வாக்குரிமையைப் பறிக்க தேர்தல் ஆணையத்துடன் பங்காளியாக கைகோர்த்த உச்ச நீதிமன்றம்.
பீகார் மாநிலத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (எஸ்.ஐ.ஆர்.) இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தி முடித்திருக்கிறது. பீகார் மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்த போதே அதனை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் (ஏ.டி.ஆர்.) உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கில், இது போன்றதோரு பெரிய அளவிலான வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொள்ளவும், எல்லா வாக்காளர்களையும் அவர்களது அடையாளங்களை உறுதிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தவும், எந்தவொரு இந்தியக் குடிமகனின் வாக்குரிமையைப் பறிக்கவும், இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என ஏ.டி.ஆர். வாதிட்டது.
இந்த வழக்கு விசாரணையில் இருக்கும் போதே தேர்தல் ஆணையம் பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலை நடத்திக் கொள்ளவும், எஸ்.ஐ.ஆர். நடைமுறையை மேலும் 12 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தவும் அனுமதியளித்தது. அந்த வழக்கின் விசாரணை முடிந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தீர்ப்பளிக்கும் தேதி குறிப்பிடப்படாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தீவிர திருத்தத்திற்குப் பிறகு மேற்கு வங்க வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 91 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
இவர்களில் 63 லட்சம் பேர் “அங்கு இல்லாதவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் அல்லது இரட்டைப் பதிவுகள்” என வகைப்படுத்தப்பட்டனர். மற்ற 27 இலட்சம் பேரின் பதிவுகளில் எழுத்துப்பிழை, பாலினப் பதிவில் பிழைகள், பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியுடன் வழக்கத்திற்கு மாறான வயது இடைவெளி போன்ற “தர்க்கரீதியான முரண்பாடுகள்” இருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
எஸ்.ஐ.ஆர். மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையத்தால் நீக்கப்பட்டவர்களது ஆட்சேபனைகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் 19 தீர்ப்பாயங்களை நியமித்தது. அந்தத் தீர்ப்பாயங்களில் 34 இலட்சத்திற்கும் அதிகமான மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் இந்த 34 இலட்சம் மேல் முறையீடுகளில் இருந்து 1,607 பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். மற்றவர்களுக்கு வாக்குரிமை இல்லாமல் மேற்கு வங்க தேர்தல் நடந்து முடிந்து அம்மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.
“தர்க்கரீதியான முரண்பாடுகள்” பட்டியலில் இருப்பவர்களது விவரங்களில் இருக்கும் பிழைகள் ஏற்கெனெவே உள்ள வாக்காளர் பட்டியலில் இருக்கும் பிழைகள் தாம். மற்ற மாநிலங்களில் இது போன்ற பிழைகள், திருத்தத்தின் போதே சரிசெய்யப்பட்ட போதும், மேற்கு வங்கத்திற்கு மட்டும் தனி நடைமுறையைப் பின்பற்றி அம்மாநிலத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்ற இந்தியத் தேர்தல் ஆணையம் உதவியது.
தேர்தல் ஆணையம் இவ்வாறு, மேற்கு வங்க மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதை எதிர்த்து, அதனைத் தடுக்க கோரி, ஏ.டி.ஆர்., பி.யு.சி.எல்., உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. அந்த வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம் நடந்துகொண்ட விதம், அது மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாப்பதற்கு பதிலாக, இந்தியத் தேர்தல் ஆணையத்துடன் இளைய பங்காளியாக கூட்டுச் சேர்ந்து கொண்டு அவர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் வேலையில் இறங்கியிருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.
மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர். மூலம் வாக்குப்பறிப்பு நடப்பதை எதிர்த்த வழக்கினை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூரிய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மாலா பக்க்ஷி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
மேற்கு வங்கத் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் நடந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி பக்க்ஷி, ஒரு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது சுமார் 2 சதவித வாக்குகளே என்ற நிலைமையில் 15 சதவித வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் போவது தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை ஒப்புக்கொண்டார்.
மேலும் 34 இலட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் விசாரித்து முடிக்கப்படாமல் இருப்பதன் காரணமாக பல இலட்சம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார்.
அதுமட்டுமன்றி, இந்தியத் தேர்தல் ஆணையம் மற்ற மாநிலங்களில் இல்லாத “தர்க்கரீதியான முரண்பாடுகள்” பட்டியலை மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் கொண்டு வந்திருப்பது ஏன் என்று கேள்வியெழுப்பியதுடன், இதன் மூலம் தேர்தல் ஆணையம் பீகார் தேர்தலின் போது நாடு முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறை மேற்கொள்ளப்படும் என்ற தனது வாக்குறுதியிலிருந்து விலகிவிட்டதாக கண்டித்தார். வாக்காளர்கள சேர்ப்பதிலும், நீக்குவதிலும் மிகப்பெரிய அளவிலான தவறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறு தேர்தல் ஆணையத்தைக் கடிந்து கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, அதற்கு நேர் மாறாக, மேல் முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை முடியாததால் பல இலட்சம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டது.
மனுதாரர் தரப்பில், மேல் முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை முடியும் வரை தேர்தலை நிறுத்தி வைக்கக் கோரிய போது, “மிகப்பெரும் அளவில் வாக்காளர்கள் நீக்கப்படாமல் நாங்கள் தேர்தல் நடைமுறையில் தலையிட இயலாது” என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. ஆனால் 34 இலட்சம் பேர் தங்களது வாக்குரிமை பறிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து மனுச் செய்திருப்பது என்பது மிகப்பெரிய அளவாக உச்சநீதிமன்றத்தின் கண்களுக்குத் தெரியவில்லை.
தற்போது தேர்தலை நடத்தினால் பல இலட்சம் வாக்காளர்களால் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என்று மனுதாரர் தரப்பில் கூறிய போது, “ஓரு தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போவது என்பதை வாக்குரிமை நிரந்தரமாக பறிபோவதாகக் கருதமுடியாது” என்று கூறினார்.
வாக்காளர் பட்டியலை தயாரித்து வைத்துக் கொள்வதும், அதனை அவ்வப்போது சரிபார்ப்பதும் தேர்தல் ஆணையத்தின் வேலை. அதனை விடுத்து ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் மீண்டும் தங்களது ஆவணங்களைக் கொடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோர முடியாது. 1960ஆம் ஆண்டு இது குறித்து பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட நடைமுறையைத் தான் தேர்தல் ஆணையம் பின்பற்ற வேண்டும். அதனைவிடுத்து புதியதாக நடைமுறைகளை தேர்தல் ஆணையம் உருவாக்கிக் கொண்டே செல்லக் கூடாது என மனுதாரர் தரப்பு திரும்ப திரும்ப வாதிட்டதை உச்சநீதிமன்றம் காதில் வாங்கவே இல்லை.
அடுத்ததாக எஸ்.ஐ.ஆர். நடைமுறையை எவ்வாறு துரிதமாக முடிக்கலாம் என ஆலோசனை கூறுவதில் இறங்கிய நீதிமன்றம், தனது கீழமை நீதிமன்ற நீதிபதிகளை இதற்கு உதவும் படி பணித்தது. மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க 19 தீர்ப்பாயங்களை நியமித்த உச்சநீதிமன்றம் அதில் கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகள் பங்கேற்க உத்தரவிட்டது. அதாவது வாக்காளர்களின் ஆவணங்களைக் கோருவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என வழக்குத் தொடர்ந்தால் அந்த வழக்கு விசாரணை முடிவதற்கு முன்னதாகவே, இவ்விஷயத்தில் தேர்தல் ஆணையத்திற்கு உதவ தன்னுடைய கீழமை நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்றம் அனுப்பி வைக்கிறது.
மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதற்கு எதிராக மனுச் செய்தால், அதனை விசாரிப்பதற்கு பதிலாக, வாக்குரிமையைப் பறிக்கின்ற வேலையை எவ்வாறு தவறில்லாமல் நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றமே மேற்பார்வையிட்டு நிறைவேற்றிக் காட்டியிருக்கிறது.
மொத்தத்தில், மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது, மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதைத் தடுப்பதற்கு பதிலாக இந்தியத் தேர்தல் ஆணையத்துடன் கை கோர்த்துக் கொண்டு அவர்களது வாக்குரிமையைப் பறிக்கும் வேலையில் உச்சநீதிமன்றம் இறங்கியிருக்கிறது. இதன் மூலம் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு உதவி செய்வதில் உச்சநீதிமன்றம் ஒரு முக்கிய பங்காற்றியிருக்கிறது.
இவ்வழக்கில் மிகவும் ஆபத்தான அம்சம் என்பது, மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுகிறதா இல்லையா என்ற கேள்வியை விட, அதனைத் தடுக்க வேண்டிய நிறுவனங்களே இந்த நடவடிக்கைக்கு சட்டப்பூர்வத் தன்மையை உருவாக்கிக் கொடுத்திருப்பதுதான். தேர்தல் ஆணையம் தனது அதிகார வரம்புகளை மீறி புதிய நடைமுறைகளை உருவாக்கிக் கொண்ட போதும், அதனைக் கேள்விக்குட்படுத்த வேண்டிய உச்சநீதிமன்றம், அந்த நடைமுறையை எவ்வாறு விரைவாகவும் தடையின்றியும் நிறைவேற்றலாம் என்பதிலேயே அதிக அக்கறை காட்டியது.
மேற்கு வங்கத்தில் நடந்தது ஒரு மாநிலத்தின் தேர்தல் தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல. தேர்தல் ஆணையம், நீதித்துறை, நிர்வாக அதிகாரம் ஆகியவை ஒன்றிணைந்து மக்களின் வாக்குரிமையை பறிக்கும் ஒரு புதிய அரசியல் மாதிரியின் முன்னோட்டமாக அது மாறியிருக்கிறது. இன்று மேற்கு வங்கத்தில் நடந்தது, நாளை பாஜகவிற்கு செல்வாக்கு இல்லாத மற்ற மாநிலங்களிலும் மீண்டும் நிகழும். அதனால் இந்த விவகாரம் வெறும் தேர்தல் நடைமுறை குறித்த விவாதமல்ல; பாசிசம் எவ்வாறு திட்டமிட்டு தனக்கு எதிரானவர்களின் வாக்குகளைப் பறிக்கிறது என்பது குறித்த எச்சரிக்கையாகும்.
- அறிவு
தகவல் ஆதாரம்
- https://frontline.thehindu.com/columns/sir-west-bengal-voter-exclusion/article70864680.ece
- https://scroll.in/article/1092899/three-reasons-why-west-bengals-sir-exercise-was-unconstitutional
- https://indianexpress.com/article/explained/explained-law/what-does-sc-latest-order-mean-bengal-deleted-voters-10641096/
- https://www.thehindu.com/elections/west-bengal-assembly/139-people-cleared-by-tribunals-after-sir-exclusion-allowed-to-vote-in-wb-first-phase-polls/article70894241.ece
