா? காலகாலமாக அக்காட்டில் வாழும் பூர்வகுடிகள் விரட்டியடிக்கப்பட்டு ஏதிலிகளாக்கப்படவில்லையா? இவற்றைப் பற்றியெல்லாம் CAG அறிக்கை பேச மறுப்பது ஏன்?

நாட்டின் வளர்ச்சிக்காக மக்களைப் பலியிடலாம். அதைப்பற்றி மோடி அரசாங்கம் கவலைப்படத் தேவையில்லை; ஏனென்றால், CAG அறிக்கையில் இவை குறித்து இடம்பெறத் தேவையில்லை. அப்படியென்றால் பசுமை இந்தியா இயக்கம் யாருக்கான திட்டம்?

பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும், உள்நாட்டுத் தரகு முதலாளிகளும் இயற்கை பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் பெயரில் அனுமதியளிப்பதை அரசாங்கத்தின் கொள்கை முடிவாக அறிவிப்பதற்கு ஏதுவாகவும், இதன் விளைவாக மக்கள் பாதிக்கப்படும் போது, அரசாங்கத்திற்கு எதிராகப் போராடாமல் இருப்பதை உத்தரவாதப்படுத்துவதற்காகவும், ஒருவேளைப் பாதிக்கப்படும் மக்கள் அதையும் மீறிப் போராடினால், போலீசையும், துணை இராணுவத்தையும் கொண்டு அடக்கி ஒடுக்குவதற்குக் கேடயமாகவும் தான் பசுமை இந்தியா இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் மோடி அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளையும், அரசு அதனைச் செயல்படுத்திய இலக்கணத்தையும் பார்த்தால் இன்னும் துலக்கமாகப் புரிந்துகொள்ள முடியும்.

2030-ஆம் ஆண்டுக்குள், கூடுதலாக வனம் மற்றும் மரங்களின் பரப்பை உருவாக்குவதன் மூலம் கூடுதலாக 250 கோடி முதல் 300 கோடி டன் அளவிலான கார்பனை உறிஞ்சும் இயற்கைத் திறனை உருவாக்குவதாக பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இந்தியா வாக்குறுதியளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு மாறாக, வேலைவாய்ப்பு என்று கூறி அதிகளவில் கார்பனை உமிழும் ஆலைகளுக்கு அனுமதியளிப்பதும், நாட்டின் வளர்ச்சி என்று கூறி இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிப்பதும் தொடர்கின்றன. இதனால் ஒருபுறம் உமிழப்படும் கார்பன் அளவு அதிகரித்துக்கொண்டும், மறுபுறம் கார்பனை உறிஞ்சுவதற்கு இயற்கையின் கொடைகளான வனங்களையும், மரங்களையும் அழிப்பதும் தொடர்கின்றன.

பசுமை இந்தியா இயக்கத்திற்கு முரணான மற்றொரு உதாரணம் E20 திட்டம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிபொருள் இறக்குமதி குறைப்பு, விவசாயிகள் நலன் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் E20 திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கோ, விவசாயிகளுக்கோ நன்மை கிடைக்கவில்லை. எரிபொருள் இறக்குமதி குறைப்பு என்பது கூட கண்துடைப்பு நாடகம் தான். ஆனால் இத்திட்டத்தின் மூலம் இலாபமடைந்த அரசியல்வாதியையும், பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றியும் செங்கனல் இணையதளத்தில் கட்டுரைகள் ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ளன. அதனை வாசகர்கள் படித்துத் தெரிந்துகொள்ளவும்.

இதில் குறிப்பாக ஜூன் 2018-இல், மோடி அரசாங்கம் தனது ‘உயிரி எரிபொருள் மீதான தேசியக் கொள்கையை’ (National Policy on Biofuels) அறிவித்ததுடன், 2030-ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 சதவீத எத்தனாலைக் கலக்கும் இலக்கையும் நிர்ணயித்தது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு ஐந்தாண்டுகளுக்கு முன்னதாகவே, அதாவது ஜூலை 2025-இல் இந்தியா 20 சதவீத எத்தனால் கலப்பு இலக்கை அடைந்துவிட்டது.

ஒருபுறம் 2030-ஆம் ஆண்டுக்குள், கூடுதலாக வனம் மற்றும் மரங்களின் பரப்பை உருவாக்கி கார்பன் உறிஞ்சுதிறனை அதிகப்படுத்துவதான திட்டத்தில் 2.47 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றியுள்ளது. மறுபுறம் 2030-ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 சதவீத எத்தனாலைக் கலக்கும் இலக்கை ஐந்தாண்டுகளுக்கு முன்னதாகவே அடைந்துவிட்டது. இந்த இரண்டு திட்டங்களின் மூலம் இலாபம் அடைந்த முதலாளிகளைப் பற்றியோ, பாதிப்படைந்த ஏழை-எளிய மக்களைப் பற்றியோ ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, CAG அறிக்கை என எதுவும் வாய் திறக்கவில்லை.

அதேபோல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் — தற்போது VB-G RAM G எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் கிராமப்புற மக்களுக்கு ஊதிய உத்தரவாதத்துடன் வேலை வழங்கப்படுகிறது. இதனை மரக்கன்றுகள் நடுவதற்கும், நிலத்தை மீட்டெடுக்கும் பணிகளுக்கும் பயன்படுத்தலாம் என்ற முறையில் இந்தத் திட்டத்துடன் பசுமை இந்தியா இயக்கம் இணைந்து செயல்படுவதற்கு திட்டமிட்ட ஒருங்கிணைப்பு நடைபெறவில்லை என்று CAG அறிக்கை கூறுகிறது.

கடந்த நிதியாண்டில் MGNREGA க்காக 93,850 கோடியைச் செலவு செய்துள்ளது. இதில் 85,333 கோடியை (90%) ஒன்றிய அரசும், 8,500 கோடியை மாநில அரசுகளும் (10%) செலவளித்துள்ளன. VB-G RAM-G இன்படி, ஒன்றிய அரசின் பங்கு 56,310 கோடியாகக் (60%) குறைந்தும், மாநில அரசுகளின் பங்கு 37,450 கோடியாக (40%) அதிகரித்தும் இருக்கும்.

MGNREGA சட்டத்தின்படி, வருடத்திற்கு 100 நாள் வேலை கொடுக்க வேண்டியது ஒன்றிய அரசினுடைய பொறுப்பு. ஆனால் இன்றுவரை காங்கிரஸோ அல்லது பாஜகவோ சராசரியாக வருடத்திற்கு 60 நாள் வேலையைக் கூட வழங்கியதில்லை. மேலும் கடந்த பத்து வருடங்களாக இதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து 100 நாள் வேலை கொடுப்பதை உத்தரவாதப்படுத்துவதற்குப் பதிலாக, இத்திட்டத்திற்கான நிதியைக் குறைத்து வந்துள்ளன.

கோடிக்கணக்கான கிராமப்புற மக்களுக்குக் குறைந்தபட்ச வருவாயை உத்தரவாதப்படுத்திய ஒரு திட்டத்தை ஒழித்துக்கட்ட வேண்டியதன் அவசியம் குறித்து CAG அறிக்கை வாய் திறக்கவில்லை. மாறாக, இந்தத் திட்டத்தைப் பசுமை இந்தியா இயக்கத்துடன் ஒருங்கிணைக்கப்படாததால் பசுமை இந்தியா இயக்கம் தோல்வியடைந்துவிட்டதாம். தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் கொள்கையால் காய்ந்து கிடக்கும் ஏழை, எளிய உழைக்கும் மக்களை ஏமாற்றுவதற்கான மற்றுமொரு திட்டம் பசுமை இந்தியா இயக்கம் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

  • மகேஷ்

செய்தி ஆதாரம்:

https://cag.gov.in/webroot/uploads/download_audit_report/2026/4-of-2026-Eng-06a82acec6ac374.65754275.pdf

https://www.thehindu.com/news/national/cag-audit-flags-major-gaps-in-green-india-mission-implementation/article71346191.ece

https://www.thehindu.com/opinion/editorial/losing-forest-for-trees-on-the-cags-audit-of-the-green-india-mission/article71356794.ece?utm_campaign=mrf-whatsapp-The+Hindu+News&utm_source=whatsapp&utm_medium=social&mrfcid=202608186a83cc2aca7b7a27e9c984ae

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன