நூறுநாள் வேலைத்திட்டத்திற்கு சாவுமணி அடித்த மோடி அரசு!
“எதிர்க்கட்சிகள் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்; மக்களைத் தவறாக வழி நடத்த சதி செய்கிறார்கள்; வருடத்திற்கு 125 நாட்கள் வேலை கட்டாயம் வழங்கப்படும்; மோடியை நம்புங்கள்.” இது VB-G RAM G சட்டத்தின் மீதான விவாதத்தின் போது விவசாயத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் பேசிய வசனங்கள். ஆனால் தற்போது வெறும் 53 நாட்களுக்கு வேலை தருவதற்கான நிதியை மட்டுமே, 2026-27 ஆம் ஆண்டுக்கான VB-G RAM G திட்ட நிதியாக [95,600 கோடி] இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருக்கின்றனர்.
இருபது ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வந்த கிராமப்புற நூறுநாள் வேலைத் திட்டத்தை [NREGA] நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் மாற்றுவதாகச் சொல்லி கடந்த டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட VB-G RAM G சட்டம், ஜூலை முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாக மோடி அரசாங்கம் அறித்துள்ளது. இத்திட்டம் NREGA வைப் போல முழுவதும் ஒன்றிய அரசின் நிதியிலிருந்து [90:10] மட்டும் அமல்படுத்தப்போவதில்லை. மாறாக, ஒன்றிய அரசு 60 சதவிகித நிதியும் மாநிலங்கள் 40 சதவிகித நிதியையும் வழங்க வேண்டும். 2026-27 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இத்திட்டத்திற்காக ஒன்றிய அரசின் பங்காக 95,600 கோடியை ஒதுக்கியிருந்தனர். அந்நிதியில் மாநிலங்களுக்கான பகிர்வை தற்போது அறிவித்துள்ளனர்.
விவசாய அமைச்சரின் கூற்றுப்படி, கிராமப்புற வேலைக்காகப் பதிவு செய்துள்ள அனைவருக்கும் 125 நாட்கள் வேலைக் கொடுக்க வேண்டுமென்றால், 2.3 இலட்சம் கோடியை ஒன்றிய அரசு மட்டும் ஒதுக்க வேண்டும். இத்தொகையில் பாதியைக்கூட ஒதுக்காத மோடி அரசு, 125 நாட்கள் வேலைக் கொடுப்பேன் என்று சத்தியம் செய்வதெல்லாம் வெறும் வாய்ச்சவடால் தானே. மேலும் VB-G RAM G சட்டத்தின் படி, தற்போது ஒதுக்கியுள்ளத் தொகையில் 40 சதவிகிதத்தை அந்தந்த மாநிலங்களே ஒதுக்க வேண்டும். மாநில அரசுகளால் தனது செலவுகளைத் தாண்டி கூடுதலாக சில ஆயிரம் கோடிகளை ஒதுக்க முடியுமா என்பதும் சந்தேகமே.
உதாரணமாக, இத்திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த நடப்பு நிதியாண்டிற்கு 12,642 கோடி நிதி தேவை என்று ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. அதில் ஒன்றியத்தின் 60 சதவிகிதமான 7,585 கோடியை வழங்குவதாக மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் அறிவித்திருக்கிறார். மீதமுள்ள 40 சதவிகிதத் தொகையான 5,056 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்க வேண்டும்.
பழைய திட்டத்தின்படி வருடத்திற்கு ஆயிரம் கோடியை மட்டுமே ஒதுக்கி தமிழக அரசு, புதிய திட்டத்தின்படி கூடுதலாக 4,000 கோடியை ஒதுக்க வேண்டும். இதற்கு எவ்வித மறுப்பும் சொல்லாமல் 4,000 கோடி சுமையை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று ஒன்றிய அரசுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது ஜோசப் விஜய் அரசாங்கம். விவசாயக்கடன் தள்ளுபடியில் “நிதி இல்லை, பிறகு பார்க்கலாம்” என்று காரணம் சொல்லி மிகவும் சொற்பமானத் தொகையை [2,045 கோடி] மட்டுமே தள்ளுபடி செய்த தவெக அரசு, 4,000 கோடியை எங்கிருந்து ஒதுக்கும்? ஓரளவு நிதி வருவாய் கொண்ட தமிழகத்திற்கே இந்நெருக்கடி என்றால், தமிழகத்தை விட பின்தங்கியுள்ள மாநிலங்களில் இத்திட்டத்தின் நிலைமை என்னவாகும்? நிதிநிலைமைகளை காரணம் காட்டித் திட்டத்தை முடக்குவதைத் தவிர வேறு வழியில்லை. இச்சிக்கல் இதோடு முடியவில்லை.
VB-G RAM G திட்டத்திற்கான விதி முறைகளை மூன்று வாரங்களுக்கு முன்பு ஒன்றிய அரசு வெளியிட்டது. வரும் 21 ஆம் தேதி வரை மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து இவ்விதிமுறைகள் இறுதி செய்யப்படும் என்றும் கூறியுள்ளது. இவ்விதிமுறைகளில், நிதி ஒதுக்கீட்டிற்கான அளவுகோல்கள், ஒன்றிய-மாநில அரசாங்கங்களுக்கான அதிகாரங்கள், திட்டங்களுக்கான ஒப்புதல் பெறுவது, ஊதியப் பட்டுவாடா செய்யப்படும் முறைகள் ஆகியவை சொல்லப்பட்டுள்ளன. குறிப்பாக அரசின் நிதி நிலைமைகளின் அடிப்படையில் VB-G RAM G திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியானது [normative allocation], 16 வது நிதி குழு மாநிலங்களின் நிதி பகிர்விற்காக பரிந்துரைத்துள்ள செங்குத்து நிதிப் பகிர்விற்கான வரையறைகளின் [objective parameter used for horizontal devolution] அடிப்படையில் ஒதுக்கப்படும் எனக்கூறியுள்ளது.
அதிக தனிநபர் வருமானம் மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாட்டைக் காரணம் காட்டித் தென்மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை 16 வது நிதிக் குழு குறைத்துள்ளதாக தென்னிந்திய மாநிலங்களின் முதல்வர்களே விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டிற்கும் அதே முறையைப் பின்பற்றினால் பல மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு பெருமளவு குறையும். உதாரணமாக, கடந்த பன்னிரெண்டு வருடத்திற்கும் மேலாக ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த நிதியின் அளவு, இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் 10 சதவிகிதமாக இருந்தது. தற்போது இப்புதிய விதி அமலுக்கு வந்தால் அப்பங்கு 4.1 சதவிகிதமாக குறையும்.
அதாவது 95,600 கோடியில் 3,900 கோடி அளவுக்குத் தான் வருங்காலங்களில் தமிழகத்திற்கு கிடைக்கும். தமிழகத்தில் மட்டும் 88.57 லட்சம் பேர் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தினால் பயனடைந்து வருகின்றனர். இப்புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தால் தமிழகத்திற்கான நிதி பெருமளவு குறையும். இதனால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். ஆனால் தவெக-வின் விசில் குஞ்சுகளோ, விஜய்க்கு முட்டுக்கொடுக்கும் பாஜக எதிர்ப்பாளர்களோ அல்லது VB-G RAM G திட்டத்தை முன்பு எதிர்த்த திமுகவோ இப்பாதிப்பைக் குறித்து வாய்திறக்காமல் உள்ளனர்.
நூறுநாள் வேலைத் திட்டம் என்பது [NREGA], UPA ஆட்சி காலத்தில் இருந்த மோசமான பொருளாதார கொள்கைகளின் விளைவாக, வறுமையிலிருந்த கிராமப்புற மக்களை காப்பாற்றுவதற்காகக் கொண்டு வரப்பட்டது. ஆனால் மோடியின் ஆட்சியிலோ இந்தியா முன்னெப்போது இல்லாத வகையில் முன்னேறி வருகிறது, மக்களின் கைகளில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. எனவே NREGA விற்கு பதிலாக, 2047 இல் இந்தியாவை வல்லரசாக்கும் திட்டத்திற்கு கிராமங்கள் பங்களிக்கும் வகையில் VB-G RAM G கொண்டுவரப்பட்டுள்ளதாக பாஜக கூறுகிறது. இது வடிகட்டிய பொய் என்றாலும், சிறு சலனமின்றி இந்திய ஊடகங்களும் முதலாளித்துவ அறிவுஜீவிகளும் இதையே பிரச்சாரம் செய்கின்றனர்.
கடந்த பன்னிரெண்டு வருடங்களில், தொழில்துறை வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்சாலைகளின் உற்பத்தித்திறன் வெகுவாக குறைந்திருக்கிறது. கடந்த நாற்பது வருடங்களில் இல்லாத அளவிற்கு படித்த இளைஞர்களின் வேலையின்மை அதிகரித்துள்ளது, விவசாயம் மற்றும் தொழிற்துறை தொழிலாளர்களின் உண்மைச் சம்பளம் உயரவில்லை [தேக்கமடைந்துள்ளது], கிக் தொழிலாளர்களின் விகிதம் அதிகரித்துள்ளது, சமையல் எண்ணெய் பயன்பாட்டிற்குக் கூட அமெரிக்க டாலரின் தயவை எதிர்பார்த்திருக்கிற அளவிற்கு இந்தியாவின் சுயசார்பை அடமானம் வைத்திருக்கின்றனர். இதுவே பாஜக சொல்லும் வளர்ச்சியின் இலட்சணம். கடந்த சில மாதங்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் நடந்து வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டமும் டெல்லியில் இளைஞர்களின் சமீபத்திய போராட்டமே இதற்கு சாட்சி. ஆனால் சிறிதும் வெட்கமே இல்லாமல், 2047 இல் இந்தியா வல்லரசு, அதற்கான கிராமப்புற வேலைவாய்ப்பு என்று பொய் பேசித் திரிகிறது காவிக் கும்பல்.
நூறுநாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக்கட்டுவதுதான் பாஜக செய்துவரும் பொய் பிரச்சாரங்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மை. NREGA என்பது தேவையை அடிப்படையாகக் கொண்டது. கிராமப்புறங்களில் அதிக பேர் வேலை வேண்டி விண்ணப்பித்தால் அதற்கேற்ற வகையில் அரசு நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று அச்சட்டம் சொல்கிறது. ஆனால் VB-G RAM Gவோ, நிதி நிலைமைகளைப் பொறுத்து அரசு ஒதுக்கீடு செய்யும் நிதிக்கேற்றவாறே கிராமப்புற வேலைகள் கொடுக்கப்படும் என்கிறது. இனிமேல், வெளிநாடுகளில் போர் நடக்கிறது, உள்நாட்டில் வறட்சி நிலவுகிறது என்ற காரணத்தைக் காட்டி VB-G RAM G திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய அரசால் குறைத்துக் கொள்ள முடியும். கூடவே மாநில அரசுகளால் 40 சதவிகித நிதியை கொடுக்கவும் முடியாது. எனவே இனி வரும் காலங்களில் இத்திட்டத்தினை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் குறைவு. இதைத்தான் பாஜகவும் விரும்புகிறது.
பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க, மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதியை குறைக்க வேண்டும் என்று நிதி மூலதனமும், IMF வும் மற்றும் தர நிர்ணய நிறுவனங்களும் நிர்பந்திக்கின்றன. இதனடிப்படையில் தான், ஆட்சியாளர்களும் மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை, [GDP யோடு ஒப்பிடும் போது] ஒவ்வொரு வருடமும் குறைத்துக் கொண்டே வருகின்றனர். ஒன்றிய நிதி அமைச்சகமோ, பின்தங்கிய மக்களுக்கான நேரடி பணப் பட்டுவாடாத் திட்டத்தை 25 மாநில அரசாங்கங்கள் அமல்படுத்தி வருவதால், நூறுநாள் திட்டத்திற்கான நிதியை குறைப்பது சரியென்றே வாதிடுகிறது. இவ்வாறு மிச்சப்படுத்தப்படும் நிதியைக் கொண்டு பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிப்பதற்கும் முதலீடுகளை ஈர்ப்பதற்கான [முதலாளிகளுக்கான] சலுகைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றே திட்டமிடுகின்றனர். இதை நேரடியாகச் சொல்லாமல் மக்களின் நலனுக்கானது என்று நாடகமாடுகின்றனர்.
கிராமப்புற இந்தியாவின் வாங்கும் சக்தி [buying power] நீண்டகாலமாகத் தேக்கமடைந்திருப்பதாக தரவுகள் சொல்லுகின்றன. நூறுநாள் வேலைத்திட்டம், 30 கிலோ இலவச அரிசி, ஒன்றிய-மாநில அரசுகளின் நேரடிப் பணப்பட்டுவாடாத் திட்டங்கள் கிராமப்புற மக்கள் அத்தியாவசியத் தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்து கொள்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இத்திட்டங்களுக்கான நிதி குறைப்பு கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தில் பாரிய விளைவை ஏற்படுத்தும். இவ்வுண்மை தெரிந்தும் கூட, காவி பாசிஸ்ட்கள் “வளர்ச்சி, வல்லரசு” என்ற போர்வையில் பெரும் முதலாளிகளின் நலனுக்காக கிராமப்புற தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதை அனுமதிக்கலாமா?
மாணிக்கம்
https://www.downtoearth.org.in/governance/vb-g-ram-g-receives-rs-95692-crore-will-not-meet-125-days-of-promised-employment
https://timesofindia.indiatimes.com/city/chennai/centre-allocates-rs-7-5k-cr-under-rural-job-scheme/articleshow/131642338.cms
https://indianexpress.com/article/india/states-to-get-vb-g-ram-g-funds-based-on-the-finance-commission-formula-10703531/
https://timesofindia.indiatimes.com/city/chennai/tn-loses-out-on-vb-g-ram-g-funds/articleshow/131491367.cms
https://timesofindia.indiatimes.com/business/india-business/the-new-logic-of-rural-welfare-why-vb-g-ram-g-makes-sense-for-a-4-trillion-economy/articleshow/126158674.cms

