“கண்டறி, நீக்கு, நாடு கடத்து”: இஸ்லாமியர்களுக்கு எதிரான
மேற்கு வங்க பா.ஜ.க அரசின் திட்டம்
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தின் போது, மக்கள் அலைந்து திரிந்து உரிய குடியுரிமை ஆவணங்களைத் திரட்டி சமர்ப்பித்த போதிலும், அற்பமான காரணங்களைக் காட்டி அவை நிராகரிக்கப்பட்டன.
இதன் விளைவாக, சுமார் 90 இலட்சம் வாக்காளர்கள் எஸ்.ஐ.ஆர். மூலம் நீக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லீம்களே ஆவர்.
அம்மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தற்போதைய முதலமைச்சர் சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர், “சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவோம்”, “பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்” என இந்து மதவெறியைத் தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்தனர்.
அமித் ஷா, “பா.ஜ.க. மே 6ஆம் தேதி ஆட்சிக்கு வந்தவுடன், மேற்கு வங்கத்தில் உள்ள ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் தேடிப்பிடித்து நாடு கடத்துவோம்” என வெளிப்படையாக அறிவித்தார்.
தற்போது பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்து வரும், வாக்குரிமை பறிக்கப்பட்ட முஸ்லீம்கள், காவி ஆட்சியில் தாங்கள் இந்தியாவில் வாழ அனுமதிக்கப்படுவோமா அல்லது நாடு கடத்தப்படுவோமா என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த அச்சத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், மேற்கு வங்க பா.ஜ.க. அரசு, “ஊடுருவல்காரர்களை நாடு கடத்துவோம்” என்ற தனது பாசிச செயல்திட்டத்தை ஆட்சியமைத்த இருபது நாட்களுக்குள்ளேயே தீவிரமாக அமல்படுத்த முயன்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மேற்கு வங்கத்தில் வசிக்கும் முஸ்லீம்களை குறிவைத்து ஒடுக்குவதற்காக “கண்டறிதல், நீக்குதல் மற்றும் நாடு கடத்துதல்” (Detect, Delete and Deport) என்ற கொள்கையை முதலமைச்சர் சுவேந்து அதிகாரி மே 20ஆம் தேதி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் உள்துறை மற்றும் மலைப்பகுதி விவகாரங்கள் துறை அமைச்சகம், மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தங்கள் பகுதிகளில் வசிக்கும் சட்டவிரோத வங்கதேசத்தவர்கள் மற்றும் ரோஹிங்கியாக்களை கண்டறிந்து, அவர்களுக்கான “தடுப்பு முகாம்களை” ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி அமைக்குமாறு மே 23ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, போலீசார் யாரையாவது சட்டவிரோத குடியேறிகள் என சந்தேகித்தால், அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர். அவர்களின் பெயர், விவரங்கள் மற்றும் பிற தகவல்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்படும்.
சுமார் 30 நாட்களுக்குள், இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கைகள் அரசுக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த காலப்பகுதியில், சட்டவிரோத குடியேறிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் தடுப்பு முகாம்களில் அடைக்கப்படுவர்.
முப்பது நாட்களுக்குள் எந்த அறிக்கையும் அனுப்பப்படாவிட்டால், தடுப்பு முகாமில் உள்ளவர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை வெளிநாட்டு தீர்ப்பாய அதிகாரி மேற்கொள்வார்.
சட்டவிரோத குடியேறிகள் என போலீசார் உறுதிப்படுத்தினால், அவர்களின் பயோமெட்ரிக் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, எல்லைப் பாதுகாப்புப் படை அல்லது கடலோர காவல் படை அவர்களை நாடு கடத்துவதை உறுதி செய்யும்.
மேற்கு வங்க அரசு இந்த உத்தரவை பிறப்பித்த 48 மணி நேரங்களுக்குள், வங்கதேச எல்லையில் உள்ள முர்ஷிதாபாத்தில் மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று தடுப்பு முகாமாக மாற்றப்பட்டுள்ளது. அந்தக் கட்டிடத்தில் முன்பு திருமண மண்டபம், வங்கி மற்றும் மீனவர்களுக்கான அலுவலகம் செயல்பட்டு வந்தன. தற்போது அதை தடுப்பு முகாமாக மாற்றியதோடு மட்டுமல்லாமல், அதில் உடனடியாக மூன்று பேரை பா.ஜ.க. அரசு அடைத்துள்ளது.
மேலும், மால்டாவில் மற்றொரு தடுப்பு முகாமைத் திறப்பதற்கான ஏற்பாடுகளையும் மேற்கு வங்க அரசு செய்து வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் தில்லியில் மோடியைச் சந்தித்த பிறகு பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, “மாநிலத்தில் தடுப்புக்காவல் மையங்களை அமைக்கும் கேள்விக்கே இடமில்லை. ஊடுருவல்காரர்கள் அடையாளம் காணப்பட்டால், அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள். ஊடுருவல்காரர்களை தடுப்பு முகாம்களில் நிரந்தரமாக அடைத்து வைக்க இந்திய மக்களின் வரிப்பணத்தை ஏன் செலவழிக்க வேண்டும்?” என்று கூறியதாக ஆனந்த பஜார் செய்தி வெளியிட்டுள்ளது.
இதிலிருந்து, மேற்கு வங்க போலீசார் யாரை அந்நிய நாட்டு ஊடுருவல்காரர்கள் என சந்தேகிக்கிறார்களோ, அவர்கள் விசாரணையின்றியே நாடு கடத்தப்பட வாய்ப்புள்ளது என்பது தெளிவாகிறது.
எல்லைப் பாதுகாப்புப் படையின் விருது வழங்கும் விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஊடுருவலைத் தடுப்பதற்காக “ஸ்மார்ட் பார்டர்” திட்டம் தொடங்கப்பட இருப்பதாகவும், அஸ்ஸாம், திரிபுரா மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர்களின் ஒருங்கிணைப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

சமீபகாலமாக, சட்டவிரோத குடியேறிகள் என அடையாளப்படுத்தப்பட்டவர்கள் வங்கதேச எல்லைக்குள் பலவந்தமாக தள்ளப்படுகின்றனர் என்ற செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. தற்போது மேற்கு வங்கத்தில் இதே நடைமுறை அமல்படுத்தப்பட்டால், அங்குள்ள முஸ்லீம் மக்களின் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
“இந்துக்களைத் தவிர பிற மதத்தினர் எந்த உரிமையையோ சலுகையையோ கோராமல், இந்து தேசத்திற்குக் கீழ்ப்படிந்து வாழ வேண்டும்” என்ற ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதி கோல்வால்கரின் கருத்துக்கு ஏற்பவே, பாசிச பா.ஜ.க. அரசு நீண்டகாலமாக செயல்பட்டு வருகிறது.
இந்த அடிப்படையில்தான், 2019 முதல் மோடி அரசு தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) அமல்படுத்த முயன்றது. மக்களின் போராட்டங்களும் கடும் எதிர்ப்புகளும் காரணமாக அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
ஆனால் தற்போது, தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் நடைபெறும் வாக்காளர் தீவிர திருத்தத்தின் மூலம், மறைமுகமாக குடியுரிமைச் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படுகிறது.
வேறு வார்த்தைகளில் சொன்னால், மக்களின் போராட்டங்கள், வழக்குகள் மற்றும் கடும் எதிர்ப்புகளால் நேரடியாக அமல்படுத்த முடியாத என்.ஆர்.சி.யை, தேர்தல் ஆணையத்தின் மூலம் கள்ளத்தனமாக நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது மோடி அரசு.
கடந்த 2025 டிசம்பரில், வங்கதேச துணை தூதரகத்தின் முன்பு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தற்போதைய மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, “இஸ்ரேல் காசாவுக்கு பாடம் கற்பித்ததைப் போல, வங்கதேசத்திற்கும் பாடம் கற்பிக்க வேண்டும்” என்று கூறினார். அந்த நோக்கிலேயே பாசிச பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது.
- தாமிரபரணி
