சுற்றுச்சூழல் அழிவுக்கு வித்திடும் ‘பொதுமன்னிப்பு’!
முதலாளிகளுக்காக விதிகளைத் தளர்த்திய மோடி அரசு
பன்னாட்டு முதலாளிகள் நமது நாட்டிற்குள் தங்கள்து மூலதனத்தைக் கொண்டு வந்து தொழில் செய்வதை எளிதாக்குவது (Ease of doing business) என்ற பெயரில் தொழிலாளர் நலச் சட்ட திருத்தம், ஒற்றைச் சாளர முறையில் அனுமதி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு விதிகளைத் தளர்த்துவது உள்ளிட்ட பல சலுகைகளை ஒன்றிய அரசு அமுல்படுத்திவருகிறது. இதன் காரணமாக தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டாலும், சிறு குறு தொழில்கள் நசிந்தாலும், சுற்றுச் சூழல் நாசமடைந்து பல்லுயிர்ப் பாதுகாப்பே கேள்விக் குறியானாலும் பரவாயில்லை எங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் அந்நிய மூலதனம் தான் முக்கியமானது என இந்திய ஆட்சியாளர்கள் குறியாக நிற்கின்றனர்.
அவ்வாறு சுற்றுச்சூழலை அழித்து பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது தொழில்களைத் தொடங்க வசதியாக, ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்திருந்த “அலுவலகக் குறிப்பாணை” ஒன்றை உச்சநீதிமன்றம் சமீபத்தில் இரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, சென்ற மாத இறுதியில் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு, முதலாளிகள் முதலில் கட்டுமானத்தை முடித்துவிட்டு பின்னர் அதையே காரணமாகக் காட்டி சுற்றுச்சூழல் அனுமதியை பெறுவதற்கு குறுக்குவழி ஏற்படுத்திக் கொடுத்த ஒன்றிய அரசின் 2021ஆம் ஆண்டுக் அலுவலகக் குறிப்பாணையை இரத்து செய்தது.
அதே சமயம் இந்தக் குறுக்குவழியை உச்சநீதிமன்றம் முற்றிலுமாக மூடவில்லை. முதலாளிகள் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டுமானங்களை முடித்துவிட்டு பின்னர் அனுமதி பெற்றுக் கொள்வதற்குச் சில நிபந்தனைகளை விதித்து வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
2006ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை
இந்தியாவில் தொடங்கப்படும் எந்தவொரு புதிய தொழிற்சாலைக்கும், தொழிற்துறைத் திட்டங்களுக்கும், அல்லது பெரிய விரிவாக்கங்களுக்கும் முன் கூட்டியே சுற்றுச் சூழல் அனுமதி பெறுவதை கட்டாயமாக்கி, 2006ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை (EIA Notification) கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் திட்டங்கள் குறித்துப் பரிசீலிக்கும் போது அவை எவ்வளவு முதலீட்டில் தொடங்கப்படுகின்றன என்று பரீசிலிப்பதற்கு பதிலாக அவை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் அபாயத்தின் அடிப்படையில் பரிசீலிக்க இது வலியுறுத்தியது.
இதன்படி திட்டங்கள் இரண்டாக வகைப்படுத்தப்பட்டன. பெரிய அணைகள், பெரிய சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள் போன்ற பெரிய அளவிலான, சுற்றுச்சூழல் மீது அதிக தாக்கம் ஏற்படுத்தும் திட்டங்கள், ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் மூலம் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும். சிறிய அல்லது குறைவான தாக்கம் ஏற்படுத்தும் திட்டங்களுக்கு அந்தந்த மாநில அரசுகளிடமிருந்து சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும்.
அவ்வாறு அனுமதி பெறுவது என்பது நான்கு கட்டங்களாக நடைபெறும். முதலில் இந்தத் திட்டங்களினால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அடுத்ததாக வல்லுநர் குழு அதனை ஆய்வு செய்ய வேண்டும். மூன்றாவதாக முக்கியமாக அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் இடங்களில் வசிக்கும் உள்ளூர் மக்களிடமும், இதனால் பாதிக்கப்படும் மக்களிடமும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி அவர்களது குரலைப் பதிவு செய்ய வழி ஏற்படுத்த வேண்டும். இறுதியாக வல்லுநர் குழுவின் பரிந்துரை மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மக்களின் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்படவோ அல்லது நிராகரிக்கப்படவோ வேண்டும்.

இதில் கருத்துக் கேட்புக் கூட்டம் என்பது கண்துடைப்புதான் என்றாலும், தங்களது ஊரில் இப்படி ஒரு திட்டம் வரப்போகிறது என்ற விசயமாவது மக்களுக்குச் சென்று சேர்வதற்கும் அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், குறைந்தபட்சம் அது உதவியது.
ஆனால் இந்த நடைமுறை, எவ்வித சுற்றுச்சூழல் அனுமதியும் இல்லாமல், மக்களின் எதிர்ப்புகளைக் கண்டுகொள்ளாமல் தங்களது திட்டங்கள் நிறைவேற வேண்டும் என்ற பெரும் முதலாளிகளின் எண்ணத்திற்கு இடையூறாக இருந்தது. இதையே மோடி அரசின் வார்த்தைகளில் சொன்னால், தொழில் செய்வதை எளிதாக்குவதற்கு (Ease of doing business) இடையூறாக இருந்தது.
2017ஆம் ஆண்டு அறிவிக்கை
2006ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை உருவாக்கிய இடையூறுகளைச் சமாளிப்பதற்கு மோடி அரசு 2017ஆம் ஆண்டு ஒரு அறிவிக்கையை வெளியிட்டது. அது ஒரு முறை வழங்கப்படும் பொது மன்னிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டுமானங்களைத் தொடங்கிய திட்டங்களுக்கு அவை ஏற்படுத்திய விதிமீறல்களை ஒப்புக்கொள்ள ஆறுமாத கால அவகாசம் வழங்கப்பட்டது.
அறிவிக்கை வெளியான தேதியிலிருந்து ஆறுமாத காலத்திற்கு முன்னதாக சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டுமானங்களைத் தொடங்கிய நிறுவனங்கள், மீண்டும் விண்ணபித்து அதனை வாங்கிக் கொள்ளலாம் என அது கூறியது. அந்த நிறுவனங்கள், தேவையான சுற்றுச்சூழல் மதிப்பீடுகளை முடித்திருக்க வேண்டும். மக்களுக்கு இழப்பீடு வழங்குவதையும், சுற்றுச்சூழல் தாக்கத்திற்கு மாற்றுச் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்றும் அது நிபந்தனை விதித்தது.
அதாவது முன் கூட்டியே அனுமதி பெற்று அதன் பிறகு கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்குப் பதிலாக கட்டுமானப் பணிகளை முதலில் தொடங்கிவிட்டு ஆறுமாத காலத்திற்குப் பிறகு அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கு இந்த அறிவிக்கை வழிசெய்தது. அதுமட்டுமன்றி இந்தத் திட்டங்களில் செய்யப்பட்ட பெரும் முதலீடுகளைக் காட்டி சுற்றுச்சூழல் அனுமதியை வழங்குவதையும் இந்த அறிவிக்கை எளிமையாக்கியது.
2021ஆம் ஆண்டுக் அலுவலகக் குறிப்பாணை
2017ஆம் ஆண்டு அறிவிக்கை ஒரு முறை மட்டும் வழங்கிய வசதியை நிரந்தரமாக்கும் வகையில் 2021ஆம் ஆண்டு ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒரு அலுவலகக் குறிப்பாணையை அனுப்பியது. இதன் மூலம் எந்த ஒரு திட்டமும் அது எப்போது தொடங்கப்பட்டிருந்தாலும், அதற்கு எப்போது வேண்டுமானாலும் சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்ற வசதியை அது உருவாக்கிக் கொடுத்தது.
குறிப்பாகச் சொன்னால், எந்தவொரு திட்டமும் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டுமானங்களைத் தொடங்குவது மட்டுமன்றி, அவற்றை முடித்து இயக்கத்திற்கும் கொண்டுவரலாம். ஏதாவது பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் மட்டும் சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற புறக்கடை வழியை அது திறந்துவிட்டது.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தைப் பயன்படுத்தி மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட நடத்தாமல் பெரும் திட்டங்களைக் கொண்டு வர இந்த அலுவலகக் குறிப்பாணை பயன்படுத்தப்பட்டது. பின்னர் அதுவே நிரந்தரமான நடைமுறையாக மாற்றப்பட்டது.
இதன்மூலம் மிகப்பெரிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், விமான நிலையங்கள், சுரங்கங்கள், துறைமுகங்கள், தொழிற்சாலைகள், பெரிய அளவிலான ரியல் எஸ்டேட் திட்டங்கள் ஆகியவை கடந்த 5 ஆண்டுகளில் எவ்விதமான சுற்றுச்சூழல் அனுமதியும் இன்றி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
வழக்கும் தீர்ப்பும்
சுற்றுச்சூழல் விதிகளை மீறிய நிறுவனங்களுக்கு, ஒருமுறை மன்னிப்புக் கொடுத்த 2017ஆம் ஆண்டு அறிவிக்கையையும், அதனையே நிரந்தரமாக வழங்கிய 2021ஆம் ஆண்டு அலுவலகக் குறிப்பாணைக்கும் எதிராக வனசக்தி என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. சுற்றுச்சூழல் அனுமதி என்பது பெரும் தொழிற்திட்டங்கள் நாட்டின் இயற்கை வளங்களைப் பாழாக்குவதிலிருந்து பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என வாதிட்ட வனசக்தி அமைப்பு, கட்டுமானங்கள் முடிந்த பிறகு அனுமதி கொடுப்பது என்பது இதற்கு நேரதிரானது எனக் கூறியது.
இதனை விசாரித்த நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு முதலில் 2024ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் அலுவலகக் குறிப்பாணைக்குத் தடை விதித்தது. அதன்பிறகு 2025ஆம் ஆண்டு இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பில் 2017 அறிவிக்கையும், 2021 அலுவலக குறிப்பாணையும் இரண்டும் தடை செய்யப்பட்டுள்ளன. இப்போது இந்த தீர்ப்புகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில் 2021 அலுவலக குறிப்பாணை மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது, 2017ஆம் ஆண்டு அறிவிக்கை தடை செய்யப்படவில்லை.
அத்துடன் இவற்றைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிகளை இரத்து செய்ய முடியாது என்றும் உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலை போன்ற பொது திட்டங்கள் இதனால் பாதிக்கப்படும் என அதற்குக் காரணம் கூறியிருக்கிறது. ஏற்கெனவே கட்டப்பட்ட கட்டுமானங்களை இடிப்பதால் சுற்றுச்சூழல் மேலும் பாதிக்கப்படும் எனவும் அதற்கு நியாயம் கற்பிக்கிறது.
அதுமட்டுமன்றி ‘சுற்றுச்சூழல் பொதுமன்னிப்பு’ (environmental amnesty) என்ற ஒரு புதிய வழியையும் உச்சநீதிமன்றம் திறந்துவிட்டுள்லது. சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதி நிபந்தனைகளை மீறிய திட்டங்களுக்கு, அந்த மீறல் நிகழ்ந்த பின்னரும் சட்ட விதிகளுக்கு இணங்கிச் செயல்படுவதற்கான ஒரு வரையறுக்கப்பட்ட வாய்ப்பை வழங்குவதே இதன் நோக்கம்.
கட்டுமானத்தை இடிப்பது பொதுமக்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் சூழலில், வரி அல்லது ஒழுங்குமுறை தொடர்பான பொதுமன்னிப்புத் திட்டங்களைப் போன்றே, வரையறுக்கப்பட்ட பொதுமன்னிப்பை வழங்க சுற்றுச்சூழல் சட்டம் அனுமதிக்கலாம் என நீதிமன்றம் கூறியிருக்கிறது.
ஆனால் சுற்றுச்சூழல் சட்டம் நிதிச் சட்டத்திலிருந்து அடிப்படையிலேயே வேறுபட்டது. சுற்றுச்சூழல் பாதிப்பு பெரும்பாலும் மீளமுடியாத ஒன்றாகும். அழிக்கப்பட்ட காடுகள், சதுப்பு நிலங்கள் அல்லது கடற்கரைப் பகுதிகளை இழப்பீடு மூலம் மீட்டெடுக்க முடியாது.
சுற்றுச்சூழல் சட்டங்களின் அடிப்படை நோக்கமாக கூறப்படுவது, பாதிப்பு ஏற்பட்ட பிறகு அதற்கு அபராதம் விதிப்பது அல்ல; பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே அதனைத் தடுப்பதுதான். ஒரு தொழிற்சாலை கட்டப்பட்ட பிறகு அது ஏற்படுத்தும் மாசுபாட்டை ஆய்வு செய்வதும், ஒரு காடு அழிக்கப்பட்ட பிறகு அதற்கு இழப்பீடு வழங்குவதும், ஒரு கடற்கரைப் பகுதி சீரழிக்கப்பட்ட பிறகு அதனை மீட்டெடுக்க முயல்வதும், முன்கூட்டியே அந்தப் பாதிப்பைத் தடுப்பதற்கு ஒருபோதும் இணையாகாது. அதனால்தான் சுற்றுச்சூழல் அனுமதி என்பது வெறும் நிர்வாக அனுமதி அல்ல; இயற்கையையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பார்க்கப்பட வேண்டும்.
ஆனால் ஒரு திட்டம் முதலில் கட்டப்பட்டு, பெரும் முதலீடு செய்யப்பட்டு, அதன் பிறகு “இப்போது இதை இடிக்க முடியாது; எனவே விதிமீறலை மன்னித்து அனுமதி வழங்குவோம்” என்ற அணுகுமுறை நிலைபெற்றுவிட்டால், சுற்றுச்சூழல் அனுமதியின் முழு நோக்கமே தலைகீழாகிவிடும்.
இதுவே சுற்றுச்சூழல் பொதுமன்னிப்பு என்ற அணுகுமுறையின் மிகப்பெரிய ஆபத்து. ஒருமுறை விதிமீறலை மன்னிப்பது என்பதை முதலில் கொண்டு வந்து, அதையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய நடைமுறையாக மாற்றியிருப்பது, சட்டத்தை மீறுவதற்கான ஊக்கமாக மாறியிருக்கிறது.
முதலாளிகளுக்கு தொழில் செய்வதை எளிதாக்குவது என்ற பெயரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பைத் தளர்த்துவது, உண்மையில் எதிர்கால தலைமுறைகளின் வாழ்வைச் சிக்கலாக்குவதாகும். இன்று ஒரு நிறுவனத்தின் முதலீட்டை பாதுகாப்பதற்காக ஒரு விதிமீறலை மன்னிக்கலாம்; ஆனால் அழிக்கப்பட்ட ஒரு நதியையும், வெட்டப்பட்ட ஒரு காட்டையும், அழிக்கப்பட்ட ஒரு சதுப்பு நிலத்தையும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் அதே முறையில் “மன்னித்து” மீட்டெடுக்க முடியாது.
எந்த விலையைக் கொடுத்தும் தொழில் முதலீட்டை ஈர்ப்பதே வளர்ச்சி என்ற அரசின் கொள்கையின் காரணமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு பலிகொடுக்கப்படுகிறது. தொழில் தொடங்க விரும்பும் முதலாளிகள் சட்டத்திற்கும் இயற்கைக்கும் உட்பட்டு செயல்பட வேண்டும் என்பதே குறைந்தபட்ச நிபந்தனை. அந்த நிபந்தனையைத் தளர்த்தி, முதலில் விதிமீறுபவர்களுக்குப் பின்னர் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கும் நடைமுறை உருவானால், அதன் விலையை இறுதியில் செலுத்தப்போவது முதலாளிகள் அல்ல — இயற்கையும் மக்களும்தான்
- சந்திரன்

