தொழிலாளி என்ற அடையாளத்தையே அழிக்கும்
மோடி அரசின் தொழிலாளர் சட்டங்கள்

1978-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் ‘டிரிபிள் டெஸ்ட்’ தீர்ப்பை மறுபரிசீலனை செய்துள்ள 9 நீதிபதிகள் அமர்வு, புதிய தொழிலாளர் சட்டங்களின் கீழ் “தொழில்” என்ற வரையறையை துடைத்தழித்திருக்கிறது. தனியார்மயம், ஒப்பந்தமயம், அவுட்சோர்சிங், கிக் வேலை என தொழிலாளர்களின் பாதுகாப்பு ஏற்கனவே சிதைக்கப்பட்டுள்ள நிலையில், சட்டப் பாதுகாப்பைப் பெறுவதற்கே தொழிலாளி தனது “தொழிலாளர்” அடையாளத்தை நிரூபிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

தொழிலாளியின் உழைப்பைச் சுரண்டுவதற்கு முதலாளிக்கு முழு சுதந்திரம் வேண்டும்; ஆனால் அந்தச் சுரண்டலை எதிர்க்க தொழிலாளிக்கு இருக்கும் சட்டப் பாதுகாப்பு மட்டும் முதலாளிக்கு “சுமை”, அதனை திருத்த வேண்டும், எளிமைப்படுத்த வேண்டும் இதுதான் முதலாளிகளின் கோரிக்கை. முதலாளியின் விருப்பத்தைத் தனது தலைமேல் எடுத்து நிறைவேற்றும் மோடி அரசோ, தொழிலாளியின் நலனுக்காகத்தான் அந்த உரிமைகளை எல்லாம் பறிப்பதாக நியாயப்படுத்தவும் செய்கிறது. மோடி அரசின் இந்த நாடகத்தை சமீபத்தில் வெளியாகியிருக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அம்பலப்படுத்தியிருக்கிறது.

மோடி அரசு கொண்டுவந்திருக்கும் புதிய தொழிலாளர் நலச் சட்டங்களின் காரணமாக இதுவரை எது “தொழில்” என்பதற்கும் அதில் பணிபுரிபவர்கள் தொழிலாளர்கள் என்றும் கொடுக்கப்ட்ட வரையரை இனி செல்லாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

2026 ஆகஸ்ட் 20. உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஏறத்தாழ அரை நூற்றாண்டாக இந்திய தொழிலாளர் நலச்சட்டங்களின் முக்கியமான அடித்தளங்களில் ஒன்றாக, ஏந்தெந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொழிலாளர் நலச் சட்ட வரம்புக்குள் வருவார்கள் என்பதை தீர்மானிக்க உதவியாக இருந்து வந்த பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் எதிர் R. ராஜப்பா வழக்கில் 1978ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்து தனது தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

1978-ல் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பு, “தொழில்” (Industry) என்றால் என்ன என்பதற்கு மிகவும் விரிவான பொருளை வழங்கியது. அந்த தீர்ப்புக்கு முன்னர் “தொழில்” என்ற வார்த்தை மிகவும் குறுகிய பொருளில் அணுகப்பட்டது. தொழிற்சாலை, வணிக நிறுவனம் போன்றவை தொழிலாகக் கருதப்படலாம். ஆனால் மருத்துவமனை, பல்கலைக்கழகம், நகராட்சி, தொண்டு நிறுவனம், அரசின் சேவை நிறுவனங்கள் ஆகியவை தொழில்களாகக் கருதப்படுமா என்பதிலும் இவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் தொழிலாளர்களா என்பதிலும் குழப்பம் நிலவியது. இந்தக் கேள்விக்கு கிருஷ்ணய்யர் தலைமையிலான உச்சநீதிமன்றம் வழங்கிய பதில், மிக முக்கியமானது.

அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, தொண்டு நிறுவனமோ எதுவாக இருந்தாலும் அங்கு நடைபெறும் வேலை, அந்த வேலையில் முதலாளி–தொழிலாளர் உறவு, ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரையரையை அந்தத் தீர்ப்பு உருவாக்கியது.

  1. ஒழுங்கமைக்கப்பட்ட அல்லது திட்டமிட்ட செயல்பாடு இருக்க வேண்டும்.
  2. முதலாளி–தொழிலாளர் ஒத்துழைப்பு இருக்க வேண்டும்.
  3. மனிதத் தேவைகளை நிறைவேற்றும் பொருட்கள் அல்லது சேவைகள் உற்பத்தி/விநியோகம் செய்யப்பட வேண்டும்.

இந்த மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டு ஒரு நிறுவனத்தை தொழிற் தகராறுகள் சட்டப்பிரிவுக்குள் கொண்டுவருவது பின்னர் ‘டிரிபிள் டெஸ்ட்’ என்று அழைக்கப்பட்டது. மேலும் இங்கே தொழில் என வகைப்படுத்துதற்கு லாபம் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்று அந்தத் தீர்ப்பு கூறியது. “லாபம் இல்லை; எனவே தொழில் இல்லை” என்ற முதலாளித்துவ தர்க்கத்திற்கு எதிரானதாக இந்தத் தீர்ப்பு அமைந்தது.

இதன் மூலம் ஒரு நிறுவனம் லாபம் ஈட்டவில்லை என்றாலும் அங்கு பணிபுரிபவர்கள் தொழிலாளர்கள் என்ற வரையரைக்குள் கொண்டுவரப்பட்டனர். ஒரு மருத்துவமனை “சேவை” செய்கிறது என்றாலும் அங்கு பணிபுரியும் செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் தொழிலாளர்கள் என உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. ஒரு கல்வி நிறுவனம் “அறிவுச் சேவை” செய்கிறது என்றாலும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தொழிலாளர்கான சட்டப் பாதுகாப்பு கிடைத்தது.

லாப நோக்கம் இல்லாதது மட்டும் ஒரு நிறுவனத்தை ‘தொழில்’ என்ற வரையறையிலிருந்து வெளியேற்றாது. தொண்டு நிறுவனமாக இருந்தாலும், அறக்கட்டளையாக இருந்தாலும், அரசு நிறுவனமாக இருந்தாலும், சமூகப் பயன்பாட்டுக்கான பணியாக இருந்தாலும்—அங்கு ஒழுங்கமைக்கப்பட்ட உழைப்பு, முதலாளி–தொழிலாளர் உறவு, சேவை உற்பத்தி ஆகியவை இருந்தால், தொழிலாளர் சட்டத்தின் கீழ் வரலாம் என்ற பரந்த அணுகுமுறை உருவானது.

இதன் விளைவாக மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், நகராட்சிகள் போன்றவையும் தொழிலாளர் சட்டத்தின் எல்லைக்குள் கொண்டுவரப்பட்டன. “சேவை” என்று அழைத்தாலும் உழைப்பு உழைப்புதான். “தொண்டு” என்று அழைத்தாலும் உழைப்பாளியின் உழைப்பு இலவசமாகிவிடாது. “அரசுப் பணி” என்று அழைத்தாலும் தொழிலாளியின் வர்க்க நிலை மறைந்துவிடாது.. இதனை இந்தத் தீர்ப்பு தெளிவாக எடுத்துக் கூறியது.

1978 தீர்ப்பின் முக்கியத்துவம், “தொழில்” என்ற ஒரு வார்த்தைக்கு விரிவான பொருள் கொடுத்ததில் மட்டும் இல்லை. ஒரு நிறுவனம் தொழிலாளர் சட்டத்தின் கீழ் “தொழில்” என அங்கீகரிக்கப்பட்டால், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொழில் தகராறுகளை சட்டரீதியாக எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

கூட்டுப் பேரம் பேசுதல், தொழில் தகராறுகளுக்கான தீர்வு அமைப்புகள், தொழிலாளர் நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள், நியாயமற்ற பணிநீக்கங்கள் மற்றும் முதலாளித்துவ நடவடிக்கைகளுக்கு எதிரான சட்ட நிவாரணங்கள் போன்றவை இதன் மூலம் கிடைத்தன.

ஆனால் மோடி அரசு இன்று 1947-ஆம் ஆண்டின் தொழிற் தகராறுகள் சட்டத்தை நீக்கி விட்டு அந்த இடத்தில் தொழிற்துறை உறவுகள் தொகுப்பை (Industrial Relations Code) அறிமுகப்படுத்தியிருக்கிறது. 2025 நவம்பர் 21 முதல் தொழிற்துறை உறவுகள் தொகுப்பு அமலுக்கு வருவதாகவும் அறிவித்துவிட்டது. புதிய சட்டத்தில் “தொழில்” என்பதற்கு புதிய வரையறை கொடுக்கப்பட்டுள்ளது.

இனிமேலும் 1978ஆம் ஆண்டு தீர்ப்பின் அடிப்படையில் “தொழில்” என்ற வரையரையை வகுக்க முடியாது என தலைமை நீதிபதி சூர்ய காந்த் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார். இதன் பொருள் என்னவென்றால், இதுவரை எந்த எந்த நிறுவனங்கள் எல்லாம் “தொழில்” என வகைப்படுத்தப்பட்டு அதில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்கப்பட்டதோ அந்த வரையரைகள் அனைத்தும் முற்றிலுமாகத் துடைத்தழிக்கப்பட்டுவிட்டன. இனி தொழிலாளர்கள் தங்களை தொழிலாளர்கள் என நீரூபிக்க வேண்டிய நிலைக்கு, தள்ளப்பட்டுள்ளனர்.

1978ஆம் ஆண்டு வரையரை செல்லாது என்று கூறிய நீதிமன்றம், புதிய சட்டத் தொகுப்புக்கு ஏற்ற வகையில் புதிய வரையரையை வகுத்துக் கூறவில்லை. இதன் மூலம் தொழிலாளர்கள் மீண்டும் நீண்ட நெடிய சட்டப்போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

முதலாளிகளிடம் வழக்கறிஞர்கள் உள்ளனர். பெருநிறுவனங்களிடம் இதற்கென பெரிய சட்ட நிறுவனங்களே உள்ளன. அவர்களிடம் நீதிமன்றங்களை அணுகும் பணமும் நேரமும் அதிகாரமும் இருக்கின்றன. ஆனால் ஒரு ஒப்பந்தத் தொழிலாளியோ, ஒரு தற்காலிக ஊழியரோ, ஒரு தனியார் மருத்துவமனையின் தூய்மைப் பணியாளரோ, அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்குச் சென்று, “நாங்கள் உண்மையில் தொழிலாளர்கள்தான்; எங்கள் பணியிடம் உண்மையில் ‘தொழிற்சாலை’ (Industry) தான்” என்று நிரூபிக்க முடியுமா.

இங்குதான் மோடி அரசு கொண்டு வந்திருக்கும் தொழிலாளர் சட்டத் தொகுப்பின் அடிப்படையான வர்க்க குணம் வெளிப்படுகிறது. இந்தச் சட்டத்தின் படி முதலாளியும் தொழிலாளியும் காகிதத்தில் இருவரும் “சமமான தரப்புகள்”. ஆனால் வாழ்க்கையில்? ஒருவரிடம் மூலதனம் இருக்கிறது. இன்னொருவரிடம் விற்க வேண்டிய உழைப்புச் சக்தி மட்டுமே இருக்கிறது.

புதிய சட்டம் முதலாளிக்கு தொழிலாளியை வேலையை விட்டு அனுப்பும் வசதியைச் செய்து கொடுக்கிறது. நிறுவனத்தையே கூட ஒரே இரவில் மூடுவதற்கு அனுமதி கொடுக்கிறது. அனால் தொழிலாளியின் உரிமையை மட்டுமல்ல, தொழிலாளி என்ற அடையாளத்தையே அழிக்க வழி செய்கிறது.

“தொழில்” என்ற வரையறையிலிருந்து ஒரு தொழிலாளியை வெளியேற்றுவது என்பது வெறும் வார்த்தைகளை மாற்றுவது அல்ல. அது அவரை ஒரு சட்டப் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கை. தொழிலாளர் சட்டம் “தொழிலாளர்களுக்கு சலுகை” அல்ல அது இத்தனை ஆண்டுகளாகப் போராடிப் பெற்ற உரிமை.

1978ஆம் ஆண்டு நிலைமை தற்போது இல்லை என்று 9 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வின் பெரும்பாண்மை நீதிபதிகள் கூறியிருக்கின்றனர். உண்மைதான் 1978இல் இருந்ததை விட இன்றைக்கு தொழில்கள் அனைத்தும் தனியார்மயமாகியிருக்கின்ற்ன, தொழிலாளர்கள் மீதான சுரண்டலும் அதிகரித்திருக்கிறது. தொழிலாளர் நலச் சட்டங்கள் மேலும் மேலும் கடுமையாக மாற வேண்டிய இன்றைய சூழலில் அதனை இன்னமும் வெட்டிச் சுருக்கிக் கொண்டிருக்கிறது அரசும், நீதிமன்றமும்.

1991-க்குப் பிந்தைய தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கையினால் இந்தியப் பொருளாதாரத்தில் தனியார் மூலதனத்தின் பங்கு பெரிதாகியுள்ளது. அரசுத்துறையில் இருந்த வேலைகள் தனியார்மயமாக்கப்படுகின்றன. நிரந்தர வேலைகள் ஒப்பந்த வேலைகளாகின்றன. ஒப்பந்த வேலைகள் அவுட்சோர்சிங் ஆகின்றன. அவுட்சோர்சிங் கிக் (gig) வேலைகளாக மாறுகின்றன. ஒரே பணியிடத்தில் ஒரே வேலையைச் செய்யும் தொழிலாளர்களுக்கே வெவ்வேறு நிறுவனங்களின் பெயரில் வெவ்வேறு ஒப்பந்தகள் போடப்படுகின்றன. இந்த சூழலில் தொழிலாளியின் பேரம் பேசும் சக்தி முற்றிலும் பலமிழந்திருக்கிறது. எனவே அவர்களைச் சட்டப் பாதுகாப்பின் கீழ் கொண்டுவர சட்ட வரையரை இன்னமும் விரிவாக்கப்பட வேண்டுமேயன்றி அதனைச் சுருக்கக் கூடாது.

இதே உச்ச நீதிமன்ற அமர்வில், 1978ஆம் ஆண்டு வரையரையே தொடர வேண்டும் என சிறுபான்மை தீர்ப்பைக் கொடுத்திருக்கும் நீதிபதி நாகரத்னா, “1991-க்குப் பிந்தைய தனியார்மயமாக்கலால், அதிகமான தொழிலாளர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். எனவே தொழிலாளர் சட்டப் பாதுகாப்பைச் சுருக்க வேண்டிய காலம் இது அல்ல; அதை மேலும் வலுப்படுத்த வேண்டிய காலம்” என்று கூறியிருக்கிறார்.

ஆனால் மோடி அரசோ என்ன செய்திருக்கிறது. தொழிலாளர் சட்டங்கள் நிறுவனங்களுக்கு சுமை, அதிக விதிமுறைகள் முதலீட்டைத் தடுக்கும், தொழில் செய்வதை எளிதாக்குவதற்கு (“Ease of Doing Business-க்கு) தொழிலாளர் சட்டங்களின் பல்லைப் பிடுங்க வேண்டும் என நினைக்கிறது. அதாவது முதலாளிக்கு நினைத்த நேரத்தில் ஆட்களை நியமிக்கவும் நீக்கவும் சுதந்திரம் வழங்க வேண்டும் என விரும்புகிறது. அதற்கு தொழிலாளர் சட்டப் பாதுகாப்பைச் சுருக்காமல் வேறு என்ன செய்ய முடியும்.

ஒரு முதலாளி காரணம் சொல்லாமல் தொழிலாளியைப் பணிநீக்கம் செய்தால், “அது நிறுவனத்தின் வணிக முடிவு” என நியாயப்படுத்தலாம். ஆனால் அந்தப் பணிநீக்கத்திற்குக் காரணம் சொல்ல வேண்டும் என்று சட்டம் கேட்டால், “இது முதலாளிக்கு மிகப்பெரிய சட்ட சுமை” என்று கூறுகிறார்கள்.

இந்த மொழி தற்செயலானதல்ல. இங்கே முதலாளியின் அதிகாரம் “இயல்பானது” என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அந்த அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் எந்த விதியும் “சுமை” என்று அழைக்கப்படுகிறது. அந்தச் சுமையை இறக்க உதவுவது அரசின் கடமை எனக் கூறப்படுகிறது.

இந்தத் தீர்ப்பில் இன்னொரு முக்கியமான விவாதம் உள்ளது. அரசாங்கம் மேற்கொள்ளும் எல்லா செயல்பாடுகளும் இறையாண்மைச் செயல்பாடுகள் அல்ல என்பது 1978 வரையரை. அந்த வரையரையை மோடியின் சட்டத்தொகுப்பு தூக்கியெறிந்துவிட்டது. இனி அரசு நடத்தும்  மருத்துவமனை, போக்குவரத்து கழகம், மின்சார வாரியம், குடிநீர் வாரியம், பள்ளி கல்லூரிகள், நகராட்சி சேவைகளை என அனைத்தும் இனி அரசின் இறையாண்மைச் செயல்பாடுகள் என்று கூறி இவற்றில் பணிபுரிபவர்களை தொழிலாளர் சட்டத்திலிருந்து வெளியேற்றிவிட முடியும்.

அதே போல தொண்டு நிறுவனங்கள், சமூகசேவை அமைப்புகள்,  நன்கொடைகள் உதவிகள அளிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களை ஊழியர்கள் என அறிவிக்க முடியும். அவர்களுக்குச் சட்டப்பாதுகாப்பு இல்லை என வாதிட முடியும்.

ஒரு நிறுவனம் தன்னை “தொண்டு நிறுவனம்” என்று அழைத்துக் கொண்டால், அங்கு பணிபுரியும் தொழிலாளியின் உழைப்பு சுரண்டல் இல்லை என்று கூற முடியுமா. உழைப்புச் சுரண்டல் இருந்தாலும் சட்டப்பாதுகாப்பு இல்லை என்பதுதான் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலை.

தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர்கள் பல தலைமுறைகளாகப் போராடிப் பெற்ற உரிமைகள். எட்டு மணி நேர வேலைக்காகவும், நியாயமான ஊதியத்திற்காகவும், பணிப் பாதுகாப்பிற்காகவும், தொழிற்சங்க உரிமைக்காகவும், அநியாயமான பணிநீக்கத்திற்கு எதிராகவும் தொழிலாளர் வர்க்கம் நடத்திய போராட்டங்களின் விளைவுகள்தான் இன்றுள்ள குறைந்தபட்ச சட்டப் பாதுகாப்புகள். அந்த உரிமைகள் இன்றைக்குப் பறிக்கப்படுகின்றன.

முதலாளிகளின் நலன் காப்பதற்காக, தொழிலாளர்கள் இதுகாறும் போராடிப்பெற்ற உரிமைகளைப் பறிப்பதை நோக்கமாகக் கொண்டு மோடி அரசு கொண்டுவந்திருக்கும் தொழிலாளர் நலச் சட்டத்திருத்தத்திற்கு உச்ச நீதிமன்றம் இன்றைக்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறது.

உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் இயக்கங்களின் போராட்ட வரலாறுகள் நமக்கு ஒரு உண்மையைக் கற்றுக் கொடுத்திருக்கின்றன. தொழிலாளர்களின் போராட்டம் என்பது நீதிமன்ற வளாகங்களோடு முடிவடைந்துவிடாது. உழைக்கும் வர்க்கம் தெருவில் இறங்கிப் போராடினால் எப்பேற்பட்ட அரசாக இருந்தாலும் அதனை வீழ்த்தித் தனது உரிமைகளை அடையமுடியும் என்ற மாபெரும் உண்மையை நாம் உணரவேண்டிய தருணம் இது.

எனவே நாம் ஒரே வர்க்கமாக தொழிலாளர் வர்க்கமாக அணிதிரள்வோம். “தொழிலாளர் சட்ட சீர்திருத்தம்” என்ற பெயரில் நமது உரிமைகளைப் பறிப்பதை எதிர்த்துப் போராடுவோம். ஒப்பந்தம், அவுட்சோர்சிங், கிக் வேலை என்ற பெயர்களில் தொழிலாளர்களைப் பிரிப்பதை எதிர்த்துப் போராடுவோம். அரசுத் துறைகளைத் தனியார்மயமாக்கி தொழிலாளர் பாதுகாப்பை அழிப்பதை எதிர்த்துப் போராடுவோம்.

“நான் தொழிலாளி என்பதை நிரூபிக்க வேண்டியதில்லை; நான் உழைக்கிறேன் என்பதே எனது உரிமைக்கான அடையாளம்” என்று முழங்குவோம்.

  • அழகு

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன