சேவை பெறும் உரிமைச் சட்டம் (Right to Services Act):
மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவிடுமா?
இந்தியாவில் முதன்முதலில் மத்தியப் பிரதேசம் 2010-ஆம் ஆண்டு சேவை பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. பின்னர் ஹரியானா, பீகார், புதுதில்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், கேரளம், கர்நாடகம், இராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் சேவை பெறும் உரிமை அல்லது பொதுச் சேவை உத்தரவாதச் சட்டங்கள் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தியிருக்கின்றன.
அதேபோல் தமிழ்நாட்டிலும் `சேவை பெறும் உரிமைச் சட்டத்தை’க் கொண்டுவர வேண்டும் என்று பாமக 2011-ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதேபோல் மநீம 2022-ஆம் ஆண்டிலிருந்து வலியுறுத்தி வருகிறது. சிபிஐ(எம்) 2026-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கேரளத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் ‘சேவை பெறும் உரிமைச் சட்டத்தை’க் கொண்டுவர பாடுபடுவோம் என்று கூறியுள்ளது.
தற்போது எதிர்க்கட்சியாக உள்ள திமுக, கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் `சேவை பெறும் உரிமைச் சட்டத்தை’க் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்துள்ளது. மேலும், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது. அதேபோல் இச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பாமக, மநீம கட்சிகள் வலியுறுத்தி வந்துள்ளன. இருந்தும், திமுக தனது ஆட்சிக்காலம் முடியும் வரை இச்சட்டத்தை நிறைவேற்றவில்லை.
அதேபோல் அதிமுக ஆட்சிக்காலத்தில், இந்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனக் கோரி உள்துறை முதன்மைச் செயலாளர், சட்டத்துறை முதன்மைச் செயலாளர் என அனைவருக்கும் மனு அளித்திருந்தோம் என தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு கவுன்சில் தலைவர், வழக்கறிஞர் கு.மணவாளன் ஆனந்த விகடனுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில், அப்போதைய அதிமுக அரசு சார்பில், `நாங்கள் ஏற்கெனவே இது போன்ற திட்டத்தை அம்மா திட்டத்துடன் சேர்த்துச் செயல்படுத்திவருகிறோம். அதனால் இந்தத் திட்டத்தை நிறைவேற்றத் தேவையில்லை’ என உள்துறை முதன்மைச் செயலாளர் தரப்பிலிருந்து பதில் கொடுக்கப்பட்டது எனக் கூறியிருக்கிறார்.
தற்போது ஆட்சியிலிருக்கும் தவெக 2026-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் `சேவை பெறும் உரிமைச் சட்டத்தை’க் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்துள்ளது. தவெக மே 10, 2026 அன்று பொறுப்பேற்றது. இன்று ஆகஸ்ட் 8, 2026 வரையில் தவெக ஆட்சி அமைத்து மொத்தம் 90 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இச்சட்டம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
இன்னும் இதனை அழுத்திச் சொல்ல வேண்டும் என்றால், அதிமுக, திமுக போன்ற ஊழல் மலிந்த கட்சிகளை எதிர்த்து, மக்களுக்கு ஊழலும், இலஞ்ச-இலாவண்யமும் அற்ற ஒரு ஆட்சியைக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருப்பதை நம்பி பெருவாரியான மக்கள் தவெக-விற்கு வாக்களித்துள்ளனர் என்பதால் இது கூடுதல் கவனத்தைப் பெறுகிறது.
இருந்தும் இச்சட்டம் இன்றுவரை தமிழகத்தில் அமல்படுத்தப்படவில்லை. மாறாக தமிழ்நாட்டில் சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட 26 வகையான சான்றிதழ்களை 5 நாள்களுக்குள் வழங்குவதைக் கட்டாயமாக்கி அரசாணை பிறப்பிக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தவெக அரசு இப்போது திட்டமிடுவதைப் போலவே, முந்தைய திமுக ஆட்சியிலும் ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 26 வகையான சான்றிதழ்களை விண்ணப்பித்த 16 நாள்களுக்குள் வழங்க வேண்டும் என்று வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு மே மாதம் வருவாய் நிர்வாக ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். மேலும் பல கலந்தாய்வுக் கூட்டங்களில் அதிகாரிகளுக்கு வாய்வழி உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ், திமுக அரசின் சுற்றறிக்கையோ, த.வெ.க. அரசு பிறப்பிக்கவுள்ள அரசாணையோ வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு எந்தவித அழுத்தத்தையும், நெருக்கடியையும் கொடுக்காது. எனவே தவெக அரசின் இந்த முயற்சி புதிய மொந்தையில் பழைய கள்ளாகவே இருக்கும் என்று விமர்சித்துள்ளார். மேலும், குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ்களை வழங்கத் தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க திமுக அரசின் சுற்றறிக்கையிலோ, தவெக அரசின் ஆணையிலோ வழிவகை செய்யப்படவில்லை என்பதுதான் இதற்கான அடிப்படைக் காரணம் எனக் கூறியுள்ளார்.
இவ்வாறு கூறுவதன் மூலம் அதிமுக, திமுக, தவெக ஆகிய கட்சிகளை விட பாமக ஊழல் ஒழிப்பில் மிகத் தீவிரமாக உள்ளது போன்ற ஒரு தோற்றத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தக் கூடும். அவ்வாறு இல்லை என்பதற்கு, 2004–2009 காலகட்டத்தில் ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்த போது தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு MBBS மாணவர் சேர்க்கை அனுமதி/புதுப்பிப்பு வழங்கியதில் முறைகேடு நடந்ததாக CBI குற்றம் சாட்டிய வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
அப்படியென்றால் பாமக, மநீம, சிபிஐ(எம்) கட்சிகள் கூறுவது போல, அரசாங்கத்தின் ஒவ்வொரு சேவையும், இத்தனை நாள்களுக்குள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற வரையறை இல்லாததுதான் இந்தப் பிரச்னைக்கு முக்கியமான காரணமா? என்பதை முதலில் பரிசீலிக்க வேண்டும். அதற்கு கடந்த 16 ஆண்டுகளில், இவர்கள் சுட்டிக்காட்டியபடி இச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள 20 மாநிலங்களில் தற்போதைய நிலையென்ன என்பதைத் தெரிந்து கொண்டாலே போதுமானது. என்றபோதிலும் ஊழலின் ஊற்றுக்கண் எது என்பது பற்றிய பல்வேறு கட்டுரைகள் செங்கனல் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது என்பதை வாசகர்களுக்கு ஒருமுறை நினைவூட்டுகிறோம்.
மேலும் இந்த சேவை பெறும் உரிமைச் சட்டம் Right to Information, Right to Education என்பதுபோல இது Right to Services, அவ்வளவுதான். இதன் பொருள் மற்ற இரண்டு சட்டங்களும் முறையான தகவல்களையும், முறையான கல்வியையும் வழங்கி விட்டதா என்பதை வாசகர்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறோம். சமீபத்தில் கல்வி வணிகமயமாவதை ஒழிப்பதே நீட்டை ஒழிக்கும் வழி என்ற தலைப்பில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாடு, ஏற்பாடு செய்திருந்த அரங்கக் கூட்டத்தின் கானொளிகள் செங்கனல் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளன. அவற்றைப் பார்த்தாலே கல்விக்கான இலட்சியத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
அவ்வாறு இருக்கையில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தின் (Right to Services Act) முக்கியத்துவம் என்று மூன்று விஷயங்களை முன்னிறுத்துகிறார்கள்.
சேவை வழங்குவதற்கான குறிப்பிட்ட காலக்கெடு
சேவை தாமதமானால் அல்லது முறையற்ற முறையில் நிராகரிக்கப்பட்டால் மேல்முறையீடு செய்யும் உரிமை
நியாயமற்ற தாமதத்திற்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு அபராதம் அல்லது பிற நடவடிக்கைகள்
இந்த மூன்று அடிப்படை விஷயங்களையும் ஏற்றுக் கொண்டு அமல்படுத்திய ஜார்க்கண்டில் சமீபத்திய சட்டமன்ற விவாதம் ஒன்றில், Circle Officers (CO) மீது சேவை உரிமைச் சட்டத்தை மீறியதாக புகார்கள் எழுந்துள்ளன. அதில் குழந்தைகளுக்கான சாதி, இருப்பிடம் மற்றும் வருமானச் சான்றிதழ்களை காலக்கெடுவுக்குள் வழங்காமல் தாமதப்படுத்துவதாக சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த விஷயத்தை விதிவிலக்கென்று கடந்து செல்ல முடியாது. ஏனென்றால் சட்டம் அமலில் உள்ளபோது தண்டனை கொடுத்திருக்க வேண்டும். மாறாக ஜார்க்கண்ட் அரசின் அமைச்சர் Deepak Birua, மாநிலத்தில் 2011 முதல் Right to Services Act அமலில் இருப்பதாகவும், ஒரு CO சேவை உரிமையை மீறினால் விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் பதிலளித்திருப்பதை ”பத்தோடு பதினொன்று, அத்தோடு இது ஒன்று” என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும்.
மேலும் ஜார்க்கண்டில் இச்சட்டம் நடைமுறைக்கு வந்து 14 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட நிலையில் சட்டமன்றத்தில் விவாதப்பொருளாவது, பழைய சட்டங்களைப் போல இதுவும் ஒன்றுதான் என்று எடுத்துக்கொள்ளாமல், பாமக, மநீம, சிபிஐ(எம்) கட்சிகளைப் போல் அதிகாரிகளுக்கு தண்டனை கொடுப்பதை இந்தச் சட்டத்தில் சேர்க்காததுதான் ஊழலுக்குக் காரணம், மக்கள் அவதிப்படுவதற்குக் காரணம் என்று கூறுவதை வாயால் சிரிக்க முடியவில்லை.
இந்தச் சட்டத்தின் மூலம், ஒரு குடிமகன் ஒரு அரசுச் சேவைக்காக விண்ணப்பித்த பிறகு, அலுவலகத்திற்குச் சென்று அதிகாரியிடம் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைக்க வேண்டிய நிலைக்குப் பதிலாக, குறிப்பிட்ட காலத்திற்குள் அந்தச் சேவையைப் பெறுவதற்கான சட்டப்பூர்வ உரிமை அவருக்கு வழங்கப்படுகிறது என்பதுதான்.
ஆனால் உண்மை நிலை அவ்வாறு இல்லை என்பதை மராத்திய மாநிலத்தின் அனுபவம் நமக்கு உணர்த்துகிறது. இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) மேற்கொண்ட செயல்திறன் தணிக்கையில், மக்களுக்கு தங்களுடைய உரிமைகள் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதும், அரசுத் துறைகளின் இணையதளங்களில் தேவையான தகவல்கள் போதுமான அளவில் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல் ஒரு உரிமையைக் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பெறமுடியாதபோது, அந்த அதிகாரியின் மீது வழக்குத் தொடுக்க முடியும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் மராத்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கையில், ஆய்வு செய்யப்பட்ட பகுதிகளில் முதல் மேல்முறையீடுகளில் 55% மற்றும் இரண்டாம் மேல்முறையீடுகளில் 78% நிலுவையில் இருந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டு நடைமுறை என்பது மக்களுக்கு சேவை வழங்கும் நடைமுறையை விட வேகமாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை என்பதையே இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மேலும் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் CAG அறிக்கை உணர்த்துவது என்ன? அடிப்படை வசதிகள் கூட இன்னமும் மக்களுக்குச் செய்து கொடுக்கப்படவில்லை என்பதைத்தான் இது நமக்கு உணர்த்துகிறது.
மேலும் மக்களின் முதல் உரிமையைப் பெறுவதற்காகவே அவர்கள் இன்னொரு நிர்வாக நடைமுறையை எதிர்கொள்ள வேண்டிய அவலநிலை ஏற்படுகிறது. உதாரணமாக, ஒரு சான்றிதழ் பெற குறிப்பிட்ட காலத்திற்கு மேல் தாமதமானால், அந்த நபர் நியமிக்கப்பட்ட அதிகாரியை அணுக வேண்டும்; மேல்முறையீடு செய்ய வேண்டும்; மீண்டும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்; தொடர்ந்து அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
இதனால், தேவையற்ற அலுவலகப் பயணங்களைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டமே பல நேரங்களில் கூடுதல் நடைமுறைச் சுமையாக மாறுகிறது. இதன் விளைவாக, மக்களுக்கு காலக்கெடுவுக்குள் சேவை பெறுவதற்கான சட்ட உரிமை இருக்கிறது; ஆனால் அந்த உரிமையை நடைமுறையில் பெறுவதற்கு நேரம், பணம், அறிவு மற்றும் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டிய அவலமும் இருக்கிறது.
இது நன்கு கல்வி கற்ற நகர்ப்புற மக்களுக்கு மீண்டும் மீண்டும் அலுவலகத்திற்குச் செல்வது ஒரு சிரமமாக இருக்கலாம். ஆனால் ஒரு ஏழைத் தொழிலாளி, முதியவர், விவசாயி, புலம்பெயர்ந்த தொழிலாளர் அல்லது மாவட்டத் தலைமையகத்திலிருந்து தொலைவில் வசிக்கும் ஒருவருக்கு இந்தத் தாமதம் என்பது ஊதிய இழப்பு, பயணச் செலவு மற்றும் கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்துவதை மீண்டும் ஒரு சட்டம் இயற்றித் தடுப்பார்களா? பின்னர் “சேவை பெறும் உரிமைச் சட்டத்தை“ மானே, தேனே, பொன்மானே என்று சேர்த்துக் கொண்டு பாடுவதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா? இல்லையென்று நாம் கூறுகிறோம். இருக்கிறது என்று கூறுபவர்களை என்ன செய்வது!?
அதேபோல் மத்தியப் பிரதேசத்தின் அனுபவத்தைப் பற்றிய CAG ஆய்வுகள், சேவை வழங்கும் தனிப்பட்ட அதிகாரிகளின் மீது பொறுப்பு வைக்கப்பட்டாலும், உயர் அதிகாரிகள் மற்றும் துறையின் நிர்வாகத் தலைமையின் மீதான பொறுப்பு போதுமான அளவில் விரிவுபடுத்தப்படவில்லை. எனவே அனைத்து தாமதங்களுக்கும் ஒரு கீழ்நிலை அதிகாரி மட்டுமே காரணமாக இருக்க முடியாது. மேலும் பணியாளர் பற்றாக்குறை; போதிய உள்கட்டமைப்பு இல்லாமை; தெளிவற்ற நடைமுறைகள்; துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு இல்லாமை; பழைய தரவுத்தளங்கள்; தொழில்நுட்பப் பிரச்சினைகள்; அதிகப்படியான ஆவணத் தேவைகள்; மேல்நிலை அலுவலகங்களில் முடிவுகள் தாமதப்படுத்தப்படுதல் ஆகிய நிர்வாகச் சீர்கேடுகளும் சேர்ந்துள்ளன என்று கூறியுள்ளது.
எனவே, ஒரு கீழ்நிலை அதிகாரியை மட்டும் தண்டிப்பது என்பது பிரச்சினையின் அறிகுறியை மட்டுமே தீர்க்குமே ஒழிய; அரசு இயந்திரத்தின் புரையோடிப் போயுள்ள நிறுவன ரீதியான காரணத்தை ஒருபோதும் தீர்க்காது என்ற முடிவுக்கே நாம் வர முடியும்.
இதில் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அனைத்து அரசுச் சேவைகளும் சேவை பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படுவதில்லை. மகாராஷ்டிரத்தில், பல துறைகள் தங்களுடைய அனைத்து சேவைகளையும் முறையாக அடையாளம் காணவில்லை என்றும், அடையாளம் காணப்பட்ட சில சேவைகள்கூட சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படவில்லை என்றும் CAG அறிக்கை கூறுகிறது. இதன் காரணமாக, ஒரு நபர் “அரசு அலுவலகம் வழங்க வேண்டிய சேவை” என்று நினைக்கும் ஒரு சேவை, சட்டரீதியாக சேவை பெறும் உரிமைச் சட்டத்தின் உத்தரவாதத்திற்குள் இல்லாத நிலையே உள்ளது.
எனவே இச்சட்டத்தைப் பயன்படுத்தி அதிகப்பட்சமாக ஜாதிச் சான்றிதழ், பட்டா ஆகியவற்றை வேண்டுமானால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் வழங்க முடியலாம். கல்வி, பேச்சுரிமை, சுகாதார மையத்தில் டாக்டர் இல்லை, செவிலியர் இல்லை, போதுமான கட்டிட வசதி இல்லை, தேவையான உபகரணங்கள் இல்லை போன்ற மக்களுக்கான அடிப்படை சேவைகளை எல்லாம் இந்தச் சட்டத்தின் மூலம் பெறமுடியாது.
அரசுப் பள்ளிகளில் காலை உணவு, மதிய உணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவில் தரம் இல்லை, ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாகவும், ஒரே ஆசிரியர் பல்வேறு பாடங்களை எடுக்க வேண்டிய அவலம் இருப்பதாலும் கல்வித் தரம் வெகுவாகக் குறைந்து வருவது குறித்து இச்சட்டத்தில் எதுவும் சொல்லப்படவில்லை. ஏனென்றால் கல்விக்கான உரிமைச் சட்டம் (Right to Education) என்று ஒரு தனிச்சட்டம் இருக்கிறது. இச்சட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. இருந்தும் தனியார்மயக் கல்வியை ஊக்குவிப்பதற்காக நாலுகால் பாய்ச்சலில் செயல்பட்டு வரும் அரசின் கொள்கை முடிவுக்கு முன்னால் கல்விக்கான உரிமைச் சட்டம் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன இரண்டும் ஒன்றுதான் என்பது அதிமுக, திமுக மட்டுமல்ல தவெக நிலைப்பாடும் அதுவேதான்.
இதற்கெல்லாம் அடிப்படை ஊழல்தான். காலை உணவு, மதிய உணவு வழங்கப்படுவதற்கு ஒதுக்கப்படும் பணம் போதுமானதாக இருக்கிறதா? என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் ஒதுக்கப்படும் பணம் முறையாகச் சென்றடைகிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால், முட்டை, அரிசி, பருப்பு என்று அனைத்திலும் ஊழல்தான் மலிந்திருக்கிறது.
இவற்றையெல்லாம் காவல் நிலையத்தைக் கொண்டு தடுக்க முடியுமா? இலஞ்ச ஒழிப்புத்துறையை முடுக்கிவிடுவதன் மூலம் இவையெல்லாம் சாத்தியமா? என்றால் நிச்சயமாக ”முடியாது”, ”சாத்தியமில்லை” என்றுதான் கூற முடியும். ஏனென்றால் இந்த முறைகேடுகள் நடந்துள்ளன என்பதற்கு ஆயிரம் உதாரணங்கள் உள்ளன. இருந்தும் அதில் தண்டனை பெற்றதற்கான ஒரு உதாரணம் கூட வரலாற்றில் இடம்பெறவில்லை. மாறாக முறைகேடுகள் எதுவும் செய்யவில்லை என்று நீதிமன்றங்கள் அவர்களை விடுவித்திருப்பதற்கும் ஆயிரம் உதாரணங்கள் உள்ளன.
அப்படியென்றால் ஊழலின் ஊற்றுக்கண் எது? ஊழல் இருந்தால்தான் அதனைப் பயன்படுத்திக் கொள்ளையடிக்க முடியும். அதற்கு ஏற்றவாறுதான் திட்டங்களும் போடப்படுகின்றன.
உதாரணமாக தவெக அரசு, தனது சமீபத்திய பட்ஜெட்டில், கூவம் நதியில் படகு சவாரி, நதிநீர் இணைப்பு, செக் டேம் (ஆற்றின் குறுக்கே சிறிய அணை கட்டுவது) ஆகியவற்றிற்குப் பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது அதிமுக, திமுக உள்ளிட்ட ஆண்ட கட்சிகள் இதற்கு முன்பும் பணம் ஒதுக்கியுள்ளன. இவற்றில் ஏதாவது ஒன்று இன்றுவரை நிறைவேற்றப்பட்டிருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. முதலில் ஒதுக்கப்படும் பணத்தின் அளவு அதனைச் செயல்படுத்துவதற்கு ஏற்றாற்போல் ஒதுக்கப்படுகிறதா என்றால் நிச்சயமாக இல்லை. பின்னர் எதற்காக இத்திட்டங்கள் போடப்படுகின்றன என்றால் நிச்சயமாக அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பொறுக்கித் தின்பதற்கான ஏற்பாடுதான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
எனவே ஒருவேளை தவெக அரசு ”சேவை பெறும் உரிமைச் சட்டத்தை“ பாமக, மநீம, சிபிஐ(எம்) கூறுவதைப் போல் தமிழ்நாட்டில் அமல்படுத்தினால், அதன்மூலம் ஊழல் ஒழிப்பில் தவெக அரசு மிகத் தீவிரமாகச் செயல்படுவது போல் பாவனை செய்வதற்கு வேண்டுமானால் பயன்படுமேயன்றி, மற்றபடி உப்புக்கல் அளவிற்குக் கூட மக்களுக்குப் பயன்படாது என்பது திண்ணம். இது இன்று நேற்றல்ல, காலகாலமாக மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு ஏற்பாடுதான் என்பதையே அமல்படுத்திய மாநிலங்களின் படிப்பினையில் இருந்து கற்றுக்கொள்ள முடிகிறது.
இதற்கு தவெக-வும், அதன் தலைவர் விஜய்யும் விதிவிலக்கல்ல. மாறாக ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான் என்பதையே சமீபத்திய பட்ஜெட்டும் நமக்கு உணர்த்துகின்றன. எனவே சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மக்களிடம் விரைவில் அம்பலப்பட்டு, விஜய் எனும் மாயையிலிருந்து மக்கள் விரைவிலேயே வெளிவருவார்கள்.
- மகேஷ்
