கமல் மௌலா மசூதி தீர்ப்பு : காவி அரசியலுக்கு வேலை பார்க்கும் நீதித்துறையும் தொல்லியல் துறையும்
காவிக் கும்பலைப் பொறுத்தவரை, “மசூதிகள்” என்பது மதக் கலவரங்களைத் தூண்டுவதற்கான மையப் புள்ளி என்ற அடிப்படையிலேயே செயல்திட்டத்தை வைத்திருக்கிறது. இதில் முகலாயர் காலத்து இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் என்றால் இன்னும் ஸ்பெஷல். அவற்றை மையப்படுத்தி மட்டுமே பல பத்தாண்டுகளுக்கான இந்துத்துவ அரசியல் முன்னெடுப்புத் திட்டங்களை வைத்திருக்கும். இந்துத்துவவாதிகள், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே, “மசூதிகளை இடித்து இந்துக் கோவில்களை மீட்டெடுக்க வேண்டும்” என்பதை மையப்படுத்தி இந்து மத அரசியலைச் செய்துவந்தாலும், அக்கனவுகள் நனவாகியது மோடி-அமித்ஷா ஆட்சிக் காலத்தில்தான்.
நீதிமன்றம் மற்றும் இந்தியத் தொல்லியல் துறையின் உதவியோடு காவிக் கும்பலின் நீண்டகாலத் திட்டங்களில் உள்ள, அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து ராமர் கோவிலைக் கட்டியது, வாரணாசியில் ஞானவாபி மசூதி இடத்தில் இந்துமத வழிபாட்டிற்கு அனுமதி பெற்றது ஆகியவற்றைச் சாதித்துக் கொண்டனர். அந்த வரிசையில் தற்போது மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் (Dhar District) உள்ள எழுநூறு வருடப் பழமையான கமல் மௌலா மசூதியை சரஸ்வதி கோவில் என்ற தீர்ப்பையும் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் மூலம் பெற்றுள்ளனர்.
நீதிமன்றம் தனது தீர்ப்பில், “…….அக்குறிப்பிட்ட இடத்தில் மிக நீண்டகாலமாகவே இந்து வழிபாடு தொடர்ந்து நடந்து வருவதைப் (ASI அறிக்கையிலிருந்து) பார்க்க முடிகிறது. அந்த இடத்திற்கான வரலாற்று இலக்கியங்களிலிருந்து பார்க்கும் போது, அந்த இடம் ராஜா போஜுவின் மேற்பார்வையில் சமஸ்கிருதம் கற்பதற்கான மையமாக (போஜ்சாலா) இருந்ததை நிறுவுகின்றன….எனவே அவ்விடத்தில் சரஸ்வதி தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் இருந்திருக்க வேண்டும். எனவே, பிரச்சனைக்குரிய அப்பகுதியின் மதத் தன்மையானது (முஸ்லீம் வழிபாடு அல்லது இந்து வழிபாடு) போஜ்சாலாவுடன் சேர்ந்த சரஸ்வதி கோயில் இருந்ததாகக் கருதலாம்” என்று கூறியுள்ளது.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பைத் தொல்லியல் துறையின் அறிக்கை மற்றும் சர்ச்சைக்குரிய அவ்விடத்தைப் பற்றி எழுதப்பட்ட இரண்டாம் நிலைத் தரவுகளின் (secondary sources) அடிப்படையாகக் கொண்டே எழுதியுள்ளனர். ASI தனது அறிக்கையில் சரஸ்வதி கோவில் இருந்ததற்கான அறிவியல் முறையில் கண்டறியப்பட்ட ஆதாரங்கள் எதையும் கொடுக்கவில்லை. மேலும் மசூதி கட்டுவதற்கு முன்பே அவ்விடத்தில் சமஸ்கிருதப் பள்ளிகள் இருந்ததற்கான முதல்நிலை (primary sources) ஆதாரங்களும் இல்லை. பிறகெவ்வாறு சரஸ்வதி கோவில்தான் இருந்ததென்ற முடிவுக்கு நீதிபதிகள் வந்தடைந்தனர்.
அம்மசூதியின் தூண்களில் இரண்டு சமஸ்கிருத இலக்கணக் குறிப்புகளை ASI கண்டறிந்தது. பதினோராம் நூற்றாண்டில் அப்பகுதியை ஆண்ட போஜ் ராஜாவிற்கு சமஸ்கிருத இலக்கியங்கள் மீது ஆர்வம் இருந்ததாகச் சிலர் எழுதியுள்ள குறிப்புகளோடு கண்டறிந்த சமஸ்கிருத இலக்கணக் குறிப்புகளையும் இணைத்து, மசூதி உள்ள இடத்தில் சமஸ்கிருதம் கற்பதற்கானப் பள்ளி இருந்ததாக ASI கூறுகிறது.
பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் அப்பகுதியில் நடத்திய அகழாய்வில் பெண் கடவுள் சிலை கண்டெடுத்தனர். ஆய்வாளர்கள் அதை ஜெயின் கடவுளான பத்மாவதி தேவியின் சிலை என்று உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் அதனைச் சரஸ்வதி சிலை என்கிறது ASI. இவ்வழக்கில் ஒரு மனுதாரரான ஜெயின் தரப்போ, அது பத்மாவதி தேவி சிலையென்று வாதிட, ஜெயின் மதம் இந்து மதத்திற்குள் அடக்கம், எனவே எல்லாம் ஒன்றுதான் என்று நீதிபதிகள் வாயடைத்துவிட்டனர்.
மத்தியகால வரலாற்றாய்வாளரும், டெல்லி பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியருமான ருச்சிகா சர்மா, “போஜ்சாலா என்ற பெயர் 1903 இல் பிரிட்டீஷ் தொல்லியலாளர் கே.கே. லீயால் கொடுக்கப்பட்டது. அதற்கு முன்புவரை அப்பெயர் வரலாற்றில் எங்கும் கிடையாது; 13-14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கட்டிடம், கமல் மௌலா மசூதி என்றே வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது; மறுபயன்பாட்டுக்காக (reuse) வெவ்வேறு இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட கல் தூண்கள் மற்றும் கற்களைக் கொண்டு இம்மசூதி கட்டப்பட்டுள்ளதால், அக்கல் தூண்களில் உள்ள சமஸ்கிருதக் குறிப்புகளை நேரடியாகச் சமஸ்கிருதப் பள்ளி இருந்ததிற்கான ஆதாரமாகக் கொள்ள முடியாது; அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சிலையின் அடிப்பகுதியில் பத்மாவதி தேவி என்றே குறிப்பிடப்பட்டுள்ளதாகக்” கூறுகிறார்.
ஆனால் மெத்தப் படித்த பார்ப்பனியக் கண்ணோட்டம் கொண்ட நீதிபதிகளோ, சமஸ்கிருதக் குறிப்புகள் கண்டறியப்பட்டதினால் அது சமஸ்கிருதம் கற்கும் இடமாக இருந்திருக்க வேண்டும் என்றும், அதனால் கல்விக் கடவுளான சரஸ்வதியின் கோவில் இருந்திருக்க வேண்டும் என்ற புனைவைத் தீர்ப்பாக்கியுள்ளனர்.
முழுமையான வரலாற்று ஆய்வுக்கு உண்டான அறிவியல் முறையில் எழுதப்படாத தொல்லியல் துறை ஆய்வறிக்கை, அக்குறிப்பிட்ட கட்டிடம் குறித்த புராண-சமஸ்கிருத இலக்கியங்கள் மற்றும் இந்துத்துவ ஆதரவு எழுத்தாளர்களின் நூல்களில் உள்ள குறிப்புகள், உச்சநீதிமன்றம்/உயர்நீதிமன்றத்தின் சட்ட விதிமீறல்கள் மற்றும் நீதிபதிகளின் இந்துத்துவ ஆதரவு ஆகியவை இணைந்துதான், வரலாற்றாய்வாளர்கள் நிராகரிக்கின்ற ஒரு புனைவிற்கு (சரஸ்வதி கோவில்) சட்ட அங்கீகாரத்தைக் கொடுத்து உண்மையாக்கியுள்ளது. இந்தப் பொய்யை உண்மையாக்கியதில் ASI மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்திற்கும் முக்கியப் பங்குள்ளது.
போஜ்சாலா-கமல் மௌலா மசூதிச் சர்ச்சை பிரிட்டீஷ் காலத்திலிருந்தே இருந்து வருவது. உத்திரப்பிரதேசத்திற்கு எப்படி பாபர் மசூதி-ராமஜென்ம பூமி சர்ச்சையோ, அதுபோல மத்தியப் பிரதேசத்திற்குப் போஜ்சாலா-கமல் மௌலா மசூதிச் சர்ச்சையைக் காவிக் கும்பல் அணையாமல் பார்த்துவந்தது.
சர்ச்சைக்குரிய இவ்விடத்தில் போஜ்சாலாவுடன் சரஸ்வதி கோவில் இருந்ததாகவும், அதனை இடித்து மசூதி கட்டப்பட்டுள்ளதாகவும் காவிக் கும்பல் கூறுகிறது. அங்கு மசூதி மட்டுமே உள்ளதென்பது முஸ்லிம்கள் தரப்பின் வாதம். டெல்லி சுல்தானால் பதிமூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இம்மசூதி தற்போது இந்தியத் தொல்லியல் துறையினால் வரலாற்றுச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகிறது. இவ்விடத்தில் வழிபடுவதற்கான உரிமை யாருக்கானது என்பதே சர்ச்சையின் மையப் புள்ளி. இப்பிரச்சனை சில நேரங்களில் கலவரமாகவும் மாறியுள்ளது.
இப்பிரச்சனையில் 2003 இல் இந்தியத் தொல்லியல் துறை முன்வைத்த தீர்வை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். அதன்படி போஜ்சாலா-கமல் மௌலா மசூதி உள்ள வளாகத்தில், வாரத்தின் செவ்வாய்க்கிழமை இந்துக்கள் (சரஸ்வதியை) வழிபடுவதென்றும், வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் தொழுகை செய்வதென்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இருபது ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த இம்முறையை எதிர்த்து, 2022 இல், மிகவும் பழமையான இந்துக் கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டுள்ளதாகவும், போஜ்சாலா-கமல் மௌலா மசூதி வளாகத்தில் வழிபடுவதற்கான உரிமை இந்துக்களுக்கு மட்டுமே உண்டு என்றும் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் நீதிக்கான இந்து முன்னணி (Hindu Front For Justice) என்ற இந்துத்துவ அமைப்பு பொதுநல வழக்கைப் போட்டது.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 2024 மார்ச் 11 இல், “அறிவியல் பூர்வமான முறையில் தொல்லியல் ஆய்வுகளை நடத்தி ஆறு வாரங்களுக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்” என்று இந்தியத் தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது.
தொல்லியல் ஆய்வை நிறுத்த வேண்டும் என்று கோரி முஸ்லிம்கள் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இவ்வழக்கைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், தொல்லியல் ஆய்வினைத் தொடர அனுமதித்ததோடு, அந்தத் தொல்லியல் ஆய்வின் அறிக்கையை வெளியிடுவதையும், அதனடிப்படையிலான நீதிமன்ற விசாரணையையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.
இதற்கிடையில், வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடு) சட்டம் 1991 (Place of Worship Act 1991) ஐ எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இந்துத்துவ ஆதரவாளர்களால் போடப்பட்டிருந்த வழக்குகளை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு, இவ்வழக்கினை அரசியல் சட்ட அமர்வு விசாரித்து முடிவெடுப்பதே சரியாக இருக்கும் என்பதால், இச்சட்டத்தின் அடிப்படையில் பதியப்பட்டுள்ள வழக்குகளைக் கீழமை நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் என்றது. இச்சட்டம் குறித்து அரசியல் சட்ட அமர்வு விசாரித்து முடிக்கும் வரை, வழிபாட்டுத் தலங்களின் மதத் தன்மையைத் தீர்மானிக்கக் கோரி இதுவரை போடப்பட்டுள்ள எந்தச் சிவில் வழக்குகளிலும் தீர்ப்புகள் வழங்கக்கூடாது, தொல்லியல் ஆய்வுகளுக்கு உத்தரவிடக்கூடாது, இதையொட்டிப் புதிய சிவில் வழக்குகள் பதியப்பட்டாலும் மேற்கொண்டு விசாரணைக்கு உத்தரவிடக்கூடாது என்று 2024 டிசம்பரில் உத்தரவிட்டது. இந்த உத்தரவினால், மசூதிகளை இந்துக் கோவில் என்று அறிவிக்கக் கோரி இந்தியா முழுவதும் உள்ள வெவ்வேறு நீதிமன்றங்களில் காவிக் கும்பலால் போடப்பட்டப் பல வழக்குகளின் விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்குப் பிறகு நீதிக்கான இந்து முன்னணி அமைப்பு, போஜ்சாலா-கமல் மௌலா மசூதி வளாகத்தில் முஸ்லீம் வழிபாட்டுக்கான நாளில் (வெள்ளிக் கிழமை) சரஸ்வதிக்கான பசந்த் பஞ்சமியும் வருவதால், அன்று இந்துக்களின் வழிபாட்டை அனுமதிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கொன்றை உச்சநீதிமன்றத்தில் போட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு, பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை மேற்கோள் காட்டி, போஜ்சாலா-கமல் மௌலா மசூதிக் கட்டிடத்தின் தொல்லியல் ஆய்வு அறிக்கையை வெளியிடவும், அதன் அடிப்படையில் அவ்விடத்தினுடைய மதத் தன்மையை உயர்நீதிமன்றம் விசாரித்து முடிவு செய்யவும் உத்தரவிட்டார்.
வழிபாட்டுத் தலங்கள் சட்டம் மீதான அரசியல் சட்ட அமர்வு விசாரணை இன்னும் முடியவில்லை. வழிபாட்டுத் தலங்களின் மதத் தன்மையைச் சம்பந்தப்பட்ட சிவில் வழக்குகளின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. இந்நிலையில் சிறிதும் முக்கியத்துவம் இல்லாத ஒரு பொதுநல வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவையும் மீறி, அதன் தலைமை நீதிபதியே உத்தரவிட்டது ஏன்? உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்குப் பிறகே மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் இவ்வழக்கினை விசாரித்து மேற்சொன்ன இத்தீர்ப்பினையும் வழங்கியுள்ளது. இது போஜ்சாலா-கமல் மௌலா மசூதிச் சர்ச்சையோடு நிற்கப்போவதில்லை. இவ்வழக்கின் முறையைப் பின்பற்றியே தற்போது நிலுவையிலுள்ள பல வழக்கு விசாரணைகளைத் தீவிரப்படுத்த முயற்சிக்கும். அயோத்தியில் ராமர் கோவில், தாரில் சரஸ்வதி கோவில் என்ற வரிசையில் இன்னும் பல பழமையான மசூதிகள் இந்துக் கோவில்களாக அறிவிக்கப்படலாம்.
மொத்தத்தில், நெடுங்காலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள ஒரு பழமையான வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மையைக் குறித்து நிலவுகின்ற நம்பிக்கைகளின் உண்மையை முடிவு செய்ய உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதியப்படுகிறது. உயர்நீதிமன்றமோ தொல்லியல் துறையின் அறிக்கையைக் கேட்கிறது. தொல்லியல் துறையோ, மசூதி இருந்த இடத்தில் இந்துக் கோவில் இருந்ததாக அறிக்கை கொடுக்கிறது. அதனடிப்படையில் நீதிமன்றமும் மசூதிகளை இந்து வழிபாட்டுத் தலமாக அறிவிக்கிறது. நீதிமன்றமும் தொல்லியல் துறையும் பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பலோடு சேர்ந்து மசூதிகளை இந்துக் கோவில்களாக்கும் காவி பாசிசத் திட்டத்திற்கு வேலை பார்க்கிறது. இதன் மூலம், அன்று பாபர் மசூதியை இடித்து ராமர் கோவிலைக் கட்டினர். தற்போது கமல் மௌலா மசூதியை சரஸ்வதி கோவில் என்று அறிவித்துள்ளனர். இதனைத் தடுக்காவிட்டால் நாளை வேறொரு தொன்மையான மசூதியைச் சிவன் கோவிலாக அறிவிப்பார்கள்.
மாணிக்கம்
