தொகுதி மறுவரையறைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் காவி பாசிச செயல் திட்டம்!
செங்கனல் – மே – ஜூன் – 2026 அச்சு இதழில் வெளியான கட்டுரை
மோடி அரசாங்கம் கொண்டுவந்த தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தோற்கடித்துள்ளன. இது அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா என்பதால் இதனை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்களின் ஒப்புதல் வேண்டும். எனவே, இம்மசோதாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப்பெற நேரடியாகவும் மறைமுகமாகவும் பாஜக பல முயற்சிகளை எடுத்த போதும், அதிசயமாக எதிர்க்கட்சிகள் ஓரணியில் நின்று இம்மசோதாவை தோற்கடித்துள்ளனர்.
இம்மசோதாவை நேரடியாக தொகுதி மறுவரையறை என்று கொண்டுவராமல், ‘பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான தொகுதி மறுவரையறை’ என்ற போர்வையில் பாஜக கொண்டு வந்தது. இதற்காக சிறப்பு நாடாளுமன்றத் தொடரைக் கூட்டி, மூன்று மசோதாக்களையும் [1) அரசியலமைப்பு (131-வது திருத்த) மசோதா 2026, 2) தொகுதி மறுவரையறை மசோதா 2026 மற்றும் 3) யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026] நாடாளுமன்றத்தில் மோடி கும்பல் தாக்கல் செய்தது.
மசோதா தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, தொலைக்காட்சியில் தோன்றிய மோடி, “இந்நாட்டில் உள்ள 100 சதவீதப் பெண்களும் இம்மசோதாவிற்கு அதரவாகவே உள்ளனர் என்பது எனக்குத் தெரியும்; எதிர்க்கட்சிகளின் சதியால் இம்மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு உங்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கோருகிறேன்” என்று நீலிக் கண்ணிர் வடித்தார். ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் கூட, இதே வசனத்தைத்தான் காவி பாசிஸ்டுகள் பேசினர்.
பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதுதான் முக்கியம் என்று பாஜக கருதியிருந்தால், தொகுதி மறுவரையறை செய்யாமலே, நடப்பிலுள்ள 543 மக்களவை இடங்களில் 33 சதவிகிதமான 179 இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்குவதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கலாம்; அல்லது 2023-இல் நிறைவேற்றப்பட்ட பெண்கள் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தினை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டியிருக்கலாம். இதையெல்லாம் செய்யாமல் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையோடு முடிச்சுப் போட்டு நாடகமாடியதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொடுக்க வேண்டும், விவாகரத்து உரிமை கொடுக்க வேண்டும் என்று அம்பேத்கர் சொன்னபோது, ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான காவிக் கும்பல் அதைக் கடுமையாக எதிர்த்தது. இன்றும் கூட, பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றும் அவ்வழக்குகளில் தண்டனை பெற்ற சாமியார்கள், உள்ளூர் அரசியல்வாதிகள், வெளிநாட்டுப் புரோக்கர்கள் எனப் பல குற்றவாளிகளுக்கு ஆதரவளித்துவரும் கட்சி பாஜக என்பது ஊரறியும். இசுலாமியப் பெண்களையும் குழந்தைகளையும் கொலை செய்வதை “தர்மம்” எனப் பிரச்சாரம் செய்யும் காவிக் கும்பல் பெண்ணுரிமை பேசுவதும் ஆடு நனைவதைக் கண்டு ஓநாய் அழுவதும் வேறில்லை!
தொகுதி மறுவரையறையை உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம். அதை நேரடியாகச் செய்தால் கடும் எதிர்ப்புகள் கிளம்பும் என்பதை அறிந்துதான், “பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான தொகுதி மறுவரையறை” என்ற முகமூடியை மாட்டிக்கொண்டனர். பாஜகவின் தொகுதி மறுவரையறை சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் முதலில் அச்சட்டத்திருத்த மசோதாவைப் புரிந்துகொள்ள வேண்டும்.
1976 மற்றும் 2001-ஆம் ஆண்டுகளில் அரசியலமைப்பின் 82-வது சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களின்படி, தொகுதி மறுவரையறையானது, 2026-க்கு பிறகு நடத்தப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடளுமன்றத்தில் விவாதித்து முடிவெடுக்கப்பட வேண்டும்; அதுவரை மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆகவே இருக்கும் – என்று கூறியது. ஒவ்வொரு பத்தாண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து அதைக் கொண்டு மாநிலங்களுக்கான மக்களைவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை முடிவுசெய்ய வேண்டும். ஆனால், தென்னிந்திய மாநிலங்களுக்கும் வடஇந்திய மாநிலங்களுக்கும் இடையிலான பிறப்பு விகிதங்களுக்கிடையே அதிக வேறுபாடு இருப்பதனால், இவ்வேறுபாடுகள் குறைந்த பிறகு, தொகுதி மறுவரையறையை செய்து கொள்ளலாம் என்ற ஒப்புதலின் அடிப்படையில் 1976 மற்றும் 2001-இல் தொகுதி மறுவரையறை செய்வதற்கான திட்டத்தை அடுத்தடுத்து 25 ஆண்டுகளுக்குத் தள்ளிப் போட்டு வந்துள்ளனர். இதனால் கடந்த ஐம்பது ஆண்டுகளாக மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை (543) மாறாமல் இருந்தது.
தற்போதைய சட்டத் திருத்தத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850-ஆக உயர்த்தியதோடு மட்டுமில்லாமல், ‘மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும்’ என்றிருந்ததை, “அரசாங்கம் முடிவு செய்து கொள்ளலாம்” என்று மாற்றியுமுள்ளனர். அதன்படி, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்போவதாகவும் கூறியுள்ளனர்.
தி இந்து நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, 2011 கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தென்னிந்திய மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதம் மொத்த எண்ணிக்கையில் 24.3 சதவிகிதத்திலிருந்து 20.7 சதவிகிதமாகக் குறையும். அதேவேளையில், இந்தி பேசக் கூடிய மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதம் 38.1 சதவிகிதத்திலிருந்து 43.1 சதவிகிதமாக அதிகரிக்கும். அதாவது, ஒன்றியத்தில் தென்னிந்திய மாநிலங்களுக்கானப் பிரதிநித்துவம் 3.5 சதவிகிதம் குறையும்; இந்தி பேசக் கூடிய, பாஜக ஆட்சியிலுள்ள வடஇந்திய மாநிலங்களுக்கான [உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ஹரியானா, பீகார், ராஜஸ்தான்] பிரதிநிதித்துவம் 5 சதவிகிதம் அதிகரிக்கும்.
ஆனால், இவ்வுண்மையை மறைத்து, இம்மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய அமித்ஷா, “அனைத்து மாநிலங்களுக்கும் சீரான 50 சதவிகித அதிகரிப்பு இருக்கும்; தற்போது உள்ள விகிதாச்சாரமே பின்பற்றப்படும்; தென்னிந்திய மாநிலங்களுக்கு பாதிப்பு இருக்காது – என்று சத்தியம் செய்தார். அமித்ஷா பொய் வாக்குறுதியளித்தாரே ஒழிய, அதற்குச் சட்ட ரீதியான எந்த உத்திரவாதமும் கொடுக்கவில்லை.
இதனை அம்பலப்படுத்தியுள்ள தி வயர் இணையதளம், “2026 தொகுதி மறுவரையறை மசோதாவிலோ அல்லது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிலோ இத்தகைய சூத்திரம் [50 சதவிகித சீரான உயர்வு] எங்கும் குறிப்பிடப்படவில்லை. புதிய மசோதாவின் பிரிவு 8 ஆனது, சமீபத்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் புள்ளி விவரங்களின் அடிப்படையில் இடங்களை ஒதுக்க வேண்டும் என்கிறது. அதேநேரத்தில், அரசியலமைப்பின் 81(2)(a) பிரிவு, மக்கள் தொகைக்கும் மக்களவை இடங்களுக்கும் இடையிலான விகிதம் அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக இருப்பது கட்டாயம் என்கிறது. [ஒரு மக்களவை இடத்திற்கு ஐந்து இலட்சம் வாக்குகள் என்றால் இந்தியா முழுமைக்கும் இதே விகிதம் இருக்க வேண்டும்]. 1971-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை, உத்தரப்பிரதேசத்தின் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. ஆனால், கேரளா மாநிலமோ அதைக் கட்டுப்படுத்தியுள்ளது. இவ்விரு மாநிலங்களுக்கும் சீரான 50 சதவிகித அதிகரிப்பு என்பது அரசியலமைப்பின் 81-வது பிரிவை நேரடியாக மீறுவதாகவே அமையும்” என்கிறது. எனவே, அமித்ஷா கொடுத்த உத்தரவாதம் என்பது நிலைமையைச் சமாளிக்கச் சொல்லப்பட்ட கடைந்தெடுத்த பொய்யே அன்றி அது சட்ட ரீதியாகச் செல்லுபடியாகாது. ஆனால், அதிமுக, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரோ அமித்ஷா சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லி வருகின்றனர்.
ஒருவேளை இச்சட்டத்திருத்த மசோதா நிறைவேறியிருந்தால், அமித்ஷா சொல்வதுபோல அனைத்து மாநிலங்களின் மக்களவை எண்ணிக்கையில் 50 சதவிகிதம் தற்போது அதிகரிக்கப்பட்டாலும், இரண்டு வருடங்கள் கழித்து 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மீண்டும் தொகுதி மறுவரையறை செய்வதற்கான சட்டத் திருத்தத்தை பாஜக தனது சொந்த பெரும்பான்மை பலத்தைக் கொண்டே நிறைவேற்றிக் கொள்ள முடியும். இதன்மூலம், பாஜக நிர்ணயிப்பதே மக்களவைத் தொகுதி எண்ணிக்கையாக மாறிவிடும்.
பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததிலிருந்து, ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலின் நூறாண்டுகாலக் கனவான, இராமர் கோவில் கட்டுவது, சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது, பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவது போன்றவற்றை சட்டமன்றம்-நாடாளுமன்றம்-நீதிமன்றங்களின் ஒப்புதலோடு நிறைவேற்றி வருகின்றனர். இதற்கு இணையாகவே, தனது அதிகாரத்தின் மூலம், சமூகத்தில் தீவிர இந்துமதவெறி முனைவாக்கத்தையும், அரசு கட்டமைப்பில் காவி பாசிஸ்டுகளை நிரப்புவதையும் செய்து வருகின்றனர். இவ்விரண்டு போக்குகளும் ஒன்றுக்கொன்று ஒத்திசைவானவை, துணை செய்பவையுமாகும்.
எனவே, காவி கும்பலைப் பொறுத்தவரை, தற்போதுள்ள முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயக முறை என்பது இந்துராஷ்டிரா செயல் திட்டத்தை முன்னெடுத்துப் போவதற்கான எளிமையான பாதையாக ஆர்எஸ்எஸ்-பாஜக கருதுகிறது. எனவேதான், தேசவெறி, இந்துமதவெறி, முசுலீம் வெறுப்பு அரசியலை மையப்படுத்தி உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், இராஜஸ்தான், தில்லி, குஜராத், அசாம், மராட்டியம், உத்ராகண்ட் ஆகிய மாநிலங்களில் பெரும்பான்மை இடங்களை வென்று ஒன்றியத்தியில் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதோடு ஆர்எஸ்எஸ்-இன் திட்டங்களையும் அமல்படுத்தி வருகின்றனர். இதனை வருங்காலங்களுக்கும் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்றால் தான் தொடர்ந்து எல்லா நாடாளுமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெறுவதை உத்திரவாதம் செய்து கொள்ள வேண்டிய தேவையுள்ளது. அதன்மூலம் காவி-கார்ப்பரேட் பாசிச திட்டத்தை தடையின்றி கொண்டு செல்ல முடியும் என்பதே இக்கும்பலின் நோக்கம். அதற்கான முயற்சியே தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தமாகும்.
மேலும், இருமாநில சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் திடீரென தொகுதி மறுவரையறை மசோதாவை தாக்கல் செய்ததற்குப் பின்னால் காரணங்கள் இல்லாமல் இல்லை. மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்பதும், தமிழகத்தில் கூடுதல் இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்பதும் பாஜகவின் திட்டம். தொகுதி மறுவரையறை செய்தால் இவ்விரு மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்பதும், இது தேர்தல் பிரச்சாரத்தில் திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு சாதகமாகவே அமையும் என்பதும் மோடி-அமித்ஷா கும்பலுக்குத் தெரியும்.
பாஜகவிற்கு தேர்தலில் பெரும்பான்மை பெறாமலே ஆட்சி அமைக்கின்ற வித்தையெல்லாம் ஒன்றும் புதிதல்ல. எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குவது, கட்சிகளை உடைப்பது, ஊழல் வழக்குகளைக் கொண்டு மிரட்டுவது எனக் கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம், இந்தியத் தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, சிறப்பு புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை, தேசிய புலனாய்வு முகமை, ஆளுநர் மாளிகை ஆகியவற்றின் துணையோடு பல மாநிலங்களில் ஆட்சி அமைத்து வந்துள்ளனர். எனவே பாஜகவினால் இவ்விரு மாநிலங்களிலும் ஏதோ ஒருவகையில் தங்களது திட்டத்தை அமல்படுத்துவதென்பது நடக்கக்கூடியதே.
அதேவேளையில், தேர்தல் நடக்கின்ற நேரத்தில் இம்மசோதாவை கொண்டு வந்தால் இவ்விரு மாநிலங்களிலுள்ள மக்களவை உறுப்பினர்களின் பங்களிப்பு குறைவாக இருக்கும்; கூடவே வட இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிகளின் (RJD, SP) ஆதரவும் கிடைக்கும்; இதன் மூலம் இச்சட்டத்திருத்த மசோதாவிற்கு பெரும்பான்மை ஆதரவைப் பெற்று விடலாம் என்பதே பா.ஜ.க.வின் கணக்காகும். ஆனால், இக்கணக்கு எதிர்க்கட்சிகளால் தற்காலிகமாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
ஆனால், எதிர்க்கட்சிகளின் இந்த ஒற்றுமையை உடைத்து மீண்டும் இம்மசோதாவை நிறைவேற்றுவதுதை காவிக் கும்பலால் எளிதாகச் செய்துவிட முடியும். இப்போதே “உத்திரப் பிரதேசத்திற்குக் கிடைக்கும் கூடுதல் தொகுதிகளை அகிலேஷ் யாதவ் தடுத்துவிட்டார்” என்று மோடி தன் தாக்குதலைத் தொடங்கிவிட்டார். எனவே, எதிர்க் கட்சிகள் உறுதியாக இருந்து இத்தொகுதி மறுவரைச் சதித்திட்டத்தை முறியடிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது மூடத்தனமாகும்.
- மாணிக்கம்



