CJP போராட்டமும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளும்:
காவி பாசிசத்துக்கு காவலாகும் நீதித்துறை!
ஆதார், எஸ்ஐஆரை தொடர்ந்து தற்போது நீட் முறைகேட்டிற்கு எதிரான போராட்டம் வரை நீதிமன்றங்கள் முன்னுக்குப் பின் முரணான தீர்ப்புகளையே வழங்கி வந்துள்ளன. இந்த தீர்ப்புகள் அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் வழங்கப்பட்டுள்ளன என்று பாஜகவும், நீதிமன்றங்களும் தொடர்ந்து கூறி வந்தாலும், இந்த முரண்பாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் எவருக்கும், நீதிமன்றங்களின் செயல்பாடு ஆர்எஸ்எஸ்-பாஜகவின் அரசியல் திட்டங்களுக்கு ஒத்திசைவாக நகர்கிறது என்ற முடிவுக்கே தவிர்க்க முடியாத வகையில் வர வேண்டியிருக்கிறது.
ஆதார் திட்டம் கட்டாயமாக்கப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் 2013 முதல் 2015 வரை வழங்கியுள்ள பல இடைக்கால உத்தரவுகளில் கூறியுள்ளது. குறிப்பாக ஆதார் இல்லாத காரணத்தால் எந்த அரசுச் சேவையும் மறுக்கப்படக் கூடாது, விருப்பமுள்ளவர்கள் மட்டுமே ஆதாரைப் பெற வேண்டும், அவ்வாறு பெறுவோரின் ஆதார் தகவல்கள் அரசின் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
அதேபோல் 2017-ஆம் ஆண்டு K.S. Puttaswamy வழக்கில் ஒன்பது நீதிபதிகள் அமர்வு, தனியுரிமை என்பது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் ஒருமனதாகத் தீர்ப்பளித்துள்ளது.
இத்தனை தீர்ப்புகளை வழங்கிய பிறகும், 2018-ஆம் ஆண்டு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் பெரும்பான்மை தீர்ப்பில் ஆதார் சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டது என்று உறுதி செய்தது. மேலும் அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதாரைப் பயன்படுத்தவும், வருமான வரிக்கான PAN-உடன் ஆதாரை இணைப்பதையும் அனுமதித்தது.
இதனைப் போன்றே சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் (எஸ்.ஐ.ஆர்.) மூலம் வாக்குப்பறிப்பு நடப்பதை எதிர்த்த வழக்கிலும் தீர்ப்பளித்துள்ளது. அதாவது எஸ்ஐஆர் வழக்கிற்கு முன்பாக லால் பாபு ஹுசைன் வழக்கில் ஒருவரது பெயர் வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றிருந்தால், அவர் தகுதியான வாக்காளர் என்ற ஒரு சட்ட அனுமானம் (presumption) இருக்கிறது. மேலும் ஒருவரது பெயரை நீக்க வேண்டுமெனில், தேர்தல் ஆணையமே அதற்கான காரணத்தை நிரூபிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்புக்கு மாறாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
மேற்குவங்க மாநிலத்தில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது நீதிபதி பாக்சி, ஒரு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது சுமார் 2 சதவீத வாக்குகளே என்ற நிலைமையில் 15 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் போவது தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், மேலும் சுமார் 34 இலட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் விசாரித்து முடிக்கப்படாமல் இருப்பதன் காரணமாக பல இலட்சம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.
அதுமட்டுமல்லாமல், இந்தியத் தேர்தல் ஆணையம் மற்ற மாநிலங்களில் இல்லாத “தர்க்க ரீதியான முரண்பாடுகள்” பட்டியலை மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் கொண்டு வந்திருப்பது ஏன் என்று கேள்வியெழுப்பியதுடன், இதன் மூலம் தேர்தல் ஆணையம் பீகார் தேர்தலின் போது நாடு முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறை மேற்கொள்ளப்படும் என்ற தனது வாக்குறுதியிலிருந்து விலகிவிட்டதாக கண்டித்துள்ளார்.
அதேபோல், வாக்காளர்களைச் சேர்ப்பதிலும், நீக்குவதிலும் மிகப்பெரிய அளவிலான தவறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறு தேர்தல் ஆணையத்தைக் கடிந்து கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, அதற்கு நேர் மாறாக, மேல் முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை முடியாததால் பல இலட்சம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளது.
மனுதாரர் தரப்பில், மேல் முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை முடியும் வரை தேர்தலை நிறுத்தி வைக்கக் கோரிய போது, “மிகப்பெரும் அளவில் வாக்காளர்கள் நீக்கப்படாமல் நாங்கள் தேர்தல் நடைமுறையில் தலையிட இயலாது” என்று கூறியுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது சுமார் 2 சதவீத வாக்குகளே என்று தேர்தல் ஆணையத்தைக் கண்டித்த அதே நீதிபதிகள் அமர்வுதான் 34 இலட்சம் பேர் தங்களது வாக்குரிமை பறிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து மனுத் தாக்கல் செய்திருந்த நிலையிலும் அவர்களுக்கு எதிராகத் தீர்ப்பளித்துள்ளனர்.
அதேபோல், தற்போது தேர்தலை நடத்தினால் பல இலட்சம் வாக்காளர்களால் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என்று மனுதாரர் தரப்பில் கூறிய போது, “ஒரு தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போவது என்பதை வாக்குரிமை நிரந்தரமாக பறிபோவதாகக் கருதமுடியாது” என்று கூறியுள்ளனர்.
சமீபத்தில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைக் கண்டித்து, ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP) மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் தில்லியில் தொடர் போராட்டத்தைத் தொடங்கின. சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் பல மாணவர் அமைப்புகள் இதில் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களை “கரப்பான் பூச்சிகள்” எனக் கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்தின் கருத்தை எதிர்த்து அவரை கேலி செய்யும் விதமாக உருவானதே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி. ஒரு கட்சியாகப் பரிணமிக்கும் அளவிற்கு அவரது வன்மமான பேச்சு அமைந்துள்ளதைப் பறைசாட்டும் விதமாகவே இலட்சக்கணக்கான இளைஞர்கள் ஜந்தர் மந்தரில் கூடியுள்ளனர்.
பின்னர் தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக நீதிபதி சூர்ய காந்த் விளக்கம் அளித்திருந்தார். அதில், போலியான மற்றும் கள்ளப் பட்டப்படிப்புகளின் உதவியுடன் வழக்கறிஞர் தொழில் போன்ற துறைகளில் நுழைந்தவர்களையே நான் குறிப்பாக விமர்சித்தேன் என்றும், இதேபோன்ற நபர்கள் ஊடகம், சமூக ஊடகம் மற்றும் பிற உயரிய தொழில்களிலும் ஊடுருவியுள்ளனர்; எனவே அவர்களை தான் ஒட்டுண்ணிகளைப் போன்றவர்கள் என்று கூறியதாகவும் மற்றபடி நமது நாட்டின் இளைஞர்களை நான் விமர்சித்ததாகக் கூறுவது முற்றிலும் அடிப்படையற்றது என்றும் கூறியுள்ளார்.
தலைமை நீதிபதி சூர்ய காந்த் என்ன கூறினார் என்பது பத்திரிக்கைகளில் அப்படியே வெளியாகியிருந்தன. யாரும் அவர் கூறியதைத் திரித்துப் போடவில்லை. ஆனால் தான் கூறிய கருத்துக்கு நாடுமுழுவதிலும் இருந்து கடுமையான எதிர்ப்புகள் வரவே தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதாக விளக்கமளித்து சமாளிக்க முயற்சித்தார்.
தில்லியில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், போலீசார் தாக்குதல் நடத்தி கலைத்தது குறித்துப் பல்வேறு காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாயின. லத்தியில் ஆணிகளைப் புதைத்து அதைக் கொண்டு மாணவர்களைத் தாக்கியது, பெல்லட் குண்டுகளைக் கொண்டு சுட்டது, தடுப்பரண்களில் மின்சாரம் செலுத்தியது, மாணவிகளை ஆண் போலீசைக் கொண்டு கடுமையாகத் தாக்கியது ஆகியவை காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் மூலமாக அம்பலமாகின. இந்தக் காணொளிகளை உச்சநீதிமன்றம் காண வேண்டும் என்றும், மாணவர்கள் மீதான போலீஸின் நடவடிக்கை மற்றும் நீட் சீர்திருத்தம் தொடர்பாக அவசர விசாரணை கோரியும், உச்சநீதிமன்றத்தில் முறையிட்டபோது அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அந்த வழக்கறிஞர் “மாணவர்கள் மூன்று முக்கியமான கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்; NEET தேர்வுகள் அரசாங்கத்தால் நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும், தேசியத் தேர்வு முகமை (NTA) கலைக்கப்பட வேண்டும்,” என்று கூறியுள்ளார்.
அதற்கு நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகிய இருவரும் அவருடைய வாதங்களைக் கேட்க விருப்பமில்லையெனத் தெரிவித்தபோது, தன்னிடம் காணொளிகளின் தொகுப்பு இருப்பதாகவும், அனுமதித்தால் அவற்றைக் காண்பிப்பதாகவும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
“எங்களுக்கு வீடியோக்களில் ஆர்வம் இல்லை. அவற்றைப் பார்க்க எங்களுக்கு நேரமில்லை,” என்று தலைமை நீதிபதி (CJI) மீண்டும் கூறியுள்ளார்.
இந்தக் கருத்துகள் மீண்டும் சர்ச்சையான நிலையில், தலைமை நீதிபதி சூர்ய காந்த் நீதிமன்றத்தில் முறையான ரிட் மனு (writ petition) எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. அதனால்தான் அவ்வாறு கூறியதாக விளக்கமளித்துள்ளார். “கரப்பான் பூச்சி” விமர்சனத்தின் போது செய்தது போலவே இந்த முறையும் தனது கருத்துக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்புகள் வரவே மீண்டும் பின்வாங்கித் தான் அவ்வாறு கூறவில்லை என்று விளக்கமளிக்கிறார்.
நீட் எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது போலீசாரின் கொடூர தாக்குதல் குறித்த வழக்கை அவசர வழக்காக எடுக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது, ஆனால் நீட்டுக்கு எதிரான மாணவர் போராட்டம், பாகிஸ்தானின் சதி என்றும் அது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரிக்க வேண்டும் என்றும் காவி பாசிச ஆதரவாளர்களது மனுவை தில்லி உயர்நீதிமன்றம் அவசர வழக்காக எடுத்துக் கொண்டது. ஆனால் அந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்னதாகவே நாடு முழுவதும் போராடும் மாணவர்களுக்கு ஆதரவான மனநிலை உருவாகிவிட்டதால், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
தற்போதும் கூட மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் போலீசாரையும், அரசுத் தரப்பையும் கடுமையாக குற்றஞ்சாட்டிக் கேள்வி எழுப்புகிறது. ஆனால் போகப் போக நீதிமன்றத்தின் கடுமை போராட்டக்காரர்கள் மீது திரும்பக் கூடும். ஏனென்றால் ஆதார் வழக்கிலும் சரி, எஸ்.ஐ.ஆர். வழக்கிலும் சரி இதுதான் நடந்தது.
ஆதார் வழக்கில் இடைக்கால உத்தரவுகளின் மூலம் தனியுரிமையையும், குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று கூறிய நீதிமன்றம், இறுதியில் ஆதார் சட்டத்திற்கே அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் வழங்கியது. எஸ்.ஐ.ஆர். வழக்கில் வாக்காளர்களின் வாக்குரிமை பாதிக்கப்படலாம் என்றும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் கடுமையான முரண்பாடுகள் இருப்பதாகவும் நீதிமன்றமே சுட்டிக்காட்டிய போதிலும், தேர்தல் நடைமுறையை நிறுத்த மறுத்தது. தற்போது நீட் முறைகேடு மற்றும் மாணவர்கள் மீதான போலீஸ் அடக்குமுறை தொடர்பாகவும் நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பினாலும், முந்தைய அனுபவங்கள் காட்டுவதுபோல, ஆரம்பகட்டக் கண்டனங்களை மட்டும் நம்பமுடியாது, இறுதித் தீர்ப்பு வேறு திசையை நோக்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.
எனவே, நீதிமன்றத்தின் வாய்மொழிக் கருத்துகளையோ இடைக்காலக் குறிப்புகளையோ மட்டும் நம்பி ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற மாயையில் மக்கள் இருக்க முடியாது. ஆதார், எஸ்.ஐ.ஆர்., நீட் ஆகிய மூன்று சம்பவங்களும், காவி பாசிஸ்டுகளின் கொள்கைகளுக்கு ஒத்திசைவான பாதையிலேயே நீதிமன்றங்கள் பயணிப்பதை காட்டியிருக்கின்றன. அதன் அதிகார விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நீதித்துறை, இறுதியில் அதற்கே சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கும் திசையில் நகர்ந்து வருவதையே சுட்டிக்காட்டுகின்றன. இந்தப் போக்கை மாற்றப் போவது நீதிமன்றங்களின் கருணையோ, தனிப்பட்ட நீதிபதிகளின் மனமாற்றமோ அல்ல; மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் நடத்தும் தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களே. நீதித்துறையின் மீதான மாயைகளை விலக்கி, மக்கள் தங்களது உரிமைகளை தங்களது சொந்தப் போராட்டத்தின் மூலமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதையே இந்த அனுபவங்கள் மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றன.
- மகேஷ்
செய்தி ஆதாரம்:

உச்சிகுடிமை மன்றம் பாசிசத்திற்கு துணையாக தான் நிற்கும்.