கனிம வளங்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு வாரி வழங்கும்
MMDR திருத்தச் சட்டம்!
மோடி அரசு முதன்முறையாகப் பதவியேற்றதிலிருந்து இந்தியாவில் உள்ள சுரங்கங்களை வணிகமயமாக்கி, அதிலும் குறிப்பாக பன்னாட்டுக் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், தரகு முதலாளிகளுக்கும் தாரைவார்த்துப் பல இலட்சக்கணக்கான டன் கனிமங்கள் நாட்டிலிருந்து வெட்டியெடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கடந்த 2025–26 ஆம் ஆண்டில் மட்டும் இரும்புத் தாது 313 மில்லியன் டன், சுண்ணாம்புக்கல் 484 மில்லியன் டன் என்ற அளவில் வெட்டியெடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலக்கரி உற்பத்தி ஒரு பில்லியன் டன் என்ற அளவில் உயர்ந்திருக்கிறது. உலகளவில் இந்தியா சுண்ணாம்புக்கல் உற்பத்தியில் இரண்டாம் இடமும், துத்தநாகத்தில் மூன்றாம் இடமும், இரும்புத் தாதுவில் நான்காம் இடமும், பாக்சைட் உற்பத்தியில் ஐந்தாம் இடமும் வகிக்கிறது.
ஆனாலும் 2025–26 ஆம் நிதியாண்டில் மட்டும் இந்தியா 10,12,529 கோடி ரூபாய் அளவில் கனிமங்களைப் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறது. இந்தியாவில் தோண்டியெடுக்கப்படும் கனிமங்களின் உற்பத்திச் செலவு அதிகமாக இருப்பதால் அவற்றின் விலை அதிகமாகி உலக ஏற்றுமதிச் சந்தையில் அவை சரிவைச் சந்திக்கின்றன என்றும், இதனால் தமது ஆத்மநிர்ப்பார் பாரத் இலக்கை அடைய முடியவில்லை என்றும் கூப்பாடு போடுகிறது மோடி அரசு.
இதற்காக இந்திய கனிமங்களைத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் மலிவு விலையில் உற்பத்தி செய்து, கொள்ளை இலாபத்தில் ஏற்றுமதி செய்வதற்கென்று ஒரு யுக்தியை வடிவமைத்து, அதைத் தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் “சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்தல்) திருத்த மசோதா 2026” (MMDR) என்ற பெயரில் நிறைவேற்றியிருக்கிறது.
மோடி அரசு தாக்கல் செய்திருக்கும் இம்மசோதா, மாநிலங்களின் அரைகுறை இறையாண்மைக்கு வேட்டு வைப்பதோடு, பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்களின் பகற்கொள்ளையைப் பன்மடங்கு அதிகமாக்கும் என்பது திண்ணம். இம்மசோதா தாக்கலின் போது அனைத்து மாநிலக் கட்சிகளும் இரு அவைகளிலும் எந்தவித விவாதத்தையும் நடத்தவில்லை என்ற கேலிக்கூத்தும் இதில் அடங்கும்.
தேசபக்தி, சுயசார்பு பொருளாதாரம் போன்ற பித்தலாட்டங்களைத் தூக்கிப் பிடிக்கும் இந்த மசோதாவின்படி, நிலத்திற்குக் கீழே உள்ள கனிம வளங்கள் இனிமேல் மாநில அரசுகளுக்குச் சொந்தமில்லை. வரும் காலங்களில் அனைத்து மாநில அரசுகளும் தனியார் சுரங்க நிறுவனங்களுக்கு வரி விதிக்க முடியாது. ஆத்மநிர்ப்பார் என்ற போர்வையில் பகாசுர கார்ப்பரேட் சுரங்க முதலாளிகள் நாட்டின் இயற்கை வளங்களிலிருந்து தோண்டியெடுக்கப்படும் கனிமங்களை மாநில அரசின் வரியில்லாமல் அகழ்ந்தெடுத்து வெளிநாடுகளுக்குக் கொள்ளை இலாபத்தில் ஏற்றுமதி செய்ய முடியும்.
இதோடு மட்டுமில்லாமல், இனிமேல் கனிமங்களின் ஒழுங்குமுறையை ஒன்றிய அரசே கட்டுப்படுத்தும்; கனிமங்களைக் கொண்ட நிலங்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஒன்றிய அரசுக்குத்தான் கூடுதல் அதிகாரம்; ஒரு நிலத்தில் கனிமம் இருப்பதையே ஒன்றிய அரசின் அளவுகோலின்படிதான் இனி நிர்ணயிக்க முடியும்; மாநில அரசுகள் கனிம வளங்கள் கொண்ட நிலங்கள் மீது எந்தவிதத் தீர்வையும், வரியையும் இனிமேல் விதிக்க முடியாது; அப்படியே விதித்தாலும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின்படிதான் விதிக்க முடியும்.
மேலும், மாநில அரசுகள் விதித்த வரிகளைத் தற்போது வரை சுரங்க முதலாளிகள் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்தால், அவற்றைச் செலுத்த வேண்டிய தேவையில்லை என்ற சலுகையையும் வாரிவாரி வழங்கியிருக்கிறது மோடி அரசு.
1990 களில் உலகளாவிய வலைப்பின்னலை ஏற்படுத்தியிருந்த தேசங்கடந்த தொழிற்கழகங்களின் உற்பத்தி வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில், மூன்றாம் உலக நாடுகளில் இருந்து இயற்கை வளங்கள் ஏராளமான அளவு ஏற்றுமதி செய்ய வேண்டிய தேவை எழுந்தது. அதற்கு வழி செய்யும் வகையிலேயே புதிய பொருளாதாரக் கொள்கைகளான தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்றவற்றை வலியுறுத்திய GATT ஒப்பந்தத்தின் ஷரத்துகள் அமைந்திருந்தன.
இந்தியாவின் தேசிய வருவாயில் சுரங்கத் துறை ஆண்டுக்கு 2% பங்களிப்பு செய்கிறது. 2014–15 ஆம் ஆண்டில் ரூ. 2,90,411 கோடியாக இருந்த சுரங்கத் தொழிலின் மதிப்பு 2022–23-ல் ரூ. 3,18,302 கோடியாக அதிகரித்திருக்கிறது. இதிலும் குறிப்பாக நிலக்கரிச் சுரங்கங்களின் மூலம் 2025–26 ஆம் ஆண்டில் மட்டும் 31,071 கோடி ரூபாயை கோல் இந்தியா என்ற பொதுத்துறை நிறுவனம் இலாபமாக ஈட்டியிருக்கிறது. இதே ஆண்டில் மட்டும் கோல் இந்தியா நிறுவனம் மொத்த நிலக்கரி உற்பத்தியான 1041 மில்லியன் டன்னில் 768 மில்லியன் டன்னை உற்பத்தி செய்திருக்கிறது. ஆனால் இந்த விபரங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டு, நிலக்கரித் துறையில் தனியார் முதலீடு அவசியம் என சுதேசி பஜனையை மோடி அரசு பாடிவருகிறது. மின்சார உற்பத்திக்கும், அதற்குத் தேவையான நிலக்கரி உற்பத்திக்கும் தனியார் முதலாளிகள்தான் ‘ஆபத்பாந்தவன், அனாத ரக்ஷகன்’ என நிலக்கரித் துறையில் 2025–26 நிதியாண்டில் மட்டும் 141 சுரங்கங்களை ஏலம் விட்டுள்ளது.
இதேபோல் அனைத்துக் கனிமங்களிலும் தனியார் முதலீடு ஊக்குவிக்கப்படுகிறது. மோடி ஆட்சிக்கு வந்த பின்பு 17 மாநிலங்களில் 723 முக்கிய கனிமத் தொகுதிகள் ஏலம் விடப்பட்டுள்ளன; இதில் ராஜஸ்தான் (140), மத்தியப் பிரதேசம் (127) மற்றும் ஒடிசா (76) ஆகியவை முன்னணியில் உள்ளன. 2025–26 நிதியாண்டில் மட்டும் 212 கனிமத் தொகுதிகளை ஏலம் விட்டதன் மூலம் இயற்கை வளக் கொள்ளையில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
மோடி அரசு தனியார் முதலாளிகளின் பகற்கொள்ளைக்காக MMDR சட்டத்தைத் திருத்துவது முதன்முறை அல்ல. இதற்கு முன்பும் கடந்த 2023 ஆம் ஆண்டின் இறுதியில் MMDR சட்டம் திருத்தப்பட்டது. அதன்படி, குறிப்பிட்ட ஆலைகளின் தேவைகளுக்காக இயங்கும் சுரங்கங்கள் (captive mines) உற்பத்தி செய்யும் கனிமங்களில் 50% விற்பனை செய்ய அனுமதித்தது.
இதே திருத்தத்தில், அணுக்கனிமங்களாக வகைப்படுத்தப்பட்டிருந்த லித்தியம், டைட்டானியம், பெரிலியம், சிர்கோனியம், நியோபியம் மற்றும் டாண்டலம் போன்ற கனிமங்கள் அணுக்கனிமங்கள் என்ற வகைப்பாட்டிலிருந்து நீக்கப்பட்டு தனியார் முதலாளிகளுக்குத் திறக்கப்பட்டன. ஜம்மு & காஷ்மீரில் கடந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் லித்தியம் கனிமத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இத்திருத்தத்திற்கு முன்பு இந்த ஆறு வகை கனிமங்களையும் மாநில அரசு மட்டுமே கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால் அந்த உரிமை பறிக்கப்பட்டு, இக்கனிமங்கள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
நிலக்கரிச் சுரங்கத்தில் உள்ள கனிமத் தொகுதிகளில் உள்ள நிலக்கரியின் அளவையும், தரத்தையும் இனிமேல் அரசு நிறுவனங்கள் மதிப்பீடு செய்ய வேண்டிய தேவையில்லை என்றும், அதைத் தனியார் பகாசுர கார்ப்பரேட் முதலாளிகள் தமக்கென்று தனியார் ஆய்வு முகமை அமைப்புகளை வைத்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை கொடுக்கலாம் என்ற திருத்தத்தையும் இதற்கு முன்னால் மோடி அரசு கொண்டுவந்தது. இதைப் பயன்படுத்தி அதானி, பிர்லா போன்ற தரகு முதலாளிகள் அமைக்கும் தனியார் முகமைகள் பல மெட்ரிக் டன் அளவில் நிலக்கரி அளவைக் குறைத்து மதிப்பிடுகின்றன என ஃபிரண்ட்லைன் இதழ் சமீபத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறது.
இவ்வாறு மோடி அரசின் ஆட்சியின் தொடக்கத்திலிருந்தே சுரங்கத்தில் 100% அன்னிய முதலீட்டுக்குத் தடையற்ற அனுமதி மற்றும் உற்பத்தியை வணிக நோக்கில் பயன்படுத்த அனுமதி என ஏகப்பட்ட சலுகைகளை வழங்கிப் பல சட்டத் திருத்தங்களைச் செய்துவருகிறது. இதன் தொடர்ச்சியாகவே இந்தச் சட்டத்திருத்தம் மேன்மேலும் தனியார் முதலாளிகள் கொள்ளை இலாபம் அடைவதற்கு வழிவகை செய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
இந்தியா–அமெரிக்கா இடையே கடந்த ஆண்டில் முக்கியக் கனிமங்களுக்கான ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டன. இதன்படி, முக்கிய அரியவகைக் கனிமங்களையும், அணுக்கனிமங்களையும் ஏற்றுமதி செய்வதற்கு மாநில அரசுகள் விதிக்கும் வரி சுரங்கத் தொழிலைப் பாதிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு குறியாக இருக்கிறது.
தற்போதைய MMDR மசோதா திருத்தத்திற்கு மோடி அரசு கொடுத்திருக்கும் விளக்கத்திலிருந்து இதை நாம் புரிந்துகொள்ள முடியும். கிராஃபைட் போன்ற அரியவகைக் கனிமங்கள், யுரேனியம் போன்ற அணுக்கனிமங்கள் மீது மாநில அரசுகள் வரி விதிப்பதால், இந்தக் கனிமங்களைத் தோண்டியெடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தனியார் சுரங்க நிறுவனங்களுக்கு இலாபம் இல்லை என்கிறது மோடி அரசு.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், 24 வகையான அரியவகைக் கனிமங்களையும் 6 வகையான அணுக்கனிமங்களையும் தோண்டியெடுக்கும் திட்டங்களுக்குப் பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த அவசியமில்லை என அறிவித்தது. இதற்கு அப்போது எதிர்ப்புத் தெரிவித்த அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகக் கடலோரப் பகுதிகளில் அரியவகைக் கனிமங்கள் புதைந்திருப்பதால் பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றார். இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை மாற்றங்கள் குறித்து நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் வெளிப்படையாக விவாதிக்கப்பட வேண்டும்; மாநிலங்கள் மற்றும் பொதுமக்களிடமும் உரிய கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இதற்கு மாறாகச் செயல்படுவது கூட்டாட்சித் தத்துவத்திற்கும் நமது நாட்டின் ஜனநாயக விழுமியங்களுக்கும் முரணானதாக அமையும் என்றும் மோடிக்குக் கடிதம் எழுதினார்.
ஆனால், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்தல்) திருத்த மசோதாவை மோடி அரசு தாக்கல் செய்தபோது, அதை முறியடிப்பதற்காகத் தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவில்லை.
தற்போது காங்கிரஸ் கட்சி இம்மசோதாவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடப் போவதாக அறிவித்துள்ளது. முந்தைய மன்மோகன் ஆட்சிக்காலத்தில் கோவில் பிரசாதம் போல நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியார் முதலாளிகளுக்கு வாரிவாரி வழங்கிய காங்கிரஸ் கட்சி, தற்போது மாநில உரிமைகள் என்று பேசுவதற்கு எந்தவித அருகதையும் கிடையாது.
ஓட்டுக் கட்சிகளை நம்பி, அதற்குப் பின்னால் அணிதிரண்டு, வழக்கமான சட்டப்பூர்வப் போராட்டங்கள், கடிதங்கள் என இச்சட்டத்திருத்தத்தை முறியடிக்க முடியாது. பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இத்தகைய சட்டத்திருத்தங்கள், சுற்றுச்சூழலையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பறிப்பது மட்டுமல்லாமல், நாட்டையே மறுகாலனியாக்கும் ஒரு திட்டமாகும்.
நாடாளுமன்றத்திற்கு வெளியே மக்களைத் திரட்டி, ‘நாட்டை மறுகாலனியாக்காதே’ எனப் போர்முழக்கத்துடன் வீதிக்கு வந்து போராடுவதன் மூலமே, இத்தகைய சட்டத்திருத்தத்தின் மூலம் நாட்டின் இயற்கை வளங்கள் பறிபோவதையும், தனியார் முதலாளிகளின் பகற்கொள்ளையையும் தடுக்க முடியும்.
- தாமிரபரணி
செய்தி ஆதாரங்கள்:


