தவெகவின் ‘மது ஒழிப்பு’ : சரியான விலையில், ஆன்லைன் புக்கிங்கில் கிடைக்கும் தரமான மது!
உழைக்கும் மக்களின் குடும்பங்களில் மது என்பது மிகப்பெரிய பாதிப்பை, குடும்பத்தையே சீரழிக்கின்ற அளவிற்கான பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மதுவினால் பாதிக்கப்படாத உழைக்கும் வர்க்கக் குடும்பமே இல்லை என்று கூறும் அளவிற்கு அதன் பாதிப்புப் பரவலாக இருக்கிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் மதுவிலக்கு என்பது நிச்சயமாக இடம்பிடித்துவிடும். ஆனால் மக்களுக்கோ அது வெறுமனே ஒரு தேர்தல் வாக்குறுதியாக மட்டுமல்ல, மதுவால் பாதிக்கப்படும் உழைக்கும் மக்களின் குடும்பங்கள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என சமூகத்தின் பெரும்பகுதியுடன் தொடர்புடைய ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையாகும். குறிப்பாக, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வருமானத்தில் கணிசமான பகுதி மதுவுக்குச் செல்வதும், அதன் விளைவாக குடும்பங்களின் பொருளாதார நிலை சீரழிவதும் நீண்டகாலமாகத் தொடர்கிறது.
மற்ற எல்லா ஓட்டுக் கட்சிகளையும் போல 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு தவெக தலைவர் விஜய் மதுவிலக்கு குறித்து பேசினார். மதுவின் சமூகத் தீமைகளை ஒழிப்பது, மதுவின் பயன்பாட்டைக் குறைப்பது என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும் வகையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவைக் கட்டுப்படுத்துவோம், கடைகளின் எண்ணிக்கையக் குறைப்போம் என்று பேசினார்.
ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு என்ன நடக்கிறது?
மதுவிலக்கை நோக்கி அரசின் ஒட்டுமொத்த கொள்கை நகர்கிறதா? அல்லது டாஸ்மாக்கை இன்னும் திறம்பட நிர்வகித்து, அதிலிருந்து அதிகபட்ச வருவாயை ஈட்டுவதற்கான பாதையில் அரசு செல்கிறதா?
2026-27 பட்ஜெட்டும் அதற்கு முன்பும் பின்பும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் தவெக அரசு மதுவிலக்கை நோக்கி நகரவில்லை மாறாக மது விற்பனையை அதிகரித்து வருமானத்தைப் பெருக்குவதை நோக்கி வெற்றி நடை போடுகிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.
மதுவை ஒழிப்பது ‘பாட்டிலுக்கு 10 ரூபாய்’ ஆக மாறியது
தேர்தலுக்கு முன்பே கூட தவெக மதுவிலக்கை ஒரு மையப் பிரச்சினையாக முன்வைக்கவில்லை. மதுவிலக்கை வலியுறுத்திப் பேசுவதை விட பாட்டிலுக்குப் பத்து ரூபாய் எனப் பாட்டுப்பாடினர் விஜய். இந்தப் பாடலின் மூலம் குடிகாரர்களுக்கு நியாயமான விலையில் மது கிடைப்பதில்லை என்றும், இது உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனையாகவும் முன்னிறுத்தினார்.
மதுவினால் ஏற்படும் தீமைகளையும் மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டிய அவசியத்தையும் மக்களிடையே முக்கியமாக எடுத்துச் செல்வதற்குப் பதிலாக, மது விற்பனையில் நடைபெறும் ஊழலை ஒழித்து சரியான விலையில் மது கிடைக்கும்படிச் செய்யப்போவதாக தேர்தலுக்கு முன்னரே பிரச்சாரம் செய்தார்.
தவெக, ஆட்சிக்கு வந்த பிறகு பாட்டிலுக்கு 20 ரூபாய் வசூலிக்கப்படுவதாக கூறி திமுக இந்தப் பிரச்சனையை தவெக பக்கம் திருப்பி விட்டது. மதுவை ஒழிப்பது குறித்துப் பேசாமல் இரண்டு கட்சிகளும் ஒருவர் மீது மற்றொருவர் மாறிமாறிக் குற்றஞ்சாட்டிக் கொண்டனர்.
பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதைத் தடுப்பது, டாஸ்மாக்கில் நடக்கும் முறைகேட்டை ஒழிப்பது ஆகியவை தவெக அரசின் முக்கிய சாதனைகளாக முன்வைக்கப்பட்டன.
இங்கே நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விசயம் ஒன்றுள்ளது. மது விற்பனையில் நடக்கும் முறைகேட்டைத் தடுப்பது நிர்வாகச் சீர்திருத்தம்; மதுவின் சமூகத் தீமையை ஒழிப்பது சமூகக் கொள்கை.
இந்த இரண்டையும் ஒன்றாகக் காட்டுவதன் மூலம் “மதுவை எப்படி ஒழிப்பது?” என்ற அடிப்படையான கேள்வி “மதுவை விற்கும்போது இடைத்தரகர்கள் பணம் சுருட்டாமல் அரசுக்கு முழு வருவாயை எப்படிப் பெற்றுத் தருவது?” என்று மடைமாற்றப்படுகிறது. இதுவே தவெக அரசின் மதுக் கொள்கையின் முக்கியமான பார்வை.
டாஸ்மாக்: அரசின் நிரந்தர வருவாய் இயந்திரமா?
மதுவிலக்கை நோக்கிச் செல்லும் அரசு, இயல்பாகவே மதுவிலிருந்து கிடைக்கும் வருவாயைச் சார்ந்திருப்பதை படிப்படியாகக் குறைக்க வேண்டும். ஆனால் 2026-27 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் சுமார் ரூ.56,000 கோடி வருவாய் கிடைக்கும் என அரசு எதிர்பார்க்கிறது. இது கடந்த ஆண்டைவிட 4000 கோடி ருபாய் அதிகம். இந்த எண்ணிக்கை வெறும் பட்ஜெட் கணக்கு அல்ல. இந்தத் தொகையை அடைய வேண்டும் என்றால் ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனையை அதிகரிக்க வேண்டும். கடந்த ஆட்சிகளில் செய்தது போல இலக்கை வெற்றிகரமக அடைந்த கடைகளின் ஊழியர்களுக்கு பரிசுத் தொகையும் ஊக்கத் தொகையும் வழங்க வேண்டும்.

ஒரு புறம் மதுவின் தீமையைப் பற்றி பேசுவது. மறுபுறம் மதுவிலிருந்து பல பத்தாயிரம் கோடி ரூபாய் வருவாயை எதிர்பார்த்து நிதித் திட்டமிடுவது. இந்த முரண்பாட்டை எப்படிப் புரிந்துகொள்வது?
இதனை மது குறித்த அரசின் பார்வையில் இருந்துதான் பார்க்க வேண்டும். அரசு மதுவை ஒழிக்க வேண்டிய ஒரு தீமையாகப் பார்க்கிறதா அல்லது தனது நிதித் தேவைகளை நிறைவேற்றும் ஒரு வருவாய் மூலமாகப் பார்க்கிறதா?
இதற்குத் தவெக அரசு இரண்டாவது அணுகுமுறையை பதிலாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் மதுவிலக்கு என்பது தேர்தல் மேடைகளில் சொல்லப்படும் ஒரு முழக்கமாக மட்டுமே இருக்கிறது என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்தியிருக்கிறது.
மதுவிலிருந்து இன்னும் அதிக வருவாய் பெறுவதற்கான குழு!
இதைவிட வெளிப்படையான உதாரணம் ஒன்று இருக்கிறது.
ஜூலை 24-ஆம் தேதியிட்ட அரசாணையின் மூலம் அமைக்கப்பட்ட Revenue Augmentation Committee-க்கு, மனித நுகர்வுக்கான மதுவிலிருந்து அரசின் வருவாயை அதிகரிப்பதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைப்பதும் ஒரு பணியாக வழங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதொரு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை நாம் சாதாரண நிர்வாக நடவடிக்கையாகக் கடந்து செல்ல முடியாது. மதுவிலக்கை நோக்கிய அரசின் முதல் நகர்வே “மதுவின் பயன்பாட்டை எப்படிக் குறைப்பது?” எனச் சிந்திப்பதுதான். ஆனால் விஜய்யின் தவெக அரசோ “மதுவிலிருந்து அரசுக்கு இன்னும் அதிக வருவாயை எப்படிப் பெறுவது?” என யோசிக்கிறது.
தேர்தலுக்கு முன்பு மக்களின் வாழ்வில் மதுவால் ஏற்பட்டுள்ள துயரத்தைப் பற்றிப் பேசுவது; ஆட்சிக்கு வந்த பிறகு அதே மதுவை அரசின் வருவாய் மூலமாகப் பார்ப்பது. இதுதான் தவெக அரசின் மதுக் கொள்கையின் உண்மையான முரண்பாடு.
717 கடைகள் மூடப்பட்டன – ஆனால் அதற்குப் பின்னால் என்ன?
தவெக அரசு பொறுப்பேற்ற உடனே பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டது.
717 கடைகளை மூடியதாக அரசு பெருமை பேசுகிறது. ஆனால் எந்த கடைகள் மூடப்பட்டன, அவை எங்கே இருந்தன, எப்போது மூடப்பட்டன என்ற அடிப்படைத் தகவல்களை மக்களிடம் வெளிப்படையாக வெளியிட அரசு தயங்குகிறது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பினால், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகத்தையும் தனித்தனியாக அனுகி விசாரிக்கும்படி மனுதாரரை தமிழக அரசு அலைக்கழிக்கிறது.
அதுமட்டுமன்றி கடைகள் மூடப்படவில்லை; வேறு இடத்திற்கு மாற்றப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது. ஜூன் தொடக்கத்தில் வெளியான செய்திகளில், 717 கடைகளை மூடும் நடவடிக்கை தொடர்பாக சில கடைகள் 500 மீட்டர் தடைப் பகுதிக்கு வெளியே (பள்ளி, கோவில்களில் இருந்து வெளியே) ‘grey area’ எனப்படும் இடங்களுக்கு மாற்றப்படலாம் என்று TASMAC வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்திகள் வந்தன. அதாவது பெயரளவில் ஒரு கடை மூடப்பட்டாலும், அதன் செயல்பாடு வேறு இடத்தில் தொடரலாம் என்று கூறப்படுகின்றன. அரசின் உத்தரவு 500 மீட்டர் சுற்றளவில் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், முக்கிய பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள கடைகளை மூடுவது என்பதுதான். இதனை மதுவை ஒழிக்கும் நடவடிக்கையாகப் பார்க்க முடியாது. உண்மையில் 717 மதுக்கடைகளை மூடினால் அரசுக்கு வரும் வருமானம் குறைந்திருக்க வேண்டும். ஆனால் அரசோ 56,000 கோடிக்கு மது விற்க இலக்கு நிர்ணயிக்கிறது. அதாவது மூடப்பட்ட மதுக்கடைகளுக்கும் சேர்த்து மற்ற கடைகள் விற்பனை செய்து ஈடுகட்ட வேண்டும் என அரசே இதன் மூலம் சொல்லாமல் சொல்கிறது.
மதுக்கடையிலிருந்து 100 மீட்டருக்குள் தனி பார்!
டாஸ்மாக் பார்கள் தொடர்பாக அரசு கொண்டு வந்துள்ள விதிமுறை மாற்றம் மது குறித்த அரசின் கண்ணோட்டத்திற்கு மிகச் சிறந்த மற்றொரு உதாரணம். முன்னர் டாஸ்மாக் பார் மதுக்கடைக்குள்ளேயோ அல்லது மதுக்கடையை ஒட்டியோ இருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. இதன் காரணமாக நகரங்களுக்குள் இருக்கும் பெரும்பாலான பார்கள் சிறியதாகவே இருக்க வேண்டிய நிலை இருந்தது.

2026 ஜூலை மாதத்தில் இந்த விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. புதிய விதிமுறையின்படி, பார் மதுக்கடையுடன் ஒட்டியிருக்க வேண்டியதில்லை. மதுக்கடையிலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் தனியாக ஒரு பார் அமைக்க வழி செய்திருக்கிறது தவெக அரசு.
மதுவின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக அரசு மதுவை விற்கும் இடங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலையில், இப்போது அதே மதுக்கடையைச் சுற்றியுள்ள 100 மீட்டர் பரப்புக்குள் தனித்தனி மதுபான அருந்தும் இடங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதுதான் மதுவிலக்கை நோக்கிய பயணமா?
நிச்சயமாக இல்லை. இன்னும் சொல்லப்போனால் இது மதுபான நுகர்வுக்கான கட்டமைப்பை ஒழுங்குபடுத்தி விரிவுபடுத்தும் முயற்சியே என்பது தெளிவு.
பார்கள் இனி பெரியதாகவும் வசதியாகவும் இருக்கலாம்
இதோடு பார்களின் குறைந்தபட்ச பரப்பளவும் 15 சதுர மீட்டரிலிருந்து 20 சதுர மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது மதுக்கடையுடன் இணைந்திருக்கும் சிறிய பார் என்ற அமைப்பைத் தாண்டி, அதிக இடவசதியுடன் தனியாக இயங்கக்கூடிய பார்களுக்கு வழி திறக்கப்படுகிறது.
அரசு இதற்கு நிர்வாக வசதி, உணவு சேவை, பார் சூழல் போன்ற காரணங்களை முன்வைக்கிறது.
ஆனால் ஒரு தொழிலாளர்–மக்கள் நலக் கண்ணோட்டத்தில் கேள்வி இன்னும் எளிமையானது:
மது அருந்துவதற்கான இடத்தை இன்னும் வசதியாகவும், இன்னும் விசாலமாகவும் மாற்றுவது மதுவின் பயன்பாட்டைக் குறைக்குமா?
மதுவை விற்கும் இடத்தைச் சுற்றியுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, மது அருந்தும் இடங்களை மேம்படுத்தும் நடவடிக்கை எவ்வாறு மதுவிலக்கை நோக்கிய கொள்கையாக இருக்க முடியும்?
‘டிஜிட்டல் தமிழ்நாடு’ —ஆன்லைனில் மது!
அடுத்ததாக வருகிறது டாஸ்மாக் ஆன்லைன் முன்பதிவு.
ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முறையில், வாடிக்கையாளர் ஆன்லைனில் மதுபானங்களின் இருப்பைக் காணலாம்; விரும்பிய மதுபானத்தைத் தேர்வு செய்யலாம்; ஆன்லைனில் பணம் செலுத்தலாம்; QR code பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட டாஸ்மாக் கடைக்குச் சென்று மதுபானத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இது வீட்டுக்கே மதுபானம் கொண்டு வந்து கொடுக்கும் home delivery திட்டத்தின் முன்னோட்டமன்றி வேறல்ல.
இதன் மூலம் மதுவை வாங்குவதற்கான செயல்முறை டிஜிட்டல் முறையில் எளிமைப்படுத்தப்படுகிறது. மது எங்கு கிடைக்கிறது என்பதை ஆன்லைனில் பார்க்கலாம். எதை வாங்குவது என்பதைத் தேர்வு செய்யலாம். பணம் செலுத்தலாம். QR code மூலம் பெற்றுக்கொள்ளலாம். அப்படியானால் அரசு எந்தப் பொருளை நவீனமயமாக்குகிறது – மதுவிலக்கையா? டாஸ்மாக் விற்பனையையா?
மதுவை எளிதாக அணுக முடியாதபடி செய்ய வேண்டிய அரசு, மதுவை வாங்குவதற்கான செயல்முறையை தொழில்நுட்பத்தின் மூலம் எளிதாக்குகிறது.
மதுவின் வருவாய் — யாருடைய விலைக்கு?
டாஸ்மாக் வருவாயை அரசின் கணக்கில் வெறும் ஒரு எண்ணாகப் பார்க்க முடியாது. ரூ.56,000 கோடி என்பது மக்களின் குடும்பங்களிலிருந்து, குறிப்பாக உழைக்கும் மக்களின் குடும்ப வருமானத்திலிருந்து திரும்பத் திரும்ப உறிஞ்சப்படும் பணத்துடன் தொடர்புடையது.
மதுவுக்காகச் செலவிடப்படும் பணம் குடும்பத்தின் உணவு, கல்வி, சுகாதாரம், வீட்டு தேவைகள் போன்றவற்றிற்குச் செல்ல வேண்டிய வருமானத்தின் ஒரு பகுதியை விழுங்குகிறது. மதுவால் ஏற்படும் பாதிப்பு குடிப்பவர்களுடன் நின்று விடுவதில்லை. அவர்களின் மனைவி, குழந்தைகள், முதிய பெற்றோர் என ஒட்டுமொத்த குடும்பமும் அதன் சுமையைச் சுமக்கிறது.
எனவே, டாஸ்மாக் வருவாய் என்பது அரசின் கணக்கில் “வருவாய்” என்றாலும், சமூகத்தின் மற்றொரு பகுதியில் அது குடும்பங்களின் இழந்த வருமானம். அரசு அந்த வருவாயை அதிகரிப்பதை நிதிச் சாதனையாகக் காட்டும்போது, அந்தப் பணம் உழைக்கும் மக்களின் பையிலிருந்து பிடுங்கப்பட்டது என்பதை மறுக்க முடியாது.
மதுவை ஒழிப்பதா? மதுவை ஒழுங்குபடுத்துவதா?
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை நடந்த நடவடிக்கைகளை ஒரே பட்டியலில் வைத்துப் பார்ப்போம். டாஸ்மாக் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூலைத் தடுப்பது. 717 டாஸ்மாக் கடைகள் மூடல் என்ற நாடகம். அதே காலகட்டத்தில் 2026-27-ல் ரூ.56,000 கோடி டாஸ்மாக் வருவாய் இலக்கு. மதுவிலிருந்து கூடுதல் வருவாய் பெற Revenue Augmentation Committee. மதுக்கடையிலிருந்து 100 மீட்டர் சுற்றளவில் தனிப் பார். பார்களின் குறைந்தபட்ச அளவு 15 சதுர மீட்டரிலிருந்து 20 சதுர மீட்டராக உயர்வு. ஆன்லைனில் மதுபான முன்பதிவு. மது விற்பனையை டிஜிட்டல் முறையில் எளிதாக்கும் நடவடிக்கைகள்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும்; மதுவிலக்கை நோக்கி நகரும் அரசாகக் காட்டவில்லை. மாறாக டாஸ்மாக்கை திறம்பட நிர்வகித்து, மதுவிலிருந்து அதிகபட்ச வருவாய் ஈட்டும் அரசாகத்தான் காட்டுகிறது. மக்களின் வாழ்க்கையை மதுவிலிருந்து விடுவிப்பது தான் அரசின் நோக்கம் என்றால், முதலில் அரசின் பொருளாதாரக் கொள்கையை அதற்கு ஏற்ப மாற்ற வேண்டும். மதுவிலிருந்து கிடைக்கும் வருவாயைச் சார்ந்திருக்கும் தற்போதைய நிலையைப் படிப்படியாகக் குறைப்பதன் மூலமே இது சாத்தியப்படும்.
அதற்கு மாற்றாக கல்வி, சுகாதாரம், உற்பத்தி, வேலைவாய்ப்பு, சிறு–குறு தொழில்கள், வேளாண்மை போன்ற உற்பத்தி மற்றும் சமூக நலத் துறைகளில் அரசு முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.
ஆனால் மதுவிலிருந்து ரூ.56,000 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டே மதுவிலக்கைப் பற்றி பேசுவது ஒரு நகைமுரண். மேலும் அரசுக்கு மது விற்பனையின் மூலம் ஈட்டும் வருவாய் தேவைப்படும் வரை, மதுவிலக்கு என்பது ஒரு முழுமையான அரசுக் கொள்கையாக மாறப்போவதில்லை.
உழைக்கும் மக்களின் குடும்பங்களின் மீது வரி போல மது
அரசின் ஜிஎஸ்டி போன்ற மறைமுக வரிகள் ஏழை–நடுத்தர மக்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்துகின்றன என்ற பொருளாதார உண்மையைப் போலவே, டாஸ்மாக் வருவாயின் சமூகச் சுமையும் பெரும்பாலும் உழைக்கும் மக்களின் குடும்பங்கள் மீதே விழுகிறது.
ஒரு குடும்பத்தின் வருமானத்தில் இருந்து மதுவுக்குச் செல்லும் ஒவ்வொரு ரூபாயும் அந்தக் குடும்பத்தின் வேறு தேவையிலிருந்து பிடுங்கப்படும் ரூபாயாக இருக்கக்கூடும்.
அரசு அந்த ரூபாய்களை ஒன்றாகச் சேர்த்து ரூ.56,000 கோடி என்று கணக்கிடுகிறது.
ஆனால் அந்த எண்ணிக்கைக்குப் பின்னால் எத்தனை குடும்பங்களின் கண்ணீர் இருக்கிறது? எத்தனை குழந்தைகளின் கல்விச் செலவு குறைகிறது? எத்தனை பெண்கள் குடும்பச் செலவை சமாளிக்க முடியாமல் தவிக்கிறார்கள்? எத்தனை உழைப்பாளிகள் உடல்நலத்தையும் உழைப்புத் திறனையும் இழக்கிறார்கள்?
தவெக அரசின் மேற்கூறிய நடவடிக்கைகளிலிருந்து இந்தக் கேள்விகளுக்கான பதிலை தமிழகப் பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியுமா?
- அறிவு


ஜோசப் விஜய் அரசுக்கும் கொள்ளை அடிக்க புதிய திட்டங்கள் வேணாமா? அதுதான் ஆன்லைன் சாராயம் விரைவில் கிடைக்கும், இதற்கு பெயர் பட்ஜெட். மக்கள் பட்ஜெட்டை படிக்கப் போகிறார்கள். குரிஆட்டு மந்தைகள் மக்கள்.