வெப்பஅலைகள் : உழைக்கும் மக்கள் மீதானப் பேரிடர்!

கோடிக்கணக்கான இந்திய கூலித் தொழிலாளர்கள் இந்திய நகரங்களின் சுட்டெரிக்கும் வெயிலில் தமது உடல் நலத்திற்கும் வருமானத்திற்கும் இடையே ஒரு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இக்கடுமையான வெயிலில் தொடர்ந்து வேலைபார்ப்பதா? அல்லது பட்டினிக் கிடப்பதா என்று போராடுகின்றனர்

கோடைப்பருவம் ஒவ்வொருவருக்கும் சில மறக்க முடியாத நினைவுகளை விட்டுச் சென்றிருக்கும். ஆனால் தற்போது நீண்டுகொண்டு செல்லும் கோடைக்காலத்தின் வெப்பத்திற்குத் தாக்குப்பிடிக்க முடியாமல், எப்போது இந்தக் கோடைப் பருவம் முடிவடையும் என்று வழி தெரியாமல் மக்கள் திணறி வருகின்றனர்.

முன்பெல்லாம் ஏப்ரல், மே மாதங்களில் தொடங்கும் கோடை வெயில் தற்போது பிப்ரவரி மாதத்திலேயே தொடங்கிவிடுகிறது. கடந்த 125 ஆண்டுகளில், சென்ற 2025 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில்தான் அதிக வெப்பம் நிலவியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

இந்திய நகரங்களில் பகல் நேர சராசரி வெப்பநிலை 40° செல்சியஸுக்கு அதிகமாக இருக்கும் நாட்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதே வேளையில், கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய நகரங்களில் இரவு நேரங்களின் குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 0.53°C வரை அதிகரித்திருக்கிறது.

முதலாளித்துவ தொழில்நுட்பப் புரட்சிக்குப் பிறகு புதைபடிவப் பொருட்களை எரிக்கும் விகிதம் அதிகரிப்பதால் புவியின் வெப்பம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. கார்பன் டைஆக்சைடு, மீத்தேன் போன்ற பசுமையில்லா வாயுக்கள் வளிமண்டலத்தில் அதிகப்படியாகக் குவிந்துள்ளதால், அவை வெளியிடும் வெப்ப ஆற்றலின் அளவு நம்மை மலைக்க வைக்கின்றன. 1971 முதல் 2010 வரை பூமி, 274 மில்லியன் பில்லியன் ஜூல் வெப்ப ஆற்றலை உள்வாங்கியுள்ளது என்கிறது ஒரு ஆய்வு.

உலகப்புகழ் பெற்ற காலநிலை விஞ்ஞானியான ஜேம்ஸ் ஹேன்சன், ஒரு வினாடிக்கு பூமியானது நான்கு ஹிரோஷிமா அணுகுண்டுகளுக்குச் சமமான வெப்ப ஆற்றலை 1971 ஆண்டிலிருந்து பெற்று வருவதாகக் கூறுகிறார். இப்படி பசுமையில்லா வாயுக்களால் வெளியிடப்படும் வெப்ப ஆற்றல்கள், கடல்கள் மூலம் உறிஞ்சப்படுகின்றன. இதனால் கடல் நீரின் வெப்பநிலை அதிகமாகிக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் ஆண்டு தோறும் அதிகரிக்கும் வெப்பநிலையை புவி வெப்பமயமாதலின் விளைவு என காலநிலை விஞ்ஞானிகள் கூடக் கூறுவதில்லை. அவர்கள் முதலாளித்துவ சமூகம் உருவாக்கிவரும் வெப்பப் பேரிடரை அம்பலப்படுத்துவதில்லை.

முதலாளித்துவ தொழிற்புரட்சி, அது தோற்றுவிக்கும் சரக்குகள் உற்பத்தி, குவிப்பு மற்றும் பெருநிறுவனங்களின் சுரண்டல் போன்றவற்றால் புவி வேகமாக வெப்பமயமாகி வருகிறது. ஆனால் இந்நிகழ்வுக்குச் சற்றும் தொடர்பில்லாத உழைக்கும் மக்கள்தான் புவி வெப்பமயமாதலினால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். நாட்டில் நிலவும் கடும் வெப்பம் அவர்களை உழைக்கவும், ஓய்வெடுக்கவும் முடியாதவாறு வாட்டி வதைக்கிறது.

கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டுப்பணியாளர்கள், தெருக்கடை வியாபாரிகள், சிறு குறு தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், தூய்மைப்பணியாளர்கள், கிக் தொழிலாளர்கள், இன்னும் பிற துறைகளில் பணிபுரியும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வெப்ப அலையினால் தமது வருமானத்தை இழந்து, உடல் நலம் பாதிக்கப்படுவதோடு தமது உயிர்களையும் இழந்து வருகின்றனர். தேசியக் குற்றப் பதிவேட்டின் படி, இந்தியாவில் ஹீட்ஸ்டோர்க்கின் காரணமாகச் சராசரியாக ஆண்டுக்கு 1000 பேர் இறந்து போகின்றனர். இதில் பெரும்பான்மையானவர்கள் பாமர உழைக்கும் இந்தியர்கள் என்பது சொல்லாமலே விளங்கும். இத்தொழிலாளர்கள் வெயிலின் தாக்கத்தினால் ஒருநாள் வேலைக்குச் செல்லாவிட்டாலும் அவர்கள் பட்டினி கிடக்கும் நிலைமையே உள்ளது.

மக்கள் இறப்பைப் பற்றி வாய்திறக்காமல், முதலாளித்துவச் செய்தி நிறுவனங்களோ, அதிகரித்து வரும் வெப்பத் தாக்கத்தினால் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 4.5% வீழ்ச்சியடையும் எனச் செய்தி வெளியிடுகின்றன. பெருநிறுவனங்களின் விநியோகச் சங்கிலி, அரசு வருவாய் போன்றவை எவ்வாறு வெப்பத் தாக்கத்தால் பாதிக்கப்படப் போகிறது என்பது பற்றியே கவலை கொள்கிறார்கள்.

தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியைச் சுரண்டிப் பெருகும் மூலதனம், வெப்பத்தின் தாக்கத்தினால் ஒருபோதும் குறையப் போவதில்லை. இந்த முதலாளித்துவச் சக்கரம் தோய்வில்லாமல் சுழல்வதற்கு, கொடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் உற்பத்தியில் பங்கெடுத்து வருகிறார்கள். மிகக் கடுமையான வெப்ப அலை இருந்தபோதும், அத்தொழிலாளர்கள் மீது ஆளும் வர்க்கம் சிறிதும் இரக்கம் காட்டுவதில்லை.

புதுதில்லியில் ஆட்டோ ஓட்டும் சுனில் ரஸ்தோகி, தனது குடும்பத்தைப் பராமரிக்கவும், தனது இதய அறுவைச் சிகிச்சைக்கான பணத்தைச் சேமிப்பதற்காகவும் ஒருநாளைக்கு 12 மணிநேரம் வேலை செய்கிறார். ஆனால் கோடை வெப்பத்தின் தாக்கத்தால் தற்போது அவரால் தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் அல்லலுறுகிறார்.

இக்கோடை வெயிலைத் தவிர்க்கும் பொருட்டுக் குறைவான மணிநேரம் மட்டும் ஆட்டோ ஓட்டுவதினால், தனது அறுவைச் சிகிச்சையைத் தள்ளிப்போடுவதா? அல்லது தொடர்ந்து வேலை செய்து, தனது பலவீனமான உடல்நிலையை மேலும் மோசமாக்கிக் கொள்வதா? எனத் திணறுகிறார். “நான் ஏற்கனவே சோர்வாக இருக்கிறேன். இந்த வெப்பம் என்னை மேலும் சோர்வடையச் செய்கிறது. என்னால் தொடர்ந்து வேலை செய்ய முடியவில்லை” என்கிறார்.

ரஸ்தோகியைப் போலவே கோடிக்கணக்கான கூலித்தொழிலாளர்கள், இந்திய நகரங்களின் சுட்டெரிக்கும் வெயிலில் தமது உடல் நலத்திற்கும் வருமானத்திற்கும் இடையே ஒரு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இக்கடுமையான வெயிலில் தொடர்ந்து வேலை பார்ப்பதா? அல்லது பட்டினி கிடப்பதா? என்பதே அவர்கள் எதிர்கொள்ளும் கேள்வி.

கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் வெப்பத்தின் தாக்கத்தால் உலகம் முழுவதும் 194 பில்லியன் டாலர் வருமான இழப்பும், ஒரு நபருக்குச் சராசரியாக 420 மணிநேர வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளதாக லான்செட் இதழ் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தத் தனிநபர் வேலை இழப்பில் விவசாயத்துறையில் 648 மணிநேரம் (54 முழு வேலை நாள்), கட்டுமானத் துறையில் 20 விழுக்காடு ஏற்பட்டுள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.

சர்வதேச தொழிலாளர் அமைப்போ, வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் அதிகரித்து வரும் வெப்ப அலையால் இந்தியாவில் 3.4 கோடி வேலை வாய்ப்புகள் இல்லாமல் போகும் என்கிறது.

வெப்பத்தின் தாக்கத்தினால் அமைப்பு சாராத தொழிலாளர்களே அதிகப்படியான வருமான இழப்புகளையும், வேலை இழப்புகளையும் சந்தித்து வருகிறார்கள். நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால் சொற்பக் கூலிக்கே அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும் இத்தொழிலாளர்கள், அதிக வெப்பத்தின் விளைவாகக் குறைவான நேரத்திற்கான கூலியையே பெறுகின்றனர்.

இந்தியக் கிராமப்புறங்களில் அதிகாலையில் நிலவும் அதிக வெப்பத்தால் மண்ணில் ஈரப்பதம் வேகமாக ஆவியாகிறது. இதனால் பயிர்கள் நீர்ப்பிடிப்பு இல்லாமல் வாடிப்போகின்றன. இந்தியாவில் கோதுமைப் பயிர்களின் விளைச்சலின் பங்கு 10% குறைந்துள்ளது. கால்நடைகள் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படுவதால் பால் உற்பத்தியும் குறைந்து போயுள்ளது. கோழிகள் வெகு விரைவில் இறந்து போகின்றன. இதனால் விவசாயத்தை நம்பியிருக்கும் குடும்பங்களின் வருமானம் வெகுவாகக் குறைந்துவிடுகிறது.

நகரங்களிலோ பகாசுர ரியல்எஸ்டேட் நிறுவனங்களின் கட்டுமானத் தொழில்கள் சுட்டெரிக்கும் வெயிலிலும் கனஜோராக நடந்து வருகின்றன. இந்திய நகரங்களில் வேலை செய்து வரும் புலம்பெயர் கட்டுமானத் தொழிலாளர்கள் நண்பகல் வெயிலில் வேலை செய்து வருகின்றனர். இரவு நேரங்களிலும் கட்டுமானத் தொழில்கள் வேகமாக நடந்து வருகின்றன.

இந்திய நகரங்களின் அதிக வெப்பம் என்பது பகல் நேரப் பிரச்சினையோடு முடிந்து விடுவதில்லை. நகரங்களின் இரவுகளும் வெப்பமாக இருக்கின்றன. உழைக்கும் மக்கள் வாழும் பல கட்டிடங்கள் காற்றோட்டம் இல்லாமலே கட்டப்பட்டுள்ளன. அவற்றின் சுவர்கள், படிக்கட்டுகள் வெப்பத்தைத் தேக்கி வைக்கின்றன. அடுக்குமாடி குடியிருப்புகளின் ஜன்னல்கள் மற்ற கட்டிடங்களின் சுவர்களை நோக்கியே அமைக்கப்பட்டிருப்பதால், அவற்றின் வழியாகக் காற்று செல்வதும் தடுக்கப்படுகிறது.

சென்னையில் உள்ள பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு

கான்கிரீட் கட்டிடங்கள், தார் சாலைகள், மொட்டை மாடிகள் போன்றவை பகல் முழுவதும் வெப்பத்தை உறிஞ்சி இரவு நேரத்தில் வெளியிடுகின்றன. நகர்ப்புறத்தில் வசிக்கும் பெண்கள், காற்றோட்டம் இல்லாத வீடுகளுக்குள்ளேயே 24 மணிநேரமும் இருப்பதால், நீர்ச்சத்து, எலக்ட்ரோலைட் சத்து போன்றவற்றை இழந்து எளிதில் சோர்ந்து விடுகின்றனர்.

இப்படிக் காற்றோட்டமின்மை, புழுக்கம் போன்றவற்றால் வியர்த்து, பிசுபிசுப்புடன் படுக்கைக்குச் செல்லும் நகர்ப்புற மக்கள், அடுப்பங்கறைக்குள் படுப்பது போல உணர்கிறார்கள். இரவு முழுவதும் தூங்க முடியாமல் அடிக்கடி விழிக்கின்றனர். தொடர்ந்து தூங்க முடியாமல் தவிக்கின்றனர். அடுத்த நாள் காலையில் உறக்கமின்றி, சோர்வோடும் விழித்தெழுந்து, கொளுத்தும் வெயிலில் உடல் ரீதியாகச் சோர்வடைந்து, தமது பிழைப்புக்காக உழைக்கச் செல்கின்றனர்.

புறநிலையில் வெப்பம் இருக்கும்போது உடல் வியர்ப்பதன் மூலம் தன்னைத்தானே குளிர்வித்துக் கொள்கிறது. ஆனால் புவி வெப்பமயமாதலால் இந்தியாவில் நீண்டுகொண்டு செல்லும் 40° செல்சியஸுக்கு அதிகமான வெப்பநிலையும், காற்றில் நிலவும் அதிகப்படியான ஈரப்பதமும் மனித உடலில் இருந்து வியர்வை வெளியேற முடியாமல் தடுக்கின்றன. இதனால் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள், அதிக வெப்பத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் எளிதாக வெப்பத் தாக்கத்திற்கு உள்ளாகிறார்கள். வெப்ப அலையால் உழைக்கும் மக்கள் உடலில் ஏற்படும் இந்த உடல்சிதைவு மாற்றம் எளிதில் உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது.

ஹரியானாவின் ஜி.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின்படி, கடந்த 2001 முதல் 2019 வரை மட்டும் வெப்பத் தாக்கத்தினால் சுமார் 20,000 பேர் இறந்திருக்கின்றனர். இப்படி இறந்தவர்களில் பெரும்பாலோர் 35-45 வயதுடைய உழைக்கும் மக்களே ஆவர்.

இந்தியாவில் வெப்பத்தால் ஏற்படும் மரணங்கள் குறைவாகவே பதிவு செய்யப்படுகின்றன. இந்தியாவில் வெப்ப அலை இன்னும் ‘தேசியப் பேரிடராக’ அங்கீகரிக்கப்படவில்லை. இதனால், வெப்பத்தால் நிகழும் உயிரிழப்புகள் ‘வெப்பத்தாக்குதல்’ என முறையாகப் பதிவு செய்யப்படாமல், மறைக்கப்படுகின்றன. குறிப்பாக, உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இம்மரணங்கள் அதிகமாக நடக்கின்றன.

உலகம் முழுவதும் கடும் வெப்பத்தால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மரணமடைகிறார்கள். இந்த மரணத்திற்கான மூல காரணம் அதிகப்படியான வெப்பம் மட்டுமல்ல, அதை உருவாக்கியிருக்கும் முதலாளித்துவ வர்க்கமேயாகும்.

முதலாளித்துவ வர்க்கம் தோற்றுவித்த இந்த வெப்பப் பேரிடரால் உழைக்கும் மக்கள் தங்களது உடம்பில் தீக்காயம் பட்டது போல உணர்கிறார்கள். தாங்கள் வேலை பார்க்கும் இடத்தில் ஒரு மர நிழல் கிடைக்காதா என ஏங்கும் அவலநிலைக்கு ஆளாகிறார்கள். ஆனால் முதலாளித்துவ வர்க்கமோ இந்த இயற்கைப் பேரிடருக்குப் பொறுப்பேற்காமல் ஒதுங்கிக் கொள்கிறது. மேலும் தனது இலாப வெறிக்காக இப்புவியை நாசமாக்கிக் கொண்டுவருகிறது.

தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியை மட்டுமல்லாமல் இப்புவிக்கோளத்தையும் நாசமாக்கும் முதலாளித்துவத்தை ஒழிக்காமல், புவி வெப்பமயமாதலையும் அது தோற்றுவிக்கும் வெப்பத் தாக்குதல்களையும் ஒழிக்க முடியாது!

  • தாமிரபரணி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன