ரேசன் கடைகளை மூடும் நயவஞ்சக நாடகம்!
ரேசன் கடைகளை மீண்டும் திற! புதுச்சேரியில் ஆளுநர் தமிழிசையை பெண்கள் முற்றுகை!
புதுச்சேரியில் ரேசன் கடைகள் மூடப்பட்டு 5 ஆண்டுகளாகின்றன. ரேசன் அரிசிக்குப் பதிலாக, பயனாளியின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும்’ என்று கூறப்பட்டு, முன்பு செலுத்தப்பட்ட பணமும் சரியாக செலுத்தப்படுவதில்லை. அரிசி, பருப்பு தொடங்கி பொருட்களின் விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளதால் புதுச்சேரி மக்கள் பரிதவிக்கின்றனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் மொத்தம் 507 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 800 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கொரானாவுக்கு முந்திய காலத்திலேயே காங்கிரஸ் ஆட்சியில், கிரண்பேடி ஆளுநராக இருக்கும் போது,ரேசனில் இலவச அரிசி மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அப்போதேய ஆளுநர் கிரண்பேடியால், ரேசன் அரிசிக்குப் பதிலாக, பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன் பின்பு படிப்படியாக ரேசன் கடைகள் தனது செயல்பாட்டை இழந்தது. கொரானா ஊரடங்கின் போது ரேசன் கடைகள் இல்லாததால் மக்கள் பரிதவித்தனர். இதுபோன்ற அசாதாரண சூழ்நிலைகளில் கூட உணவுப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் நொடிந்துப் போயினர். அச்சமயத்தில் பொதுத்துறை ஊழியர்களால், சில இடங்களில் அரசு பள்ளி வளாகத்தில், ரேசன் அரிசி வழங்கப்பட்ட நிகழ்வு ரேசன் கடைகளின் முக்கியத்துவத்தை புதுச்சேரி மக்களுக்கு மீண்டும் உணர்த்தியது.

ஆட்சியாளர்களோ, புதுச்சேரியில் இருந்த ரேசன் கடைகளை மூடிவிட்டு, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரேசன் கடைகளை மீண்டும் திறப்போம் என தேர்தல் பரப்புரையில் வாக்குறுதியை கொடுத்தனர்..பாஜகவோ நடமாடும் ரேசன் கடைகளை திறப்போம் என்றது. இதுமட்டுமில்லாமல் ரேசன் கடைகளை மீண்டும் திறப்போம் என ரங்கசாமி அரசு, சட்டப்பேரவையில் தீர்மானம் வேறு நிறைவேற்றியது. ஆனால் ரேசன் கடைகளை அரசு திறந்தபாடில்லை. ரேசன் கடைகளை மறுபடியும் திறப்போம் என அரசின் சலித்துப் போன பொய் வாக்குறுதிகளை மக்களும் நம்பத்தயாரில்லை. இதனால் மக்கள் வெறுப்படைந்து ஆங்காங்கே ரேசன் கடைகளை திறப்பது எப்போது என ஆட்சியாளர்களை முற்றுகையிட்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, புதுச்சேரியின் ஆளுநர் தமிழிசை, மாவட்ட ஆட்சியர், துணைஆட்சியர் போன்றோர் கலந்து கொண்ட பாகூர் பகுதியில் நடைப்பெற்ற அரசு விழாவில், ரேசன் கடைகளை திறப்பது எப்போது என பெண்கள், ஆளுநர் தமிழிசையை முற்றுகையிட்டுள்ளனர்.
நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கும்போது அங்கிருந்த பெண்கள் திடீரென மேடைக்கு சென்று தமிழிசையை முற்றுகையிட்டு, ‘இந்தியா முழுவதும் ரேசன் கடைகள் உள்ளன. ஆனால் புதுச்சேரியில் மட்டும் தான் ரேசன் கடைகள் இல்லை; ரேஷன் கடையை எப்போது திறக்கப் போகிறீர்கள்? பிரதமர் மோடி, மாதம்தோறும் 5 கிலோ அரிசி ரேசன் கடை மூலமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார். ஆனால் இங்கு ரேசன் கடைகள் இல்லை என்பதால் நீங்கள் எதன் மூலமாக மக்களுக்கு அரிசியை வழங்குவீர்கள்? மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய ரேசன் கடையை மூடிவிட்டு, நீங்கள் எந்த திட்டத்தை வழங்கி சாதிக்கப் போகிறீர்கள்?’ என்ற கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இதன் பிறகு இதுபற்றிய பேசிய தமிழிசை, புதுச்சேரி மக்கள் பணத்தை தான் விரும்புகிறார்கள்.அதனால் தான் அவர்களுக்கு பொருட்களுக்கு பதில் பணம் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்
புதுச்சேரி மக்கள், தங்களுக்கு ரேசனில் பொருட்களுக்கு பதிலாக பணம் தான் வேண்டும் என கூறியது போல தமிழிசை ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது உண்மையல்ல. இதன் பின்னால் மக்களின் உணவுப்பாதுகாப்பை ஒழித்து விட்டு அவர்களை பகாசுர தனியார் நிறுவனங்களின் உணவுப்பொருட்களை சந்தை விலையில் வாங்க வைப்பதற்கான திட்டமே .ரேசன் கடை ஒழிப்பும் பணப்பட்டுவாடா திட்டமும்.
குடும்ப அட்டைதாரர்களின் வாசல் கதவைத் தட்டி மானியப் பணத்தைக் கொடுத்தாலும்கூட, இந்தத் திட்டம் அடித்தட்டு மக்களின் நலனுக்கு எதிரானதுதான். ஏனென்றால், இந்தத் திட்டத்தின் மையமான நோக்கமே உணவு, உரம், எரிபொருள் ஆகியவற்றை சந்தை விலையில் வாங்கிக் கொள்ளும் கட்டாயத்திற்கும், மனோ நிலைக்கும் மக்களைத் தள்ளிவிட வேண்டும் என்பதுதான். அரசு உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வதையும், அவற்றை மானிய விலையில் ரேசன் கடைகளின் மூலம் விற்பதையும் சந்தையில் தலையீடு செய்யும் நடவடிக்கை; எனவே, இதனை ஏழை நாடுகள் கைவிட வேண்டும் என்பதை உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் உள்ளிட்ட ஏகாதிபத்திய நிதியாதிக்க நிறுவனங்கள் கொள்கையாகவும் நிபந்தனையாகவும் அறிவித்துள்ளன. உணவுப் பொருள் மானியத்தையும், அரசு கொள்முதலையும் ஒரே அடியில் ஒழித்துக் காட்டினால், அது மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பதாலேயே, இவற்றைக் கொல்லைப்புற வழியில் ஒழித்துக்கட்டும் நோக்கில் நேரடி பணப்பட்டுவாடா திட்டத்தைக் கொண்டு வருகிறார்கள்.
பணமாக அல்லாமல், உணவு, உரம், எரிபொருள் ஆகியவற்றை மானிய விலையில் பொருளாக வழங்கும்போது மட்டுமே சந்தையில் குறுக்கீடு செய்வதற்கு வாய்ப்புண்டு. ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருளின் விலைக்கும், அவற்றின் சந்தை விலைக்கும் வேறுபாடு கிடையாது என்ற நிலையை உருவாக்கும்பொழுது, அரசு சந்தையில் தலையீடு செய்வது முடிவுக்கு வந்துவிடும். .
சமையல் எரிவாயு உருளைக்கான மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தும் நடைமுறைக்கு வந்த பின்பு, எரிவாயு உருளையின் விலை உயர்ந்ததும், அதன் பின்பு அரசு மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தொகை குறைக்கப்பட்டதை நாடே அறியும்
ரேசன் கடை ஒழிப்பு என்பது புதுச்சேரியில் ஒரு தொடக்கம் மட்டுமே. இந்த நடைமுறை பிற மாநிலங்களுக்கு அமுல்படுத்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை. உணவுப் பொருட்களின் விலை வெளிச்சந்தையில் அதிகரித்து கொண்டே செல்கிறது.. அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கே மக்கள் இராப்பகலாக உழைக்க வேண்டியதிருக்கிறது. அரைகுறைப் பட்டினியோடு போராடும் மக்களும், சத்தான உணவு கிடைக்காத கர்ப்பிணிப் பெண்களும், நோஞ்சான் குழந்தைகளும் நிறைந்திருக்கும் நமது நாட்டில், அவர்களுக்கு உரிய உணவுப் பாதுகாப்பை வழங்காமல், ரேசன் கடையை ஒழித்து விட்டு,ஏதோ கொஞ்சம் பணத்தை வீசியெறிந்து, அவர்களை சந்தைச் சூதாட்டத்தில் சிக்க வைப்பது எத்தனை பயங்கரமானது? ரேசன் கடைகளை திறக்க கோரியும், தங்களது உணவுப்பாதுகாப்புக்காகவும் புதுச்சேரி ஆளுநரை, பெண்கள் முற்றுகையிட்டது போல மக்கள் அனைவரும் கிளர்ந்தெழுந்து நம் உணவுப் பாதுகாப்புக்காக போராட வேண்டிய தருணமிது!
- தாமிரபரணி
