முசாபர்நகர் கலவர வழக்கு வாபஸ் :
கலவரம் செய்வது ஒரு பொதுநல சேவை

கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு என எந்தக் கொடூரக் குற்றத்தைச் செய்தவராக இருந்தாலும் கூட இந்து மதத்திற்காகப் போராடியவர்கள் என அவர்களைக் காவிக் கூட்டம் கொண்டாடுகிறது. அவர்கள் செய்தது மதத்திற்கான சேவை எனக் கூறி அவர்களைக் காப்பாற்றுவது பாஜக அரசின் கடமை என கட்டமைக்கப்படுகிறது.

முசாபர்நகர் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறும் யோகி ஆதித்தியநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசின் கோரிக்கைக்கு அம்மாநிலத்தின் சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

2013-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் நடைபெற்ற மதக்கலவரம், இந்தியாவில் சமீபத்தில் நடந்த மிக மோசமான மதவெறி வன்முறைச் சம்பவங்களில் ஒன்றாகும். இந்தக் கலவரத்தில் 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்; சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தக் கலவரம் திடீரென வெடித்த ஒன்றல்ல. படுகொலைகள், பொய்ப்பிரச்சாரங்கள், பழிவாங்கும் அரசியல், மகாபஞ்சாயத்துகள், மதவெறிப் பிரச்சாரங்கள், வெறுப்புப் பேச்சுகள் என பல கட்டங்களைக் கடந்து அது மிகப்பெரிய வன்முறையாக மாறியது.

இந்த வன்முறையுடன் தொடர்புடைய வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் பலரும் இன்று பா.ஜ.க.வின் முக்கியமான அரசியல் தலைவர்களாக உயர்ந்திருக்கின்றனர்.

மத்திய அமைச்சராக இருந்த சஞ்சீவ் பால்யான், உத்தரப் பிரதேச அமைச்சர்களாக இருந்த சுரேஷ் ராணா, கபில் தேவ் அகர்வால், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சங்கீத் சோம், உமேஷ் மாலிக் உள்ளிட்ட பலர் இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டனர்.

2013-ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இவர்களில் பலர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர். அதன்பிறகு பல ஆண்டுகளாக வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன.

ஆனால், குற்றம் நிரூபிக்கப்பட்டதா அல்லது நிரூபிக்கப்படவில்லையா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும் முன்பே, அந்த வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியை பாஜக அரசு தொடங்கியது.

அதன் உச்சகட்டமாக, 2026 ஆகஸ்டு மாதத்தில் முசாபர்நகர் சிறப்பு எம்.பி.–எம்.எல்.ஏ. நீதிமன்றம் 2013 கலவரத்துடன் தொடர்புடைய வழக்கு ஒன்றை வாபஸ் பெற உத்தரப் பிரதேச அரசுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதில் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள் மட்டுமல்லாமல், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.பி.யும் குற்றம்சாட்டப்பட்டிருந்தார். நீதிமன்றம் இந்த வழக்கை “அரசியல் போட்டியால் தூண்டப்பட்டது” எனக் குறிப்பிட்டு, வழக்கைத் தொடர்வதைவிட வாபஸ் பெறுவது பொதுநலனுக்கானது எனக் கூறியுள்ளது[1].

2013-ல் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட ஒரு வழக்கு, 13 ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென “அரசியல் போட்டியால் உருவான வழக்கு” ஆக மாறியது எப்படி? எனப் பார்த்தால்தான் யோகி அரசு எவ்வாறு இது போன்ற வழக்குகளை நீர்த்துப் போகச் செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

கலவரத்தின் தொடக்கம்

2013 ஆகஸ்ட் 27 அன்று முசாபர்நகர் மாவட்டத்தின் கவால் கிராமத்தில் ஷாநவாஸ் என்ற இஸ்லாமிய இளைஞர் கொல்லப்பட்டார். அதற்கு முன்னதாக சச்சின் மற்றும் கௌரவ் என்ற இரண்டு ஜாட் இளைஞர்கள் கொல்லப்பட்டிருந்தனர். சாதாரண வாகன விபத்து குறித்த சண்டை மூன்று இளைஞர்களின் கொலை செய்யப்படுவது வரை சென்றது. இந்த மூன்று கொலைகளும் அப்பகுதியில் ஏற்கெனவே நிலவி வந்த மதப் பதற்றத்தை மிகப்பெரிய அளவில் தூண்டின. இரண்டு ஜாட் சமூக இளைஞர்கள் அடித்துக் கொல்லப்படுவது போன்ற போலி வீடியோ உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது. அந்த வீடியோவும், ஜாட் இளைஞர்கள் கொலை குறித்து பாஜகவின் முக்கிய தலைவர்களின் பிரச்சாரமும் கலவரத்தை தூண்டின.[2]

இதனைத் தொடர்ந்து ஜாட் சமூகத்தினரை ஒன்று திரட்டும் வகையில் மகாபஞ்சாயத்துகள் நடத்தப்பட்டன.

2013 ஆகஸ்ட் 31 அன்று நாக்லா மந்தோர் பகுதியில் நடத்தப்பட்ட மகாபஞ்சாயத்து இந்த கலவரத்தின் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. அப்போது அப்பகுதியில் தடையுத்தரவு அமலில் இருந்தபோதிலும், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மத்தியில், பாஜக மற்றும் பல இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்கள் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசினார்கள். இந்த மகாபஞ்சாயத்தைத் தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன

கலவரம்: 60-க்கும் மேற்பட்ட உயிர்கள், 50,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2013-ல் முசாபர்நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் வன்முறை பரவியது. 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக முஸ்லிம் குடும்பங்கள் பெருமளவில் இடம்பெயர்ந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

ஆனால் இந்த கலவரத்தின் விளைவு உயிரிழப்புகளையும் இடம்பெயர்வுகளையும் தாண்டிச் சென்றது.

முசாபர்நகர் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் ஜாட்–முஸ்லிம் சமூகங்களுக்கிடையே உருவாக்கப்பட்ட பிளவு, அடுத்தடுத்த தேர்தல் அரசியலிலும் முக்கியமான பங்காற்றியது.

கலவரத்துடன் தொடர்புடைய பல பா.ஜ.க. தலைவர்கள் பின்னர் தேர்தல்களில் வென்று மாநில அளவிலும் ஒன்றிய அளவிலும் அமைச்சர்களாகவும், கட்சிக்குள்ளும் முக்கிய பதவிகளுக்கு உயர்ந்தனர்.

கலவரத்துக்குப் பிறகு ஒரு சில நாட்கள் மட்டுமே குற்றம்சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சங்கீத் சோம், சுரேஷ் ராணா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டாலும், பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். அதன்பிறகு வழக்குகள் நீதிமன்றத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் நிலுவையில் இருந்தன.

510 வழக்குகள் – 6,869 குற்றம்சாட்டப்பட்டவர்கள்

முசாபர்நகர் கலவரத்துக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அளவு மிகப்பெரியது. 2013 கலவரத்துடன் தொடர்புடையதாக மொத்தம் 510 வழக்குகள் ஐந்து மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதில் 6,869 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். இந்த வழக்குகளில் முக்கிய தலைவர்கள் மீதான வழக்குகள் உட்பட 77 வழக்குகளை இதுவரை யோகி அரசு திரும்பப் பெற்றுள்ளது.[3]

ஒரு மிகப்பெரிய மதக்கலவரத்துடன் தொடர்புடைய வழக்குகளில், அரசே குற்றவியல் வழக்குகளைத் தொடர்ந்து நடத்த வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறது. இந்த வழக்குகளைத் திரும்பப் பெறும் நடவடைக்கை யோகியாதித்யநாத் உத்தர பிரதேச முதல்வராகப் பதவியேற்ற உடனேயே தொடங்கியது.

யோகி அரசு வந்த பிறகு தொடங்கிய வழக்கு வாபஸ் நடவடிக்கை

2017-ல் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு உத்தரப் பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு “அரசியல் காரணங்களால் தொடரப்பட்ட வழக்குகள்” எனக் கூறி வழக்குகளை வாபஸ் பெறும் நடவடிக்கைகள் தொடங்கின. முசாபர்நகர் கலவர வழக்குகளும் இந்த நடவடிக்கையின் ஒரு பகுதிதான்.

ஆரம்பத்தில் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்ற அரசின் விருப்பத்தை மாவட்ட நிர்வாகமே ஏற்கவில்லை. 2018-ல் முசாபர்நகர் மாவட்ட நிர்வாகத்திடம் அரசாங்கம் சில வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து கருத்து கேட்டது.

அதில் பா.ஜ.க. தலைவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் இருந்தன.

ஆனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு வழக்கறிஞர் தரப்பு, அந்த வழக்குகளை வாபஸ் பெறுவது சரியல்ல என்று தெரிவித்தனர். இந்த வழக்குகளில் ஏற்கெனவே போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை எடுத்துக்கொண்டு வழக்கை விசாரணைக்கு ஏற்றிருந்தது. எனவே வழக்குகளை வாபஸ் பெறுவது ஏற்புடையது அல்ல என மாவட்ட அதிகாரிகள் கூறினர். ஆனால் யோகி அரசு தனது முயற்சியைக் கைவிடவில்லை.

முசாபர்நகர் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த சஞ்சீவ் பால்யான், மாவட்ட நிர்வாகத்துக்கு இறுதி அதிகாரம் இல்லை என்றும், வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து இறுதி முடிவை மாநில அரசே எடுக்கும் என்றும் கூறி வழக்குத் தொடர்ந்தார். அதன் பிறகு 2020 மாநில அரசு படிப்படியாக பல வழக்குகளைத் திரும்பப் பெற்று வருகிறது.

இதற்கிடையில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்றவியல் வழக்குகளை மாநில அரசுகள் தங்கள் விருப்பப்படி வாபஸ் பெறுவது குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் அது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் விஜய் ஹன்சாரியாவை அமிக்கஸ் கியூரியாக நியமித்தது. அவரது ஆய்வில் முசாபர்நகர் கலவரம் தொடர்பான 77 வழக்குகளை உத்தரப் பிரதேச அரசு வாபஸ் பெற்றிருப்பதும், அந்த வழக்குகளை வாபஸ் பெறுவதற்கான அரசாணைகளில் காரணங்கள் முறையாகக் குறிப்பிடப்படவில்லை என்பதும் அம்பலமானது.[4]

இருந்தும் யோகி அரசு வழக்குகளைத் திரும்பப் பெறுவதை நிறுத்தவில்லை. தற்போது மீண்டும் மற்றொரு வழக்கை வாபஸ் செய்துள்ளது. இந்த முறை அரசின் விண்ணப்பத்துடன் ஆளுநரின் எழுத்துப்பூர்வ அனுமதியும் இணைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மிக முக்கியமானது. இந்த வழக்கு “அரசியல் போட்டியால் தூண்டப்பட்டது” என்று கூறியிருக்கும் நீதிமன்றம், வழக்கைத் தொடர்வதைவிட அதனை முடிவுக்குக் கொண்டுவருவது பொதுநலனுக்கு ஏற்றது என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் சமூகத்துக்கும் பொதுமக்களுக்கும் சிறப்பாக சேவை செய்ய முடியும் என்றும் கூறியிருக்கிறது.

அதாவது 2013-ல் போலீசார் விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, நீதிமன்றம் வழக்கை எடுத்துக்கொண்டபோது இது வெறும் “அரசியல் போட்டியால் உருவாக்கப்பட்ட வழக்கு” என்று நீதிமன்றத்துக்குத் தெரியவில்லை.

2018-ல் வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கருத்து கேட்டபோது, அந்த நிர்வாகம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையும் நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை. 2021-ல் இதே போன்ற வழக்குகளை வாபஸ் பெறுவதில் உச்சநீதிமன்றம் தலையிட்டதும், அதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் வெளியான முறைகேடுகள் தவறுகள் குறித்தும் கவலையில்லை. இதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மக்களுக்கு சிறப்பாக சேவை செய்வார்கள் எனக் கூறி அவர்கள் மீதான வழக்கை திரும்பப் பெற நீதிமன்றம் அனுமதிக்கிறது. கலவரம் செய்வது தான் அவர்கள் இதுகாறும் ஆற்றியிருக்கும் பொது நலச் சேவையாக இருக்கும் போது அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளது.

கலவரத்தில் ஈடுபடும் காவி பயங்கரவாதிகளை பாஜக அரசு காப்பாற்றுவது என்பது முசாபர்நகர் வழக்கில் மட்டுமல்ல பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் மதவெறி வன்முறை, வெறுப்புப் பேச்சு, பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நடத்தப்பட்ட வன்முறை உள்ளிட்ட குற்றங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களை அம்மாநில அரசுகள் காப்பாற்றியிருக்கின்றன. வழக்கிலிருந்து விடுவிப்பது, வழக்கை முடிக்காமல் இழுத்தடிப்பது, குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் கூட ஜாமின் கொடுத்து வெளிய அனுப்புவது, தண்டனைக் காலத்தைக் குறைத்து அவர்களை விடுதலை செய்வது என எல்லா உள்ளடி வேலைகளையும் செய்து பாஜக அரசுகள் அவர்களைக் காப்பாற்றுகின்றன.

கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு என எந்தக் கொடூரக் குற்றத்தைச் செய்தவராக இருந்தாலும் கூட இந்து மதத்திற்காகப் போராடியவர்கள் என அவர்களைக் காவிக் கூட்டம் கொண்டாடுகிறது. அவர்கள் செய்தது மதத்திற்கான சேவை எனக் கூறி அவர்களைக் காப்பாற்றுவது பாஜக அரசின் கடமை என கட்டமைக்கப்படுகிறது.

இதன் மூலம் அவர்கள் நிறுவுவது ஒன்றுதான், சனாதன இந்து தர்மத்தைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் நிகழ்த்தப்படும் வன்முறைகள் எதுவாக இருந்தாலும் அதற்குக் காவிகளின் ஆட்சியில் சட்ட ரீதியில் தண்டை கிடையாது என்பதுதான் அது.

  • சந்திரன்

[1] https://www.outlookindia.com/national/muzaffarnagar-riots-up-court-drops-case-against-bjp-leaders-sp-mp?utm_source=chatgpt.com

[2] https://cjp.org.in/speeches-video-by-sangeet-som-and-rana-fuelled-communal-riots-in/

[3] https://www.telegraphindia.com/india/2013-muzaffarnagar-riots-adityanath-government-withdraws-77-cases/cid/1827982?utm_source=chatgpt.com

[4] https://www.telegraphindia.com/india/2013-muzaffarnagar-riots-adityanath-government-withdraws-77-cases/cid/1827982?utm_source=chatgpt.com

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன