மொராக்கோ இளைஞர்களைத் துரத்தும் வறுமையும், ஐரோப்பாவின் இனவாதமும்!
கடந்த ஜூலை 30–31 ஆம் தேதிகளில் வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவிலிருந்து சுமார் 72,000 பேர் ஸ்பெயினின் ஆதிக்கத்தின் கீழ் வரும் தன்னாட்சிப் பிரதேசமான சியூட்டாவிற்குப் புலம்பெயர்வதற்குக் கடல் வழியாகச் சென்ற செய்தி பரவலாக வெளிவந்தது. இந்தப் புலம்பெயர்வு நிகழ்வின் போது சுமார் 141 பேர் உயிரிழந்தனர். அடுத்த நாளே சியூட்டாவிற்குள் நுழைய முயன்றவர்களில் பெரும்பாலோர் மொராக்கோவிற்குத் திரும்பிச் சென்றனர்.
இச்சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, சியூட்டாவிற்குள் கடல் வழியாக நுழைபவர்களை உடனடியாக நாடு கடத்தக் கூடாது என ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பிற்குப் பிறகு, ஸ்பெயின் அரசு தனது சியூட்டா எல்லையைத் திறந்துவிட்டிருக்கிறது என்ற போலிச் செய்திகள் மொராக்கோவின் சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவின. இதற்குப் பிறகே ஆயிரக்கணக்கான இளைஞர்களும் சிறுவர்களும் சியூட்டா எல்லைக்குள் ஒரே நாளில் புலம்பெயரும் நோக்கத்துடன் பயணித்தனர்.
வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சியூட்டா மற்றும் பெனிடெக் என்ற இரண்டு நகரங்களுக்கும் இடையேயான தொலைவு சுமார் ஒரு மைல் அளவே என்றபோதிலும், இந்த இரண்டு நகரங்களுக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன. மொராக்கோவின் வடகோடி முனைக்கு அருகில் ஒரு யானையின் தும்பிக்கைப் போல சியூட்டா நகரம் மத்தியதரைக் கடலில் நீண்டுள்ளது. இது ஸ்பெயினின் கீழ் வரும் ஒரு தன்னாட்சிப் பிரதேசம். இந்நகரத்தில் வசிக்கும் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர்களாக இருப்பதன் பலன்களை அனுபவித்து வருகின்றனர்.
கடற்கரையோரமாகச் சற்றே தெற்கே அமைந்துள்ள பெனிடெக் நகரத்தை ஒப்பிடும்போது, சியூட்டா செல்வமிக்க நகரம். ஆனால் மொராக்கோவில் அமைந்திருக்கும் பெனிடெக் நகரத்தில் வசிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு இருண்டு காணப்படுகிறது. மக்களோ வறுமையின் கோரப்பிடியில் வாழ்ந்து வருகின்றனர்.
மொராக்கோவிடமிருந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பா காலனித்துவப்படுத்திய ஒரு பகுதிதான் தற்போதைய ஸ்பெயினின் சியூட்டா நகரம். இந்நகரத்தில் வசிக்கும் சுமார் 84,000 மக்களும் ஸ்பானியக் குடிமக்களாவர். இவர்களில் பலர் ஸ்பெயினைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். மொராக்கோவைப் பூர்விகமாகக் கொண்ட அரபு மொழி பேசும் முஸ்லீம் மக்களும் பல ஆண்டுகளாக இந்நகரத்தில் வசித்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாகவே சியூட்டா நகரில் அருகில் வசித்த மொராக்கோ நாட்டினர் விசா இல்லாமல் அந்நகரத்திற்குள் சென்று வந்தனர். சியூட்டா மற்றும் பெனிடெக் இடையே நீண்ட காலமாக வர்த்தகம் நடைபெற்று வந்தது. ஆனால் மொராக்கோ மற்றும் ஸ்பெயின் அரசுகளுக்கிடையே ஏற்பட்ட பல்வேறு அரசியல் நெருக்கடிகளால், மொராக்கோ அரசு இந்த எல்லையைக் கொரோனாவிற்குப் பிறகு நிரந்தரமாக மூடியது.
ஐ.நா.வின் அறிக்கையின்படி, மொராக்கோவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 61,000 பேர் வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்கின்றனர். 1950 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை மொராக்கோவின் மக்கள்தொகையை, நிகரப் புலம்பெயர்வு சுமார் 40 லட்சம் என்ற எண்ணிக்கையில் குறைத்துள்ளது. ஆப்பிரிக்காவிலேயே அதிகமாகப் புலம்பெயரும் மக்களில் மொராக்கோ மக்கள் முன்னணியில் இருக்கின்றனர்.
மொராக்கோவில் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் சமூகப் பொருளாதார நிலைமைகளே அந்நாட்டு மக்களை, குறிப்பாக அந்நாட்டின் இளைஞர்களை இத்தகைய அபாயகரமான பயணத்தை மேற்கொள்ளத் தூண்டுகிறது. இந்தப் புலம்பெயர்வு நெருக்கடியின் போது, மொராக்கோ இராணுவத்தினர் நாட்டின் எல்லைகளைத் திறந்துவிட்டு, அங்கிருந்து வெளியேறத் தங்களை அனுமதித்ததாக சியூட்டாவிற்குள் நுழைந்த இளைஞர்கள் கூறுகின்றனர்.
மொராக்கோவில் ஆறாம் முகமது என்பவரின் கீழ் மன்னர் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரின் ஆட்சியின் கீழ் இளைஞர்களின் வேலையின்மை விகிதம் சுமார் 40% ஆக இருக்கிறது. மக்கள்தொகையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கினர் 15 வயது முதல் 34 வயதுக்குட்பட்ட இளைஞர்களே ஆவர். வேலையில்லாத இளைஞர் பட்டாளங்களில் 25% பேர் ஓராண்டுக்கும் மேலாக வேலையின்றி உள்ளனர்.
ஏழைகளின் அரசர் என்று பரவலாக விமர்சிக்கப்படும் மொராக்கோவின் மன்னர், ஆப்பிரிக்காவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர். மொராக்கோவின் அல்மடாவின் எனும் நிறுவனத்தின் மிகப்பெரும் பங்குதாரர். இந்நிறுவனமே அந்நாட்டின் சுரங்கம், தொலைத்தொடர்புத் துறை, வங்கி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற முக்கியத் துறைகளைக் கையகப்படுத்தியிருக்கிறது. அல் மடாவின் சொத்துக்களில் மொராக்கோவின் மிகப்பெரிய வங்கியான அட்டிஜாரிவாஃபா வங்கி, மஜிம் என்ற சுரங்க நிறுவனம், மர்ஜான் மற்றும் அசிமா என்ற சில்லறை விற்பனை நிறுவனங்கள், வேளாண் வணிகம், சிமெண்ட், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானப் பொருட்களின் தொழிற்சாலைகள் போன்றவை அடங்கும். அதிக மூலதனம் தேவைப்படும் இத்துறைகள் அனைத்தும் மொராக்கோ மன்னருக்கு இலாபத்தை ஈட்டித் தரும் அதே வேளையில், அந்நாட்டின் இளைஞர்கள் வேலையின்மையால் அவதிப்படுகின்றனர்.
மொராக்கோவில் வேலை கிடைத்தாலும், அவர்களுக்கு அடிப்படை வாழ்க்கைச் செலவுகளைக் கூட ஈடுகட்ட முடியாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். தொழிற்துறையில் சராசரி மாத ஊதியமாக சுமார் 320 யூரோவும், விவசாயத்துறையில் சராசரி மாத ஊதியமாக 270 யூரோவும் வழங்கப்படுகிறது.
அங்கு 40% மக்கள் கிராமப்புறங்களில் வசித்தாலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு 10% மட்டுமே உள்ளது. கிராமப்புறக் குடும்பங்களில் ஐந்தில் ஒரு பங்கு குடும்பங்கள் வறுமையில் உள்ளன. விவசாயத்துறையில் 90% வேலைகள் ஒப்பந்த முறையில்தான் நடைபெறுகின்றன. மேலும் பருவகாலத்திற்குத் தகுந்தாற்போலவே அங்குள்ள மக்கள் விவசாய வேலைகளைச் செய்து வாழ்க்கையைக் கழித்து வருகின்றனர்.
விவசாயத்தின் வீழ்ச்சி மக்களை நகர்ப்புறங்களை நோக்கித் தள்ளுகிறது. ஆனால் நகர்ப்புறங்களில் உள்ள வேலைவாய்ப்புகளில் பெரும்பாலும் ஒப்பந்த முறையிலேயே செயல்படுத்தப்படுகின்றன. இதனால் மொராக்கோ இளைஞர்கள் தெருவோரத்தில் வியாபாரம் செய்தும், பட்டறைகள், கட்டுமானத் தொழில்களில் அதிகளவில் வேலை பார்க்கும் நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர். ஐ.நா. ஹேபிடேட் எனும் அமைப்பின்படி, நகர்ப்புறங்களில் வசிக்கும் பத்தில் இரண்டு பேர் கடற்கரையோரமாக இருக்கும் பகுதிகளில் உள்ள குடிசைப் பகுதிகளிலேயே வசித்து வருகின்றனர்.
கிராமப்புறப் பகுதியிலிருந்து மக்கள் பெனிடெக் நகரத்திற்கு அதிகமாகப் புலம்பெயர்வதால், குடிசைப் பகுதிகள் பெருகி வருகின்றன. இதனால் ஒப்பந்த வேலைவாய்ப்பிற்கும் கடும் போட்டி ஏற்பட்டு, அங்கு வழங்கப்படும் சொற்ப ஊதியமும் நாளடைவில் குறைந்து வருகின்றன.
பல ஆண்டுகளாக அந்நாட்டில் தலைவிரித்தாடும் வேலையின்மை, கிராமப்புற வறுமை, ஒப்பந்த முறை வேலைவாய்ப்பு, சொற்ப ஊதியம் மற்றும் தீவிர ஏற்றத்தாழ்வு போன்றவை அங்குள்ள இளைஞர்களை வீதிக்கு இழுத்துப் போராடத் தூண்டின. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மொராக்கோவின் சமூகப் பொருளாதார நிலைமைகளால் சிக்குண்ட இளைஞர்கள் “ஜென்-சி 212” என்ற போராட்டத்தை அந்நாட்டில் பல நாட்கள் தொடர்ந்து நடத்தி வந்தனர்.
அங்கு பெருகி வரும் வேலையின்மையால் அல்லல்படும் இளைஞர்கள், தங்களின் எதிர்காலத்திற்கான வழியாக வெளிநாட்டிற்குப் புலம்பெயர்தலையே ஒரு மாற்றாகக் கருதுகிறார்கள்.
இதனால், வறுமையில் உழலும் மொராக்கோவில் வாழ்வதைவிட, உயிரைப் பணயம் வைத்து நான்கு மணி நேரம் கடல் வழியாகச் சியூட்டா நகரத்திற்குள் நுழைய 70,000-க்கும் மேற்பட்டோர் முயன்றிருக்கிறார்கள்.
இந்தப் புலம்பெயர்வு நெருக்கடியைப் பயன்படுத்திக் கொள்ளும் ஐரோப்பிய அரசுகள், மொராக்கோ போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து புலம்பெயரும் தொழிலாளர்களாலேயே ஐரோப்பிய தொழிலாளர் வர்க்கம் அவதிப்படுவதாக நீலிக்கண்ணீர் வடிக்கின்றன. இனவாதத்தைப் பயன்படுத்தி தொழிலாளர் வர்க்கத்திற்குள் பிளவை ஏற்படுத்த முயல்கின்றன. ஆனால், ஐரோப்பிய தொழிலாளர் வர்க்கம் அங்குள்ள முதலாளித்துவ வர்க்கத்தின் சுரண்டலினால்தான் அவதிப்படுகிறதே ஒழிய, பிறநாடுகளின் புலம்பெயர் தொழிலாளர் வர்க்கத்தால் அல்ல என்பது திண்ணம்.
ஸ்பெயினுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே அரசியல் நெருக்கடியை உருவாக்கும் நோக்கத்திலேயே மொராக்கோ அரசு, தனது எல்லையைத் திறந்துவிட்டு ஆயிரக்கணக்கான இளைஞர்களை அனுமதித்திருக்கிறது. இரண்டு நாட்களில் வெளியேறிய 75,000க்கும் மேற்பட்ட மக்களைத் தடுப்பதற்கு அந்நாட்டு அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தற்போது வரை இதில் உயிரிழந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களின் மரணம் குறித்து விசாரணையைக் கூட மொராக்கோ அரசு நடத்தியதாகச் செய்திகள் இல்லை. ஸ்பெயின் அரசோ, இச்சம்பவத்திற்குப் பிறகு சியூட்டா எல்லையில் தனது இராணுவ மேலாதிக்கத்தை நிறுவும் பொருட்டு, இராணுவத்தினரைக் குவித்து வருகிறது.
சியூட்டாவிற்குள் நுழைய முயன்ற இந்தப் புலம்பெயர்வு நெருக்கடியை எதிர்த்து, உடனடியாகவே ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் அவசர அவசரமாக எதிர்ப்புகள் கிளம்பின. ஐரோப்பிய ஒன்றியத்தின் 22 தலைவர்கள், சட்டவிரோதப் புலம்பெயர்வை ஸ்பெயின் தடுக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டிக் கடிதம் எழுதியிருக்கின்றனர். ஸ்பெயினில் செயல்பட்டு வரும் வலதுசாரிக் கட்சிகளில் ஒன்றான வோக்ஸ் எனும் கட்சி, ஸ்பெயின் பிரதமர் சான்செஸைக் கடுமையாகச் சாடியதோடு, இதைப் “புலம்பெயர்ந்தோர் ஆக்கிரமிப்பு” என விஷத்தைக் கக்கியிருக்கிறது. இத்தாலி பிரதமர் மெலோனியோ, மொராக்கோவிலிருந்து சியூட்டாவிற்குள் நுழைபவர்கள் ஸ்பெயின் வழியாக இத்தாலிக்குள் நுழைவதைப் போலப் பேசி வருகிறார். ஆனால், சியூட்டாவிலிருந்து தற்போது ஸ்பெயினுக்குள்ளே நுழைய முடியாதபடி கடுமையான கட்டுப்பாடுகளும், இராணுவக் கண்காணிப்பும் நிலவுகின்றன.
இத்தாலி பிரதமர், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையேயான ஷெங்கன் விசா முறையிலிருந்து ஸ்பெயினை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்பதோடு, இத்தாலிக்கும் ஸ்பெயினுக்கும் உள்ள எல்லைப்புறப் பகுதிகளில் உள்ள ஷெங்கன் விசாவைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். டென்மார்க்கும், பின்லாந்தும் இத்தாலியின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அமெரிக்க அதிபர் டிரம்போ, தான் ஆட்சியில் இல்லாவிட்டால், ஸ்பெயினில் நடந்ததைவிட அதிகளவில் சட்டவிரோதப் புலம்பெயர்வு அமெரிக்காவில் நடைபெற்றிருக்கும் என்றும், ஸ்பெயினில் நடந்தது ஒரு படையெடுப்பு என்றும் தனது பாசிசக் கோரமுகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இஸ்ரேல் இனவெறி அரசு, பாலஸ்தீனத்தின் மீது நடத்தி வரும் இனப்படுகொலையை ஸ்பெயின் அரசு தொடர்ந்து கண்டித்து வருவதால், இந்தப் புலம்பெயர்வு நெருக்கடியைப் பயன்படுத்தி சியூட்டா நகரத்தை ஸ்பெயின் மொராக்கோவிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என இஸ்ரேல் தூதர் கூறியிருக்கிறார்.
மொராக்கோவில் நடந்த இந்தப் புலம்பெயர்வு நெருக்கடி, வெறும் வேலைவாய்ப்பின்மையை மட்டும் வெளிக்கொண்டு வரவில்லை; புலம்பெயர்வுத் தொழிலாளர்கள் மீதான ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பாசிச நிலைப்பாட்டை உழைக்கும் வர்க்கத்திற்கு அம்பலப்படுத்தியிருக்கிறது.
இளைஞர்களும் தொழிலாளர்களும் புலம்பெயர்வதற்கான நெருக்கடியை உருவாக்கிய முதலாளித்துவம், தற்போது இனவாதம் என்ற பெயரில் தொழிலாளர்களைப் பிளவுபடுத்த முயல்கிறது. இதை உழைக்கும் மக்கள் புரிந்துகொண்டு, சர்வதேச தொழிலாளர் ஒற்றுமையைக் கட்டியெழுப்பி, பாசிஸ்டுகளின் பிரச்சாரத்தை முறியடிக்க அணிதிரள வேண்டும் என்பதை இப்புலம்பெயர்வு நெருக்கடி நமக்கு உணர்த்தியிருக்கிறது.
- தாமிரபரணி



