கியோஞ்சரின் கனிம வளமும், திருவள்ளூரின் அம்மோனியா மரணங்களும் : வளர்ச்சி என்பது யாருக்கானது?
கடந்த ஜூன் 21-ஆம் தேதியன்று, திருவள்ளூரில் உள்ள செயின்ட் பீட்டர் & பால் எக்ஸ்போர்ட்ஸ் என்ற இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவின் காரணமாக ஏழு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதன்பின்னர் சுமார் 80 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலும் 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த 18 பேரும் இளம் பெண் தொழிலாளர்கள். அவர்களில் 16 வயது சிறுமியும் ஒருவர். இந்தக் கொடூரச் சம்பவம் பற்றிய செய்தி அனைவருக்கும் நினைவிருக்கலாம்.
வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையன்று இந்த அம்மோனியா கசிவு ஏற்பட்டுள்ளது. முந்தைய நாளின் 12 மணி நேர இரவுப் பணியை முடித்துவிட்டு, பல தொழிலாளர்கள் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள அறைகளில் தூங்கிக்கொண்டிருந்தனர். வாயுக் கசிவு ஏற்பட்ட நேரத்தில் அங்கு எச்சரிக்கை ஒலி (siren), எச்சரிக்கை அமைப்பு, அவசரகால வெளியேற்ற வழிமுறை அல்லது முதலுதவி வசதி என எதுவுமே இல்லை. இச்சம்பவத்திற்கு முன்பும் இதே ஆலையில் பல முறை அம்மோனியா கசிவு ஏற்பட்டதாக அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
உலகச் சந்தைக்காக உழைக்கும் மலிவான தொழிலாளர்கள்
கடந்த பத்தாண்டுகளில் இந்தியா கடல் உணவுத்துறையில் விரைவான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இந்தியாவிலிருந்து உயர்தர கடல் உணவுகள் சுமார் 38 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் அமெரிக்கா, சீனா, தாய்லாந்து, ஜப்பான், வியட்நாம், கனடா, ஸ்பெயின், பெல்ஜியம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நடப்பு ஆண்டில் மட்டும் இந்தியாவிலிருந்து 19,72,018 மெட்ரிக் டன் அளவிலான கடல் உணவுகள் ₹73,890.46 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த மதிப்பை வரும் ஐந்து ஆண்டுகளில் ₹2.6 லட்சம் கோடியாக உயர்த்துவதே இலக்கு என்கிறார் ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்.
நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் மொத்த கடல் உணவுகளில் உறைந்த இறாலின் (frozen shrimp) மூலமே அதிகளவில் வருவாய் ஈட்டப்படுகிறது. நடப்பு ஆண்டில் மட்டும் மொத்த கடல் உணவு ஏற்றுமதியில் 66.52 விழுக்காடு வருவாய் இறால் ஏற்றுமதி மூலமே பெறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த ஏற்றுமதி வளர்ச்சியின் மறுபுறத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் மோசமான பணிச்சூழல் உள்ளது. ஆந்திராவின் கடலோரப் பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நெல்லூர் மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களில் இருந்து 77 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
இறாலைப் பதப்படுத்தும்போது சுமார் 4 டிகிரி செல்சியஸ் குளிர்ந்த நிலையில் பணிபுரிய வேண்டியிருப்பதால், இறாலை உரிக்கும் தொழிலாளர்களின் விரல்கள் மரத்துப்போகும் நிலை ஏற்படுகிறது. கேரள மாநிலத்தில் ஒரு கிலோ இறாலை உரிப்பதற்கு வழங்கப்படும் ₹16 கூலியை ₹20 ஆக உயர்த்தக் கோரியும், உரித்த இறாலின் எடையை ஆலை நிர்வாகம் தவறாகக் கணக்கிடுகிறது என்றும் அங்குள்ள பெண் தொழிலாளர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு போராடினர்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) 2023-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இறால் பதப்படுத்தும் ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களில் 70 முதல் 80 சதவீதம் பேர் பெண்கள் என்றும், அவர்களில் 50 சதவீதம் பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இப்புலம்பெயர்ந்த பெண்களில் பெரும்பாலானோர் வெளியுலகத் தொடர்பின்றி தொழிற்சாலை வளாகங்களிலேயே தங்க வைக்கப்படுகின்றனர்.
திருவள்ளூரில் உள்ள செயின்ட் பீட்டர் & பால் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் இதற்கு விதிவிலக்கல்ல. அங்கு பணிபுரிந்த சுமார் 300 தொழிலாளர்களில் பெரும்பாலோர் ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் அசாம் மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த இளம் பெண்கள். ஒப்பந்ததாரர்களால் வட இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டு இங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
கியோஞ்சரிலிருந்து 1,500 கி.மீ. தொலைவுக்கு ஏன் வந்தார்கள்?
இந்த ஆலையில் உயிரிழந்த 18 பெண் தொழிலாளர்களில் 16 பேர் ஒடிசாவின் கனிமவளம் மிக்க கியோஞ்சர் (Keonjhar) மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் ஜார்க்கண்டையும், அசாமையும் சேர்ந்தவர்கள்.
கியோஞ்சர் மாவட்டத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்த இந்தத் தொழிலாளர்களில் பலர் ‘ஜுவாங்’ (Juang) எனும் மிகவும் பாதிக்கப்பட்ட பழங்குடியினச் சமூகத்தைச் (PVTG) சேர்ந்தவர்கள். கியோஞ்சர் மாவட்டத்தின் பரப்பளவில் 37 சதவீதம் காடுகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு விவசாயமே முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. அங்குள்ள மொத்த வேலைவாய்ப்பில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு விவசாயத்தைச் சார்ந்தே இருக்கிறது. கியோஞ்சர் மக்கள் தொகையில் 45 சதவீதம் பழங்குடியினரும், 12 சதவீதம் பட்டியல் சாதியினரும் வசித்து வருகின்றனர்.
உயிரிழந்த 16 வயது சிறுமி உட்பட ஜுவாங் இனப் பழங்குடிப் பெண்கள் சில மாதங்களுக்கு முன்புதான் அத்தொழிற்சாலையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் இதற்கு முன் தங்கள் கிராமங்களை விட்டு வெளியே சென்றதே இல்லை.
இந்த 16 வயது சிறுமியின் விஷயத்தில், தொழிற்சாலையில் வேலைக்கு அமர்த்துவதற்காக ஒப்பந்ததாரர் அவரது ஆதார் ஆவணத்தில் முறைகேடு செய்திருப்பது பின்னர் தெரியவந்துள்ளது. சிறுமியின் வயது தொடர்பான ஆவணங்களில் செய்யப்பட்ட இந்த மோசடி, அவர் உயிரிழந்த பிறகு அவரது குடும்பத்தினருக்கான இழப்பீட்டை பெறுவதிலும் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்குச் செல்ல வேண்டிய இழப்பீடு ஒடிசாவில் உள்ள மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டபோது, இந்த ஆவண மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஒரு சிறுமியை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்துவதற்காக அவரது அடையாள ஆவணத்திலேயே முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்தச் சிறுமி உயிரிழந்த பிறகும், அந்த போலி ஆவணமே அவரது குடும்பத்தினர் நிவாரணம் பெறுவதற்கு தடையாக மாறியுள்ளது.
இறந்துபோன தங்கள் மகள்களின் உடல்களைப் பெற்றுக்கொண்ட அந்தப் பழங்குடியினப் பெற்றோர்களுக்கு, ‘வாயுக் கசிவு’ என்றால் என்னவென்று கூடப் புரிந்துகொள்ள வாய்ப்பில்லாத நிலையில், தங்கள் மகளின் மரணத்திற்குப் பிறகும் நிர்வாக மற்றும் ஆவணச் சிக்கல்களுடன் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அப்படியானால், இந்தப் பெண்களை ஒடிசாவின் கிராமங்களிலிருந்து 1,500 கி.மீ. தொலைவில் உள்ள திருவள்ளூருக்கு வரச் செய்தது எது?
ஆளும் வர்க்கம் பீற்றிக்கொள்ளும் தாராளமயக் கொள்கையின் பொருளாதார வளர்ச்சியால் உருவாக்கப்பட்ட தொழில் வாய்ப்புகளைத் தேடியோ, தமிழ்நாட்டில் ஒரு சிறந்த வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையிலோ ஜுவாங் பழங்குடிப் பெண்கள் இங்கு புலம்பெயரவில்லை.
வறுமையால் துரத்தப்படும் பழங்குடியினர்
வறுமை, வேலையின்மை, அரைகுறையாகக் கட்டப்பட்ட வீடுகள், காட்டைச் சார்ந்த வாழ்வாதார வாய்ப்பின்மை, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் தோல்வி, பயிர்செய்வதற்கு நிலம் இல்லாத நிலை போன்ற காரணங்கள் இப்பெண்களை கியோஞ்சரின் கிராமங்களை விட்டு வெளியே துரத்துகின்றன.
அம்மாவட்டத்தின் பல கிராமங்களில் குழாய்வழி குடிநீர் வசதியும் மின்சார வசதியும் கிடையாது. மலைப்பகுதி என்பதால் சாலை வசதிகளும் மோசமாக உள்ளன. அங்குள்ள மாணவர்களில் பலர், குறிப்பாக பெண்கள், ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் வறுமையினால் பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்திவிடுகின்றனர்.
இந்த ஜுவாங் பெண்களின் ஆறு குடும்பங்கள் கதவுகளும் ஜன்னல்களும் இல்லாத ஒற்றையறை வீட்டிலேயே வசித்து வருகின்றன. அவர்களின் வீடுகளைச் சீரமைக்கத் தேவையான பணத்தை ஈட்டுவதற்காக தமிழ்நாட்டில் உள்ள செயின்ட் பீட்டர் & பால் நிறுவனத்தில் அப்பெண்கள் வேலைக்குச் சேர்ந்துள்ளனர்.
“எங்களது வீட்டைச் சீரமைப்பதற்காகவே தமிழ்நாட்டிற்கு வேலைக்குச் சென்ற எங்களது மகள்களின் உயிர்கள் பறிபோய்விட்டன” என அவர்களது பெற்றோர்கள் வேதனையுடன் ‘கணதந்திரிக் அதிகார் சுரக்ஷா சங்கம்’ என்ற அமைப்பிடம் தெரிவித்துள்ளனர்.
ஒடிசாவின் வளர்ச்சி யாருக்காக?
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த ஒடிசா மாநில பா.ஜ.க. முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ஒடிசா மாநிலம் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் செழிப்போடு புதிய பாதையில் வேகமாக முன்னேறி வருவதாகக் கூறினார். மக்களுடன் நேரடித் தொடர்பு மற்றும் குறைகளை விரைவாகத் தீர்த்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் பா.ஜ.கவின் ‘இரட்டை எஞ்சின்’ அரசு மக்களின் நம்பிக்கையைப் பெற்று வருவதாகவும் பெருமிதத்துடன் பேசினார்.
ஆனால் இதற்கு மாறாக, ஒரு மரக்கதவைத் தங்கள் வீட்டில் பொருத்த வேண்டும் என்பதற்காக ஒடிசாவின் கியோஞ்சரிலிருந்து தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்த இந்த ஜுவாங் பழங்குடியினப் பெண்கள் தமது உயிரை இழந்துள்ளனர்.
இப்பெண்களைப் போல இலட்சக்கணக்கான ஒடிசா இளைஞர்கள் தமது வயிற்றுப் பிழைப்பிற்காக பிற மாநிலங்களுக்கு வேலை தேடிப் புலம்பெயர்கின்றனர்.
ஒடிசா புலம்பெயர்வு ஆய்வு 2023-ஆம் ஆண்டின் அறிக்கையின்படி (Odisha Migration Survey 2023), சுமார் 4 கோடி மக்கள் தொகை கொண்ட கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவில் 28.2 லட்சம் மக்கள் வேறு மாநிலங்களுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர்.
ஒடிசா இளைஞர்கள் சராசரியாக 23 வயதிலும், குறிப்பாக பெண்கள் 20 வயதிலும் புலம்பெயர்கின்றனர். சராசரியாக ஐந்து குடும்பங்களில் ஒரு குடும்பம் வேலை தேடி பிற மாநிலங்களுக்குப் புலம்பெயர்ந்துள்ளது. இதில் பழங்குடியினரும், பட்டியல் சாதியினருமே அதிகளவில் புலம்பெயர்கின்றனர். ஆனால் பிற உயர்சாதி வகுப்புகளை ஒப்பிடும்போது, பட்டியல் இன மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே பிற மாநிலங்களிலிருந்து குறைந்த அளவில் பணப்பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன.
கடந்த ஜூன் மாதத்தில், ஒடிசாவில் பா.ஜ.க. மாநில அரசு ஆட்சியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, பிரதமர் மோடி “விகாஸ் ரா தாரா, ஒடிசா சாரா” (ஒடிசா முழுவதும் வளர்ச்சி அலை) எனும் நிகழ்ச்சியில் ₹47,000 கோடி முதலீட்டைத் தொடங்கிவைத்துப் பேசினார்.
ஒடிசாவின் வளங்களை வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான வாய்ப்புகளாக அரசு மாற்றி வருவதாக மோடி அக்கூட்டத்தில் பேசினார். ‘உத்கர்ஷ் ஒடிசா’ என்ற திட்டத்தின் மூலம் ஒடிசாவில் ஏற்கனவே சுமார் ₹20 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு முன்மொழிவுகளைப் பெற்றுள்ளதாகவும், ₹3.5 லட்சம் கோடிக்கும் அதிகமான பல மாபெரும் திட்டங்கள், மின்சாரத் துறையில் ₹6,000 கோடி முதலீடு, சம்ருத்தா நகரத் திட்டத்தின் மூலம் நகர்ப்புற வளர்ச்சி என தனது இரட்டை எஞ்சின் அரசைப் பற்றி பெருமிதத்துடன் பேசினார்.
ஆனால் மோடி கூறும் புதிய தாராளமயக் கொள்கையின் மூலம் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் ஒடிசாவின் இயற்கை வளங்களை அழித்தும், அங்குள்ள பூர்வீகக் குடிமக்களை விரட்டியும் உருவாக்கப்படும் வளர்ச்சி யாருக்கானது?
வளமான கியோஞ்சர்; வறுமையில் வாழும் மக்கள்
நாட்டில் புதிய தாராளமயக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பிறகு ஒடிசாவின் இயற்கை வளங்களும், கனிமச் சுரங்கங்களும் வேகமாகக் குறிவைக்கப்பட்டு தனியார் கார்ப்பரேட்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டு வருகின்றன.
எந்த கியோஞ்சர் மாவட்டத்திலிருந்து வந்து பழங்குடிப் பெண்கள் உயிரிழந்தார்களோ, அதே மாவட்டத்தில் டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபிள்யூ (JSW), ஆர்செலர் மிட்டல், எஸ்ஸெல், த்ரிவேணி எர்த் மூவர்ஸ் மற்றும் ஒடிசா சுரங்கக் கழகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் 171 சுரங்கங்களை வைத்துள்ளன. ஆனால் அம்மாவட்டத்தில் வசிக்கும் மக்களோ தமது விளைநிலங்களையும் வாழ்வாதாரங்களையும் பறிகொடுத்து வெளிமாநிலங்களுக்கு விரட்டப்படுகின்றனர்.
கியோஞ்சரில் மட்டுமல்லாமல் ஒடிசா முழுவதுமே பல பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது ஆலைகளை நிறுவி அங்குள்ள வளங்களைப் பயன்படுத்தி கொள்ளை இலாபம் ஈட்டி வருகின்றன. ராஜ்கங்பூரில் டால்மியா, ஜார்சுகுடாவில் பிர்லா குழுமம், பெல்பஹாரில் டாடா, ஹிராகுட்டில் பிர்லா, பர்கரில் ஜே.கே. பேப்பர், எல் & டி, உத்கல் அலுமினா, வேதாந்தா அலுமினா உள்ளிட்ட நிறுவனங்கள் வளர்ச்சி என்ற பெயரில் ஒடிசாவின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பயன்படுத்தி வருகின்றன.
கியோஞ்சர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 2016-17 ஆம் ஆண்டில் சுமார் ₹5 லட்சம் கோடி அளவில் கனிமவளம் வெட்டி எடுக்கப்பட்டிருக்கலாம் என்கிறது ரூபே இணையதளம். ஆனால் அங்குள்ள பழங்குடி இளைஞர்கள் பதின்ம வயதிலேயே வாழ வழியில்லாமல் அவர்களது கிராமங்களை விட்டு வெளியேறும் அவல நிலையைத்தான் இந்திய அரசு வளர்ச்சி என்கிறது.
புதிய தாராளமயக் கொள்கை அமல்படுத்தப்பட்ட அடுத்த பத்தாண்டுகளில், 2004-05-இல், ஒடிசா மாநிலம் வேலையின்மை விகிதத்தில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்து வறுமையில் தள்ளாடியது. இதனால் வேலை தேடி ஒடிசா இளைஞர்கள் செயின்ட் பீட்டர் & பால் போன்ற நிறுவனங்களை நாடிப் புலம்பெயர்கின்றனர்.
புலம்பெயர்ந்த இடத்திலும் பாதுகாப்பில்லை
ஒடிசாவின் கிராமங்களில் வாழ்வாதாரம் இல்லாததால் வெளியேறிய இந்தப் பெண்கள், தமிழ்நாட்டில் பாதுகாப்பான வேலைவாய்ப்பைப் பெற்றார்களா?
அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையில் எச்சரிக்கை ஒலி, அவசரகால வெளியேற்ற வழிமுறை, முதலுதவி வசதி போன்ற அடிப்படை பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததுடன், முந்தைய காலங்களிலும் அம்மோனியா கசிவுகள் ஏற்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
16 வயது சிறுமி ஒருவரையே ஆவணங்களில் முறைகேடு செய்து தொழிற்சாலையில் வேலைக்கு அமர்த்தியிருப்பது, தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கத்தின் நிலை குறித்த மிகப்பெரிய கேள்வியை எழுப்புகிறது.
இக்கொடூர ஆலை விபத்தில் பலியானவர்களுக்கு வெறும் ₹2 லட்சம் நிவாரணம் அளித்தும், உயிர் பிழைத்த ஜுவாங் பழங்குடியினரை ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளது த.வெ.க. அரசு. செயின்ட் பீட்டர் & பால் ஆலையின் முதலாளிகளும் ஒப்பந்ததாரர்களும் நிபந்தனை ஜாமீன் என்ற பெயரில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற வழக்குப் பிரிவுகளின் கீழ் முதலாளிகள் எளிதாகத் தப்பிவிட முடியும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
தொழிலாளர் பாதுகாப்பையும் தனியாரிடம் ஒப்படைக்கும் அரசு
இந்த நிலையில், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசின் பங்கு இன்னும் முக்கியமானதாகிறது.
மோடி அரசு கொண்டு வந்திருக்கும் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பின் படி, 300 பேருக்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சாலையின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் உபகரணங்களின் ஆய்வுக்கான சான்றிதழை ஒரு முதலாளி, அவர் நியமிக்கும் நபரை வைத்து வாங்கிக்கொள்ள முடியும். முதலாளியால் நியமிக்கப்படும் நபர் அரசு ஆய்வாளர் போல அந்நிறுவனத்தின் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது. தேவைப்படும் பட்சத்தில் நிறுவனங்களுக்கு ஆலோசனைகள் மட்டுமே வழங்க முடியும்.
இதன்படி, தொழில்முனைவாக்கத்தை எளிதாக்குதல் என்ற பெயரில் தனியார் முதலாளிகளின் ஆலை உபகரணங்கள், அதன் பாதுகாப்பு அம்சங்கள் போன்றவற்றில் இனிமேல் அரசு தலையிடாது என்று மோடி அரசின் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு கூறுகிறது.
இது திருடனிடமே வீட்டின் சாவியை ஒப்படைப்பதற்குச் சமமாகும்.
வளர்ச்சி யாருக்காக?
ஒருபுறம் ஒடிசாவின் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி லட்சக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகள், சுரங்கங்கள், தொழிற்சாலைகள், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி என அரசுகள் பெருமிதம் கொள்கின்றன.
மறுபுறம், அதே வளங்கள் நிறைந்த கியோஞ்சரில் வாழ்வாதாரம் இல்லாமல், வீடுகளைச் சீரமைக்கக் கூட பணம் இல்லாமல், ஜுவாங் பழங்குடிப் பெண்கள் 1,500 கி.மீ. தொலைவில் உள்ள தமிழ்நாட்டிற்கு புலம்பெயர வேண்டிய நிலை உருவாகிறது.
அங்கு சென்ற பிறகும் அவர்களுக்கு பாதுகாப்பான வேலை கிடைப்பதில்லை. ஒரு சிறுமியின் வயதையே ஆவணங்களில் மாற்றி வேலைக்கு அமர்த்தும் அளவுக்கு தொழிலாளர் சட்டங்கள் மீறப்படுகின்றன. அந்தச் சிறுமி உயிரிழந்த பிறகும், அவளது குடும்பம் பெற வேண்டிய இழப்பீட்டைக் கூட பெறுவதற்கு அந்த ஆவண மோசடி தடையாகிறது.
வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்களைச் சுரண்டுவதும், பழங்குடியினரை அவர்களது வாழ்வாதாரத்திலிருந்து விரட்டியடிப்பதும்; தொழில் முதலீடுகளை எளிதாக்குதல் என்ற பெயரில் தொழிலாளர் சட்டங்களைத் தளர்த்துவதும்; பாதுகாப்பற்ற தொழிற்சாலைகளில் மலிவான புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சுரண்டுவதும் — இவை அனைத்தும் ஒரே பொருளாதார அமைப்பின் வெவ்வேறு முகங்களாகவே உள்ளன.
கியோஞ்சரிலிருந்து திருவள்ளூர் வரை ஜுவாங் பழங்குடிப் பெண்களின் பயணமும், அந்தப் பயணம் முடிந்த இடத்தில் நிகழ்ந்த அவர்களின் மரணமும், மோடி அரசுகள் பெருமிதப்படும் இந்த “வளர்ச்சி” யாருக்கானது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.
இந்த மரணங்களைத் தடுப்பது என்பது ஒரு தொழிற்சாலை விபத்தைத் தடுப்பது மட்டுமல்ல; மக்களை அவர்களது நிலம், காடு, வாழ்வாதாரம் ஆகியவற்றிலிருந்து விரட்டிவிட்டு, மலிவான உழைப்புக்காக தொலைதூர தொழிற்சாலைகளுக்கு அனுப்பும் இந்த வளர்ச்சி முறையையே மாற்றியமைக்கப் போராடுவதாகும்.
- தாமிரபரணி
செய்தி ஆதாரங்கள்:
https://rupeindia.wordpress.com/2026/08/03/the-surplus-workers/
https://www.epw.in/journal/insight/odisha-migration-survey-2023.html



